bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 17 மே, 2017

அய்யாக்கண்ணுகளும் அதானிகளும்

இம்மாதம் முதல் வாரத்தில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஐக்கியஜனதாதளம் உறுப்பினர் பவன் வர்மா முக்கியமான கேள்வியை எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. 
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 72,000 கோடிரூபாய் என்றும் இந்த தொகை நாட்டின் உள்ளமொத்த விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன்தொகைக்கு சமமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய். 
அதுமட்டுமல்ல. விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகையை போன்று இதுஎட்டு மடங்கு அதிகம் ஆகும். பெரும் தொழிலதிபர்கள் கடன் கேட்கும் பொழுது உடனடியாககொடுக்க அரசு வங்கிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த தகவலை கூறி விட்டு, பவன் வர்மா, இந்த அரசுக்கு இந்த விவரங்கள் தெரியுமா என்றும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவினார்.

மேலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள தொழிலதிபர் கவுதம் அதானி,மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுடன், பிரதமருடன் சீன, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றார். 
அது மட்டுமின்றி, கவுதம் அதானி குஜராத்தில் உள்ளசிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சில தொழில்களை தொடங்க அனுமதி கேட்ட பொழுது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுஅதை தொடங்குவதற்கான வரைமுறைகளின் கீழ் இல்லை என்று கூறி மறுத்து விட்டது.
ஆனால், மோடி அரசு பதவி ஏற்றவுடன் அந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார். இது மிகப்பெரிய மோசடியின் ஒரு சிறு துளி மட்டுமே.

எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி என்ற பத்திரிகை, அதானி குழுமம் பினாமி கம்பெனிகளை உருவாக்கி ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பதைஐந்து ஆய்வாளர்களின் உதவியுடன் கண்டுபிடித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. 
ஸபரஞ்சே குஹா தாகுர்தா, ஷன்ஜானி ஜெயின், அத்வைத் ராவ் ஆருஷி கலரா, நடாஷா பிடே மாய பண்டிட் மற்றும் முக்தா கிஞ்சவடேகர்] கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, வருவாய் புலனாய்வு இயக்ககம் [DRI] கவுதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம்பல போலி கம்பெனிகளின் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றம் செய்வதையும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதை பற்றியும்நிறைய தகவல்கள் சேகரித்து வந்துள்ளது. 
இந்த போலி கம்பெனிகள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் மற்றும் தங்க நகைகளின்வியாபாரத்தில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன என்பது ஆய்வில் தெரிகிறது. வருவாய் புலனாய்வு இயக்ககம் நிதி அமைச்சகத்தின் முக்கியப் பிரிவு ஆகும்.
பல முறை ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்என்பதால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதில் சட்டரீதியிலான விஷயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், நிதிஅமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், அதைச் செய்ய என்ன தயக்கம்?எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லிபத்திரிகை சார்பில் விரிவான கேள்விகள் அடங்கிய, விவரங்களை கோரும் படிவங்களை கீழ்க்கண்டவர்களுக்கு அனுப்பியது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஐந்து மூத்த அதிகாரிகள்;
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அந்நியவர்த்தகத் துறை இயக்குநர் ;
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும்
கவுதம் அதானி
கேள்விகள் அடங்கிய படிவங்கள் இ.மெயில் மூலமாகவும் தபால் மூலமாகவும் 18,நவம்பர் 2016 அன்று அனுப்பப்பட்டது. அதானிமற்றும் சட்ட அமைச்சர் அலுவலக பிரதிநிதிகள் பதில் அனுப்பினர். அமைச்சர்கள்அ ருண்ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன், அவர்களுடைய துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

வரி ஏய்ப்பு செய்தது எப்படி?
இது ஒரு நீண்ட கதை. சுருக்கமாக பார்ப்போம். 
அரசு தரப்பில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பல திட்டங்கள் அமலில் உள்ளன. அதானிகுழுமம் இத்தகைய ஏற்றுமதி சலுகைகளை பயன்படுத்தி பல போலி கம்பெனிகள்(ஷெல் கம்பெனிகள்) மூலம் உலகின் பல நாடுகளுடன்வர்த்தகத்தில் ஈடுபடுவது போல காண்பித்து,சுற்று வணிகத்தில் (‘circular trading’) ஈடுபட்டுள்ள்ளது. அதாவது அனைத்து கம்பெனிகளும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, அதானி குழுமத்தின் (அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்) கட்டுப்பாட்டில் இருப்பவை.

2007ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, அதானி குழுமம் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வந்தது. இந்த ஷெல்கம்பெனிகள் வணிக அமைச்சகம் அந்நிய வர்த்தகத்திற்கு அளிக்கும் ஊக்குவிப்பு திட்டங்களை தவறாகப் பயன்படுத்தி, வைரம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதியை "செயற்கையாக அதிகரிக்கும்" நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை பயன்படுத்தி வரிஏய்ப்பு செய்ததற்கு வருவாய் புலனாய்வு இயக்ககம் பல முறை நோட்டீசுகள் அனுப்பி உள்ளது. ஆனால் அதானி குழுமம் அவற்றைமறுக்கிறது.
வணிக அமைச்சகம் கொண்டு வந்த ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படுவது டிரேடிங் ஹவுஸ் திட்டம்.இதன் கீழ், எந்த அளவுக்கு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்கும். 

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு ஏற்றுமதிசெய்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு "ரேங்க்" தரப்படும். மிக அதிகமாக ஏற்றுமதி செய்வோருக்கு "ஸ்டார் ரேங்க்" தரப்படும்.மேலும் 2003-04இல் சுங்க வரி விலக்குதொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் கீழ், ‘ஸ்டார் டிரேடிங் ஹவுசஸ் எனவகைப்படுத்தப்பட்ட கம்பெனிகள் எந்த அளவுக்கு ஏற்றுமதியை அதிகரித்துள்ளனவோ, அதில் பத்து சதவீதம் பணமாக லாபம் ஈட்ட முடியும். 2002-03இல் அதானி குழுமத்தின் ஏற்றுமதி மதிப்பு 400 கோடி ரூபாயாக இருந்தது. 
திட்டங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஐந்து கம்பெனிகளை துவக்கியது.ஸஹிந்துஜா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஹெச்.ஈ.பி.எல்), ஆதித்ய கார்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட்ஸஎ.பி.சி.எல்], பகாடியாபிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட்ஸபி.பி.பி.எல்.) ஜெயந்த் அக்ரோ ஆர்கானிக்ஸ் லிமிடெட் (ஜே.எ.ஒ.எல்) மற்றும் மிடெக்ஸ் ஓவர்சீஸ் லிமிடெட் (எம்.ஒ.எல்) இந்தஐந்து கம்பெனிகள் தவிர, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நேரடியாகவும், மறைமுகமாகவும் 45 கம்பெனிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள ஐந்துகம்பெனிகளின் மொத்த ஏற்றுமதி திடீரென11 மடங்கு அதிகரித்தது.
 ஒரே ஆண்டில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்தது. 
பட்டை தீட்டப்படாத வைரங்கள், தங்கநகைகள் ஏற்றுமதியானதாக காண்பிக்கப்பட்ட கணக்கு தவறானவை என்று தெரிய வந்தது.
31 மார்ச் 2017அன்று மீண்டும் வருவாய் புலனாய்வு இயக்ககம் அதானி குழுமத்திற்கு நோட்டீசு அனுப்பியது. இரண்டே ஆண்டுகளில், ஏற்றுமதி அதீதமாக அதிகரித்திருப்பது எப்படி என வினவியது. ஊக்குவிப்புத் திட்டங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பரஸ்பரம் தங்கள் கம்பெனிகளுக்குள்ளேயே வணிகம் நடத்தி கொள்ளை லாபம் ஈட்டியது தெரிய வந்தது.

2005-06இல் ஏற்றுமதி திடீரெனசரிந்தது. எப்படி? 
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களை கார்ப்பரேட்டுகள் தவறாகப் பயன்படுத்துவதை அறிந்து , அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன. அது மட்டுமின்றி உயர்ரக மெட்டல்கள், பட்டை தீட்டப்படாத வைரங்கள், தங்கநகைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் நிகர பண லாபங்கள் வாபஸ் என அரசு அறிவித்தது. இதை அதானிகுழுமம் கடுமையாக எதிர்த்தது. 

மத்திய அரசின் நோட்டீசை எதிர்த்து, குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. (அதானிஎக்ஸ்போர்ட் ஸ்லிமிடெட் ஓ யூனியன் ஆப்இந்தியா) தீர்ப்பு அதானி குழுமத்திற்கு எதிராகவந்தது.
தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்ற அதானி குழுமத்திற்கு ஆதரவாக வேறுசில ஏற்றுமதி கம்பெனிகளும் வழக்கு தொடுத்ததால், வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எ.கே.சிக்ரியும், ரோஹிண்டன் எப்.நாரிமன்னும் இந்தியா பட்டை தீட்டாத வைரம் உற்பத்தி செய்யும் நாடு அல்ல என்றும்,ஏற்றுமதி கம்பெனிகள் துபாயிலும், ஷார்ஜாவிலும் உள்ள தங்கள் கம்பெனிகளுக்கே ஏற்றுமதிசெய்வதும், சலுகை திட்டங்களை தவறாக பயன்படுத்துவதையும் கடுமையான வார்த்தைகளில் சுட்டிக்காட்டி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் என்பது ஒரு மிகப் பெரியசாம்ராஜ்யம். கவுதம் அதானி தவிர அவரதுசகோதரர்கள் ராஜேஷ் அதானி மற்றும் வசந்த அதானி இயக்குநர்களாக செயல்படுகின்றனர். 

வருவாய் புலனாய்வு இயக்ககம் இக்குழுமம் செயல்படும் விதம் பற்றி தெளிவான அறிக்கையை தயாரித்துள்ளது. இக்குழுமத்தின் பணிகளை முழுவதுமாக மேற்பார்வையிடும் வேலையை அதானியின் சகோதரியின் கணவர் சமீர் வோரா செய்கிறார்.

அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பெனிகள் மொலாசஸ்ஸகரும்பு ஆலை கழிவு], சோயாபீன்ஸ், விளக்கெண்ணெய், அரிசி, இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன என்பது வருவாய் புலனாய்வுத் துறைக்கு தெரியவந்தது. யூ.ஏ.இ, ஹாங்காங், சிங்கப்பூர் போன்றநாடுகளுடன் நடைபெறும் ஏற்றுமதி-இறக்குமதி தொழில்கள் மூலம் பல கோடி ரூபாய் கிட்டுகிறது.

கற்கள் பதித்த தங்க நகைகள் சுற்று வணிகத்தின் மூலம் தங்க ஏற்றுமதி நடைபெறுகிறது. 
இவற்றின் மதிப்பு பல லட்சம் அமெரிக்கடாலர்களாகும். எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி தரும் புள்ளிவிவரங்களும், பட்டியல்களும் அதானி குழுமத்தின் வருவாய் மோசடிகளை அம்பலப்படுத்துவதுடன், அரசின்திட்டங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறது.

2013இல் "கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மற்றும் வைர வணிகம் மூலம்தீவிரவாதிகளுக்கு நிதி" என்ற அறிக்கையை நிதி சார் நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டது.அதில் உலகில், வெட்டி பட்டை தீட்டும் வைர வணிகத்தில் இந்தியாவின் பங்கு 90 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணம் வைர வணிகமெல்லாம் எவ்வாறு இந்தியாவுக்குள் வருகிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வருவாய் புலனாய்வு இயக்ககம் தனது பணியைச் செய்து விட்டது. 

அனைத்து தகவல்களையும் முறையாகத் திரட்டி, உச்சநீதிமன்றம் வரை சென்ற பின்னரும், மத்திய அரசின் நிதி அமைச்சர் மௌனம் காப்பது ஏன்? வணிகத் துறை அமைச்சரும் மெளனமாக இருப்பது ஏன்?அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது.

ரூபாயின் மதிப்பைக் குறைத்து, கறுப்புப்பணத்தை தடுப்பதாகவும், தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஒடுங்கிவிடும் என்றும் கூறிய பிரதமர், வைர வணிகம் மூலம் வெள்ளையாகும் கறுப்புப் பணம் பற்றியும், அதன் மூலம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு பணம் கிடைப்பது பற்றியும் என்ன சொல்ல விழைகிறார்?

வருவாய் புலனாய்வு இயக்ககம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிரத்தையுடன் பணிசெய்து திரட்டிய தகவல்களுக்கு என்னபதில்?

ஆயிரம் கோடி ரூபாய் வரை அதானி குழுமம் வரி ஏய்ப்பு செய்துள்ளதை புலனாய்வுஇயக்ககம் சுட்டிக்காட்டியும் அது தொடர்பான அமைச்சகங்கள் அமைதி காப்பது ஏன்?

இந்திய தலைநகரில், நாற்பது நாட்கள், விடாமல் அய்யாக்கண்ணு தலைமையில் போராடிய விவசாயிகளை சந்திக்க பிரதமர் முன்வரவில்லை. 
ஆனால், நடிகர் அக்ஷய்குமாரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். 
அய்யாக்கண்ணு போராடிய பொழுது, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விவசாயிகள் போராட்டத்தை அரசியலாக்கக் கூடாது என்றனர். 

ஆனால், சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றில், நிருபர்‘உ.பியில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது போல, இங்கேயும் செய்யக்கூடாதா என்று கேட்ட பொழுது, அக்கட்சியின் தலைவர் தமிழிசை, "அங்கு பாஜகவின் ஆட்சி.

இங்கேயும் தாமரைக்கு வாக்களியுங்கள். பின்புநடக்கும்" என்றார். இது அரசியல் இல்லாமல் வேறு என்ன? 
மற்றொரு தலைவர் ஹெச். ராஜா"அய்யாகண்ணுவுக்கு ஆடிக் காரும் இருநூறு ஏக்கர் நிலமும் இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளும், தி.மு.கவும் தான் தூண்டி விடுகின்றனர்." 
என்றதும் கொதித்து போன அய்யாகண்ணு "ராஜா சொன்னது உண்மை என்றால் நான் தூக்கில் தொங்குகிறேன்.அதுபொய் என்றால் அவர் தூக்குப் போட்டுக் கொள்ளத் தயாரா’’ என்று கேட்டதுடன் தான்முன்பு பாரதிய கிசான் சங்கத்தில் இருந்ததாகவும் இப்பொழுது விலகிவிட்டதால் தவறாகப் பேசுகின்றனர்" என்பதையும் குறிப்பிட்டார்.

இந்திய விவசாயிகள் சட்ட சலுகைகளை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட வேண்டுமென கோரவில்லை. வானம், பொய்த்து, விவசாயம் செய்ய வழியின்றி, வாங்கிய கடனைதிருப்பிச் செலுத்த முடியாமல், வங்கிகளின்நிர்ப்பந்தத்தால் கூனிக் குறுகி, அவமானப்பட்டு, கொத்துக் கொத்தாய் செத்து மடிவதைதடுக்க வேண்டும் என்றும், கட்டுப்படியாகும் விலை வேண்டும்; 
காவிரி நீருக்கு உத்தரவாதம் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தான் கோருகின்றனர்.
ஒட்டு மொத்த விவசாயிகளும் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை போன்ற அளவுக்கு ஒரு குடும்பம் செலுத்த வேண்டிய கடன் பாக்கி இருக்கிறது.


 விவசாயிகள் செத்து மடிவதை பார்த்து, கேட்டு, அதற்கு நிவாரணம் பற்றிஒரு வார்த்தை கூட சொல்லாத பிரதமர், தனதுநண்பர் அதானியை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்று அவர் தொழில் தொடங்கபல கோடி ரூபாய்களை கடனாக தர அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு கட்டளை இடுகிறார் என்றால் அவரது வர்க்க பாசத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

விவசாயிகள் கடனை ரத்து செய்தால் கடனை திருப்பிச் செலுத்துவதில் கட்டுப்பாடு இருக்காது என்று முழங்கும் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அதானியிடம் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்து என்று கட்டளை இடத் தயாரா? 
கறுப்புப் பணம் வைத்திருப்போரை சும்மா விடமாட்டோம் என்று கூறும் பா.ஜ.க அரசு முதலில் கடனை திருப்பாமல் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும். வங்கிகளிடம் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை திருப்பிச் செலுத்தாமலும், வரியை கட்டாமல் ஏய்ப்பவர்களும் அடங்கிய பட்டியல் உள்ளது. 
அரசு அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
                                                                                                                      
                                                                                                                                                                                       -பேரா.ஆர்.சந்திரா
ஆதாரம்; எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...