bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 13 ஜூலை, 2015

அதானியின் ‘சோலர்’ மின்சாரம்

யாருக்கு இலாபம்?

அதானி குழுமத்துடன் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தினை அரசு செய்து கொண்டிருக்கிறது. மரபுசாரா மின்சாரம் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையைத் தீர்க்கப் போவதாக அரசு சொல்கிறது. இது உண்மைதானா என்பதனை ஆய்வு செய்வதுதான் நம் நோக்கம்..முதலிலேயே ஒன்றை வலியுறுத்திவிடுவது நம் கடமையாகும். நாம் மரபுசாரா மின்னுற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக நாம் அதன் பயன்பாட்டை வலியுறுத்துகிறோம்; வற்புறுத்துகிறோம்.
இது 648 மெ.வா. 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம். ஒரு யூனிட் ரூ 7.01 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் 4536 கோடியை முதலீடு செய்யப் போவதாக செய்திகள் சொல்லுகின்றன. அதாவது ஒரு மெ.வா.க்கு ஏழு கோடி மூலதனச் செலவாகிறது. இதில் 3175 (70%) கோடியை கைமுதலீடு, எஞ்சிய பகுதி கடன் என்கின்றனர். ஒரு மெ.வா.க்கு ஓர் ஆண்டில் 15 லட்சம் யூனிட் (1.5 மில்லியன் யூனிட்) உற்பத்தியாகும் என்று கணக்கிடப்படுகிறது. ஓர் ஆண்டில் மட்டும் 972 மில்லியன் யூனிட் (97.2 கோடி)யை அரசு இந்த குழுமத்திடமிருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது. ஒரு மெகாவாட்க்கு செலவிடப்படும் ஏழு கோடி ரூபாய் மூலதனம் ஆண்டுக்கு 1.05 கோடி வருமானத்தைத் தரும். இந்த மின் உற்பத்தி நிலையத்திற்குத் தோரயமாக 4000 ஏக்கர் நிலம் தேவைப்படக் கூடும். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இது அமையவிருக்கிறது.
guajrat solar park
2012ல் அரசு சூரிய மின் கொள்கையினை அறிவித்தபோது இங்கு 100 மெ.வா. சூரிய மின் பூங்கா அமைக்கப் போவதாக நிலங்களை அரசு கையகப்படுத்திருக்கிறது. இந்த நிலங்கள் அதானி குழுமத்திற்கு தரப்பட போகிறதா என்பது தெரியவில்லை. ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக செய்திகள் முன்னதாக இருந்தது. ‘ராசி கிரின் எர்த்’ என்ற நிறுவனமும் அரசும் சேர்ந்து இந்தப் பூங்காவை அமைப்பதாக இருந்தது.
மின்சாரச் சட்டம் 2003_ சூரிய மின்சாரம் போன்று மரபுசார மின்சாரத்தினை மின் வினியோக நிறுவனங்கள் வாங்கி பயன் படுத்த வேண்டுமெனவும், ஆண்டு உபயோகத்தில் இந்த மின்சாரத்தின் அளவை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கவும் சொல்லுகிறது. 2012ல் அரசு சூரிய மின் கொள்கை அறிவித்தபிறகு பல வழக்குகளுக்குப்பின் இந்த அளவை 0.25% என ஆணையம் நிர்ணயித்தது. இதனை ஒரு விழுக்காட்டிற்கு உயர்த்த ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதியாண்டு 2016ல் தமிழகத்தின் மின் தேவை 92,000 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒரு விழுக்காடு என்ற நிலையில் வாரியம் 920 மில்லியன் யூனிட் (92 கோடி) சூரிய மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அதானி குழுமத்துடன் மற்றவர்களுடன் மின்வாரியம் செய்து கொண்ட மொத்த சூரிய மின்சாரத் திறன் 1058 மெ.வா. ஆகும். ஆக 920 மி.யூ. பதிலாக 1587 மி.யூ.டை ரூ7.01க்கு வாரியம் வாங்கும்.
2010 ஆண்டில் சூரிய மின்சாரத்தின் விலை என்பது யூனிட் ரூ18 ஆக இருந்தது. இன்று படு வேகமாகக் குறைந்து 5.86க்கு வந்து விட்டது. உலக அளவில் சூரியத் தகடுகளின் தேவை வெகுவாக குறைந்து விட்டது. சூரிய மின் உற்பத்தியை முன்னெடுத்த ஜெர்மன், ஸ்பெய்ன், இத்தாலி, செக்கோஸ்லோவகியா போன்ற நாடுகள் தற்போது பின் வாங்கி விட்டன. சீனா, ஜெர்மன் நாடுகளில் சூரிய தகடு உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் திவலாகியுள்ளன. இந்நிலையில்தான் இந்தியா ஒரு லட்சம் மெ.வா. சூரிய மின்சாரத்திற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. தகர்ந்து கொண்டிருக்கும் இந்த அன்னிய நிறுவனங்களுக்கு இது ஒர் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கும். (நடுவண் அரசின் இலக்கு எட்ட முடிந்ததல்ல. இதனைத் தனியாகப் பார்ப்போம்.) அதனால்தான் ஆணையம் சூரிய மின்சாரத்தின் விலையை மட்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாற்றிட விதியினை வகுத்துள்ளது.
முன்னே சொன்னதுபோல இந்த கொள்முதல் விலை யூனிட்க்கு ரூ1.15 அதிகமாக இருக்கிறது.
 ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ 5.50 என்று இருக்கிறது. 
இங்கும் அதானி குழுமம் வெறும் 40 மெ.வா.க்கு மட்டுமே நிலையத்தை அமைத்துள்ளது. 
எதிர்காலத்தில் இந்த விலை மேலும் குறையக்கூடும். 
தமிழக ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கானது.
 இன்றைய சந்தை விலைக்கே கூடுதலாக கொடுக்கும் விலையைத் தான் 25 ஆண்டுகளுக்கும் கொடுக்க வேண்டும். 
ஒவ்வொரு ஆண்டும் 111.72 கோடியை கூடுதலாக அதானி குழுமத்திற்கு தரப் போகிறோம். 
எதிர் காலத்தில் இந்த விலை குறைந்தால் இது மேலும் கூடும்.
 25 ஆண்டுகளில் 2793 கோடியை தமிழகம் கூடுதலாக தர வேண்டியிருக்கிறது. இதற்கான வட்டியையும் சேர்த்தால், 25ஆண்டுகளில் இக்கூடுதல் விலை இரண்டரை மடங்காகும். 
அதாவது 6982 கோடியாக இருக்கும். 
அதானியின் மூலதனத்திற்கு மேலே இருக்கும்.
இன்று இதனை வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாத பொழுது ஏன் இந்த கொள்முதல்?
ஏழு ரூபாய்க்கு வாங்கப்படும் மின்சாரம் பயனீட்டாளர் முனைக்கு வரும் போது ரூ10.50 ஆக மாறும்.
மரபுசாரா மின்சாரத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர கொஞ்ச கட்டண உயர்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்ற சித்தாந்தத்தை அரசு ஒருவேளை முன் வைக்கலாம். இது சரியானால் சந்தைவிலையை விட அதிகம் தருவதின் காரணம் என்ன? மரபுசாரா மின்சாரம் என்ற பெயரில் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதும் அதனை மக்கள் தலையில் கட்டுவதும் எப்படி நியாயமாகும்?
எல்லாவற்றையும் விட தொழில்நுட்ப ரீதியாக, நிறுவப்பட இருக்கும் நிலையத்தின் உற்பத்தியை தமிழகத்தில் பயன்படுத்த முடியுமா என்ற பெரிய கேள்விக்கு விடையளிப்பார் யாரும் இல்லை. பிரச்சினை இதுதான்.
சூரிய மின்சாரம் இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காற்றாலை மின்உற்பத்தி காற்றின் வேகத்திற்கு ஏற்ப மாறுவது போல் இந்த மின்சாரமும் சூரிய ஒளிக்கேற்ப வேகமாக கூடவும் அதே வேகத்தில் குறையவும் செய்யும். இந்த உற்பத்தி மாற்றம் வினாடிகளில் இருக்கும். மின்சாரத்தை பெரிய அளவில் சேமிக்க முடியாது. எனவே மாறும் வேகத்திற்கேற்ப மற்ற உற்பத்திகளைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டும். ஆனால் மாறும் இம் மின்சாரத்தின் வேகத்திற்கு ஏற்ப வினாடிகளில் இதனைச் செய்ய இயலாது. அப்படிச் சரி செய்யும் பொழுதும் கூட நிலையற்ற இம் மின்சாரம் எதிர்த்திசையில் மீண்டும் மாறக்கூடும். இந்த காரணத்தாலும் செக்கஸ்லாவோக்கியா போன்ற நாடுகள் இம் மின்சார உற்பத்தியிலிருந்து பின் வாங்கின.
மின்சாரத்தின் தேவையும், உற்பத்தியும் மின் அலையால் (Hertz) கட்டுப்படுத்தப்படுகின்றன. 49.5 - 50.2 அலைக்குள் மாநிலத்தின் மின் கட்டமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். 50 அலைக்குமேல் இருந்தால் உற்பத்தி, தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருளாகும். 50.2 அலைக்குமேலே சென்றால் மாநில மின்கட்டமைப்பு மற்ற மாநிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடும் ஆபத்து உண்டு. ஒருவேளை மாநிலமே இருளில் மூழ்க வேண்டியும் வரலாம். அது மட்டுமல்ல. 50.2 அலை வரிசையை எட்டும் போது எந்த மாநிலமும் கூடுதல் உற்பத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த மின்சாரம் இலவசமாகும். அதற்கு விலையைக் கோர முடியாது.
தமிழகத்தின் மின்கட்டமைப்பு 500 - 700 மெ.வா. அளவுக்கு மட்டுமே இந்த நிலையற்ற மின்சாரத்தினை ஏற்க முடியும். ஆனால் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. தமிழகத்தில் 7440 மெ.வா. காற்றாலைகள் இருக்கின்றன. சூரிய மின்சாரம் போன்றே இந்த உற்பத்தியும் நிலையற்ற மின்சாரமாகும். காற்றாலை மின்சாரத்தை தமிழகம் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதன் விலையோ யூனிட் ரூ 3.12 தான். இந்த உற்பத்தியை முடக்குவதாக காற்றாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பல நேரங்களில் 1,200 மெ.வா. உற்பத்தி முடக்கப்படுகிறது. அவசர காலத்தில் காற்றாலைகளையாவது உற்பத்தி செய்யாமல் நிறுத்த முடியும். ஆனால் சூரிய மின்சாரத்தில் இது சாத்தியமில்லை. அதானியின் 4000 ஏக்கருக்கும் உடனடியாக பந்தல் போட்டு மூட வேண்டும். இது நடக்கக் கூடியதல்ல. இந்த மின்சாரம் கட்டமைப்பில் வீணாகப் போவதற்கே, விலையில்லாமல் போவதற்கே சாத்தியம் அதிகம்.
அப்படியானால் சூரிய மின்சாரத்தினை தமிழகம் பயன்படுத்தவே முடியாதா, இந்த வளம் வீணாக வேண்டியது தானா என்ற கேள்வி மிக முக்கியமானது.
இல்லை. இந்த வளம் தமிழகத்தின் பெரிய வரமாகும். திட்டமிடுதலில் தான் தவறு இருக்கிறது. நாட்டின் எந்தத் தேவையையும் முதலாளியிடமிருந்து ஆரம்பிப்பதில் தான் இந்தத் தவறு இருக்கிறது. மாறாக மக்களிடமிருந்து துவங்கினால் மிகப் பெரிய பயனை நாம் பெறமுடியும்.
2013ல் தமிழகத்தில் மாதத்திற்கு 50 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் 89.45 லட்சம் வீடுகளாகும். வாடகை வீட்டில் பொது மின் இணைப்பில் இருப்போரை கணக்கில் எடுத்தால் இது இன்னமும் கூடும். இந்த மின் இணைப்பில் உள்ளோர் பகுதியில் சூரிய தகடுகளை அமைத்து அவர்களுக்கு மின்சாரம் வழங்கலாம். அவர்கள் வாரிய பொது கட்டமைப்பில் இணைக்கப் படவேண்டியதில்லை. இதற்கு ஸ்டேன்ட் எலோன்(stand alone) என்று பெயர். சிறிய கிராமமாக இருந்தால் அந்த கிராமத்திற்கே தனியாக மின்கட்டமைப்பை ஏற்படுத்தலாம். இது மைக்ரோ கிரிட் (micro grid) எனப்படும். சூரியத் தகடுகளை வீட்டின் கூரையில் கூட அமைக்கமுடியும். நிலத்தின் பயன்பாடும் குறையும்.
மாநிலத்தின் கட்டமைப்பிலிருந்து விடுபட்டுவிடுவதால் மின் உற்பத்தியின் ஏற்ற இறக்கங்கள் மாநில கட்டமைப்புக்கு வராது. சிறியளவிலான உற்பத்திக்கு சேமிப்பு மின்கலங்கள் சாத்தியமாகும். இதில் ஏற்படும் மின் இழப்பு குறித்து கேள்வி எழுப்பப்படலாம். இந்த இழப்பும், பொது கட்டமைப்பிலிருந்து மின்சாரம் கொண்டு வரப்படும் இழப்பும் ஒன்றாகவே இருக்கும். எனவே புதிய இழப்பு என்று சொல்வதற்கு ஏதுமில்லை. அத்துடன் எளிய மக்களுக்கு 24*7 மின்சாரம் வழங்க முடியும். சூரிய மின்சாரத்தில் இருக்கும் வசதியே சிறு, குறு மின்உற்பத்தி செய்ய முடிவதுதான். இந்த வசதியைப் பயன்படுத்தியே திட்டமிடப்பட வேண்டும். முதலாளிகளுக்கு லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக இது மாற்றப்பட்டதுதான் இத்தனை துயரத்திற்கும் காரணமாகிறது
பொருளாதார அடிப்படையிலும் அரசுக்கு லாபமானது. 89.45 லட்சம் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ரூ1.20 ஆகும். தற்போது இவர்கள் முனையில் வாரிய மின்சாரத்தின் விலை ரூ6.20 ஆகிறது. அரசின் மானியம் மற்றும் தொழில், வணிக கட்டணங்களிலிருந்து ஒரு பகுதி என யூனிட்க்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. 89.45 லட்சம் வீடுகள் ஆண்டுக்கு பயன்படுத்தும் மின்சாரம் 5330 மில்லியன் யூனிட் (533 கோடி) ஆகும். மானிய செலவில் ஆண்டுக்கு 533 * 5 = 2667 கோடி மிச்சமும் ஆகும். இந்தத் தொகையில் ஆண்டுக்கு 388 மெ.வா. சூரிய நிலையம் அமைக்க முடியும். 5330 மில்லியன் யூனிட்க்கு செலவிடப்படும் மூலதனம் மானியச் சிக்கனத்தின் மூலமே 10 ஆண்டுகளில் ஈடு கட்டப்பட்டு விடும். (2667/7= 388 மெ.வாட். 5330/1.5 = 3553 மெ.வாட்.) ஆண்டு மின் கட்டணமான 640 கோடி வருமானமும் குறையாமல் கிடைத்துக் கொண்டிருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக 25 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு கட்டண உயர்வும் இருக்காது. சமூகத்தின் எளிய மக்களுக்கு தொழில்நுட்பம் இவ்வாறு தான் பயன்பட வேண்டும்.
இது போன்றே ஆண்டுக்கு 12,000 மில்லியன் யூனிட் செலவாகும் 20 லட்ச விவசாய இணைப்புகளையும் தனித் தனி 5 கிலோவாட் மின் உற்பத்தி நிலையமாக்கிவிட முடியும். நடுவண் அரசு மானியத்தில் சிறிய அளவில் நடைமுறையிலும் இத்திட்டம் உள்ளது.
கேரளத்தின் ‘விழிங்ஞம்’ துறைமுக ஒப்பந்தத்தினை அதானி குழுமம் பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரையில் ஆந்திரத்தின் ‘கங்காவரம்’, புதுச்சேரி துறைமுகங்களைப் பெறுவதில் இதனால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது எண்ணூர் துறைமுகம் இதன் குறியாக இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. நடுவண் ஆளும் கட்சிக்கு கேரளமும், தமிழகமும் தீவாக உள்ளது. அரசியல் மூலதனத்திற்கு அதானியா(?) என்று தமிழக அரசியல் வட்டம் இதனைக் கணிக்கிறது. இதன் பின்னணி பல யூகங்களுக்கு விதையாக இருப்பது உண்மைதான்.
                                                                                                                                           - சா.காந்தி
நன்றி:கீற்று.
========================================================================
========================================================================

  • மெல்லிசை மன்னருக்கு தற்போது 87 வயதாகிறது .கடைசிவரை தொலைகாட்சிகளில் இசை நிகழ்சிகள் நடத்திவந்துள்ளார்.
    இதுவரை 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    தனது தோழர் ராமமூர்த்தியுடன் இணைந்து விஸ்வனாதன் -ராம மூர்த்தி என்ற பெயரில் 700 படங்களுக்கும்,தனியாக 500 படங்களுக்கு ம் இசையமைத்துள்ளார்.
    இவரின் சொந்த ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி ஆகும்.
    இவரின் முழுப்பெயர்  பெயர்
    மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வனாதன் ஆகும்.
    தமிழ் மட்டுமின்றி மலயாளம்,இந்தி,கன்னடம் தெலுங்குப் படங்களுக்கும் விஸ்வனாதன் இசையமைத்துள்ளார்.
    உலகநாயகன் கமல்ஹாசனின் காதலா,காதலா,காதல் மன்னன்,உட்பட 11 பட்னக்களில் நடித்துள்ளார்.


    =======================================================================

பூமி மீண்டும் நீரில் மூழ்கும்?

பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன் ஆண்டுகளில், பூமி முழுவதும் மீண்டும் தண்ணீரால் சூழப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது. கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது. 

அதன் பின் அதன் தடிமன் குறைந்தபடியே உள்ளதாகவும், கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...