bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

இலவச[ஊழல்] கணினி

ஓட்டுக்கட்சித் தலைவர்களை தெய்வமாகப் பார்க்கும் பக்த   மனப்பான்மைக்கும், அதே தலைவர்களை தமது வியாபார நலன்களின் கூட்டாளிகளாகப் பார்க்கும் கார்ப்பரேட் மனப்பான்மைக்கும் இடையேயான கள்ளக்காதலின் விகாரமான வெளிப்பாடுகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள். இந்த கவர்ச்சித் திட்டங்கள் மக்களின் தாலியறுத்து சாராயம் விற்ற காசில் தூக்கியெறியப்படும் எலும்புத் துண்டுகள் என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவையே பன்னாட்டுக் கார்பொரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க வகைசெய்யும் அட்சய பாத்திரங்களாகவும் விளங்குகிறது.

இந்தவகையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியுடன் போட்டியில் முந்துவதற்கு, ஜெயலலிதா அறிவித்த இலவசத் திட்டங்களில் முக்கியமானது மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் (மடிக்கணினி) வழங்கும் திட்டம்.

கடந்த செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி இந்த ஆண்டு 9,12,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 70 லட்சம் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக கணினிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் எல்காட் கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்கட்டமாக 9,12,000 மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்காக எல்காட் (ELCOT) நிறுவனம் ஜூன் 4, 2011 அன்று வெளியிட்ட டெண்டரின்படி – லினக்சு (LINUX) மற்றும் விண்டோசு (Windows Starter Edition) இயங்குதளங்கள், விண்டோசுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் ஆண்டிவைரஸ் மென்பொருள் ஒரு ஆண்டு உரிமத்துடன், 320 GB ஹார்ட் டிரைவ், 1.3 மெகாபிக்சல் ஒளிபடக் கருவி (Webcam), Wi-Fi வலையிணைப்பு வசதி, 8X டிவிடி எழுதி (DVD Writer) போன்ற வசதிகளுடன் கணினி வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலான கணினிக்கு 15,000 ரூபாய் வரை விலை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய இருப்பதால் செலவு 10,000 ரூபாய் வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதில் விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது வெளிச் சந்தையில் சுமார் 2000 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது. இதனோடு சேர்த்து, லினக்ஸ் இயங்குதளத்தை இரட்டைத் துவக்க முறையில் (Dual boot) அளிப்பதால், கணினி பயன்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் உள்ளடக்குவதாக இருக்கும். மேலும், அலுவலகத் தேவைக்கான மென்பொருட்களையோ கல்விக்கான மென்பொருட்களையோ தனியே காசு கொடுத்து வாங்காமல் இலவசமாகவே லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ள முடியும்.

இந்நிலையில், எல்காட் நிறுவனம் தனது ஜூன் 4-ம் தேதியிட்ட டெண்டரில் திருத்தங்கள் செய்து ஆகஸ்டு 20-ம் தேதி  மறுடெண்டர் ஒன்றை வெளியிட்டது. மாற்றியமைக்கப்பட்ட டெண்டரில் லினக்ஸ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு மைக்ரோசாப்டு விண்டோஸ் (Full Edition) மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இது முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டார்ட்டர் எடிஷனை விட சுமார் 5000 ரூபாய் விலை கூடுதலானது. விண்டோஸ் இயங்குதளத்தின் அதிக விலைக்கு ஈடு கொடுக்க முதல் டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான கருவிகள் சிலவற்றை இரண்டாவது டெண்டரில் எல்காட் நீக்கிக் கொண்டது.  இவ்வாறு நீக்கப்பட்டவை – வெப்கேம் மற்றும் Wi-Fi வசதி, கூடவே 320 GB ஹார்ட் டிரைவ் 160 GB ஆகக் குறைக்கப்பட்டிருந்தது.

“விண்டோஸ் தான் பயன்படுத்த எளிதானது. லினக்ஸ் கற்றுக்கொள்வது கடினம்” என்று விண்டோஸ் இயங்குதளத்தை மட்டுமே பயன்படுத்திப் பழக்கமாகி விட்டவர்களுக்குத் தோன்றலாம். முதன்முதலில் கணினி பயன்படுத்த போகும் மாணவர்களுக்கு இவை இரண்டையுமே கற்பதற்கு சம அளவிளான உழைப்பும் முயற்சியுமே தேவை. அது மட்டுமல்லாமல், லினக்ஸ் போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்களை பள்ளிகளிலும் அரசு அலுவலங்களிலும் எந்தச் சிக்கலும் இன்றி வெற்றிகரமாகப் பயன்படுத்தும் முன்மாதிரி ஏற்கனவே சில இந்திய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளவிலும் சில நாடுகளில் அதிக செலவு பிடிக்கும் விண்டோஸ் இயங்குதளத்தைக் காட்டிலும் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.

2007-ஆம் ஆண்டு கேரள அரசு, எதிர்கால கணினித் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் தனது தகவல் தொடர்பு கொள்கையில் ‘அரசுத் துறைகளில் சுதந்திர கட்டற்ற மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவித்தது. கணினி அறிவை மக்களிடையே பரப்பவும், மென்பொருள் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கும் வழிகாட்டலாக அந்தக் கொள்கை ஏற்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் எல்காட் நிறுவனம், 2007-ஆம் ஆண்டு அப்போதைய எம்.டி உமாசங்கரின் வழிகாட்டலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பஞ்சாயத்துகளிலும், பள்ளிகளிலும் கட்டற்ற சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்து மைக்ரோசாப்டின் ஆதிக்கத்தை உறுதியாக வெளியேற்றியது. 30,000 அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் லினக்சில் பயிற்சி பெற்றனர். இந்த முடிவின் மூலம் தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் 400 கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்துகிறது.

லினக்ஸ் பயன்பாட்டில் எல்காட்டின் வெற்றிக்கதை

 

 

மேற்சொன்ன “முன்மாதிரிகளை பின்பற்றி மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினிகளில் லினக்சு மட்டும்தான் நிறுவப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் அரசின் செலவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், வைரஸ் தொல்லை இல்லாத பயன்பாட்டுச் சூழலையும் ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்திக் கற்றுக் கொள்ளும் வசதிகளையும் மாணவர்களுக்கு அளிக்கலாம்” என்று கணினித் துறைசார் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.

இணையப் பயன்பாட்டின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் Wi-Fi,  வெப்கேமரா போன்ற முக்கியமான வசதிகள் இல்லாத மடிக்கணினியை மாணவர்களுக்குக் கொடுப்பது தொலைதொடர்பு பாடங்களை பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு சமமாகும். மட்டுமல்லாமல், விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதில் வைரஸ் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த மடிக்கணினிகளை வாங்கும் ஏழை மாணவர்கள் மேல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் வாங்க வேண்டிய சுமையும், தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்ஸ்களை செய்ய வேண்டிய சுமையும் விழுகிறது.

விண்டோஸ் இயங்குதளத்தின் தன்மையின் படியே, தொடர்ந்த பயன்பாட்டில் அது தனது இயங்கு திறனை இழந்து விடுமென்பது இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக, மாணவர்களின் கல்வி உதவிக்காக என்று சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு பொருள் தீராத தலைவலியாக மாறப் போவது தான் எதார்த்தமான உண்மை. மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் விண்டோஸைக் கட்டிக் கொண்டு மாரடிக்கப்போகிறார்கள். இதில் பழுது பார்க்கும் செலவும் ஆண்டி வைரஸ் மென்பொருட்களின் லைசென்ஸுகளை புதுப்பிக்கும் செலவும் வேறு மாணவர்களின் தலையில் இறங்கப் போகிறது.

ஈழத்தாயின் மனதையே மாற்றி விடுமளவிற்கு ஜூன் 4க்கும் ஆகஸ்டு 20க்கும் இடையில் என்ன தான் நடந்திருக்கும்?  அதைச் சொல்வதற்கு முன் மைக்ரோசாப்டு விண்டோஸ் இயங்கு தளத்தின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது, லினக்ஸ் முதலான கட்டற்ற மென்பொருட்கள்தான் பரவலான மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான வழி என்று ஏன் சொல்கிறோம் என்பதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.

ணினித் துறையில் மென்பொருட்களை வணிக முறையில் கொள்ளை லாபம் வைத்து விற்பதற்கு  மைக்ரோசாப்டு முதலான முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் கண்டுபிடித்த உத்திதான் closed source எனப்படும், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருள் உரிம முறை. மென்பொருள் விற்பவர்கள் பைனரியை மட்டும் வாங்குபவருக்கு கொடுத்து விட்டு, மூலநிரல் வடிவத்தை தம்மிடமே வைத்துக் கொள்வதன் மூலம் மென்பொருள் பயன்பாடு, எதிர்கால மாற்றங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ச்சியாக பணம் கறக்கும் உத்தியை வளர்த்தெடுத்தனர். இதன் மூலம் கணினித் தொழிலில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்டன.

1980களில் ஆரம்பித்த இந்த ஏகபோக போக்குகளுக்கு எதிராக மக்கள் நலன் நோக்கில் சுதந்திரச் சிந்தனை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் ஆரம்பித்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் லினக்ஸ் என்ற இயங்குதளம். இந்த முறையில் மென்பொருள் மூலநிரல் எல்லோருக்கும் கிடைக்கும்படி பொதுவில் (இணையத்தில்) வெளியிடப்படுகிறது. இங்கே யாரும் மூலநிரலுக்கு உரிமை பாராட்டுவதில்லை – சொந்தம் கொண்டாடுவதில்லை – அறிவுச் சொத்தை பணம் காய்ச்சி மரமாக நினைப்பதில்லை – ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கருதுவதில்லை. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் தன்னார்வ வல்லுனர்கள் மூலநிரலை எடுத்துத் தமக்குத் தேவையான வசதிகளைச் சேர்த்து இணையத்தில் எல்லோருக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர்.

இவ்வகையான மென்பொருட்களில் ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகவே உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான இலவச மென்பொருள் தன்னார்வலர்கள் லாப நோக்கமற்று தங்கள் உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள். விற்பனையின் மூலம் கொள்ளை லாபம் என்ற நோக்கம் இல்லாமல் தமது தேவைகளுக்காக உழைத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் இத்தகைய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படவும், வளர்க்கப்படவும் செய்யப்படுகின்றன.

இந்த முறையில் உருவாகும் ஆயிரக்கணக்கான மென்பொருட்களில் முக்கியமான சில – லினக்சு இயங்குதளம், பயர்பாக்ஸ், குரோமியம் போன்ற இணைய உலாவிகள், மைஎஸ்கியூஎல் டேடாபேஸ், அப்பச்சே வெப்சர்வர், சாம்பா போன்றவை.

ஒரு முதலாளி இருக்க வேண்டும். அவருக்கு தொழிலாளிகள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற போன்ற போட்டிகள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தானே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் இருக்கும்? இதன் மூலம் தானே தரமான பொருட்கள் உருவாக முடியும்? என்று நீட்டி முழக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு சமூகம்  அளித்த பதில் தான் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்கள். இப்படி எந்த லாப நோக்குமே இல்லாமல் வெறும் சமூக நோக்கில் உருவாக்கியளிக்கப்படும் இந்த மென்பொருட்கள், மைக்ரோசாப்ட் போன்ற கார்பப்ரேட்டுகள் வழங்கும் மென்பொருட்களை விட பன்மடங்கு மேம்பட்ட தரத்தில் இருக்கிறது. மைக்ரோசாப்டின் மென்பொருட்களுக்கு ஏற்படும் வைரஸ் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் லினக்ஸில் ஏற்படுவதில்லை. அதற்காக தனியே ஆயிரக்கணக்கில் தண்டம் அழவும் தேவையில்லை.

1991-ல் வெளியிடப்பட்ட லினக்சு 20 ஆண்டுகளில் இயங்குதள பயன்பாடுகளில் பெரிய அளவு இடத்தைப் பிடித்திருக்கிறது. பழைய யூனிக்சு இயங்கு தளங்கள், சன் சோலாரிஸ் இயங்கு தளம் இவற்றிற்கான மாற்று சந்தையில்  மைக்ரோசாப்டு விண்டோசுக்கு போட்டியாக லினக்ஸ் முந்துகிறது.

இப்படி சரிந்து வரும் தனது ஏகபோகச் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள மைக்ரோசாப்டு சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் தொடர்ந்து முயன்று வருகிறது. இது ஒரு எல்லையைக் கடந்து, மேற்கத்திய ஏகாபதிபத்திய நாடுகளிலேயே சகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தை எதிர்த்து தீர்ப்பு அளித்துள்ளன. மறுபுறம் லினக்ஸ் மேலே சொன்ன திறந்த முறையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு இன்று முழுமையான ஒரு பயனர் இயங்கு  தளமாகவும் கிடைக்கிறது.

டிவிடி எழுதும் செலவை மட்டும் கொடுத்து லினக்சு வாங்கிக் கொண்டால் அதில் இயங்குதளம் மட்டுமின்றி, அலுவலக மென்பொருள், மென்பொருள் நிரலாக்கக் கருவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் மூலநிரலுடன் நிறுவிக் கொள்ளலாம். பொதுவான பயன்பாடுகளான இணைய பயன்பாடு, மின்னஞ்சல் அனுப்புதல், அலுவலக ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் லினக்சு விண்டோசை விட சிறப்பாக செயல்படுகிறது. கூடவே, விண்டோஸின் சாபமான வைரஸ் தாக்குதல் போன்ற நச்சுநிரல்களின் தொல்லையும் இல்லை.

கணினித் துறையைப் பொறுத்த வரை கணினி இயங்கும் சூழலை கட்டுப்படுத்தும் நிறுவனம் மற்ற எல்லா மென்பொருட்களையும் கட்டுப்படுத்தும் வல்லமையையும் பெறுகிறது. உதாரணமாக, விண்டோசு இயங்குதளம் பயனர் கணினிகளில் பெருமளவு பயன்படுத்தப்படுவதால், அதில் பயன்படுத்தப்படும் அலுவலக மென்பொருட்கள், தகவல் பகிர்வு மென்பொருட்கள், நிரல் உருவாக்க கருவிகள் சந்தைகளிலும் மைக்ரோசாப்டு தனது ஏகபோக ஆதிக்கத்தை பரப்ப முடிகிறது.

இந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கணினி நிறுவனங்களை போட்டி இயங்குதளங்கள் நிறுவி கணினிகளை விற்கக் கூடாது என்று மிரட்டுவது (சொன்னதைக் கேட்கா விட்டால், விண்டோசு உரிமத் தொகையை 4 மடங்காக ஏற்றி விடுவேன்!), அரசாங்கங்கள் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்த முயற்சிக்கும் போது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணையுடன் அந்த அரசுகளின் மீது அழுத்தம் கொடுப்பது, லஞ்சம் கொடுப்பது போன்ற எதுவும் கைகொடுக்காவிட்டால், இலவசமாகவே விண்டோஸ் இயங்குதளத்தைக் கொடுத்து விடுவது. இயங்குதளத்தை இலவசமாகக் கொடுப்பதன் மூலம், பிற பயன்பாட்டு மென்பொருட்களில் கொள்ளை லாபம் அடித்துக் கொள்வது என்று சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள அயராது பாடுபடுகிறது மைக்ரோசாப்டு.

அமெரிக்க அரசு வியட்நாம் அரசை 3 லட்சம் விண்டோசு உரிமங்கள் வாங்க கட்டாயப்படுத்தியதையும், துனீசியா நாட்டில் அந்நாட்டு அதிபரின் மனைவி நடத்தும் சமூக சேவை நிறுவனத்துக்கு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி அளித்ததன் (விண்டோசு உரிமங்கள் அளித்ததன்) மூலம் அரசுக் கொள்கையை தனக்குச் சாதகமாக மைக்ரோசாப்டு மாற்றிக் கொண்டதையும் கடந்த ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தின.

இந்தியாவைப் பொறுத்தளவில் மைக்ரோசாப்ட் அத்தனை சிரமப் படத் தேவையே இல்லை. இந்திய ஆளும் வர்க்கக் கும்பல் அமெரிக்கா கண்ணைக் காட்டினால் கடலில் கூட பாய்ந்து விடத் தயாராக இருக்கும் போது அவர்களுக்குக் கவலையென்ன. கடந்த ஜூலை மாதம் ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவைச் சந்தித்தது நினைவிருக்கிறதல்லவா? அந்தச் சந்திப்பைப் பற்றி எழுதிய ஜூ.வி ரிப்போர்ட்டர் போன்ற கிசுகிசு பத்திரிகைகள் என்னவோ பக்கத்திலேயே குத்தவைத்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது போல, ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் லிப்ட் ஏறிப் போய் அம்மாவைப் பார்த்தார்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அம்மா சொன்னதை கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டு போனார்கள்’ என்றெல்லாம் மாற்றி மாற்றி சொறிந்து கொண்டதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

சீமான் போன்ற புதிய கோமாளிகள் முதல் பழம் பெருச்சாளிகளான தமிழனவாதக் குழுக்கள் வரை ‘ஈழம் காத்த தாயே…’ என்று ஆரம்பித்து விதவிதமான ‘அம்மா’ புகழ்பாடி ஊரெல்லாம் சுவரொட்டி அடித்து புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள்.

அந்தச் சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன? தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த ‘மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்’ என்று ஹிலாரி கிளின்டன் சொன்னதை ஜெயலலிதா கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார் என்பதுதான் நடந்ததுள்ளது. இதைத் தான் இந்த மடிக்கணினி டெண்டர் மாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன.   இதன் மூலம் 5 ஆண்டுகளில் கிடைக்கப் போகும் வருமானம் 3000 கோடி ரூபாய் மைக்ரோசாப்டுக்கு டீச்செலவுக்குச் சரியாகப் போகும் சிறுதொகையாக இருக்கலாம், ஆனால், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருளில் பயிற்றுவிக்கப்படும் தமிழ்நாட்டின் மாணவர்களும் அவர்கள் மூலம் தமிழ்நாட்டு சமூகமும் எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கு கப்பமாக கட்டப் போவது லட்சக்கணக்கான கோடி ரூபாய்களான சுமையாக இருக்கப் போகிறது.

இது ஒருபக்கமிருக்க, ஒரு நாட்டு அரசின் டெண்டரைக் கூட தலையிட்டு கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவுக்கு இருப்பதும், இறையாண்மை மாநில உரிமையெல்லாம் கிழிந்த காகிதமாக பறக்கவிடப்படுவதும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் ‘புரட்சித் தலைவி’  அசைக்க முடியாத இரும்புப் பெண்மணி என  தினமலர்-இந்து-தினமணி-துக்ளக்குகள் கட்டி வந்த கதையும் அம்பலமாகியிருக்கின்றது

கவர்ச்சித் திட்டங்கள் ஊரை ஏமாற்றும் எத்து வேலைகள் தானென்றும், இவையெல்லாம் மக்களின் தாலியறுத்த காசில் எறியப்படும் எலும்புத்துண்டுகளென்றும் நாம் சொல்லி வந்தோம். கருணாநிதி பத்தடி பாய்ந்தால் அம்மா பதினோரடியாவது பாய வேண்டுமல்லவா? எனவே இதிலும் அம்மா ஒருபடி மேலே செல்கிறார். மக்களின் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து அமெரிக்காவிலிருந்து கழுதை விட்டைகளை இறக்குமதி செய்து மக்களின் தலையில் கட்டப்பார்க்கிறார்.

_________________________________________________________ 

                                                                                          நன்றி:- குமார்
தகவல்மூலம் - http://www.tehelka.co#mce_temp_url#m/story_main50.asp?filename=Ws101011MICROSOFT.asp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...