மறுக்கப்படும் உண்மை!
காவிப்படையினர் இந்திய மக்கள் மீது ஒரு உணவுக் கட்டுப்பாட்டைத் திணிக்கத் தொடர்ந்து முயன்று வந்திருக்கின்றனர்.
அந்த முயற்சிகளை, இப்போது மத்திய அரசே கையிலெடுத்துக்கொண்டுள்ளது. தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதிராக காவி உடையணிந்து போரைத்துவக்கி யுள்ளது.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் ஒரு அக்கிரமமான திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம். மோடி அரசின் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டம் தொடங்குவதையொட்டி மே 25 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை, பகுத்தறிவற்ற, தாறுமாறான செயல்களுக்குத்தான் இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்குச் சான்றளிக்கிறது.
ஏற்கெனவே விரிவாக வந்துள்ள செய்திகளின்படி, ‘கால்நடை விதிகள் முறைமை -2017’ எனப்படும் இந்த 396வது அறிவிக்கை இந்தியா முழுவதும் கசாப்பு செய்வதற்காகக் கால்நடைகளை விற்பதற்குத் தடை விதிக்கிறது.
கால்நடைகள் என்று இந்த அறிவிக்கையில் காளைகள், பசுக்கள், எருதுகள், எருமைகள், கிடாரிகள், கன்றுகள், இளங்கன்றுகள், ஒட்டகங்கள் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிக்கையின் தாக்கங்கள் என்ன?
இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்?
விலங்குகள் கசாப்புக்குத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உரியது.
இந்தக் காரணத்திற்காகத்தான், இமாசலப்பிரதேச உயர்நீதிமன்றம் 2016 இல் பிறப்பித்த ஒரு ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
பசுக்கள் கசாப்பு செய்யப்படுவதற்கு எதிராக ஒரு தேசிய சட்டம் இயற்ற வேண்டும் என்பது மத்திய அரசுக்கு இமாசலப்பிரதேச உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை. மத்திய அரசுக்கு அவ்வாறு சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.ஆனால், மத்திய அரசின் தற்போதைய அறிவிக்கை உச்சநீதிமன்றத் தடையாணையின் கண்ணில் மண்ணைத் தூவுகிறது.
பசுக் கசாப்புக்கு தேசியத் தடை என்பதற்கு மாறாக, எல்லாக் கால்நடைகளையும் கசாப்புக்காக விற்பனை செய்ய ஒரு தேசியத் தடையை விதிக்கிறது.
தற்போது பசுவதைத் தடைச் சட்டம் இல்லாத 6 மாநிலங்களையும் இந்த அறிவிக்கை உள்ளடக்குகிறது.எடுத்துக்காட்டாக வங்கம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மாடுகளைக் கசாப்பு செய்யத் தடை எதுவும் இல்லை. ஆனால், வங்கத்திலோ கேரளத்திலோ கால்நடைச் சந்தை ஒன்று நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம்.
கால்நடைகளின் உரிமையாளர் ஒருவர் தன்னுடைய கால்நடைகளை அந்தச் சந்தைக்குக் கொண்டுவருகிறார் என்றால், வாங்க வந்த ஒருவர் அவற்றைக் கசாப்புக்காக வாங்குகிறார் என்றால் அவர் விற்பதும் இவர் வாங்குவதும் இந்த அறிவிக்கையின்படி சட்டவிரோதச் செயல்களாகும்.அடுத்து, எருமைகளை கசாப்பு செய்யக்கூடாது என்ற தடை எந்த மாநிலத்திலுமே இல்லை. தற்போதைய அறிவிக்கையோ நடைமுறையில் அதற்குத் தடை போடுகிறது.
பயனற்றதாகிவிட்ட ஒரு எருமையை, கசாப்பு நோக்கமன்றி வேறு எதற்காக விற்கப்போகிறார்கள்?
ஆக, இந்த அறிவிக்கை மாநிலங்களின் உரிமைகள் மீதும், அரசமைப்பு சாசனக் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதும் ஒரு நேரடி ஆக்கிரமிப்பேயாகும்.
கொடூரச் செயல்
கால்நடை வணிகத்தையே குற்றமாக்குகிற ஒரு கொடூரமான செயல்முறையை இந்த அறிவிக்கை ஏற்படுத்துகிறது. அத்துடன், விற்கப்படுகிற ஒரு விலங்கு விவசாய நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தப்படுமேயன்றி கசாப்புக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை விற்பவர் மீது சுமத்துகிறது.
கால்நடைச் சந்தைக்குத் தனது விலங்கைக் கொண்டுவரக்கூடிய ஒரு விவசாயிக்கு, அதை வாங்குகிறவரின் நோக்கம் என்ன என்பது எப்படித் தெரிந்திருக்க முடியும்?
வாங்குகிறவரின் பிரச்சனையைப் பார்த்தால், எப்படிப்பட்ட ஒரு அவசரக் காரணம் ஏற்பட்டாலும் கூட, அவரால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தான் வாங்கிய கால்நடைகளை விற்கமுடியாது. விலங்குகள் விற்கப்படுவதிலும் வாங்கப்படுவதிலும் ஒரு தீவிரமான அரசாங்கக் கண்காணிப்பு இருக்கும். பெருமெடுப்பில் அதிகார வர்க்கத்தின் பிடி இருக்கும்.
‘சிறிய அரசாங்கம்’ ஏற்படுத்தப்படுவதாகவும், ‘அதிகாரிகள் ராஜ்யம்’ முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாகவும் சொல்லிக்கொண்ட ஒரு அரசு இப்படி அதிகார வர்க்கத்தின் பிடியை இறுக்குவது வேடிக்கைதான்.விவசாயிகள் இதனால் வீண் தொந்தரவையும் ஊழலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அப்படிப்பட்ட நிலைமை மட்டும் ஏற்படாதென்றால் சோதனை அதிகாரிகள் மாட்டுத் தொழுவத்திற்கு வெளியேயிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பது நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும்.ஏற்கெனவே பசுக் காவல் என்ற பெயரில் கட்டுக்கடங்காத ரவுடித்தனம் பரவியிருக்கிறது.
இந்த அறிவிக்கை அப்படிப்பட்ட பசுக் காவல் கும்பல்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக வந்திருக்கிறது. இனி அவர்கள், விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது என்ற போர்வையில் எல்லோரையும் பீதி வசப்பட வைப்பதற்கு உரிமம் பெற்றவர்களாகிவிடுவார்கள்.
கைவிடப்படும் பசுக்கள்
எடுத்துக்காட்டாக ஹரியானா மாநிலத்தை, ஏன் குஜராத் மாநிலத்தையே கூட எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு மாநிலங்களிலும் பசும் பால் உற்பத்தியைவிட, எருமைப் பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இது இந்த மாநிலங்களில் விவசாயிகளிடையே எந்த மாட்டை வளர்ப்பது என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது.
இந்த இரண்டு மாநிலங்களில்தான் தெருவில் திரியும் பசு மாடுகள் மிக அதிகம். கவனிப்பாரின்றி, அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டுத் திரிகிற பசுக்கள் அவை.
இதற்கு மாறாக வங்கம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் எருமைப் பால் உற்பத்தியை விட பசும் பால் உற்பத்தி அதிகம். தெருக்களில் திரியும் பசுக்களின் எண்ணிக்கையோ குறைவு.
இந்தியாவின் விவசாயிகள் ஏற்கெனவே பெரும் துயரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
சராசரியாக நாளொன்றுக்கு 32 தற்கொலைகள்.விவசாய மேம்பாட்டுக்காக எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்ற தனது வாக்குறுதியிலிருந்து மத்திய அரசு பின்வாங்கிவிட்டது.
இதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு விவசாயமே இழப்பை ஏற்படுத்தும் தொழிலாகிவிட்டது.விவசாய விளைபொருட்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயிப்பதில், அதன் உற்பத்திச் செலவோடு, குறிப்பிட்ட அளவுக்கு குறைந்தபட்ச லாபம் கிடைக்கத்தக்க வகையில் கூடுதல் விலை முடிவு செய்யப்படுவதே ஒரு அடிப்படை அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தது.
அத்தகைய ஆதரவு இல்லாத நிலையில் கால்நடை வளர்ப்பும், விற்பனையும்தான் விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான மாற்று வருவாய் வழியாக இருக்கிறது.
இத்தகைய நிலையில் விலங்குக் கசாப்புக்கு எதிரான கடும் சட்டங்களின் காரணமாக, பல மாநிலங்களில் காளைகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ள சூழலில், கால்நடை விலைகள் செங்குத்தாகச் சரிவடைந்துள்ளன.
மறுக்கப்படும் உண்மை
மாட்டிறைச்சி உணவுப் பழக்கத்திற்கு எதிராக ஒரு உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்குத் தங்களது மத நம்பிக்கையையும் உணர்வையும் பயன்படுத்துகிறவர்கள், எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் பொதுவாக எருமைக் கறி உணவுதான் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற உண்மையை மறைக்கிறார்கள்.
மாட்டுக்கறி என்பதற்குள் எருமைக் கறி உள்ளடங்குகிறது என்ற உண்மையையும் மறைக்கிறார்கள். பக்தகோடிகள் செய்கிற வெறித்தனமான பிரச்சாரத்தில், பசுக் கொலைக்காக மனிதக் கொலை நியாயப்படுத்தப்படும் நிலையில், உண்மைகள்தான் எப்போதுமே பலியாகின்றன.
கசாப்பு செய்யப்படும் கால்நடைகள் (காளை, பசு இரண்டுமே) ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கையில் 1.6 விழுக்காடு மட்டுமே என அமைச்சகத்தின் வலைத்தளம் காட்டுகிறது.
மொத்தமுள்ள எருமைகளில் கசாப்பு செய்யப்படுபவை 10.2 விழுக்காடு. சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிற, நாடு முழுவதும் சாதி, இன வேறுபாடின்றி கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கிற பகைமைப் பிரச்சாரம் எவ்வளவு போலித்தனமானது என்பதைத்தான் இது காட்டுகிறது.
இந்த அறிவிக்கையை எதிர்ப்பதில் முன்னால் நிற்கிறது கேரள அரசு. மத்திய அரசு இதனை விலக்கிக் கொண்டாக வேண்டும்.
- பிருந்தா காரத்
நன்றி: என்டிடிவி
தமிழில்: அ. குமரேசன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------பசுக்களும் எருமைகளும்
மத்திய கால்நடைத் துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது வலைத்தளத்தில் மாடுகள் பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிடுகிறது.
அது, மாடு வளர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான விளக்கமளிக்கிறது.
அந்தக் கணக்குகளின்படி உள்நாட்டுப் பசு - அதாவது ‘ஒரிஜினல் கோமாதா’ - நாள்தோறும் சராசரியாக இரண்டரைக் கிலோ பால் தருகிறது. கலப்பினப் பசு சுரக்கிற பால் சராசரியாக 7.15 கிலோ.
ஆனால் அதனை வளர்த்துப் பராமரிக்கிற செலவு அதிகம்.
எருமைப் பசுவிடமிருந்து சராசரியாக 5.15 கிலோ பால் கிடைக்கிறது.இங்கே, வேறு எதையும் விட பொருளாதார அக்கறைதான் மேலோங்குகிறது.
ஆகவேதான் மாட்டுப் பண்ணை வைத்துள்ள விவசாயிகள் பெரும்பாலோர் கோமாதாவை விட்டுவிட்டு எருமைப் பசுவுக்கு மாறிவிட்டார்கள்.
மேலும் எருமைப் பசுவுக்கு பால் வற்றுகிறபோது அதைக் கசாப்புக்காக விற்பதும் எளிது.
ஆனால் 396வது அறிவிக்கை இப்போது எருமைகளை விற்பதும் கூட ஒரு குற்றம்தான் என்கிறது. பசுவிலிருந்து எருமைக்கு மாறிய விவசாயிகள் இனி அவற்றை விற்பது கடினமாகிவிடும்.
இது பால் உற்பத்தித் தொழிலில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஏற்றப்படும் சுமை
கால்நடை வளர்ப்பில் ஒரு விவசாயிக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 35,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் வரையில் செலவாகிறது.
இதில், ஒரு தனி மாட்டை பராமரிக்கக் குடும்பமே அளிக்கிற உழைப்பு, குறிப்பாக பெண்களின் உழைப்பு, சேரவில்லை. மாடு பயனற்றதாகிவிட்ட பிறகு அதனை கசாப்புக்காக விற்க முடியாது என்றால் முழுச் சுமையும் விவசாயியின் தலையில்தான் விழும்.
விவசாயிகளோடு சேர்ந்து, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், குறிப்பாக ஆண்டுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எருமை இறைச்சித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். லட்சக்கணக்கான இறைச்சிக் கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தோல் பதனிடும் தொழிலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்குகிறது. சுமார் 25 லட்சம் பேருக்கு அது வேலைவாய்ப்பு வழங்குகிறது. சங்கிலித் தொடர் போன்ற தோல் தொழில் இந்த அறிவிக்கையால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
மக்களின் ஊட்டச்சத்து நிலையிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த மக்களிலும் கணிசமானோர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவிக்கிறது.
நாட்டின் ஏழை மக்களுக்கு மாட்டிறைச்சிதான் ஒரு மலிவான ஊட்டச்சத்து ஆதாரம். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடும் ரத்தசோகையும் இந்தியாவில் மிக அதிகமாக நிலவுகிற காலகட்டத்தில் இப்படியொரு தடை வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனக்கும் தன் குடும்பத்துக்குமே உணவுக்கு பற்றாக்குறை இருக்கையில், வயதான, உழவுக்கு பயனற்றை மாட்டை எப்படி விவசாயி பராமரிப்பார்? அவற்றுக்கு உணவளிப்பார்? வயதான மாடுகள் என்றால் அதை விற்கவும்கூட அனுமதிக்க முடியாது என்ற தோரணையில் சட்டம் இயற்றியுள்ளது மத்திய அரசு. இவ்வளவு விதிகளும் மாடுகளை காப்பாற்றுவதற்காகவா என்றால் நிச்சயமாக இல்லை. இது மீண்டும் நாட்டு மாட்டு இனங்களை அழித்தொழிக்கும் பணியே என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாட்டுப் பசு இனங்கள் இப்போதே அழிவின் விளிம்பில்தான் உள்ளன. இந்த விதிமுறைகளால் அவை எல்லாம் நாளடைவில் முற்றிலுமாக அழிந்து போய்விடும். அதற்கு மேற்பட்ட காலங்களில் பாலுக்காக முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பசுக்களான ஜெர்சி இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டும். அவ்வகை பசுக்கள் மந்தை மந்தையாக இந்தியாவிற்கு வந்து இறங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் உள்ளிட்ட பலத்தரப்பட்ட உணவுத் தேவைகளுக்காக சராசரியாக 100 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது.
ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட, மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய்க்கு பால் வணிகப்படுகிறது. அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 14,40,000 கோடி ரூபாய்க்கு பால் வணிகம் நடந்துகொண்டிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------