“
”அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது. அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது.” இவையெல்லாம் பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்விகள் கேட்பதற்காகச் செய்யப்பட்டிருந்த தடபுடல் ஏற்பாடுகள். ஜெயா தமிழகத்தின் முதல்வர், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்றெல்லாம் கூறி, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை நியாயப்படுத்தினாலும், தார்மீகரீதியில் பார்த்தால், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொண்ட குற்றவாளிக்கு இத்துணை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதைக் கேட்கும்பொழுது குமட்டல்தான் வருகிறது.
இச்சொத்துக் குவிப்பு வழக்கு கிட்டதட்ட 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பதினைந்து ஆண்டுகளில் இவ்வழக்கை நடத்திய / நடத்திவரும் நீதிமன்றங்களை மயிருக்குச் சமமாகக்கூட ஜெயா மதித்து நடந்ததில்லை. இந்தியக் குடிமகனைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டதிட்டத்துக்கும் தான் கட்டுப்பட்டு நடக்க மாட்டேன் என்ற அகங்காரத்தோடும், திமிரோடும் நடந்துவரும் ஜெயாவிற்கு, சட்டப்படியான அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் எனக் கூறுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
1991ஆம் ஆண்டு ஜெயா முதன்முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றபொழுது, அவருக்கிருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடியே ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.2,01,83,000) என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு அறுபத்து ஆறு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.66,44,73,000) என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயாவின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 33 மடங்கு அதிகரித்திருப்பதை அசாதாரணமானது என்ற வார்த்தைக்குள்கூட அடக்கிவிட முடியாது. இத்துணைக்கும் அந்த ஐந்து ஆண்டுகளில் “”தான் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழக முதல்வர் என்ற கடமையை ஆற்றியதாக”ப் பீற்றிக் கொண்டவர், ஜெயா. எனவே, அவர் முதல்வராக இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்காமல், கிம்பளம் வாங்காமல் அவரது சொத்து மதிப்பு 33 மடங்கு அதிகரித்திருக்க முடியாது. இதுதான் இச்சொத்துக் குவிப்பு வழக்கின் சாரம்.
இதன் அடிப்படையில் 1996, டிசம்பரில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர் மீது வழக்குத் தொடுத்த அன்றைய தி.மு.க. அரசு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு இவ்வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றத்தையும் அமைத்தது. தமிழகத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஜெயா மீண்டும் தமிழக முதல்வர் ஆனார். அச்சமயத்தில் தனி நீதிமன்றம் சாட்சிகள் அனைத்தையும் விசாரித்து முடித்துவிட்டு, ஜெயாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. “”தனக்குத் தொண்டை கட்டிக் கொண்டுவிட்ட காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது” என்ற நகைக்கத்தக்க, அலட்சியமான காரணத்தை முன்வைத்துக் கூண்டில் ஏறிநிற்க மறுத்துவிட்ட ஜெயா, “”நீதிமன்றம் தன்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளைத் தனது வீட்டிற்கு அனுப்பி வைத்தால் பதில் எழுதித் தருவதாக”க் கூறினார். ஜெயாவின் கூற்றுக்குப் பொருள் என்னவென்று அறிந்திருந்த நீதிபதி, தனது பெஞ்ச் கிளார்க்கை கேள்விகளோடு போயஸ் தோட்டத்து பங்களாவிற்கு அனுப்பி வைத்தார். இல்லையென்றால், அ.தி.மு.க. மகளிர் அணியின் ஆபாச ஆர்ப்பாட்டமோ, உருட்டுக்கட்டையோ, கஞ்சா வழக்கோ அவரைத் தேடி வந்திருக்கும்.
ஜெயாவின் விளையாட்டுப் பொம்மை போலத் தனி நீதிமன்றமும், சாட்சிகளும் உருட்டப்பட்டதையடுத்து, தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அன்பழகன் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இவ்வழக்கு 2004ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கை விசாரிக்க பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.
இதன் பின் இந்த வழக்கில் தாம் நேரடியாக ஆஜராகாமல் தப்பித்துக் கொள்வதற்கும், வாய்தா கேட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைப்பதற்கும், வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கும், வழக்கையே அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கும் எனக் கடந்த ஏழாண்டுகளில் 130க்கும் மேற்பட்ட மனுக்களையும், வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி தொடுத்தது, ஜெயா கும்பல். அக்கும்பல் இதற்காக முன்வைத்த வாதங்கள் விசித்திரமானவையாகவும், வினோதமானவையாகவும் இருந்ததோடு மட்டுமின்றி, சட்டம், நீதித்துறையைக் கேலிக்குரியதாக்கி ஆட்டுவித்தன. இந்நீதிமன்றங்கள் பல நேரங்களில் ஜெயா கும்பல் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தலையாட்டித் தம்மைத்தாமே கோமாளிகளாகவும் காட்டிக் கொண்டன.
ஜெயாவின் காண்வென்ட் ஆங்கிலத் திமிர் ஊர் அறிந்த ஒன்று. அப்படிபட்ட ஜெயா வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு குற்றப்பத்திரிகையைத் தமிழில் மொழி பெயர்த்துத் தர வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிறப்பு நீதிமன்றம் இம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
குற்றப்பத்திரிகைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்ட பின், “”அதனைப் படிக்கத் தமக்கு கால அவகாசம் தர வேண்டும்; அதுவரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்” என ஜெயா கும்பல் அடுத்த மனுவைத் தாக்கல் செய்ய, அதன்படி அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசம் முடிந்த பின், “”குற்றப்பத்திரிகையில் பிழைகள் உள்ளன; அதைத் திருத்தம் செய்துதர வேண்டும்” என மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, அத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, ஜெயா கும்பல். “”வழக்கு விசாரணை நடக்கும்பொழுது தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்” எனத் தீர்ப்பளித்து விசாரணையைத் தொடங்குமாறு உத்தரவிட்டது, கர்நாடகா உயர் நீதிமன்றம்.
இச்சமயத்தில் இவ்வழக்கை காலவரையறையின்றி இழுத்தடிக்கும் நோக்கத்தோடு ஜெயா கும்பல் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும், இலண்டன் அருகேயுள்ள தீவு ஒன்றில் உல்லாச விடுதி வாங்கிப் போட்ட வழக்கையும் ஒன்றாக இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய, அதனைச் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, இரண்டு வழக்குகளையும் இணைத்து உத்தரவிட்டது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த இணைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு விதித்த இந்தத் தடையை நான்கு ஆண்டுகள் வரை சவ்வாக இழுத்து, அதன் மூலம் ஜெயா கும்பலுக்கு மனு போடும் வேலையைக் கணிசமாகக் குறைத்து வைத்தது. எனினும், 2009இல் சொத்துக் குவிப்பு வழக்கும் இலண்டன் உல்லாச விடுதி வழக்கும் இணைக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.
இடைக்கால தடை நீக்கப்பட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியவுடனேயே, “”சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர உரிய அனுமதி பெறவில்லை” எனக் கூறி, வழக்கை அதன் தொடக்கப் புள்ளிக்கே இழுத்துச் செல்ல முயன்றது, ஜெயா கும்பல். இம்மனு தள்ளபடி செய்யப்பட்ட பின், “”தமக்கு அளிக்கப்பட்ட சம்மன் உத்தரவை மாற்ற வேண்டும்; சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; குற்றப்பத்திரிகை நகலின் 3 பிரதிகளைத் தர வேண்டும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலைத் தர வேண்டும்; மொழி பெயர்ப்பாளரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்” என உப்புசப்பில்லாத பல காரணங்களை முன்வைத்து 2010ஆம் ஆண்டில் மட்டும் 30 மனுக்களைச் சிறப்பு நீதிமன்றத்திலும், அதன் பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் மாற்றிமாற்றி, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் ஒருவர் பின் ஒருவராகத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது, ஜெயா கும்பல்.
2011ஆம் ஆண்டில் முதல் ஏழு மாதங்களுக்குள்ளாகவே, சாட்சியங்களிடம் நடத்தும் விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு 23 மனுக்கள் ஜெயா கும்பலால் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக, குற்றவாளிகளுள் ஒருவரான சுதாகரன், “”தனது வழக்குரைஞரின் தந்தை காலமாகிவிட்டதால் வழக்கு விசாரணையை மூன்று வாரத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும்” என விசித்திரமான கோரிக்கையோடு மனு தாக்கல் செய்தார். வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா, “”குற்றப்பத்திரிக்கையில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணையை ஆறு மாத காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின், தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரினார், ஜெயா.
ஆடிக்காற்றில் குப்பை பறந்துபோய் கோபுரத்தில் ஒட்டிக் கொள்வதைப் போல, தமிழக மக்களால் மீண்டும் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட ஜெயா, இந்த வாய்ப்பை சொத்துக் குவிப்பு வழக்கை ஒழித்துக் கட்டும் முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார். குறிப்பாக, தமிழக அரசின் சார்பாக வழக்கை நடத்தி வந்த இலஞ்ச ஒழிப்புத் துறை, “”இவ்வழக்கின் சாட்சியங்கள் அனைத்தையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” எனக் கோரி, இவ்வழக்கின் அரசு வழக்குரைஞரான பி.வி.ஆச்சார்யாவுக்குத் தெரியாமலேயே சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசே வழக்குத் தொடுத்தது. “”கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யாவைத் தவிர்த்து வேறுயாரும் இவ்வழக்கில் ஆஜராகக் கூடாது; தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை சாட்சியங்களிடம் மறு விசாரணை நடத்தக் கூடாது” என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இத்துணை தடைகளையும் தாண்டி சாட்சியங்களிடம் விசாரணை முடிந்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிப் பதில் அளிக்கும்படி சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை ஜெயா கும்பல் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முதல் குற்றவாளியான ஜெயா, தான் தமிழக முதல்வராக இருப்பதையும் பாதுகாப்புக் காரணங்களையும் காட்டித் தப்பித்துக் கொள்ள முயன்றார். “”கோயில் குளத்திற்கெல்லாம் போக முடிந்தவருக்கு நீதிமன்றத்துக்கு வர முடியாதோ?” என அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கேள்வி எழுப்பி, ஜெயாவின் தகிடுதத்தத்தை அம்பலப்படுத்தினார். சசிகலாவும், இளவரசியும், “”தாம் பெண் என்ற காரணத்தை” முன்வைத்துத் தப்பித்துக் கொள்ள முயன்றனர். 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி பெண் என்ற காரணத்தைக் கூறி பிணை கோரியபொழுது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாதத்தை முன்வைத்து கனிமொழியைக் கடுமையாகக் கண்டித்த தமிழகப் பார்ப்பனக் கும்பல், இப்பொழுதோ வாய் மூடிக் கிடந்தது.
இந்தச் சொத்தை வாதங்களைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தவுடன், உச்ச நீதிமன்றத்தை அணுகினார், ஜெயா. “”எனது கட்சிக்காரருக்குப் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. பல முக்கியமான வேலைகள் இருக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எழுத்துபூர்வமாகவோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ பதில் அளிக்கிறேன் எனச் சொல்வதில் என்ன தவறு?” எனத் தனது வழக்குரைஞர் மூலம் திமிராக வாதம் புரிந்தார், ஜெயா. இதற்கு, “”குற்றவாளிகள் சொல்லும் கதைகளையெல்லாம் கேட்க வேண்டுமென்ற அவசியம் இல்லை” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளித்தாலும், “”அவருக்கு வசதியான தேதியில் ஆஜராகும்படி” ஜெயாவிற்கு சலுகை அளித்தனர். டான்சி நில மோசடி வழக்கில் ஜெயாவைத் தண்டிக்காமல், அவர் தனது மனசாட்சிபடி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றத்திடம் இதற்கு மேல் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.
இந்த அடிப்படையில்தான் ஜெயாவிற்கு வசதியான அக்டோபர் 20 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு நீதிபதியிடம் பதில் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையும் முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தனக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைக் காட்டி, சிறப்பு நீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராவதைத் தள்ளிப் போடக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார், ஜெயா. உச்ச நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்த பிறகு, வேறு வழியின்றி, அக்.20 மற்றும் 21 தேதிகளில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, பெரும்பாலான கேள்விகளுக்கு, “”தெரியாது”, “”நினைவில் இல்லை” என்றே பதில் அளித்திருக்கிறார், ஜெயா. நவம்பர் 8 அன்று விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென ஜெயா விற்குச் சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டவுடன், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
இந்த வழக்கில் ஜெயா தண்டிக்கப்படுவாரா, மாட்டாரா என்பதைவிடக் கவனிக்கத்தக்க முக்கிய விசயம் வேறொன்று உள்ளது. ஜெயா பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்பதை இவ்வழக்கு நெடுகிலும் காண முடியும். இப்படிபட்ட நபரை, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் காக்க வந்த அவதாரமாக தமிழக மக்களின் முன் தமிழகப் பார்ப்பனக் கும்பல் நிறுத்தியிருப்பது எத்துணை பெரிய மோசடி!
ஜெயாவின் இந்தக் கல்யாண குணங்கள் தெரிந்திருந்தும், உச்ச நீதிமன்றம்கூட, “”உங்கள் கட்சிக்காரர் வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்” என்பதற்கு மேல் இந்த வழக்கு விசாரணையின்பொழுது அவரை வேறுவிதமாகக் கடிந்து கொண்டதில்லை. ஜெயா திருந்திவிட்டார், மாறிவிட்டாரென்று கூப்பாடு போட்ட பத்திரிக்கைகள் அனைத்தும், அவரது இந்த இழுத்தடிப்புப் பற்றி மட்டுமல்ல, அவர் சொத்து குவித்த விதம் குறித்தும் வாய்மூடியே கிடந்தன. குறிப்பாக, ஜெயாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட சுப்பிரமணிய சுவாமியோ சட்டமன்றத் தேர்தலில் ஜெயாவோடு கூட்டணி கட்டிக் கொள்ள போயசு பங்களா வாசலில் தவம் கிடந்தார். மற்ற செல்வாக்குகளைவிட, ஜெயாவின் சாதி அரசியல் செல்வாக்குதான் அவருக்குக் கேடயமாக இருந்து வருகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசாவிற்கும், கனிமொழிக்கும் கிடைக்க வாய்ப்பேயில்லாத செல்வாக்கல்லவா, இது.
நன்றி:புதிய ஜனநாயகம்.
விரிவான கட்டுரை இது .பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குWho is Honest Politician in Tamil Nadu?
பதிலளிநீக்குPeople Elected by People to govern them supposed to be transparent and Honest.
When 100% all are Corrupt & Thieves ...
Whom they Elect?
Even God Cannot Save Tamils & Tamil Nadu...