bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 28 பிப்ரவரி, 2019

அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் !

புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு அரசும், ராணுவமும் அடையும் பதட்டத்தை விட, இந்துத்துவ கும்பலுக்கு அடியாள் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களின் கூச்சல், பதட்டம் அதிகமாக இருக்கிறது. தாக்குதல் நடந்த அன்று அர்னாப் கோஸ்வாமி பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என குதித்தார்.
அர்னாப்பின் கதறலை மெல்லிய தொனியில் பேசும் நம்மூர் பத்திரிகையாளர் மாலன், இதுதான் சந்தர்ப்பம் பாகிஸ்தானை முற்றாக குண்டு போட்டு அழிக்க வேண்டும் என யோசனை சொன்னார்.
இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் தீவிரவாத முகாம்களை அழித்ததாக  இந்தியா சொன்னபோது, மாலனுக்குள் இருந்த முழு சங்கியும் வெளிப்படுகிறார். அவர் எழுதிய முகநூல் பதிவில்,
“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! இன்று அதிகாலை நடந்த அதிரடித் தாக்குதலின் சிறப்பு என்ன?

போர் வியூகம் வகுக்கும் மாலன்…
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோமீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது. அது பத்திரமான மலைப்பகுதி. எவ்வளவு பத்திரமாணது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.
தீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971 -க்குப் பிறகு, 48 வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை.
அதன் கணக்குகள் பொய்த்தன. அந்தக் காலங்கள் மலையேறிவிட்டன என்று அதற்குத் தெரியாது. இந்தியா தீவிரவாதிகள் பின்வாங்கக் காத்திருந்தது. அதே நேரம் வேறு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. தீவிரவாதிகள் இடம் மாறியதும் துணிந்து எல்லை தாண்டிப் போய் போட்டுத் தள்ளியது. இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 400! (375 பயிற்சியாளர்கள்+25 பயிற்சி அளிப்பவர்கள்.)
40 -க்கு பதில் 400! இதுதான்(டா) இந்தியா!” என்கிறார்.

*****

ந்தியாவின் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து இந்திய அரசே இதுவரை உறுதியான எந்தத் தகவலையும் கூறவில்லை. வெடி சத்தம் கேட்டது உண்மைதான், ஒரே ஒருவருக்கு, அதுவும் அந்த மலைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு காயம் என்பதாக பிபிசி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது.  உண்மை இப்படியிருக்க, அக்மார்க் சங்கிபோல, மாலன் “40 -க்கு பதில் 400” என அவிழ்த்து விடுகிறார்.
புதன்கிழமை நடந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் வசம் அபிநந்தன் என்ற வீரர் சிக்கினார். அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என சமூக ஊடகங்களில் இந்திய மக்களும் பாகிஸ்தானியர்களும்கூட வலியுறுத்திய நிலையில், கீ போர்டில் போர் புரியும் மாலன், “சிராய்ப்புக் கூட இல்லாமல் சண்டையில் ஜெயித்த ஹீரோக்கள் சினிமாவில் கூட இல்லை!” என அஞ்சா நெஞ்சனாக எழுதுகிறார்.

நல்லா கூவுற தம்பி….
மாலனைப் போல டிவி ஸ்டியோவில் உட்கார்ந்துகொண்டு  ‘போர் போர்’ என கத்திக்கொண்டிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. போர் வேண்டாம் என முழக்கங்கள் எழ ஆரம்பித்த நிலையில், போருக்கு போயாக வேண்டும் என அடம்பிடிக்கும் அர்னாபை தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வையுங்கள் என ட்விட்டரில் பலர் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
“அன்புள்ள பாகிஸ்தானியர்களே இங்குள்ள அர்னாப் கோஸ்வாமியை அழைத்துக்கொண்டு, அபிநந்தனை திருப்பி அனுப்பி விடும்பம்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ரவிச்சந்திரன்.
முன்னாள் இராணுவ வீரரான சாவூர், “அபிநந்தனை மீட்க அர்னாப், கவுரவ் சாவந்த், நாவிகா குமார், ராகுல் கன்வால், ராகுல் சிவசங்கர் போன்றோரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.
அதுபோல, மாலனையும் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் முகநூல் பதிவர்கள் பலர் விரும்புகிறார்.
“மாலன் போன்ற போர் விரும்பிகள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சென்று எதிரிகளை சுட்டு வீழ்த்தி தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டும். இதுதான் பொருத்தமான நேரம். மாலன், கூச்சப்பட்டு அமைதியாக இருந்துவிடுவார் என்பதால் நாம் அவரை போர் முனைக்கு செல்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். தேசமே பதற்றத்தில் இருக்கும்போது தேசபக்தாளுக்கு ஃபேஸ்புக்கில் என்ன வேலை?” என்கிறார் பாரதி தம்பி.

***

“நமது ராணுவத்தில் நேரடியாக யுத்தத்தில் இறங்கும் சிப்பாய்கள் அனேகமாக பஞ்சமர்களும் சூத்திரர்களுமே. 10% இடஒதுக்கீட்டின்படி உயர்சாதியினரையும் அங்கே பணியமர்த்த வேண்டும். மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குதான் முரட்டு குணம் வரும் என்று சங்கிகள் கூறுவதால் அவர்களும் அதை சாப்பிட வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு பிறகு போருக்கு போனால் வெற்றி நிச்சயம். சரிதானே மாலன்..?” எனக் கேட்கிறார் பேராசிரியர் அருணன்.

***

இந்தியாவின் தாக்குதல் குறித்து தெலுங்கு செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணுவ உடையணிந்து செய்தியை வழங்கினார். அதைக் குறிப்பிட்டு, “இதுபோல இனி, திரு மாலன் நாரயணன் தொலைகாட்சிவிவாதங்களுக்கு மில்ட்ரி ட்ரஸில் வரவேண்டும். அதே வேகத்தோடு எல்லைக்குப் போய் பாகிஸ்தான் மண்ணில் குதித்து… படபடவென்று தன்னைத் தானே சுட்டுக் கொள்ள வேண்டும்…” என்கிறார் இரவிக்குமார்.

***

“இந்திய ராணுவ தளபதி அவர்களுக்கு..
தமிழ்நாட்டில் மாலன் என்றொரு ஸ்பார்ட்டன் வீரர் ஒருவர் போர் புரிய துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.. தயவு செய்து வந்து அள்ளிட்டு போகவும்.. ” என்கிறார் கார்ட்டூனிஸ்ட் பாலா.

***

“போர் வேண்டும்” என்று தினம் தினம் சமூக வளைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு சென்று குடியேற வேண்டும்.
மாலன், மாரிதாஸ் போன்ற பிஜேபி அயோக்கியர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, பாதுகாப்பான இடங்களில் அமர்ந்து கொண்டு போர் வேண்டும் என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வருகிறார்கள்…” என காட்டமாகிறார் சந்திரசேகர்.

***

“மாலன் என்ற ஆளுங்கட்சி ஜால்ரா பத்திரிகையாளர் அவருடைய 300 தீவிரவாதிகள் கதையை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினார் என்று விளக்கம் கொடுப்பாரா? கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை தெரிவிக்குமா? இந்த தாக்குதல் குறித்து இந்திய விமான படை நேரடியாக அறிக்கை அளிப்பார்களா?
ராணுவ தாக்குதல் குறித்து சந்தேகம் கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் பிஜேபி-யினர் அள்ளி விடும் கதைகளால் ராணுவத்தின் பொறுப்பு கேள்விக்குரிய விஷயமாக ஆக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.” என்கிறார் அரசியல் நையாண்டி.

***

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
– என்ற நாமக்கல் கவிஞர் வழியிலேயே மாலனுக்குப் பதில் சொல்லத் தொடங்குகிறேன்.
போர் என்றால் நடுங்குகுறார்கள் புறநானுற்றின் புலிப் போத்துகள் என்று மாலன் பதிவிட்டத்தை நான் காண நேர்ந்தது. மாலன் வரிகளையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பறநானூற்றின் புலிப் போத்துகள் என்று தமிழர்களை தான் குறிப்பிடுகிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவ்வரியால் தான் தமிழ்ப் பேசினாலும் தான் ஒரு தமிழினில்லை என்று தன்னுடைய அடையாளத்தையும் அதே ஒற்றை வரியில் உறுதிப் படுத்தியிருக்கிறார். புலிப் போத்துகள் என்ற சொல்லை விடுதலைப் புலிகளை சிறுமைப் படுத்தவும் பயன்படுத்திக் கொள்வதை நான் உணர்கிறேன்.
அதிகாரத் திணிப்பை எதிர்த்து போராடிய புறநானூற்றின் புலிப் போத்துகள் தன் இனத்தின் ஒரு பகுதியை இழந்தே இருக்கிறோம். போரின் வலியை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதன் பாதிப்புகளையும் நிகழ் காலத்தில் கண்டிருக்கிறோம்.
இந்நாட்டிலும் ஆரிய திராவிடப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் கருத்தியல் போர் நடத்திக் கொண்டிருக்க, கல்வி கற்பதாலேயே எதிர்த்துப் பேசுகிறார்கள் என்றறிந்து படுகொலைகளை கல்வி நிறுவனங்களின் மூலமாகவும், தகுதித் தேர்வு என்ற பெயர் மூலமாகவும் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள் மாலன்.
உண்மையில் உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் அபிநந்தனின் குடும்பத்தைப் பார்த்து விட்டு வாருங்கள். போரினால் கைக்கால் இழந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் குடும்பத்தின் நிலையையும் பார்த்து விட்டு வருங்கள். போரினால் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களையும் சந்தித்து விட்டு வாருங்கள்.
இதற்கு மேலும் இறுதியாக ஒரு மாத காலம் காஷ்மீரில் இருக்கும் இசுலாமியர்களின் வீடுகளில் ஒரு மாதம் காலம் இருந்து விட்டு வாருங்கள்.
பின்னர் உங்கள் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் போருக்கு அனுப்பி வைத்துவிட்டு வாருங்கள்.
போலி தேசப் பக்தியால் ஓட்டுப் பொறுக்காதீர்கள் மாலன் அவர்களே!”  முரளிகிருட்டிணன் சின்னதுரையின் பதிவு இது.

***

“எல்லையில் காவல் காக்க மாலன் செல்ல இருப்பதாக செய்தி வருகிறது. உண்மையா?” எனக் கேட்கிறார் யோ. திருவள்ளுவர்.

***

மாலன், அர்னாப் வகையறா சங்கி பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், ஆளும் அரசுக்கு கூஜா தூக்கும் பல ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
“ தினந்தந்தி – தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு. அதிகபடியான தமிழர்களால் வாசிக்கப்படக் கூடிய தினசரி.
நேற்று : “பழி தீர்த்தது இந்தியா”.
இன்று : “பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட போது, சென்னை விமானி சிக்கினார். வீடியோ வெளியிட்டதுக்கு இந்தியா கண்டனம்”.
இவை இரண்டும் தான் தலைப்பு செய்திகள்.
இதை கொட்டை எழுத்தில் போட்டு விட்டு, பக்கத்தில் அபிநந்தனின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. வீடியோ வெளியிடக் கூடாது என்று இந்தியா சொன்னதை சொல்லிக் கொண்டே, புகைப்படங்களை வெளியிட்டு, “பார்த்தீங்களா மக்களே, இப்படி தான் பாகிஸ்தான் நம்முடைய வீரர்களை நடத்துகிறது” என்று சொல்லாமல் சொல்வது எந்த மாதிரியான நயத்தகு ஊடக தர்மம்? இதை ஊடக வேசித்தனம் என்று சொல்லாமல், வேறு எப்படி டிப்ளமேடிக்காக சொல்வது???
உள்ளே ஒரு பெட்டி செய்தியாய் ‘மசூத் அசார் ஒத்துக் கொண்டார்’ என்று ஒரு செய்தி வருகிறது. மசூத் அசார் இதற்கு முன் சொன்ன எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இப்போது 300 – 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று சொன்ன பொய்யினை சமன் செய்ய, திடீரென என்ன மசூத் அசாரின் மீது அக்கறை? இதற்கு முன் மசூத் அசார் பேசியது அத்தனையும் பெரும் பிரசாரங்கள். பொய்கள். ஜிகாதி உளறல்கள். நேற்று சொன்னது மட்டும் சத்தியம். என்ன லாஜிக் இது?
மசூத் அசார் உருதுவில் சொன்னது பாகிஸ்தானிய உருது இதழ்களில் வெளியாகி இருக்கிறது. கூகிள் ட்ரான்ஸ்லேட் வைத்தால் ஒரளவிற்கு புரியும். அவர் சொன்னது “இந்திய விமானங்கள் அத்து மீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கின்றன” என்பது மட்டுமே. ஆனால், தினந்தந்தி மசூத் அசார் முழுமையாக ஒத்துக் கொண்டார் என்று எழுதுகிறது.
பாகிஸ்தான் இரண்டு மிக் விமானங்களை வீழ்த்தியது என்று பாகிஸ்தான் பிரதமரே பகிரங்கமாக ட்வீட் போடுகிறார். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய சார்பு ஊடகங்கள், இந்திய நிலையினை எடுப்பதில் நமக்கு சிக்கலில்லை. ஆனால், நெடுசாண்கிடையாக இப்படி மோடிக்கு கால் கழுவி விட வேண்டிய அவசியமென்ன? பிறகு என்ன எம்-மிற்கு நடுநிலை நாளிதழ் என்கிற பெயர்? இதற்கு பேசாமல் ‘தினமலர்’ மாதிரியும், அதன் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் மாதிரியும் இருந்து விட்டு போகலாமே? ஊடகங்களில் இருக்கும் “மாமாக்கள்” என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஊரறிந்தது. ஆனால் ஊடகமே “மாமா” வேலை பார்த்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது?
ஆதித்தனார் குடும்பம் என்பதால் தான் உங்களுக்கு தமிழகத்தில் மரியாதை. அதை நீங்களே கெடுத்துக் கொண்டால், நாளை மக்களை குறை சொல்லாதீர்கள்.” என்கிறார் நரேன் ராஜகோபாலன்.
“நாட்டில் நல்லது கெட்டது என்ன நடந்தாலும் அதனால் ஒரு மயிரைக்கூட இழக்காமல் லாபம் மட்டுமே பார்க்கும் மேட்டுக்குடிகளின் கொழுப்பெடுத்த வாய்கள் இப்படித்தான் பேசும்.
பார்ப்பனீயம் என்பது மனிதக் கறியை ருசி பார்க்கும் சிந்தனை, அதனால்தான் அது ஆடு போன்ற அல்ப இறைச்சியை புசிப்பதில்லை.” என்கிறார் வில்லவன் இராமதாஸ்.
ஐந்தாண்டு கால ஆட்சி, இந்தியாவின் பேரழிவாக அமைந்துவிட்ட நிலையில், பதவி போகக்கூடும் என்ற கணிப்பில் போர் என்ற பேரழிவு ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு. இந்துத்துவ கும்பலைத் தவிர, பொது மக்கள் எவரும் போரையும் விரும்பவில்லை; மோடி நடத்தும் நாடகத்தையும் இனம் கண்டுவிட்டார்கள்.
மோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர். இந்துத்துவ கும்பலோடு, இந்த ஊதுகுழல்களையும் மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்.
நன்றி,தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

கரையா?சிறையா??

கடனில் அனில் அம்பானி.
கரை ஏறுவாரா?   சிறை ஏகுவாரா?
"2006-ம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல பிசினஸ் பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்' வெளியிட்ட இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 14.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் மூன்றாவது இடத்தில் இருந்தவர் அனில் அம்பானி. 
ஆனால், இன்று அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் வீழ்ச்சியும், அதனால் ஏற்பட்ட கடனும் அவரை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளும் அளவுக்கு அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன."

ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து நிறுவனத்தைக் கவனித்துவந்தனர். 

என்றாலும், நிர்வாக விஷயங்களில் ஆரம்பக்காலம் தொட்டே மூத்த சகோதரரான முகேஷ் அம்பானியின் கையே ஓங்கியிருந்தது.

 இந்த நிலையில், அனிலின் அரசியல் ஆர்வம், சமாஜ்வாதிக் கட்சியின் ஆதரவுடன் எம்.பி-யானது, பிறகு இரண்டே வருடத்தில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தது போன்றவை எல்லாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இமேஜை பாதிக்கும் வகையில் இருப்பதாக முகேஷ் கருதினார். 
இதனால், ஒருகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார். 
முகேஷ் அம்பானியின் சம்மதம் இல்லாமல் அனில் தன்னிச்சையாக எதையும் நிறுவனம் சார்பில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

இது அனிலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், தன் தாயார் கோகிலா பென்னிடம் பிரச்னையைக் கொண்டுசென்று, தனக்கு சொத்தைப் பிரித்துத் தருமாறு கேட்டார். 
முதலில் அதிர்ச்சியடைந்த கோகிலா, அனிலை சமாதானப்படுத்திப் பார்த்தார். ஆனால், தனது பங்கைப் பிரித்துக்கொண்டு செல்வதில் அனில் உறுதியாக இருந்ததால், சில பிசினஸ் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் 2005-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துகள் பிரிக்கப்பட்டன. 

அதன்படி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு திட்டங்களைச் செயல்படுத்தும் ரிலையன்ஸின் முக்கிய நிறுவனமான ஆர்.ஐ.எல்  மற்றும் அதன் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ஐ.பி.சி.எல் ஆகியவை முகேஷ் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டன. ரிலையன்ஸ் இன்ஃபோ.காம், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி ஆகியவை அனிலுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. 


சொத்துப் பிரிப்பு நடந்த காலகட்டத்தில், அப்போதுதான் செல்போன் பரவலாக அறிமுகமாக ஆரம்பித்திருந்ததால், டெலிகாம் துறைக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. 
அந்த வகையில் டெலிகாம் துறையை தன்வசப்படுத்திக்கொண்ட அனிலின் நடவடிக்கை புத்திசாலித்தனமானதாகப் பார்க்கப்பட்டது. 

அதேசமயம், முகேஷ் அம்பானியின் கையில் சென்ற எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சர்வதேசச் சந்தையின் சூழல் காரணமாக அப்போது நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தது.
 இதனால், 2006-ம் ஆண்டில் முகேஷ் அம்பானியைக் காட்டிலும் அனிலின் சொத்துமதிப்பு சுமார் 550 கோடி ரூபாய் அதிகமாக இருந்தது.
 அத்துடன் மேலே சொன்னபடி நாட்டின் பணக்காரர் பட்டியலிலும் 3-வது இடத்தைப் பிடித்தார் அனில் அம்பானி. 

அனிலும் ,முகேஷும்.
இப்படி உயரத்துக்குச் சென்ற அனில் அம்பானிதான் இன்றைக்கு 46,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதோடு, எரிக்சன் நிறுவனத்துக்கான 453 கோடி ரூபாய்க் கடனைக்கூட கட்ட முடியாமல் தவித்துவருகிறார்.
 இந்தக் கடனை நான்கு வாரங்களுக்குள் கட்டாவிட்டால் சிறைக்குச் செல்லக்கூடிய அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளார். 

முன்னதாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் சொத்துகளை விலைக்கு வாங்கிக்கொண்டு தனது கடனை அடைக்க உதவுமாறு சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியையும் நாடினார் அனில். 
அப்படிச் செய்தால், மொத்த கடன்தொகை 18,000 கோடி ரூபாயாகக் குறையும் என மதிப்பிடப்பட்டது. 

ஆனால், அப்படி விலைக்கு வாங்கும்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பழைய கடன்களுக்கும் உத்தரவாதம் அளிக்குமாறு தமது நிறுவனத்தைக் கேட்கக் கூடாது என்று முகேஷ் அம்பானி விதித்த நிபந்தனையால், அது நடக்காமல்போனது. 
இதன் காரணமாகவே, தற்போது எரிக்ஸன் நிறுவனத்து மட்டுமான கடன் நிலுவைத் தொகையான 450 கோடி ரூபாயை அடுத்த நான்கு வாரத்துக்குள் அனில் அம்பானி திருப்பிச் செலுத்தவில்லை என்றால், சிறை செல்ல வேண்டியிருக்கும் எனப் புதன்கிழமையன்று எச்சரித்தது உச்ச நீதிமன்றம்.
 இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் அனிலை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 1 கோடி ரூபாயை அபராதமாகவும் விதித்தது. 

இந்நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கான கடனை அனில் எப்படித் திருப்பிச் செலுத்தி, சிறைத்தண்டனையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு, தொழில்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது. 

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் ஒருமுறை கால அவகாசம் பெற்று, பிறகு மீண்டும் ஒருமுறை கால அவகாசம் கோரி, அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் அனில்.
 இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட எரிக்ஸன் நிறுவன வழக்குரைஞர்கள், ``அனிலின் இந்த நடவடிக்கை, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான எண்ணம், அவரிடம் இல்லை என்பதையே காட்டுகிறது.
 அனில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிறுவன சொத்துகளை விற்றுள்ளது மட்டுமல்லாது, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரஃபேல் விமான ஒப்பந்தம் செய்துகொள்ளும் அளவுக்கும் பணம் வைத்துள்ளார்’’ என்று குற்றம்சாட்டினர். 

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனம், தீர்ப்பை ஏற்று அதன்படி நடந்துகொள்வோம் எனக் கூறியிருந்தது. 

தற்போது கடனை அடைக்க, அனிலுக்கு நிறுவன ஆவணங்களின் அடிப்படையில் பல வாய்ப்புகள் உள்ளதாகத் தோன்றினாலும், அதை நிறைவேற்றுவது என்பது சவால்மிகுந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 தற்போது அனில் அம்பானி முன் மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, 2017-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்பது அல்லது ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான (அனிலுக்குச் சொந்தமானவை) ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களின் உதவியைக் கோருவது அல்லது ஜியோ ஒப்பந்தத்தில் இடம்பெறாத ஆர்காம் சொத்துகளை (சர்வதேசப் பங்குச்சந்தைகள் மற்றும் ரியல் எஸ்டேட்) விற்பது. 

ஆனால், ``பழைய கடன்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டேன்’’ என்ற முகேஷ் அம்பானியின் பின்வாங்கல் முதலாவது வாய்ப்பைச் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. 
 ஜியோவுக்கு அல்லாமல் வேறு டெலிகாம் நிறுவனத்துக்கு விற்க முயன்றாலும் இதே நிபந்தனைதான் விதிக்கப்படும் என்பதால், அதைக் கைவிடும் நிலைதான்.
அனில் அம்பானி
அனிலுக்குச் சொந்தமான பிற நிறுவனங்களின் உதவியைக் கோரினால், அந்த நிறுவனங்களின் குறைந்த சதவிகிதப் பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பதாலும், அவற்றின் நிர்வாகத்தன்மை குறித்து கேள்விகள் எழும் என்பதாலும் இரண்டாவது வாய்ப்பும் அடிபட்டுப்போகிறது. 
மூன்றாவதாக ஜியோ ஒப்பந்தத்தில் குறிப்பிடாத மற்ற சொத்துகளை விற்கலாம் என்றால், அதை வாங்கக்கூடிய தகுதியான நிறுவனத்தைத் தேட வேண்டும். 
ஏற்கெனவே கடந்த சில வருடங்களாக இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், பயன் ஏதுமில்லை. 

இத்தகைய நிலையில், அனில்  எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு தன்னைச் சூழந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு வரப்போகிறார் என்பது தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்கள் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  "இப்படியான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் நிறுவனம், ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் பல்லாயிரம் கோடிகளுக்கான அதுவும் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் எப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கவேண்டும்.
அதற்குண்டான தகுதி நிறைய அனில் அம்பானிக்கு நிறையவே உண்டு.
அவர் நரேந்திர மோடிக்கு நண்பர்.


 
                                                                                                                   -பா. முகிலன்(விகடன்)

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

தவறு நமது தரப்பில்தான் !

 ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டம், காக்கபோராவை சேர்ந்த 22 வயதான அகமது தர், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் கடந்த ஆண்டு சேர்ந்துள்ளான்.
சிஆர்பிஎஃப் வாகன அணிவகுப்பில், வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு தாக்குதலை நிகழ்த்தியது இவனே எனக் கூறப்படுகிறது.

வெடிபொருட்கள் துளைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நிகழ்ந்தவுடன் ஒரு உடல் 80 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்படும் அளவுக்கு பயங்கர சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
 100 மீட்டர் சுற்றளவுக்கு மனித உடல் பாகங்கள் சிதறி கிடந்துள்ளன.

ஸ்கார்ப்பியோ எஸ்யுவி ரக காரில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை நிரப்பி வந்து தீவிரவாதி மோதியதாக தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது செடான் ரக கார் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல, வாகனத்தை சிஆர்பிஎஃப் பேருந்தின் மீது மோதவில்லை என்றும், அருகில் சென்றதும் டெட்டனேட்டர் பயன்படுத்தி வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே பயன்படுத்தப்பட்ட வாகனம், வெடிபொருளின் தன்மை, அளவு, தாக்குதல் நிகழ்த்தப்பட்ட முறை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக தாக்குதல் நடைபெற்ற இடத்தில், தேசிய புலனாய்வு நிறுவன குழுவினர், தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன், மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
அந்த சாலை மிகவும் கண்காணிப்பிற்குரிய சாலை.
ராணுவ நடமாட்டம் அதிகம்.
சாதாரணமாக சாலைகளில் செல்வது போல் அச்சாலையில் மக்கள் அதில் பயணிப்பது கடினம்.கடந்து செல்லும் வாகனங்கள் கடும் சோதனைக்குப்பின்னர்தான் அனுமதிக்கப்படும்.


இரண்டு  நாட்களாக பாதுகாப்பு படை வீரர்கள் நகர்வுக்காக தீவிர கண்காணிப்பில் உள்ளது.
சிலநாட்களுக்கு முன்னர்தான் அப்பகுதியில் பாரிய தாக்குதல் நடக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் .எந்த வேலையும் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர் துணை ராணுவப்படையினர் மீது அதே இடத்தில் வைத்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அப்படி பட்ட நிலையில் 350 கிலோ வெடிமருந்து காரில் ஒருவன் கொண்டுவந்தது எப்படி?
ஒருவர்க்கண்ணிலும்,சோதனையிலும் அதுவும் வீரர்கள் வரும் வேளையில் சாதாரணமாக கொண்டுவரப்பட்டது எப்படி?

சிஆர்பிஎஃப் வாகன அணிவகுப்பு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சோதனை செய்யப்பட்ட நெடுஞ்சாலையில், தீவிரவாதி நுழைய முடிந்தது எப்படி?

 தாக்குதலுக்கு முன்னர் 10 கிலோமீட்டர் தொலைவில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களுடன் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக புல்வாமா மற்றும் அவந்திபோராவை சேர்ந்த 7 பேரை பிடித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இரவு இவர்கள் 7 பேரையும் சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 தாக்குதலுக்கான சதித் திட்டம், புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் நகரில் மிடூரா என்ற பகுதியில் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த நபர் ஒருவரையும் தேடி வருகின்றனர்.

 1) 350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு எவ்வழியாக  வந்தது?

 2) 2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?

  3) பக்சி ஸ்டேடியம் Transit Camp க்கு 30 கிமீ அருகில் 2 நாட்கள் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இல்லையா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன ?


மக்களவையின் கடைசி கூட்டம் முடிந்தது.தேர்தல் அறிவிப்பு வரவிருக்கிறது.அவ்வேளையில் இப்படி ஒரு பயங்கரம்.பதட்டம்.போர்சூழல்.இதன் மூலம் தட்டி எழுப்பப்படுகிறது தேசபக்தி.

ஏதோ திரைக்கதை அமைப்புபோல் இருக்கிறது. தற்செயல்தானா?
சிலர் வேடிக்கையாக "ஒரு பீர் பாட்டிலையே புதுச்சேரியில் இருந்து கொண்டுவர முடியலையே.ராணுவ கண்காணிப்பை மீறி எப்படிங்க?என்பது வேடிக்கையான கேள்வியல்ல வேதனை வெளிப்பாடு .
இன்று மக்கள் பலரின் மனதில் எழும் கேள்வியும் அதுதான்.

 "பெருமளவிலான வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் சுற்றிக் கொண்டிருந்து எப்படி நிர்வாகத்தின் கண்களில் இருந்து தப்பியது என்பது வருத்தப்படச் செய்கிறது.
துணை ராணுவப்படையினரின் வாகன அணிவகுப்பு எதோவொரு இடத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது. 2500 பேர் ஒன்றாக செல்ல முடியாது. ஐ.ஈ.டி குண்டு வெடிப்பு நடைபெறுவதாக இருந்தால் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்க வேண்டும். 
 ஆனால், வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்போது, அவை மிதமான வேகத்தில்தான் செல்லும். யாரோ வந்து வாகன அணிவகுப்பின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்னும்போது, நமது தரப்பில்தான்  எங்கோ தவறு நடைபெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது,"

இதை சொல்லியவர் நமது டீக்கடை திண்டு அரசியல் பேசுபவர் அல்ல.  ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மலிக்.

பாதுகாப்புத்துறையை ,அதன் தேவைகளை தனியாரிடம் விடுவதன் எதிர்விளைவுகளில் ஒன்றுதான் பாதுகாப்புக்குறைபாடு.

                  "இதற்கு முன்னதாக, ஐ.ஈ.டி வெடிப்பு அல்லது துப்பாக்கிச்சூடு போன்ற முறைகளில் பள்ளத்தாக்கில் படைவீரர்கள் தாக்குதல் நடைபெறும்
 இதை தவிர்ப்பதற்காக வாகன அணிவகுப்பு செல்லும் பாதைகளில் தீவிர பாதுகாப்பு சோதனை எனப்படும் ஆர்.ஓ.பி (Road opening party) மேற்கொள்ளப்படும்.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இந்த ஆர்.ஓ.பி நடைமுறையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.
ராணுவ வீரர்கள் செல்லும் பாதை முற்றிலுமாக சோதிக்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்வது இந்த ஆர்.ஓ.பி பிரிவினவரின் பணியாகும். 

படையினர் செல்லும் வழிகள், சாலைகள், பாலங்களின் ஓரங்களில் இருக்கும் கடைகள் மற்றும் கிராமங்களில், மோப்ப நாய், நவீன உபகரணங்களை பயன்படுத்தி வெடிபொருட்கள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள். 
 மேலும், கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டறிவதற்காக, அந்தப் பகுதிகளில் நிலத்தில் எதாவது குழிகள் தோண்டப்பட்டிருக்கிறதா என பல்வேறுவிதமான சோதனைகளையும் மேற்கொள்வார்கள். 

இந்த ஆர்.ஓ.பி பிரிவினரின் பணி, வெறும் சாலை மற்றும் அதையொட்டிய கிராமங்களில் சோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிபடுத்துவது மட்டுமல்ல, சாலையிலிருந்து தொலைவில் இருக்கும் பகுதிகளையும் தங்கள் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டுவரும் பணியையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போதைய தாக்குதலுக்கு முன்பு அப்படி கண்காணிப்பு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.அப்படி நடந்திருந்தால் இப்படி தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை." என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பி.கே மிஷ்ரா.

இந்நிலையில் இந்திய அரசுக்கு H A L இருக்கையில்அதை தவிர்த்து விட்டு , போர் விமானங்களை வெளிநாடுகளில் வாங்குவதும்,அதன் தொழில் நுட்பத்தைஅதை பராமரிக்கும் உரிமையை, அம்பானி போன்ற தனியார் கார்ப்பரேட் கையில் கொடுப்பதும் எப்படிப்பட்ட புத்திசாலித்தனம்.
 தனது கார்பரேட்கள் விசுவாசத்தைக்காட்ட நாட்டின் பாதுகாப்பையா,மக்களின் வரிப்பணத்தையா அவர்கள் கையில் ஒப்படைப்பது.?

அரசு நிர்வாகம்,குடிநீர்,ரெயில்வே,விமானம்,வங்கிகள்,காப்பீட்டுக்கழங்கள் ,பொதுத்துறை நிறுவங்கள் எல்லாமே தனியார்,கார்ப்பரேட் கள் கையில் ஒப்படைப்பது என்றால் மக்களால் வாக்களிக்கப்பட்டு இவர்களைத்தேர்ந்தெடுத்தது ஆட்சி செய்ய அனுப்புவது எதற்கு.?

மக்களவையில் நாற்காலிகளைத்தேய்த்துவிட்டு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்,ஓய்வூதியம்,மற்ற வசதிகளை அனுபவிக்கவா?
இதற்கு ஆண்டாண்டு கர்ப்பரேட்களுக்கு ஆட்சி உரிமையை குத்தகைக்கு கொடுத்து விடலாமே?

2014 ஆரம்பங்களில் மோடி தேர்தல் மேடையில் முழங்கியது இப்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளது.

"இந்தியாவில் யாருக்குமே பாதுகாப்பில்லை.குஜராத்,கேரளா,தமிழ்நாடு என்று இந்திய முழுமையுமே பாதுகாப்பின்மை,அச்சம் உள்ளது.ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பில்லை.இப்படிப்பட்ட ஆட்சியை வைத்திருக்கலாமா?தூக்கி எறியும் நேரம் வந்து விட்டது.தேர்தல் அதற்கு உங்களுக்கு வாய்ப்புத்தந்துள்ளது.அதை பயன்படுத்தி இக்கேடு கெட்ட ஆட்சியை தூக்கி எறியுங்கள்."

அதுதான் நடக்கப்போகிறதா?அதைத்தான் மக்கள் செய்யப்போகிறார்களா?

புல்வாமா பயங்கரம்


 யார் காரணம்?
பிப்ரவரி 14ம் தேதி ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய கோழைத்தனமான கொடூரமான தாக்குதலில் மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வீர மரணம் அடைந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

 இந்திய தேசமே இந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.
எனினும் இந்த குடும்பங்களின் இழப்பை எவரும் ஈடு செய்ய இயலாது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது உரிமை கோரியுள்ளது.
எனவே பாகிஸ்தான் அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.
 இந்தியாவும் உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வற்புறுத்தியும் எப்படி தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுகின்றன எனும் கேள்விக்கு இம்ரான்கான் அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

பாஜக விடுதலை செய்த தீவிரவாதத் தலைவன்
புல்வாமா கொடூரமான தற்கொலை தாக்குதலை நடத்தியது 19 வயதே ஆன ஆதில் அகமது தர் எனும் காஷ்மீரி இளைஞன்!
இதற்கு முன்பும் 16 வயதுள்ள சிறுவனை கூட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தி யுள்ளது.
 இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என ஆதில் அகமது தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காணொலியில் மிரட்டுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
 இந்த காணொளியை நீங்கள் பார்க்கும் பொழுது நான் சொர்க்கத் தில் இருப்பேன் என ஆதில் கூறுவது, எந்த அளவிற்கு அந்த இளைஞன் மூளைச் சலவைசெய்யப்பட்டுள்ளான் என்பதை உணர்த்து கிறது. இத்தகைய இளம் வயதினர் ஏன் தீவிரவாதம் பக்கம் சாய்கின்றனர் என்பதும் கவலையுடன் பரிசீலிக்க வேண்டிய அவசர அவசிய அம்சம் ஆகும்.

ஜெய்ஷ்-இ-முகம்மது பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டிருந்தது.
ஆனால் சில ஆண்டுகளாக காஷ்மீர் உள்ளூர்இளைஞர்களை ஈர்ப்பதில் ஜெய்ஷ்-இ-முகம்மது வெற்றி அடைந்துள்ளது.
 இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாத் என்பவன்!

பாகிஸ்தானில், அந்த நாட்டின் உளவு அமைப்பு மற்றும் இராணுவ உதவி யுடன் செயல்படும் இந்த தீவிரவாதி 5 ஆண்டுகள் இந்திய சிறைகளில் இருந்தவன் என்ப தை நம்ப முடிகிறதா?
ஆம் 1994 முதல் 1999வரை இந்திய சிறைகளில் இருந்தான் மசூத் அசாத்!

1999ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது இந்திய விமானம் கடத்தப் பட்டு காந்தஹாரில் நிறுத்தப்பட்டது.
இந்த விமானம் அமிர்தசரசில் இறங்கிய பொழுது அதனை முடக்கியிருக்க முடியும். ஆனால்பா.ஜ.க. அரசாங்கத்தின் கையாலாகாத்தனத் தால் அது தப்பியது.

பின்னர் விமான பயணிகளை காப்பாற்ற அன்றைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், மசூத்தை தன்னுடன் அழைத்துச் சென்று தீவிரவாதிகளிடம் ஒப்படைத்தார். அதாவது விடுதலை அளித்தார்.
அந்த மசூத் அசாத் இன்று காஷ்மீரில் பயங்கர வாதத்தை அரங்கேற்றும் முக்கிய தீவிரவாத தலைவனாக உருவெடுத்துள்ளான்.
 இந்திய இராணுவ வெளியுறவு வரலாற்றில் ஒரு கையாலாகாத்தனம் இருந்தது எனில் அது பாஜக ஆட்சி நடத்திய அந்த தருணம்தான்.

கடும் பாதுகாப்பை தீவிரவாதி மீறியது எப்படி?
புல்வாமாவில் தாக்குதல் எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
ஏனெனில் 2400க்கும் அதிகமான வீரர்கள் 75 வாகனங்களில் வந்த ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மிகவும் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது ஆகும்.
 இராணுவ அல்லது ஆயுதப்படையினரின் வாகனங்கள் செல்லும் பொழுது தனியாரின் வாகனம் - எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது என்பது நடைமுறை விதி!

அப்படியிருக்கும் பொழுது ஒரு ஸ்கார்ப்பியோ வாகனம் - அதுவும் 350 கிலோ வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு வீரர் களின் வாகனங்களை முந்துவதும் தாக்குதல் நடத்துவதும் எப்படி சாத்தியமாயிற்று?

இந்த கேள்விக்கு மோடி அரசாங்கமும் அவரது பிரதிநிதியாக உள்ள காஷ்மீர் ஆளு நரும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
தாக்குதல் நடந்ததற்கு காரணம் பாது காப்பு குறைபாடுதான் என ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.
 அதனை விசாரிப்போம் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
 என்னவிசாரித்தாலும் இழந்த உயிர்கள் மீண்டும் வருமா?


 இதே ஆளுநர் இன்னொரு முக்கிய மான உண்மையையும் கூறியுள்ளார்.
 இத்தகைய தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை இருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
 அப்படியெனில் ஏன்முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?
 ஏன் நமது வீரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படவில்லை?
வீரப்பன் என்கவுண்ட்டர் மற்றும் வெங்கடேச பண்ணையார் சட்டவிரோத என்கவுண்ட்டர் புகழ் விஜயகுமார்தான் காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளை அழிக்கும் வல்லமை படைத்த ஜாம்பவான்கள் என தம்மை அழைத்துக் கொள்வோரின் திறமையின்மைதான் நமது வீரர்களின் மரணத்திற்கு காரணம் எனும் குற்றச் சாட்டு எப்படி தவறானதாக இருக்க முடியும்?

பொருத்தமான பதிலடி என்ன?
இந்த கோழைத்தனமான தாக்கு தலுக்கு பொருத்தமான பதிலடி தரவேண்டும் என பரவலான கருத்து எழுந்துள் ளது.
 “பொருத்தமான பதிலடி” எது என்பது தான் முக்கிய கேள்வி ஆகும்.
ஏற்கெனவே ஜம்மு பகுதியில் காஷ்மீர் முஸ்லிம் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ச
ங்பரி வாரத்தினர் “அல்லாவின் பெயரை உச்சரிக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்” எனவும்“முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க அனு மதிக்க மாட்டோம்” எனவும் கூப்பாடு போட ஆரம்பித்துள்ளனர்.

மோடி யின் ரிபப்ளிக் தொலைக்காட்சி ‘‘இந்தியா பழிதீர்க்க வேண்டும்”எனும் டிவிட்டர் தொகுப்பில் “திருப்பி அடிப்ப தைத் தவிர இந்தியாவுக்கு வேறு ஏதாவது வழி உள்ளதா?” என ஆத்திரத்தைக் கட்டமைக்க முயல்கிறது.

மோடி ஆட்சியின் பொழுது குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என தினமும் தகவல்கள் வந்தன.
 அது உண்மையும் கூட! தீவீரவாதிகளை முழுவதுமாக ஒழித்துகட்ட “ஆபரேஷன் ஆல் அவுட்” எனும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக மோடி அரசாங்கம் கூறியது.
ஆனால் புல்வாமா தீவிரவாத தாக்குதல் மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
 தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டு வரு கின்றனர் எனில் இத்தகைய மிகப்பெரிய தாக்குதல் எப்படி சாத்தியம் எனும் வாதம் எழுவது இயற்கையே!

இந்தியாவுடன் காஷ்மீர் ஏன் இணைந்தது?
1947ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பொழுது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை!
காஷ்மீர் மக்களிடையே கீழ்கண்ட மூன்று விருப்புரிமைகள் இருந்தன:
1) பாகிஸ்தானுடன் இணைவது.
2) இந்தியாவுடன் இணைவது.
3) தனி நாடாக இருப்பது.

இதில் எந்த முடிவை காஷ்மீர் மக்கள்எடுத்திருந்தாலும் அதனை ஏற்க வேண்டிய கட்டாயம் இந்தியா- பாகிஸ்தான் அரசுகளுக்குமட்டுமல்ல; ஐ.நா.உட்பட அனைவருக்கும் இருந்தது.

ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. அவர்கள் எடுத்த முதல் முடிவு பாகிஸ்தானுடன் இணைவது இல்லை என்பதுதான்!
 இதனாலேயே ஷேக் அப்துல்லாவை முஸ்லிம் விரோதி எனவும் ரவுடி எனவும் ஜின்னா வசைமாரி பொழிந்தார்.
இந்தியாவுடன் இணைவது அல்லது தனி நாடாக இருப்பது எனும் இரு கருத்துகளுமே காஷ்மீர் மக்களிடையே வலுவாக இருந்தன.
இந்தியா- பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்- சீனா ஆகிய நாடுகள் சூழ்ந்திருக்கும் பொழுதுகாஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக இருப்பதில் உள்ளசிக்கல்களை ஷேக் அப்துல்லா உணர்ந்திருந் தார். இந்தியா தன்னை மதச்சார்பின்மை தேசமாக அறிவித்தது.
 இது காஷ்மீர் மக்களுக்குஓரளவு நம்பிக்கையை உருவாக்கியது.

தங்களது கலாச்சாரத்தையும் ஏழை விவசாயி களுக்கு நிலங்களை அளிக்கும் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை பாதுகாக்கவும் வேறு சில அரசியல் உரிமை களுக்கான உத்தரவாதங்களையும் காஷ்மீர் மக்கள் கோரினர். அத்தகைய உத்தரவாதங்கள் அளிக்கப் பட்டால் இந்தியாவுடன் இணைவோம் எனவும் கூறினர்.
இதற்காக உருவாக்கப்பட்டதே 370வது அரசியல் சட்டப்பிரிவு!

அந்நியப்பட்ட காஷ்மீர் மக்கள்
மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள் 370வது பிரிவை நீர்த்துப் போகச் செய்தன. அதுவும் மோடி தலைமையிலான அரசாங்கம் காஷ்மீர் மக்களை அரசியல் ரீதியாக தனது ஆதாயத்திற்காக பகடைக்காயாக பயன்படுத்தியது.
 இராணுவம் மூலம் மட்டுமே காஷ்மீர் மக்களை வழிக்கு கொண்டு வந்துவிட முடியும் என கணக்கு போட்டது. காஷ்மீர் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்காமல் பிரச்சனையை தீர்க்க இயலாதுஎன இடதுசாரிகளும் காஷ்மீர் வரலாற்றை அறிந்தவர்களும் தொடர்ந்து கூறிவந்தனர்.

ஆனால் மோடி அரசாங்கம் காஷ்மீர் மக்களுடன் எந்த ஒரு அரசியல் பேச்சுவார்த்தை க்கும் தயாராக இல்லை. இதன் காரணமாக காஷ்மீர் மக்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டனர். இது தீவிரவாதத்திற்கு வழி கோலியது. பாகிஸ்தானின் இந்திய விரோத செயல்களுக்கு வாய்ப்பை உருவாக்கியது.


தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பில்லையா?
பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அலோக் அஸ்தானா கீழ்கண்ட நியாயமான கேள்வியை முன்வைக்கிறார்?
“இந்த தாக்குதலை நடத்திய ஆதில் அகமது பாகிஸ்தானி குடிமகனோ அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யிலிருந்து வந்தவனோ அல்ல. இந்த இளைஞன் உள்ளூர் காஷ்மீர் புல்வாமா பகுதியைசேர்ந்தவன்.
 படித்தவர்களும் வசதி வாய்ப்பு களும் உள்ள உள்ளூர் காஷ்மீரிகள் ஏன் இப்படிதங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள துணி கின்றனர்?
 இந்த கேள்விக்கு ஓரளவு பதில் காணமுயன்றாலே போதும், காஷ்மீர் பிரச்சனையைதீர்ப்பதற்கு வழிவகை உண்டாகி விடும்”- இந்திய இராணுவ அதிகாரியின் இந்த கருத்து நியாயமானதில்லையா?

வெளியுறவு அமைச்சக முன்னாள் அதிகாரி பத்ரகுமார் கீழ்கண்ட முக்கிய கேள்வியை முன்வைக்கிறார்:“இந்த தாக்குதல் ஏன் இந்த தருணத்தில் நடக்கிறது?
இது தற்செயலானதா?

2019 நாடாளுமன்ற தேர்தல்கள் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தருணத்தில் ஏன் இந்த தாக்குதல்?
இன்னும் ஓரிரு நாட்களில் தலிபானுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானில் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது. அமெரிக்காவின் டிரம்ப், தனது படைகளை திரும்பப்பெற முனைகிறார்.
இந்த பேச்சு வார்த்தையில் அமெரிக்காவுக்கு உதவுவது பாகிஸ்தான்.
அப்படி எனில் பாகிஸ்தானை ஒரு எல்லைக்கு மேல் அமெரிக்கா கண்டிக்க முடியாத தருணமா இது?

 பிப்ரவரி 18ம் தேதியன்று தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் யாதவ் வழக்கு இறுதி விசார ணைக்கு வர உள்ளது.
 இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் கடுமையான வாதப்போரில் ஈடுபடும் சூழல் உள்ளது. இந்த தாக்குதலின் தருணம் அதனுடன் தொடர்புடையதா?
பத்ரகுமார் முன்வைக்கும் இந்த கேள்வி களும் புறம் தள்ள முடியாதவை.இந்த தாக்குதலை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன.

 எனினும் காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் எனும் மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
அடிப்படையில் காஷ்மீர் மக்களை வென்றெடுக்க வேண்டும். அதற்கு அரசியல் கருத்துப் பரிமாற்றங்களும் அரசியல் தீர்வும் தேவை.
இதனுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு பாகிஸ்தானை ஆதரவு தராமல் இருக்க நிர்பந்திக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும்.
இறுதியாக இராணுவ நடவடிக்கைகள் என்பது அரசியல் தீர்வுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதல் மிகத்தெளிவாக கூறும் செய்தி இதுதான்!
இதனை மோடி அரசாங்கம் உணருமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

                                                                                                                                                                                                         -அ.அன்வர் உசேன்

நன்றி:தீக்கதிர்.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல்வர்,டிஜிபி இணைந்து காவல்துறையில் ரூ.88 கோடி முறைகேடு.
   -மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.
காவல்துறையில் ரேடியோ சிஸ்டம் வாங்க விடப்பட்ட ரூ.88 கோடி டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முதல்வர் பழனிசாமி - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

"சென்னையிலும், திருச்சியிலும் உள்ள காவல்துறைக்கு ‘டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்’ உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. ‘ஆப்கோ பிராஜெக்ட்’ என்ற பெயரில் காவல்துறையை நவீனமயமாக்கும் நிதியில் இருந்தும் மாநில அரசின் நிதியிலிருந்தும் செயல்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான டெண்டர் முறைகேடுகள் அதிமுக அரசின் கரி பூசிய ஊழல் முகத்தை மீண்டும் காட்டியிருக்கிறது.

2012-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 38 கோடி ரூபாயில் முடித்திருக்க வேண்டியது. ஆனால், அதிமுக அரசின் கஜானாவில் கொள்ளையடிக்கும் கலையால் இந்தத் திட்டத்தின் மதிப்பு இன்றைக்கு 88 கோடி என்று உயர்ந்து அதிலும் மாபெரும் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது.
இந்த டெண்டரில் ஒரே ஒருவரிடம் ஒப்பந்தம் பெற்று அவருக்கே காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் இந்த ரேடியோ டிஜிட்டல் சிஸ்டம் இயங்காது. ஆனால், டெண்டரின் முக்கிய நோக்கமே சுரங்கப்பாதைகளிலும் இந்த சிஸ்டம் செயல்பட வேண்டும் என்பதுதான்.

இந்த டெண்டர் போட்டவர் என்ன விலை கேட்டாரோ அந்த அதிக விலையை எவ்வித தயக்கமுமின்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் அளித்திருக்கிறார்.
இந்த முறைகேடுகளின் பட்டியல், ஒரு டெண்டரை எப்படி முடிவு செய்யக்கூடாதோ அந்த அளவுக்கு மோசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
 ஊழல் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே ஒற்றை நோக்கமாக வைத்து ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் போட்டவருடன் முறைப்படி பேச்சு நடத்தி விலையைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. டெண்டரில் செலுத்த வேண்டிய வரி பொறுப்புகளை ஒப்பந்ததாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டெண்டர் விதிகள் இருந்தபோதிலும் அவருக்கு ஜிஎஸ்டி தனியாக 5 கோடி ரூபாய் அனுமதித்துள்ளார்.

டெண்டரில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பல மடங்கு அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது.
 மொபைல் தொடர்பான சாதனங்களிலும் கையடக்கத் தொடர்பான சாதனங்களிலும் மட்டும் 23 கோடி ரூபாய்க்கு மேல் அதிகம் ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்டு அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி வரலாறு கண்டிராத டெண்டர் முறைகேடுகள் செய்து அரசுக்கு 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரனும் இந்தத் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஊழல் செய்திருப்பது வேதனையானது மட்டுமல்ல - வெட்கக்கேடானது.

இந்த சட்டவிரோத சலுகைகளையும் அப்பட்டமான விதிமீறல்களையும் உள்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டி டிஜிபியிடம் கேள்வி எழுப்பிய பிறகும் இந்த டெண்டரை முறைகேடாக அளித்திருக்கிறது டி.கே ராஜேந்திரன் - பழனிசாமி கூட்டணி

காவல்துறைக்கு தலைவராக இருக்கும் டி.கே ராஜேந்திரன் ஊழல் செய்வதற்கு முதல்வர் பச்சைக் கொடி காட்டுவது மட்டுமின்றி பாதுகாப்பாகவும் நிற்பது தமிழக காவல்துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
88 கோடி ரூபாய் ‘டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்’ டெண்டரில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து, தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் செய்தவர்கள் ஊழலுக்கு துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

பயங்கரவாத துல்லியத்தாக்குதல் ?

பாகிஸ்தான் உடன் எம்எப்என் என்று ஆங்கிலத்தில் கூறப்படும், அதாவது ''மோஸ்ட் பேவர்டு நேஷன்'' என்று கூறப்படும் அந்தஸ்தை இந்தியா நீக்கிக் கொண்டுள்ளது.

எம்எப்என் என்றால் என்ன என்பதை  பார்க்கலாம்.

சுமார் 350 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி சிஆர்பிஃஎப் வாகனத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் இந்தியா இன்று துண்டித்துக் கொண்டுள்ளது.

எம்எப்என் என்று ஆங்கிலத்தில், அதாவது ''மோஸ்ட் பேவர்டு நேஷன்'' என்று கூறப்படும் அந்தஸ்தை இந்தியா நீக்கிக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் வர்த்தகத்தை இந்தியாவால் முடக்க முடியும்.
உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு கடந்த 1994ஆம் ஆண்டில் கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் நாடுகள், வர்த்தகம் வைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு ''வர்த்தகத்திற்கு சாதகமான நாடு'' (எம்எப்என்) என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும்.


உலக வர்த்தக அமைப்பில் மொத்தம் 164 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதாவது சிறிய நாடுகள் தவிர உலகில் இருக்கும் 98% நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், தற்போது வர்த்தக உறவை இந்திய அதிரடியாக ரத்து செய்து கொண்டுள்ளது.

 இதன்மூலம், இனி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது எந்தளவிற்கு வேண்டுமானாலும் இந்திய அரசு சுங்க வரி விதிக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் 2017-18ஆம் ஆண்டில் 2.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதுவே கடந்த 2016-17ஆம் ஆண்டில் 2.27 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த 2017-18ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து 488.5 மில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதே ஆண்டில் பாகிஸ்தானுக்கு 1.92 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் எம்எப்என் ஒப்பந்த நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் வைத்திருக்கும் நாடுகளுடன் சுங்கவரி மற்றும் மற்ற வரி விதிப்புகளில் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதியும் உள்ளது.
பலியான தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியன்.
இந்தியா பருத்தி, ரசாயனம், காய்கறிகள், இரும்பு ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது. பழங்கள், சிமென்ட், தோல் பொருட்கள், ரசாயனம், மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
 
உரி தாக்குதல் சம்பத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் உடனான வர்த்தகம் தடை செய்யப்படும் என்று அப்போது இந்தியா  கூறியது.ஆனால் அப்போது அவ்வாறு செய்யவில்லை.

ஆனால் பாகிஸ்தானோ தீவிரவாதிகளைத் தூண்டி விட்டு இந்தியாவில் பயங்கரவாதம் செய்வதை நிறுத்தவே இல்லை.அமைதி முறையில் காஷ்மீர் விவகாரத்தை இந்தியவனுடன் இணைந்து முடிவுக்கு கொண்டுவர எண்ணவே இல்லை.
 திருத்துவதாவே தெரியவில்லை.பாகிஸ்தான் மக்களை அவர்கள் பிரச்னைகளில் திசைதிருப்பவே இது போன்ற பயங்கரவாதச் செயல்களை திட்டமிட்டு இந்தியாவில் செய்கிறது.

 இதை  உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும், உலக நாடுகளுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத செயலை எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை தற்போதைய தாக்குதல் மூலம் இந்தியா எடுத்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறும் போது துல்லியத்தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் )செய்து விட்டு அதை பற்றியே இன்னும் வாய்கிழிய தங்களைத்தாங்களே ஆட்சியாளர்கள் புகழ்ந்து கொண்டிருப்பது பயனைத்தராது.
எதிர்பாரா நேரம் பாகிஸ்தான் இந்தியாவின் முதுகில் இது போன்ற பயங்கரவாதிகள் தாக்குதல் மூலம் குத்துவதை தடுக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த சாலையில் அதிக அளவு பாதுகாப்பு இருக்கிறது.இரு நாட்களாக அதை சோதித்து பின்னர்தான் வீரர்கள் பயணித்துள்ள போதும் இத்தாக்குதல் நடந்துள்ளது மட்டும் சோகம் அல்ல.இது போன்ற தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதும் தற்போது வெளியாகி இந்தியாவின் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள் பளிச் சென தெரியவந்துள்ளது.

எந்த நேரம் எதை பேச வேண்டும் ,எப்போது தாமரையை மலரவைக்கவேண்டும் என்று தெரியாத அரசியல் வியாதி தமிழிசை "மோடியிடம் வரும் தேர்தலிலும் நாட்டை ஒப்படைத்தல் இது போன்றவை நடக்காமல் பாதுகாப்பாக இருக்கும் "என்று வாய் மலர்ந்துள்ளார்.
இப்போது யார் பிரதமர் என்பதில் அவருக்கு என்ன குழப்பம்.இப்போது ஏன் நாட்டை பாதுக்காக்க வில்லை மோடி.?
மோடியைப்பார்த்து அமெரிக்கா,சீனா பயப்படும் போது இத்துணுன்டு பாகிஸ்தான் இப்படி ஏறி அடிப்பது ஏன் என்று பாஜக கொள்கைப்பரப்பு முகவர் ரங்கராஜ் பாண்டேதான் விளக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 44 வீரர்களைக்கொன்ற பயங்கரவாதி.

தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கும் புல்வாமா மாவட்டத்தில் இருக்கிறது கந்திபாக் என்ற கிராமம். அந்த கிராமத்தில் இருந்த மில்லில் வேலை பார்த்து வந்தவர் 20 வயது அதில் அகமது தார்.

மார்ச் 19, 2018 அன்று வீட்டில் இருந்து வெளியேறிய அவர் ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பில் இணைந்தான்.  அவன் காணாமல் போன அதே நாளில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமீர் அகமது என்பவரும் காணாமல் போனதாக பெற்றோர்கள் காவல்த்துறையில் புகார் அளித்தனர்.

நான்கு நாட்கள் அவனை  தேடும் பணி நீடித்த நிலையில் ”தான் ஃபிதாயின் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக கூறி, கையில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தான்".


 நேற்று தாக்கல் நடைபெற்ற சிறிது நேரத்திலே, தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஜெய்ஷ் -இ-முகமது. அப்போது, இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு மரணமடைந்த அதில் அகமது தார் பேசும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.

அந்த வீடியோவில் அகமது பேசுகையில் “ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று பேச தொடங்கினான்.

சி.பி.ஆர்.எஃப். படை வீரர்கள் செல்லும் பேருந்தின் மீது 350 கிலோ எடை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ காரை மோத வைத்து தாக்குதல் நடத்தியதில் அதில் அகமதும் உயிர் இழந்தான். 

 “அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு ஒரே ஒரு முறை தான் எங்களை சந்தித்தான்” என்று அவருடைய தந்தை குலாம் ஹாசன் தார் கூறியுள்ளார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவராக இருந்த புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு நடைபெற்ற போராட்டத்தில் அதில் அகமதும் பங்கேற்றான்.
அதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், காலில் காயம் அடைந்தான்என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பக்கமும் மக்கள் கொல்லப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. இங்கு அரசியல்வாதிகள் இதனை பயன்படுத்திய் ஆதாயம் அடைகின்றார்களே தவிர பிரச்சனைக்கான தீர்வினை யாரும் காண விரும்புவதில்லை. இளைஞர்கள் ஏன் துப்பாக்கியை தூக்குகின்றார்கள் என்பதை அரசு சிந்தித்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இன்று தேவை சொல் அல்ல செயல். செய்யுங்கள் மோதி, ஏதாவது செய்யுங்கள். அயலவர்கள் இன்னும் 50 ஆண்டுகளுக்கேனும் தலையெடுக்க முடியாமல் ஏதாவது செய்யுங்கள்- மாலன்.

 அதான் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை தந்தாள் மோடி நாட்டை பாதுகாத்து எல்லா ஆணிகளை புடுங்கி விடுவார் என்று தமிழிசை சொல்லிவிட்டாரே.முதல்ல அவரை மீண்டும் பிரதமராக்கும்  செய்யுங்கள்.
புதன், 13 பிப்ரவரி, 2019

ஒரு மக்கள் நாயகனும்; ஒரு கைக்கூலியும்

2018 டிசம்பர் இரண்டாவது வாரம்.35வயதே நிரம்பியஅந்த ரகசிய மனிதன், யாருக்கும் தெரியாமல் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான்.
 இரண்டு வாரம் அவனுக்கு அவகாசம் தரப்படுகிறது.
 அவனும் உறுதியளிக்கிறான்.
என்ன உதவி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்; என்ன வேண்டுமானாலும் செய்து கொள்; ‘அவன்’ பதவியிலிருக்கக் கூடாது எனஉத்தரவிடுகிறார்கள்.

உன்னை ஜனாதிபதி யாக்குகிறோம் என்கிறார்கள்.
 வாயெல்லாம் பல்லாக, கெக்கெலி கொட்டிச் சிரித்தவாறு கை கொடுத்து விடைபெறுகிறான்.
அது, உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களை கவிழ்ப்பது தொடர்பான சூழ்ச்சிகள் திட்டமிடப்படும் அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏவின் அலுவலக அறைகளில் ஒன்று.அங்கிருந்து புறப்பட்டு அவன், வெள்ளை மாளிகைக்குச் செல்கிறான்.
டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறான்.


 அவர் முதுகில் தட்டி ஆசி வழங்குகிறார்.
அங்கிருந்து கொலம்பியாவுக்குச் செல்கிறான்; அங்கு ஜனாதிபதியாக இருக்கிற சிஐஏவின் தலைசிறந்த அடிமையும் வலதுசாரி வெறியனுமான இவான் டியூக் மார்க்கஸை சந்திக்கிறான்.
அவனும், என்ன உதவி வேண்டுமானாலும் கேள்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; ‘அவனை’ ஒழித்துக்கட்டு என்கிறான்.

அந்த உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டு, பிரேசிலுக்குச் செல்கிறான்... அங்கு சமீபத்தில் வன்முறையையும் கலவரத்தையும்தூண்டிவிட்டு நூலிழையில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட கொடிய நவீன பாசிச முக மான ‘ஜனாதிபதி’ ஜெயிர் பல்சானரோவை சந்திக்கிறான்.

அவனும் அதேபோலக் கூறு கிறான்.அங்கிருந்து வெனிசுலாவுக்குத் திரும்பு கிறான். நாடெங்கும் கலவரத்தையும், வன்முறை யையும் கட்டவிழ்த்து விடுகிறான்.

நாடு பற்றி எரியத் துவங்குகிற சூழலைப் பயன்படுத்தி; எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலை பேசி, தன்வசப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவராகிறான்; எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை யாக உள்ள நாடாளுமன்ற அவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே, அவனுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வருகிறது.

டிரம்ப்பின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவனுடன் பேசுகிறார்.
உன்னை நீயே ‘இடைக்கால ஜனாதிபதி’ என்று அறிவித்துக் கொள் என உத்தரவிடுகிறார்.
 மக்கள் மத்தியில் செய்தியாளர்களைக் கூட்டி,இனி நான்தான் ‘இடைக்கால ஜனாதிபதி’ என அறிவிக்கிறான்.

அடுத்த நொடியே, நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் குழு அவனைப் புகழ்ந்து தலையங்கம் எழுதுகிறது. வெனிசுலாவை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அற்புதமான தலைவன் கிடைத்துவிட்டான் என்று வானளாவப் புகழ்கிறது.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் குழு, வெனிசுலாவில் ஜனநாய கத்தை மீட்க வந்த ரட்சகன் என்று புகழ்கிறது.
வால்ஸ்ட்டீரிட் ஜர்னல் ஏட்டின் ஆசிரியர் குழுவோ அவனை புதியதோர் ஜனநாயகத் தலைவன் என உயர்த்துகிறது.
அதேவேளை கனடா அரசு, வெனிசுலா வின் புதிய ஜனாதிபதி வாழ்க என்கிறது.

பிரிட்டனில் துவங்கி பல்வேறு ஐரோப்பிய நாடு கள், இஸ்ரேல், லத்தீன் அமெரிக்காவில் கொலம்பியா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளும் அடுத்தடுத்த நிமிடங்களில் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அவனை அங்கீகரிக்கின்றன.

டொனால்டு டிரம்ப், வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி ஜூவான் குவாய்டோ என பிரகடனம் செய்கிறார்.ஜூவான் குவாய்டோ.
வெனிசுலாவில் பிறந்தாலும் அமெரிக்கா வில் படித்தவன்.
சிஐஏவின் கைக்கூலியாக தேர்வு செய்யப்பட்டு, வன்முறைகளையும் கலவரங்களையும் படுகொலைகளையும் எப்படி நிகழ்த்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டவன்.
மதுரோ                                            ஜூவான் குவாய்டோ.
வெள்ளை மாளிகையின் தலைசிறந்த அடிமைகளில் ஒருவன்.

வெனிசுலாவில் தனக்கு அடிமையாக மறுக்கிற நிக்கோலஸ் மதுரோவை ஒழித்துக் கட்டுவதற்காக வெள்ளை மாளிகையை இயக்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடைந்தெடுத்த கைக்கூலியாக செயல்படு வேன் என்று அவர்களிடம் உறுதி யளித்துக் கொண்டவன்.

குவாய்டோவை வெனிசுலாவின் ஜனாதி பதியாக அறிவித்த கையோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே ஆட்சி நடத்தி வருகிற நிக்கோலஸ் மதுரோவை ‘சட்ட விரோதமானவர்’ என்று வெள்ளை மாளிகை யிலிருந்து டிரம்ப் அறிவிக்கிறார். ஒருவார காலத்திற்குள், மதுரோ, ஜனாதிபதி பதவி யிலிருந்து வெளியேற வேண்டுமென உத்தரவு போடுகிறார்.

வேறொரு நாட்டிற்கு தானே ஜனாதிபதியை நியமிப்பதும், அந்நாட்டின் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவரும் ஜனாதிபதியை சட்டவிரோதமானவர் என்று அறிவிப்பதும் உலகின் எந்த சட்டத்திற்கும் உட்பட்டது அல்ல என்பது தெரியாதவர் அல்லடொனால்டு டிரம்ப்.

அந்த சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, வெனிசுலா எனும் தேசத்தின் இறை யாண்மையை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து, ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை யெல்லாம் சுக்குநூறாக கிழித்தெறிகிறார் டொனால்டு டிரம்ப்.நம் கண் முன்னே இத்தகைய பயங்கரம் பகிரங்கமாக அரங்கேறுகிறது.
வெனிசுலா.
 உலக வரைபடத்தில் தென் அமெரிக்கக்கண்டத்தில் மையமான பகுதியில் அமைந்திருக்கும் அற்புதமான நாடு. இன்றைய தேதியில், உலகிலேயே நிரூபிக்கப்பட்ட பெட்ரோலிய வளம் மிக மிக அதிக அளவில் இருக்கும் முதன்மையான நாடு.
 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகம் முழுவதும் இன்னும் உறிஞ்சப்படாமல் இருப்பு இருக்கிற மொத்தபெட்ரோலியத்தில் 20 சதவீதம் வெனிசுலாவில் தான் இருக்கிறது. உலகின் அன்றாட பெட்ரோலியத் தேவையை பூர்த்தி செய்கிற முதல் பத்து பெரிய எண்ணெய் வள நாடுகளில் ஒன்று வெனிசுலா. உலகிற்கு அன்றா டம் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்கிற முதல் ஐந்து பெரிய பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் ஒன்று வெனிசுலா.

இதில் 41 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது.
தனது தேவையில் கிட்டத்தட்ட சரிபாதி பெட்ரோலியத்தை அமெரிக்கா வெனி சுலாவிடமிருந்து பெறுகிறது என்றும் இதைச் சொல்லலாம்.வெனிசுலா அமெரிக்காவுக்கு அருகில் இருக்கிறது.
 பெட்ரோலியத்தை கொண்டு செல்லும் செலவு குறைவு. இதற்கு முன்பு வெனிசுலாவிடமிருந்து அமெரிக்கா காசு கொடுத்தெல்லாம் பெறவில்லை.


 1999ல், கியூபபுரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் வழி காட்டுதலுடன் சோசலிச சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி, ராணுவத்தில் புரட்சிகர நட வடிக்கைகளை மேற்கொண்டு, மக்களையும் அணிதிரட்டி பொலிவாரிய புரட்சி நடத்தி தளபதி சாவேஸ் ஆட்சிக்கு வந்தது முதல், வெனிசுலாவின் பெட்ரோலியத்தை அமெரிக்காவால் களவாடிக் கொண்டு செல்ல முடியவில்லை.
 அதற்கு முன்பு கிட்டத்தட்ட நூறு ஆண்டு களுக்கும் மேலாக வெனிசுலாவின் எண் ணெய் வளம் அமெரிக்காவின் காலடியின் கீழ்தான் இருந்தது.
ஹியுகோ சாவேஸ்


அது 1890களின் வரலாறு.
அப்போது வெனிசுலாவுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையே இருந்த எல்லைத் தகராறில் தானடித்த மூப்பாக தலையிட்டு வெனிசுலாவில் ஒரு கைக்கூலியை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா.
 அன்றைக்கு அமெரிக்க வெள்ளைமாளிகையில் ஜனாதிபதியாக குரோவர் கிளீவ்லேண்ட் இருந்தார்.
அவரது நிர்வாகம்படிப்படியாக வெனிசுலாவை தனது கைகளின் பிடிகளில் கொண்டுவரத் துவங்கியது. 1908ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட அரசியல்நெருக்கடியை பயன்படுத்தி அமெரிக்க கடற்படை நேரடியாக தலையிட்டு, அங்குதுணை ஜனாதிபதியாக இருந்த ஜூவான் வின்சென்ட் கோமேஜ் என்பவர் அதிகாரத்தைக்கைப்பற்றுவதற்கு உதவி செய்தது;
கலவரத்தையும் வன்முறையையும் கட்ட விழ்த்துவிட்டு எண்ணற்ற மக்களை படு கொலை செய்து கோமேஜ் ஜனாதிபதியாக உட்கார்வதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகைஅனைத்து உதவிகளையும் செய்தது.

கோமேஜ், வெள்ளை மாளிகையின் மிகச் சிறந்த அடிமையாக - கைக்கூலியாக மாறினான். 1935ஆம் ஆண்டு அவன் செத்துப் போகும் வரையில் வெனிசுலாவில் நடத்தப்பட்ட பயங்கரங்களும், கொடூரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
கற்கால காட்டு மிராண்டித்தன ஆட்சியை அவன் நடத்தினான். அரசியல் கைதிகள் தலை துண்டித்துப் படு கொலை செய்யப்பட்டார்கள். அரசியல் எதிரிகள் நிரந்தரமாக முடக்கப்பட்டார்கள்.
அதை யும் மீறி ஜனநாயகம் பேசியவர்களின் கழுத்திலும், ஆண்குறியின் விரைகளிலும் இறைச்சி யைக் கோர்க்கும் கொடிய கொக்கிகளை மாட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு படுகொலை செய்தான்.

இவனது ஆட்சியில்தான் ஒட்டு மொத்த வெனிசுலாவின் எண்ணெய் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் முற்றாக தங்களது கைகளின் கீழ் கொண்டு வந்தன.
குறிப்பாக, இன்றைய அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் மற்றும் ராயல் டட்ச்ஷெல் ஆகியவை முழுக்க முழுக்க வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைச் சுரண்டிக் கொழுத்தவைதான்.

கோமேஜின் சாவுக்குப் பிறகு 1948ல்ஆட்சிக்கு வந்த மற்றொரு கைக்கூலி மார்க்கோஸ் ஜிமனேஸ்.
இவன் அவனை விடக் கொடிய சர்வாதிகாரியாக செயல் பட்டான். 
அமெரிக்க பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைக்கூலியாக வேலை செய்தான்.
தனது சொந்த மக்களை கொடூரமாக கொன்று குவித்தான். பல்லாயிரக் கணக்கான அப்பாவி வெனிசுலா மக்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

1958ல் ஜனநாயக முயற்சிகள் துவங்கி னாலும் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நுகத்தடியில் பூட்டப்பட்ட - அமெரிக்க பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் சொர்க்கமாக மாற்றப்பட்ட வெனிசுலா 40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது.


அது 1998. வெனிசுலா ராணுவத்திற்குள் புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் தலைவனாக மலர்ந்தார் சாவேஸ். பொலிவாரியப் புரட்சி நடந்தது.
அந்தநிமிடம் முதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்யும் நடவடிக்கைகளைத் துவக்கினார் சாவேஸ். மக்கள் அவரைக் கொண்டாடினார்கள்.
அமெரிக்க ஏகாதி பத்தியமும் அதன் கைக்கூலிகளும் வெனி சுலாவுக்குள் அவர்களால் பலன்பெற்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் நில பிரபுக்களும் சாவேசுக்கு மிகப்பெரும் எதிரிகளாக மாறினார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், சாவேசை பிசாசு என்று சாடினார்.

2002ம் ஆண்டு சாவேசை வீழ்த்துவதற்கு சிஐஏ சூழ்ச்சி செய்தது.
அவரது ஆட்சிக்கு எதிராக, சிஐஏவின் பயிற்சிக் கூடங்களில் கொலைகாரப் பயிற்சி பெற்று, பின்னர் வெனிசுலாவில் அரசியல்வாதியாக களமிறக்கப் பட்ட எலியாட் அப்ராம்ஸ் என்பவன் தலைமையில் பெரிய கலகம் நடத்தப்பட்டு ஜனாதிபதி சாவேஸ் சிறை வைக்கப்பட்டார்;
ஆனால் வெனிசுலா முழுவதும் மக்களின் எழுச்சி வெடித்தது. ராணுவத்தில் மிகப்பெருவாரியான அதிகாரிகளும் வீரர்களும் சாவேசை விடுவிக்க குரல் கொடுத்தனர்.
அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு 48 மணி நேரத்தில் சாவேசைவிடுவித்து, அமெரிக்க ஏகாதிபத்திய கைக் கூலிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தார்கள்.

சாவேஸ் இன்னும் எழுச்சியோடு தனது புரட்சிகர நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
வெனிசுலா குடிமக்களின் சொர்க்கமாக மாறியது. சாவேஸ் ஏழைகளின் ஏசுவாக வலம் வந்தார்.வெனிசுலாவின் பெட்ரோலிய வளம் முழுவதும் மக்கள் சொத்தாக மாறியது.
 அமெரிக்க பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகள் துரத்தி அடிக்கப்பட்டன. வெனிசுலாவிட மிருந்து முதல் முறையாக பெட்ரோலை காசுகொடுத்து வாங்கியது அமெரிக்கா. ஏகாதிபத்தியம் - உலகம் முழுவதும் பெட்ரோலிய வளத்தை தனது காலடியின் கீழ் கொண்டுவர வெறியோடு அலைகிறஅமெரிக்க ஏகாதிபத்தியம் - ஆப்கானிஸ் தானைச் சிதைத்தது;
லிபியாவைத் தகர்த்தது;
இராக்கைச் சின்னாபின்னமாக்கியது.
 சிரியா வைப் பாய்ந்து குதறியது.
வடகொரியாவை அழிக்க முயற்சித்தது.
வெனிசுலாவையும் விடாமல் துரத்தியது.
 சாவேசுக்கு சூழ்ச்சிகரமாக கொடிய விஷம் கொடுத்து மெல்லக் கொன்றது.

2013.சாவேசுக்குப் பிறகு அவரது பொலிவாரியப் புரட்சியை உயர்த்திப் பிடித்து வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும் மக்களின் மனம் கவர்ந்த ஜனாதிபதியாகவும் மலர்ந்தார் நிக்கோலஸ் மதுரோ. ஒரு சாதாரண போக்குவரத்துத் தொழிலாளி.
அரசியல் கற்று, இடதுசாரி சித்தாந்தம் கற்று, சாவேசின் உற்ற தோழனாய் மாறி,வெனிசுலா மக்களின் இதயத்தில் சாவேசைப் போலவே அமர்ந்தார் மதுரோ.
இனி அசைக்க முடியாது என்றெண்ணிய ஏகாதிபத்தியம், மதுரோ ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் அவரை ஒழிப்பதற்கு களத்தில் இறங்கியது.
வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறுபொருளாதாரத் தடைகளை விதித்து நெருக்கடிக்கு உள்ளாக்கியது. வெனிசுலா வின் ஒரே மிகப்பெரிய பொருளாதார ஆதாரம்அதன் தீராத பெட்ரோல் வளம்தான்.
ஆனால்அந்த பெட்ரோலிய வளத்தை எங்கும் கொண்டு செல்ல விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் பல நாசகர முயற்சிகளை அமெரிக்கா செய்தது.
இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் மதுரோ அரசுசிக்க வைக்கப்பட்டது. அதையும் மீறி மக்களுக்கான நடவடிக்கைகளைத் தொடர்கிறார் மதுரோ.

2017 டிசம்பர்.வெனிசுலாவில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச அளவில் பத்திரிகை யாளர்கள், சிந்தனையாளர்கள், நடுநிலையாளர்கள் என பல தரப்பினரை உள்ளடக்கிய பல்வேறு கண்காணிப்புக் குழுக்கள் சர்வதேச அமைப்பு களின் சார்பில் அங்கு அனுப்பப்பட்டது. அந்தக்குழுவில் ஒரு கண்காணிப்பாளராக பங்கேற்றுவெனிசுலாவுக்கு சென்றவர் பெட்டி புர்ச்செல்.
வெனிசுலா சோசலிச சிந்தனையை உயர்த்திப்பிடித்து ஆட்சி நடத்துகிற நாடு என்பதால், மதுரோவின் அரசு மக்களுக்கான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்கிறது என்று இடதுசாரிகளே சொன்னால்,
 வெனிசுலாவைப் பற்றி வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் குப்பை போல தமிழ் இந்துஏட்டின் வணிகவீதியில்  எழுதியுள்ள கட்டுரையாளர் சரவணன் போன்றவர்கள் கேள்விக்குள்ளாக்கலாம்.

 அவருக்கு பெட்டி புர்ச்செல் பதில் சொல்கிறார்.பெட்டி புர்ச்செல் ஒரு இடதுசாரி அல்ல. அவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

வெனிசுலாவில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தபிறகு தலைநகர் காரகஸ்ஸிலும், நாட்டின் பல்வேறு பகுதி களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்க ளின் வாழ்நிலையை நேரில் ஆய்வு செய்து,
பின்னர் லண்டனுக்கு திரும்பி, ஐரிஸ் டைம்ஸ் ஏட்டில் ஒரு கட்டுரை எழுதினார்:
“வெனிசுலாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை நுட்பமான முறையில் நாங்கள்கண்காணித்தோம். மதுரோவின் ஆளும்சோசலிஸ்ட் கட்சி 70 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
 எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து 30 சதவீத வாக்குகளை பெற்றன.
வாக்குப்பதிவில் ஏதேனும் முறை கேடுகள் நடந்துள்ளதா என்று விரிவாக ஆய்வு செய்தோம். லத்தீன் - அமெரிக்க தேர்தல் வல்லுநர்களின் கவுன்சில் சார்பில் இன்னும் முழுமையான ஆய்வில் ஈடுபட்ட ஒரு உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, ‘‘தேர்தல் மிகமிகஅமைதியாக, மிக மிக நேர்மையாக, எந்தவிதப்பிரச்சனையுமின்றி, வெனிசுலா குடிமக்க ளின் முழு விருப்பத்தை பூர்த்தி செய்யும்விதத்தில் நடந்துமுடிந்தது’’ என்று தனது தீர்ப்பினை பதிவு செய்தது.
இத்தேர்தலை வெனிசுலாவின் தேசிய தலைமைத் தேர்தல் கவுன்சில்நடத்தியது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது.
இந்த எந்திரங்கள் தைவானில் தயாரிக்கப்பட்டவை.
 ஒவ்வொரு வாக்காளரின் கைரேகையை இந்த எந்திரம் தானியங்கி முறையில் சரிபார்த்து அதன் பிறகே வாக்களிக்க அனுமதிக்கிறது. எனவே இந்த எந்திரத்தை ஏமாற்றி வேறு ஒருவர் வாக்களித்துவிட முடியாது. வாக்களித்தபிறகு வாக்காள ருக்கு அச்சிடப்பட்ட ரசீதும் வருகிறது. அந்த ரசீதை தனியாக ஒரு வாக்குப்பெட்டியில் போடுகிறார்கள்.
மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்கும் ரசீதில் உள்ள வாக்கும் ஒன்றுதானா என்பதை யார் வேண்டுமானாலும் தணிக்கை செய்து கொள்ளமுடியும்.
வெனிசுலாவில் உள்ள இந்த தேர்தல் நடைமுறை எந்த விதத்திலும் மோசடி செய்யமுடியாத ஒன்று என்பதை உறுதியாகச் சொல்வேன்.இந்தத் தேர்தலை சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தேர்தல் நியாயமாக நடக்காது என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை. தேர்தலைப் புறக்கணித்த மேற்படி எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது.

 அவர்கள் மதுரோவின் ஆட்சியை மாற்றிய பிறகுதான் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று கூறி,வாக்குப்பதிவுக்கு முன்பு வன்முறை நிறைந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
 நான் காரகஸ் நகரத்தில் மக்கள் வாழ்வு எப்படி இருக்கிறது என்று பார்க்கும் பொருட்டு சுற்றிப்பார்க்கச் சென்றேன்.
 நகரின் பரபரப்பு மிக்க பகுதிகளைத் தாண்டி மலைத் தொடர்போன்ற எழில்மிகு பிரதேசங்கள் இருக் கின்றன. அந்த மலைப்பகுதியின் எழிலைக் காண்பதற்காக ஒரு கேபிள் காரில் சென்றேன். குடும்பம் குடும்பமாக மக்கள் பிக்னிக் வந்திருந்தார்கள்.

 அவர்களோடு வெனிசுலாவின் புகழ்பெற்ற சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே உரையாடினேன். அரசியல் பிரச்சனைகள் குறித்து அவர்கள் காரசாரமாக பேசிக்கொண்டார்கள்.
ஒரு சிலர் மது ரோவின் கொள்கைகளை விமர்சித்தார்கள். பெரும்பாலானோர் மதுரோவின் ஆட்சியைப் புகழ்ந்தார்கள்.
 சாவேஸின் நினைவுகளை தங்கள் நெஞ்சில் தாங்கியிருப்பதாக கூறி னார்கள்.
 எங்களது குழந்தைகள் இன்றைக்கு ஒரு கவுரவமான, முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழத் துவங்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கு சாவேஸ் உருவாக்கிய, மதுரோ பின்பற்றுகிற கொள்கைகள்தான் காரணம் என்றார்கள்.
அமைதி வேண்டி வயலின் இசை
1980களில் துவங்கி மத்திய அமெரிக்காவிலும், வெனிசுலாவிலும் அமெரிக்கா நடத்தி வருகிற தாக்குதல்களை சகித்துக் கொள்ளமுடியவில்லை என்று கொந்தளித்தார்கள்.
இன்னும் ஆய்வு செய்தேன்.
பல விபரங்கள் கிடைத்தன.

சாவேஸ் காலத்தில் துவங்கி இப்போது வரையிலும் வெனிசுலாவுக்கெதிராக அமெரிக்கா ஏராளமான தடைகளை விதித்துள்ளது.
அதன் காரணமாக உணவு, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிக்கான பொருட்கள் எவையும்வெனிசுலாவுக்குள் அவ்வளவு எளிதாக வந்து விட முடியாது.
மேலும் மேலும் புதிய புதிய தடைகளை அமெரிக்க நிர்வாகம் வெனிசுலா மீது விதித்து வருகிறது. இதன் விளைவாக வெனிசுலா மக்களை கடுமையான நெருக் கடிக்குள் தள்ளி, அதன்மூலம் அரசுக்கெதி ராக திருப்ப முடியும் என்கிற அமெரிக்காவின் கணக்குதான்.
இது சில இடங்களில் பிரதி பலித்திருக்கிறது. ஆனால் முரண்பாடு என்னவென்றால், தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும்கூட மக்கள் மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக திரும்பவில்லை என்பதுதான். காரகஸ் நகரத்தில் பெருவாரியான குடும்பங்கள் நிக்கோலஸ் மதுரோவை உறுதியாக ஆதரிக்கின்றன. நாடு முழுவதும் இதுதான் நிலை. சூப்பர் மார்க்கெட்டுகள் இருக்கக்கூடிய இடங்களில் அந்த அங்காடிகளை பெரிதும் நம்பியிருக்கிற பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்கள் பொருட்கள் வராமல் இருக்கிறபோது, மதுரோவுக்கு எதிராக பேசுகின்றனர். ஆனால் பெருவாரியான ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் மதுரோவைப் போற்றுகிறார்கள்.

ஏனென்றால் அவர் களுக்கு மிக விரிவான முறையில் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரோ அரசு உத்தர வாதப்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் மொத்தமுள்ள ஒரு கோடியே 90 லட்சம் மக்க ளில் 40 லட்சம் மக்கள் தினந்தோறும் மூன்று வேளையும் உணவுப் பொட்டலங்களை அரசுஏற்பாட்டில் பெறுகிறார்கள். குழந்தைகள் தினந்தோறும் பள்ளிக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வருகை 40 சதவீதத்தி லிருந்து 90 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளூர் சுகாதார மையங்கள் மூலமாக இலவசமாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. தடைகள் இருப்பதால் மருந்து வந்துசேருவதில் சில நேரம் தாமதமாகிறது.
எனினும் நோயாளிகள் முறையாக கவனிக்கப்பட்டு மருந்துகள் எப்படியாவது அவர்களது கைகளில் சேர்க்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது.
பெட்ரோல் அநேகமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது என்றே சொல்லலாம். ஒரு குளிர்பான புட்டியின் விலையைவிட ஒரு வாகனத்தின் முழு டேங்கை நிரப்புவதற்கான பெட்ரோல் விலை மிக மிகக் குறைவு.
மதுரோ ஆட்சியில் 20 லட்சம் குடும்பங்களுக்கு சமூக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வசதியான வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளன.
 சமூகப் பாதுகாப்புஉறுதி செய்யப்பட்டிருந்தாலும் பலரதுவாழ்வு கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலையில் இருக்கிறது என்பது உண்மைதான்.
பொருளாதாரத் தடைகள் ஒரு காரணம்.
வெனிசுலா வீதி சுவர்.

அதே வேளை எண்ணெய் வளத்தை இன்னும்எப்படி மக்களுக்கான முழுமையான வாழ்வுக்கான ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதை மதுரோ அரசு யோசிக்க வேண்டும்.
பெரிய கார்ப்பரேட் உணவு இறக்குமதி யாளர்கள் இன்னும் வெனிசுலாவில் உணவுச் சந்தையை கையில் வைத்திருக்கிறார்கள்.
 அவர்களை ஒழித்து மக்களுக்கு உணவை உறுதி செய்ய வேண்டும்”.இவ்வாறு புர்ச்செல் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.
எனவே வெனிசுலா மக்களை மதுரோவுக்கு எதிராக முழுமையாக தூண்டிவிட முடி யாது என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியம் உணர்ந்தே இருக்கிறது.

இத்தகைய பின்னணியில்தான் டிரம்ப் நிர்வாகம் முழு மூச்சில் வெனிசுலாவை வீழ்த்தி, அதை மீண்டும் தனது நுகத்தடியில் பூட்டி அடிமையாக்குவதற்கு, அதன் ஒட்டுமொத்த பெட்ரோலிய வளத்தையும் கைப்பற்றுவதற்கு வெறியோடு இறங்கியிருக்கிறது.
2018ஜூலையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரும் வன்முறை கலவரத்தை தூண்டிவிட்டு பல படுகொலைகளை அரங்கேற்றினார்கள் அமெரிக்க கைக்கூலிகள். அதற்கு முன்னதாக,வன்முறையைப் பிரயோகித்தும், எதிர்க்கட்சிகளில் பலவீனமானவர்களை விலைக்கு வாங்கியும், நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை பெற்றனர்.
ஆனால் மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மதுரோவை தங்களது இதய சிம்மாசனத்தில் அமர்த்தி னார்கள்.
 67.7 சதவீத வாக்குகளை வாரி வழங்கினார்கள்.
இதை ஏகாதிபத்தியம் எதிர்பார்க்க வில்லை. எப்படியேனும் மதுரோவை அழிப்பது என கங்கணம் கட்டி அதற்கான ஒரு தலைசிறந்த கைக்கூலியைத் தேடியது.
அந்த கைக்கூலிதான் ஜூவான் குவாய்டோ.பேரரசன் டிரம்ப் உத்தரவு போடுகிறான்.
 அதை கைக்கூலி வெனிசுலாவில் நிறைவேற்ற முயல்கிறான்.
வெனிசுலாவில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.
                                                                                                                                                                                         -எஸ்.பி.ராஜேந்திரன்

ன்றி:தீக்கதிர்.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

தமிழக பட்ஜெட்

2019-20அறிவிப்புகள் .

1. மின்சார பேருந்து
தமிழகத்தில் மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவையில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
(ஏற்கனவே பேருந்து என்றபெயரில் ஓடுபாவைகளை பழுது பார்த்தல் போதாதா?மீதிப்பணத்தில் பணிமனைகளை அட்டாக்கில் இருந்து திருப்பலாமே!)
 
2. கலாம் கல்லூரி
ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்படும்.
(ஆரம்பப்பள்ளிகள் மூடப்படும்?)

3. 3 ஆயிரம் ஸ்கூட்டர்
மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3 ஆயிரம் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. புயல் நிவாரணம்
கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரும் திட்டத்திற்கு ரூ. 1700 கோடி ஒதுக்கீடு.

5. சென்னையில் பார்க்கிங் வசதி
சென்னையில் 2 லட்சம் கார்கள், 2 லட்சம் பைக்குகள் நிறுத்தும் வகையில் நிலத்தடி வாகன வசதி ரூ. 2 ஆயிரம் கோடியில் ஏற்படுத்தப்படும்.

6. கடன் சுமை
தமிழக அரசுக்கு ரூ. 3.97 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 42 ஆயிரம் கோடி நடப்பாண்டில் அதிகரித்திருக்கிறது.(மேலும் அதிகரிக்க ஆவண செய்யப்படும்)

தமிழக பட்ஜெட்டை வாழ்த்த காத்திருப்பவர்கள்.

7. 20 ஆயிரம் வீடுகள் 
சூரிய மின் சக்தி வசதியுடன் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.(ஒப்பந்தம் எடப்பாடி சமப்ந்தருக்கே)
 
8. விபத்து நிவாரணம் உயர்வு
ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்

9. வருவாய் எதிர்பார்ப்பு
2019-20ல் தமிழக அரசின் வருவாய் ரூ. 1.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.(இதில் உங்கள் வருவாய் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் )

10. மாணவர்களுக்கு பஸ்பாஸ்
மாணவர்கள் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.766 கோடி ஒதுக்கீடு
(ஆனால் பாதிப்பேருக்கு வழங்கப்படாது)

11. மூடப்பட்ட டாஸ்மாக்
இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(புதிதாக அவையே வேறு இடங்களில் 3000 கடைகளாகத்திறக்கப்பட்டுள்ளதை சொல்லவில்லையே)

12. விவசாயத்திற்கு...
விவசாயத்துறைக்கு  10,550 ரூபாய் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(அந்த விவசாயநிலங்கள் பலவழிச்சாலைகளுக்கு எடுக்கப்படும்)

13. மெட்ரோ ரயில் 
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தால் சேவைப்பகுதி 172.91 கி.மீ ஆக அதிகரிக்கும். பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14. தமிழ் இருக்கைகள்
ஹார்வர்டு பல்கலைக்கழகம் போல் பிற பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்.
(முதலில் டெல்லிப்பல்கலைக்கழக்தில் மூடப்படும் தமிழ் வகுப்பை திறக்கப்பாருங்கள்)
 
15. தனிநபர் வருமானம் உயர்வு
2011-2012 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.
(அதிமுகவில் உள்ள தனியர்களின் நாள் வருமானம் இது)

16. பொருளாதார வளர்ச்சி
2019-2020-ல் மாநில பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
(கடன் வளர்ச்சியை சொல்லுங்கள்)

17. உணவு பதப்படுத்தும் பூங்கா
பிரான்ஸ் நிறுவனம் ரூ2 ஆயிரம் கோடியில் உணவு பதப்படுத்தும் பூங்காவை தமிழகத்தில் அமைக்க உள்ளது.
(அதை அரசு செய்யவேண்டிய தமிழகப்பட்ஜெட்டில் சொல்வது ஏன்)

18. தமிழ் மொழி வளர்ச்சிக்கு...
 தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
(முதலில் தலைமைச் செயலகத்தில் தமிழைக்கொண்டுவாருங்கள்.தமிழில் ஆணைகளை வெளியிடுங்கள்)

19. மீனவர் நலன்
வரும் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்  உதவியால் ஆபத்துக்காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்.
(ஆனால் இலங்கை படைகள் தமிழர்களை கடத்துவதை மட்டும் அதன் மூலம் கண்காணிக்க இயலாது.) 


20. அணைகள் பாதுகாப்பு
தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் ரூ. 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(இவை பொதுப்பணித்துறை அமைச்சர் இல்லப் புனரமைப்புக்குத்தான்)
 
21. ஆடு வழங்கும் திட்டம்
விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு.
(செம்மறி ஆடுகள்தான் ------- இருக்காங்களே.தனியே ஒதுக்கீடு எதற்கு)

 டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு மூடப்படும்?
டெல்லி பல்கலைக்கழகத்தில் நான்கு பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் அதன் தமிழ்ப் பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 இதன் இரண்டு பிரபல மகளிர் கல்லூரிகளில் இருந்த பேராசிரியருக்கான பணியிடங்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதால், அதன் தமிழ் துறைகள் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன.

லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் டெல்லியில் தமிழுக்காக ஏழு பள்ளிகள் உள்ளன. இதில் படித்து முடித்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வருபவர்களின் மேற்கல்விக்காக டெல்லியில் உள்ள கல்வி நிலையங்களில் பல வருடங்களாக தமிழ் மொழியில் சான்றிதழ், டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சுமார் எட்டு வருடங்களாக ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனிடையே, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பிரபல லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் 15 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றிருந்தார். மற்றொரு மகளிர் கல்லூரியான மிராண்டா ஹவுஸில் எட்டு வருடங்களுக்கு முன் தமிழ் பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றார்.

 இந்த இரண்டு பணியிடங்களும் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு விட்டதால் அதன் தமிழ் பிரிவுகள் மூடப்பட்டு விட்டன. இது, நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களை நிர்வகித்து வரும் மத்திய அரசின் மத்திய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிரானது எனத் தெரியவந்துள்ளது.

எனினும், இதை தமிழர்களும், அம்மாநிலத்தின் அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தமிழ் கல்விக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனால், டெல்லிவாழ் தமிழர்கள் அவற்றில் சேர்ந்து தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். குறிப்பாக டெல்லியின் பிரபலமான 2 மகளிர் கல்லூரிகளிலும் தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பை பெண்களும் இழந்துள்ளனர். தமிழுக்கு, இந்தி உட்பட மற்ற மொழியாளர்களின் எதிர்ப்பும், காழ்ப்புணர்வும் இதற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவை உயர்த்த, தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் ஒரு சொற்பொழிவை துவக்க திட்டமிடப்பட்டது.
 இங்கு பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை அளிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் ஈடேறவில்லை எனினும், கடந்த 2007-ல், தமிழக அரசால் அளிக்கப்பட்ட ரூபாய் ஐம்பது லட்சத்தின் உதவியால் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கானப் பிரிவு துவக்கப்பட்டது. இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ள இங்கு டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் வந்து பயில மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், இங்கு கூடுதலாகப் பேராசிரியர்களை அமர்த்தாமல் இருப்பதால் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வெங்கடேஸ்வரா கல்லூரி மற்றும் தயாள் சிங் கல்லூரியிலும் தமிழுக்கானப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்து ஐந்து முதல் பத்து வருடங்களில் இங்குள்ள பேராசிரியர்கள் ஓய்வு பெற்றால் அவையும் வேறு துறைகளுக்கு மாற்றும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...