bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

புல்வாமா பயங்கரம்


 யார் காரணம்?
பிப்ரவரி 14ம் தேதி ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய கோழைத்தனமான கொடூரமான தாக்குதலில் மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வீர மரணம் அடைந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

 இந்திய தேசமே இந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.
எனினும் இந்த குடும்பங்களின் இழப்பை எவரும் ஈடு செய்ய இயலாது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது உரிமை கோரியுள்ளது.
எனவே பாகிஸ்தான் அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.
 இந்தியாவும் உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வற்புறுத்தியும் எப்படி தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுகின்றன எனும் கேள்விக்கு இம்ரான்கான் அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

பாஜக விடுதலை செய்த தீவிரவாதத் தலைவன்
புல்வாமா கொடூரமான தற்கொலை தாக்குதலை நடத்தியது 19 வயதே ஆன ஆதில் அகமது தர் எனும் காஷ்மீரி இளைஞன்!
இதற்கு முன்பும் 16 வயதுள்ள சிறுவனை கூட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தி யுள்ளது.
 இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என ஆதில் அகமது தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காணொலியில் மிரட்டுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
 இந்த காணொளியை நீங்கள் பார்க்கும் பொழுது நான் சொர்க்கத் தில் இருப்பேன் என ஆதில் கூறுவது, எந்த அளவிற்கு அந்த இளைஞன் மூளைச் சலவைசெய்யப்பட்டுள்ளான் என்பதை உணர்த்து கிறது. இத்தகைய இளம் வயதினர் ஏன் தீவிரவாதம் பக்கம் சாய்கின்றனர் என்பதும் கவலையுடன் பரிசீலிக்க வேண்டிய அவசர அவசிய அம்சம் ஆகும்.

ஜெய்ஷ்-இ-முகம்மது பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டிருந்தது.
ஆனால் சில ஆண்டுகளாக காஷ்மீர் உள்ளூர்இளைஞர்களை ஈர்ப்பதில் ஜெய்ஷ்-இ-முகம்மது வெற்றி அடைந்துள்ளது.
 இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாத் என்பவன்!

பாகிஸ்தானில், அந்த நாட்டின் உளவு அமைப்பு மற்றும் இராணுவ உதவி யுடன் செயல்படும் இந்த தீவிரவாதி 5 ஆண்டுகள் இந்திய சிறைகளில் இருந்தவன் என்ப தை நம்ப முடிகிறதா?
ஆம் 1994 முதல் 1999வரை இந்திய சிறைகளில் இருந்தான் மசூத் அசாத்!

1999ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது இந்திய விமானம் கடத்தப் பட்டு காந்தஹாரில் நிறுத்தப்பட்டது.
இந்த விமானம் அமிர்தசரசில் இறங்கிய பொழுது அதனை முடக்கியிருக்க முடியும். ஆனால்பா.ஜ.க. அரசாங்கத்தின் கையாலாகாத்தனத் தால் அது தப்பியது.

பின்னர் விமான பயணிகளை காப்பாற்ற அன்றைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், மசூத்தை தன்னுடன் அழைத்துச் சென்று தீவிரவாதிகளிடம் ஒப்படைத்தார். அதாவது விடுதலை அளித்தார்.
அந்த மசூத் அசாத் இன்று காஷ்மீரில் பயங்கர வாதத்தை அரங்கேற்றும் முக்கிய தீவிரவாத தலைவனாக உருவெடுத்துள்ளான்.
 இந்திய இராணுவ வெளியுறவு வரலாற்றில் ஒரு கையாலாகாத்தனம் இருந்தது எனில் அது பாஜக ஆட்சி நடத்திய அந்த தருணம்தான்.

கடும் பாதுகாப்பை தீவிரவாதி மீறியது எப்படி?
புல்வாமாவில் தாக்குதல் எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
ஏனெனில் 2400க்கும் அதிகமான வீரர்கள் 75 வாகனங்களில் வந்த ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மிகவும் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது ஆகும்.
 இராணுவ அல்லது ஆயுதப்படையினரின் வாகனங்கள் செல்லும் பொழுது தனியாரின் வாகனம் - எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது என்பது நடைமுறை விதி!

அப்படியிருக்கும் பொழுது ஒரு ஸ்கார்ப்பியோ வாகனம் - அதுவும் 350 கிலோ வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு வீரர் களின் வாகனங்களை முந்துவதும் தாக்குதல் நடத்துவதும் எப்படி சாத்தியமாயிற்று?

இந்த கேள்விக்கு மோடி அரசாங்கமும் அவரது பிரதிநிதியாக உள்ள காஷ்மீர் ஆளு நரும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
தாக்குதல் நடந்ததற்கு காரணம் பாது காப்பு குறைபாடுதான் என ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.
 அதனை விசாரிப்போம் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
 என்னவிசாரித்தாலும் இழந்த உயிர்கள் மீண்டும் வருமா?


 இதே ஆளுநர் இன்னொரு முக்கிய மான உண்மையையும் கூறியுள்ளார்.
 இத்தகைய தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை இருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
 அப்படியெனில் ஏன்முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?
 ஏன் நமது வீரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படவில்லை?
வீரப்பன் என்கவுண்ட்டர் மற்றும் வெங்கடேச பண்ணையார் சட்டவிரோத என்கவுண்ட்டர் புகழ் விஜயகுமார்தான் காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளை அழிக்கும் வல்லமை படைத்த ஜாம்பவான்கள் என தம்மை அழைத்துக் கொள்வோரின் திறமையின்மைதான் நமது வீரர்களின் மரணத்திற்கு காரணம் எனும் குற்றச் சாட்டு எப்படி தவறானதாக இருக்க முடியும்?

பொருத்தமான பதிலடி என்ன?
இந்த கோழைத்தனமான தாக்கு தலுக்கு பொருத்தமான பதிலடி தரவேண்டும் என பரவலான கருத்து எழுந்துள் ளது.
 “பொருத்தமான பதிலடி” எது என்பது தான் முக்கிய கேள்வி ஆகும்.
ஏற்கெனவே ஜம்மு பகுதியில் காஷ்மீர் முஸ்லிம் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ச
ங்பரி வாரத்தினர் “அல்லாவின் பெயரை உச்சரிக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்” எனவும்“முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க அனு மதிக்க மாட்டோம்” எனவும் கூப்பாடு போட ஆரம்பித்துள்ளனர்.

மோடி யின் ரிபப்ளிக் தொலைக்காட்சி ‘‘இந்தியா பழிதீர்க்க வேண்டும்”எனும் டிவிட்டர் தொகுப்பில் “திருப்பி அடிப்ப தைத் தவிர இந்தியாவுக்கு வேறு ஏதாவது வழி உள்ளதா?” என ஆத்திரத்தைக் கட்டமைக்க முயல்கிறது.

மோடி ஆட்சியின் பொழுது குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என தினமும் தகவல்கள் வந்தன.
 அது உண்மையும் கூட! தீவீரவாதிகளை முழுவதுமாக ஒழித்துகட்ட “ஆபரேஷன் ஆல் அவுட்” எனும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக மோடி அரசாங்கம் கூறியது.
ஆனால் புல்வாமா தீவிரவாத தாக்குதல் மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
 தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டு வரு கின்றனர் எனில் இத்தகைய மிகப்பெரிய தாக்குதல் எப்படி சாத்தியம் எனும் வாதம் எழுவது இயற்கையே!

இந்தியாவுடன் காஷ்மீர் ஏன் இணைந்தது?
1947ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பொழுது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை!
காஷ்மீர் மக்களிடையே கீழ்கண்ட மூன்று விருப்புரிமைகள் இருந்தன:
1) பாகிஸ்தானுடன் இணைவது.
2) இந்தியாவுடன் இணைவது.
3) தனி நாடாக இருப்பது.

இதில் எந்த முடிவை காஷ்மீர் மக்கள்எடுத்திருந்தாலும் அதனை ஏற்க வேண்டிய கட்டாயம் இந்தியா- பாகிஸ்தான் அரசுகளுக்குமட்டுமல்ல; ஐ.நா.உட்பட அனைவருக்கும் இருந்தது.

ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. அவர்கள் எடுத்த முதல் முடிவு பாகிஸ்தானுடன் இணைவது இல்லை என்பதுதான்!
 இதனாலேயே ஷேக் அப்துல்லாவை முஸ்லிம் விரோதி எனவும் ரவுடி எனவும் ஜின்னா வசைமாரி பொழிந்தார்.
இந்தியாவுடன் இணைவது அல்லது தனி நாடாக இருப்பது எனும் இரு கருத்துகளுமே காஷ்மீர் மக்களிடையே வலுவாக இருந்தன.
இந்தியா- பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்- சீனா ஆகிய நாடுகள் சூழ்ந்திருக்கும் பொழுதுகாஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக இருப்பதில் உள்ளசிக்கல்களை ஷேக் அப்துல்லா உணர்ந்திருந் தார். இந்தியா தன்னை மதச்சார்பின்மை தேசமாக அறிவித்தது.
 இது காஷ்மீர் மக்களுக்குஓரளவு நம்பிக்கையை உருவாக்கியது.

தங்களது கலாச்சாரத்தையும் ஏழை விவசாயி களுக்கு நிலங்களை அளிக்கும் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை பாதுகாக்கவும் வேறு சில அரசியல் உரிமை களுக்கான உத்தரவாதங்களையும் காஷ்மீர் மக்கள் கோரினர். அத்தகைய உத்தரவாதங்கள் அளிக்கப் பட்டால் இந்தியாவுடன் இணைவோம் எனவும் கூறினர்.
இதற்காக உருவாக்கப்பட்டதே 370வது அரசியல் சட்டப்பிரிவு!

அந்நியப்பட்ட காஷ்மீர் மக்கள்
மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள் 370வது பிரிவை நீர்த்துப் போகச் செய்தன. அதுவும் மோடி தலைமையிலான அரசாங்கம் காஷ்மீர் மக்களை அரசியல் ரீதியாக தனது ஆதாயத்திற்காக பகடைக்காயாக பயன்படுத்தியது.
 இராணுவம் மூலம் மட்டுமே காஷ்மீர் மக்களை வழிக்கு கொண்டு வந்துவிட முடியும் என கணக்கு போட்டது. காஷ்மீர் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்காமல் பிரச்சனையை தீர்க்க இயலாதுஎன இடதுசாரிகளும் காஷ்மீர் வரலாற்றை அறிந்தவர்களும் தொடர்ந்து கூறிவந்தனர்.

ஆனால் மோடி அரசாங்கம் காஷ்மீர் மக்களுடன் எந்த ஒரு அரசியல் பேச்சுவார்த்தை க்கும் தயாராக இல்லை. இதன் காரணமாக காஷ்மீர் மக்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டனர். இது தீவிரவாதத்திற்கு வழி கோலியது. பாகிஸ்தானின் இந்திய விரோத செயல்களுக்கு வாய்ப்பை உருவாக்கியது.


தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பில்லையா?
பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அலோக் அஸ்தானா கீழ்கண்ட நியாயமான கேள்வியை முன்வைக்கிறார்?
“இந்த தாக்குதலை நடத்திய ஆதில் அகமது பாகிஸ்தானி குடிமகனோ அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யிலிருந்து வந்தவனோ அல்ல. இந்த இளைஞன் உள்ளூர் காஷ்மீர் புல்வாமா பகுதியைசேர்ந்தவன்.
 படித்தவர்களும் வசதி வாய்ப்பு களும் உள்ள உள்ளூர் காஷ்மீரிகள் ஏன் இப்படிதங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள துணி கின்றனர்?
 இந்த கேள்விக்கு ஓரளவு பதில் காணமுயன்றாலே போதும், காஷ்மீர் பிரச்சனையைதீர்ப்பதற்கு வழிவகை உண்டாகி விடும்”- இந்திய இராணுவ அதிகாரியின் இந்த கருத்து நியாயமானதில்லையா?

வெளியுறவு அமைச்சக முன்னாள் அதிகாரி பத்ரகுமார் கீழ்கண்ட முக்கிய கேள்வியை முன்வைக்கிறார்:“இந்த தாக்குதல் ஏன் இந்த தருணத்தில் நடக்கிறது?
இது தற்செயலானதா?

2019 நாடாளுமன்ற தேர்தல்கள் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தருணத்தில் ஏன் இந்த தாக்குதல்?
இன்னும் ஓரிரு நாட்களில் தலிபானுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானில் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது. அமெரிக்காவின் டிரம்ப், தனது படைகளை திரும்பப்பெற முனைகிறார்.
இந்த பேச்சு வார்த்தையில் அமெரிக்காவுக்கு உதவுவது பாகிஸ்தான்.
அப்படி எனில் பாகிஸ்தானை ஒரு எல்லைக்கு மேல் அமெரிக்கா கண்டிக்க முடியாத தருணமா இது?

 பிப்ரவரி 18ம் தேதியன்று தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் யாதவ் வழக்கு இறுதி விசார ணைக்கு வர உள்ளது.
 இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் கடுமையான வாதப்போரில் ஈடுபடும் சூழல் உள்ளது. இந்த தாக்குதலின் தருணம் அதனுடன் தொடர்புடையதா?
பத்ரகுமார் முன்வைக்கும் இந்த கேள்வி களும் புறம் தள்ள முடியாதவை.இந்த தாக்குதலை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன.

 எனினும் காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் எனும் மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
அடிப்படையில் காஷ்மீர் மக்களை வென்றெடுக்க வேண்டும். அதற்கு அரசியல் கருத்துப் பரிமாற்றங்களும் அரசியல் தீர்வும் தேவை.
இதனுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு பாகிஸ்தானை ஆதரவு தராமல் இருக்க நிர்பந்திக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும்.
இறுதியாக இராணுவ நடவடிக்கைகள் என்பது அரசியல் தீர்வுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதல் மிகத்தெளிவாக கூறும் செய்தி இதுதான்!
இதனை மோடி அரசாங்கம் உணருமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

                                                                                                                                                                                                         -அ.அன்வர் உசேன்

நன்றி:தீக்கதிர்.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல்வர்,டிஜிபி இணைந்து காவல்துறையில் ரூ.88 கோடி முறைகேடு.
   -மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.
காவல்துறையில் ரேடியோ சிஸ்டம் வாங்க விடப்பட்ட ரூ.88 கோடி டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முதல்வர் பழனிசாமி - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

"சென்னையிலும், திருச்சியிலும் உள்ள காவல்துறைக்கு ‘டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்’ உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. ‘ஆப்கோ பிராஜெக்ட்’ என்ற பெயரில் காவல்துறையை நவீனமயமாக்கும் நிதியில் இருந்தும் மாநில அரசின் நிதியிலிருந்தும் செயல்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான டெண்டர் முறைகேடுகள் அதிமுக அரசின் கரி பூசிய ஊழல் முகத்தை மீண்டும் காட்டியிருக்கிறது.

2012-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 38 கோடி ரூபாயில் முடித்திருக்க வேண்டியது. ஆனால், அதிமுக அரசின் கஜானாவில் கொள்ளையடிக்கும் கலையால் இந்தத் திட்டத்தின் மதிப்பு இன்றைக்கு 88 கோடி என்று உயர்ந்து அதிலும் மாபெரும் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது.
இந்த டெண்டரில் ஒரே ஒருவரிடம் ஒப்பந்தம் பெற்று அவருக்கே காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் இந்த ரேடியோ டிஜிட்டல் சிஸ்டம் இயங்காது. ஆனால், டெண்டரின் முக்கிய நோக்கமே சுரங்கப்பாதைகளிலும் இந்த சிஸ்டம் செயல்பட வேண்டும் என்பதுதான்.

இந்த டெண்டர் போட்டவர் என்ன விலை கேட்டாரோ அந்த அதிக விலையை எவ்வித தயக்கமுமின்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் அளித்திருக்கிறார்.
இந்த முறைகேடுகளின் பட்டியல், ஒரு டெண்டரை எப்படி முடிவு செய்யக்கூடாதோ அந்த அளவுக்கு மோசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
 ஊழல் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே ஒற்றை நோக்கமாக வைத்து ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் போட்டவருடன் முறைப்படி பேச்சு நடத்தி விலையைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. டெண்டரில் செலுத்த வேண்டிய வரி பொறுப்புகளை ஒப்பந்ததாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டெண்டர் விதிகள் இருந்தபோதிலும் அவருக்கு ஜிஎஸ்டி தனியாக 5 கோடி ரூபாய் அனுமதித்துள்ளார்.

டெண்டரில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பல மடங்கு அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது.
 மொபைல் தொடர்பான சாதனங்களிலும் கையடக்கத் தொடர்பான சாதனங்களிலும் மட்டும் 23 கோடி ரூபாய்க்கு மேல் அதிகம் ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்டு அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி வரலாறு கண்டிராத டெண்டர் முறைகேடுகள் செய்து அரசுக்கு 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரனும் இந்தத் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஊழல் செய்திருப்பது வேதனையானது மட்டுமல்ல - வெட்கக்கேடானது.

இந்த சட்டவிரோத சலுகைகளையும் அப்பட்டமான விதிமீறல்களையும் உள்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டி டிஜிபியிடம் கேள்வி எழுப்பிய பிறகும் இந்த டெண்டரை முறைகேடாக அளித்திருக்கிறது டி.கே ராஜேந்திரன் - பழனிசாமி கூட்டணி

காவல்துறைக்கு தலைவராக இருக்கும் டி.கே ராஜேந்திரன் ஊழல் செய்வதற்கு முதல்வர் பச்சைக் கொடி காட்டுவது மட்டுமின்றி பாதுகாப்பாகவும் நிற்பது தமிழக காவல்துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
88 கோடி ரூபாய் ‘டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்’ டெண்டரில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து, தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் செய்தவர்கள் ஊழலுக்கு துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...