bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 11 அக்டோபர், 2011

மக்களின் உயிரைக் காவு கேட்கும் மருந்து நிறுவனங்கள்.


அலைக்கற்றை ஊழல் வழக்கில் இரண்டு கைகளிலும் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கும்  மாட்சிமை தாங்கிய உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் சாணியை வழித்து அடித்தது போன்றதொரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் தொடுத்திருக்கும் அறிவுச் சொத்துடைமை தொடர்பான வழக்கினை விசாரிக்கும் நீதிபதி தல்வீர் பண்டாரி, மேற்படி பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பதன் காரணமாக இவ்வழக்கை அவர் விசாரிக்க கூடாது என்று அறிவுத்துறையினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆட்சேபம் எழுப்பினர். இதன் விளைவாக இவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி பண்டாரி விலகிக் கொண்டார்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி
                       
பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி

இது தனிப்பட்ட நீதிபதி ஒருவரின் நடத்தை நெறிமுறை சம்மந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்களின் உயிரை விலை கேட்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரமுமாகும். புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அதற்கேற்ப தீர்ப்பை வாங்க முயற்சிக்கின்றன. அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
நோவார்ட்டிஸ் என்ற சுவிஸ் பன்னாட்டு நிறுவனம், இமாடினிப் மெசிலேட் என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்தை (வணிகப்பெயர் கிளிவெக்  Glivec) உற்பத்தி செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உரியதென்றும், தன்னுடைய காப்புரிமையை மீறி இந்திய மருந்து நிறுவனங்கள் இம்மருந்தை உற்பத்தி செய்து வருவதைத் தடை செய்ய வேண்டுமென்றும், இதற்கேற்ப இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக இந்திய அரசை நிர்ப்பந்தித்து வருகிறது.
இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவுக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் செய்த மேல்முறையீட்டை இந்திய அரசின் ‘அறிவுசார் சொத்துடைமைக்கான மேல்முறையீட்டு வாரியம்’ நிராகரித்து விட்டது. இது தொடர்பாக நோவார்ட்டிஸ் தொடுத்த வழக்கையும் 2007ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.
மேற்கூறிய வழக்கில் நோவார்ட்டிஸின் மேல்முறையீடு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான தல்வீர் பண்டாரி என்பவர், அறிவுசார் சொத்துடைமை மற்றும் காப்புரிமைச் சட்டம் தொடர்பாக, அமெரிக்க அறிவுச் சொத்துடைமையாளர்கள் சங்கம் (அதாவது பன்னாட்டு கம்பெனிகள்) நடத்திய நீதிபதிகளுக்கான சர்வதேசக் கருத்தரங்கில் இரண்டு முறை (2009, 2011) கலந்து கொண்டிருக்கிறார். 2007இல் அறிவுசார் சொத்துடைமை தொடர்பாக இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் (சி.ஐ.ஐ.), அமெரிக்க  இந்திய வர்த்தகக் கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் சட்டப் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டத்திலும் முதன்மை உரை ஆற்றியிருக்கிறார்.
“அறிவுச் சொத்துடைமையைத் தேச எல்லை கடந்து அமலாக்குவதில் இந்திய நீதித்துறை மற்றும் இந்திய வழக்குகளின் அனுபவமும், அறிவுச்சொத்துடைமையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும்” என்பது, 2009ஆம் ஆண்டு கருத்தரங்கில் நீதிபதி பண்டாரி ஆற்றிய உரையின் தலைப்பு. “மருந்துகள் தொடர்பான காப்புரிமை… குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு இருக்கிறது; எல்லா நாடுகளும் (அறிவுச் சொத்துடைமையைப் பாதுகாப்பதற்கு ஏற்ற) பொருத்தமான காப்புரிமைச் சட்டங்களை இயற்ற வைப்பதற்கும் அவர்கள்தான் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்’’  இது அந்த உரையில் அவர் தெரிவித்திருந்த கருத்து.
டெல்லி அறிவியல் கழகம் என்ற அமைப்பும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல அறிவுத்துறையினரும், நீதிபதி தல்வீர் பண்டாரி குறித்து மத்திய சட்ட அமைச்சருக்கும் ஒரு பகிரங்க கடிதம் எழுதினர். இதன் பிறகுதான் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் பண்டாரி. ‘வழக்கிலிருந்து நீதிபதி விலகல்’ என்று ஒரு துணுக்கு போல வெளியான இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கும் இவ்வழக்கின் ‘மதிப்பு’ என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
_______________________________
நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.
நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.
லுகேமியா என்று அழைக்கப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளை மேலும் சில ஆண்டுகள் உயிர் வாழ வைக்கும் மருந்து  இமாடினிப் மெசிலேட். இமாடினிப் மெசிலேட்  என்ற இந்த அடிப்படை மருந்தின் (generic drug) மூலக்கூறில் சிறியதொரு மாற்றம் செய்து, ‘கிலிவெக்’ என்று வணிகப்பெயர் (brand name) வைத்து, 40 நாடுகளில் இதற்குக் காப்புரிமையும் பெற்று வைத்திருக்கிறது நோவார்ட்டிஸ் நிறுவனம். ரத்தப் புற்றுநோயாளிகள் நாளொன்றுக்கு 4 மாத்திரைகள் வீதம் ஆயுள் முழுவதும் இம்மாத்திரையை சாப்பிட வேண்டும். கிலிவெக் மாத்திரை ஒன்றின் விலை 1000 ரூபாய். அதாவது ஒரு நாள் உயிர் வாழ்வதற்கு 4,000 ரூபாய். மாதத்துக்கு ஒன்றேகால் இலட்சம் ரூபாய்.
இம்மருந்தின் வேதியல் மூலக்கூறுக்கு (molecule) இந்தியாவில் யாருக்கும் காப்புரிமை வழங்கப்படவில்லை. எனவே இந்த அடிப்படை மருந்தை (generic drug) ரான்பாக்ஸி, சிப்லா, நாட்கோ, ஹெடெரோ என்பன போன்ற பல இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கின்றன. இந்திய கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரை ஒன்றின் விலை 90 ரூபாய். அதாவது நாளொன்றுக்கு 360 ரூபாய்.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் 24,000 பேர். இவர்களில் 18,000 பேர் நாளொன்றுக்கு 360 ரூபாய் கொடுத்து மருந்து வாங்க முடியாதவர்களாகையால், மருத்துவமே பார்க்காமல் இவர்கள் இறந்து விடுகின்றனர். மீதமுள்ள 6000 பேர் இந்திய மருந்துகளால்தான் உயிர் பிழைத்திருக்கின்றனர். உலகெங்கிலும் ஏழை நாடுகளில் உள்ள ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  பல இலட்சக்கணக்கான நோயாளிகளும் இந்திய மருந்தை இறக்குமதி செய்து, அதனை உட்கொண்டுதான் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
நோவார்ட்டிஸ் தனது மருந்துக்குக் காப்புரிமை பதிவு செய்துள்ள 40 நாடுகளில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் இந்திய மருந்தை இறக்குமதி செய்து பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறது காப்புரிமை விதி. அதாவது நாளொன்றுக்கு 4000 ரூபாய் செலவிட வசதியில்லாத ரத்தப் புற்றுநோயாளிகள் சத்தம் காட்டாமல் செத்துவிட வேண்டியதுதான். அத்தகையதொரு சூழ்நிலையை இந்தியாவில் இனிமேல்தான் வரவேண்டும் என்பதில்லை. இதனை ஏற்கெனவே நாம் அனுபவித்திருக்கிறோம்.
_______________________
2003ஆம் ஆண்டில், தன்னைத் தவிர வேறு யாரும் ரத்தப்புற்றுநோய்க்கான இம்மருந்தை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற உரிமையை காட்டிரிப்ஸ் (GATT-TRIPS) ஒப்பந்தத்தின் கீழ் நோவார்ட்டிஸ் நிலைநாட்டிக் கொண்டது. இமாநிப், இமாலெக், டெம்சாப், சொலேடா (Imanib, Imalek, Temsab, Zoleta) என்ற பெயர்களில் விற்கப்பட்டு வந்த பிற இந்திய கம்பெனி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது நோவார்ட்டிஸ் நிறுவனம். ஜனவரி 2004இல் நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடியவர், மைய அமைச்சரான ப.சிதம்பரம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடையின் விளைவாக, கிலிவெக் மாத்திரையை 1000 ரூபாய் கொடுத்து வாங்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் செத்து மடிந்தனர். பொதுநலன் கருதி இந்தத் தடையை நீக்குமாறு இந்திய கம்பெனிகளும் புற்று நோயாளிகள் சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். எனினும், நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது.
2005ஆம் ஆண்டில் புதிய காப்புரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (1994இல் உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த இந்தியா, 1970இல் இயற்றப்பட்ட இந்தியக் காப்புரிமைச் சட்டத்தைப் பத்து ஆண்டுகளுக்குள் ரத்து செய்வதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் புதிதாக இயற்றப்பட்ட சட்டம் இது) நோவார்ட்டிஸ் நிறுவனம், கிலிவெக் மருந்தில் சிறிய சில மாற்றங்களைச் செய்துவிட்டு, இப்புதிய சட்டத்தின் கீழ் அதற்கு காப்புரிமை கோரியது. ‘புதியது’ என்று நோவார்ட்டிஸ் கூறும் மருந்தில் புதுமையோ, கண்டுபிடிப்போ (novelty or invention) ஏதுமில்லையென்று கூறி இந்திய காப்புரிமை ஆணையம் காப்புரிமை வழங்க மறுத்துவிட்டது. காப்புரிமை ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நோவார்ட்டிஸ், தான் செய்திருப்பது ‘மேம்படுத்தும் கண்டுபிடிப்பு’ (incremental innovation) என்றும், ஆகவே இதற்கும் காப்புரிமை தரவேண்டும் என்றும் வாதாடியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்
இந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. 1995க்கு முன்னரே புழக்கத்தில் இருக்கின்ற இமாடினிப் மெசிலேட் என்ற காப்புரிமை இல்லாத மருந்தின் இலேசாகத் திருத்தம் செய்யப்பட்ட மறுபதிப்பே இந்த மருந்து என்றும், இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3 d பிரிவு கூறும் கண்டுபிடிப்புத்தன்மை (inventiveness) இதில் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் இம்மருந்துக்கு விலை வைக்கப்பட்டிருப்பதால், இதற்கு வழங்கப்படும் காப்புரிமை என்பது இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமைக்கு (அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு) எதிரானதாக அமையும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. “இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்  3 d பிரிவு, உலக வர்த்தகக் கழகத்தில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது” என்ற நோவார்ட்டிஸின் வாதத்தையும் நிராகரித்த உயர் நீதிமன்றம், சர்வதேச ஒப்பந்தங்கள் பற்றி தான் கருத்து கூற இயலாது என்றும், உலக வர்த்தகக் கழகத்திடமே முறையிடுமாறும் கூறி நோவார்ட்டிஸின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
பிரச்சினையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றால், தன் யோக்கியதை உலக அளவில் அம்பலமாகும் என்பதால் நோவார்ட்டிஸ் இப்பிரச்சினையை உலக வர்த்தகக் கழகத்துக்குக் கொண்டு செல்லவில்லை. ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட கோடிக்கணக்கான டாலர்களைத் திரும்ப எடுக்கத்தான் காப்புரிமை கோருவதாக, நோவார்ட்டிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், உண்மை வேறாக இருக்கிறது.
கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு என்றும் தெரிவித்திருக்கிறார். தனியார்துறைபொதுத்துறை கூட்டு என்று கூறிக்கொண்டு, தன் பங்குக்கு உமியைக் கொண்டு வரும் முதலாளித்துவம், அவலை ஊதித் தின்கிறது என்ற உண்மைதான், நோவார்ட்டிஸ் விசயத்திலும் அம்பலமாகியிருக்கிறது.
1970 இந்திய காப்புரிமை சட்டம், எந்தப் பொருளுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேல் காப்புரிமையை அனுமதிக்கவில்லை. உ.வ.கழகத்தில் இணைந்த இந்தியா, காப்புரிமையின் காலத்தை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. நோவார்ட்டிஸ் காப்புரிமையைக் காலவரையறையற்றதாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறது. அதன்பொருட்டு, மருந்தில் சில சில்லறை முன்னேற்றங்களை செய்து காப்புரிமையை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கு ஏற்ப (evergreening) சட்டத்தைத் திருத்த முனைகிறது.
2007இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, காப்புரிமைச் சட்டங்களைத் திருத்துவதற்காக ஒரு குழுவை மைய அரசு நியமித்தது. மஷேல்கர் குழு என்று அழைக்கப்பட்ட அக்குழு, காப்புரிமை சட்டத்தின் 3 d பிரிவை முடக்கும் வகையிலான சிபாரிசுகளை முன்வைத்தது. அவை அனைத்தும் மண்டபத்தில் வைத்து நோவார்ட்டிஸால் எழுதித் தரப்பட்டவை என்பதும், அந்த ‘சிபாரிசுகளில்’ இடம்பெற்றிருந்த வாக்கியங்கள்கூட  நோவார்ட்டிஸ் உள்ளிட்ட மருந்து கம்பெனிகளுடைய நன்கொடையில் வயிறு வளர்க்கும் ஐரோப்பிய ‘சிந்தனையாளர்களால்’ ஏற்கெனவே எழுதப்பட்டவைதான் என்ற உண்மையும் அம்பலமானது. வேறு வழியின்றி அரசு பின்வாங்கியது.
நவம்பர் 24, 2009 அன்று அமெரிக்க வர்த்தகக் குழுவுக்கும் இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரத்தை தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.  நோவார்ட்டிஸைப்  போலவே, கிலியாட் என்ற அமெரிக்க மருந்துக்கம்பெனி, தான் தயாரிக்கும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தில் சிறு மாற்றங்களைச் செய்துவிட்டு, புதிய மருந்து என்ற பெயரில் அதற்கு இந்தியாவில் காப்புரிமை கோரியிருக்கிறது. இந்தியக் காப்புரிமை ஆணையம் 3 d பிரிவின்படி அதனை நிராகரித்து விட்டது. ஆனால், “மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்குவதே பயனுள்ளது என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்” எனக் கூறுகிறது பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டக்குறிப்பு.
உலக வர்த்தகக் கழகத்துக்குப் போவதை விட, இந்திய அதிகார வர்க்கத்தையும், அரசாங்கத்தையும் பயன்படுத்தித் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும், உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை வாங்குவதுமே எளிமையான வழிமுறைகள் என்று நோவார்ட்டிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கருதுகின்றன. அதற்காகத்தான் சர்வதேச நீதிபதிகள் மாநாடு, பண்டாரியைப் போன்ற நீதிபதிகளின் கருத்துரைகள்!
நீதிபதிகள் மட்டுமல்ல, இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் தேடிப் பிடித்திருக்கும் வழக்குரைஞர்களும் நமது கவனத்துக்கு உரியவர்கள். முன்னாள் மத்திய அமைச்சரும், மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பெற்றிருந்தவருமான ப.சிதம்பரத்தைத்தான் 2003இல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கிற்கு பிடித்துப் போட்டது நோவார்ட்டிஸ். இன்று, 2011, ஜூலை 23ஆம் தேதியன்று சொலிசிட்டர் ஜெனரலாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் ரோகிந்தன் நாரிமன் என்பவர்தான், ஜூலை 22ஆம் தேதிவரையில் நோவார்ட்டிஸின் வழக்குரைஞர். ஜூலை 22ஆம் தேதியன்று தனது சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்த கோபால் சுப்பிரமணியம்தான் ஜூலை 23 முதல் நோவார்ட்டிஸின் வழக்குரைஞராக நியமனம் பெற்று விட்டார். இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தை நீதிமன்றத்தில் உடைப்பதற்கு, அத்தகைய சட்டங்களை உருவாக்கியவர்களையே அமர்த்திக் கொண்டுள்ளது நோவார்ட்டிஸ். சட்டத்தின் வரிகளுக்கும் எழுத்துக்களுக்கும் இடையில் நுழைந்து வியாக்கியானமளித்து, பன்னாட்டுக் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்பை  வாங்கித் தருவதற்கு இந்த விலைமாந்தர்கள் பாடுபடுவார்கள்.
இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் வெற்றி பெற்றால் ரத்தப் புற்றுநோய் மருந்துக்கான காப்புரிமை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நோவார்ட்டிஸின் கையில் இருக்கும். மாதம் 1.2 இலட்சம் ரூபாய் மருந்துக்குச் செலவிட முடியாமல் பல ஆயிரம் மக்கள் சாகவேண்டியிருக்கும். சில ஆயிரம் மக்கள் தமது சொத்து, சேமிப்பு அனைத்தையும் நோவார்ட்டிஸின் காலடியில் சமர்ப்பித்து, போண்டியான பிறகு உயிரை விட வேண்டியிருக்கும். நோயாளிகளின் உறவினர்கள் மருந்துக்காகக் கடன் வாங்கி, வாங்கிய கடனைக் கட்ட இயலாமல் தற்கொலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்
இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்
இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவை நெகிழ்த்துவதில் நோவார்ட்டிஸ் வெற்றி பெறுமானால், அடுத்து 10,000 மருந்துகள் வரிசையில் நிற்கின்றன. அவை அனைத்துக்கும் இந்திய அரசு காப்புரிமை வழங்க வேண்டியிருக்கும். எயிட்ஸ் முதல் காசநோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட எல்லா நோய்களுக்கான மருந்துகளும்  எட்டாக்கனியாகிவிடும். அது இந்திய மக்களை மட்டுமின்றி, மலிவான இந்திய மருந்துகளைச் சார்ந்து உயிர் வாழும் ஏழை நாட்டு மக்களையும் மரணத்துக்குத் தள்ளிவிடும்.
ஏனென்றால், இந்தியாவின் மொத்த மருந்து உற்பத்தியில் கணிசமான பகுதி ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முக்கியமாக யூனிசெப், ஐ.நா. மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் 87 ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படும் மருந்துகளில் 70% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. உலகம் முழுவதும் நுகரப்படும் எயிட்ஸ் நோய்க்கான மருந்துகளில் 80 சதவீதமும், எயிட்ஸ் நோயுடனேயே பிறக்கும் குழந்தைகளுக்கான மருந்தில் 92 சதவீதமும் இந்தியாவிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. பல்வேறு நோய்களுக்குமான மூல மருந்துகளை (generic drugs),  இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்குத் தருவதனால்தான், ‘உலகின் மருந்து தொழிற்சாலை’, ‘ஏழை நாடுகளின் மருந்துக்கடை’ என்ற நற்பெயர்களை இந்தியா ஈட்டியிருக்கிறது. இந்தியாவின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்திவிட்டால் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற்றுவிட்டால், இந்தியாவின் மருந்து உற்பத்தி  ஏற்றுமதி முழுவதையும் நிறுத்தி, உலக மருந்துச் சந்தை முழுவதிலும் தங்களது தீவட்டிக் கொள்ளையை நடத்த முடியும் என்பதே பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு.
நீதிமன்றத் தீர்ப்புக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. இந்திய மருந்துக் கம்பெனிகளை ஒவ்வொன்றாக விழுங்கி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்(பார்க்க: பு.ஜ. மார்ச், 2011). இதன் காரணமாக காப்புரிமை இல்லாத மருந்துகளின் விலையே கடுமையாக உயர்ந்து விடும் என்று அஞ்சுவதாக நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. (எகனாமிக் டைம்ஸ், பிப்.24) அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய மருந்து சந்தையின் 40 சதவீதத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றி விடும் என்று கூறுகிறார் எஸ்.பாங்க் என்ற பன்னாட்டு வங்கியின் உதவித் தலைவர். மருந்து உற்பத்தித் துறையில் அந்நிய மூலதனம் நுழைந்ததன் ‘பயன்’ இதுதான்.
“காற்றில்லாத வெற்றிடத்தைக் கண்டு இயற்கை அஞ்சுவதைப் போல, இலாபம் இன்மை அல்லது மிகக் குறைந்த இலாபம் ஆகியவற்றைக் கண்டு மூலதனம் பீதி கொள்கிறது. பொருத்தமான இலாபம் இருக்கும் பட்சத்தில் மூலதனம் விழித்துக் கொள்கிறது. 10% இலாபம் என்றால் எங்கேயும் வரத் தயார். 20% என்றால் மூலதனம் குஷியாகிவிடுகிறது. 50% என்றால் கேட்கவே வேண்டாம், கம்பீரம்தான். 100% இலாபம் என்றால் எல்லா மனிதச் சட்டங்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு மூலதனம் தயாராகிவிடுகிறது. 300% இலாபம் என்றால் எத்தகைய கிரிமினல் குற்றத்தைச் செய்வதற்கும் மூலதனம் தயார். தூக்கு மேடை ஏறுவதற்கும் மூலதனம் துணிந்து விடும்” என்று மூலதனத்தின் இலாபவெறி பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.
கிலிவெக் மாத்திரையில் மட்டும் நோவார்ட்டிஸ் 1000% இலாபம் பார்க்கிறது. இந்த இலாப விகிதத்தோடு ஒப்பிட்டால், நோவார்ட்டிஸ் நிறுவனம் நீதிபதிகளுக்குச் செய்திருக்கும் விருந்துபசாரம் என்பது மிகவும் சாதாரணமான குற்றமாகவே தெரிகிறது. அல்லது நோவார்ட்டிஸின் மிகச் சாதாரணக் குற்றங்களைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது என்றும் கூறலாம்.
_நன்றி:______________________________________
                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...