bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கடைசி 12 மணி நேரம்.....,

பகத்சிங் வாழ்க்கையில் 


"அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்."

1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி...

லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை.

அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது.
அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும் சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.
மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது.
 பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.
 
அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது. நிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள்.
பகத்சிங் பயன்படுத்திய கடிகாரம்

பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.
பர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்துவந்தார். அதை எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது.
இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது அறையில் இருந்து வெளியே செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில் இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே செல்லவேண்டும்.
ஒரு முறை பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார்,
"நீயும், உன் நண்பர்களும், லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை?"
என்று கேட்டார்.
பகத்சிங் அணிந்திருந்த சட்டை
அதற்கு பகத்சிங்கின் பதில் என்ன தெரியுமா?

 "போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது".


பகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார். அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.


தீர்ப்பெழுதிய எழுதுகோல்
 பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில், கார்ல் லிப்னேக்கின் "மெட்ரியலிசம்"
லெனினின் "இடதுசாரி கம்யூனிசம்"
 அப்டன் சின்க்லேயரின் "தி ஸ்பை" (உளவாளி) 
ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

அனைத்தும் கம்யூனிசம் சார்ந்த இடதுசாரி நூல்கள்.
பகத்சிங் அணிந்திருந்த காலணி
பகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.
பகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


பகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று,
 "ரெவல்யூஷனரி லெனின்" புத்தகத்தை கொண்டு வரவில்லையா?" என்று கேட்டாராம்!
அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங்!

படிப்பதற்கு அவரிடம் அதிக நேரம் இல்லையே...
நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சப்தமாகக் கூறினார்......
"இரண்டு செய்திகள்... 
ஏகாதிபத்தியம் ஒழிக.... 
இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)".

தன்னுடைய வழக்கில் அதிக அக்கறை செலுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸிடம் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு, மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங்.
 பிறகு மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.
"விரைவில் மீண்டும் சந்திப்போம்" -இதுதான் ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம் பேசிய சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை அதிகாரியிடமிருந்து தான் பயன்படுத்திய கேரம்போர்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.
 மெஹ்தா சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.

மெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக அன்று மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது.
 இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க விட மாட்டீர்களா?
என்று அவர் சிறை அதிகாரியிடம் கேட்டாராம்.
தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.

ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள் -
அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

பிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்ததைவிட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.
"வாயே குரு" என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.

"என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது.
இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்" என்று பகத்சிங் கூறினார்,
சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது.

"தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.

"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன. தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

மூவரில் பகத் சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை மனதில் நினைத்துக்கொண்ட பகத் சிங், தூக்கில் இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கப்போவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார்.

லாகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ் சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில் தான் லாகூர் மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின் காதுகளையும் எட்டியது.
பகத் சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள்.
மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது.
 அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன.
 அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் செல்ல விருப்பம்?".
சுக்தேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.
 ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர்.
 தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.
இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.

இவர்களை தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அங்கிருந்த ஒரு சிறை அதிகாரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கூறப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இறுதிச்சடங்குகள் சிறைச்சாலைக்குள்ளேயே செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை வெளிவந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.

ராவி நதிக்கரையில் இறுதிச்சடங்குகளை நடத்தும் யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டது, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட முடிவு செய்யபட்டது.

புரட்சியாளர்களின் சடலங்கள் ஃபிரேஜ்புர் அருகில் சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை அழைத்துவந்துவிட்டார்.
சிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து மக்களுக்கு தகவல் தெரிந்துவிட்டது.
 மக்களின் கூட்டம் வெள்ளமென தங்களை நோக்கி வருவதைக் கண்ட பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு, அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு முழுவதும் சிதைகளை சுற்றி நின்றது.
பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில் இருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.
இந்த செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை எழுப்பியது.
 இறுதிச் சடங்குகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை கக்கினார்கள். இதை மாவட்ட நீதிபதி மறுத்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.
 
ஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்கள். லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.
அங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி நிலவியது. பகத் சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின் எச்சங்களுடன் ஃபிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது தான் அதற்கு காரணம்.

மலர் தூவிய சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின் கண்களின் இருந்து கண்ணீர் பொங்க, கண்ணீரஞ்சலி நடந்தேறியது.

"வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது" என்பது பற்றிய செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல பத்திரிகையாளர் மெளலானா ஜஃபர் அலி வாசித்தார்.

அங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார்.
அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.

16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரத்தில் நிகழ்ந்தவை மற்றும் அவரது மறைவுக்கு பிறகு நாட்டில் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகள் ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு இது.
                                                                                                                                                                                                                       தொகுப்பு:  
நன்றி: 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகவங்கி கவனிக்கவும்.
மும்பையில்  நடந்த உலக இந்து பொருளாதார அமைப்பு நிகழ்ச்சியில் உ.பி.முதலவர் யோகி ஆத்யநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பல பொருளாதார தத்துவங்களை அள்ளி வீசி வந்திருந்தோரை திக்கு முக்காட வைத்தார்.

"இந்தியா முன்பு உலகப்பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கைக்கொண்டிருந்தது.புராண காலங்களில் தங்கமும்,வைரமும் ஒவ்வொரு இந்தியனை வீட்டிலும் குவிந்திருந்தது.
ஆனால் கஜினி முகமது அவற்றை கொள்ளையடித்து சென்று விட்டான்.

அதன்பின் முகலாயர் பொருளாதார முறை தெரியாமல் இந்தியாவை ஆண்டதால் செழிப்பு குறைந்தது.
அதுவும்  ஆங்கிலேயர் ஆட்சியின் போது அது ஐந்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது.

 ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4 விழுக்காடு மட்டுமே இருந்து வந்தது.

 தற்போதைய மோடி தலைமையிலான அரசு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளைக்கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து வருகிறது.விரைவில் ராமராஜ்யம் போன்று செழிப்பான புதிய இந்தியா மலரும் "
என்று  யோகி ஆதித்யநாத் கூறினார்.

இவ்வளவு பொருளாதார அறிவுள்ள பாஜக தலைவர்களை உலக வங்கி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இதுவரை பயன்படுத்தாது உலகவங்கி கொடுத்து வைக்காததைத்தான் காட்டுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------சனி, 28 செப்டம்பர், 2019

முடிவுக்கு வரும் "120 நூற்றாண்டுகள்" வரலாறு

அழித்தொழிக்கும்  அரசு...

ஹசன்கீஃப் (Hasankeyf)துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப் போட்டாலும் தகும் )மிகப் பழைமையான பகுதி .கிட்ட்டத்தட்ட 120 நூற்றாண்டுகள்.

தென்கிழக்கு துருக்கியிலுள்ள, பேட்மேன் என்ற பகுதியிலிருந்து அரைமணி நேர தூரத்தில் அமைந்துள்ளது ஹசன்கீஃப்.
டிக்ரிஸ் நதியோரத்தில் அமைந்திருக்கும் இது,
 மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த பகுதி.
இன்றைய உலகின் மிகப்பழமையான பாலைவனச் சோலை இதுதான்.

 வளர்ச்சி என்ற காரணத்தைக் காட்டி டிக்ரிஸ் நதியில் அணை கட்டுவதன் மூலம்  விரைவில் அந்த நகரை நீருக்குள் மூழ்கடிக்கும் கொடுமையான செயலை செய்கிறது  துருக்கி அரசு.
ஹசன்கீஃப்  டிக்ரிஸ் நதியோரத்தில் அமைந்திருக்கும் மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த பகுதி.
பூமியில் மனித நாகரிகத்தின் மிகப் பழைமையான குடியிருப்புகளில் அதுவும் ஒன்று.
சுமார் 12,000 ஆண்டுகளாக அங்கு மனிதர்கள்வாழ்ந்து வந்தார்கள் .தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான குகைகள், தேவாலயங்கள், நினைவுக் கல்லறைகள் உள்ளன. மனித வரலாற்றில் ஓர் அணிகலனாக நிற்கும் இந்தப் பழைமை வாய்ந்த நகரத்தில் தற்போது  86,000 மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பழமையான மனிதர்கள் வாழ்த்த இடத்தைத்தான் இலிசு (Ilisu dam project) என்ற அணையைக் கட்டுவதற்காக அழிக்கப் போகிறார்கள்.
அணை கட்டும் வேலையும் 4,200 ஜிகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகளும் 2006-ம் ஆண்டு தொடங்கியது.
அந்நாட்டின் நான்காவது பெரிய அணையாக உருவெடுக்கப் போகும் இந்த அணையின் கட்டுமான வேலைகள் இன்னும் சில வாரங்களில் முடியப்போகிறது.
அதோடு 80,000 மக்களின் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கடந்து 12,000 ஆண்டுகள் பழைமையான ஹசன்கீஃப் நகரத்தின் ஆயுளும் முடியப் போகிறது.
துருக்கி அரசு அங்கு வாழும் மக்களுக்கு அந்த இடத்தைக் காலி செய்ய அக்டோபர் 8-ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.
 பல ஆயிரம் ஆண்டுக்கால பாரம்பர்யம் மிக்கக் கலாசார அடையாளத்தை அழிக்கக் கூடாது என்று மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தோல்வியடைந்துவிட்டது. இதனால், திறக்கப்படவுள்ள இந்த அணை விரைவில் 4,200 ஜிகாவாட் மின் உற்பத்தியைச் சாத்தியமாக்கும். ஆனால், அதற்கு அது கொடுக்கவிருக்கும் விலை மிகப் பெரியது.
 மக்கள் வாழும் 199 குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும்.
பழங்கால மனிதர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குகைகள் அழிந்துபோகும்.
அதுமட்டுமல்ல  80,000 மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கிலான உயிரினங்களின் வாழ்விடங்கள் தொலைந்துபோகும். அந்தப் பகுதியின் பல்லுயிர்ச்சூழல் பாழாகும்.
4,200 ஜிகாவாட்டுக்கு இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்கத் துணிந்த துருக்கி அரசின் இதயம் நிச்சயம் இரும்பைவிடக் கடுமையானதாகத்தானிருக்க வேண்டும்.

இந்த இடத்தில் வெறும் 10 சதவிகிதப் பகுதிகள்தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கே இவ்வளவு பெரிய வரலாறு கிடைத்துள்ளது.

இதை மேலும் ஆய்வு செய்யவும் திறந்தவெளி அருங்காட்சியகமாக அறிவிக்கவும் அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதை அரசாங்கம் ஏற்கவில்லை.
ஆனால், அணை கட்டுவதற்கான திட்டத்தை ஏற்று அதற்கு அனுமதியும் கொடுத்து அத்தனை அடையாளங்களையும் அழிக்கப் பார்க்கிறது.
மெசபடோமியா, பைசான்டியம், அரேபியப் பேரரசுகள், ஓட்டோமன் பேரரசு என்று பல வரலாறுகளின் மிச்சங்களை ஹசன்கீஃப் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த நகரத்தைப் பற்றிய குறிப்புகள் பழைமை வாய்ந்த அஸ்ஸிரியன், ஆர்மேனியன், குர்தீஷ், அரேபிக் மொழிகளில் உள்ளன.
 இந்த அணை, இவை அனைத்தையுமே மென்று விழுங்கி ஏப்பம் விடப் போகிறது.

யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்கு இதைவிடத் தகுதி வாய்ந்த ஒன்று இல்லவே இல்லையென்று கூறுகிறார் மத்திய ஃப்ளோரிடாவில் வரலாற்று ஆய்வாளராக இருக்கும் ஹகன் ஒஸோக்லு.
ஹசன்கீஃபுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கக் கலாசார அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

அதைச் செய்யக் கோரி, மக்களும் 'ஹசன்கீஃபைக் காப்பாற்றுங்கள்' இயக்கமும் எவ்வளவோ மனுக்களைக் கொடுத்துவிட்டனர்.
ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்துக்கு உரிய அங்கீகாரத்தை இத்தனை நாள்களாகக் கொடுக்காதிருந்ததே இந்தத் திட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதை உரிய முறையில் செய்திருந்தாலே போதும்.
இந்த அணை கொடுக்கும் வருமானத்தைவிட அதிகமாகச் சுற்றுலாத் துறை கொடுத்திருக்கும்.

தி கார்டியன் என்ற ஆங்கிலப் பத்திரிகை, துருக்கியின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சகத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``பேசப்பட வேண்டிய எத்தனையோ திட்டங்கள் இருக்கையில், இதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?" என்பதே அவர்களின் பதிலாக இருந்துள்ளது.

 அணைக்கு எதிராக அல்ல.அழிக்கப்படும் மனித வரலாற்று ஆதாரங்களை காக்கப்போராடும் போராடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
சிறையில் அடைக்கப்படுகிறார்கள். துருக்கியில் மக்களாட்சி சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த மக்கள் விரைவில் ஹசன்கீஃபைக் காலி செய்தாக வேண்டும்.
அரசு காலக்கெடு விதித்துவிட்டதால், அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வரலாற்றுச் சின்னங்களுக்கு வருகை புரிந்து மிகுந்த மன வேதனையோடு அவற்றுக்குப் பிரியாவிடை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் அணையின் கதவுகள் திறக்கப்படும்.
அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக உயரும் நீர்மட்டத்தில் மூழ்கடிக்கப்படும். அந்த அணைக்குள் 120 நூற்றா ண்டுகள்   வரலாறும் மூழ்கி மறையும்.நிரந்தரமாக .
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நச்சு சர்க்கரையாகும் நாட்டுச் சர்க்கரை.

முன்பு மக்களால் அதிகம் பயன்படுத்தப் படாமல்,அதிக விற்பனையாகாததாக இருந்தது நாட்டுச் சக்கரை.
ஆனால் ரசாயனப் பொருட்காளால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியால் ஏற்படும் கெடுதலான விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்ததால் தற்போது பலர் நாட்டுச் சக்கரை பயன்படுத்துகிறார்கள்.

பல தேநீர்க்கடைகளில் நாட்டுச் சக்கரை தேநீர்,காபி கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள்.
  நாட்டுச் சக்கரை விற்பனை அதிகரித்தால் நம் கலப்பட வியாபாரிகள் கைகள் சும்மாயிருக்குமா என்ன?

மாமபழத்தில் இருந்து வாழைப்பழம்,ஆப்பிள் வரை ரசாயணங்களைக் கலந்து செயற்கையாகப் பழுக்கவைத்து வருபவர்களாயிற்றே?
தற்போது நாட்டுச் சக்கரையிலும் தங்கள் அபாயகரமான கைகளை வைத்து விட்டனர்.

 நாட்டுச் சர்க்கரையில் அஸ்கா கலப்பதோடு ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் என பல ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள்.

இதன் மூலம் அதிக இனிப்பு சுவையை உருவாக்குவதுடன் ,பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும்,உதிரியாக இருப்பதாகவும் காட்டி கவர்ச்சியான பொட்டலங்களில் அடைத்து விற்கின்றனர். அதிக விலைக்கு விற்கிறார்கள்.

ஆனால் கவர்ச்சிக்கு மயங்கி தரமான பொருளாக எண்ணி இதை வாங்கிப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்று நோய்  உட்பட பல வியாதிகள் வந்துஉயிரே பறி போகும் அபாயம் உருவாகியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

இதுவரை என்னதான் செய்தது


 பிரமாண பத்திரம் கொடுக்க தயக்கம் ஏன்?

இதுவரையில் 'பேனர், கட் -அவுட்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தி.மு.க, சார்பில் மட்டுமே  உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சுபஸ்ரீ
ஆனால் இந்த கோவை ரகு,சுபஸ்ரீ படுகொலைகளுக்கு காரணமான பேனர்கள்  வைத்த அ.தி.மு.க., உள்ளிட்ட, மற்ற கட்சிகள் இதுவரை  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயக்கம் காட்டுகின்றன.


 பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை அருகே, 12ம் தேதி, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், ஒரு பேனர் சரிந்து அவ்வழியே  இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த  23 வயதே ஆன மென்பொறியாளர் சுபஸ்ரீ  மீது விழுந்தது பேனருடன்  கீழே விழுந்த சுபஸ்ரீ  மீது பின்னால் வந்த குடிநீர் லாரி உடலில் ஏறியதால்  இறந்தார்.

இச்சம்பவம், தமிழகம் முழுவதும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேனர் கலாசாரத்திற்கு எதிராக, குரல்கள் ஒலித்தன.

சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில், வழக்கறிஞர்கள் லக்ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர். அத்துடன், விதிமீறல்பேனர்கள் தொடர்பாக, 'டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கையும், நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது, 'பேனர்கள் வைக்கக் கூடாது என, தங்கள் கட்சியினருக்கு, அதன் தலைவர்கள் அறிவித்தால் என்ன' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின், 'தி.மு.க., -- அ.தி.மு..க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், எந்த நிகழ்ச்சிக்கும் பேனர்கள் வைக்கக் கூடாது என, தொண்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்; அதை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க.,- சார்பில், பிரமாணப் பத்திரத்தை, அதன் அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, தாக்கல் செய்தார்.
அவிழ்க்கபப்ட்ட திமுக பேனர்கள்

அதில்
"கடந்த, 2017 ஜனவரி, 29ல், தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் இருந்தபோது, கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், 'கட்சி அல்லதுபிற நிகழ்ச்சிகளுக்கு, சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்- அவுட்டுகள் போன்றவை வைக்கக் கூடாது' என, எச்சரித்திருந்தார். 
அடுத்து, 2018 ஜூன், 19ல், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிவிப்பில், 'ஆர்வமிகுதியால், சிலர் பேனர்கள் வைப்பது தொடர்கிறது; அதையும் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. 

சுபஸ்ரீ மரணத்திற்கு பின், 'பொது மக்களுக்கு இடையூறாக, பேனர்கள், கட் - -அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 13ம் தேதி, ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பேனர், கட்- - அவுட், பிளக்ஸ் போர்டுகளை கட்டுப்படுத்த, தி.மு.க., எடுக்கும் நடவடிக்கைகளை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து வருவதற்காக, இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதித்து, தி.மு.க., செயல்படும்."
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று, முதல் கட்சியாக, தி.மு.க., பிரமாண பத்திரம், தாக்கல் செய்தது.
ஆனால், பிற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல், மவுனம் காத்து வருகின்றன.
 நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், கட்சி தலைமை உத்தரவை மீறி, கட்சியினர் யாரேனும், பேனர் அல்லது கட் அவுட் வைத்தால், அதற்கும் கட்சி தலைமையே, பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட கட்சி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வழக்கு தொடரப்பட்டால், அதை கட்சி தலைவர்களே சந்திக்க வேண்டும்.
மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறி பேனர் வைத்தால், கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
 இதனால் கலக்கமடைந்த கேட் அவுட்டிலேயே அரசியல் செய்யும் அதிமுக மற்றும் பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் அமைதி காத்து வருகின்றன.
அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ படுகொலையானதால் மக்களிடையே கோபமான குரல்கள் எழுந்ததாலும் ,நீதிமன்றம் கோபப்பட்டதாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தமிழக காவல்துறைக்கு வர  வேகமாக செயல்பட்டு பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர்,அதை சரிவர கட்டாத ஒப்பந்தக்காரர் இவர்களை விட்டு,விட்டு பேனரை அச்சிட்டவரை கைது செய்து அச்சகத்தை  மூடி சீல் வைத்து வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்து மேலும் தனது ஏவல் புகழை மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டுள்ளது.

 
                 சாலையில் வைக்கப்பட்ட அதிமுக பேனர்களுக்கடியில் செல்லும் வாகனங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை என்னதான் செய்தது 

விசாரணை ஆணையம் ?

ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு இதே தினத்தில்தான்  காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 முன்னதாக செப்டம்பர் 21-ம் தேதி, சென்னை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையைக் காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கிவைத்தார், ஜெயலலிதா.

ஆர்.கே.நகரில்,  3 மகளிர் பேருந்துகள் உட்பட 200 புதிய பேருந்து வசதிகளையும் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் தொடங்கிவைத்தார்.
ஜெயலலிதா கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி இவைதான். அப்போதே, மிகவும் சோர்வுடனும்,  தடுமாற்றத்துடனும் காணப்பட்டார் ஜெயலலிதா.
 தொடர்ந்து, செப்டம்பர் 22-ம் தேதி இரவில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது.
சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு, ஆரம்பத்தில் செயற்கைச் சுவாசக் கருவியின் மூலமாகச் சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், 'ட்ரக்கியோஸ்டமி' அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நுரையீரலுக்கு ஆக்சிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடுதலாக, உடலியக்கத்துக்காக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

 ஓரளவுக்கு உடல்நிலை தேறிவந்த ஜெயலலிதாவுக்கு, டிசம்பர் 4-ம் தேதியன்று, திடீரென இதயமும் சிறுநீரகமும் பாதிப்படைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதயத் துடிப்பும் தற்காலிகமாக நின்றுபோனது. இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் (Cardiopulmonary Resuscitation-CPR) உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ கருவியுடன் ரத்தநாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக 24 மணி நேரம் கடந்த பின்னரும் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்க முடியாமல் போக, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின.
மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை.

(அவர் குளிர்பானம் அருந்துவது போன்ற வீடியோ பல சர்ச்சைகளுக்குப் பிறகே வெளியானது.)
அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்து வந்ததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக் குரல் கொடுத்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.
அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் என 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரணை நடத்தினர்.
கூடுதலாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம், இதுவரை ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வரும் அக்டோபர் 24-ம் தேதி வரை இந்த விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ''நீதி விசாரணை வேண்டும்'' என்று தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் பலமுறை விசாரிக்க அழைத்தும் ஆணையாம் இருக்கும் சாலை பக்கம் கூட செல்லவில்லை.
அதுவே அதிமுக தொண்டர்களிடையே  ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக மட்டும்தான் ஜெயலலிதா எப்படி இறந்தாலும் தனக்கு கவலையில்லை என்றிருக்கிறார் என்ற அதிருப்தியை உண்டாக்கி ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் என அவர் மீதிருந்த நல்லெண்ணத்தை உடைத்தெறிந்து விட்டது.

ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளுக்குள்ளாவது, அவரின் மரணம் குறித்த விசாரணை நிறைவுபெறுமா இல்லை, மேலும் நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அன்றே பெரியார் சொன்னார்....,

 பெரியார் 141 வது பிறந்ததின தொகுப்பு.
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் முதல் குரல் எழுப்பினார்.

1924ம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்தி மொழி எதிர்காலத்தில் திணிக்கப்படும் என்பதை உணர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராகப் பேசியும், தனது குடியரசு நாளிதழில் இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து எழுதியும் வந்தார்.
 ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்பு பற்றி ‘குடியரசில்’ (7.3.1925) ‘தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதப்பெற்ற கட்டுரையின் சில பகுதிகள் :

இந்திக்காக செலவாகியிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. 
இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பார்ப்பனர்கள்.
 தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 100க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதாராயிருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயுள்ளனர்.
பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். 
இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.
ஆனால் இந்திக்கு எடுத்துக் கொள்வதைப் போல 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்கு பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு?


இனி கொஞ்சகாலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.

(அன்றே பெரியார் சொன்னது இன்றும்  நடக்கிறது.)
பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப் பிரச்சாரம் செய்யக் கற்பித்துத்தரும் ஒரு வித்தையாகிவிட்டது.
இந்த ரகசியத்தை நமது நாட்டுப் பாமர மக்கள் அறிவதே இல்லை; இரண்டொருவருக்கு அதன் ரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்துகொண்டு தாங்களும் ஒத்துப்பாடுகிறார்கள் யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத்துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள்.
தமிழ்மொழி நம்முடைய தாய் மொழி;
அது மிகவும் உயர்ந்த மொழி;
அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி;
 சமயத்தை வளர்க்கும் மொழி;
பழமையின் மொழி;
உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப் பெறுகின்ற காரணத்தால் நான் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை.

தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால் தமிழைவிட இந்தி மோசமான மொழி; தமிழைவிட இந்தி எந்தவிதத்திலும் மேலான மொழி அல்ல;
தமிழைவிட இந்தி கீழான மொழி;
தமிழுக்குப் பதில் நமக்கு இந்தி வரத்தகுதியற்றது;
இந்தி வருவது நன்மை அல்ல என்ற காரணத்திற்காகத்தான்.

அரசு நடந்துகொள்ளும் போக்கில் இந்தியைக் கட்டாயமாக்குவதும், அதை அரசியல் மொழியாக்குவதும் அலுவல் தகுதிக்கு இம்மொழிப் பாண்டித்யத்தைச் சேர்ப்பதும் திராவிட மக்களை வம்புச் சண்டைக்கு இழுக்கும் அகம்பாவ ஆணவக் காரியமாகும்.
“இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை இல்லை.
அதனால் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை உண்டாகும்; தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும்” என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.
இதுமட்டுமல்லாமல், 1924ல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அப்போதே இந்தியை எதிர்த்து முழங்கினார்.

1924ம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாலையில் நடைபெற்ற 30-வது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியார் தமது உரையில் கூறியதாவது :
“தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், உரோமாபுரி, பாலஸ்தீனம் முதலான தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கு ஏற்ற தொழில்கள் நாட்டில் நிறைந்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச்செய்யும்.
வங்காளிக்கு வங்க மொழிப் பற்றுண்டு.
மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு.
 ஆந்திரனுக்கு அவன் மொழியில் பற்றுண்டு.
ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை. இது பொய்யோ?
 தமிழ்நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்?
ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்?
என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கும்.
தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்” என்று பேசினார் பெரியார்.
பெரியாரின் திராவிட இயக்கம் அவர் வகுத்துத் தந்த பாதையில் இன்றும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து களம் கண்டு வருகிறது.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டு 61 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்த படுபாதக சம்பவம் குறித்தான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
ஆனால், தேசப்பிதாவின் படுகொலைக்குப் பின்னால் எந்த சக்தி இருந்தது? என்பதை அன்றே தோலுரித்துக் காட்டிய தந்தை பெரியாரின் செயல் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுவதற்கு பெரியாரின் அசாத்திய துணிச்சலும், ஒரு பிரச்சினை குறித்த நுண்ணிய அவதானிப்புமே காரணமாகும்.
காந்தியார் மறைவையடுத்து திராவிட இயக்கம் அதிர்ச்சி அடைந்தது.
தந்தை பெரியார் மகாத்மா காந்தியின் படுகொலையை துக்கநாளாக அறிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் மகாத்மாவுக்காக அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன.

காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த பெரியார், “காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.

இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்திருக்கவே வேண்டும்.

அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலிஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும்.
இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (குடிஅரசு, 31-1-1948) என்று தனது அனுதாபத்தை தெரிவித்தார்.
 மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள சதியை அவர் அப்போதே அம்பலப்படுத்தினார்.
காந்தியார் கொலைக்குப் பிறகு வடஇந்தியாவில் நிலவி வரும் மதவெறி தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்கக் கூடாது என்று தந்தை பெரியார் உறுதியாக இருந்தார்.

இதுகுறித்து அவர், “பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார்.
மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது.

அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை ஏற்றுவிட்டன.
காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதரப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.
இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.
வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை.
மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர் (குடிஅரசு,7-2-1948) என்று கூறினார்.

திராவிடர்கள் ஒதுபோதும் மதவெறிக்கு பலியாகமாட்டார்கள் என்று பெரியார் உறுதிபடக்கூறினார். இதுமட்டுமல்ல இந்துத்துவா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் - ஜனசங்கம் ஆகியவற்றை தடைசெய்வதோடு மட்டுமல்லாமல் வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

இதுகுறித்து‘காந்தியார் முடிவு’ என்ற தலைப்பில் 7.2.1948 தேதியிட்ட குடியரசு இதழில், ‘காந்தி பலியாக்கப்பட்டதன் காரணமாய், இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது.
வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்திய சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக்கூடாது.
இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்வார்களேயானால் இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும் ஒரே அடியாய் தீர்ந்துவிடும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்றவற்றைத் தடைசெய்வது மட்டும் போதாது’ என்று அறிக்கை வெளியானது.
ஆக, காந்தியார் படுகொலைக்குப் பிறகு பெரியார் தடை செய்யச் சொன்ன வர்ணாசிரமங்களும், இத்துத்துவ அமைப்புகளும் தமிழ்நாட்டிற்குள் தங்கள் பேயாட்டத்தை ஆட முயற்சித்தும் முடியாமல் போவதற்கு காரணம், தந்தை பெரியார் என்ற ‘தமிழரின் உயிர்வேலி’ தமிழரையும், தமிழகத்தையும் காத்து நிற்பதால்தான்.
                                                                                                                                 -பி.என்.எஸ்.பாண்டியன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...