"குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது."ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.
"இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?"
மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?
மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும்.
15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.
டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.
அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.
உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன.
வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.
எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த "ஆப்கோ வேர்ல்ட்வைட்" என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம்.
துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது.
ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.
கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது.
அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது.
அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.
அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.
அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.
துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான்.
மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம்
ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம்
ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.
மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.
இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.
அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.
ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது.
ஆனால் "மோடியின் சமீபத்திய இமாலய ஜாலம் "அப்பட்டமான கலப்படமற்ற பொய்.
நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக