பிறந்தநாள் ....!
வடிவேலு 25
* வீட்டில் பெரிய அளவில் கலைஞர், ஜெயலலிதா விடம் அவார்டு வாங்கிய படங்களை மாட்டி வைத்திருக்கிறார் வடிவேலு. 'இவங்க ரெண்டு பேருமே பெரிய தலைவர்கள். அதோட எனக்கு ரசிகர்கள்!' என்பார் பெருமிதமாக! * தன் முதல் கார் டாடா சியாராவை இன்னும் பத்திரமாகப் பாதுகாக்கிறார். முதலில் வாங்கிய சொத்து என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த காரை அவரே துடைத்துச் சுத்தப்படுத்துவார். 'நான் என் கார்கிட்டே பேசுவேன் அண்ணே, சொன்னா நம்புங்க... சொந்தக்காரங்க நிறையப் பேரு இருந்தாலும், நான் வாங்கின முதல் சொந்த கார் இதுதான்ல!' என்பார்! * வடிவேலுவுக்குத் தான் நடித்த படங்களில் பிடித்த படம் 'தேவர் மகன்'.
"'கமல், சிவாஜி சார் காம்பினேஷன். காமெடியனான என்னை கேரக்டர் ரோல்ல உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க வெச்சு, மக்களைக் கண் கலங்கவெச்ச படம்ல அது!'
என்று மெய் சிலிர்ப்பார்!
* 'ஆயுளோடு வாழணும்னா ஆயில் கூடாது' என்பது வடிவேலுவின் பஞ்ச் டயலாக். எண்ணெயில் பொறித்த உணவென்றால், கைப்புள்ள எகிறி ஓடுவார்! * மகன் வடிவேலுவை எந்தக் காலத்திலும் பெயர் சொல்லி அழைப்பதில்லை அம்மா சரோஜினி. வாயாரப் பாசம் கொப்பளிக்க 'என்னப் பெத்த ராசா' எனத்தான் கூப்பிடுவார்! * வடிவேலுவுக்கு 'டாம் அண்ட் ஜெர்ரி' காமெடிதான் ரொம்ப இஷ்டம். எக்கச்சக்க டி.வி.டி-க்களை தினம் தினம் பார்த்துச் சிரித்து மகிழ்வார்! * விடுமுறை கிடைத்தால், குடும்பத்தை அள்ளிப்போட்டுக்கொண்டு குற்றாலத்துக்குப் போய்விடுவார். வெளிநாடு என்றால் பிடித்த ஊர் லண்டன்தான். 'தேம்ஸ் நதியில மிதக்கிறதுல மனுஷப் பயபுள்ளைக்கு ஒரு சொகம்ணே... அது சொர்க்கம்ணே!' என்பார்! * ஆபீஸில் இருக்கும்போது, ரசிகர்கள் போன் செய்தால் தானே எடுத்து, 'ஆமாண்ணே! வடிவேலுதான் என்ன அதுக்கு... நல்லாப் பேசுங்க, கேட்டுக்கிறேன்' எனச் சொல்லிப் பரவசப்படுத்துவார்! * வடிவேலு இதுவரைக்கும் 450 படங்களில் நடித்திருக்கிறார்! * காலையில் நாலு இட்லி, தொட்டுக்கொள்ள மீன் குழம்பு. மதியம் கொஞ்சம் சாப்பாடு, இரண்டு சப்பாத்தி. இரவு இட்லி, புதினா சட்னி, மல்லிப் பொடி. விருந்துக்கு வடிவேலுவை அழைத்தால் ரொம்ப மெனக்கெட வேண்டாம் என்றுதான் இந்தத் தகவல்! * முதன் முதலில் கேமரா முன் பேசிய வசனம்... 'அண்ணே, நீ ரொம்ப எவனையும் மதிக்கிறதில்ல' என்பதுதான். 'ராசாவின் மனசிலே'தான் படம்! * ரசிகர்கள் ஆட்டோகிராஃப் கேட்டால் கையெழுத்துப் போட்டு, பக்கத்திலேயே வேல் படம் வரைந்து தருவார்! * என்ன பேசினாலும், யாரிடம் பேசினாலும் அடிக்கடி 'ஆஹா' எனும் வார்த்தை வந்து விழுந்துகொண்டே இருக்கும். இன்னொரு வார்த்தை 'அதாவதுன்னா'. 'ஏன் கேட்கிறீங்க, சுட்டிங்கில் டயலாக் பேசும்போதும் இந்த வார்த்தைகள் முன்னாடி வந்து நிக்கும்' எனச் சிரிப்பார்! * நகைச்சுவையில் நம்ம குருக்கள் என்று மூன்று பேரைச் சொல்வார். அவர்கள் சந்திரபாபு, தங்கவேலு, சுருளிராஜன். தன்னை இவர்களின் கலவை என ரஜினி ஒரு மேடையில் சொன்னதைச் சிலாகிப்பார்! * டி.எம்.சௌந்தர்ராஜனின் வெறிபிடித்த ரசிகர் வடிவேலு. அவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களை அப்படியே ராகம் போட்டுப் பாடுவார்! * ஜோதிடத்தில் பலத்த நம்பிக்கை உள்ளவர் வடிவேலு. வியாழக்கிழமை என்றால், மஞ்சள் சட்டை. வெள்ளிக்கிழமை அரக்கு கலர் சட்டை, சனிக்கிழமை கறுப்புதான். மற்ற தினங்களில்தான் வடிவேலுவை வெவ்வேறு வண்ணச் சட்டைகளில் பார்க்க முடியும்! * மதுரை வீட்டுக்குப் போனால், கண்மாய் மீன்களைப் பிடித்து வரச் செய்வார். வெயிட், எந்த வகை மீன் என்று பார்த்துதான், அதைச் சமையலறைக்கு அனுப்பு வார். போன பிறவியில் கொக்காகப் பிறந்திருப்பாரோ என்னவோ?! * அம்மா சரோஜினி, ஐயனார், மதுரை மீனாட்சி, பழநி முருகன் இவர்கள்தான் வடிவேலு தினம் வணங்கும் தெய்வங்கள். ஆபீஸ், வீடு எல்லாவற்றையும் இந்த நான்கு படங்கள்தான் அலங்கரிக்கும்! * ஒரு தடவை சூட்டிங்கில் கால் பிசகிக்கொள்ள, ஓய்வில் இருந்தார் வடிவேலு. குணமாவது தாமதமாக, காலை விந்தி விந்தி நடிப்பதையே ஸ்டைல் ஆக்கி நடித்த படம்தான் 'வின்னர்'. இன்று வரை 'வின்னர்' காமெடிதான் அவருக்கு ஆல்டைம் பெஸ்ட்! * ரயில் பயணம்தான் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், ரசிகர்களின் அன்பைத் தாங்க முடியாமல் விமானப் பயணம் அதிகம் இப்போது. 'கூவிக்கிட்டு போற ரயில் சத்தம்தான் பிடிக்குது. ஃப்ளைட்டில் கட்டிப்போட்டு உட்கார வேண்டியிருக்கு' என்பார் அந்த அனுபவத்தை! * சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு இருந்துவிட்டால் இளம் தலைமுறை ஹீரோக்கள் அவரைத் தாங்கிக் கொண்டாடுவார்கள். சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போட்டு அதிரவைப்பார். வடிவேலுவின் பயங்கர ரசிகர் விஜய்! * விதவிதமான வாட்ச் அணிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர் வடிவேலு. கையில் காசு இல்லாத சிறுவயது முதலே எங்கிருந்தாவது பிய்த்துப் பீறாய்ந்து வாட்ச் கட்டிக்கொள்வார்! * ஃபேஷன் உடைகளை அதிகமாகப் பயன் படுத்துவார் வடிவேலு. யாருமே எதிர்பார்க்காத, விதவிதமான டிசைன் துணிகளைக் கடைகளில் இருந்து வரவழைத்துத் தேர்ந்தெடுப்பார்! * வடிவேலுவின் மனசுக்குப் பிடித்த நடிகைசரோஜா தேவிதான். 'ஆதவன்' படப்பிடிப்பில் அவரிடமே 'நில்லடி நில்லடி சீமாட்டி' பாடலை முழுதாகப் பாடிக் காட்டி நடித்து சபாஷ் வாங்கியதைச் சந்தோஷத்தோடு குறிப்பிடுவார்! - நா.கதிர்வேலன், |
வெள்ளி, 10 அக்டோபர், 2014
வைகை புயல் வடிவேலு
வியாழன், 18 செப்டம்பர், 2014
என்ன செய்துவிட்டார் பெரியார்?
உலகில் உள்ள மற்ற சமுதாயங்களைப் போல மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக இந்தச் சமுதாயத்தை ஆக்கும் தொண்டே தன் பணி என்று சுருக்கமாக வரையறுத்தார் பெரியார்.
ஆனால், அவர் மேற்கொண்ட பணி அத்தனை எளிதானதா?
பெரியார் ஏன் சாதிகளை அழிக்க வேண்டும் என்றார்?
மதங்களை ஒழிக்க மறுப்புக்கொள்கையின் அடிப்படை என்ன?
1901-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை படம் பிடிக்கும் உண்மையான இந்தியாவின் முகம் இது: “இந்தியாவில் ஒரு மனிதனின் பெயரை, உணவை, உடையை, இருப்பிடத்தை, வேலையை, சமூக அந்தஸ்தை, வாழ்க்கையை சாதியே தீர்மானிக்கிறது.”
அன்றைய நிலை அப்படித்தான்.
காங்கிரஸ் கட்சி மாநாடுகளிலேயே ‘பிராமணர்களுக்குத் தனிச் சாப்பாடு, தனி இடம் உண்டு’என்ற விளம்பரங்கள் வெளிவந்த நாட்கள் அவை. 1
901 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் வர்ண தர்மத்தின் அடிப்படையில் தீண்டாமையைப் பின்பற்றியதை காந்திகூட தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்: “தமிழர்களின் சமையல் கூடம் மற்றவர்களின் சமையல் கூடத்துக்குத் தொலைவில் தனியாக இருந்தது. தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்துவிட்டால் தோஷம் என்று தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள்.
இது வர்ண தர்மத்தின் சீர்கேடாகவே எனக்குத் தோன்றிற்று”.
இந்த ‘ஒதுக்கிவைத்தல்’ ஏனைய சமூகங்களிடமும் பரவிய சமூகப் பின்னணியில்தான், சுயமரியாதையை மீட்டெடுக்கக் குரல்கொடுத்தார் பெரியார்.
பெரியாரின் பொது வாழ்க்கை முழுவதுமே எதிர்நீச்சலிலேயே தொடங்கி எதிர்நீச்சலிலேயே தொடர்ந்ததுதான். காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரஸுக்குள் இழுத்தன. ஐந்து ஆண்டுகள் அவர் காங்கிரஸில் இருந்தார். இரண்டு முறை மாநிலத் தலைவர், இரண்டு முறை மாநிலச் செயலாளர்.
ஆனால், தலைவர், செயலாளர் பதவிகளில் அவர் திருப்தி அடைந்து விடவில்லை. 79 கௌரவப் பதவிகளை உதறிவிட்டு காங்கிரஸில் சேர்ந்த அவர், தன் கட்சி நடத்திய சேரன்மாதவி குரு குலத்திலேயே இனரீதியாகக் குழந்தைகள் இடையே பாகுபாடு காட்டப்பட்டபோது கொந்தளித்தார். அனைத்துப் பிரிவு மக்களையும் சமமாக நடத்தும் - கல்வி, வேலைவாய்ப்பைப் பகிர்ந்தளிக்கும் - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை முன்னிறுத்தினார்.
காங்கிரஸ் அதை ஏற்க வலியுறுத்தினார். அவருடைய சமவாய்ப்புக் கொள்கை ஏற்கப்படாதபோது, காங்கிரஸிலிருந்தும் பதவிகளை உதறிவிட்டு வெளியேறினார்.
அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும் சரி, காங்கிரஸில் இருந்த போதே தொடங்கிய ‘குடிஅரசு’ பத்திரி கையும் சரி, கடும் எதிர்ப்புகளின் ஊடாகவே பயணித்தன.
இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியார் மக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.
அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள். பெரியார் சுற்றுப் பயணம் செய்த தூரம் - 8,20,000 மைல்கள்.
பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு.
பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700. உரையாற்றிய நேரம் - 21,400 மணி நேரம். அத்தனை சொற்பொழிவுகளையும் பதிவுசெய்து ஒலிபரப்பினால், 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
திராவிட இயக்கம் செய்தது என்ன?
” இன்றைய காலத்தில் சிலருக்கு திராவிட இயக்கம்.அதன் நோக்கம்,அதன் சாதனைகள் தெரியவில்லை.அவற்றை இன்றைய பார்ப்பன வசம் உள்ள ஊடகங்களும் திட்டமிட்டு மறைத்து வருகின்றன.ஏளனம் செய்கின்றன.திராவிட இயக்கத்தால் இன்று தலை நிமிர்த்து வாழும் முந்தைய சூத்திரர்களுக்கே திராவிட இயக்கத்தின் மீது ஏளனப்பார்வையை உண்டாக்கிவிட்டன பார்ப்பன சாணக்கியத்தனம்.
இன்று ஒரு திராவிட இயக்கத்திற்கே [அதிமுக]அதன் பரம வைரியான ஒரு பார்ப்பனரே தலைவியாக ஆட்சியை கைப்பற்றி மற்றவர்களை காலில் விழவைத்துக்கொண்டிருக்கிறார்.’
பெரியார் கொண்டுவந்த கடைனிலை மக்களின் ஆட்சி,திராவிட உணர்வு மீண்டும் பார்ப்பன கைகளிலேயே மரணித்துக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மதப் பகை உணர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, பெண் கல்வியை மக்கள் ஏற்கச் செய்தது, நாடாளுமன்றம் போகாமலேயே முதல் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு வழிவகுத்தது, இடஒதுக்கீட்டுக் கொள்கையை உறுதிசெய்தது, பகுத்தறிவு இயக்கத்தைப் பரவலாக்கியது என்று பெரியார் இயக்கத்தின் பணிகளை எவ்வளவோ பட்டியல் போட முடியும்.
பெரியாரின் திராவிடர் இயக்கம் வழி வந்ததாகக் கூறும் திராவிட அரசியல் கட்சிகள், பெரியாரின் அடிப்படை லட்சியத்திலிருந்து மாறுபட்டவை. பெரியாரின் இடஒதுக்கீடு கொள்கையைத் தவிர அவரது பகுத்தறிவு, பெண்ணுரிமை, மத எதிர்ப்புக் கொள்கைகளிலிருந்து இந்தக் கட்சிகள் விலகியே நிற்கின்றன. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு இன்னும் எவ்வளவோ செய்திருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனாலும், இந்தியாவில் ஒப்பீட்டளவில், கல்வி, மருத்துவம், சமூகநலத் திட்டங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலமாக நிற்கிறது. காரணம், பெரியாரும் அவர் முன்னெடுத்த இயக்கமும்.
உயர் மாண்புகள்
எவ்வளவோ உயர்ந்த மரபுகளை விட்டுச்சென்றிருக்கிறார் பெரியார். பொது வாழ்க்கைக்கு வந்தவர்களுக்கு ஆடம்பரம், பகட்டு கூடாது என்பதில் அவர் காட்டிய உறுதி ஓர் உதாரணம். அவருடைய தள்ளாமையைப் பொறுக்காமல் தொண்டர்கள் வழங்கிய பெட்ரோல் வேனைக்கூட - பெட்ரோல் விலை கூடுதல் என்பதால் - பயன்படுத்த விரும்பவில்லை. பெரியார் அதில் டீசல் என்ஜின் பொருத்தி டீசல் வேனாக மாற்றினார். (விரைவில் அது பழுதாக, பிறகு தொடர்ந்து காரில் பயணிக்க நேர்ந்ததே அவரது மரணத்தை விரைவுபடுத்தக் காரணமாகிவிட்டது.) பொதுமக்கள் தரும் நிதியை நாணயமாக, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கக் கூடாது; குறித்த நேரத்தில் சென்றுவிட வேண்டும் என்பதெல்லாம் அவர் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட நெறிகள்!
தனிமைப்படுத்தும் சதி
தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்று எப்போதுமே சொல்லி வந்திருக்கிறார் பெரியார். அடிக்கடி அவரே தன்னைச் சுயமதிப்பீடு செய்துகொண்டு அதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஆனால், எந்த மக்களின் உரிமைகளுக்காகப் பேசினாரோ, போராடினாரோ, அவர்களிடமிருந்தே பெரியாரைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் இப்போது வேகம் எடுக்கின்றன.
காலம்காலமாகப் பழமையில் ஊறிப்போன மக்களை விழிப்படையச் செய்வதற்குக் கடும் வைத்திய முறையே தேவைப்படுகிறது என்று கூறிய பெரியார், அந்த நோக்கத்திலேயேதான் பேசினார், எழுதினார். தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நோக்கி, பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு நிலைப்பாடுகளைப் பெரியார் எடுத்துள்ளார். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் மற்றவர்கள் பாராட்டுக்காகவோ திருப்திக்காகவோ, எந்த ஒரு கருத்தையும் முன்வைக்காத தலைவர் என்பதுதான் அவரது தனித்துவம்.
எந்தத் தேவைக்காக, எந்தச் சூழலில் அவர் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அவர் முன்வைத்த கருத்துகளில் தமக்குத் தேவையானதை மட்டும் அடிக்கோடிட்டு எடுத்துக்கொண்டு, பெரியாரை அணுகுவதும் விமரிசிப்பதும் யோக்கியமான அணுகுமுறை அல்ல.
மனித சமத்துவத்துக்கான பணி
பெரியார் எதிர்ப்பாளர்கள், கடுமையாக விமர்சிக்கும் அவரது கடவுள் மறுப்புக் கொள்கையேகூட கடவுள் நம்பிக்கையாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ‘மனித சமத்துவம்’என்கிற அடிப்படையிலிருந்தே உருவானது.
“சாதியும் ஆச்சாரங்களும் மதம் - கடவுள் எனும் மரத்தைச் சுற்றிக்கொண்டிருப்பதால், சாதியை மரத்திலிருந்து பிரித்தெடுக்க முயலுகிறேன். அது முடியாதபோது மரத்தையும் சேர்த்தே எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது” என்று கூறிய பெரியார், “இப்படி எல்லாவற்றையும் நாம் சேர்த்து எதிர்க்கும்போது, உண்மையில் ஏதாவது சத்து இருந்தால் அழியாது” என்றார்.
உண்மையில் பெரியார், கடவுள் நம்பிக்கையுள்ள பெரும்பான்மைச் சமூகத்துக்காகவே இறுதிவரை உழைத்தார்.
இலக்கு நீள்கிறது
பெரியார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால், பெரியார் எட்ட விரும்பிய இலக்கை அடைவதற்கு வெகுதூரம் கடக்க வேண்டியுள்ளது. அதுவும் இந்த உலகமயமாக்கல் சூழலில், அவரது சிந்தனைகளை மேலும் வளர்த்தெடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. பெரியார் முடிந்துவிட்ட சகாப்தம் அல்ல; தொடரப்பட வேண்டிய பயணம்!
- விடுதலை ராஜேந்திரன்,
ஞாயிறு, 7 செப்டம்பர், 2014
இந்தியாவில் அல்கொய்தா?
ஒசாமா பின்லாடன் அப்துல்லா அசாம் போன்றவர்களால் அல்கயித அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட வேளையில் அமெரிக்க அரசு பின்னணியில் செயற்பட்டது. அல்கொயிதாவைக் காரணாமக முன்வைத்து அமெரிக்கா தலைமையில் நேட்டோ இராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.
உலகின் பல்தேசிய நிறுவானங்களால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட நரேந்திர மோடியின் இந்து பாசிச அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து வெறியை முன்வைத்தது.
உலகம் முழுவதும் மதங்களுக்கு இடையேயும், தேசிய இனக் குழுக்களுக்கு இடையேயும், வெவ்வேறு அடையாளங்களுக்கு இடையேயும் மோதலை ஏற்படுத்துவது பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளைக்கு பக்கபலமாக அமைகிறது. இவ்வாறான மோதல்களை மக்களின் சிந்தனை திசைதிருப்பப்பட சந்தடி இல்லாமல் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பட்டு அடையாளக் குழுக்களுக்கு இடையேயான மோதல்கள் முன்னணிக்கு வருகின்றன.
இந்தியாவில் அல்கொய்தாவின் கிளை என்ற பரபரப்பின் பின்புலத்தில் இந்திய அமெரிக்க அரசுகள் இணைந்த பல்தேசிய நிறுவனங்களின் சதி காணப்பட வாய்ப்புக்கள் உண்டு.
இஸ்லாமியர்களின் எதிரியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சித்தரிக்க அல்கொய்தா விரும்புவதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ முன்னாள் ஆய்வாளர் வேறு கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காலூன்ற நினைக்கும் அல்கொய்தா, முஸ்லீம்களின் எதிரியாக நரேந்திர மோடியை சித்தரிக்க விரும்புவதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ முன்னாள் ஆய்வாளர் தெரிவித்தார்.
மேலும் அல்கொய்தாவின் மிரட்டலை இந்தியா மிகவும் தீவிரமாக கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வாளருக்கு மோடியின் நாசிக் கருத்துகள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
மேலும் அல்கொய்தாவின் மிரட்டலை இந்தியா மிகவும் தீவிரமாக கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வாளருக்கு மோடியின் நாசிக் கருத்துகள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
இந்திய மக்களின் கவனத்தை வேறு திசைக்கு மாற்றுவதே இவ்வாறான கருத்துக்களின் அடிப்படை நோக்கம். மோடியை ஆட்சியிலேற்றிய பல்தேசிய வியாபாரப் பெரு நிறுவனங்களும் அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களும் அல்கொயிதா பற்றி பரபரப்புச் செய்திகள் வெளியிட ஆரம்பித்துவிட்டன.
இனிமேல் சில குண்டுவெடிப்புக்களையும் கொலைகளையும் நிகழ்த்த முன்பு இந்திய அரசு தனது பங்கிற்கான பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாக அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதென விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
புலிகளே காரணம்
மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதற்காகவும் போராட்டங்களை சிதைப்பதற்காகவும் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தோற்றுவிக்கப்படு அரச சாரா என்ற பெயரில் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில் மார்கா (Marga Institute ) தொன்மையானது. 1972 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யும் நோக்கோடு அமெரிக்க அரசின் நிதி வழங்கலில் இலங்கையில் மார்கா உருவாக்கப்பட்ட காலத்தில் தொண்டு நிறுவனங்கள் அறியப்படாதவை.
இலங்கையில் அதன் வெற்றியே ஏனைய நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தக் காரணமாக அமைந்தது. மார்கா என்ற தன்னார்வ நிறுவனம் இன்று வரை அமெரிக்க அரசின் நிதிக் கொடுப்பனவிலேயே இயங்கி வருகிறது. இலங்கையில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்து நூல்களையும் பிரசுரங்களையும் வெளியிடும் மார்கா அடிப்படையில் ஏகாதிபத்தியங்களின் தகவல் மையமாகவும் செயற்படுகிறது.
அமெரிக்காவைப் பிடித்துவந்து ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாக புலம்பெயர் விதேசிய அமைப்புக்கள் கூறிவரும் அதே வேளை அமெரிக்க அரச நிதியில் இயங்கும் மார்கா இலங்கையிலிருந்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் வன்னியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் தடுத்துக் கேடையமாகப் பயன்படுத்தியதே காரணம் என்றும் இதனால் படுகொலைகளுக்கு புலிகளே பொறுப்பு என்றும் தெரிவிக்கிறது.
தவிர, அய்க்கிய நாடுகள் நிறுவனம் புலிகளிலிருந்து மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லக் கூடியதான மூலோபாயத்தை வகுக்கத் தவறியுள்ளது என்றும் பிரச்சனையின் மூலத்தை கண்டறியவில்லை என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருந்ததை சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இனக்கொலையின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பத்தைத் தண்டிகக் கோரும் தமிழ் அரசியல் தலைமைகள் எம்மத்தியில் இல்லை.
அமெரிக்க அரசின் தீர்மானத்தில் இரண்டுபக்கமும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் வலிந்து கூறப்பட்டுள்ளது. இதனைக்கூடக் கேள்வி கேட்காத புலம்பெயர் அமைப்புக்கள் அப்பாவிப் போராளிகளைப் போர்க்குற்றவாளிகளாக்கும் ஐ.நாவின் செயலுக்குத் துணை செல்கின்றன.
அமெரிக்க நிதியில் இயங்கும் மார்காவின் அறிக்கை தமிழ்த் தலைமைகளின் வியாபார நோக்கத்தின் விளைபலன். இன்று மார்கா போன்ற அமைப்புக்கள் உலகம் முழுவதும் ஜனநாயக வாதிகளுடன் தமது அரசியல் மொழியில் பேசுகின்றன. இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரும் தமிழ்த் தலைமைகளை குற்றம் சுமத்துகின்றன.
மக்களை ஏமாற்ற புலம்பெயர் தமிழத் தலைமைகள் கூறிய பொய் இன்று அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது மட்டுமல்ல உலகின் மிகவும் கோரமான பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவையும் பாதுகாப்பதில் போய் முடிந்துள்ளது. இடையில் அனைத்தையும் இழந்து அழிவைச் சந்திப்பவர்கள் மக்களுக்காக ஆயுதமேந்திய அப்பாவிப் போராளிகளே.
நன்றி:இனியொரு,
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சனி, 30 ஆகஸ்ட், 2014
காப்பீடை காப்போம்.
மோடியின் மத்திய அரசு தனது முதல் வரவு-செலவு அறிக்கையிலேயே காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிப்போம் என பராக்..பராக்..என அறிவித்து விட்டது.
இந்த அறிவிப்பு பல்வேறுஎச்சரிக்கைகளை, இந்திய நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும், அரசியலுக்கும் குறிப்பாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.க்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய நாட்டின்,அனைத்து மாநிலங் களிலும்,மக்கள் பெரும்பாலானோர் தங்களது கடின உழைப்பால் சேமிக்கப்பட்ட நிதியை, போலி நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள் என போட்டு ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது.
அண்மையில் இந்த வகையில் மேற்கு வங்கத்தின் சாரதா சிட் ஃபண்ட் கம்பெனியில் பணம் செலுத்தியமக்கள், முதலீடு செய்த பணம் கூட திரும்பக்கிடைக் காமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி,நிறுவன அதிபர் சுதிப்தா சென் எத்தனை வருடங்கள் ஆனாலும் சிறையில் இருக்கிறேன்.
ஆனால் பணம் மட்டும் திருப்பித்தர இயலாது என்கிறார். அவரது தொலைக்காட்சி ஊடகத்தை தனது அடாவடி அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வெற்றிபெற்றது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல வெளியேதெரியாமல் சமாளித்தாலும் அதன் எம்.பி.க்கள் வரிசையாக சிறைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இதில் குணால் கோஷ் முந்திக்கொண்டார்.
சதாப்தி ராய்,மிதுன் சக்கரவர்த்தி போன்ற சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் இந்த கம்பெனியின் பிராண்ட் அம்பாசடர்கள். இவர்கள் எல்லாம் இப்போது திரிணாமுல் அரசியல் பிரபலங்கள்.
சிறைக்கு போகும்வரை மம்தாவை ஆஹா, ஒஹோ என்று வர்ணித்த இந்த மோசடி அரசியல்வாதிகள் உள்ளே போனதும் மம்தாவுக்காகத்தானே இப்படி ஈடுபட்டோம் என வசை பாடுகிறார்கள்.
இந்த போலி சீட்டுக் கம்பெனியின் விளம்பரத்தில் மயங்கி பணம் சேமித்து இன்று நடுத்தெருவில் புலம்புபவர்கள் மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, பீகார், அசாம், ஒரிசா, திரிபுரா, ஜார்க்கண்ட் என வங்க மொழி தெரிந்தவர்கள்தான் இந்த மாய வலைக்குள் விழுந்து விட்டார்கள். அவர்களில் சிலர் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர்.
இதுபோல் தமிழ் நாட்டிலும், பல மாநிலங்களிலும் கார் கம்பெனிகள், கோழிப் பண்ணைகள் என விளம்பரத்தை நம்பி மோசடி போனவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் மேலும் மேலும் வசதியாக வாழமுயற்சி செய்யும், நுகர்வு கலாச்சார அடிமைகளான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இது உலகமயம் கற்றுக்கொடுத்த நாகரீகம். இது தவிர அன்றாடம் வேலை செய்து தன் வருங்காலத்திற்காக, மகள், மகன், கல்வி, திருமணம் இவைகளுக்காக சேமித்து அதை குட்டி சீட்டு கம்பெனிகளில் போட்டு கையை பிசைந்து கொண்டிருப்போர் கூலித்தொழிலாளர்கள்.இவர்களுக்கு இந்த சமூகத்தில் கல்வி, மருத்துவம்,வேலை வாய்ப்பு,வீடு, திருமணம் எல்லாமே அரசால் உத்தரவாதம் செய்யப்படாததால், வை ராஜா வை என பணம் போட்டு பணம் எடுக்கும் மோடிமஸ்தான் வித்தைகளில் இறங்கி பார்க்கின்றனர்.
2003-ல் எல்.ஐ.சி.யில்.உருவாகிய லிகாய் என்ற அகில இந்திய முகவர்கள் சங்கம்,தனது 35-அம்ச கோரிக்கைகளுக்காகவும்,இன்சூரன்ஸ் துறையில் 26சதவீத அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்தும் மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது.
2006-ல் அப்போதைய சி.ஐ.டி.யு.வின் அகில இந்திய தலைவர் தோழர் எம்.கே.பாந்தேவின் ஆலோசனைப்படி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்ற நாடாளுமன்ற தர்ணா நடைபெற்றது. எல்.ஐ.சி.சரித்திரத்திலேயே முகவர்கள் நாடு முழுவதும் திரண்டு நடத்திய முதல் நாடாளுமன்ற போராட்டமாக பதிவு செய்யப்பட்டது. இன்சூரன்ஸ் துறை 2012-13-ல் 6.32 சதவீதம் இறங்கு முகத்தை சந்தித்தது.எல்.ஐ.சியும் முதல் பிரிமியத்தில் அதே அளவு சரிந்தாலும், மொத்த பாலிசிகள் எண்ணிக்கையில் 2.88 சதவீதம் அதிகரிக்க முடிந்தது.
ஆனாலும் மற்ற தனியார் நிறுவனங்கள் போல் வீழ்ச்சியடையாமல் காப்பாற்றப்பட்டது. இன்சூரன்ஸ் சந்தையில் எல்.ஐ.சியின் பங்கு பாலிசிகள் எண்ணிக்கையில் 2010-ல் 73.02 சதவீதத்திலிருந்து 2012-மார்ச்சில் 80.90 சதவீதமாக உயர்ந்தது. மேலும் 2013-ல் 83.24 சதவீதமாக அதிகரித்தது.அதேபோல் முதல் வருட பிரிமியத்தை 2010-ல் 64.86 சதவீதத்தை 2012-13-ல் 71 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.
எல்.ஐ.சி.2012-13-ல் 1.70 கோடி பாலிசிதாரர்களுக்கு முதிர்வுத்தொகையையும், வாழ்வுகாலப் பயனையும் வழங்கியுள்ளது.
இதன் மதிப்பு 49,642 கோடி ரூபாய். மேலும்7.26 லட்சம், இறப்பு உரிமங்களுக்காக ரூ.6,360 கோடி வழங்கியுள்ளது.கொடுக்கப்பட வேண்டிய முதிர்வு கேட்புரிமம் வெறும்0.49 சதவீதமும் இறப்பு உரிமம் 1.05 சதவீதமும்தான் உள்ளது. இது உலக அளவிலேயே எந்த கொம்பனும் எட்டிப்பிடிக்க முடியாத சேவை.
எல்.ஐ.சி. சரித்திரத்திலேயே கடந்த 11 வருடங்களில் மிகப்பெரிய சாதனை இது.மேலும் ஐந்து கோடி அரசு முதலீட்டில் 1956-ல் மக்கள் நலனில் அக்கறையுடன் மக்கள் வரிப்பணத்தால் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி. இன்று பதினைந்து லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பாகவும், அதே அளவு வாழ்வாதார நிதியாக வும் ஆலமரமாய் வளர்ந்து, தொடர்ந்து இந்திய நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வழங்கி வருகிறது.
உலகம் முழுவதும் வலம் வந்த அமெரிக்கன் இண்டர்நேசனல் குரூப் என்ற ஏ.ஐ.ஜி போண்டியாகி தெருவில் நிற்கும் நேரத்தில், இந்திய இன்சூரன்ஸ் சந்தை அவர்களை வாழவைக்கவே திறந்து விடப்படுகிறது.
நம் நாடு உலக அளவில் இரண்டாவது மக்கள் தொகையும்,அதிக வர்த்தக வாய்ப்புக்களை கொண்ட தாகவும் உள்ளதுதான்.60 சதவீத மக்கள் இளைய தலைமுறையினராய் உள்ளனர்.
2020-ல் இந்திய மக்கள் தொகையில் 42.7 சதவீதம்பேர் முப்பது வயதுக்குக்குறைந்தவர்களாயிருப்பார்கள். இந்த நிலை இன்சூரன்ஸ் வர்த்தகத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும்.மேலும் இந்த மசோதா தாக்கலானால் எல்.ஐ.சி. “கம்பெனி சட்டத்திற்கு” உள்ளாக்கப்பட்டு அதன் பங்குகளும் சந்தைக்கு வரும்.
இதற்காகவே சென்ற நாடாளுமன்ற தொடரில் “2013 கம்பெனி சட்டம்”என்ற பெயரில் திருத்தம் செய்து தயாராக வைத்துள்ளனர். இந்த சட்டப்படி எல்.ஐ.சி,.கம்பெனி சட்டத்திற்குள் வந்துவிட்டால் அதன் பங்குகளை போட்டிபோட்டு இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பெனிகள் வாங்கிவிட்டால்.எல்.ஐ.சி.யின் தனித்தன்மையான பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தும் போய்விடும்.
பி.எஸ்.என்.எல்.லில் என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை எல்.ஐ.சி.க்கும் ஏற்பட்டு செயலிழக்கவைத்துவிடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறை சேவை நிறுவனம் பெரிய நட்டத்தில் இயங்குவதை இங்கு நினைவு கூறவேண்டும். 26சதவீத அந்நிய முதலீட்டுடன் வந்த கம்பெனிகள் இன்சூரன்ஸ் சந்தையில் முதன் முதலாக பங்கு மார்க்கெட்(ULIP POLICIES) பாலிசிகளை அறிமுகப்படுத்தி, எல்.ஐ.சி.யின்.சந்தை பங்கை 50சதவீதத்திற்கும் கீழே குறைத்த போதும்,முகவர்கள் அயராது பாடுபட்டு இன்று 70 சதவீதம் வரை சந்தை பங்கை உயர்த்தியுள்ளார்கள்.
எல்.ஐ.சி.யை.பொருத்தவரை இங்கு முகவர்கள்தான் சர்வீஸ் செக்டார். முகவர்கள் சிஸ்டம் வெற்றிகரமாக செயல்படுவது இந்தியாவில் மட்டுமே. உலகத்திற்கே முன் மாதிரியானது.
இந்திய இன்சூரன்ஸ் வாங்குபவர்கள் நிர்ணயிப்பது விற்பவர்கள் நிர்ணயிப்பது அல்ல. முகவர்கள் செயலிழக்க நேரிட்டால் எல்.ஐ.சி.யின்,கதி என்னவென்று கற்பனைசெய்துகூட பார்க்க முடியாது.கடந்த 57 ஆண்டுகளாக சிறிது சிறிதாக மக்களின்சேமிப்பில் வளர்ந்து, முகவர்கள் மற்றும் ஊழியர்களின், வேர்வையாலும், ரத்தத்தாலும் நிலை நிறுத்தப்பட்ட எல்ஐசியின் சந்தை, அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகளால் அரிக்கப்பட்டு நிலைகுலையும். இந்திய நாட்டின் பொருளாதாரமே சீர்குலையும்.
இதைத்தான் இந்திய ஆளும் மோடி அரசு விரும்புகிறது.முன்பு காங்கிரசு அரசும் விரும்பியது.
சோ.சுத்தானந்தம்
லிகாய் அமைப்பின்பொதுச் செயலாளர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்பவருக்கு காப்பீடு?
மும்பை வடாலாவில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் விநாயகர் சிலைக்கு
ரூ.260 கோடி அளவில் காப்பீடு செய்துள்ளது. விநாயகர் சிலை மற்றும்
சிலைக்கு அணிவிப்பதற்காக பக்தர்களால் அளிக்கப்படும் தங்க ஆபரணங்கள்
ஆகியவற்றை தீ விபத்து, தீவிரவாதம் மற்றும் கலவரங்களிலிருந்து காக்கும்
வகையில் காப்பீடு செய்துள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கூறுகிறது.
ரூ.22 கோடி மதிப்பில் தங்கம்
மும்பை மாநகரிலேயே பணக்கார
அமைப்பாக உள்ள ஜி.எஸ்.பி. மண்டல்
ரூ.259 கோடிக்கு காப்பீடு பெற்றுள்ளது.
கிங் சர்க்கிள் பகுதியில்
அமைக்கப்பட்டுள்ள கணபதி சிலையை 5
நாள்கள் பூஜை செய்வதற்காக
வைத்திருப்ப தற்காக நாளொன்றுக்கு
ரூ.51.7 கோடி மதிப்பில் காப்பீடு
செய்யப்பட்டுள்ளது. சிலை மட்டும் ரூ.22
கோடி மதிப்பில் தங்கம் இதுவரை
செலவாகி உள்ளதாம்.
காப்பீடு தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு
செய்யப்பட்டுள்ளது. மும்பை மாகரி
லேயே மற்ற மண்டல்களை விட அதிக
மதிப்புள்ள மண்ட லாக வடாலாவில் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை
மாநகரில் பிரபலமான லால்பக்ச ராஜா ரூ.51 கோடிக்கு காப்பீடு
செய்யப்பட்டுள்ளது. அதையும்கூட மிஞ்சிவிட்டது வடாலா ஜிஎஸ்பி மண்டல்
. தீவிபத்து, தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கலவரங்களிலிருந்தும்
காக்கும்வகையில் ஜி.எஸ்.பி. யின் காப்பீடுமூலம் சிலை, தங்கம், மண்டபம்
காப்பீடு உள்ளடக்கி உள்ளது. முதல் நாளில் தொடங்கும் காப்பீடு விழா
முடிந்ததுமே முடியாது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழா கடைசி நாளில்
சிலையின் தங்க ஆப ரணங்களை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்புப்
பெட்டகத்துக்குள் வைப் பதுவரை காப்பீடு இருக் கும். முதல் நாளில் தொடங்கி
சிலை நகைக்கடைகளி லிருந்து வரும் தங்க ஆபரணங்களைக்கொண்டு
சிலையை தண்ணீரில் மூழ் கடிக்கும் வரையிலும் அலங் காரங்கள்
செய்யப்படும். தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு சற்றுமுன்பாக சிலையிலிருந்து
தங்க ஆபரணங்கள் அகற் றப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்பாக
வைக்கப்படும்.
மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடி
ஜி.எஸ்.பி.மண்டல் மூத்த அறக்கட்டளை உறுப்பினரான சத்தீஷ் நாயக்
கூறும்போது, தேசிய மயமான காப்பீடு நிறுவனங்கள்மட்டும்
பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரினோம். காப்பீட்டுத்துறையில்
உள்ள தனியாரை உள்ளேக் கொண்டுவரவில்லை. காப்பீட்டுத்
தவணைத்தொகையை வெளியிடவில்லை. ஆனாலும், காப்பீட்டுக்கான
பிரீமியத் தொகை மட்டும் இலட்சங்களில் இருக்கும். மண்டலுக்கான
காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடியாக அமைக்கப்பட்டுள்ளது என்
று கூறினார்.
லால்பக்சா ராஜா மண்டல் ரூ. 51 கோடி காப்பீட்டுத் தொகைக்கு தவணைத்
தொகையாக(பிரீமியம்) ரூ. 12 இலட்சத்தை செலுத்தியுள்ளது. அதன்படி
பார்க்கும்போது, ஜிஎஸ்பி மண்டல் காப்பீட்டுத் தவணைத் தொகை (பிரீமியம்)
குறைந்தபட்சம் ரூ.50 இலட்சத்தையாவது செலுத்த வேண்டியிருக்கும் என்று
கருதப்படுகிறது.
தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட்சத்துக்கும்மேல்...
காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண
பாலிசியைப் போன்று மண்டல் காப்பீட்டுப் பிரீமியித்தை கணக்கிட
முடியாது. சாதாரண மாக காப்பீட்டுத்தொகை ரூ.இரண்டு கோடி என்றால்
, அதற்கானத் தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட் சத்துக்கும் மேல்
இருக்கும். ஆனால், மண்டல் காப்பீடு செயல்பாடு வேறு விதமானது. அவர்கள்
காப்பீடு செய் துள்ளதானது தீ விபத்து, தீவிரவாத செயல்கள் போன்ற
வற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, ரூ. 259 கோடி காப்பீட்டுக்கு அரை
கோடியைத் தாண்டியே தவணைத் தொகை இருக்கும். ஆனாலும், இது
யூகத்தின் அடிப் படையிலான வேலையே ஆகும்.
தூணிலும் துரும்பிலும் இருந்தவர் இப்போது தேங்காயிலும் |
தேங்காய் ஒப்பந்தப்புள்ளி
ஜிஎஸ்பி மண்டல் சார்பில் 1.75
இலட்சம்
எண்ணிக்கை யில் தேங்காய்கள்
பெறுவதற்காக
ஒப்பந்தப்புள்ளியைக் கோரி
உள்ளது. இறுதியாக ரூ.31.5
இலட்சத்துக்கு முடி வானது.
அதன்படி,
தேங்காய் ஒன்றின் விலை ரூ.18-
லிருந்து ரூ.20 ஆக இருக்கும்.
5 இலட்சத்தில் தங்க மலர்
ஜிஎஸ்பி மண்டல் 150 கிராம் எடை
அளவுள்ள தங்க மலர் ரூபாய் 5 இலட்சம்
மதிப்பில் கொடையாகப் பெற் றுள்ளது
என்று அதன் அறக்கட்டளை சார்பில்
தெரிவிக் கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...
-
'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பிலும், எழுத்திலும் எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், 'ஹே ராம்', ...
-
இப்படியா ராஜாவை வாரி விடுவது. காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம். இது கொஞ்சம் அதி...
-
போதை அடிமைகளை குறிவைக்கும் தீவிரவாத குழுக்கள் ஆல்பர்ட் ஜான்சன் (27) கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போது, அவரது தகப்பனார், ...