bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 5 ஜூலை, 2015

'வியாபம் ' ஊழல்களின் தாய்

" 'வியாபம் ஊழல் 2ஜியில் நடந்ததாக  முறைகேடு கணக்கை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது.இந்த ஊழல்களில் சம்பத்தப்பட்ட வர்கள் பட்டியலில் உள்ளவர்களில் இதுவரை 80 பேர்கள் திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளனர்.வியாபம் ஊழலை ஊழல்களின் தாய்என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. இங்கே பிரம்மாண்டம் என்பது புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.சம்பந்தப்பட்ட காவிக்குமபலையும் சேர்த்துதான்."
நீ ங்கள் ஒரு மருத்துவராக, பொறியியலாளராக அல்லது அரசு ஊழியராக என்ன செய்ய வேண்டும்?
வியாபம் மெகா ஊழல்
வியாபம் மெகா ஊழல்
பதில்: உங்கள் ஏரியா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் அல்லது பாரதிய ஜனதா தலைவர் எவருக்காவது ‘காணிக்கை’ கொடுத்தால் போதுமானது.
என்ன குழப்பமா? 
பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில் உள்ள நிலைமையைத் தான் சொல்கிறோம். விளக்கமாகவே சொல்கிறோம்.
எட்டாம் வகுப்பிலிருந்தே மருத்துவம் போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பிள்ளைகளை தயாரிக்கும் வேலைகள் நடக்கிறது. நீங்கள் விரும்பும் துறைக்கான படிப்புகளுக்கு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தில் இடம் கிடைக்கும்.
தங்களை ஊழல்களுக்கு எதிரானவர்கள் என்று  முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மோடி கட்சியான பாஜக ஊழல்கள் 2-ஜி,3-ஜி,நிலக்கரி சுரங்க ஊழல்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு ஒவ்வொன்றாக வெளி வருகிறது.

போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித் தேர்வை நடத்துவது ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழி பெயர்ப்பு– 
வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் 
சுருக்கமாக – "வியாபம்".
வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் தற்போது வட இந்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வியாபம் ஊழல் என்பதைச் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், தகுதியற்றவர்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு குறுக்கு வழிகளிலோ அரசு வேலை அல்லது மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இடம் பிடிப்பது என்று சொல்லலாம்.
இந்த எளிய விளக்கத்தைத் தாண்டி வேறு சிக்கலான பரிமாணங்களும் இதற்கு உண்டு. அவற்றைப் பார்க்கும் முன், கீழ்மட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளின் செயல்பாட்டு முறை (Modus Operandi) என்னவென்பதைப் புரிந்து கொள்வோம்.
வியாபம் மெகா ஊழல்
தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள்.
தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள் :
1)   ஆள்மாறாட்டம் : தேர்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாக கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வு மைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, மேற்பார்வையாளருக்கு காந்தி தாள் சப்ளை செய்வது மற்றும் மேல் மட்ட ‘கைகளை’ கவனித்துக் கொள்வது மூலம் இது நிகழ்த்தப்படுகிறது.
2)   ரயில் இன்ஜின் / ரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்த துறை பற்றி நன்கு அறிந்த ஒருவரை)  நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 லட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக் கொள்ளலாம்
3)   காலி விடைத்தாள்கள் : அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளை காலியாக வைத்து விட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கி விடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்த காலித் தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டு – தலைசுற்றுகிறதல்லவா? ஆனால், இப்படித் தான் நடந்துள்ளது.
மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு உயர் கல்விப் பிரிவு அல்லது அரசுத் துறை ஒன்றில் வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஒருவர், அதற்காக சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லை – அதாவது காசு இருக்கும் பட்சத்தில். பையில் தயாராக பணக்கட்டுகளோடு இருப்பவரைத் தேடி இடைத் தரகர்கள் வருவார்கள். நீங்களே தேர்வை எழுதுவதானால், உங்களுக்கு முன்னோ பின்னோ ஒருவர் அமர்ந்து உங்களுக்குத் தேவையான பதில்களைத் தருவார்கள்.
வியாபம் ஊழல்
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன.
இல்லையென்றால், உங்கள் பெயரில் வேறு ஒருவர் தேர்வை எழுதிக் கொடுப்பார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் தேர்வாணையத்தை சரிக்கட்டுவது, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களைச் சரிகட்டுவது, விடைத்தாள் திருத்துபவர்களைச் சரிகட்டுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை விட்டமின் ‘ப’ பாய்ச்சும் வேலையை இடைத்தரகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. வியாபம் ஒரு பிரம்மாண்டமான ஊழல் – ஆனால், இங்கே பிரம்மாண்டம் என்பது இந்த ஊழலில் புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாபம் ஊழல் புகாரில் இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் புள்ளிகளில் சிலர். தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை இந்த ‘பெரும்’ புள்ளிகள் தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க முதலை சுதீர் ஷர்மா ஆகியோர் அடங்குவர்.
முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா
கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா
வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 40 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் அடங்குவார்.
வியாபம் பாணி முறைகேடு – அதாவது மத்திய பிரதேச ஊழல் மாடல் – தற்போது பிற வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத், தில்லி, ஹரியானா மற்றும் பீகாருக்கும் மிக வேகமாக பரவியுள்ளது என்கிறார் காங்கிரசு தலைவரான திக்விஜய் சிங். கூடுதலாக இந்த ஊழலில் கீழ்மட்ட காங்கிரசு தலைவர்களும் சிலர் இருக்கிறார்கள்.
2009-ம் ஆண்டு வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க கோரி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மருத்துவ வினோத் ராய் பொது நல வழக்கொன்றை ம.பி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதிலிருந்து 2013-ம் ஆண்டு வரை சுமார் 45 பொது நல வழக்குகள் இது குறித்து விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருபக்கம் ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க, இன்னொரு பக்கம் மாநில அரசாங்கம் மேலும் 64 அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை வியாபத்திடம் அளித்துள்ளது.
2009-ம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாக பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது – ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று நிலைநாட்டியுள்ளனர்.
வியாபம் ஊழல்
மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும் வியாபம் ஊழல்.
இது மருத்துவத்துறையில் மட்டும் தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களில் செய்யப்படும் இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம் அரசு வேலைகளுக்கு செய்யப்படும் பணி நியமனங்கள் என்று தொகுப்பாக பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி கொள்ளையடிக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.
அவ்வளவும் கருப்புப் பணம். யாருடைய ஆட்சியில்? கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ள மோடியின் ஆட்சியில், மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும்!
இது தொடரும் பட்சத்தில் நாடெங்கும் உள்ள அரசுத் துறைகளில் காசுள்ளவர்கள் அமர்வார்கள் – காசுள்ளவனுக்கே உயர் கல்வி என்பது நிலைநாட்டப்படும். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவமனைக்கு ஓடினால், அங்கே பல லட்சங்கள் லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் கல்லூரியில் இடம் பிடித்த மேட்டுக்குடி குலக்கொழுந்து அமர்ந்திருப்பார். தான் கொடுத்த லஞ்சத்தையும் தனது பிள்ளைக்கு எதிர்காலத்தில் கொடுக்கவுள்ள லஞ்சத்தையும் உங்களிடமிருந்து வசூலிப்பது எப்படி என்பதே அவரது அக்கறைக்குரியதாக இருக்குமே ஒழிய உங்கள் உடல் நலனாக இருக்காது.
வியாபம் ஊழல்
வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது.
கல்வி என்பதோ உழைக்கும் மக்கள் அணுக முடியாத இடத்திற்கு ஏற்கனவே சென்று விட்டது. எல்.கே.ஜி வகுப்பில் மூன்று வயது குழந்தையைச் சேர்ப்பதற்கே சாதாரணமாக முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரை விலை பேசப்படுகிறது. அதற்கு மேல் மருத்துவமோ தொழில்நுட்பக் கல்வியோ அல்லது பிற கல்விப் பிரிவுகளிலோ தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க நடுத்தர வர்க்க மற்றும் அடித்தட்டு வர்க்கப் பிரிவு மக்கள் அண்டா குண்டா தொடங்கி தங்கள் சேமிப்பு, உழைப்பு, எதிர்காலம் என்று சகலத்தையும் அடகு வைக்கிறார்கள். கல்வித் துறைக்கென விதிக்கப்பட்டதாக சொல்லிக் கொள்ளப்படும் அற மதிப்பீடுகள் அனைத்தும் காற்றில் பறந்து அந்தத் துறையே முக்கால் நிர்வாணமாக நிற்கிறது.
மேற்படி அரை மற்றும் முக்கால் நிர்வாணத்தை மறைத்து சுற்றிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச கந்தல் துணிகளையும் உருவியெறிந்துள்ள வியாபம் ஊழல், அவற்றை முழு நிர்வாணப்படுத்தியுள்ளது.
வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனி நபரையும் இணைத்து, அவர்களின் செயல்பாடுகளின் ஒத்திசைவையும் தொழில் நேர்த்தியையும் கவனித்தால் இந்த கும்பல் – அதாவது, அரசியல் வாதிகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள், அரசு அதிகாரிகள் – மொத்தமும் ஒரு நிழல் அரசாங்கம் போல் செயல்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ராம் நரேஷ் யாதவ்
வியாபம் ஊழலில் சிக்கிய ம.பி ஆளுனர் ராம் நரேஷ் யாத்வ், சிவ்ராஜ் சிங் சவுகானுடன்
எனவே தான் தவிர்க்கவே இயலாத வகையில் பல்வேறு பொதுநல வழக்குகளுக்கும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களுக்கும், நீதி மன்றங்களின் உத்தரவுகளுக்கும் பின் மத்திய பிரதேசத்தின் சிறப்புக் காவல் துறையின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்த ஊழல் மிகத் தெளிவாக தவறான திசையை நோக்கிச் செல்கிறது. குற்றம் இழைத்த ஒரு சிலரோடு சேர்த்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உடகங்கள் சில தெரிவிக்கின்றன. மேற்கொண்டு மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் எழாமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே கைதுகள் செய்யப்படுகின்றன.
இது ஒருபக்கமென்றால், ஊழல் குறித்த விவரங்களை அம்பலப்படுத்திய  பிரஷாந்த் பாண்டே என்ற முன்னாள் காவல்துறை அதிகாரியின் (பாரன்சிக் பிரிவு) மேலும் முதல் பொதுநல வழக்கைத் தொடர்ந்த மருத்துவர் வினோத் ராயின் மேலும் பல கொலை முயற்சிகள் நடந்துள்ளன. கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வியமைச்சர் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்படாமல் சிறையில் ஐந்து நட்சத்திர வசதிகளை அனுபவித்து வருகிறார். வழக்கின் முக்கிய சாட்சியங்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.
வியாபம் மெகா ஊழல்
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம்.
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம் ஒருபக்கமென்றால் – மோடியின் கருப்புப் பண சாகசத்தை விதந்தோதியவர்களின் ஆழ்ந்த மௌனம் இன்னொரு பக்கம். இந்த இரண்டிலும் எது பெரியது என்பதை கண்டுணர முடியாத வகையில் ஒன்றை ஒன்று விஞ்சுகிறது.
மோடியின் தலைமையில் குஜராத் காவல்துறை மொத்தமும் மாஃபியா கும்பலின் ஒழுங்கமைவை அடைந்தது என்றால், அவரது வழிகாட்டுதலில் அவரது கட்சியைச் சேர்ந்தவர் ஆளும் மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் ஊழல் நிறுவனமயமாகியுள்ளது. குருவுக்குத் தப்பாத சிஷ்யன்.
அவர்கள் தங்கள் வேடத்தை எப்போதோ கலைத்து விட்டார்கள் – அவர்களை நம்பியவர்கள் எப்போது தமது நம்பிக்கையைக் கலைக்கப் போகிறார்கள்?
                                                                                                                                    –    தமிழரசன்,
நன்றி:வினவு.
========================================================================
     அடுத்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகி விட்டது.எப்போ இந்தியா வருவீங்க பிரதமர்?


1500 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகள் ரோமில் கண்டுபிடிக்கப்பட்டன.இறந்த தம்பதிகள் என்று ஊகிக்கப்படும் இந்த எலும்பு தம்பதிகளின் கைகள் இணைத்திருந்தன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...