bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 30 ஜனவரி, 2018

பலி வாங்கும் எம்.ஆர்.ஐ


மருத்துவர் ரவி

எப்படி பலி வாங்குகிறது  ஸ்கேன் எந்திரம்?
மருத்துவமனை லேப்களில் பயன்படுத்தப்படும் பல வகை ஸ்கேன் மெஷின்களில் முக்கியமானது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின். 
இதன் மூலம் உடலின் எந்த பாகத்தையும் நுணுக்கமாக ஆராயலாம். ஆனால், கொஞ்சம் ஆபத்தானதும்கூட. 
கவனக்குறைவாக இருந்தால் நம்மை உள்ளிழுத்து, உயிரையே எடுத்துவிடும். 
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினில், அதன் திறன், விலைக்கு ஏற்ப பல வகைகள் உள்ளன. `டெஸ்லா’ (Tesla) என்பது ஸ்கேன் மெஷினின் திறனைக் குறிக்கும் அறிவியல் சொல். 
0.5 டெஸ்லா முதல் 3 டெஸ்லா திறனுடைய ஸ்கேன் மெஷின்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. 
பூமியின் காந்தப்புலம் 0.5 காஸ் (gauss). 
ஒரு டெஸ்லா என்பது 10,000 காஸ். 
அப்படியானால், 0.5 டெஸ்லா என்பது 5,000 காஸ். 3 டெஸ்லா என்றால் 30,000 காஸ். இதிலிருந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் காந்த ஈர்ப்பு சக்தியை நாம் புரிந்துகொள்ளலாம்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள் டைட்டானியம், பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களைத் தவிர மற்ற அனைத்து உலோகங்களையும் ஈர்க்கக்கூடியவை. 
ஸ்கேன் அறைக்குள் பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட படுக்கை (MRI compatible Strecher) மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டும். மும்பையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனைஊழியர்களின் அலட்சியத்தாலேயே நடந்திருக்கிறது. 
மும்பை நாயர் மருத்துவமனையில் ராஜேஷ் மாருதி என்ற 32 வயது இளைஞருடைய  உறவினர் ஒருவரைச் சேர்த்திருந்தார்கள். 

உறவினர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது உறவினரின் ஸ்கேன் பயன்பாட்டுக்காக ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்திருக்கிறார் ராஜேஷ். அப்போது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இயங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. 

ஆக்ஸிஜன் சிலிண்டர் இரும்பாலானது என்பதால், ஸ்கேன் மெஷின் அதிவேகமாக அதை ஈர்த்திருக்கிறது. சிலிண்டரில் இருந்து நீர்ம நிலை ஆக்ஸிஜனும் அதே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. 
அதை சுவாசித்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு, 6 வயது சிறுவனை ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது, மெஷினின் காந்தப்புலத்தால் ஆக்ஸிஜன் சிலிண்டர் அதிவேகமாக ஈர்க்கப்பட்டது. 
சிலிண்டர் சிறுவனின் தலையில் மோதியதால், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 
இதேபோல இன்னொரு சம்பவம்... டெல்லியிலிருக்கும் மருத்துவமனையில் வேலை செய்பவர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டதில், அவரின் உள்ளுறுப்புகள் செயலிழந்தன. 
இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை.
 ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில்இதற்காகவே பல அடுக்குப் பரிசோதனைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்திருக்கிறோம். 
நோயாளிகளையும், உடன் வருபவர்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே, ஸ்கேன் அறைக்குள் அனுமதிக்கிறோம். 
ஸ்கேன் மெஷின் இருக்கும் அறையின் சுவர்கள், காந்தப்புலம் வெளியே செல்ல அனுமதிக்காத பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, மருத்துவமனை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் .
ஸ்கேன் அறைக்குள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. 
கைக்கடிகாரம், மோதிரம், சாவி கொத்துகள், ஹெட்போன்கள், சில்லறைக் காசுகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்த உலோகப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. 
குறிப்பாக வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றால், அவை செயலிழந்துவிடும். ஸ்கேன் அறைக்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினால்  அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
பொதுவாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இருக்கும் அறைக்குள் உலோகப் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. இதிலுள்ள மிக அதிகமான காந்தப்புலம், உலோகங்களை ஈர்த்துக்கொள்ளும். 
இதனால் பல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 
இதுபோன்ற விபத்துகள் பெரும்பாலும் ஆக்ஸிஜன் சிலிண்டரை ஸ்கேன் அறைக்கு எடுத்துச் சென்றதாலேயே நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் நிகழ்ந்த விபத்தும் இது போன்றதுதான்.
திங்கள், 29 ஜனவரி, 2018

பா.ஜ கா (பாரதீய ஜனதா கார்ப்பரேட்)

 2017ம் ஆண்டு எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன என்பது தொடர்பான ஆய்வறிக்கையை ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில், பாஜக தொடர்ந்து 4வது ஆண்டாக பாஜக முதலிடம் வகிக்கிறது. 

அதிலும், கடந்த 2016-17 வரையிலான நிதி ஆண்டில் கார்ப்பரேட்டுகளிடம் நிதிபெறுவதில் பாஜக அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. 

கார்ப்பரேட் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக 2016-17 நிதியாண்டில் மொத்தம் 325.27 கோடி நாடுமுழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
 இதில், 89% நிதி, அதாவது சுமார் 290.22 கோடி ரூபாய் பாஜகவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிதியில் மிகப்பெரும் பங்கு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கொடுத்துள்ளன. அவை அம்பானி,அதானி என்பது தெரிந்ததே.


இவை,  தேர்தல் நிதிவழங்கும் அறக்கட்டளைகளுக்கான மையத்தில் பதிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மையத்தில் ஏர்டெல், டி.எல்.எப், யு.பி.எல். லிமிட்டெட், ஜே.எஸ்.டபிள்யூ லிட், பிரமல் எண்டர்பிரைசைஸ், ஜனதா நிர்வாசக் அறக்கட்டளை கிராசிம் சிமெண்ட்ஸ் உள்ளிட்ட 21 மிக முக்கியமான கார்ப்பரேட்டுகள் பதிவு செய்திருக்கின்றன.

இந்த மையத்திற்கு 2016-17 ஆண்டில் சுமார் 283.72 கோடி நிதிவந்துள்ளது. இந்த நிதியில், 16.5 கோடி காங்கிரஸுக்கும், ரூ.9 கோடி சிரோமணி அகாலிதளத்துக்கும், ரூ.6.5 கோடி சமாஜ்வாடி கட்சிக்கும், ரூ.1 கோடி ஆம் ஆத்மிக்கும், மீதமுள்ள தொகை திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 


மீதமுள்ள பெருந்தொகை அனைத்தும் கார்ப்பரேட்டுகள் சார்பாக பாஜகவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட்டுக்கள் கட்சிகளுக்கு கொடுக்கும் நிதியின் மொத்த அளவு கணிசமாக கூடியுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013-14ம் ஆண்டில் ரூ.85.37 கோடியாகவும், 

2014-15 ரூ.177.50 கோடியாகவும், 
2015-16 ஆண்டில் ரூ.49.50 கோடியாகவும் இருந்த நிதியின் அளவு
 இந்த ஆண்டு 325.27 கோடியாக உயர்ந்துள்ளது.

சனி, 27 ஜனவரி, 2018

இதற்கு போயா இத்தனை கலவரம்

பத்மாவதி என்றிருந்தது பத்­மா­வத் என்ற படம் இந்தியாவின் வட மாநிலங்களை கலக்கி வருகிறது.அதனால் அங்கு கலவரம்.
மூன்று மாநிலங்களில் படத்தை பார்க்காமலேயே கலவரம்.படம் தற்போது வெளியாகி விட்டது.ஆனால் கலவரம் செய்யும் வீரர்கள் இன்னும்பட்டத்த்தைப் பார்க்காமலேயே கலவரத்தில் மும்முரமாக உள்ளனர்.
பத்மாவத் படத்­தில் இப்படி அடித்துக் கொள்ளும்படி அப்­படி என்ன தான் இருக்­கி­றது.

இயக்­கு­னர் சஞ்­சய் லீலா பன்­சாலி, பிர­மாண்ட திரை­யில், காட்சி வடி­வில், பிர­மிப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றார். 3டி-யில் பார்க்­கும் போது பிர­மிப்பு இன்­னும் அதி­கம் வெளிப்­ப­டு­கி­றது. பெரும்­பா­லான காட்­சி­கள் இருட்­டி­லேயே நடப்­ப­தால், அவை மங்­க­லா­கவே தெரி­கின்­றன. 

கண்­களை அதி­க­மாக விரித்து, வலிக்க, வலிக்க பார்க்க வேண்டி உள்­ளது.  ராஜ­புத்­திர வம்­சத்தை பெரு­மைப்­ப­டுத்தி இருக்­கி­றது படம். படத்­தின் டைட்­டில் கார்­டி­லேயே மாலிக் முகம்­மது ஜெய்­சி­யின் கவி­தையை மையப்­ப­டுத்தி படம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்­கள்.

சிங்­கள தேசத்­தி­லி­ருந்து முத்­துக்­களை எடுத்து வரு­வ­தற்­கா­கச் சென்ற மேவார் மன்­னன் ராவல் ரத்­தன் சிங் (ஷாகித் கபூர்), அங்கு சிங்­கள நாட்டு இள­வ­ரசி பத்­மா­வ­தி­யின் (தீபிகா படு­கோனே) அழ­கில் மயங்­கு­கி­றான். 

பத்­மா­வ­தி­யும் ராவல் ரத்­தன் மீது காதல் கொள்ள, இரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் நடக்­கி­றது. மன்­ன­னும், அர­சி­யும் நெருக்­க­மாக இருந்­ததை, திருட்­டுத் தன­மா­கப் பார்த்­தால், அர­சி­யின் வேண்­டு­கோள்­படி நாடு கடத்­தப்­ப­டு­கி­றான் மேவார் நாட்டு ராஜ­குரு,
அந்த நேரத்­தில், மாம­னார் டில்லி சுல்­தா­னைக் கொன்று அரி­ய­ணை­யைக் கைப்­பற்­றிய அலா­வுதீன் கில்­ஜி­யி­டம் (ரண்­வீர் சிங்) சென்று பத்­மா­வ­தி­யின் அழ­கைப் பற்­றிக் கூறு­கி­றார் ராஜ­குரு. பெண்­கள் மீது அதிக மோகம் கொண்ட அலா­வு­தீன் பத்­மா­வ­தி­யைப் பார்த்தே ஆக வேண்­டும் என்ற ஆசை­யில் மேவார் மீது போர் தொடுக்­கக் கிளம்­பு­கி­றான்.
ஆறு மாதம் காத்­தி­ருந்­தும் ராஜ­புத்­திர வீரர்­க­ளின் எதிர்ப்­பால் வெற்றி பெற முடி­யா­மல், சமா­தா­னம் செல்­கி­றான் அலா­வு­தீன். அப்­போது ராஜ­புத்­திர அர­சுக்கு விருந்­தி­ன­ராக வர­வேண்­டும் என்ற விண்­ணப்­பத்­தை­யும் வைக்­கி­றான். அதை ஏற்­றுக் கொண்ட மன்­னன் ராவல் ரத்­தன் சிங், அலா­வு­தீ­னுக்கு விருந்­த­ளிக்­கி­றான். அப்­போது, திடீ­ரென அரசி பத்­மா­வ­தி­யைப் பார்க்க வேண்­டும் என்­கி­றான்.

சில விவா­தங்­க­ளுக்­குப் பின் பத்­மா­வதி சில கணங்­கள் மட்­டுமே காட்­டப்­ப­டு­கி­றாள். பத்­மா­வ­தியை முழு­மை­யா­கப் பார்க்க வேண்­டும் என நினைக்­கும் அலா­வு­தீன், சதி செய்து ராவல் ரத்­தன் சிங்­கைக் கைது செய்து தில்­லிக்கு அழைத்­துச் செல்­கி­றான்.
கண­வனை மீட்க பத்­மா­வதி, அலா­வு­தீன் வழி­யி­லேயே சதி செய்து கண­வனை மீட்டு வந்து விடு­கி­றாள். கோப­ம­டை­யும் அலா­வு­தீன் மீண்­டும், மேவார் மீது போர் தொடுக்­கி­றான். இதன் பின் என்ன நடக்­கி­றது என்­பது தான் படத்­தின் மீதிக் கதை.

ஷாகித் கபூர், தீபிகா படு­கோனே, ரண்­வீர் சிங் என மூவ­ருமே அவ­ர­வர் கதா­பாத்­தி­ரங்­க­ளில் பொருந்­திப் போகி­றார்­கள். அதி­லும் ஷாகித், தீபிகா இடை­யி­லான காதல் காட்­சி­கள், வீரம் செறிந்த கதை­யில் காத­லை­யும் கண்­ணி­ய­மாக இணைத்­தி­ருக்­கின்­றன. நிமிர்ந்த தோற்­றம், நேர் பார்வை, கம்­பீ­ர­மான பேச்சு என ஷாகித் கபூ­ரின் நடிப்­பில் இந்­தப் படம் அவ­ருக்கு பெரிய முத்­தி­ரை­யைப் பதிக்­கும்.
தீபிகா படு­கோ­னே­வின் அழ­கைப் பற்றி என்ன சொல்­வது, சாந்­த­மான அழகு, அதே சம­யம் எப்­போது வீர­மும், கம்­பீ­ர­மும் வெளிப்­பட வேண்­டுமோ அப்­போது அந்த அழ­குக்­குள் அது­வும் திமி­ராய் வெளிப்­ப­டு­கி­றது. அவ­ருக்கு பொருத்­த­மான ஆடை, அணி­க­லன்­களை அணி­வித்து ரசி­கர்­களை ரசிக்க வைத்­த­வ­ருக்கு தனி பாராட்­டு­கள்.

அலா­வு­தீன் கில்­ஜி­யாக ரண்­வீர் சிங். காமம், கோபம், வீரம், திமிர், ஏள­னம் என எந்த ஒரு நவ­ர­சத்­தை­யும் விட்டு வைக்­காத நடிப்பு.

 மாற்­றான் மனைவி மீது கொண்­டுள்­ளது காதல் அல்ல காமம் என்­பதை கண்­க­ளா­லேயே புரிய வைக்­கி­றார். அந்­தக் காலத்­தில், போர் நடக்­கக் கார­ணம் மண்­ணாசை, பெண்­ணாசை என்­பார்­கள். இந்­தப் படத்­தில் அந்த பெண்­ணாசை, ஒரு­வனை எப்­ப­டி­யெல்­லாம் செய்ய வைக்­கும் என்­பதை உணர்த்­தி­யி­ருக்­கி­றார்­கள். 

அதற்கு ரண்­வீர் சிங்­கின் நடிப்பு அபா­ரம். அலா­வு­தீன் கில்­ஜி­யின் வலது கையாக, நம்­பிக்­கை­யான அடி­மை­யாக ஜிம் சர்ப். மனை­வி­யாக அதிதி ராவ் ஹைதரி, சுல்­தான் ஜலா­லு­தீன் கில்ஜி ஆக ரசா முரத், மேவார் மன்­னன் ராவல் ரத்­தன் சிங் முதல் மனை­வி­யாக அனுப்­ரியா கோயங்கா நிறை­வாக நடித்­தி­ருக்­கி­றார்­கள்.
சஞ்­சய் லீலா பன்­சா­லி­யின் இசை­யில் பாடல்­கள் தமி­ழி­லும் ரசிக்க வைக்­கின்­றன. முத­லில் தீபிகா படு­கோனே அரண்­ம­னை­யில் ஆடும் ஆட்­டம் மீண்­டும் மீண்­டும் பார்க்க வைக்­கும். சஞ்­சித் பல்­ஹா­ரா­வின் பின்­னணி இசை­யும் குறிப்­பிட வேண்­டி­யது.

தமி­ழில் பார்க்­கும் போது முத­லில், டப்­பிங் சீரி­யல் பார்ப்­பது போன்று தோன்­றி­னா­லும், பல இடங்­க­ளில் தமிழ் வச­னங்­க­ளுக்­கும் தியேட்­ட­ரில் கைதட்­டல் கிடைக்­கி­றது.
படத்­தின் தயா­ரிப்பு வடி­வ­மைப்பு, ஒளிப்­ப­திவு, கிரா­பிக்ஸ் பிர­மிக்க வைக்­கின்­றன. 

'பாகு­பலி' படத்­திற்­குப் பிறகு ஒரு பிர­மிக்க வைக்­கும் சரித்­தி­ரப் படத்­தைப் பார்த்த அனு­ப­வம் கிடைக்­கும். இருந்­தா­லும், ஒரு மன்­ன­னின் மனை­வி­யைக் கவ­ரத் துடிக்­கும் மற்­றொரு மன்­னன் என்­ப­து­தான் படத்­தின் ஒரு வரிக் கதை. மேவார் மன்­னன், அவ­னது பேர­ழ­கி­யான அரசி, அவ­ளைக் கவ­ரத் துடிக்­கும் டில்லி மன்­னன் இவர்­க­ளுக்­கி­டையே தான் அதி­கப்­ப­டி­யான காட்­சி­கள் பய­ணிக்­கி­றது. 

                              சஞ்சய் லீலா பன்சாலிவேறு கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு பெரிய முக்­கி­யத்­து­வம் இல்லை. காதல், காமம், வீரம் தவிர, மற்ற உணர்­வு­க­ளுக்கு வேலை இல்லை என்­பது குறை­யா­கத் தெரி­கி­றது.

முக்­கி­யத்­து­வம் வாய்ந்த கிளை­மாக்ஸ் காட்சி பர­ப­ரப்­பா­க­வும், விறு­வி­றுப்­பா­க­வும் பட­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மொத்­தத்­தில் விஷு­வ­லா­க­வும், வியப்­பா­க­வும் ஒரு படத்­தைப் பார்க்­கத் தயா­ராக இருப்­ப­வர்­க­ளுக்கு 'பத்­மா­வத்' பிர­மிப்­பைக் கொடுக்­கும்.

சித்­தூர் மகா­ரா­ணியை தவ­றாக சித்­த­ரித்து உள்­ள­தாக இப்­ப­டத்­திற்கு ராஜ­புத்ர வகுப்­பி­னர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் படத்­தில் அப்­ப­டிப்­பட்ட காட்­சி­கள் இல்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால் ராஜ­புத்ர வம்­சத்­தி­னரை பெரு­மைப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். அந்த வம்­சத்தை சேர்ந்த பெண்­க­ளின் வீரத்தை பெரு­மைப்­ப­டுத்­தும் வித­மா­கவே சொல்­லி­யி­ருக்­கி­றார் இயக்­கு­நர் சஞ்­சய் லீலா பன்­சாலி.
இதற்கு போயா இத்தனை கலவரம் என்றுதான் இப்படம் எண்ணவைக்கிறது.

நடிகர்கள்: - ஷாகித் கபூர், ரண்­வீர் சிங், தீபிகா படு­கோனே. 
இயக்­கம் :- சஞ்­சய் லீலா பன்­சாலி,
 இசை -: சஞ்­சய் லீலா பன்­சாலி, சஞ்­சித் பல்­ஹாரா. 
தயா­ரிப்பு :- பன்­சாலி புரொ­ட­க்ஷன்ஸ், வியா­காம் 18 மோஷன் பிக்­சர்ஸ்.இந்­தி­யில் தயாரான  'பத்­மா­வத்',  தமி­ழி­லும் மொழிமாற்றமாகி  வெளி­யா­கி­யுள்ளது .

செவ்வாய், 23 ஜனவரி, 2018

"போஸின் ரகசிய காதல் "

காங்கிரஸ் கட்சியில் சுதந்திரத்திற்கான போராளியாக முன்னிருத்தப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலையின் காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது.
ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது. எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது.

வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அவர் முடிவு செய்தார்.
அதே சமயத்தில், போஸை அணுகிய ஐரோப்பிய பதிப்பாளர் ஒருவர் "இந்தியாவின் துயரம்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத்துவதற்கு பணித்தார். அதை ஏற்றுக்கொண்ட போஸ் இந்த புத்தகத்தை உடனிருந்து எழுதுவதற்கு உதவியாகவும், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தார்.
போஸின் நண்பரான டாக்டர் மாத்தூர் என்பவர் இதற்காக இரண்டு நபர்களை பரிந்துரைத்தார். அதிலுள்ள முதல் நபரை அழைத்து நேர்காணல் செய்த போஸுக்கு திருப்தியில்லை.
எனவே, இரண்டாவதாக 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார். எமிலியின் பேச்சில் நம்பிக்கை கொண்ட போஸ், அவரை 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்த்துக்கொண்டார்.
1934 ஆம் ஆண்டு இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்புவரை 37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதிலேயே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.
சுபாஷ் சந்திர போஸின் இளைய சகோதரரான சரத் சந்திரா போஸின் பேரனான சுகித் போஸ், 'அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் - சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அதில், எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாற்றமடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸுக்கு பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது என்று அப்புத்தகத்தில் சுகித் போஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸே காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வாழ்க்கையை ஒப்பீட்டு புகழ்பெற்ற கல்வியாளரான ருத்ரநாஷூ முகர்ஜி ஒரு புத்தகம் எழுதினார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அப்புத்தகத்தில் போஸ் மற்றும் நேருவின் வாழ்க்கையில் அவர்களின் மனைவிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்
"தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் வேறுபட்ட ஒன்று. கடினமான ஒன்று என்றும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்தார்" என்று அப்புத்தகத்தில் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதங்கள் முன்னர் சுபாஷ் சந்திர போஸால் எமிலிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த கடிதங்களை சரத் சந்திர போஸின் மகனான ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.
1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, "என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?."
"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று சுபாஷ் சந்திர போஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தின் கடைசியில், "நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.

எமிலி மீதான காதலில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். இதுகுறித்து சுகித்திடம் பேசிய போஸின் நெருங்கிய நண்பரும் அரசியல் கூட்டாளியுமான ஏசிஎன் நம்பியார், "சுபாஷ் ஒரு யோசனையுடன் இருந்தவர், இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது." போஸின் அந்த எண்ணத்திலிருந்து திசை திரும்புவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு அவர் எமிலியை நேசிக்கும்போதுதான் ஏற்பட்டது. அவர் எமிலியை மிகவும் விரும்பினார்.
அதற்கடுத்த முறை சந்திக்கும்போது போஸும், எமிலியும் திருமணம் செய்துகொண்டனர். தனக்கு 27 வயதிருக்கும்போது 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிருஷ்ணா போஸிடம் பேசிய எமிலி தெரிவித்தார். அவர்கள், தங்கள் இருவருக்கும் விருப்பமான ஆஸ்திரியாவிலுள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், இருவரும் தங்களது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எமிலி தங்களது திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
தனது அரசியல் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் சந்திக்க விரும்பாத காரணத்தினால் போஸ் தனது திருமண வாழ்க்கையை மறைந்திருக்கலாம் என்று முகர்ஜி நினைக்கிறார். வெளிநாட்டு பெண்ணை போஸ் திருமணம் செய்து கொண்டது அவரை பற்றிய மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கலாம்.
இந்தியாவிலுள்ள சில செய்தித்தாள்களுக்கும், இதழ்களுக்கும் வியன்னாவில் இருந்தபடியே எமிலி எழுதவேண்டுமென்று போஸ் விரும்பியதாக கிருஷ்ணா போஸ் கூறுகிறார். தி இந்து, மாடர்ன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதியிருந்தாலும் அக்கட்டுரைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று போஸ் பலமுறை கூறியதாக தெரிகிறது.

1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி எமிலிக்கு சுபாஷ் எழுதிய கடிதத்தில், "இந்தியாவைப் பற்றி சில கட்டுரைகளை நீ எழுதியுள்ளாய். ஆனால், இந்த புத்தகங்களை உனக்கு வழங்குவதற்கு தேவையுள்ளதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீ அவற்றை படிப்பதேயில்லை" குறிப்பிட்டுள்ளார்.
"நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. வியன்னாவில் நீ பல தலைப்பிலான நூல்களை பெற்றிருக்கிறாய். ஆனால், அவற்றை நீ தொடர்ந்து பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும்."
இருவரின் அன்பின் விளைவாக 1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் இவர்களின் மகளான அனிதா பிறந்தாள். இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது.
அனிதா தனது கணவருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்ததுடன், துணிச்சலான வீரர் என்ற அடையாளத்தை பெற்று விளங்கினார். சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும்.
ஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு அவரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார்.
இந்த கடினமான பயணத்திலும், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                                                                  தகவல் உதவி, நன்றி:பிபிசி ,                          

புதன், 17 ஜனவரி, 2018

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது.  தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.
                                                                                                                                   –  வினவு
ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.

***

ந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?
“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தேவதாசி பரஸ்மணி
எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.
ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.
“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.
“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.
ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான                     பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.
தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.
ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்ஜுக்தா பானிகிரஹி
சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.
“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.
பூரியின் முன்னாள் ராஜா திவ்ய சிங் தேவ்
பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.
பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”
இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.
முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.
உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?
ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?
இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.

***

1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான                    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.
1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.
இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.

***

20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.
அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.
நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.”
-இளநம்பி
( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )

செவ்வாய், 16 ஜனவரி, 2018

மனிதம் பேசும் ‘அன்பே சிவம்’

'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பிலும், எழுத்திலும் எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், 'ஹே ராம்', 'குணா', 'ஆளவந்தான்', 'குருதிப் புனல்', ‘நம்மவர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’ உள்ளிட்ட எத்தனையோ நல்ல நல்ல திரைப்படங்கள் ரிலீஸ் ஆன சமயத்தில் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அவற்றில், மிக முக்கியமான ஒரு திரைப்படம் 2003ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘அன்பே சிவம்’. தமிழ் சினிமாவில் மிக அதிகமாக கொண்டாடப்படும் cult கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான ‘அன்பே சிவம்’ வெளியாகி, இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றது.

கிட்டத்தட்ட 1990களின் இறுதியில் இருந்தே, மலையாள இயக்குனர் பிரியதர்ஷனுடன் இணைந்து ஒரு திரைப்படம் பண்ண வேண்டும் என விரும்பி வந்தார் நடிகர் கமல்ஹாசன்; இருவரும் பல முறை பேசியும் வந்தார்கள். 2002ஆம் ஆண்டில் கமல் கதை, திரைக்கதை எழுதியிருந்த ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை பிரியதர்ஷன் இயக்குவதாய் இருந்தது; ஆனால், கடைசி நிமிடத்தில் அப்படத்திலிருந்து அவர் விலகவே, அப்படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் சுந்தர்.சி அவர்களுக்கு கிடைத்தது.
இந்த படத்தின் கதைக்கரு, ‘Planes, Trains and Automobiles’ என்கிற ஆங்கில படத்திலிருந்து தழுவப்பட்டதாகும். ஆனால், எந்தவொரு காட்சியிலும் கூட அந்த திரைப்படத்தின் சாயலே இல்லாமல் ஒட்டுமொத்தமாக வேறு ஒரு வடிவத்தில் இப்படத்தை கொடுத்திருப்பார்கள் படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதிய ‘கலைஞானி’ கமலஹாசன் மற்றும் ‘கார்ட்டூனிஸ்ட்’ மதன் அவர்கள். இத்திரைப்படத்தில் கமல் நடித்திருந்த நல்லசிவம் என்கிற கதாபாத்திரம், பல தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர் நலன்களுக்கு போராடிய காரணங்களால் காங்கிரஸ் கட்சிக்காரர்களால் 1980களில் படுகொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் நாடக ஆசிரியர் மற்றும் தெருக்கூத்து இயக்குனர் சஃப்தார் ஹஷ்மி என்பவரை மையமாக வைத்து எழுதப்பட்டது (2008இல் Hallabol என்கிற இந்தி திரைப்படமும், அவரது மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட திரைப்படமே).
படம் முழுக்க ‘மனிதமும் அன்புமே மிகச் சரியான மதம், நல்ல மனிதர்கள் எல்லோருமே கடவுளே’ என்கிற கருத்தை முன்வைத்த ஒரு பிரமாதமான காமெடி டிராமா ‘அன்பே சிவம்’. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் சீரியஸாக இருந்தாலும் கூட, கமல் அவர்களது பாணியிலான ரசனையான காமெடிக்கும் பஞ்சமே இருக்காது இப்படத்தில்.

எந்த நிலையிலும் தன்னலம் மட்டுமே கருதுகிற உலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் ஆதரிக்கும் ஒரு மேல்த்தட்டு இளைஞனும், மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பெரும் முதலாளிகளை எதிர்த்து நிற்கும் ஒரு நடுத்தர வயது கம்யூனிஸ்ட் காரரும் மழை வெள்ளத்தால் ஒரிசாவில் மாட்டிக்கொண்டு சென்னை வரும் வரை, 3 நாட்கள் ஒன்றாகவே இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக வெவ்வேறான வாழ்க்கை முறையில் வளர்ந்த, வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை கொண்ட அந்த இருவரது பயணத்தின் சுவாரஸ்யமான அனுபவங்களே இத்திரைப்படம்.

படத்தில் மாதவனின் பாத்திரத்தின் பெயர் - அன்பரசு; ஆனால், அந்த பெயரில் உள்ள அன்பு கூட பிடிக்காமல் தன்னை A.அர்ஸ் என்றே அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவர். சட்டென கோபப்படக்கூடிய, எவரையும் உருவத்தை வைத்தே எடை போடக்கூடிய, சமுதாயம் குறித்த அதிக புரிதல் ஏதும் இல்லாத ஒரு மனிதர். தன் தவறுகளை ஒத்தே கொள்ளாதவர், தான் செய்த தப்பிற்கும் கூட மற்றவர்களையே குறை சொல்பவர். யாரையும் சட்டென எடுத்தெறிந்து பேசக்கூடிய ஒருவர், கமல் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும்பொழுது கூட ‘after all, every dog has its day.. love is blind’ என சொல்பவர். கமல் ஏற்றிருந்த நல்லசிவம் பாத்திரமோ, அதற்கு முற்றிலும் நேர் எதிர். பொதுவுடைமை சிந்தனை உடையவர், மிகவும் பக்குவமான மனிதர்; வாழ்க்கையில் வருபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒருவர், வாழ்க்கை குறித்த பெரிய எதிர்பார்ப்புகளோ ஆசையோ இல்லாத ஒருவர் (‘பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை.. நிரந்தரம் என்கிற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை நான்’ என இறுதியில் கடிதத்தில் தன்னைப் பற்றி சொல்கிறார் சிவம்). அர்ஸ் அடிக்கடி சொல்வதைப் போலவே, எல்லா கேள்விக்கும் ஒரு பதில் வைத்திருப்பவர் சிவம்; எல்லா பதிலுக்குமே ஒரு யோசனையும் எதிர்கேள்வியும் வைத்திருப்பவர். படம் முடியப்போகும் தருவாயில் ‘அந்த Dogக்கு புரிஞ்சது கூட உங்களுக்கு புரியலையா?’ என அர்ஸ் எமோஷனலாக கேட்கும்பொழுது, ‘DOGஐ திரும்பிப் போட்டா, GODன்னு வருதுங்க’ என குறும்பாக சொல்பவர். 
ஒரு உண்மையான, நேர்மையான கம்யூனிஸ்ட் – கிளைமாக்ஸில் கூட, நாசரிடம் தனக்கென எதும் கேட்காதவர். ஒரு காட்சியில், கண்ணாடியை பார்த்து ‘குளிச்சப்புறம் பரவாயில்ல, கொஞ்சம் லட்சணமாவே இருக்கேன்’ என தனக்குத்தானே சொல்லிக்கொள்வது அந்த விபத்து பற்றியும் மாறிப்போன தனது தோற்றம் பற்றியுமான சோகத் தேற்றல். படம் முழுக்க சோகமான பொழுதுகளிலும், சீரியஸான தருணனுங்களிலும் கூட அவர் அடிக்கும் ஜோக்குகள் ரசிக்க வைக்கவும், சில சமயம் கண்ணீரையும் வரச் செய்கின்றன. ‘முகத்துல என்ன தழும்பு, அங்கிள்...’ என ஒரு குழந்தை கேட்கையில், ‘குஜராத்ல ஒரு கடையில ஷேவிங் பண்ணிட்டு இருந்தப்போ, திடீர்ன்னு பூகம்பம் வந்திடுச்சு...’ என அவர் சொல்ல, ‘அப்புறம் என்னாச்சு, அங்கிள்..’ என அக்குழந்தை கேட்கையில் ‘face cut நல்லாருக்குன்னு அனுப்பிட்டாங்க’ என சொல்லி சிரிக்கிறார். 
மற்றொரு காட்சியில், தன் தந்தையை சுனாமி அலை அடித்துச் சென்ற சோகத்தை மாதவனிடம் சொல்லும்பொழுது ‘ஃபோட்டோ எடுறா என்னை, அலை வரும்போது... நல்லா வரும்ன்னாரு... ஃபோட்டோவும் நல்லா வந்துச்சு, அலையும் நல்லா வந்துச்சு... அப்பா போய்ட்டாரு’ என்பார். 
அந்த காட்சியில், முகத்தில் எந்த ரியாக்ஷனுமே காட்டாமல் ரொம்ப சாதாரணமாக அந்த சம்பவத்தை விவரிக்கும் கமல் அவர்களது நடிப்பு, அவர் ஒரு ‘நடிப்பு ராட்சசன்’ என்பதற்கான மற்றுமொரு சான்று.

முதல் சந்திப்பிலிருந்தே நல்லாவிற்கும் அன்பரசுக்கும், கொஞ்சம் கூட சரிப்பட்டு வரவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் அது தொடர்ந்துகொண்டே போவதால், அன்பரசுக்கு சிவம் மேல் வெறுப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. முதல் சந்திப்பில் சிவம் கையில் இருக்கும் வெள்ளரிக்காயைப் பார்த்து பைப் பாம்ப் வைத்திருக்கும் தீவிரவாதி என நினைப்பது, அரசைப் பார்த்து ‘தீவிரவாதிங்க என்னை மாதிரி அசிங்கமாலாம் இருக்கமாட்டாங்க, ரொம்ப அழகா இருப்பாங்க உங்களை மாதிரி’ என சிவம் நக்கலாக சொல்வது, தவறுதலாக அரஸ் கண்ணில் மிளகாய் பொடி விழுவது, சிவம் எச்சரித்தும் கேட்காமல் ஷவர் குழாய் தலையில் விழுந்து அரசுக்கு அடிபடுவது, வெயிட்டர் மீண்டுமொருமுறை தலையில் இடிப்பது, நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்திருத்து அரஸ் வரும்பொழுது ‘நல்ல வேளை... நீங்க ஆசைப்பட்ட மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல்ல ரூம் கிடைக்கல.. அங்கல்லாம் 5வது 6வது மாடியில ரூம் குடுத்திருப்பான்.. அங்கிருந்து விழுந்திருந்தா, என்ன ஆகுறது’ என சிவம் சொல்வது, சிவம் எச்சரித்தும் கேட்காமல் சார்ஜில் போட்டு தன் மொபைல் ஃபோனை அரஸ் வெடிக்க செய்வது, ஓட்டலில் பில்லிற்கு பணம் கட்ட அரஸின் ஷூக்களை சிவம் விற்பது என தொடர்ந்துகொண்டே இருக்கும் சண்டை, இரண்டாம் பாதியில் ‘முதலாளித்துவம் vs கம்யூனிசம்’ விவாதத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வது வரையிலும் தொடர்கிறது.

ஆனால், இந்த இருவருக்குள்ளுமான சண்டைகளும் விவாதங்களும், இந்த 3 நாள் பயணத்தில் A.அர்ஸ் சந்திக்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களும், அந்த ரயில் விபத்தும், சிறுவனின் மரணமும் அவருக்கு பல விஷயங்களை கற்றுத் தருகிறது. அதுவே, அவரை சிவம் விமான நிலையத்தில் சொன்னதைப் போல ‘முகத்தைப் பார்த்து கேரக்டரை சொல்லவே முடியாது... தீவிரவாதிகங்க அசிங்கமா இருக்க வேண்டிய அவசியமில்லை... நல்லவங்க அழகா இருக்க வேண்டிய அவசியமுமில்லை, சிவம் மாதிரி கூட இருக்கலாம்’ என அவர் வாயேலேயே சொல்ல வைக்கிறது. 
ஆம்புலன்சில் அந்த சிறுவன் இறக்கும் காட்சியில், சாவைப் பற்றியும் கடவுள் பற்றியும் மனிதம் பற்றியும் பேசிவிட்டு ‘A.அர்ஸ்... you are a good man’ என சிவம் சொல்லும் காட்சியில் இருவருக்குள்ளுமான இணக்கமும் நட்பும் பல மடங்கு கூடியிருக்கும். மிகச்சிறந்த வசனம் மற்றும் நடிப்பு என அந்த காட்சி, தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று!

நல்லசிவத்தின் பாத்திரத்தின் குணாதிசியங்களில் அந்த விபத்திற்கு முன்னும், பின்னும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும். ரொம்பவே துடிப்பான, கோபமிகுந்த சமூக ஆர்வலர் என்கிற நிலையிலிருந்து சற்றே தளர்ந்த ரொம்பவே பக்குவப்பட்ட மனிதராக மாறியிருப்பார். பூமியில் இந்த வாழ்க்கை நிலையானதல்ல, எதுவுமே உறுதி அல்ல, எது வேண்டுமானாலும் நடக்கலாம், வாழ்க்கை ஒரே நிமிடத்தில் மாறிப்போகலாம் என பல விஷயங்களை அவருக்கு அந்த விபத்து புரிய வைத்துவிடுகிறது. அதனால், அன்புதான் எல்லாவற்றிற்கும் மருந்து, மனிதநேயமே உலகத்தை மாற்றக்கூடிய சக்தி என்பதையும் உணர்ந்திருப்பார். 
அதே போல, படம் முழுக்க தனக்கு எந்த உணர்ச்சிகளும் செண்டிமென்ட்டும் இல்லை என்பதை போல தன்னை மிகவும் மனவலிமை உடையவர் போல காட்டிக்கொள்ளும் சிவம், அர்ஸ் தன்னிடம் ‘நீங்க எனக்கு அண்ணன் மாதிரி’ என சொன்னவுடன் சட்டென எமோஷனல் ஆகி ‘இதை ஏன் மொதல்லயே சொல்லல’ என குரல் உடைந்து நா தழுதழுக்க பேசுவார். அந்த காட்சியிலும் இருவரது நடிப்புமே அட்டகாசமாக இருக்கும்.

கொடூரமான விபத்தில் முகம் கோரமடைவது, மகள் திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டால் என பொய் சொல்லும் கந்தசாமி படையாட்சியின் வஞ்சம் என ஒரு புறமிருந்தாலும், நல்லசிவத்தை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி கவனித்துக்கொள்ளும் சிஸ்டர், மலை மேல் கடை வைத்திருக்கும் அக்கா என நல்லசிவத்துக்கு கிடைக்கும் புதிய உறவுகளுடன் ஃபிளாஷ்பேக் முடியும்பொழுது நல்லசிவம் புது மனிதனாக வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்க்கும்பொழுது பார்வையாளர்களாகிய நமக்கும் ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்படுகிறது.

15 ஆண்டுகள் கழித்தும் கூட, இன்றும் ‘அன்பே சிவம்’ கொண்டாடப்பட காரணம் – காலங்கள் தாண்டியும் பேசப்படுமளவிற்கு சொல்லப்பட்ட சில சித்தாந்தங்கள்.

மனிதநேயமும் அன்புமே கடவுள்

படத்தின் அடிநாதமே இதுதான். ‘முன்ன பின்ன தெரியாத பையனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே, அது தான் கடவுள்’, ‘ஒருத்தரை கொல்லணும்ன்னு வந்துட்டு, மனசை மாத்திக்கிட்டு மன்னிப்பும் கேட்குற மனுஷன் இருக்கானே... அதான் கடவுள்’ போன்ற வசனங்களும் அதையே சொல்கின்றன. படத்தில் ரத்த தானம் செய்ய சொல்லி வலியுறுத்தும் ஒரு காட்சியும் அற்புதமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் ரத்தம் குடுக்கலாம், ஒரு உயிரை காக்க ரத்த தானம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அப்படி எளிதாக சொல்வதைப் போன்ற காட்சியும் தமிழில் அதற்கு முன் வந்ததில்லை என்றே நினைக்கிறேன்.

கம்யூனிசம்

கம்யூனிசம் என்பது அரசியல் கொள்கையாகவோ அல்லது சித்தாந்தமாகவோ இளைஞர்களிடையேயும் மக்களிடையேயும் அதிகம் சென்றடையாத தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், கம்யூனிசம் பற்றிய வசனங்களையும் விவாதங்களையும் காண்பதே புதுமை தானே! ஒரு காட்சியில், “செகண்ட் கிளாஸ் டிக்கெட் தான் கிடைச்சிருக்கு... அந்த முழு டிரெயின்ல, ஃபர்ஸ்ட் கிளாஸே இல்லையாம்... பணம் குடுத்தா கூட, வசதி கிடைக்காத ஒரு நாடு இது… That’s India, for you” என்பார் மாதவன். அதற்கு பதிலளிக்கும் வகையில், “பணம் குடுத்தா எது வேணா எப்போ வேணா கிடைக்கும்ன்னு நெனைக்குறவங்க இருக்குற வரைக்கும்... That’ll be India, for you” என சொல்வார். அதற்கு “இப்போ.. சோவியத் யூனியன் இல்லைன்னா, கம்யூனிசமே இல்லைன்னு தானே அர்த்தம். அப்புறம் ஏன் அதைப் பத்தியே பேசிட்டு இருக்கீங்க?” என கேட்க, “இப்போ தாஜ் மஹால் இடிஞ்சு போச்சுன்னு வெச்சுக்கோங்க, நீங்கள்லாம் லவ் பண்றதை நிறுத்திடுவீங்களா? கம்யூனிசமும் அப்படித்தான், love மாதிரி அதுவும் ஒரு feeling. கார்ல் மார்க்ஸ் அதைப் பத்தி எழுதுறதுக்கு முன்னாடியே, பல பேருக்கு அந்த feeling வந்தாச்சு.” என பதிலளிப்பார். அதே போல, தெரு நாடகப் பாடலில் வரும் வரிகளும், ‘எலே மச்சி மச்சி’ பாடலில் ‘வாழ்க்கை புதையலப்பா, வலுத்தவன் எடுத்துக்கப்பா.. அவனவன் வயித்துக்குத்தான் வாழ்வது தப்பா?’ என்கிற மாதவனின் வரிகளிலும் அதற்கு அடுத்து ‘அடுத்தவன் வயித்துக்குள்ள, உன் உணவு இல்லையப்பா.. இளைச்சவன் பசிச்சிருந்தா, இந்த மண்ணு தாங்காதப்பா..’ என்கிற கமலின் வரிகளிலும் கூட கம்யூனிசமே பேசப்பட்டிருக்கும்.

உலகமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம்

படம் முழுக்க, கார்ப்பரேட் கம்பெனிகளையும் முதலாளித்துவ கொள்கைகளையும் சாடும் நிறைய கூர்மையான வசனங்கள் உண்டு. கமல் மாதவனைப் பார்த்து ‘வெளிநாட்டு கம்பெனிகளோட பொருட்களை டிவியில கூவி விக்குற selfish கூலி நீ’ என சொல்ல, ‘அது என் business.. அதைப் பத்தி, பேசாதீங்க’ என்பார். அதை கேலி செய்யும் வகையில், ‘சரி... பிசினஸ் பிசினஸ்ன்னு எல்லாத்தையும் தூக்கி குடுத்துட்டா எப்படி...? இப்போவே அவன் மஞ்சள், பாஸ்மதி அரிசி எல்லாம் தனதுன்னு சொந்தம் கொண்டாடுறான்… நீங்க பாட்டுக்கு காசு குடுக்குறான்னு குனிஞ்சு குனிஞ்சு சலாம் போட்டுட்டே இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்குறது முதுகுத்தண்டா இல்லை ரப்பர் துண்டான்னு சந்தேகம் வரும்ல?’ என சொல்வார்.

‘அன்பே சிவம்’ திரைப்படத்தின் உயிர் போல இருந்தது கமல்ஹாசன் அவர்களது நடிப்பே. அந்த மேக்-அப், ஒவ்வொரு வசனம் பேசும்பொழுதும் கழுத்தருகே வாய் துடிப்பது, வலது கால் குட்டையாக இருக்கும்படி நொண்டி நொண்டியே நடப்பது, ஒரு கையை மடக்கியே வைத்திருப்பது, பவர் கிளாஸ் பார்வைக்காக லென்ஸ் அணிந்தே நடித்தது என நடிப்பைத் தாண்டி, படம் முழுக்க அந்த தோற்றத்திற்காக அவரது மெனக்கெடலும் உழைப்புமே மலைக்க வைத்தது. இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதோ, அல்லது நடிப்பிற்காக கமல் அவர்களுக்கு தேசிய விருதோ கிடைக்காததும் ஆச்சர்யமே! ஆனால், அதே ஆண்டில் வெளிவந்த ‘பிதாமகன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தபொழுது அப்படத்தின் இயக்குனரும் கமல் ரசிகருமான பாலா ‘இந்த விருது அன்பே சிவம் திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும்’ என பெருந்தன்மையாக சொன்னார்.

கமலோடு ஒப்பிடுகையில் தனக்கு முக்கியத்துவம் குறைவு தான், தான் இரண்டாம் ஹீரோ போலத்தான் என தெரிந்தாலும் அதை ஒத்துக்கொண்டு, அதில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மாதவன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். ரொம்பவே சிறிய வேடமாக இருந்தாலும், மனதில் நிற்கும்படி பிரமாதமாக நடித்திருப்பார் உமா ரியாஸ். தமிழ் சினிமாவில் கிரண் நடித்த ஒரே படம் என்று கூட ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை சொல்லலாம், பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களின் டப்பிங் குரல் அந்த பாத்திரத்திற்கு இன்னும் அதிக இனிமை சேர்த்திருந்தது. மற்ற சின்ன சின்ன வேடங்களில் வந்த நாசர், சந்தான பாரதி, பவுன்ராஜ் போன்றோரும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தனர்.

படத்தின் ஒவ்வொரு பாடலிலும், பின்னணி இசையிலும் படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றிருந்தார் இசையமைப்பாளர் வித்யாசாகர். ‘யார் யார் சிவம்’ பாடலை இன்று கேட்டாலும், நம் உயிருக்குள் ஊடுருவி செல்கிறது. படத்தில் நிறைய முக்கிய காட்சிகளில் கலை இயக்கத் துறைக்கும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸிற்கும் நிறைய வேலை இருந்தது. ஒரிஸா வெள்ளம், ரயில் மோதல் விபத்து, கந்தசாமி படையாட்சியின் அலுவலகம், கமல் தங்கியிருக்கும் ஏரியா என படம் முழுக்க பெரிய பெரிய செட்கள் போடப்பட்டு தத்ரூபமாக எடுக்கப்பட்டன. கமல் அவர்களது படங்கள் என்றாலே ‘விஸ்வரூபம்’ ஆஃப்கானிஸ்தான் செட், ‘நாயகன்’ தாராவி செட், ‘ஹே ராம்’ செட், ‘விருமாண்டி’ பட ஜெயில் மற்றும் ஜல்லிக்கட்டு மைதான செட் என அவரது படங்களின் கலை இயக்கம் பெரிதும் பேசப்படும்; அப்படி, இந்த படத்திலும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கதை, திரைக்கதை, நடிப்பு, படம் உருவாக்கப்பட்ட விதம் என எல்லா வகையிலும் ஒரு குறையில்லாத படமாக இருந்த ‘அன்பே சிவம்’ ஏனோ வணிகரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், இன்றும் கூட டிவியிலும் torrentsஇலும் DVDயிலும் அதிகம் பார்க்கப்பட்டு மக்களால் பாராட்டப்பட்டும், ‘இந்த படம் ஏன்யா ஓடல?’ என கேட்கப்பட்டும் கொண்டிருக்கிறது! இன்று வரை, தமிழ் சினிமாவில் ‘அன்பே சிவம்’ போல மனிதாபிமானம் பற்றியோ அன்பை பற்றியோ இவ்வளவு அற்புதமாக பேசிய வேறெந்த திரைப்படமும் வரவே இல்லை என்பதே உண்மை!


நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...