கடந்த 1950 ஆம் ஆண்டு விறகிற்காக அதிகளவில் காடுகள் அழிக்கப்பட்டன.
இதனால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதனை தடுப்பதற்காக, விறகுகளுக்கு என தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவினை பூர்விகமாக கொண்ட சீமை கருவை (Prosopis Juliflora) விதைகள் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் முழுவதும் வானூர்திகள் மூலம் தூவப்பட்டன.
அப்போது இதன் விளைவுகள் பற்றி அறியாததால் அரசே இதனை முன்னின்று இந்தத் திட்டத்தை நடத்தியது.
அதன் விளைவு ஏறத்தாழ தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பரவிய சீமை கருவை தற்போது 25 சதவீத நிலங்களை ஆக்கிரமித்து உள்ளது.
இதனை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் முழுமையாக குறைந்து எதிர்கால சந்ததியினருக்கு தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த சீமைக் கருவேல மரமானது வறண்ட நிலத்திலும், எந்த தட்ப வெப்ப சூழலிலும் வளரும் தன்மை கொண்டது.
நம் மாநிலத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்களும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது.
மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவைகளுக்கு பிரச்சனை இல்லை. ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி நிலத்தடி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை.
ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.
இதை அறியாமல் மக்கள் இன்னும் இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைகிறார்கள்.
வணிக ரீதியாக இராமநாதபுர மாவட்டத்தில், விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.
இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அறியாது இருக்கிறார்கள்.
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.
முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் கவலைத்தரக்கூடிய உண்மை என சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவது இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்.
அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமை கருவேல மரம்தான்.
அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் முக்கிய செய்தி.
- ராமானுஜம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக