தரமற்ற குழாய் நீர்
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணித்த புத்தசாகர் என்ற சமண துறவி, குடிநீர் மளிகைக் கடைகளில் விற்கப்படும் என்று தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தார். தற்போது அது உண்மையாகிவிட்டது. தூய்மையான நீர் என்று கருதி வீட்டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைகளிலிருந்து நாம் கேன் வாட்டர் வாங்கிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஏன் நாம் முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது?
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்காது என்று நாம் கருதுகிறோம். குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதைக் காணும் கொடூரம் அடிக்கடி நமக்கு நேர்கிறது. இந்தக் கொடூர அனுபவம் ஒரு மத்திய அமைச்சருக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக சமீபத்தில் தரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நகரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து 11 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த 11 இடங்களில் ஒன்று
டெல்லி கிரிஷிபவன், எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் அலுவலகம்.
அனைத்து மாதிரி நீர்களும் 19 வகையான தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. சோகம் என்னவென்றால், தரச்சோதனையில் ஒரு நீர் மாதிரிகூட வெற்றிபெறவில்லை.
அசுத்தம், கடினத்தன்மை, காரத்தன்மை, தாதுப்பொருள்கள், நுண்ணுயிர் தடயங்கள் என எந்த ஒரு சோதனையிலும் இந்த 11 நீர் மாதிரிகளும் வெற்றிபெறவில்லை.
இறுதியில் இந்தச் சோதனை அரசியல் மோதலுக்கு வித்திட்டுவிட்டது. டெல்லி அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகப் பொங்கி எழுந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமற்றது என்பதை நேர்மையாகவும் அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்க முடியுமா என அதிரடியாக சவால் விடுத்தார்.
அனைத்து மாநில அரசுகளும் சுத்தமான குடிநீரை விநியோகிக்க ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் டெல்லி அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் அல்ல என்றும் கூறி சர்ச்சையை தணிக்க முயன்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
நாட்டின் அனைத்து நகரங்களிலும் விநியோகிக்கப்படும் குடிநீர், இந்திய தர ஆணையம் நிர்ணயித்துள்ள அளவுகோலின்படி, தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் உறுதி அளித்துள்ளார். அதோடு, இந்திய தர ஆணையம் நிர்ணயித்துள்ள அளவுகோலுக்கு இணங்க தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்று அனைத்து தண்ணீர் நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய தர ஆணையத்தின் அளவுகோள்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என்றும், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் அனைத்து மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருப்பதால், இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.
நாடு தழுவிய சோதனை சாத்தியமா?
வாட்டர் கேன்களும் பிற 140 தயாரிப்புகளும் இந்திய தர ஆணையத்தின் அளவுகோலின்படி இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு உற்பத்திப் பொருளாக இருந்தாலும், எந்த ஒரு சேவையாக இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது.
விநியோகிக்கப்படும் குடிநீர் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கான சமீபத்திய முயற்சிகள், குடிநீரின் தரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையே காட்டுகிறது. குடிநீரின் தரத்தை சோதிப்பதற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பொது சுகாதாரத் துறைகளுடனும் நகராட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய தர ஆணைய அலுவலர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.
குழாய்கள் மூலமாக பயன்படுத்தப்படும் தண்ணீர் தரமற்றதாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வரையறுக்கப்பட்டதைவிட அதிக மாசு கொண்டதாக யமுனா நதி நீர் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் இந்திய தர ஆணையத்தின் அளவுகோலின்படி இருக்க வாய்ப்பு உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுவரும் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டுவரும் குடிநீர் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்துவருகிறது.
குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தர அளவுகோலுக்கு இணங்க நாட்டில் உள்ள மாநிலங்களும் சீர்மிகு நகரங்களும் மாவட்டங்களும் விரைவில் தரவரிசைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான இந்திய தர அமைப்பு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு குடிநீர் மாதிரிகளைக் கொண்டு இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், பெரும்பாலான மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 10 குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அந்த மாதிரிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், சர்வதேச அளவில் தரமான குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகரங்களில் ஒன்றாக மும்பை உருவெடுத்துள்ளது.
ஹைதராபாத், புவனேஸ்வரில் எடுக்கப்பட்ட தலா 10 குடிநீர் மாதிரிகளில் ஒரு மாதிரி மட்டும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக, மும்பைக்கு அடுத்த இடத்தை ஹைதராபாத்தும் புவனேஸ்வரும் பெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேசத்தின் அமராவதி மாநகரில் பரிசோதிக்கப்பட்ட 10 குடிநீர் மாதிரிகளில் 6 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதே நேரத்தில் டெல்லி, சண்டிகர், திருவனந்தபுரம், பாட்னா, போபால், குவஹாத்தி, பெங்களூரு, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டேராடூன், கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் பரிசோதிக்கப்பட்ட தலா 10 குடிநீர் மாதிரிகளில் ஒன்றுகூட நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மற்ற மாநில தலைநகரங்களில் பரிசோதிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் குறித்த தர அறிக்கை வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களிலிருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்
நீர் வளங்களைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி ஆர்வம் உண்டு. தண்ணீர் என்பது கொள்கை ரீதியாக கையாளப்பட வேண்டிய விவகாரம் என்பதில் அவர் காட்டிய ஆர்வத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் 2002ஆம் ஆண்டுக்குப் பயணிக்க வேண்டும்.
நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வடக்கு குஜராத், செளராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவிவந்தது. ரயில்கள் மூலமாகவும் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகிப்பதில் உள்ள சிரமங்களை அலுவலர்கள் அவரிடம் தெரிவித்தனர். இந்தப் பிரச்னைக்கு தற்காலிக தீர்வை தேடுவதற்குப் பதிலாக நிரந்தர தீர்வினை எட்டுவதே மிகவும் முக்கியம் என்பதை அலுவலர்களுக்கு மோடி அறிவுறுத்தினார்.
அடுத்த ஆறு ஆண்டுகளில் தீர்வு எட்டப்பட்டது. மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் 2008ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. மாநிலத்தின் 80 விழுக்காடு வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
மழை காரணமாக குஜராத்தில் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட்டதோ அந்த வெள்ளநீர் தெற்கு குஜராத்திலிருந்து செளராஷ்டிராவுக்கும் வறண்டு காணப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் திருப்பிவிடப்பட்டது. இதனால், நீர்த்தேக்கங்கள் நிரம்பின. பாசனத்திற்காக கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. நிலத்தடி நீர் புத்துயிர் பெற்றது.
2019 இல் குஜராத்தில் கனமழை பெய்தபோது, மாநிலத்தின் நீர்த்தேக்கங்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் நீரை தேக்கின. குஜராத்தில் ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களால், மாநிலத்தின் மொத்தமுள்ள 18 ஆயிரத்து 500 கிராமங்களில் 14 ஆயிரம் கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து விடுபட்டன.
தண்ணீரை சேமிப்பதிலும் அவற்றை பயன்படுத்துவதிலும் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறை என்பது மிகச்சிறந்த உதாரணம் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை. குஜராத்தில் கிடைத்த இந்த வெற்றி நாடு முழுமைக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.
அசுத்தமான குழாய்நீரை குடித்ததால் 2009ஆம் ஆண்டு ஹைதராபாத்திலும் போலாக்பூரிலும் ஏழு பேர் உயிரிழந்தனர். தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்தமான தண்ணீர், நன்னீர் குழாய்களுக்குள் சென்றதே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இது குறித்து புகார் அளித்தும் அலுவலர்கள் அலட்சியம் காட்டியதாலேயே ஏழு அப்பாவி உயிர்கள் பறிபோனதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.
குடிநீரின் தரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் ஆனால், அலுவலர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியது.
தற்போதும் சமையலறை குழாய்களைத் திறந்தால் அதில் அசுத்தமான தண்ணீர் வருவதைப் பார்க்க முடிகிறது. என்ன ஒரு துர்பாக்கிய நிலை!