bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 15 மே, 2017

இந்தியை அல்ல திணிப்பை எதிர்ப்போம்.

இந்திமொழி திணிப்புக்கு எதிராக மே 15 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளது தமிழ்ப் பண்பாட்டு உலகின் மனச்சாட்சியாக விளங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்.

கீழடி அகழாய்வை மண் அள்ளிப்போட்டு மூட முயலும் கயமையைக் கண்டித்தும், நீட் தேர்வு எனும் பெயரில் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவை கருவிலேயே கலைக்க முயலும் நயவஞ்சகத்தை எதிர்த்தும், இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் தமிழர் உரிமை பாதுகாப்பு மாநாட்டை ஜூன் 26ஆம்தேதி தலைநகர் சென்னையில் நடத்திடவும் களம் அமைத்து வருகிறது தமுஎகச.
மூன்று கட்ட மொழிப் போர்மூன்று மொழிப் போர்களை கண்ட மண்தமிழ் மண். 


இன்றைக்கு இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா கொள்கையை நிர்ப்பந்தமாக திணிக்க முயலும் மோடி அரசைக் கண்டித்து நான்காவது மொழிப் போரை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இந்தி மொழி பேசாத பிற மாநில மக்கள் மீது அடுத்தடுத்து மொழித் திணிப்பு எனும் இடியை இறக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. 

வர்ணாசிரம அதர்மத்தின்படி உழைக்கும் மக்கள் பேசவும், எழுதவும் தடைவிதிக்கப்பட்டதால், இயற்கை மரணம் அடைந்துள்ள சமஸ்கிருத மொழியை மீண்டும்உயிர்ப்பிக்க என்ன செய்யலாம் என புதிய கல்விக் கொள்கையில் கேள்வி எழுப்பியுள்ள மோடி அரசு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு பல நூறு கோடி ரூபாயை அள்ளித் தருகிறது.

இந்தி ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றநிலைக்குழு 2011ஆம் ஆண்டு தனதுஅறிக்கையை மன்மோகன்சிங் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம்தந்தது. 

இதை செயல்படுத்தினால் விபரீதம் விளையும் என உணர்ந்த அந்த அரசு அதை பரணில் தூக்கிப் போட்டு வைத்திருந்தது. மோடி அரசு அதை தூசி தட்டி எடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டுதாக நீட்டோலை வாசிக்கிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு களின்படி பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாக சேர்க்கப்படும் முதல்கட்டமாக சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம்வகுப்பு வரை இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்படும்.

குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் குறிப்பாக இந்தி தெரிந்தவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொதுவிழாக்களிலும் இந்தியில்தான் பேசவேண்டும்.

இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இந்தியில் பதிலளிப்பதற்கான வாய்ப்பு கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டும்.

விமானங்களில் வழங்கப்படும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் 50சதவீதம் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும். விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுகளில் இந்தி மொழி கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசு தரும் விளம்பரங்களில் இந்திக்கே முதன்மை இடம் தரப்பட வேண்டும்.
மத்திய அரசு தேர்வுகளை எழுதுபவர்கள் கட்டாயம் இந்தி கற்றிருக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மட்டும் குடியரசுத் தலைவர்"பெருந்தன்மையாக" ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டாராம். 

எனினும் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசுத் தேர்வுகளில் இந்தியை கட்டாயமாக்கும் எண்ணம் அரசிடம் உள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் தண்டனைக்குள்ளாக்கக்கூடும் என்றும் தகவல்கள் கசிகின்றன.

இது தவிர இந்தியா முழுவதும் கிலோ மீட்டர் கற்களில் இந்தி மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. 

இந்தி தவிர்த்த வேறு எந்த இந்திய மொழியில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டாலும் அது இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது இந்தியில் உபதலைப்பு தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் புகுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காது.

தமிழர்கள் மட்டுமே படிக்கக்கூடிய தினத்தந்தி ஏட்டில் அரைப்பக்க அளவுக்கு இந்தியில் விளம்பரம் வெளியாகிறது. அதாவது மத்திய அரசின் முடிவு அமலாகிறது.

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுற்றறிக்கைகள், விடுதிக் கட்டணம் போன்றவை இந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்படுகின்றன. இந்த முடிவை எதிர்த்து ஜேஎன்யுவில் பயிலும் பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.

தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழி களாக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைத்தான் தேசத்தின் பிற பகுதி மக்களும் பேச வேண்டும் என்பது அடாவடி, அத்துமீறல். 

ஒரு வாதத்திற்காக பார்த்தால் கூட மக்கள் தொகை அடிப்படையில் இந்தி மொழி பேசாத மக்கள்தான் இந்தியாவில் அதிகம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பதும் முழு உண்மையல்ல. வேலையின்மை முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத உப விளைவு. அதற்கு மொழி இல்லை.

தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளை யும் மத்திய ஆட்சி மொழியாக்குவது குறித்து ஆய்வு செய்திட 1998ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிறகு 2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இதுகுறித்து ஆராய குழு ஒன்றை அமைக்க உறுதி அளித்தது. அதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்தி மொழி தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை மட்டும் உடனடியாக நடைமுறைப்படுத்துகிறது மோடி அரசு.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே துவங்கிவிட்டது இந்தி திணிப்பு. 

1916ஆம் ஆண்டு தென்மாநிலங்களில் இந்தியை பரப்பும் நோக்கத்துடன் தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா துவக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு இந்த சபாவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜாஜி, இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதற்கான பாடநூல்கள் விரைவில் எழுதப்பட வேண்டும். 

புதிய இந்தி எழுத்துக்களை தமிழகமாணவர்கள் கற்றுக்கொள்ள தொடங்கி விடுவார்களேயானால் பின்னர் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் அவர்கள் எளிதாக பயில வாய்ப்பு ஏற்படும் என்றார். இதே ராஜாஜி பின்னர் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பது வரலாற்று முரண்.

1938-39ஆம் ஆண்டுக்கான சென்னை மாகாண அரசின் நிதி நிலை அறிக்கையில் 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்ற அறிவிப்பு ராஜாஜி அரசினால் வெளியிடப் பட்டது. 

இதற்கு எதிராக அப்போதே வலுவான குரல் தமிழகத்தில் எழுந்தது. இந்தப் போராட்டத்தின்போது தாளமுத்து, நடராஜன் என்ற இரண்டு இளைஞர்கள் சிறைச்சாலை கொடுமைகளின் காரணமாக உயிரிழந்த அவலம் நிகழ்ந்தது. 1300 பேர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். 

நெடிய போராட்டத்திற்குப் பிறகு 21.2.1940ல் சென்னை மாகாண ஆளுநரின் ஆணைப்படி இந்தி கட்டாயப் பாடம் என்பது நீக்கப்பட்டது.
1947ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற நிலையில், 1946ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்க ப்பட்ட மத்திய சட்டப்பேரவையை அரசமைப்புஅவை என்று மாற்றி 9.12.1946 முதல் அரச மைப்புச் சட்ட நடவடிக்கையை இடைக்கால அரசின் பிரதமர் நேரு துவங்கி வைத்தார்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிட 13 குழுக்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் தேசிய மொழி எது என்பது குறித்து அரசமைப்புச் சட்ட குழு விவாதிக்கவில்லை. மாறாக காங்கிரஸ்கட்சியின் மத்திய சட்டப்பேரவை உறுப்பின ர்கள் மட்டும் கூடி, இந்தியாவின் தேசிய மொழி இந்திதான் என்று முடிவு செய்தார்கள். 

அந்த தீர்மானங்கள்கூட ஒரே ஒரு வாக்கு பெரும்பான்மை அடிப்படையில்தான் வெற்றி பெற்றது. ஆனால் இதையே அரசமைப்புச் சட்ட அவையின் முடிவாக மாற்ற முயன்றனர்.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம்நாள் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இந்தச் சட்டத்தின் 17ஆவதுபகுதியில் ஆட்சி மொழி எனும் தலைப்பின்கீழ் நான்கு பிரிவுகளின்  கீழ் விதிகள் 343 முதல் 349 முடிய உள்ளவை இந்திய அரசின் ஆட்சி மொழி அல்லது அலுவல் மொழியாக தேவ நாகரி என்ற வரி வடிவில் உள்ள இந்தி இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இது தவிர அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் விதிகள் 344 (1) 351இன்படி 14மொழிகள் இடம்பெற்றன. 2003இல் செய்யப்பட்ட திருத்தத்திற்கு பிறகு 22 மொழிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இன்றைக்கு பாஜகவினர் கூறுவதுபோல இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இல்லை.

1955ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி குடியரசுத் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 344இன்கீழ் ஆட்சி மொழி ஆணை க்குழு ஒன்றை அமைத்தார். 

இந்தி பேசாத மாநில மாணவர்கள் ஆங்கிலம், அவரவர் தாய்மொழி தவிர இந்தியையும் கட்டாயமாகப் படிக்க வேண்டும், இந்திய தலைமை நீதிமன்றத்தில் இந்தி ஆட்சிமொழியாக வேண்டும், மாநிலசட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் அதிகாரப்பூர்வமான சட்டங்கள் அனைத்தும் இந்திமொழியிலேயே இருக்க வேண்டும் என் பது உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இந்தி பேசாத மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படுகிறார்கள் என்று இந்த பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில்தான் 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம்தேதி பிரதமர் நேரு இந்தி பேசாதமக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்தார்.

"எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஒரு மாற்று மொழியாக ஆங்கிலத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்".இதுதான் நேரு அளித்த உறுதிமொழி.

ஆனால், பிரதமரின் உறுதிமொழிக்கு மாறாக 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம்தேதி குடியரசு தினத்தன்று முதல் இந்தி ஆட்சி மொழி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய அளவுக்கு போராட்டங்கள் வெடித்தன. 

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்து பிரிவினரும் பங்கேற்றார்கள். ஆத்திகர்கள், நாத்திகர்கள், மடாதிபதிகள் என தமிழ் மொழி காத்திட அனைவரும் ஓரணியாக திரண்டனர்.கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் தீக்குளித்து இறந்தனர்.

18 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் 63 பேர் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானார்கள். இந்தப் போராட்டங்களின் பின்னணி யில்தான் ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன் மற்றும் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இந்தி பேசாத மக்களின் மீது இந்தி திணிக்கப்படாது நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படும் என்றும் கூறினர். 

எனினும், அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குவதை மறுத்து, இந்தியை திணிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.நரேந்திர மோடி அரசு வெறித்தனமாக தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. இதனால் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள்ஒன்றிணைந்து போராடக்கூடாது என்ப தற்காகவே மக்களை மதமாக, ஜாதியாக, மொழியாக, இனமாக பிரித்தாள முயல்கிறது. பிரிட்டி ஷார் பின்பற்றிய கேவலமான தந்திரம் இது.

பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு மதங்களை பின்பற்றுகிற, பல்வேறு பண்பாட்டைக் கொண்ட ஓர் ஒன்றியம்தான் இந்தியத் திருநாடு. ஆனால் ஒற்றை கலாச்சார தேசியத்தை திணிக்க முயல்கிறது மோடி அரசு. இவர்களது கலாச்சார தேசியம் பன்மைத்துவத்துக்கு எதிரானது. 

அனைத்து மொழிகளும் சமமாக கருதப்படும்போதுதான் ஒற்றுமை தழைக்கும், உணவாக இருந்தாலும், மொழி உணர்வாக இருந்தாலும் திணிப்பது திகட்டவே செய்யும். எதிர்ப்பு எழவே செய்யும்.

மொழி வழி மாநிலங்கள் அமைவதுதான் இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வழிசெய்யும் என்று உரத்துக் குரல் எழுப்பி யவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவரவர் தாய்மொழியில் பேச, எழுத உரிமை உள்ள நாட்டில்தான் பாரதி பாடிய சிந்தனையில் ஒருவராக, இந்தியராக, இணைந்துவாழ முடியும்,

தாய்மொழிக் கல்வியே மனித வளர்ச்சிக்கு தாய்ப்பால் போல் இணையானது என்று பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தேவை ஏற்படுகிற போது எந்தவொரு மொழியையும் யாரும் எளிதாக பயின்றுவிட முடியும். தொடர்வண்டிப் பயணங்களில் மூன்று ரூபாய் மோரைக் கூட மூன்று மொழிகளில் விற்பதைப் பார்க்கிறோம். 

தாய்மொழியை நன்கு கற்று தேர்ச்சி பெறுபவர்களால் மிக எளிதாக இன்னொரு மொழியை கற்றுவிட முடியும். தாய்மொழியில் பயிலும்போதுதான் சொந்த பண்பாட்டு அறிவும், பாரம்பரிய அறிவும் கிடைக்கும்.
கல்வி கற்றலுக்கு பிந்தைய வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தும் தாய்மொழி வழியாகவே அமைகின்றன. எனவே கல்வி யும் தாய்மொழி வழியிலேயே அமைய வேண்டும் என்கிறார் இந்திய வரலாற்றியல் அறிஞர் இஎம்எஸ் நம்பூதிரிபாட்.

இந்தி மொழியையோ, இந்தி மொழி பேசுகிற சகோதரர்களையோ வெறுப்பது சரியல்ல. மாறாக இந்தி மொழி திணிப்பை உறுதியாக எதிர்த்திட வேண்டும்.

இந்தி மொழித் திணிப்பை எதிர்த்துக் குரல்கொடுக்கிற அதே நேரத்தில், தமிழகத்தில் தமிழே அனைத்து துறைகளுக்கும் தலைமைதாங்க வேண்டும் என்பதை ஓங்கி முழங்கிடுவோம். மோடி அரசின் இந்தித் திணிப்பை எதிர்ப்போம், இந்திய ஒற்றுமை காப்போம்.
                                                                                                                                   - மதுக்கூர் இராமலிங்கம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...