bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 10 டிசம்பர், 2016

கறுப்புப் பணம் என்றால் என்ன?

தனது உண்மையான வருமானத்தை மறைத்து, குறைவான வருமானமே தனக்குவருவதாகக் கணக்குக் காட்டி, உண்மையில் செலுத்த வேண்டிய (வருமான வரி, சொத்து வரி,செல்வ வரி போன்ற) வரியைச் செலுத்தாமல், குறைவான வரியை அரசுக்குச் செலுத்திவிட்டு, மீதியை - மறைக்கப்பட்ட வருமானத்தைஎடுத்துக் கொள்வதே கறுப்புப்பணம் ஆகும்.

கறுப்புப் பணம் எப்படியெல்லாம் உருவாகிறது?
பொய்யான செலவுக் கணக்குகளை எழுதுவதன் மூலமாக:
ஒரு நிறுவனத்தின் உரிமையாளர், தனதுகணக்காளரிடம், ‘நான் அதிகமான வரியைக் கட்ட முடியாது. குறைவான வரி செலுத்தும் வகையில் ஏதாவது செய்யுங்கள்’ என்று கூறுகிறார். 
கணக்காளரும், பொய்யான செலவுக்கணக்குகளை எழுதி, நிறுவனத்தின் லாபத்தை25 கோடி ரூபாய் என்பதற்குப் பதிலாக, 15 கோடி ரூபாய்தான் என்று ஆவணங்களைத் தயார் செய்து விடுகிறார். இந்த வகையில் 10 கோடி ரூபாய் கறுப்புப்பணமாக உருவெடுக்கிறது.

லஞ்சப் பணம் மூலமாக:

வசதி படைத்த நபர்களுக்குச் சாதகமாக உத்தரவுகள் போடுவதற்காக, அமைச்சர்கள், அதிகாரிகள், மற்றுமுள்ளோர் வாங்கும் லஞ்சப் பணம் மூலமாக கறுப்புப்பணம் உருவாகிறது. 
உதாரணமாக,ஒரு கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக ஓர் அதிகாரி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார் என்றால், இந்தப் பணத்தைத் தனது வருமானமாக அவர்கணக்குக் காட்டாமல் ஒதுக்கி (பதுக்கி) வைத்துக் கொள்கிறார். இந்த வகையில் 10 லட்சம் ரூபாய் கறுப்புப்பணம் உருவாகிறது.

சொத்துக்கள் விற்பனையின் மூலமாக:

ஒருவரிடமிருந்து இன்னொருவர் 50 கோடி ரூபாய்க்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். சொத்தை வாங்குபவர், 35 கோடி ரூபாய்ப் பணத்தைக் காசோலையாகவும், மீதி 15 கோடி ரூபாயை ரொக்கமாகவும் சொத்தை விற்பவருக்குக் கொடுத்து விடுகிறார். 
35 கோடி ரூபாய்க்கு மட்டுமே சொத்தை வாங்குவதாக ஆவணங்களைத் தயாரித்து, 35 கோடி ரூபாய்க்கான முத்திரைத்தாள்களை மட்டுமே (ளுவயஅயீ ஞயயீநச) வாங்கிப் பதிவு செய்து விடுகிறார். இந்த வகையில் சொத்தை விற்பவர் ரொக்கமாகப் பெற்ற 15 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக உருவெடுக்கிறது.

ரசீது இல்லாமல் பொருட்களை வாங்குவதன் மூலமாக:

ஒரு கடையில் ஒருவர் ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இதன் விலை 60 ஆயிரம் ரூபாய் மற்றும் 14.5 சதவீதம் வரி என்று கடைக்காரர் சொல்கிறார். ஏதாவது சலுகை, தள்ளுபடி தர முடியுமா என்று வாடிக்கையாளர் கேட்க, 2 ஆயிரம் ரூபாய்தள்ளுபடி செய்கிறோம். ஆனால், ரசீது தரமாட்டோம் என்கிறார் கடைக்காரர். வாடிக்கையாளரும் சம்மதித்துப் பொருளை வாங்கிச் செல்கிறார். இதன்மூலம் 58 ஆயிரம் ரூபாய் கறுப்புப் பணமாக உருவெடுக்கிறது.

கறுப்புப்பணம் எப்படி வெள்ளைப்பணமாக மாறுகிறது?

மேற்கூறியவாறு உருவாக்கப்படுகின்ற கறுப்புப்பணம் எப்படி வெள்ளைப் பணமாக (சட்டப்படி செல்லுபடியாகக்கூடிய பணமாக)மாறுகிறது? இதோ ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
கறுப்புப் பணம் அதிகமாக வைத்திருக்கும்ஒருவர், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஒரு திரைப்படம் எடுக்கிறார். அந்தப் படம் படுதோல்வி அடைந்திருந்தாலும் லாபம் கிடைத்ததாகக் கணக்குக் காட்டி, அதனை வெள்ளைப் பணமாக மாற்றி விடுகிறார்.

ஒருவர் தன்னுடைய சொத்துக்களில் ஒன்றை, 42 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், சொத்தை வாங்குபவரிடம் தனக்கு 60 கோடி ரூபாயைக் காசோலையாகக் கேட்டு வாங்கிக் கொள்வார். பின்னர், கூடுதலாகப் பெற்ற 18கோடி ரூபாய் பணத்தை, சொத்தை வாங்குபவருக்கு இவர் ரொக்கமாகக் கொடுத்து விடுவார். கூடுதலாகச் செலுத்த வேண்டிய பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரைத் தாள்களுக்குமான பணத்தையும் விற்பவரே செலுத்தி விடுவார். இதன்மூலம் 18 கோடி ரூபாய் கறுப்புப்பணம் வெள்ளைப் பணமாகி விடுகிறது.
‘பங்களிப்புப் பத்திரங்கள்’ (Participatory Notes) மூலமாக, வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணம், பங்குச் சந்தையில் முதலீடாக நமது நாட்டிற்குள் வெள்ளைப் பணமாக நுழைந்து விடுகிறது.

பங்களிப்புப் பத்திரங்கள் என்றால் என்ன?

இந்தியப் பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கும் (பட்டியலிடுவதற்கும்), அவற்றைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்குமான மத்திய அரசின் அமைப்பு ‘செபி" என்பதாகும். இந்த ‘செபி’அமைப்பால் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களின் மூலமாக, அந்த வெளிநாட்டில் கறுப்புப்பணம் வைத்திருப்போர், நமது நாட்டுப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து தங்களின் கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக் கொள்வார்கள். இந்த நடைமுறைதான் ‘பங்களிப்பு பத்திரம்’எனப்படுகிறது. 

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, அந்தவெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக, இந்தியப்பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு, தங்களின் பெயர்களை அறிவிக்க வேண்டிய சட்டப்படியான அவசியம் இல்லை என்பதுதான்.
அடுத்தது ஹவாலா வழி. ஹவாலா என்பது ஒரு அரேபிய வார்த்தையாகும் ஹவாலா என்றால் நம்பிக்கை/அறக்கட்டளை என்று பொருள். தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை, ஹவாலா ஏஜெண்ட்டுகள் மூலமாகவெளிநாட்டு வங்கியில் போட்டு, பின்னர், தொழில் தொடங்குவது என்ற பெயரிலோ, ‘அந்நிய நேரடி முதலீடு’ என்ற பெயரிலோ இந்தப் பணம், எந்தவித வரியும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், சட்டப்பூர்வமான வெள்ளைப் பணமாக நமது நாட்டிற்குள் வந்துவிடும்.

அடுத்து, வேளாண் வருமானமாகக் கணக்குக் காண்பித்தலின் மூலமாக கறுப்புப்பணம் நல்ல பணமாக மாற்றப்படுவது, அதாவது,நெல், கோதுமை, மிளகு போன்ற விளை பொருட்கள் மூலம் கிடைக்கும் வேளாண் வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. இதனைப்பயன்படுத்தி, வேளாண் வர்த்தகத்தினரிடமிருந்து பொய்யான ரசீதுகளைப் பெற்று, கறுப்புப்பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி விடுவார்கள்.இதுபோன்ற இன்னும் பல வழிகளில், கறுப்புப் பணம், வெள்ளைப் பணமாக மாற்றப்படுகின்றன.

சரி, நாட்டில் கறுப்புப் பணம் புழங்குவதால், சாதாரண மக்களுக்கு என்ன நஷ்டம்?
கறுப்புப் பணம் என்பது மறைக்கப்பட்ட வருமானம் என்பதால், அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரி வருமானம் என்பது, மிகப் பல கோடி ரூபாய் வராமலே போய்விடுகிறது. இதனால் அதிகமான வரிச்சுமைகளை மக்கள் மீது அரசாங்கம் தொடர்ந்து சுமத்துகிறது.

முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்காகப் பெரும் தொழில் நிறுவனங்கள் இந்தக் கறுப்புப் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவுசெய்கின்றன. இதன்மூலம் அரசில், அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. மக்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க இந்தச் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றன.

கள்ளக் கடத்தல் தொழிலுக்கும், போதைப் பொருட்கள் கடத்தலுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும்கறுப்புப் பணம் பயன்படுகிறது.ட மக்களிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதற்குமான நிலைமைகளை உருவாக்கும்.

ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு பணக்காரர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப்பணத்தைப் பயன்படுத்துவதால், பொருள் உற்பத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
கறுப்புப் பணம் உற்பத்தியாகும் வழிகளை முதலில் அடைக்க வேண்டும்.அடுத்து, கறுப்புப் பணத்தைச் சட்டப்பூர்வமான பணமாக மாற்றப்படுவதற்கான பாதைகளை அடைக்க வேண்டும்.
குறிப்பாக,
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
பினாமிச் சொத்துக்களைக் கைப்பற்ற வேண்டும்.
மொரீஷியஸ், சிங்கப்பூர் வழியாக பினாமியாக வரக்கூடிய சொத்துக்களைத் தடுக்கும்வகையில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டும்.
மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான லஞ்ச ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக்பால் சட்டத்தையும், மாநிலங்களுக்கான சட்டங்களையும், கடுமையாக்க வேண்டும். லோக் அயுக்தா அமைப்பு இல்லாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும்.
லஞ்ச ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

ஆனால்,மோடி இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பாரா? அதானிகளின், அம்பானிகளின் நண்பரான நரேந்திர மோடியால், தனக்குக் கற்பகத்தருவாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் எனப்படும்பெரு முதலாளிகளுக்கு எதிராக, இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கமுடியாது. எனவேதான் சொல்கிறோம், நரேந்திரமோடியால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்று.
                                                                                                                                                                                        -இரா.சோமசுந்தர போசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...