bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 22 ஆகஸ்ட், 2018

செங்கிஸ்கான் .................

செங்கிஸ்கானுக்கு 200 மகன்கள் என்பது உண்மையா?

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய ஒருவர் உலகத்தையே நடுங்கச் செய்தார். செங்கிஸ்கான் உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். படையெடுத்து செல்லும் அவர், பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தார்.
செங்கிஸ் கான்படத்தின் காப்புரிமைH
பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின் தலையை துண்டித்து, மலையாக குவித்த செங்கிஸ்கான், நகரங்களை சூறையாடியபடியே, பீஜிங் முதல் மாஸ்கோ வரை பல நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
ஒரு காலத்தில் மூன்று கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்த மங்கோலியப் பேரரசின் தற்போதைய எல்லைக்குள் வசிப்பவர்களின் மொத்தத் தொகையே மூன்று கோடிதான்.
ஆனால், செங்கிஸ்கானின் வெற்றி போர்க்களத்தோடு முடிந்துவிடவில்லை. மற்றொரு களத்திலும் அவரது செயல்பாடு மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது!
செங்கிஸ் கான்படத்தின் காப்புரிமைOM
கிழக்கு மங்கோலியா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் ஏறத்தாழ எட்டு சதவிகித ஆண்களின் 'ஒய்' குரோமோசோம்களில் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்பத்தின் தடயங்கள் உள்ளதாகத் தெரியவந்தது.
உலகில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ஆண்கள் அதாவது உலக ஆண்களில் 0.5% செங்கிஸ்கானின் பரம்பரையினர் என்று கூறுகிறது இந்த ஆராய்ச்சியின் முடிவுகள்.
பாகிஸ்தானில் ஹஜாரா பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் மக்களின் மரபணுக்களிலும் இதுபோன்ற தடயங்கள் தென்படுகின்றன. அந்த மக்களும் தாங்கள் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றே தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இதைத் தவிர, முகல், சுக்தாய் மற்றும் மிர்ஸா போன்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட மக்கள் தாங்களும் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களாக கூறுகின்றனர்.
செங்கிஸ் கான்படத்தின் காப்புரிமை

ஒருவருக்கு எத்தனை குழந்தைகள்?

அறிவியல் ரீதியான மரபணு ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் செங்கிஸ்கானின் வாரிசுகள் பற்றி வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கின்றன?
டஜன் கணக்கில் திருமணம் செய்துக் கொண்டவர் செங்கிஸ்தான் என்பதும் அவரது மகன்களின் எண்ணிக்கை 200 என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு பிறகு, அவரது மகன்கள் ஆட்சியையும் சம்ராஜ்ஜியத்தையும் மட்டும் விரிவாக்கவில்லை, பரம்பரையையும், வாரிசுகளின் எண்ணிக்கைகளையும் விரிவுபடுத்தினர்.
செங்கிஸ்கான் மரணமடைந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு அவரது சரித்திரத்தை 'தாரீக்-ஏ-ஜகாங்குஷா' என்ற பெயரில் எழுதினார் உதா மலிக் ஜுபாயனி என்ற வரலாற்றாசிரியர்.
"செங்கிஸ்கான் காலத்தில், அவரது பரம்பரையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பற்றி நான் அதிகம் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏனெனில், ஒருவரால் எப்படி இவ்வளவு அதிகமான குழந்தைகளை பெறமுடியும்? என்ற கேள்வி எழும். இந்த புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள் பொய்யான தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டப்படலாம்."
இந்த இடத்தில் ஒரு முக்கியமான சம்பவத்தை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கலாம். செங்கிஸ் கானுக்கு 60 வயதாக இருந்தபோது, தனக்கு பிறகு அரசராக பதவியேற்பது யார் என்பதை முடிவு செய்யும் முக்கியமான கூட்டத்தை அவர் கூட்டினார். முதல் மனைவி மூலம் பிறந்த ஜோச்சி, ஒக்தாயி, சுக்தாயி, தோலி ஆகிய நான்கு மகன்களை கூட்டத்திற்கு அழைத்த செங்கிஸ்கான் அவர்களிடம் பேசினார்.
செங்கிஸ் கான்படத்தின் காப்புரிமை
ஒரு கதையை உதாரணமாக கூறிய செங்கிஸ்கான் அதன் மூலம் ஒற்றை தலைமையின் அவசியத்தை மகன்களுக்கு எடுத்துரைத்தார். "எனது மகன்கள் அனைவரும் அரசராக விரும்பினால், ஒருவரின் கீழ் மற்றவர்கள் பணியாற்ற மறுத்தால், அது, இரண்டு பாம்புகள் பற்றிய பழைய கதை ஒன்றை நினைவுபடுத்துவதாக இருக்கும். அந்த கதையில் ஒரு பாம்புக்கு பல தலைகள் இருக்கும், மற்றொரு பாம்புக்கு ஒரு தலையும் பல உடல்களும் இருக்கும்."
"பல தலைகள் கொண்ட பாம்புக்கு பசியெடுத்து அது இரை தேட கிளம்பினால், எந்த வழியாக செல்லலாம் என்று அதன் பல தலைகளுக்கும் கருத்து வேறுபாடு எழும். ஒத்த கருத்து ஏற்படாத காரணத்தால் எங்குமே செல்லமுடியாமல் இறுதியில் பட்டினியிலேயே பல தலை பாம்பு இறந்துவிடும். ஆனால் ஒற்றைத் தலையும், பல உடம்பும் கொண்ட பாம்புக்கு இந்த பிரச்சனை இல்லை, அது பல உடல்களுக்கு தேவையான உணவை உட்கொண்டு நிம்மதியாக வாழ்ந்தது"
கதையை சொல்லி முடித்த செங்கிஸ்கான், தனது மூத்த மகன் ஜோசி கானை உரையாற்ற அழைத்தார். இதன் பொருள், பிற சகோதரர்கள், ஜோசி கானின் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.
இது இரண்டாவது மகன் சுக்தாயிக்கு பிடிக்கவில்லை.
"நீங்கள் ஜோசியை உரையாற்ற அழைப்பதால் அவனையே அரசனாக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்று பொருள் கொள்ளலாமா? தவறான வழியில் பிறந்த அவனை எங்கள் தலைவராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்று தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று தந்தையிடம் தனது மனத்தாங்கலை முறையிட்டார்.
செங்கிஸ் கான்படத்தின் காப்புரிமை40 ஆண்டு கால கதை
சுக்தாயி குறிப்பிட்டுச் சொல்ல விரும்பியது 40 ஆண்டு பழைய கதை. செங்கிஸ் கானின் எதிரிகளினால் கடத்தப்பட்டார் அவருடைய முதல் மனைவி போர்தா காதூன். 1161ஆம் ஓல்கோத் பழங்குடியினத்தில் பிறந்த போர்தாவுக்கும், தைமூஜினுக்கும் (செங்கிஸ் கானின் உண்மையான பெயர்) சிறு வயதிலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது. திருமணம் நடக்கும்போது போர்தாவுக்கு 17 வயது, செங்கிஸ் கானுக்கு 16 வயது.
திருமணமான சில நாட்களிலேயெ செங்கிஸ் கானின் எதிரிகள், செங்கிஸ் கானின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆறு தம்பிகள் மற்றும் தாயுடன் செங்கிஸ் கான் தப்பித்தாலும், அவரது மனைவி போர்தா மட்டும் அகப்பட்டுக் கொண்டார்.
உண்மையில் போர்தாவை கடத்துவதே தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம். இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பதோ மற்றுமொரு கடத்தல் கதை. செங்கிஸ் கானின் தந்தை, தங்கள் இனத்திற்கு எதிரியாக இருந்த மற்றொரு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்தான் செங்கிஸ் கானின் தாய்.
செங்கிஸ்கானின் தாயான தங்கள் இனப் பெண் கடத்தப்பட்டதை பல ஆண்டுகளாகியும் மறக்காதவர்கள், பழி தீர்த்துக் கொள்வதற்காக செங்கிஸ்கானின் மனைவியை கடத்தினார்கள். மாட்டு வண்டி ஒன்றில் மறைந்திருந்த போர்தாவை கண்டுபிடித்து, குதிரையில் ஏற்றிக் கொண்டு விரைந்தார்கள் கடத்தல்காரர்கள்.
செங்கிஸ் கான்படத்தின் காப்புரிமை
தனது மனைவியை தேடும் வேட்டையை தொடங்கினார் செங்கிஸ்கான். மனைவியை கடத்திய கானாபதோஷ் மர்கத் பழங்குடியினத்தவர் ஆசிய கண்டத்தின் பல ஆயிரம் மைல்கள் பரப்பளவிலான சமவெளிகளில் வசித்து வந்தனர். மனைவியைத் தேடி நீண்ட பயணம் மேற்கொண்ட தைமூஜின் என்னும் செங்கிஸ்கான், ஆட்களையும் திரட்டினார்.
"அவர்கள் என்னுடைய வீட்டை மட்டும் சூறையாடவில்லை, என்னுடைய மனதையும் சூனியமாக்கிவிட்டார்கள்" என்று சொல்லி வருந்துவார் செங்கிஸ்கான்.
இறுதியில் தனது மனைவியை சகாக்களின் உதவியால் மீட்டுவந்தார் செங்கிஸ் கான். இந்த சம்பவம் அவரது வாழ்வில் மிக முக்கியமானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஏனெனில் மனைவியை தேடி அவர் பயணித்த பாதையில் தான் பிற்காலத்தில் பயணித்து உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் செங்கிஸ் கான்.
போர்தா மீட்கப்படுவதற்கு எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. தனது இடத்திற்கு வந்த சில மாதங்களிலேயே ஜோசியை பெற்றெடுத்தார் போர்தா.
ஜோசியின் பிறப்பு பற்றி பல வதந்திகள் பரவினாலும், ஜோசியை தனது மூத்த மகனாகவே கருதினார் செங்கிஸ்கான். தனக்கு பிறகு ஜோசியே பதவியேற்கவேண்டும் என்று அவர் கருதியதற்கும் அதுவே காரணம்.
ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரே தாயின் வயிற்றில் பிறந்த மகன்களே, மூத்த சகோதரனின் பிறப்பு பற்றி கேள்வி எழுப்புவார்கள் என்று செங்கிஸ் கானுக்கு தோன்றவில்லை.
செங்கிஸ் கான்
சகோதரர்களுக்கு இடையே சண்டை
தம்பி சுக்தாயி, தன் மீது குற்றம் சுமத்துவதை தாங்க முடியாத ஜோசி, வேகமாக எழுந்து தம்பியின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டார். இருவருக்கும் இடையே மூண்ட கைகலப்பை விலக்கிவிட அனைவரும் வர வேண்டியதாயிற்று.
தனது காலத்திற்கு பிறகு மூத்த சகோதரன் ஜோசி அரியணை ஏறுவதற்கு மூன்று மகன்களும் தடைகளை ஏற்படுத்துவார்கள் என்பதை புரிந்துக் கொண்டார் தந்தை செங்கிஸ் கான். சகோதரர்கள் இடையே சண்டை மூண்டால் நாடு பிளவுபடும் என்று செங்கிஸ்கான் கவலையடைந்தார்.
இப்போது சுக்தாயி ஒரு யோசனையை முன்வைத்தார். மூத்த சகோதரர்கள் இருவரையும் விடுத்து, மூன்றாவது மகனான ஓக்தாயி என்பவரை அரசராக்கலாம் என்ற சுக்தாயின் திட்டத்திற்கு சகோதரர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
இது செங்கிஸ் கானுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் கோடிக்கணக்கில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவரது மூத்த மகனின் பிறப்பு பற்றி, பிற மகன்களே கேள்வி எழுப்பியது வரலாற்றின் வினோதமான முரண்பாடு.
1227 ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று தனது இறுதி மூச்சை விட்ட செங்கிஸ்கானின் வாழ்க்கையில் அவர் அனுபவித்த மிகப் பெரிய துக்கமாக இதுதான் இருந்திருக்கும்.
                                                                                                                                             நன்றி :பிபிசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...