செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஆபத்தில் இந்தியப் பொருளாதாரம்!

ஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி

இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இறக்குமதி குறைவாகவும், ஏற்றுமதி அதிகமாகவும் இருக்க வேண்டும். 
இதுவொரு முக்கியமான அம்சம். 

ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான இந்தியாவின் ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து இருப்பதுடன், இறக்குமதியும் பலமடங்கு உயர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா மொத்தம் 27.95 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்துள்ளது. 

இது சென்ற ஆண்டின் செப்டம்பர் மாத ஏற்றுமதி மதிப்பை விட 2.15 சதவிகிதம் குறைவாகும். அதேநேரம், செப்டம்பர் மாத இறக்குமதி 10.45 சதவிகிதம் அதிகரித்து 41.9 பில்லியன் டாலராக உள்ளது. 
தெளிவாகக் குறிப்பிட வேண்டுமானால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இறக்குமதி 16.16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.இதன்மூலம் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம்- அல்லது வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 6 மாதங்களில் மட்டும் 943.2 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக செப்டம்பரில் மட்டும் 139.8 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 


கடந்த 2017-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இதே பணவீக்கம் 3.14 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலை செப்டம்பர் மாதத்தில் 0.21 சதவிகிதம் குறைந்துள்ளது. 

குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 18.14 சதவிகிதம் குறைந்துள்ளது. 
மேலும், காய்கறிகளின் விலையும் 3.83 சதவிகிதம் சரிந்துள்ளது. 
வெங்காயத்தின் விலை 25.23 சதவிகிதமும், பழங்களின் விலை 7.35 சதவிகிதமும் குறைந்துள்ளது. 

உருளைக்கிழங்கு விலையும் (80.13 சதவிகிதம்), கச்சா பெட்ரோலியத்தின் விலையும் (47.83 சதவிகிதம்) மட்டுமே உயர்ந்துள்ளன.

இவற்றில் எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான பிரிவில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவின் விலை 33.51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

பெட்ரோல் விலை 17.21 சதவிகிதமும், டீசல் விலை 22.18 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 

உற்பத்திப் பொருட்களுக்கான பிரிவில் சர்க்கரை விலை 12.91 சதவிகிதம் குறைந்துள்ள அதேவேளையில், உலோகங்களின் விலை 12.78 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

எனினும், மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலத்தில் இருந்ததை (3.14 சதவிகிதம்) விடவும் உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் 5.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

திங்கள், 15 அக்டோபர், 2018

கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிடுங்கள்..

அதிகம் புரத சத்துப் பெறுங்கள்!
இந்த புகைப்படத்தைப் பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும். 
ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? 
அச்சம் வேண்டாம்… 
எல்லா ரொட்டிகளும் இந்த வகையைச் சேர்ந்ததில்லை. 
இந்த 'ஸ்பெஷல்' ரொட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சாமன்கள் வைத்திருக்கும் அறையிலும், அசுத்தமான இடங்களிலும் சுற்றும் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றும் நிலையில், எப்படி அதை சாப்பிடுவது என்று தோன்றுகிறதா? சரி இந்த சிந்தனை எப்படி தோன்றியது?
ஊட்டச்சத்து குறைபாடு, உலகில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கான தீர்வாக விலங்குகளின் புரதம் இருக்குமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் குழு இதை கண்டுபிடித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2050ஆம் ஆண்டுவாக்கில், உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக (970 கோடி) இருக்கும்.
நமது அன்றாட உணவில் பூச்சிகளை சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மக்களின் புரதச்சத்து தேவைக்கு பூச்சிகளின் புரதங்கள், சுலபமான மாற்றாக இருக்கும் என்பதோடு அவை கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கும்.
தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் மக்களின் உணவின் ஒரு பகுதியாக பூச்சிகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
ஆனால் புகைப்படத்தில் காணப்படும் ரொட்டியில் நமது சமையலறையில் வழக்கமாக காணப்படும் கரப்பான் பூச்சியால் செய்யப்பட்டதில்லை. இது வேறொரு வகை கரப்பான் பூச்சிகளால் செய்யப்பட்டது. வட ஆஃப்பிரிக்காவில் காணப்படும், வெட்டுக்கிளி கரப்பான் (Locust Cockroach, Nophita cinera) வகையைச் சேர்ந்த பூச்சியால் செய்யப்பட்ட ரொட்டி இது.

எளிதாக வளரக்கூடியவை என்பதோடு, இனப்பெருக்கமும் துரிதகதியில் நடைபெறும் என்பதும் வெட்டுக்கிளி கரப்பான் பூச்சியின் சிறப்பம்சம்.
ஆனால் உலகில் ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள் இருக்கும் நிலையில், கரப்பான் பூச்சியை மட்டும் சாப்பிடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கேள்வி எழுந்தால் அதற்கான பதிலும் உண்டல்லவா? கரப்பானில் இருக்கும் புரதம், சிவப்பு இறைச்சி எனப்படும் மாட்டு இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட சிறந்தது. சிவப்பு இறைச்சியில் 50 சதவிகித புரதம் இருக்கிறது. ஆனால், கரப்பானில் 70 சதவிகிதம் புரதம் இருக்கிறது.
லட்சக்கணக்கான ஆண்டுகளாக உலகில் இருக்கும் கரப்பான்கள், முழு பரிணாம வளர்ச்சியையும் கடந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள ஃபெடரல் யுனிவர்சிடி ஆஃப் ரியோ கிராண்டே (Federal University of Rio Grande) பல்கழைகத்தில் உணவுத்துறை பொறியாளராக பணிபுரியும் ஆந்த்ரீசா ஜெந்த்ஜென் இவ்வாறு கூறுகிறார்: "வளிமண்டலத்தில் பொருந்துவதற்கும், லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்து பூமியில் இருப்பதற்கும் தேவையான சில சிறப்பு குணங்களைப் பெற்றுள்ளவை கரப்பான்கள்."
லாரென் மெனேகன் என்ற உணவு பொறியியலாளருடன் இணைந்து பணியாற்றிய ஜெந்த்ஜென், கரப்பான் பூச்சிகளை உலர்த்தி, அதை மாவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். புரதச்சத்து மிகுந்த இந்த மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 51 அமெரிக்க டாலர்கள் (அதாவது, 3,700 ரூபாய்).

ஆனால் ரொட்டி தயாரிப்பதற்கு கரப்பன் பூச்சி மாவின் 10% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதி உள்ள மாவு வழக்கமாக நாம் பயன்படுத்தும் கோதுமை மாவுதான்.
பிபிசி செய்தியாளரிடம் பேசிய ஜெந்த்ஜென், "ஓரளவு கரப்பன் பூச்சி மாவை கோதுமை மாவில் கலந்ததும், அந்த மாவில் 133% புரதம் அதிகரித்திருந்தது" என்று சொன்னார்.
வீட்டில் வழக்கமாக 100 கிராம் மாவில் தயாரிக்கும் ரொட்டியில் 9.7 கிராம் புரதம் இருக்கும். அத்துடன் ஒப்பிடும்போது, சிறிதளவு கரப்பான் மாவு கலந்த அதே அளவு மாவில் புரதம் 22.6 கிராமாக அதிகரித்துவிட்டது.
"இந்த கலவையில் உணவு தயாரிக்கும்போது, கொழுப்புச் சத்து அல்லது எண்ணெய் சத்து 68% குறைகிறது" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புரதம் அதிகம், கொழுப்பு குறைவு என்பதெல்லாம் சரி, சுவை எப்படி இருக்கும்?
சாதாரண மாவில் தயாரிக்கப்பட்ட உணவைப் போன்ற சுவையே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிலளிக்கிறார்கள்.

"சுவை, மணம், நிறம், தரம் என நன்றாக பரிசோதித்தோம். சாதாரண ரொட்டிக்கும் இதற்கும் எந்தவித வித்தியாசமுமே இல்லை. சிலர், இதில் வேர்க்கடலை வாசனை இருப்பதாக தோன்றுவதாக கருத்துத் தெரிவித்தனர்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்கள் தங்கள் உணவில் புழு-பூச்சிகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பது தொடர்பான தகவல்களை பற்றி ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர் இனோ வியிராவிடம் கேட்டறிந்தோம். "வெட்டுக்கிளி, குளவி, அந்துப்பூட்டிகள், நாவல் பூச்சிகள், எறும்புகள், பட்டாம்பூச்சி, பட்டு புழுக்கள், தேள்கள் என பல வகை புழு பூச்சிகளை நாம் உட்கொள்ளலாம், அவற்றை நமது உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம். அதில் தவறேதும் இல்லை" என்று அவர் சொல்கிறார்.
"புழு-பூச்சிகளை உணவாக ஏற்க நமக்கு தயக்கம் இருப்பதற்கு காரணம் நமது கலாசார சிக்கல்கள் தான்" என்கிறார் அவர்.
"ஒரு கிலோ மாமிசத்தை தயாரிக்க 250 சதுர கிலோ மீட்டர் நிலம் தேவை. 
இதுவே ஒரு கிலோ பூச்சி மாமிசம் வேண்டுமானால் அதற்கு 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு போதுமானது. அது மட்டுமல்ல, நீரின் தேவையும் குறைகிறது. 

ஏனெனில் ஒரு கிலோ பூச்சி மாமிசத்திற்கு தோராயமாக ஆயிரம் லிட்டர் நீர் தேவை என்று சொன்னால், அதுவே ஒரு கிலோ இறைச்சிக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை" என்று சொல்கிறார் பேராசிரியர் இனோ.
மேலும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுக்களையும் ஏற்படுத்தாதவை பூச்சி உணவுகள். உணவாக பயன்படுத்தப்படும் பூச்சிகள் (95 இனங்கள்), பிரேசிலில் காணப்படுவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உணவில் பூச்சி வகைகளை சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிரது. உலகின் இரண்டு கோடி மக்களின் உணவில் பூச்சியும் ஒரு பகுதியாகி இருப்பதாக ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.
பூச்சிகளை சேர்த்து செய்யும் கேக், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் எண்ணெய் தயாரிக்கும் பணியில் லாரன் மெனெகன் மற்றும் ஜெந்த்ஜென் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தாலும், கரப்பான் பூச்சி மாவு கலந்த ரொட்டி வகைகள் இன்னும் பிரேசிலில் சில்லறை விற்பனைக்கு வரவில்லை. பூச்சிகளை உண்பதற்கு இதுவரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை, ஆனால் விலங்குகளுக்கு பூச்சி கலக்கப்பட்ட உணவுகளை கொடுக்கலாம்.

ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் பூச்சிகளை உண்பதற்கு ஊக்கமளிக்கின்றன. ஸ்பெயினின் கரேஃபோர் சூப்பர்மார்கெட்டில் வெட்டுக்கிளி மற்றும் லார்வா பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரிட்டனில் வறுக்கப்பட்ட மற்றும் பொடியாக்கப்பட்ட பூச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
குளோபல் மார்கெடிங் இன்சைட்ஸ் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூச்சிகளின் வியாபாரம் சுமார் 70 கோடி அமெரிக்க டாலர்களை எட்டிவிடும் என்று கூறுகிறது.
சரி, கரப்பான் பூச்சி மாவு சேர்த்து செய்யப்பட்ட கேக் வேண்டுமா? அல்லது திண்பண்டம் வேண்டுமா? சொல்லுங்கள்…
கட்டுரை உதவி:பிபிசி தமிழ்

மோடியின் முப்பதாயிரம் கோடி முறைகேடு.

அம்பானிக்கு மோடி வாரிக்கொடுத்த மக்கள் பணம்
 முப்பதாயிரம் கோடிகள்.
அம்பலமான  ஊழல்..!
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய், ரிலையன்ஸ் குழுமக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல் ரக’ போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது.
ரபேல் விமானங்களை வாங்குவது காங்கிரஸ் அரசின் முடிவுதான் என்றாலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அதில் ஏராளமான மாற்றங்களை செய்தது.முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவு செய்து- அதில் 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் பெற்றுக் கொள்வது, ஏனைய 108 விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொள்வது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், மோடி அரசோ மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவதென்றும், அவற்றையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்வதென்றும் ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது.
போர் விமானங்களைத் தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இருந்த ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்’ நிறுவனத்தை கழற்றிவிட்டு, அந்த இடத்தில், திடீரென அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைத் திணித்தது.
காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரக விமானத்திற்கு, 1670 கோடி ரூபாயை அள்ளி இறைத்தும் மோடி அரசு தாராளம் காட்டியது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தின.
526 கோடியாக இருந்த, ஒரு விமானத்தின் விலை, 1670 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி? 
அதேபோல எச்ஏஎல் நிறுவனம் இடம்பெற்றிருந்த இடத்தில் ரிலையன்ஸ் எப்படி வந்தது? 

75 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, ஆரம்பித்து 12 நாட்களே ஆன ரிலையன்ஸை, ‘டஸ்ஸால்ட்’ தனது கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டிய தேவை என்ன? 
போர் விமான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 108 விமானங்களை இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று முன்பு ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவது; அவற்றையும் பறக்கும் நிலையிலேயே வாங்கிக் கொள்வது; என்று ஒப்பந்தத்தை மாற்றியது ஏன்? 
இந்தியாவில் ஒரு விமானமும் தயாரிக்கப்படாது எனும்போது, ‘மேக் இன் இந்தியா திட்டம்’ எதற்காக? அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்தது எதற்காக? 
என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.
ஆனால், ஒன்றுக்கும் மோடி அரசு உருப்படியான பதில் அளிப்பதாக இல்லை. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று தப்பிக்கப் பார்த்தது.
ஆனால், இந்திய அரசு கூறியதன் பேரிலேயே ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்தார். 
அவரைத் தொடர்ந்து ‘அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற இந்தியப் பிரதமரின் முன்நிபந்தனையின் பேரில்தான் ரபேல் ஒப்பந்தமே கையெழுத்தானது ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லோய்க் சிகாலன் என்பவரும் உறுதிப்படுத்தினார். 
இதுதொடர்பாக பிரான்சின் ‘மீடியாபார்ட்’ என்ற புலனாய்வு செய்தி நிறுவனம் விரிவான செய்தியை வெளியிட்டது.
அந்தச் செய்தியை வழிமொழிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி வைத்த முன்நிபந்தனை அடிப்படையில், 30 ஆயிரம் கோடி ரூபாயும் ‘டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ்’ கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

உள்ளுக்குள் அதிர்ச்சி இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம்போல அதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார். ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவிகிதம் (ரூ. 3 ஆயிரம் கோடி) மட்டுமே டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினார். 

டஸ்ஸால்ட் நிறுவனமும் அதற்கு ‘ஆமாம்’ போட்டது.
ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6 ஆயிரத்து 600 கோடி முதலீடு பெறப்பட்டதாக அறிவித்தது.
 இது, நிர்மலா சீத்தாராமன் மற்றும் டஸ்ஸால்ட் நிறுவனம் கூறியதைவிட 2 மடங்கு அதிகத் தொகை என்பதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த குழப்பம் தீர்வதற்கு உள்ளாக, ரிலையன்ஸ் நிறுவனனே தனது குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடியை முதலீட்டு பங்காக பெற்றிருப்பதாக கணக்கில் காட்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரபேல் விமானக் கொள்முதல் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி என்ற நிலையில், அதில், 50 சதவிகிதத் தொகையை, அதாவது ரூ. 30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். 
இதன்படி ரூ. 30 ஆயிரம் கோடி நாட்டின் பிற பாதுகாப்பு தளவாட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால், இந்த தொகை முழுவதும் அப்படியே ரிலையன்ஸ் குழுமத்திற்கு போயிருப்பது அவர்கள் அளித்த அறிக்கை மூலமே அம்பலமாகி இருக்கிறது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

உண்மை வெளிவருமா?

கீழடியும், ஸ்டெர்லைட் படுகொலைகளும்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் முதல் தனது விசாரணையை நடத்திவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையிலான போலீஸார் விசாரணையையும் நடத்தினர். இந்நிலையில், 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட 173 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 15-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.
இந்தச் சூழ்நிலையில், சி.பி.ஐ துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கினர்.
கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த துப்பாக்கி சூடும்,அதில் 13 பேர் இறந்ததும் தெரியாமல் தொலைக்காட்சியில் அது.இது,எது பார்த்துக்கொண்டிருந்ததாக கூறும்  எடப்பாடி எடுபிடி அரசோ  ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது அவசியம் இல்லாத ஒன்று. 

இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்; மீண்டும் தமிழக அரசே விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்” என்று  உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
காரணம் துப்பாக்கி சூடு நடத்த ஆணையிடும் அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியர் .அருகில் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இருக்கையில் 13 கிமீ தூரத்தில் உள்ள துணை வட்டாசியர் சுட ஆணை கொடுத்த அசிங்கம் தெரியுமே?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு காமிரா மக்கள் வரும் முன்னரே கீழ்நோக்கி தொங்கிக்கொண்டிருந்த்தும்,வாயில் கண்ணாடிகள் உள்ளிருந்து உடைக்கப்பட்டதும் தெரிந்து விடும்.

நல்ல காவல் அலுவலர்களும் இருந்தனர்  

மக்கள் திரள் வரும் முன்னரே அரசு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதும்,கழிக்கப்பட்ட கோப்புகள் தீவைக்கப்பட்டதும் தெரிந்து விடுமே?
ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்பதும்,அதற்கு அன்று 144 தடை விதிக்கப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷுக்கு நன்கு தெரியும் .144 தடை போட்டதே அவர்தான்.
பின் இவ்வளவு சட்டம் ஒழுங்கு பத்தாஹ்ட்டம் உள்ள நிலையில் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்காமல் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தலைமையிடத்தை விட்டு ஓட்டப்பிடாரம்,விளாத்திகுளம் என்று திடீர் முகாம் சென்றது ஏன்?
அப்படியே இருந்தாலும் காவல்துறை கூறியபடியே வரும் வழியெல்லாம் கலவரம் செய்து சமூக விரோதிகள்,நக்சலைட்டுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்க வரும் போது அருகில் உள்ள அலுவலகத்திற்கு ஏன் அவசரமாகத்திரும்பி வரவில்லை.

அருகிலேயே மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர் இருக்கையில், பேக்ஸ், அலைபேசி ,நேரடி காணொளி (வீடியோ கான்பரன்ஸ் வசதிகள் முதல்வர்,தலைமைச்செயலாளர் போன்ற அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நிலையை விளக்கி ஆணைகள் பெறாமல் சான்றுகள் வழங்கும் அதிகாரம் மட்டுமே உள்ள அதாவது சிறப்பு காவல் சார் ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ )நிலையில் உள்ள  துணை வட்டாட்சியரிடம் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணை பெற்றது ஏன்?
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதைவிட மர்மம்  மஞ்சள் பனியனுடன் வேனில் ஏறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்ட காவலர் தான் குறிமட்டுமே பார்த்ததாகவும் சுடவில்லை,அதற்குள் வேறு நபர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் அருகில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு சுட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன் "காலையிலேயே எங்களை சீருடை இல்லாமல் மஞ்சள் பணியந்தான் வரக்கூறினார்கள் .நாங்கள் முன்பு பயிற்சி முடித்து மஞ்சள் பனியனுடன் மாவட்ட ஆட்சியருடன் எடுத்த புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்ததம் யார் எனத்தெரியவில்லை.அப்படம் மக்கள் தொடர்பு அலுவலகத்தாரால்தான் எடுக்கப்பட்டது "என்றும் கூறியுள்ளார். 
சி.பி.ஐ தோண்டினால் கீழடி,ஆதிச்சநல்லூரை விட பல உண்மைகள் வெளிவரலாம்.ஆனால் கீழடி,ஆதிச்சநல்லூரை ஆட்சியாளர்கள் 13 பேர்கள் கொலை ,ஸ்டெர்லைட் விவகாரத்தை தோண்டவிடுவார்களா?
அல்லது தோண்டியபின் அறிக்கையை எப்படி விட வேண்டும் என்று அனில் அகர்வால்தான் அறிவுரை வழங்காமல் இருப்பாரா?
=======================================================================================

சிறுநீரை குடிப்பது.....?

ஒருவர் தனது சிறுநீரை குடிப்பது என்பதை நினைப்பதற்கு சற்று நெருடலாக இருக்கிறது. 
சிறுநீர் குடித்தால் நோய் ஏற்படுமோ, இறந்து விடுவோமா என்ற அச்சங்கள் ஒரு புறம் இருந்தால், இந்த கருத்தை கேட்பதற்கே பலருக்கு அருவருப்பாக இருக்கும் என்றாலும், சிலர் தங்களது சிறுநீரை குடிக்கின்றனர், 
அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் செய்கின்றனர்.
உதாரணமாக, நேவீங்கடினில் வசிக்கும் 33 வயது யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ, தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறுகிரார். அவர் ஹஷிமோட்டோவின் தைராய்டு நோய் மற்றும் நீண்ட காலமாக வலியால் பாதிக்கப்பட்டிருந்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது சிறுநீரை குடிக்க ஆரம்பித்ததாக தெரிவித்தார். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு 'யூரோஃபோபியா', 'சிறுநீர் சிகிச்சை' என்று கூறப்படுகிறது.

"சிறுநீரைக் குடித்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மீட்டெடுப்பதாகவும், ஆரோக்கியத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு நன்மையளிக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால் அதை முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன்" என்று அவர் கூறுகிறார்.
அதன் பிறகு, சிறுநீர் குடிக்க ஆரம்பித்த கெலீ ஓக்லீ, இப்போது தனது சிறுநீரில் நனைக்கப்பட்ட பருத்தித் துணியால் தனது முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் முகச் சருமம் 'பளபளப்பாக' இருப்பதாக நம்புகிறார்.

சிறுநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 46 வயது லீஹ் சாம்சன், 'த சன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.

120 கிலோ எடையாக இருந்த அவரின் எடை குறைப்புக்கு சிறுநீர் அருந்துவது உதவியாக இருக்கும் என்று கேள்விபட்டபோது, முதலில் ஆச்சரியமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

"சிறுநீர் சிகிச்சை தொடர்பான யூடியூப் இணைப்பு ஒன்றை என் நண்பர் அனுப்பினார், அதை பார்த்த பிறகு, ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் சிறுநீரை குடித்தேன். அதனால் என் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதை உணர்ந்து, உட்கொள்ளும் உணவில் இருந்து சோடியத்தை குறைக்க முடிவு செய்தேன்.
இப்போது தினசரி காலையில் தனது சிறுநீரை குடிப்பதுடன், பல் துலக்கியவுடன் சிறுநீர் கொண்டு வாயை கொப்பளிக்கிறார் லீஹ். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. கண்ணுக்கு சொட்டு மருந்தாகவும் பயன்படுத்துகிறாராம். ஆனால் மருத்துவர்கள் இது அபத்தமானது, ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.
ஆனால், 39 வயது ஃபேத் கைண்டர் இந்த எச்சரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு, சிறுநீரை பயன்படுத்துகிறார். அதை சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார்.
அபர் தீனை சேர்ந்த ஃபேத், தற்போது போர்ச்சுகல் நாட்டில் வாழ்கிறார். கொசுக் கடியால் ஒவ்வாமை ஏற்பட்டு கண்களில் வீக்கம் ஏற்பட்ட பிறகு தனது சிறுநீரை அவர் குடிக்கத் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
ஆரம்பத்தில் அது சற்று கடினமானதாக தோன்றினாலும், மூன்றே நாட்களில் ஒவ்வாமை சரியானதாக அவர் கூறுகிறார்.

"அதில் இருந்து, தினசரி காலையில் எனது சிறுநீரை குடிக்கிறேன். இப்போது முன்பை விட கொசுக்கடியால் நான் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இப்போது பூச்சிகள் ஏதேனும் என்னைக் கடித்தால் வீக்கமோ அல்லது அரிப்போ ஏற்படுவதில்லை என்று ஃபேத் கூறுகிறார்.
ஜூன் மாதம், பெயர் தெரிவிக்காமல் ஒரு பெண் வெளியிட்டிருந்த காணொளிக் காட்சியில், அவர் தனது செல்லப்பிராணியான நாயின் சிறுநீரை குடித்துக்கொண்டிருப்பதை பதிவிட்டிருந்தார்.
சிறுநீரை குடித்தப் பிறகு பேசிய அவர், "என் நாயின் சிறுநீரை குடிக்கத் தொடங்கியபோது, முதலில் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது, அச்சமாகவும், வருத்தமாகவும் இருந்தது" என்று கூறியிருந்தார்.

இப்படி பலர் சிறுநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்று கூறினாலும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல; கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருளான சிறுநீரை மீண்டும் உடலுக்குள் அனுப்புவது சரியல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர் ஜுபைர் அகமதிடம் பிபிசி பேசியது. அவரது கருத்தின்படி, "பொதுவாக சிறுநீரகத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அது உடலில் இருக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலில் இருந்து வெளியேறிய சிறுநீர் நச்சாக மாறிவிடும். அதை மீண்டும் உடலில் ஏற்றிக் கொள்வது உடல்ரீதியிலான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்."
தொற்றுநோய் ஏற்படுவதற்கான கூறுகள் சிறுநீரில் இருக்கின்றன. யூரோஃபோபியாவால் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் டாக்டர் அகமது.
உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்தான் சிறுநீராக உடலில் இருந்து வெளியேறுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"உடலில் இதுபோன்ற பொருட்களை சேர்ப்பதால் ஆரோக்கியம் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இருப்பினும், குறைந்த அளவில் சிறுநீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லமுடியாது" என்கிறார் அவர்.
சிறுநீர் குடிப்பதால், உடலுக்கு தீமை ஏற்படுத்தும் ஆபத்தான கழிவு பொருட்கள் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுவதாக எச்சரிக்கிறார் மருத்துவர் ஏண்ட்ரூ தார்ன்பர்.
"சிறுநீரகம் தான் ரத்தத்தை வடிகட்டி, உப்பு, கனிமங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை நீக்கி சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால்தான் செயற்கை முறையில் ரத்த சுத்திகரிப்பு (டயலிசஸ்) செய்யப்படுகிறது."
"ஆரோக்கியமான உடலின் சிறுநீரில் 95 சதவிகிதம் தண்ணீர் மற்றும் ஐந்து சதவிகித கழிவு உள்ளது. கழிவில் பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கியுள்ளது. இவை உடலில் அதிகமானால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்."
சிறுநீர் குடிப்பதால் குடலும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று மருத்துவர் தார்னர் கூறுகிறார்.
மருத்தவர்கள் மட்டுமல்ல, ஊட்டச்சத்து நிபுணர்களும், உணவு நிபுணர்களும்கூட சிறுநீர் குடிப்பது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டச்சத்து நிபுணர் கெர்ரி ஃபில்ட்னெஸும் இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறார். சிறுநீரில் 95 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால், அது ஒரு பானமாக குடிப்பதற்கு ஏற்றது என்ற வாதமும் மூடநம்பிக்கை என்று அவர் கூறுகிறார்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? 
அதற்காக சிறுநீர் குடிப்பதைவிட, தண்ணீர் அல்லது மூலிகை தேநீர் குடிக்கலாம் 
என்று ஊட்டச்சத்து நிபுணர் கெர்ரி ஃபில்ட்னெஸ் அறிவுறுத்துகிறார்.


சனி, 13 அக்டோபர், 2018

காப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்

மத்திய அரசு டிசம்பர் 2004ல் ஒரு அவசர சட்ட பிரகடனத்தின் மூலம் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970ல் (3வது – திருத்த) மசோதாவை பிறப்பித்துள்ளது. இப்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதனை ஒரு சட்டமாக கொண்டுவர மத்திய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது. 
இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் மருந்து, இரசாயனம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மருந்துத் துறையை பொறுத்தவரையில் இதுவரை பின்பற்றி வந்த செய்முறை காப்புரிமை பொருள் காப்புரிமையாக மாற்றப்படும். இதனால் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலை சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவிற்கு உயரும்.

சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான உலக ஏகாதிபத்தியம் ஒரு முனை பொருளாதார உலகை உருவாக்க எடுத்த முயற்சி உருகுவேயில் தொடங்கிய 8-வது சுற்று GATT பேச்சுவார்த்தை மாரகேசில் 1994 டிசம்பர் மாதம் WTO-வாக உருவாகியது. 
உட்டோ ஒப்பந்த அடிப்படையில் பத்து வருட கெடு என்பது 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்து உள்ளது. அதன் வெளிப்பாடே இந்த காப்புரிமை சட்ட திருத்த முயற்சி.
இந்திய காப்புரிமை சட்டம் 1970 இந்திய மருந்து உற்பத்தி துறையை தன்னிறைவு அடைய செய்கிறது. 1982 ஆம் ஆண்டு லிபனில் நடைபெற்ற உலக மருந்துத்துறை மாநாடு இந்தியாவின் இந்த வளர்ச்சியை பதிவு செய்து பாராட்டியது.
இந்தப் பின்னணியில் காப்புரிமை சட்ட மாற்றத்தினால் மருந்துத் துறையில் ஏற்படும் விளைவுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.
சுதந்திரம் அடைந்த போது இந்திய மருந்துத் துறை
இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய மக்கள் தொகை சுமார் 40 கோடி. மருந்து உற்பத்தி 10 கோடியாக இருந்தது. உலகிலேயே அதிக விலையில் மருந்து விற்பனையாகிய நாடு இந்தியாவாக இருந்தது. அன்றைக்கு அமுலில் இருந்த Patents & Designs Act 1911-ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்தியாவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துகளை இங்கே உற்பத்தி செய்யாமல் தங்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். அவர்கள் தங்கள் நாட்டு விலையை விட 5லிருந்து 6 மடங்கு உயர்த்தி அதிக விலையில் கொள்ளை லாபத்திற்கு விற்றனர். அமெரிக்க அரசு அங்குள்ள Food & Drugs Act என்ற சட்டத்தை திருத்தி அந்நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் (Senator) திரு கெஃபாவர் தலைமையிலான ஒரு குழு (1959) தன்னுடைய அறிக்கையில் இந்திய நாட்டில் மருந்து விலைகள் அதிகமாக உள்ளது. மிக முக்கியமாக உயிர்காக்கும் மருந்துகளான (சயனமைட் என்ற அமெரிக்க நிறுவனம் தயாரிக்கும்) ஆரியோமைசின், அக்ரோமைசின் போன்ற ஆன்டிபயோடிக் அதிக விலையில் விற்கப்படுகின்றன என்று கூறியது.
இந்நிலையிலிருந்து இந்திய மருந்து உற்பத்தி இன்று ரூ. 20,000 கோடியாக உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் நாடாக இன்று இந்தியா மாறியுள்ளது.

இந்த மாற்றம் உருவானதற்கு மிக முக்கிய காரணம் இந்திய காப்புரிமை சட்டம் 1970. மருந்துத் துறையில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் திறமையினால் மாற்று வழியில் இங்கு கிடைக்கின்ற மூலப் பொருளையும் தொழில்நுட்பத்தையும் வைத்து மருந்து உற்பத்தி செய்தது, இந்த விலை குறைப்பிற்கு உதவியது.
காப்புரிமையின் தோற்றம்
முதல் காப்புரிமை சட்டம் கொலம்ப அமெரிக்காவை கண்டு பிடிப்பதற்கு முன்பே ஆதிரியா நாட்டில் 1474 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கைவினை கலைஞர்கள் (Artisans) தங்கள் உற்பத்தி வார்ப்படங்களை அவர்களிடம் பயிற்சிக்காக வந்தவர்கள் நகல் செய்து அவர்களுக்கு போட்டியாக வராமல் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்ட போது அதன் கூடவே போட்டியும் வளர்ந்தது. ஏகபோக உரிமைக்கும், பொது நலனுக்கும் உண்டான முரண்பாடுகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான காப்புரிமை சட்டமாக பரிணமித்தது.
பாரி கன்வென்ஷன்
பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தொழிலதிபர்கள் தங்களின் புதிய பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் பாரி, ஜெனிவா, வியன்னா போன்ற நகரங்களில் நடைபெறும் பொருட்காட்சிகளில் விளம் பரத்திற்காக காட்சியில் வைத்தனர். மற்றவர்கள் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை நகல் செய்வதை தடுக்க முடியவில்லை. ஒரு நாட்டின் காப்புரிமை மற்ற நாடுகளில் செல்லாத நிலை. இப்பின்னணியில் ஆதிரிய அரசு 1873ஆம் ஆண்டு வியன்னா கண்காட்சியில் மற்ற நாடுகளுடன் பேசி ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சித்தது. பின்னர் 1863ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் 1880 ஆம் ஆண்டு அமெரிக்கா தயாரித்த நகலின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் உருவானது. இதில் 15 நாடுகள் கையொப்பமிட்டன. இதுதான் பாரி கன்வென்ஷன் என்று அழைக்கப்படும் காப்புரிமை சட்டம். இவ்வொப்பந்தம் கண்டுபிடிப்பாளர் அல்லது உற்பத்தியாளர் நலனை பாதுகாக்கப் பயன்படவில்லை. மாறாக அந்த நாட்டின் தொழில் சொத்துரிமை பாதுகாக்க உருவாக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
 • ஆசிய நாடுகள் எவரும் கையொப்பம் இடவில்லை.
 • அன்று காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.
 • பல நாடுகளில் காப்புரிமை என்பதே இல்லாமல் இருந்தது.
 • பொருளுக்கான காப்புரிமை 14-20 வருடங்களுக்கு.
 • காப்புரிமை பெற்றபின் உற்பத்தி செய்ய கட்டாயமில்லை.
 • தொழில் உரிமை என்பதில் தொழில் / வர்த்தகம் / வேளாண்மை போன்ற அனைத்து துறைகளும் அடங்கும்.

உதாரணமாக ஒரு மூலிகையிலிருந்து கிடைக்கும் மருந்தை ஒருவர் கண்டுபிடித்து காப்புரிமை செய்து விட்டார் என்றால் ஒப்பந்த நாடுகளில் உள்ள வேறு எவரும் அந்த மூலிகையை பயிரிட முடியாது. அந்த மருந்ததை உபயோகிக்க முடியாது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தக் காப்புரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தங்கள் லாபத்தை பெருக்கி கொண்டன. இதனால் வளரும் நாடுகளின் சுயசார்பும் / அன்னிய செலாவணியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்திய காப்புரிமை சட்டம் 1970
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் அன்று அமுலில் இருந்த பாரி கன்வென்ஷன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட Patents & Designs Act 1911 மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டது. இப்பின்னணியில் 1948-50ல் நீதிபதி தேக் சாந்த் தலைமையிலான குழுவும், பின்னர் 1957-59ல் நீதிபதி இராஜகோபால் ஐயங்கார் தலைமையிலான குழுவும் ஆய்வு செய்து தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தது. அவர்கள் அறிக்கையில்,
 • அமலில் உள்ள காப்புரிமை சட்டம் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கத் தவறிவிட்டது.
 • காப்புரிமை நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் போட்டியை தவிர்ப்பதற்காகவே உள்ளது.
 • 90 சதவீதமான காப்புரிமைகள் உற்பத்திக்காக மாறவில்லை.
 • நாட்டிற்கு தேவையான பொருளாக இருந்தாலும் அதனை உற்பத்தி செய்ய முடியாத நிலை.
ஆகவே இந்நிலையினை மாற்ற நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஒரு காப்புரிமைச் சட்டம் – உருவாக்கப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்தது.
மேற்கூறிய பரிந்துரைகளை கருத்தில் கொண்டு பாராளுமன்றம் விவாதித்து பல்வேறு மசோதாக்களை கொண்டு வந்தது.
Comprehensive Patent Bill
Patent Bill 1965
Patent Bill 1967
இறுதியாக இருபது ஆண்டுகள் விவாதித்து 1970ஆம் ஆண்டு இந்திய காப்புரிமை சட்டம் 1970 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
இந்த சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
 • உணவு உற்பத்தியில் காப்புரிமை என்பதே கிடையாது.
 • இரசாயனம் மற்றும் மருந்துத் துறையில் செய்முறை காப்புரிமை மட்டுமே. பொருள் காப்புரிமை கிடையாது.
 • செய்முறை காப்புரிமையும் 5 முதல் 7 வருடங்களுக்கு மட்டுமே.
 • இச்சட்டம் கண்டுபிடிப்பாளர் மற்றும் நுகர்வோர் நலன்களை சமமாக பாதுகாக்கிறது.
 • தேசிய நலனுக்கு முன்னுரிமை.
 • காப்புரிமை பெற்றவர்கள் கட்டாயமாக உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நாட்டு நலன் கருதி மற்றவர்களுக்கு உற்பத்தி உரிமம் கொடுக்க வழிமுறை.
 • செய்முறை காப்புரிமை புதிய மாற்று தொழில்நுட்ப முறையில் உற்பத்தியை ஊக்குவித்தது. (Reverse Engineering)

மருந்துத்துறை
1956 ஆம் ஆண்டு தொழில் கொள்கையின் அடிப்படையில் சோவியத் யூனியன் உதவியுடன் இந்தியாவில் மருந்துத் துறையில், பொதுத்துறை நிறுவனம் இந்தியன் டிரக் அண்ட் பார்மாசூடிக்கல் லிமிடெட் (IDPL) 1961 ஆம் ஆண்டு மூன்று ஆலைகள் ரிஷிகேஷில் ஆண்டிபயோடிக் ஆலை, ஹைதராபாத்தில் சின்தடிக் டிரக் ஆலை, சென்னையில் சர்ஜிகல் இன்ட்ரூமெண்ட் ஆலை – நிறுவப் பட்டது. UNICEF நிறுவனத்தால் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் இந்துதான் ஆண்டிபயோடிக் லிமிடெட், பிம்பரி இவ்விரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் இந்தியாவில் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அடிப்படையிலிருந்து (Basic Stage) உற்பத்தி செய்ய தொடங்கின. இந்நிறுவனங்கள் மூலம் மருந்துகளை (Bulk Drugs) மட்டும் அல்லாமல் சந்தைக்கு தேவையான பார்முலேஷன்களையும் தயாரிக்க தொடங்கின. அவ்வாறு தயாரிக்கப்பட்ட மருந்துகளை மிகக் குறைந்த விலையில் சந்தையில் விற்கத் தொடங்கின.
அட்டவணை – 1
மருந்துகளின் விலை ஒப்பீடு – இந்திய நாணயத்தில்
மருந்துகள்இந்தியாபாகிஸ்தான்இந்தோனேசியாபிரிட்டன்அமெரிக்கா
ஆண்டிபயோடிக்
சிப்ரோஃபிளாக்சின்
500 மி.கி. 10 டாப்டெல்
29.00423.86393.001,185.702,352.35
நார் ஃப்ளாக்சின்
400 மி.கி. 10 டாப்லெட்
20.70168.71130.63304.781,843.66
வயிற்றுப்புண் மருந்து
ரானிடிடின்
150.மி.கி. 10 டாப்லெட்
6.0274.09178.35247.16  863.56
லான்ஸோ ப்ரஸால்
30 மி.கி. 10 டாப்லெட்
39.00684.90  226.15708.081,909.64
இருதய நோய் /பி.பி.
அடினனால்
50 மி.கி. 10 டாப்லெட்
7.5071.82119.70338.28660.21
அமிலோடிபின்
5.மி.கி. 10 டாப்லெட்
7.80200.3478.42338.28660.29
வலி நிவாரணி
டைக்ளோ ஃபெனாக்
50 மி.கி. 10 டாப்லெட்
3.5084.7159.7560.96674.77
கான்சர்
போபோசைட்
100 மி.கி. இன்ஜெக்ஜன்
  190.00554.69242.901,217.436,210.30
1 அமெரிக்க டாலர்ரூ. 45.50
1 பிரிட்டிஷ் பவுண்ட்ரூ. 83.51
உதாரணம்
பன்னாட்டுDPL
டெட்ராசைனின்ரூ. 2/- காப்சூல்ரூ. 0.50/- காப்சூல்
அனால்ஜின்ரூ. 0.75/- டாப்லெட்ரூ. 0.15/- டாப்லெட
இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் / இந்திய நிறுவனங்கள் தங்கள் விலைகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது. 1970 காப்புரிமை சட்டத்தினால் இந்தியாவில் மருந்து உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் ஒரு சில ஆண்டிற்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிலை உருவானது. அதே சமயத்தில் IDPL / HAL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் விலைகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு உதவியாக இருந்தது. இந்த இரண்டு தூண்கள் – காப்புரிமை சட்டம் / பொதுத்துறை நிறுவனம் – இந்திய மருந்து துறையை தூக்கிப் பிடித்தன. புதிய மருந்துகள் ஓரளவிற்கு குறைந்த விலையில் கிடைத்ததால் மருந்து வாங்கும் திறன் பரவலாக்கப்பட்டது உற்பத்தி 20,000 கோடியாக வளர்ந்தது.

இத்தனை வளர்ச்சி மருந்துத் துறையில் ஏற்பட்டும் கூட இன்றும்
 • 20 சதமான மக்களுக்கு மட்டுமே நவீன மருந்துகள் கிடைக்கிறது.
 • வருடத்திற்கு 15 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கால் இறக்கின்றனர்.
 • 12 லட்சம் தாய்மார்கள் பிரசவ கவனிப்பு இல்லாமல் இறக்கின்றனர்.
 • உலக காச நோயாளிகளில் 50 சதம் இந்தியாவில்.
இந்நிலையில் உடனடி தேவை மக்களுக்கான மருந்து கொள்கையை உருவாக்கி பொதுத்துறை நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தி இந்திய காப்புரிமை சட்டத்தின் 1970 உதவியோடு உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்வது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக கடைபிடித்த கொள்கைகளால் இந்திய மருந்து கொள்கை நீர்த்து போய் விட்டது. IDPL / HAL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அனேகமாக மூடப்பட்டு விட்டன. இப்போதும் காப்புரிமை சட்டத்தையும் மாற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. இது நிறைவேறுமேயானால் இந்தியா மீண்டும் சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலையை அடைய நேரிடும்.
காப்புரிமை சட்டம் 1970-ஐ பாதுகாக்க, இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட, மக்களுக்கான மருந்து கொள்கை உருவாக்கிட, இன்றைய தேவை நாடு தழுவிய மக்கள் இயக்கம்.
கே. நடராஜன்
நன்றி:மார்சிஸ்ட்,

ஆபத்தில் இந்தியப் பொருளாதாரம்!

ஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...