போதை அடிமைகளை குறிவைக்கும் தீவிரவாத குழுக்கள்
ஆல்பர்ட் ஜான்சன் (27) கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போது, அவரது தகப்பனார், யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத காரியத்தைச் செய்தார்.
சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆல்பர்ட் ஜான்சனின் தகப்பனார், அவரது மகனை (ஆல்பர்ட் ஜான்சனை) 2011ல் போலீசில் பிடித்துக் கொடுத்தார். மாணவ பருவத்திலேயே ஆல்பர்ட் ஜான்சன் போதைக்கு அடிமையானார்.
இந்த பழக்கத்தில் இருந்து விடுபட வைக்க செய்த முயற்சி தோற்றுப் போன பிறகு, வேறு வழியில்லாமல் போலீசார் வசம் ஒப்படைத்தார்.
கிழக்கு இம்பாலில் உள்ள போதை புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆல்பர்ட் ஜான்சன் கூறுகையில், “தினசரி வேலை முடிந்து வந்தவுடன் அவர் என்னை அடிப்பார். எனது போதை பழக்கம், அவருக்கு கௌரவ குறைச்சலாக இருப்பதாக நினைத்தார்.
மற்ற தகப்பனார்களை போலவே, அவரும் சிறையில் அடைத்தால், எனது போதை பழக்கம் நீங்கி விடும் என்று கருதினார் என்று நினைவு கூறுகின்றார் ஆல்பர்ட் ஜான்சன். மணிப்பூர் மாநிலத்தில் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் ஹெச்.ஐ.வி.,நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதே போல் தனது மகனும் ஹெச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டு விடுவான் என்று அவரது தகப்பனார் பயந்து போயுள்ளார்.
ஆல்பர்ட் ஜான்சன் தகப்பனார் கருதியது போல் சிறைச்சாலை குற்றவாளிகளை திருத்தும் இடமாக இல்லை.
ஆல்பர்ட் ஜான்சன் சிறையில் தீவிரவாதியுடன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2012ல் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, மணிப்பூரில் உள்ள மிக ஆபத்தான தீவிரவாதிகள் குழுவில் ஐக்கியமானார். அந்த தீவிரவாத குழுவின் பெயர் ‘கன்கிலியாக் மக்கள் புரட்சி படை’ [People’s Revolutionary Party of Kangleipak- – PREPAK]. இந்த தீவிரவாத குழுவில் ஆல்பர்ட் ஜான்சன் கற்றுக் கொண்ட முதல் பாடம் மிரட்டல் கடிதம் எழுதுவது.
“நான் வர்த்தகர்கள் போன்றவர்களுக்கு மிரட்டி பணம் கேட்டு கடிதம் எழுதுவேன். இதை கூரியர் மூலம் அனுப்புவோம். மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்தால், அதில் 10 சதவிகிதம் எனக்கு கொடுப்பார்கள்” என்று கூறுகின்றார் ஆல்பர்ட் ஜான்சன். இவ்வாறு கிடைக்கும் பணத்தை போதை மருந்து வாங்க பயன்படுத்தியுள்ளார்.
“சிறையில் அடைத்தால் போதைக்கு அடிமையானவர்கள் திருந்தி விடுவார்கள் என்ற பலர் நினைக்கின்றனர். இது மிக தவறான எண்ணம்.
போதை பழக்கத்தில் இருந்து விடுபட பல பெற்றோர், அவர்களது பிள்ளைகளை சிறையில் அடைக்கின்றனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்படுபவர்களில் பெரும்பாலோரை தீவிரவாத இயக்கங்கள் சேர்த்துக் கொள்கின்றன” என்று நோலினி காந்தா கூறுகின்றார்.
இவர் கம்யூனிட்டி நெட்வொர்க் பார் எம்பவர்மென்ட் என்ற அமைப்பை சேர்ந்தவர். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் போதை தொடர்பான வழக்குகளில் 250 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கன்கிலியாக் மக்கள் புரட்சி படை ஆல்பர்ட் ஜான்சனுக்கு கொரில்லா போர் பயிற்சி அளித்தது. ஆனால் அவரது உடல்நிலையை கருதி, இதில் இருந்து விலக்கு அளித்தது. அதற்கு பதிலாக இம்பாலுக்கு அனுப்பி பணக்காரர்களை மிரட்டி பணம் பறிக்கவும், தீவிரவாத குழுவிற்கு ஆட்களை சேர்க்கும் பொறுப்பை அளித்தது.
இவரை போலீஸ் 2015ல் கைது செய்து சிறையில் அடைத்தது. நோயாளியாக உள்ளதற்காகவும், ஹெச்.ஐ.வி தொற்று இருக்கும் சாத்தியக்கூறு இருப்பதால், ஜாமீனில் வெளியே அனுப்பியது. தனக்கு பரிசோதனையில் ஹெச்.ஐ.வி தொற்று இல்லை என்பது தெரிய வந்தது என்று ஆல்பர்ட் ஜான்சன் கூறுகின்றார்.
போதை புனர்வாழ்வு மையத்தின் கண்காணிப்பாளர் இரான்டனா சிங், இவர் மற்றவர்கள் பயன்படுத்திய ஊசியை போதை மருந்து ஏற்றிக் கொள்வதற்காக பயன்படுத்தியுள்ளதால், ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் கன்கிலியாக் மக்கள் புரட்சி படை போன்ற தீவிரவாத குழுக்கள், ஹெச்.ஐ.வி நோய், போதைக்கு அடிமையானவர்களை கவனித்து, அவர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கின்றன.
லாய்ஸ்ராம் தீபக் (23) போதைக்கு அடிமையானவர் அல்ல.
இவருக்கு அவரது பெற்றோரிடம் இருந்து ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்டது. 2002ல் தந்தையை பறிகொடுத்தார். அதற்கு அடுத்த வருடம் தாயாரையும் பறிகொடுத்தார்.
அதன் பிறகு தனிமை வாழ்க்கை. மூன்று வருடத்திற்கு முன், மக்கள் விடுதலை குழு (People’s Liberation Army) என்ற தீவிரவாத குழுவிடம் இருந்து, இவருக்கு கடிதம் வந்தது. அந்த கடிதத்திற்கு நான் பதில் எழுதவில்லை. அந்த குழுவைச் சேர்ந்த சிலர், எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டும்.
அதிக அளவு பணமும், நல்ல வேலை கொடுப்பதாகவும் கூறினார்கள்.
இதனால் சமூகத்தின் புறக்கணிப்பில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்கள். நான் தனிமையில் இருப்பதால், அவர்கள் கூறிய காரணங்கள் எனக்கு பிடித்தது. ஆனால் பாதுகாப்பு படையினர் பிடித்து விடுவார்கள் என்பதால் பயந்தேன்” என்று கூறுகின்றார் லாய்ஸ்ராம் தீபக்.
மணிப்பூர் எல்லை பகுதியில் இருக்கும் அண்டை நாடான மியான்மரில் இருந்து மக்கள் விடுதலை குழு இயங்குகின்றது.
இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் லாய்ஸ்ராம் தீபக்கிற்கு சுமார்ட் போன், லேப்டாப், மோட்டார் பைக், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். “அவர்கள் என்னை அவர்களது தீவிரவாத குழுவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்தனர்.
நான் அவர்களிடம் இதை முதலில் நிறுத்துங்கள். நான் சேரமாட்டேன் என்று கூறியதற்கு பிறகு, அவர்கள் எனக்கு போன் செய்வதை நிறுத்திக் கொண்டனர்” என்று கூறுகின்றார் லாய்ஸ்ராம் தீபக்.
தீபக் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து கஷ்டகாலம் ஆரம்பித்து விட்டது. “நான் பள்ளியை விட்டு நின்றுவிட்டேன். தற்போது எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மட்டுமே என்னை வந்து பார்க்கின்றார். நான் எனது இறுதி நாளை எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். ஒருவேளை ஒவ்வொருவருமே அந்த நாளுக்காக காத்திருக்கலாம்” என்று கூறுகின்றார் லாய்ஸ்ராம் தீபக்.
மணிப்பூர் மாநிலத்தில் சேனாபதி, தமிலாங், சுர்சான்பூர், சன்டால், தொவ்பால், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான ஆண்கள் தீவிரவாத குழுக்களில் சேருவதாக கூறப்படுகிறது.
கிழக்கு இம்பாலில் உள்ள போதை புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேர் தீவிரவாத குழுக்களில் இணைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். இதை விட அதிகமானோர் சேர்ந்துள்ளதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏன் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பவர்கள் தீவிரவாத குழுக்களில் சேர்கின்றனர் என்ற கேள்விக்கு, இவர்கள் தீவிரவாத குழுக்களில் சேர்வதற்கு முக்கிய காரணம் பணம் கிடைக்கும் என்பதால் அல்ல. இவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுகின்றனர்.
மணிப்பூரில் இவர்களை மக்கள் சாபமாக கருதுகின்றனர்.
இதுவே இவர்கள் தீவிரவாத குழுக்களில் அடைக்கலம் ஆவதற்கு காரணம் என்று மக்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கும் தன்னார்வ தொண்டர்கள் கூறுகின்றனர்.
தொவ்பால் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் தோபி ஓனாம். இந்த பெண்மணியும் ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானவர்.
இவர் மருந்து, நல்ல வசதியான வாழ்க்கையால் சமாளித்துக் கொள்கின்றார். இவர் இதே நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவி செய்து வருகின்றார்.
பிசான்பூரைச் சேர்ந்த பிமலா தேவிக்கு (36) 2006ல் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது தெரிந்தவுடன், அவரது கணவர் வீட்டில் இருந்து விரட்டப்பட்டார்.
இவரது கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இவரிடம் இருந்து பிமலா தேவிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.
“எனது மாமியார் தனது மகனுக்கு போதை பழக்கம் இருப்பதை திருமணத்திற்கு முன்பு மறைத்துவிட்டார். எனது கணவர் 2004ல் இறந்து விட்டார்.
எனது கணவர் இறப்பிற்கு நானே காரணம் என்று குற்றம் சுமத்தி என்னை வீட்டில் இருந்து விரட்டினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். எனக்கும் நோய் தொற்று இருப்பது தெரிந்தவுடன், ஒரேயடியாக வீட்டை விட்டு விரட்டி விட்டனர் என்று கூறும் பிமலா தேவி, தற்போது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். இவரது மகளுடன் இவரை முற்றத்தில் ஒதுக்கு புறமான இடத்தில் தங்க வைத்தனர். இவர் கணவர் வீட்டாற் மீது வழக்கு தொடர்ந்தார்.
சென்ற வருடம் இவரது கணவர் சொத்தை பிமலா தேவிக்கு கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மணிப்பூர் மாநில அரசு ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என தெரிவிக்க மறுக்கின்றது. கம்யூனிட்டி நெட்வொர்க் பார் எம்பவர்மென்ட் அமைப்பை சேர்ந்த நோலினி காந்தா, தங்கள் அமைப்பிடம் அரசு பகிர்ந்து கொண்ட தகவல்படி 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றார்.
ஆனால் அரசு கூறுவதை விட பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கூறுகின்றார்.
கணவரிடம் இருந்து ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நயதோபி ஓனாம், “ திருமணத்திற்கு முன் நோய் தொற்று இருப்பதை தெரிவிக்காத காரணத்தினால், அவரது மனைவியும் மூன்று அல்லது நான்கு குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுவே மணிப்பூர் மாநிலத்தின் யதார்த்த நிலை என்று தெரிவித்தார்.
மணிப்பூர் மக்கள்நல (சுகாதார) துறை இயக்குநர் பி.கே.சிங், “ தற்போது நிலைமை மாறியுள்ளது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு பல புனர்வாழ்வு மையங்களை அமைத்துள்ளது. இவை நன்கு செயல்படுகின்றன.
முன்பு ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களை கிராமத்தினர் மரத்தில் கட்டி வைத்தனர் என்று தெரிவித்தார். தீவிரவாத இயக்கங்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட எத்தனை பேரை, அவர்களின் இயக்கத்தில் சேர்த்துள்ளன என்பது பற்றிய விபரம் தெரியாது என்றும் சிங் தெரிவித்தார்.
மணிப்பூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கெய்சம் பிரதீப் குமார், “நாங்கள் பெரிய அளவிலான சவாலை எதிர் கொள்ள வேண்டியதுள்ளது.
ஒரு புறம் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் முறைதவறிய செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதை நிறுத்த வேண்டியதுள்ளது. மற்றொரு புறம் அவர்களின் செக்ஸ் உரிமையையும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் உரிமையையும் பாதுகாக்க வேண்டியதுள்ளது.
இவை இரண்டும் ஒன்றுக் கொண்று முரண்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகள் உட்பட ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மூன்று தலைமுறையினர் உள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டு வெளியே தெரியாமல் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் உள்ளனர்.
இவர்கள் தொடர்ந்து புறக்கணிப்புக்கு ஆளாவதுடன், யாருடைய பராமரிப்பும் இன்றியும் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இது சமூக நெருக்கடியை உண்டாக்குகிறது.
தீவிரவாத இயக்கங்கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வதால் நிலைமை மோசமாக மாறிவருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீட்க முடியாத நெருக்கடி உண்டாகும் என்று” என்று அவர் தெரிவித்தார்.
- நன்றி: ரபி பானர்ஜி,
தி வீக் வார இதழில் .