bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 3 செப்டம்பர், 2011

வாக்குமூலங்கள்.


பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!' என நீள்கின்றன கண்ணீர்க் கோரிக்கைகள். கடந்த 21 வருடங்களாகக் கடிதங்கள், புத்தகங்கள் மூலமாக ஒலிக்கும் இந்தக் கதறல் யார் மனதையும் உலுக்காமல் போனதுதான் வேதனை. இவர்கள் மீதான குற்றத்துக்கு சாட்சிகள் இல்லை; ஆவணங்கள் இல்லை. 'தூக்குத் தண்டனையைச் சுமக்க வேண்டிய ஆட்கள்தான் இவர்கள்� என்பதற்கு அதிகாரி கள் காட்டும் ஒரே ஆதாரம்... இவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்தான். "செய்த தவறையும் சதிக்கான பங்களிப்பையும் அவர்களே ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படி இருக்க, வேறு சாட்சி எதற்கு?" என்கிறது அதிகாரத் தரப்பு.
                                         
மரணத்தின் நிழலில் தவிக்கும் அந்த மூவரும் இதற்குச் சொல்லும் பதில், நெஞ்சை நொறுக்குகிறது.
முதலில் பேரறிவாளன்...
"மிகக் கொடூரமான சித்ரவதைகளுக்குப் பிறகே, ஒப்புதல் வாக்குமூலத்தைத் தயாரித்தார்கள் அதிகாரிகள். 'சாதாரண விசாரணை� எனச் சொல்லி போலீஸ் அழைத்தபோது, இவ்வளவு பெரிய பிரளயத்தில் சிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. 'பெல்ட் பாம் தயாரிக்க உதவியவன் நீதானே?' என்கிற கேள்விதான் என் மேல் முதல் அடியாக விழுந்தது. 'புலிகளிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்?' எனக் கேள்விகள் நீள நீள... எனக்கு உலகமே சுற்றுவதுபோல் இருந்தது. அடி மேல் அடி. 'இல்லை' என்கிற வார்த்தையைத் தவிர, நான் எதுவும் சொல்லவில்லை. தெரிந்தால்தானே சொல்வதற்கு? ஆனாலும், புனைய வேண்டிய அனைத்தையும் புனைந்து, ஒப்புதல் வாக்குமூலமாக்கிக் கொண்டுவந்தார்கள்.
'இதில் கையெழுத்துப் போடு� என்றார்கள். நான் அறவே மறுத்தேன். அதிகாரிகளின் ஆங்காரத்தில் என் முகம் முழுக்கக் காயங்கள். அடித்த களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்கள் அதிகாரிகள். அப்போது ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்தார்.
'உன்னையப் பார்க் குறப்ப பாவமா இருக்கு தம்பி. நீ அடி வாங் குறப்ப என் மகனோட ஞாபகம்தான் வருது. ஒப்புதல் வாக்குமூலம்னு இவங்க சித்திரிச்சு இருக்கிற கதையில நீ தயங்காமல் கையெழுத்துப் போடு. ஆனா, கோர்ட்டில் 'வற்புறுத்தி வாங்கிய கையெழுத்து�னு சொல்லிடு. நீ அப்படிச் சொல்லிட்டாலே ஒப்புதல் வாக்குமூலம் உண்மை இல்லைனு கோர்ட் அறிவிச்சிடும். இப்படி அடி உதை வாங்கி சாகாதப்பா!� என்றார்.
அவருடைய கண்களில் திரண்டு இருந்த கண்ணீர்என்னை நம்பவைத்தது. 19 வயதில் எனக்கு சட்டம் குறித்து எதுவும் தெரியாது. எனக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் கிடையாது. 'இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதே தெரியாமல், இவ்வளவு சித்ரவதைகளுக்கு ஆளாகிவிட்டோமே� என மனதுக்குள் அந்த போலீஸ்காரருக்கு நன்றி சொல்லியபடியே, ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டேன். ஆனால், அதன் பிறகு எந்த கோர்ட்டுக்கும் நான் அழைக்கப்படவில்லை. என்னுடைய கையெழுத்து என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதால், பரப்பிய பழிகளை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்குச் சிரமம் இல்லாமல் போனது. என்னுடைய தூக்குக்கு நானே கையெழுத்துப் போட்ட கொடுமையை நான் யாரிடம் சொல்ல முடியும்?"
பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் மீது கொடூர சித்ரவதைகளைப் பாய்ச்சிய அதிகாரிகள், நளினி, முருகன் இருவரையும் அப்படி ஏதும் செய்யவில்லை.
                                     

"ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துபோடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள் அதிகாரிகள். நான் மறுத்தபோது, நான் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பக்கத்தில் என் மனைவி நளினியை உட்காரவைத்தார் கள். கேட்கவே பொசுங்கவைக்கும் அபவாத அர்ச்சனைகளை நடத்தினார்கள். மிகக் கேவலமான வார்த்தைகளால் அவர்கள் நளினியைக் கேலி செய்தபோது என்னால் பொறுக்க முடியவில்லை. அசிங்கம் என்றால் அப்படி ஒரு அசிங்கம்... ஒரு வார்த்தையின் வலி எத்தகையது என்பதை அறிந்தவன் நான். என் மனைவியை நோக்கி விழுந்த வார்த்தை கள் பொறுக்காமல், அதிகாரிகள் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன்.
ஆனாலும், என் தந்தை மற்றும் ஊர் பெயரை வேண்டும் என்றே தவறாக எழுதிக் கொடுத்தேன். 'இது திட்டமிட்ட பொய்� என்பதை அப்பட்டமாகச் சொல்ல நினைத்தே, அந்தத் தவறைச் செய்தேன். ஆனால், அந்தத் தவறான விவரங்களையே என்னுடைய நிரந்த விவரமாக்கி அதிகாரிகள் சித்திரித்துவிட்டார்கள்.
என் தந்தையின் பெயர்கூடத் தவறாக இருக்கும் அந்த வாக்குமூலம், எப்படி என்னுடைய வாக்குமூலமாக இருக்கும்? என்னிடமும் நளினியிடமும் தனித்தனியே ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாகச் சொல்லும் அதிகாரிகள், இரண்டுக்கும் ஒரே நேரத்தைக் குறித்திருக்கிறார்கள். 'நேரம்தவறா கக் குறிக்கப்பட்ட வாக்குமூலம் நிச்சயம் செல்லாது� என நினைத்தேன். ஆனால், சரியில்லாமல் போனது எங்கள் நேரம் தான்!"- முருகனின் கதறல் இது.
ஒப்புதல் வாக்குமூலத்தில் எப்படி எல்லாம் குளறுபடிகளைச் செய்தார்கள் என்பதற்கு ராபர்ட் பயாஸின் கதறலே சரியான சாட்சி. "தளபதி கிட்டுவுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்து விசாரித்தார்கள். 'இல்லவே இல்லை� என்றேன். இரவு முழுக்க காட்டுமிராண்டித்தனமாக அடித்து கைகளில் விலங்கு மாட்டி, அங்கு உள்ள ஒரு இரும்பு கேட்டில் கட்டித் தொங்கவிட்டார்கள். இரவு முழுக்க அந்த கேட்டிலேயே தொங்கினேன். சுவருடன் சாய்த்து தலைகீழாக நிற்கவைத்து அடிப்பார்கள். உச்சந்தலையே தெறிப்பதுபோல் வலிக்கும். தாகத்தில் செத்துப்போய்விடலாம் எனத் தோன்றும். ஒரு நாள் அப்படித்தான் தாகத்திலேயே படுத்துக் கிடந்தேன். தரையில் தண்ணீரை ஊற்றி நக்கிக் குடிக்கச் சொன்னார்கள். அவர்கள் நினைத்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற எத்தகைய சித்ரவதையையும் செய்வார்கள்!"
கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றி இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்ட அலுவலகத்தின் பெயர் 'மல்லிகை'. மரண தண்டனையை நோக்கி மூன்று உயிர்களை அனுப்பிவைத்ததும் இதே 'மல்லிகை'தான்.


                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...