bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 19 ஏப்ரல், 2017

சேவைக் கட்டணம் தனியார்மயத்தின் மற்றொரு முகமூடி !

ழாவது ஊதியக் குழு பரிந்துரைத்திருக்கும் ஊதிய உயர்வைத் தனது ஊழியர்களுக்குத் தரப் போவதாக அறிவித்திருக்கும் மைய அரசு, அதனால் ஏற்படும் கூடுதல் செலவை மக்கள் தலையில் சுமத்த முயலுகிறது. குறிப்பாக, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், நிமான்ஸ் உள்ளிட்ட பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் – என மைய அரசின் நிதிஉதவி பெறும்  600-க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் அதிக செலவில் 30 சதவீதத்தை அந்தந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டுதான் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில் மைய அரசின் சுற்றறிக்கையைக் காரணமாக வைத்து  இன்னொரு மடங்கு கல்விக் கட்டணத்தை உயர்த்துவது எளிதாகிவிட்டது.
டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெறுவதற்காக முதல்நாள் இரவே வந்து, அம்மருத்துவமனையின் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் படுத்துறங்கும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும். (கோப்புப் படம்)
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால், பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மனநல மருத்துவமனைக்குக் கூடுதலாக 50 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இக்கூடுதல் செலவில், 15 கோடி ரூபாயை அம்மருத்துவமனையே ஈடுகட்ட  வேண்டுமெனில், நோயாளிகளிடமிருந்து இந்தத் தொகையைப் பிடுங்குவதைத் தவிர வேறுவழியில்லை. “நோயாளிகள் பெறும் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையென்றால், மருத்துவ வசதிகளுக்குச் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு, அதனை நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியிருக்கிறது, அம்மருத்துவமனை நிர்வாகம். கட்டணம் வசூலிக்கவில்லையென்றால், நோயாளிகளுக்கு இப்பொழுது கிடைக்கும் அளவில்கூடத் தரமான சிகிச்சை கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பொது மருத்துவமனைகளில் முன்பு போல அனைத்து நிலைகளிலும் இலவச சிகிச்சை இப்பொழுது தரப்படுவதில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், பரம ஏழை நோயாளிகளாக இருந்தாலும், காப்பீடு அட்டை இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் அறுவை சிகிச்சைக்குத் தேதி தரப்படுகிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் நோய்களுக்கான மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதில்லை. அவற்றை வெளியே வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவர்களே சீட்டு எழுதிக் கொடுத்துவிடுகின்றனர். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட முக்கியப் பரிசோதனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, நோயாளிகளிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. இவையல்லாமல், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் ஏற்பாடுகள், பார்வையாளர் கட்டணம் என அரசு மருத்துவமனைகள் வசூல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்ற மைய அரசின் சுற்றறிக்கை, இனி இலவச மருத்துவமே கிடையாது என்ற நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். ஆசிரியர்களுக்குத் தரும் சம்பளத்தின் ஒருபகுதியை மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றால், இனி ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படும்.
கலெக்சன் காட்டவில்லையென்றால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் அன்றைக்கான கூலி கிடையாது என்பது தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் எழுதப்படாத நடைமுறையாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், அ.தி.மு.க. அரசு மோடி அரசிற்கு முன்னோடியாக உள்ளது.
சம்பள உயர்வை ஈடுகட்ட, பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என இன்று உத்தரவிடும் மைய அரசு, நாளை அனைத்துச் சேவைகளுக்கும் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறத் தயங்காது. ரயில்வேயில் கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு ரயில் கட்டண முறை இந்த அபாயத்திற்கான முன்னறிவிப்பு.
அரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.
                                                                                                                                                       -அழகு 
ன்றி:புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...