bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 6 ஜூலை, 2017

வருங்கால குடியரசுத்தலைவர்...?

பாஜக முன் வைத்துள்ள ராம்நாத் கோவிந்த்  குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் ஆபத்து அதிகமாகவே உள்ளது.  


அதனால் இவரைப்பற்றி நாம் கொஞ்சம்  அறிந்து கொள்வது நல்லது.

ராம்நாத் கோவிந்த்  தலித் என்று கூறப்பட்டாலும்  நம் தமிழ் நாட்டில் உள்ளது போல உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர் அல்ல.


அவர் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.உத்திர பிரதேச  மாநிலத்தில் அவர் இனம் தலித் பட்டியலில் உள்ளது.அதனால் அவர் தலித்தாக அறியப்படுகிறார்.

மற்றபடி நம்ம ஊர் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இல்லாதவர்.

1945, அக்., 1 ம் தேதி கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ., தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71.

2015 ஆகஸ்ட் 8 ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 

தலித்துகளுக்கெதிராக இருக்கும் சாதியப் பாகுபாடு குறித்து ராம்நாத் கோவிந்தின் நிலைபாடு என்ன? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பீகார் மாநில ஆளுநரும், தலித்தலைவருமான கோவிந்த் பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கப்பட்டதிலிருந்து பலராலும் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுவதாக இருக்கிறது. 

அமெரிக்கத் தூதரகத்தில் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட ‘இந்திய தலித்துகளின் சமூகப் பொருளாதார எதிர்காலம்’ என்ற தலைப்பிலான அறிக்கையானது விக்கிலீக்ஸ் அமைப்பினரால் கசிய விடப்பட்டது. தலித் பாகுபாடு குறித்துஅந்த அறிக்கையில் உள்ள பல தகவல்கள்,தலித்துகள் குறித்து கோவிந்த்தின் நிலைபாடைத் தெளிவுபடுத்தியுள்ளன.

சாதிய அடுக்குநிலையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களாக பி.ஆர்.அம்பேத்கர் போன்ற இந்தியத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட முற்றிலுமாக சாதியை ஒழித்தல் என்ற கருத்தை முன்னிறுத்தாமல், சங்பரிவார அமைப்புகளின் நிலைபாட்டையொட்டி ஹிந்து புராணங்களில் கூறியுள்ளபடி அவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைபாடை கோவிந்த் மேற்கொண்டதாக 2005ஆம் ஆண்டுதயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் ஷெட்யூல்ட் சாதி மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவராக கோவிந்த் அப்போது இருந்து வந்தார். தலித் அறிஞரும் பல்கலைக்கழகமானியக் குழுவின் முன்னாள் தலைவருமான தோரட், தலித் தலைவராக தனியாக அப்போது இயங்கி வந்தவரும் தற்போதுபாஜகவில் இருப்பவருமான உதித் ராஜ் போன்றவர்களின் கருத்துக்களோடு மாறுபட்டவராக கோவிந்த் இயங்கி வந்தார்.

தலித்துகள் மீதுகாட்டப்படும் பாகுபாடுகள் பொதுவாக கிராமப்புறங்களிலேயே காணப்படுவதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தோரத் முன்வைத்த கருத்துகளுக்கு மாறாக, அத்தகைய பாகுபாடுகள் கணிசமான அளவில் குறைந்திருப்பதாகவும், வேலைக்கு அமர்த்தப்படுவது கூட சாதிகளின் அடிப்படையில் இருப்பதில்லை எனவும் கோவிந்த் கூறினார். 


‘ஒரு தலித்தாகவும், பாஜகவின் உத்தரப்பிரதேச எம்பியாகவும் இருக்கும் ராம்நாத் கோவிந்த் தனது கருத்துகளை அமெரிக்க தூதரகத்தில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத அரசியல் அதிகாரியொருவரிடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார். கடந்த பத்தாண்டுகளில் தலித்துகளின் மீது காட்டப்படும் சாதியப்பாகுபாடு என்பது வெகுவாகக் குறைந்துள்ளது மட்டுமல்லாமல் தலித்துகளுக்கு உண்மையான அக்கறையுடன் உதவுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இத்தகையபாகுபாடு வீடுகளில் இன்னும் காணப்பட்டாலும் கூட, வேலைக்கு அமர்த்துவதற்கான முடிவுகள் இவ்விதமான பாகுபடுகளின்றி நடப்பதாகவும் அவர் தெரித்தார்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி : தி வயர் இணைய இதழ்தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு

இடஒதுக்கீடு என்பது பகுதியளவிலேயே வெற்றியடைந்திருப்பதாக கருதிய தோரட், தகுதியுள்ள தலித் ஒருவர் இருந்தால்கூட, உயர்சாதி ஹிந்துக்கள் தலித்திற்குப் பதிலாகசாதி ஹிந்து ஒருவரையே பணியில் அமர்த்துவதாகவும், அதன் மூலமாக தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை சாதியப் பாகுபாடு பேணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார். 

ஆனால்,கோவிந்த் அவரிடமிருந்து மாறுபடுகிறார். 
தலித்துகளின் உரிமைகளைக் காப்பாற்றுவதில் இடஒதுக்கீடு பெரிய அளவில் வெற்றியடைந்திருப்பதாக கோவிந்த் கூறுவதோடு,தலித்துகளின் மீதான பாகுபாடுகளை அகற்றுவதற்கு தொடக்கக்கல்வியே ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

தொடக்கக்கல்வியில் ஏற்படுத்தப்படும் சீர்திருத்தங்களே சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு உதவும் என்ற கருத்தை பெரும்பான்மையான தலித் அறிஞர்கள் ஒத்துக் கொள்வதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துடையவர்களில் பெரும்பாலானோர், குறிப்பாக சங்பரிவார அமைப்புகளில் இருப்பவர்கள் கோவிந்த் கூறுவதைப் போன்ற சீர்திருத்தங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மாற்றியமைக்க உதவும் என்று கருதுகின்றனர். 

இடஒதுக்கீட்டுச் சட்டங்களின் மூலம்ஐந்து சதவீத தலித்துக்களே பயனடைந்திருப்பதாகவும், நிலவுகின்ற சாதி அமைப்பினால், தலித்துகளில் இன்னும் மிகப் பெரும்பாலானோர் ஊதியம் குறைவாக கிடைக்கும் பயிற்சி தேவைப்படாத வேலைகளிலேயே பணிபுரிந்து வருவதாகவும் தோரட் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

ஆனால், உண்மையில் சாதிப் பாகுபாடு ஏற்படுவதற்கு பொருளாதாரமே அடிப்படைக் காரணமாக இருப்பதாகவும், அது சாதி சார்ந்ததாக இருப்பதில்லை என்று கூறும் கோவிந்த், இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும், இத்தகைய பொருளாதாரப் பாகுபாடுகளை சாதிய அமைப்பு நீட்டித்து தொடர்ந்து வைத்துக் கொள்வதாகவும் கூறுகிறார். 


நிலப்பண்ணைமுறை சார்ந்த ஐரோப்பாவில் இருந்த (சிலவகை வேலைகளை குறிப்பிட்டவர்களே செய்யும்) வாணிபம் செய்யும் குழுக்களோடு சாதிய அமைப்பு முறையை கோவிந்த் ஒப்பிடுகின்றார். வாணிபக் குழுக்களில் வேலை மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதாகவும், ஆனால் சாதிய அமைப்பில்தங்கள் பிறப்பின் மூலமே ஒருவர் தான் செய்யவேண்டிய வாணிபத்தை பெறுவதாகவும்கோவிந்த் குறிப்பிடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

பல ஆண்டு காலமாக சங்பரிவார அமைப்புகள் கூறி வருவதையே கோவிந்தின் வாதங்கள் மிகத்தெளிவாக பிரதிபலிக்கின்றன.

இடஒதுக்கீட்டிற்கு சாதியை விடுத்து பொருளாதாரப் பின்னணியை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம் என்று 2010ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்கள் அரசியலில் எதிர்வாதங்களைக் கிளப்புவதாக இருந்ததை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். தோரட்டின் கருத்துக்களோடு ஒத்துப் போன ராஜ், தனியார் துறைகளில் தலித்துகளுக்கெதிரான பாகுபாடு தொடர்வதால், அமெரிக்காவில் இருப்பதைப் போல தனியார்துறைகளிலும் சமவாய்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறினார். 

‘ஹிந்துமதம் சாதிகளை ஏற்றுக் கொள்வதாக இருப்பதால், அமெரிக்காவில் இனப்பாகுபாட்டை நீக்குவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தை விட அதிக அளவிலான காலம் இந்திய அரசாங்கத்திற்கு சாதிப்பாகுபாட்டை ஒழிப்பதற்குத் தேவைப்படுவதாக இருக்கும்’ என்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வருத்தம் தோய்ந்த காரணத்தை கோவிந்த் அந்த அதிகாரியிடம் முன்வைத்தார்.

இந்தியாவில் இத்தகைய சாதிப்பாகுபாடு என்பது இன்னும் 50 முதல்100 ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதாகவும் கோவிந்த் கணித்துக் கூறினார். அப்போது, உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாஜகவைச் சேர்ந்த சங் பிரிய கௌதம் என்பவரை விட மிகவும் மென்மையாக நடந்து கொள்பவராக கோவிந்த் இருந்தார். 

தனியார் துறைகளில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு சமவாய்ப்புச் சட்டம் என்பது உதவிகரமானதாக இருக்கும்என்று கௌதம் சொன்ன அதேவேளையில்தான் தனது ஒத்திசைந்து போகும் மென்மையான படிமத்திற்கேற்றாற் போல, அத்தகைய சட்டத்தைக் கோருவதிலிருந்து கோவிந்த் ஒதுங்கி நின்றார். ஆனாலும் கட்சியின் மீது கொண்ட பற்றுறுதியை நிரூபிப்பதற்காக பாஜக மட்டும்தான் தலித்துகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே கட்சி என்று ஆவேசத்துடன் அவர் முழங்கிக் கொண்டிருந்தார்.
ராம்நாத் கோவிந்த்                       மீரா குமார்.


தங்களுக்கென்று மேடை, தனி அமைப்புகளை தலித்துகள் பெற வேண்டிய தேவையிருப்பதாகக் கூறிய தோரட், ராஜ் ஆகியோரிடமிருந்து மாறுபட்ட கருத்து கொண்டிருந்த கோவிந்த் உயர்சாதியினருக்கான கட்சி என்றதனது பிம்பத்தை உடைத்தெறிந்து விட்டு தலித்துகளுக்கான உதவிகளைச் செய்வதற்கு பாஜக தயாராக இருக்கிறது என்பதாகக் கூறினார்.

தலித் மற்றும் இதர தாழ்ந்த சாதியினர் மற்ற சாதியினருக்கு நிகராக கொண்டு வரப்படும் வரையிலும் இந்தியாவால் உலகஅளவில் மாபெரும் சக்தியாக மாற முடியாதுஎனவும், தலித்துகளுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்கு பாஜக போன்ற தேசிய கட்சியால் மட்டுமே முடியும் எனவும் தனது வாதத்தை அவர் முன்வைத்தார். 

நாட்டின் மிகப் பெரிய அரசியலமைப்பு பதவிக்கு வேட்பாளராக கோவிந்தை தேர்வு செய்திருக்கும் முடிவை, தலித்துகளை சமூகத்தில் உள்ளடக்கிக் கொள்வதற்காக காவிசக்திகள் முன்வைத்திருக்கும் மிகப் பெரிய முயற்சியாக, பாஜகவும், அதன் கருத்து முன்னோடியுமான ஆர்எஸ்எஸ்சும் முன்னிறுத்துகின்றன.

சமூக நீதி, அதிகாரம் ஆகியவற்றின் மீது கோவிந்த் கொண்டிருக்கும் கருத்துக்கள், அவரைப் போன்ற விசுவாசமுள்ள, அடிபணியும் தலைவர் ஒருவர், சாதிய அமைப்பு குறித்து தனது பாரம்பரியக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாத சங் பரிவாரின் இயற்கையான தேர்வாகவே இருப்பார் என்பதையேநமக்கு காட்டுகின்றன.

காவி சக்திகளுக்கெதிராக தலித் சக்திகளின் எதிர்ப்பு அலை ஓங்கியுள்ள இந்த அரசியல் சூழலில், பாஜக கோவிந்தை ஜனாதிபதி பதவிக்காகத் தேர்வு செய்திருப்பது என்பது அந்தப் பதவியைப் போலஒரு சடங்காகவே இருக்கிறது.

நன்றி : தி வயர் இணைய இதழ்தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...