bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 28 செப்டம்பர், 2019

முடிவுக்கு வரும் "120 நூற்றாண்டுகள்" வரலாறு

அழித்தொழிக்கும்  அரசு...

ஹசன்கீஃப் (Hasankeyf)துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப் போட்டாலும் தகும் )மிகப் பழைமையான பகுதி .கிட்ட்டத்தட்ட 120 நூற்றாண்டுகள்.

தென்கிழக்கு துருக்கியிலுள்ள, பேட்மேன் என்ற பகுதியிலிருந்து அரைமணி நேர தூரத்தில் அமைந்துள்ளது ஹசன்கீஃப்.
டிக்ரிஸ் நதியோரத்தில் அமைந்திருக்கும் இது,
 மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த பகுதி.
இன்றைய உலகின் மிகப்பழமையான பாலைவனச் சோலை இதுதான்.

 வளர்ச்சி என்ற காரணத்தைக் காட்டி டிக்ரிஸ் நதியில் அணை கட்டுவதன் மூலம்  விரைவில் அந்த நகரை நீருக்குள் மூழ்கடிக்கும் கொடுமையான செயலை செய்கிறது  துருக்கி அரசு.
ஹசன்கீஃப்  டிக்ரிஸ் நதியோரத்தில் அமைந்திருக்கும் மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த பகுதி.
பூமியில் மனித நாகரிகத்தின் மிகப் பழைமையான குடியிருப்புகளில் அதுவும் ஒன்று.
சுமார் 12,000 ஆண்டுகளாக அங்கு மனிதர்கள்வாழ்ந்து வந்தார்கள் .தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான குகைகள், தேவாலயங்கள், நினைவுக் கல்லறைகள் உள்ளன. மனித வரலாற்றில் ஓர் அணிகலனாக நிற்கும் இந்தப் பழைமை வாய்ந்த நகரத்தில் தற்போது  86,000 மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பழமையான மனிதர்கள் வாழ்த்த இடத்தைத்தான் இலிசு (Ilisu dam project) என்ற அணையைக் கட்டுவதற்காக அழிக்கப் போகிறார்கள்.
அணை கட்டும் வேலையும் 4,200 ஜிகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகளும் 2006-ம் ஆண்டு தொடங்கியது.
அந்நாட்டின் நான்காவது பெரிய அணையாக உருவெடுக்கப் போகும் இந்த அணையின் கட்டுமான வேலைகள் இன்னும் சில வாரங்களில் முடியப்போகிறது.
அதோடு 80,000 மக்களின் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கடந்து 12,000 ஆண்டுகள் பழைமையான ஹசன்கீஃப் நகரத்தின் ஆயுளும் முடியப் போகிறது.
துருக்கி அரசு அங்கு வாழும் மக்களுக்கு அந்த இடத்தைக் காலி செய்ய அக்டோபர் 8-ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.
 பல ஆயிரம் ஆண்டுக்கால பாரம்பர்யம் மிக்கக் கலாசார அடையாளத்தை அழிக்கக் கூடாது என்று மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தோல்வியடைந்துவிட்டது. இதனால், திறக்கப்படவுள்ள இந்த அணை விரைவில் 4,200 ஜிகாவாட் மின் உற்பத்தியைச் சாத்தியமாக்கும். ஆனால், அதற்கு அது கொடுக்கவிருக்கும் விலை மிகப் பெரியது.
 மக்கள் வாழும் 199 குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும்.
பழங்கால மனிதர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குகைகள் அழிந்துபோகும்.
அதுமட்டுமல்ல  80,000 மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கிலான உயிரினங்களின் வாழ்விடங்கள் தொலைந்துபோகும். அந்தப் பகுதியின் பல்லுயிர்ச்சூழல் பாழாகும்.
4,200 ஜிகாவாட்டுக்கு இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்கத் துணிந்த துருக்கி அரசின் இதயம் நிச்சயம் இரும்பைவிடக் கடுமையானதாகத்தானிருக்க வேண்டும்.

இந்த இடத்தில் வெறும் 10 சதவிகிதப் பகுதிகள்தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கே இவ்வளவு பெரிய வரலாறு கிடைத்துள்ளது.

இதை மேலும் ஆய்வு செய்யவும் திறந்தவெளி அருங்காட்சியகமாக அறிவிக்கவும் அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதை அரசாங்கம் ஏற்கவில்லை.
ஆனால், அணை கட்டுவதற்கான திட்டத்தை ஏற்று அதற்கு அனுமதியும் கொடுத்து அத்தனை அடையாளங்களையும் அழிக்கப் பார்க்கிறது.
மெசபடோமியா, பைசான்டியம், அரேபியப் பேரரசுகள், ஓட்டோமன் பேரரசு என்று பல வரலாறுகளின் மிச்சங்களை ஹசன்கீஃப் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த நகரத்தைப் பற்றிய குறிப்புகள் பழைமை வாய்ந்த அஸ்ஸிரியன், ஆர்மேனியன், குர்தீஷ், அரேபிக் மொழிகளில் உள்ளன.
 இந்த அணை, இவை அனைத்தையுமே மென்று விழுங்கி ஏப்பம் விடப் போகிறது.

யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்கு இதைவிடத் தகுதி வாய்ந்த ஒன்று இல்லவே இல்லையென்று கூறுகிறார் மத்திய ஃப்ளோரிடாவில் வரலாற்று ஆய்வாளராக இருக்கும் ஹகன் ஒஸோக்லு.
ஹசன்கீஃபுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கக் கலாசார அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

அதைச் செய்யக் கோரி, மக்களும் 'ஹசன்கீஃபைக் காப்பாற்றுங்கள்' இயக்கமும் எவ்வளவோ மனுக்களைக் கொடுத்துவிட்டனர்.
ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்துக்கு உரிய அங்கீகாரத்தை இத்தனை நாள்களாகக் கொடுக்காதிருந்ததே இந்தத் திட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதை உரிய முறையில் செய்திருந்தாலே போதும்.
இந்த அணை கொடுக்கும் வருமானத்தைவிட அதிகமாகச் சுற்றுலாத் துறை கொடுத்திருக்கும்.

தி கார்டியன் என்ற ஆங்கிலப் பத்திரிகை, துருக்கியின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சகத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``பேசப்பட வேண்டிய எத்தனையோ திட்டங்கள் இருக்கையில், இதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?" என்பதே அவர்களின் பதிலாக இருந்துள்ளது.

 அணைக்கு எதிராக அல்ல.அழிக்கப்படும் மனித வரலாற்று ஆதாரங்களை காக்கப்போராடும் போராடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
சிறையில் அடைக்கப்படுகிறார்கள். துருக்கியில் மக்களாட்சி சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த மக்கள் விரைவில் ஹசன்கீஃபைக் காலி செய்தாக வேண்டும்.
அரசு காலக்கெடு விதித்துவிட்டதால், அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வரலாற்றுச் சின்னங்களுக்கு வருகை புரிந்து மிகுந்த மன வேதனையோடு அவற்றுக்குப் பிரியாவிடை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் அணையின் கதவுகள் திறக்கப்படும்.
அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக உயரும் நீர்மட்டத்தில் மூழ்கடிக்கப்படும். அந்த அணைக்குள் 120 நூற்றா ண்டுகள்   வரலாறும் மூழ்கி மறையும்.நிரந்தரமாக .
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நச்சு சர்க்கரையாகும் நாட்டுச் சர்க்கரை.

முன்பு மக்களால் அதிகம் பயன்படுத்தப் படாமல்,அதிக விற்பனையாகாததாக இருந்தது நாட்டுச் சக்கரை.
ஆனால் ரசாயனப் பொருட்காளால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியால் ஏற்படும் கெடுதலான விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்ததால் தற்போது பலர் நாட்டுச் சக்கரை பயன்படுத்துகிறார்கள்.

பல தேநீர்க்கடைகளில் நாட்டுச் சக்கரை தேநீர்,காபி கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள்.
  நாட்டுச் சக்கரை விற்பனை அதிகரித்தால் நம் கலப்பட வியாபாரிகள் கைகள் சும்மாயிருக்குமா என்ன?

மாமபழத்தில் இருந்து வாழைப்பழம்,ஆப்பிள் வரை ரசாயணங்களைக் கலந்து செயற்கையாகப் பழுக்கவைத்து வருபவர்களாயிற்றே?
தற்போது நாட்டுச் சக்கரையிலும் தங்கள் அபாயகரமான கைகளை வைத்து விட்டனர்.

 நாட்டுச் சர்க்கரையில் அஸ்கா கலப்பதோடு ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் என பல ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள்.

இதன் மூலம் அதிக இனிப்பு சுவையை உருவாக்குவதுடன் ,பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும்,உதிரியாக இருப்பதாகவும் காட்டி கவர்ச்சியான பொட்டலங்களில் அடைத்து விற்கின்றனர். அதிக விலைக்கு விற்கிறார்கள்.

ஆனால் கவர்ச்சிக்கு மயங்கி தரமான பொருளாக எண்ணி இதை வாங்கிப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்று நோய்  உட்பட பல வியாதிகள் வந்துஉயிரே பறி போகும் அபாயம் உருவாகியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...