bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 18 மார்ச், 2017

கவித்துவ நடையில் கம்யூனிஸ்ட் அறிக்கை

"உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுத்த கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்து 168 ஆண்டுகள் ஆகின்றன. 1848 மார்ச் 18 அன்றுதான் கம்யூனிஸ்ட் அறிக்கை முதன்முதலாக வெளியிடப்பட்டது. 
மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகிய இருவரின் கூட்டுச் சிந்தனை வெளிப்பாடே கம்யூனிஸ்ட் அறிக்கையென்றாலும் இந்தப் படைப்பின் மூத்த பங்காளி மார்க்ஸ்தான் என்று கூறுவார் இளைய பங்காளி ஏங்கெல்ஸ். 

அப்போது மார்க்ஸுக்கு வயது 30: 

ஏங்கெல்ஸுக்கு வயது 28. 

விசாலமான உலகக் கண்ணோட்டமும், நுட்பமான தெளிந்த அறிவுத் தேடலும், ஆழ்ந்த தத்துவ ஞானமும் பெற்ற உத்வேகமான இளைஞர்களாக அவர்கள் இருந்தனர்.

ஆட்சியதிகாரம் என்பது என்ன?

1. முதலாளிகளும் பாட்டாளிகளும்,
2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும்
3. சோசலிச, கம்யூனிச இலக்கியம்
4. தற்போதுள்ள பற்பல எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகளின் நிலை - 

இவ்வாறு நான்கு தலைப்புகளிலான நான்கு அத்தியாயங்களில் அறிக்கை அன்றைய நிலைமைகளையும் குறிக்கோள்களையும் விவரித்துக் கூறுகிறது.

மற்றும் பிற்போக்கு சோசலிசம், பிரபுத்துவ சோசலிசம், குட்டி முதலாளித்துவ சோசலிசம், ஜெர்மானிய, அல்லது "மெய்யான" சோசலிசம், பழைமைவாத அல்லது முதலாளித்துவ சோசலிசம், விமர்சன- கற்பனாவாத சோசலிசமும் கம்யூனிசமும் என, நான்காவது அத்தியாயத்தில் பல பிரிவுகளிலான துணைத் தலைப்புகளிலும் கம்யூனிஸ்ட் அறிக்கை பல விஷயங்களைப் பேசுகிறது.

"நவீனகால அரசின் ஆட்சியதிகாரம் என்பது முதலாளி வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவேயன்றி வேறில்லை" எனக் கூறும் அறிக்கை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முதல்கடமையாக,"பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவதுதான் - ஜனநாயகத்திற்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான்" என்கிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்சும், ஏங்கெல்சும் பதிப்பித்ததை விளக்கும் ஓவியம்.
"தொழிலாளர்களின் சர்வதேச அமைப்பாகிய கம்யூனிஸ்ட் கழகம் அந்தக் காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 

1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தக் கழகத்தின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத் திட்டத்தை வெளியீட்டுக்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. 

அவ்வாறு உருவானதே பின்வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெழுத்துப் பிரதி பிப்ரவரி (பிரெஞ்சு) புரட்சிக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டன் போய்ச் சேர்ந்தது." - 1872-ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்குக் கையெழுத்திட்டு வழங்கிய தங்களின் முன்னுரையில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அந்தப் புரட்சிகர அறிக்கை அந்தக் காலத்திலேயே எத்தனை நாடுகளில், எத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டு எத்தனைப் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதற்கான விவரத்தை அறிக்கையின் படைப்பாளிகளான அவர்கள் அதே முன்னுரையிலேயே தெரிவித்துள்ளனர் :"முதன்முதலில் அறிக்கை ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. 

பிறகு ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேறான பன்னிரண்டு பதிப்புகளுக்குக் குறையாமல் இம்மொழியில் அறிக்கை வெளிவந்திருக்கிறது.முதன்முறையாய் ஆங்கிலத்தில் இது 1850-இல் லண்டன் ரெட் ரிபப்ளிக்கன் பத்திரிகையில் வெளியாயிற்று. இந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மாக்ஃபர்லென்.1871-இல் அமெரிக்காவில் மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன.

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ஆம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் சிறிது காலத்துக்கு முன் முதன்முதலில் பாரீசில் வெளியாயிற்று. நியூயார்க்கில் சோசலிஸ்ட் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது... புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. 

முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளிவந்த பின்னர் சிறிது காலத்திற்குள் போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. 

1860-ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பதிப்பு ஒன்று ஜெனீவாவில் வெளிவந்தது. சிறிது காலத்திற்குள் டேனிஷிலும் மொழிபெயர்க்கப்பட்டது."1888-ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கையின் ஆங்கிலப் பதிப்புக்கு அளித்த முன்னுரையில் ஏங்கெல்ஸ் கூறும்போது, " தற்போது சோசலிச இலக்கியங்கள் யாவற்றிலும் இது மிகவும் பல்கிப் பரவி அதிக அளவுக்கு உலகம் தழுவிய வெளியீடாக இருக்கிறது என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானுகோடி தொழிலாளி மக்களால் பொது வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை" என்கின்றார் மிகுந்த பெருமிதத்துடன்.

1917 ரஷ்ய சோசலிசப் புரட்சிக்கு முந்தைய காலத்திலேயே கம்யூனிஸ்ட் அறிக்கை 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 544 பதிப்புகள் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்தவை.
கனவுகளிடத்தில் விஞ்ஞானம்

உலகிற்கே ஓர் புதுமையாக சோசலிசப் புரட்சியை அரங்கேற்றிய மாமேதை லெனின் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் பற்றிக் கூறுகையில், "ஒரு மேதைமைக்குரிய தெளிவுடனும், மதிநுட்பத்துடனும் உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை அறிக்கை வழங்குகிறது. 

சமூக வாழ்க்கைக் களத்தை உள்ளடக்கிய ஒரு முரண்பாடற்ற பொருள்முதல்வாதத் தத்துவமாகவும், வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிகச் சிறந்த கோட்பாடாகிய இயக்கவியல் தத்துவமாகவும், வர்க்கப் போராட்டத் தத்துவமாகவும், ஒரு புதிய பொதுவுடைமைச் சமூகத்தின் படைப்பாளியாகிய உழைப்பாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் புரட்சிகரப் பங்களிப்பை விளக்கும் தத்துவமாகவும் கம்யூனிஸ்ட் அறிக்கை அமைந்துள்ளது.

"மேலும் லெனின் கூறுகிறார் : "தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆற்றிய பணியைப் பற்றி ஒரு சில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம் : தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறும், தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறும் அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள். 

" உழைப்போரை ஒடுக்கி, அவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவத்தை ஒழித்திடத் தோன்றிய கம்யூனிசம் என்பது முதலாளிகளின் - அவர்களது ஆட்சி அதிகார வர்க்கங்களின் பார்வையில் ஒரு பூதம்தான்! 

கம்யூனிசத்தின் மகா சக்தியைக் கண்டு அஞ்சிய அவர்களின் மிரட்சியிலிருந்தே மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் தங்களின் அறிக்கையை - அந்தப் பிரகடனத்தை உத்வேகத்தோடு இப்படி ஆரம்பிக்கிறார்கள்: " ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் - கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜார் அரசனும், மெட்டர்னிஹும், கிஸோவும், பிரெஞ்சு தீவிரவாதிகளும், ஜெர்மன் உளவாளிகளுமாக - பழைய ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.

 "இந்தப் ‘பூதத்தை’ச் சொல்லி முதலாளிகளும் அவர்களின் அதிகார வர்க்கமும் கம்யூனிசம் குறித்து உலகத்திற்குப் பூச்சாண்டி காட்டினர்.அந்த ஐரோப்பிய சக்திகளைக் குறித்து இவ்வாறான எள்ளல் சித்தரிப்புடன் அறிமுகம் செய்கிறது அறிக்கை. ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசத்தின் மீது வெறுப்பு உண்டாவதற்காகப் புனையப்பட்ட பூச்சாண்டிக் கதை இது என்பதை உணர்த்துகிறது அறிக்கை. 

அந்தப் பூச்சாண்டிக் கதையை முறியடிப்பதற்கு அன்றே அந்த ஞானிகள் தயாராகியிருக்கிறார்கள் :" பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் கருத்துக்களையும் தங்கள் நோக்கங்களையும் தங்கள் போக்குகளையும் வெளியிட்டு ,நேரடியாய்க் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது."

"இந்த நோக்கத்துடன் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் லண்டனில் கூடி, அடியிற் கண்ட அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஃபிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதற்காக வகுத்திட்டனர்."-என்கிறது அறிக்கை.
திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்கு பதிலாய்...

‘மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை கவித்துவ நடையில் எழுதப்பட்டுள்ளது’ என்று பெருமிதப் பாராட்டுதலோடு கூறினார் கவியரசு கண்ணதாசன். 

இதோ, அதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் :"எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமந்தரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவுகட்டியது. மனிதனை இயற்கையாகவே மேலானோருக்குக் கீழ்ப்படுத்திக் கட்டிப்போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவுஇரக்கமின்றி அறுத்தெறிந்துவிட்டு, மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லாப் பணப் பட்டுவாடாவைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிவிட்டது. 

சமயத்துறைப் பக்திப் பரவசம் , பேராண்மையின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புதிய பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர்நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. 

சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட, விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில், சமயத்துறை பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, நிர்வாணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.

" முதலாளித்துவ வர்க்கம் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்குள் அது தோற்றுவித்த பிரம்மாண்டங்களைப் பற்றி அறிக்கை வர்ணிக்கிறது. அத்துடன் "முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்தொழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுத்திருப்பது மட்டுமல்லாமல் அதை பிரயோகிப்பதற்குரிய ஆட்களையும் - பாட்டாளிகளாகிய நவீன தொழிலாளி வர்க்கத்தையும் தோன்றியெழச் செய்திருக்கிறது" என்றும் சுட்டிக்காட்டுகிறது.

"பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டிவிடவில்லை. 

பழையனவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும் புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை" என்றும் கூறுகிறது.வெகுகாலமாக - இன்றுவரை - மக்களை ஏமாற்றுவதற்காக சோசலிசம், சமத்துவம் என்கிற சொற்களை உச்சரிக்காத முதலாளித்துவக் கட்சிகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி உச்சரிக்கிற அந்தக் கட்சிகளிடம் முதலாளித்துவ எதிர்ப்பு மட்டும் இருக்காது! இதை 168 ஆண்டுகளுக்கு முன்னரே - 1848-லேயே கம்யூனிஸ்ட் அறிக்கை நையாண்டி தொனிக்க இடித்துரைத்துவிட்டது.

"முதலாளித்துவ சோசலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம்: முதலாளி முதலாளியாய் இருப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே."
ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர்

ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் உலகின் மற்ற மொழிகளிலும் வெளிவந்துள்ளது. தமிழ் முதலான இந்திய மொழிகளில் கம்யூனிஸ்ட் அறிக்கை பல பதிப்புகள் வெளிவந்துள்ளது
உலகில் மற்ற நூல்களைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் பதிப்பிக்கப்பட்டதும், உலகெங்கும் மிக விரிந்த அளவில் அறியப்பட்டதும், வேறு எந்த அரசியல் நூலையும்விடக் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியதும் கம்யூனிஸ்ட் அறிக்கை மட்டும்தான்.

"உலகில் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?" என்ற கேள்வியை 1999-இல் லண்டன் பி.பி.சி.செய்தி நிறுவனம் எழுப்பி, தனது நேயர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் பங்கேற்றவர்களில் மிகமிகப் பெரும்பான்மையோர் அளித்த பதில், "கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் காரல்மார்க்ஸ்" என்பதாகும்! 

"கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் கருத்துக்களையும் குறிக்கோள்களையும் மூடிமறைக்க மனம் விரும்பாதவர்கள். 
இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தங்களின் இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்ட்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள். 
அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று. பாட்டாளிகள் அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். 
அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது. 
உலகத் தொழிலாளர்களே,ஒன்றுசேருங்கள்!"- என்கிற கம்பீரமான நம்பிக்கை அறைகூவலுடன் தங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிறைவு செய்துள்ளனர் மார்க்ஸும் ஏங்கெல்ஸும்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையின் 150 ஆண்டு நிறைவு விழா 1998 பிப்ரவரி முதல் உலகெங்கும் ஆய்வரங்கச் சிறப்பு உரைகளோடும், அறிக்கை குறித்த ஆய்வு நூல் வெளியிடுதலோடும் கொண்டாடப்பட்டது.

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றிய விளக்கக் கட்டுரைகள்" எனும் நூலின் பதிப்பாசிரியர் பிரகாஷ் காரத் தமது அறிமுக உரையில் கூறுகிறார்-"புரட்சிகர இயக்கத்தின் அடிப்படையான இலக்குத் திட்டமும் அறிவியல் ரீதியான தத்துவத்தின் வலிமையும் இணைந்து உருவாக்கப்பட்ட ஆவணமாகக் கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளதால்தான் ஓர் உயிரோட்டமுள்ள ஆவணமாக அது தொடர்ந்து நீடிக்கிறது. 

எளிய நடையில் - ஆனால் ஆழமான பொருளுடன் எழுதப்பட்டிருப்பதால், புரிவதற்குக் கடினமான தத்துவம்கூட சாதாரண தொழிலாளியும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக, கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் உருவாக்கியுள்ள நூல்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த நூலாக கம்யூனிஸ்ட் பிரகடனம் இன்றளவும் நீடிக்கிறது."

இந்தியாவில்...

1920களின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே இந்தியாவில் பல மையங்களிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டுவந்தன. 
அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆங்கிலப் பிரதிகள் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாகக் கடத்திக் கொண்டுவரப்பட்டு - முக்கியமாக இந்தியப் புரட்சியாளர்களிடம் சேர்க்கப்பட்டன.1922-இல் லிபர்ட்டி பப்ளிகேஷன்ஸ் ஆங்கில மொழியில் ஆறு அணா விலையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டது. இதுதான் இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையாகும். வெளியீட்டாளர் பெயர் ராஞ்சோத் தாஸ் புவன் வோட்வாலா. இவர் தேசபக்திமிக்க தொழிலதிபர்.

முதன்முறையாக கம்யூனிஸ்ட் அறிக்கையை இந்திய மொழியில் வெளியிட்ட பெருமை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகிய முசாபர் அகமதுவையே சேரும். 
இவர், தாம் ஆசிரியராக இருந்த "ஞானவாணி" இதழில் 1926 ஆகஸ்ட் 12 முதல் 1927 ஜூலை 21 வரை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தார். 

கம்யூனிஸ்ட் அறிக்கையை வங்க மொழியில் மொழிபெயர்த்து வழங்கியவர் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் பேரன் சௌமியேந்திரநாத் தாகூர்.அடுத்து, 1927-இல் உருது மொழியில் அல்ஹிலால் என்ற வாரப் பத்திரிகையில் அறிக்கையின் முக்கியப் பகுதிகள் வெளியிடப்பட்டன. 

இந்த இதழின் ஆசிரியர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகிய அபுல்கலாம் ஆசாத். உருதுவில் மொழியாக்கம் செய்தவர் சுதந்திரப் போராட்ட வீரரான அப்துற் ரசாக் மலிஹாபாடி.

1931-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை மராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர், பின்னாளில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கிய ஜி.எம்.அதிகாரி.

தமிழில்...

அதே 1931-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ஈரோட்டிலிருந்து வெளிவந்த ஈ.வெ.ரா. பெரியாரின் "குடிஅரசு" இதழில் தொடராக வெளிவந்தது. 
சமதர்ம அறிக்கை என்ற பெயரில் தொடர்ந்து ஐந்து வாரங்கள் வெளிவந்தது.

1932-ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் இடப்பள்ளி கருணாகர மேனனின் மொழிபெயர்ப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.இவர் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் யுத்தமும் சமாதானமும், குற்றமும் தண்டனையும் என்ற நூல்களை மொழிபெயர்த்தவர்.1933-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை தெலுங்கில் வெளியிடப்பட்டது.

 தட்டச்சு செய்து சைக்ளோ ஸ்டைல் இயந்திரத்தில் பிரதிகள் எடுத்து கட்சி ஊழியர்களுக்குச் சுற்றுக்கு விடப்பட்டது. 
தெலுங்கில் மொழிபெயர்த்தவர் பெரும் புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவரும் வீரத் தெலுங்கானா போராட்ட தளபதியுமான பி.சுந்தரய்யா.அடுத்து குஜராத்தி, இந்தி மொழிகளில் 1934-லும், ஒரியா மொழியில் 1936-லும், பஞ்சாபி மொழியில் 1944-லும் அறிக்கை வெளியிடப்பட்டது.அதற்குப் பிறகு 1948-இல் தமிழில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. 

தமிழாக்கியவர் எம்.இஸ்மத் பாட்சா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி வெளியீட்டகம் இதை வெளியிட்டது.

1975-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை ரா.கிருஷ்ணையாவின் தமிழாக்கத்தில் மார்க்ஸின் இரண்டு முன்னுரைகளுடனும் ஏங்கெல்ஸின் ஐந்து முன்னுரைகளுடனும், பல விளக்கக் குறிப்புகளுடனும் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது.

இன்று, எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில் அறிமுகவுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸின் புரட்சிகர கம்யூனிஸ்ட் அறிக்கை உலகின், இந்தியாவின் எல்லா மொழிகளிலும் உள்ளன. 

உலகெங்கும் இந்த அறிக்கை வாசிக்கப்படுகிறது. 

இன்றும் இந்த அறிக்கை தெளிவான, உத்வேகமிக்க, புதியதொரு சமுதாய நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஞானவிளக்காகத் திகழ்கிறது.
                                                                                                                  
                                                                                                                                                                                           - தி.வரதராசன்.
நன்றி:தீக்கதிர் 
=========================================================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...