bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 10 ஜனவரி, 2015

சங்கரரின் அறிவும் - புத்தரின் இதயமும்!

விவேகானந்தர் ஓர் இந்துத்துறவி
மேலைநாடுகளுக்கு பயணித்த துறவி
மேலை நாடு அறிந்த துறவி

ஆங்கிலத்தில் அற்புதமாக உரையாற்றிய துறவி இறுதியான மூன்று சிறப்புகள் விவேகானந்தரை தென்னக மும்மணிகள் மற்றும் ஆரிய சமாஜ தயானந்த சரசுவதிஆகியோரிடமிருந்து உயர்த்திக் காட்டு கின்றன.

விவேகானந்தரின் ஆங்கிலப் புலமை, பேச்சாற்றல், வாதத்திறமை, மேலைநாட்டுத் தொடர்புகள், மேலைநாட்டில் கிடைத்த புகழ் அவரை அயல்நாட்டவரும் அறிந்தஒரு பிரபலமாக மாற்றின.

 அவரது சிகாகோ சர்வமத மாநாட்டு உரை இந்து மதத்தை ஒரு தாராளவாத மதமாகக் காட்டியது.

அனைவரையும் சமமாக தெய்வீகமானவர்களாகச் சித்தரிக்கும் அத்வைத வேதாந்த தத்துவத்தை முன்னிலைப்படுத்தியது. இந்து மதம் என்றவரையறைக்குள்ள முரண்பாடுகளுக் கெல்லாம் நியாயம் கற்பித்தது. அவை முரண்பாடுகள் அல்ல. வேறுபாடுகளே என்ற விளக்கம் அளித்தது.விவேகானந்தர் `இந்து’ என்ற அடை யாளத்துக்குள் இந்தியர்கள் என்பவர்கள் மீதான அக்கரையை வெளிப்படுத்தினார். இந்தியர்களின் ஏழ்மை, பட்டினி, கல்விஅறிவின்மை, மூடத்தனம், பிற்போக்குத் தனம் என்பவற்றையெல்லாம் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
(கார்ல் மார்க்ஸ் கூட இந்தியர்களை இந்து என்று குறிப்பிட்டுள்ளதை நாம் அறிவோம்) தீண்டாமையைப் பற்றி கவலைப்பட்டார். சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடிய திருவிதாங்கூர் இந்து தர்மராஜ்ஜியத்தை `பைத்தியகாரர்களின் புகலிடம்‘ என்று சாடினார். புரோகிதக் கொடுமைகளைச் சாடினார்.
விவேகானந்தரது பார்வையில் மதமாற்ற விவகாரம்
திருவிதாங்கூர் பகுதியில் சாதிக் கொடுமைகளின் காரணமாக பெருமளவில் மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறுவதைக் குறிப்பிட்ட அவர் அதற்காக கிறிஸ்தவ மிஷனரிகளைச் சாடவில்லை. அவர்கள் மோசடி செய்வதாகக் கூறவில்லை. இந்து சமூக அமைப்பு சீரமைக்கப்படாததின் விளைவு என அதை விளக்கினார். சூத்திரனுக்கு, சண்டாளனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று குமுறினார். 

வேதஉபநிஷத்துகளைப் பிரச்சாரம் செய்வதை விட தரித்திர நாராயண சேவை செய்வதுதான் முதற்தேவை என்றார். கல்வியும் உணவும் அவர்களுக்குக் கொடுக்கப்படுதல் வேண்டும் என்றார்.
இந்தியாவில் இடைக்காலத்தில் பல கோடி பேர் முஸ்லிம்களாக மாறினர். அது வாள்முனையின் மீது நிகழ்ந்தது என்று குற்றம்சாட்டுவது முட்டாள்தனம் என்றார். 
நிலப்பிரபுக்களின் கொடுமைகளும், புரோகிதர்களின் பேராசையும்தான் மதமாற் றங்களின் காரணம் என்று சமூகபொருளாதார உண்மைகளை விளக்கினார்.விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் மசூதிகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் அந்நியமாகக் காணாமல் அவற்றையெல்லாம் தெய்வீகமாகவே ஏற்று கொண்டு வந்தவர். முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அந்நியர்கள் எனப் பார்க்காமல் தம்மவர்களாகவே கண்டவர்.
குறுகிய மத எல்லைகளைக் கடந்த ஆன்மீகவாதி அவர். 
அவரது சீடர் விவே கானந்தர் எப்படி மதவெறியாக மாற முடி யும்? 
அவர் எப்படி பிறமதத்தவரை நம் தேசத்தின் நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று அந்நியப்படுத்த முடியும்?
இந்துத்துவ உணர் வுள்ளவர் சர்வசமயக் கோவிலைப் பற்றி பேச முடியுமா? சமூகக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில் விவேகானந்தரின் பார்வை விவாதத்திற்கு உரியதே.
அவர் தீண்டாமையைச் சாடினார். 
ஆனால் சாதிமுறையை கடவுள் இந்தியா வுக்கு அளித்த கொடை என்று போற்றினார். 
தனது காயஸ்த சாதிப்பெருமிதத்தை வெளிப் படுத்தவும் செய்ததுண்டு. சூத்திரனுக்கும் பஞ்சமனுக்கும் சிறிது உணவும், கல்வியும் தந்துவிடுவதன் மூலமாக விடியல் வந்துவிடும் என்று நம்பினார். 
இனி வரவிருப்பது சூத்திர (தொழிலாளர்) யுகம் என்று கணித்தார்.
மகளிருக்கு கல்வியும் வேலைவாய்ப் பும் தேவை என்று அவர் கூறினார். ஆனாலும் இந்திய மகளிருக்கு முன்னு தாரணம் ராமாயணச் சீதை என்று பெண் ணடிமைத்தனத்திற்கு புதிய வண்ணம் பூசினார். 
ஒரேயொரு முறை சூத்திரர்களுக்கு உபநயனம் செய்துவைத்தார்.

விவேகானந்தர் விளக்கம்

நாற்பது ஆண்டுகளுக்குள் இயற்கை எய்திய விவேகானந்தர் அதிகமாகச் சிந்தித்தார்.
 அதிகமாக உரையாற்றினார். 
இந்தியாவின் தாழ்ந்த நிலையைக் குறித்து அதிகமாகக் கவலைப்பட்டார். எனவே அந்தத் துறவியின் மத உணர்வு தம்தேச மக்களின் மீதான அக்கரையாகப் பரிணமித்தது.
 எனவே அவரது மத உணர்வு இந்துத்துவத்தைப் போன்று வகுப்புவாதமாக உருக்கொள்ளவில்லை.
மனிதனில் ஏற்கெனவே இருக்கின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்தவே மதம் என்ற அவரது விளக்கம் அனைத்து மனிதர்களுக்குமான தெய்வீகத்தை, தெய்வீக சமத்து வத்தை ஏற்றுக் கொள்கிறது.
 (சமத்துவமல்ல - இணக்கமே இன்றையத் தேவை என்றுஅசமத்துவத்தை வலியுறுத்தும் கோல் வால்கரின், ஆர்எஸ்எஸ்-சின் இந்துத்துவக் கொள்கை இவ்வகையில் விவேகானந்தரது விளக்கத்திற்கு முரண்பட்டு நிற்கிறது)பாரம்பரிய வாழ்வியலுக்கு இணங்கச் சொல்லும் இந்துத்துவாவாதிகள் விவே கானந்தரின் சடங்குகளைச் சாடும் மதம் பற்றிய கருத்துக்களை ஏன் முன்னிலைப் படுத்துவதில்லை.

வீணான மதவேஷம்

“சர்ச்சுக்குப் போவதோ, நெற்றியில் சன்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமான உடைகளை அணிந்துகொள்வதோ மதம் ஆகிவிடாது. வான வில்லின் அத்தனை வண்ணங்களையும் நீங்கள் உங்கள் மீது தீட்டிக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இதயம் திறக்கவில்லை யெனில் நீங்கள் கடவுளை உணரவில்லை எனில் எல்லாமே வீண்”மத உணர்வு பிறமதப் பகைமையாக விவேகானந்தருக்கு இருக்கவில்லை. ஸ்டேன்ஸ் பாதிரியாரை குடும்பத்தோடு எரிப்பதிலும், கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்துவதிலும் நியாயம் காணும் இந்துத்துவத்திற்கு விவேகானந்தரது உரைகளும் உணர்வுகளும் இணக்கமாக இருக்க முடியாது.
விவேகானந்தர் பார்வையில்பசுவும் மதமும்
பசுவதை மாட்டு மாமிசம் போன்ற வையெல்லாம் இந்துத்துவம் மதவெறி யாட்டத்திற்கு பயன்படுத்தும் தீப்பொறிகள்.
விவேகானந்தர் அமெரிக்க மண்ணில் இருந்தபோது அவர் மாட்டிறைச்சி உண்டார் என்று இங்கேயுள்ள இந்து உணர்வாளர்கள் அதை ஒரு பிரச்சனையாக மாற்ற முயன்ற போது விவேகானந்தர் சீறினார்.

“என் மதம் என் உணவிலா இருக்கிறது?
”வேறொரு முறை பசுப்பாதுகாப்பிற்கு நிதி உதவி கேட்டு வந்தவர்களிடம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்கு வதற்கு வீடின்றி பலகோடி சகோதரர்கள் பரிதவிக்கும்போது பசுவின் மீது காண்பிக்கும் அதீத அக்கறை தமக்கு வெறுப்பை அளிப்பதாகக் கூறி, நிதி உதவியும் செய்ய மறுத்துவிட்டார்.

புத்தரின் இதயம்

விவேகானந்தரிடம் வெளிப்பட்டது மனிதத்துவம், இந்துத்துவமல்ல. அதனால் தான் அவர் தெளிவாகக் கூறினார்.“சங்கரரின் அறிவுடன்புத்தரின் இதயமும் தேவைப்படுகிறது” என்றார். புத்தரை பிராமணீய எதிரியாகக் காணும் இந்துத்துவவாதிகளுக்கு விவேகானந்தர் விரும்பிய `புத்தரின் இதயம்‘ இருக்க முடியுமா?குருநானக்கைத் தவிர்த்து குருகோவிந்த் சிங்,புத்தரைத் தவிர்த்து வித்யாரண்யர்என்று இந்துத்துவவாதிகள் செய்யும் வரலாற்றுப் புரட்டல்களின்படியே ராமகிருஷ்ணரைத் தவிர்த்து விவேகானந்தர் என்று உலகறிந்த பிரபலங்களை பிராமணீய ஆதரவாளர்களாக இந்துத்துவ சிந்தனையாளர்களாக வெட்டியும் ஒட்டியும் திரிபுகளை இந்துத்துவவாதிகள் செய்து வருகின்றனர்.
1980வரை பலவீனமானவராகவும்,அதற்குப்பின் தம்மவராகச் சித்தரிப்பது ஓர் அரசியல் தந்திரமே.

பழைய ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்தபோது அதன்கொள்கையாக `காந்திய சோசலிசம்‘ என்ற கோஷத்தை வைத்தார்கள். காந்தியும் சோசலிசமும் இந்துத்துவத்தால் மறுக்கப்பட்டவையாகவும் எதிர்க்கப்பட்டவை யாகவும் இருந்தவை. இன்று ஆர்எஸ்எஸ்சின் அரசியல் அணியாக பாரதிய ஜனதா கட்சி காந்தியத்தையும் சோசலிசத்தையும் பேசு வதில்லை. இப்படித்தான் வசதிக்காக சில முறை பாபாசாகேப் அம்பேத்கரைக் கூட குறிப்பிட்டனர்.
எனவே இந்துத்துவவாதிகள் பிராமணிய - சனாதன நலன்களுக்காக குருகோவிந்த சிங், பகத்சிங், விவேகானந்தர், காந்தி, அம்பேத்கர், பட்டேல், மாளவியா உள்ளிட்ட பல பிரபலங்களை சுவீகரிப்பது அரசியல் சதியின் ஓர் அங்கமே.விவேகானந்தர் உள்ளிட்ட அனை வரையும் நாம் விமர்சனப் பார்வையோடுதான் மதிப்பிடுகிறோம். 
யாரையும் புனித மாக்குவதும், அப்பழுக்கற்றவர்களாகக் காட்டுவதும் நமது நோக்கமல்ல... ஆனால் பாசிச சக்திகள் அத்தகைய வரலாற்றுப் பிரபலங்களை வக்கிர நோக்கில் முன் வைக்கும்போது, அதன் உள்ளார்ந்த சதி நோக்கத்தை இத்தலைமுறையினருக்கும் விளக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது.தேவை சுவதர்மமல்ல, 
சுதர்மமே;விவேகானந்தரை ஓர் இந்துத் துறவி, இந்துமத ஆர்வலர் என்பதை நாம் மறுக்கவில்லை.
 ஆனாலும் அவரதுசிந்தனைகளும் செயல்களும் சிதைக் கப்பட்டு ஒரு குறுகிய பாசிச பழைமைவாத இந்துத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நம்மால் ஏற்க முடியாது.
இந்துத்துவம் கூறும் ஆஸ்ரமம், சுவதர்மம், சங்கதர்மம், பொது எதிரி இவற்றை ஏற்காத விவேகானந்தரின் `புத்தரது இதயம்’ அத்வைத வேதாந்தம் நடைமுறை வேதாந்தம், சூத்திரயுகம், புரோந்த ஏற்பு ஒழிப்பு போன்றவை அவரது இந்து இந்திய அக்கரையின் வெளிப்பாடுகளே தவிர இந்துத்துவத்தின் வெளிப்பாடு அல்ல. நமது இன்றையத் தேவை `சுவதர்மம்‘ (மரபுவழிப் பண்பாடு) அல்லது கலாச்சார தேசியம் அல்ல. மாறாக `சுதர்மம்‘ (நல்லநெறி- நன்னெறி) அதாவது மனிதத்துவத்தின் அடிப்படையிலான புதிய அணுகுமுறையே ஆகும். விவேகானந்தர் சுதர்மத்திற்கு இணக்கமாக இருக்கிறார். இந்துத்துவ சுவதர்மத்திற்கு இணக்கமாக அவரைக் காணமுடியாது.

இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் வாள்முனையில் அச்சுறுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்ட இந்துக்களின் வாரிசுகளே இந்தியக் கிறிஸ்தவர்கள் மோசடிகள் மூல மாக மதம் மாற்றப்பட்டவர்களே. 

அவர்கள் தாய் மதத்திற்கு திரும்புவது தர்மமாகும். 
அது மதமாற்றமல்ல. 
இவர்கள் முன்னர் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்திருந்த பௌத்தர்கள்.
கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இந்து சூத்திர - பஞ்சம பக்தர்களாக்கப்பட்டதையும், பௌத்த சமணக் கோயில்கள் வன்முறையில் சைவ- வைணவக் கோயில்களாக மாற்றப்பட் டதையும் குறிப்பிடுவதே இல்லை. ஏனெனில் அது பராக்கிரமவாதம் அல்லவா? மௌர்ய பிரகதத்தன் முதல் பௌத்த கனிஷ்கன் முதல் மகாத்மா காந்தி வரை படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியிலும், இத்தகைய இந்துத்துவ சுவதர்ம -பராக்கிரம வாதம் இருந்து வந்துள்ளது என்பதை வரலாற்றைத் தெரிந்து புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள். 

0வரலாற்றுத்துறைத் தலைவர்
(ஓய்வு), 
விவேகானந்தா கல்லூரி, 
சென்னை
நன்றி : இளைஞர் முழக்கம்(ஜனவரி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...