bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 28 ஜூலை, 2017

மாட்டுக்கறித் தடையால் ஆதாயமடையப் போகிறவர்கள் யார்?’

ந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் பெரும்பகுதி சிறு உற்பத்தியாளர்களுடையது. 
ஐ.நா. உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பால்மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை 7.5 கோடி. 
இதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் ஓரிரு பசு அல்லது எருமை மாடுகள் முதல், அதிகபட்சம் பத்து மாடுகள் வரை  வைத்திருப்பவர்கள்.
உலகின் மற்ற நாடுகளில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்திய பால் பண்ணைத் தொழிலுக்கு உண்டு. மற்ற பல நாடுகளில் சிறு உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், அவர்கள் தமது பாலை கார்ப்பரேட் பண்ணைகளுக்குத்தான் விற்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது. 
இந்தியாவில்தான் பாலை வாங்கி நுகர்கின்ற மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக பால்மாடு வளர்ப்போரின் கைக்குப் போகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பாலில் சுமார் 40 விழுக்காட்டை மாடு வளர்ப்பவர்கள் தமது குடும்பத் தேவைக்கே பயன்படுத்தி விடுகின்றனர். 
மீதமுள்ள பால்தான் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு சந்தைக்கு வரும் பாலில் 30% தான் கூட்டுறவு பால் பண்ணைகளுக்கும் தனியார் பால் பண்ணைகளுக்கும் விற்கப்படுகின்றன. 
மீதமுள்ள 70% பாலை உற்பத்தியாளர்கள், அதாவது ‘‘பால்காரர்கள்’’ நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள். 
இதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பான நிலைமை.
இத்தகைய சிறிய பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் குறித்து தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகம் (NDDB) ஒரு கணக்கீட்டை வெளியிட்டிருக்கிறது. 
மாட்டின் விலை, தீவனம், மருத்துவம், கறக்கும் பாலின் அளவு, கறவை நின்ற மாட்டை விற்றால் கிடைக்கும் வருவாய்  ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு இந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் என்ன என்பதை அது கூறுகிறது.
அந்த கணக்கின்படி, பத்து பால்மாடுகளை வளர்க்கும் ஒருவர் 7 ஆண்டுகளில் பெறக்கூடிய நிகர லாபம் 11.6 லட்சம் ரூபாய். 
இந்த தொகையில் 5.5. இலட்சம் ரூபாய் கறவை வற்றிய மாடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை என்று அந்த கணக்கீடு கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது மோடி போட்டிருக்கும் சட்டத்தின்படி மாட்டை விற்கக் கூடாதென்றால், 11.6 லட்சத்தில் 5.5. இலட்சத்தை கழித்து விடவேண்டும். ஏழாண்டுகளுக்கான அவரது இலாபம் 6 இலட்சம் என்று குறைந்து விடும். 

அதாவது, பத்து மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்தால், அவருக்கு கிடைக்கும் தொகை ஆண்டுக்கு ரூ.85,000; அல்லது மாதத்துக்கு சுமார் 7,000 ரூபாய்). இது நமது கணக்கல்ல, தேசிய பால் உற்பத்தி கழகத்தின் கணக்கு.
கறவை வற்றிய மாடுகள் குறைந்தது 14 ஆண்டுகள் உயிர்வாழும். அவற்றைப் பராமரிக்க ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் பத்து மாடுகளை 14 ஆண்டுகள் பராமரிப்பதற்கு 80 இலட்சம் ரூபாய் தேவை. 
கறவை வற்றிய மாடுகளை விற்கக் கூடாது என்றால், தொழிலை விட்டு ஓடுவது ஒன்றுதான் பால்மாடு வளர்ப்பவர்கள் முன் இருக்கும் வழி.
ஆனால் பால்மாடு வளர்ப்பவர்கள் அந்த தொழிலைக் கைவிட முடியுமா என்பதுதான் கேள்வி.?
பால்மாடு வளர்ப்பது என்பது விவசாயப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதி. விவசாயப் பொருளாதாரம் மென்மேலும் வீழ்ச்சியடைந்த போதும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதற்கு ஒரே காரணம், அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதுதான். 
2013 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, மொத்த பயிரிடும் பரப்போ, 1971−72 இல் 11.9 கோடி ஹெக்டேராக இருந்து, 
2003−இல் 10.7 கோடி ஹெக்டேராக குறைந்து, 
2013−இல் 9.2 கோடி ஏக்கராகத் தேய்ந்து விட்டது. 
ஆனால் கிராமப்புறத்தில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 2003−ஆம் ஆண்டில் 14.7 கோடி குடும்பங்கள். 
அது தற்போது 15.6 கோடி குடும்பங்கள் என உயர்ந்திருக்கிறது.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் வரையறைப்படி 215 சதுர அடி நிலம் கூட இல்லாதவர்கள்தான் நிலமற்றவர்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள். இந்த கணக்குப்படி நிலமற்றவர்கள் இந்திய மக்கள் தொகையில் 7.4% என்பது அரசு கணக்கு.
இதற்கு நேர் எதிராக 46.7% கிராமப்புற நிலங்கள், 7.4% குடும்பங்களிடம் உள்ளன. 
அதே நேரத்தில் 75.4% விவசாயிகளிடம் குறைந்த பட்சம் 215 சதுர அடி முதல் அதிக பட்சம் ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) வரை நிலம்தான் உள்ளது. 
இதுதான் கிராமப்புற நிலவுடைமை குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தரும் சித்திரம். இந்த 75% விவசாயிகள் நிலத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்பது யாரும் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.
சந்தையில் மாடுகள் விற்பதைச் சுற்றிவளைத்துத் தடை செய்திருக்கும் மோடி அரசின் ஆணையைக் கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம். 
2013−ஆம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வே கணக்கெடுப்பின்படி, 75% கிராமப்புற சிறு விவசாய குடும்பங்களில், குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவராவது நகரத்தில் வேலை செய்யப் போய்விடுகின்றனர். 
குடும்பம் உயிரோடு இருக்க அவருடைய சம்பளம்தான் உதவுகிறது.
விவசாய வருமானம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்ற கடந்த 15 ஆண்டுகளில் சிறு விவசாயிகள் வாழ்வதற்கு கண்டுபிடித்திருக்கும் இன்னொரு முக்கியமான மாற்று வழி பால்மாடு வளர்ப்பு. 
கிராமப்புற கால்நடைகளில் சுமார் 90% சிறு, குறு விவசாயிகளிடம்தான் இருக்கிறது என்கிறது 2011−12க்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு. வேறுவிதமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்தான் மிகப்பெரும் அளவில் கால்நடை பொருளாதாரத்தை சார்ந்திருக்கின்றனர்.
இந்தியாவின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரத்தின் ஆண்டு மதிப்பு 5.7 லட்சம் கோடி ரூபாய். விவசாயப் பயிர் உற்பத்தியின் ஆண்டு மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய். ஏறத்தாழ பயிர் உற்பத்தியில் பாதி அளவை எட்டிவிட்டது கால்நடை வளர்ப்புத் தொழில். 2015−16இல் விவசாயத்துறை 1.2% தான் வளர்ந்திருக்கிறது. 
கால்நடை வளர்ப்போ ஆண்டுக்கு 15% என்ற வேகத்தில் வளர்ந்து வருகிறது.
பால்மாடு வளர்ப்பும், கால்நடைப் பொருளாதாரமும்தான் கோடிக்கணக்கான விவசாயிகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன மேற்கண்ட புள்ளிவிவரங்கள். இருப்பினும் இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு மாடு தருகின்ற பாலின் அளவு உலக சராசரியோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ பாதி அளவே உள்ளது. 
போதுமான தீவனமின்மை, மேய்ச்சல் நிலமின்மை, மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல குறைபாடுகள் இதற்கு காரணம்.
மாடுகளுக்கான பசுமைத் தீவனப் பற்றாக்குறை 63%, வைக்கோல் போன்ற உலர் தீவனங்களின் பற்றாக்குறை 24%, பருத்திக்கொட்டை − புண்ணாக்கு போன்ற மற்ற தீவனங்களின் பற்றாக்குறை 76%. பால்மாடு வளர்ப்புக்கான செலவில் 60 முதல் 70% தீவனங்களுக்கான செலவேயாகும். 
2020−21இல் இந்தியாவின் பால் சந்தை 36% அதிகரிக்கும் என்றும், இதற்கேற்ப தீவனங்கள் உற்பத்தி செய்யப்படவில்லையென்றால், பால் சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் என்றும் கூறுகின்றது ஒரு ஆய்வு.
‘‘ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா’’ என்று பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிடும் அரசால் ஒரு வேலைவாய்ப்பைக் கூட உருவாக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த நாட்டின் பரம ஏழைகள் தங்களுடைய நிச்சயமற்ற வாழ்க்கை நிலையில், பலவிதமான எதிர்மறையான சூழல்களை எதிர்கொண்டு, எந்தவிதமான ஊக்கமோ ஆதரவோ கிடைக்காத நிலையிலும் சொந்த முயற்சியில் வாழக் கற்றிருக்கிறார்கள். 
முன்முயற்சியுடன் சவாலை எதிர்கொண்டு தொழில் நடத்தும் ஒருவரைத்தான் நாம் தொழில் முனைவர் என்று அழைக்கிறோம். நம் நாட்டில் சுய தொழில் செய்பவர்கள்தான் அத்தகைய தொழில் முனைவர்கள். ஏழைகளான இந்த தொழில் முனைவோரை வாழவைக்கத் துப்பில்லாத அரசு, அவர்களை மரணத்துக்குத் தள்ளுகிறது.
கறவை வற்றிய மாடுகளை விற்கக்கூடாது என்ற மோடி அரசின் உத்தரவை மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் இப்பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும். 
இந்த உத்தரவு பால்மாடு வளர்ப்பை மட்டும் பாதிக்கின்ற உத்தரவு என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது.
விவசாயம் பொய்த்துப் போனதால், கிராமப்புறங்களைவிட்டு வெளியேறிப் பிழைப்புக்காக சென்னை நகரில் குவியும் வட மற்றும் வடகிழக்கிந்திய மாநில இளைஞர்கள். 
பால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் கிராமத்திலேயே நீடிக்க முடியாது. 
இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் பாதி − அதாவது, சுமார் 12.5 கோடி ஏக்கர் நிலம் சிறு, குறு விவசாயிகளிடம் உள்ளது. 
பால்மாடு வளர்க்க முடியாது என்றால் இவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தும் தேவையே இல்லாமல், போண்டியாகிப்போன விவசாயிகள் தானாக முன்வந்து நிலத்தை விற்றுவிட்டு வெளியேறும் சூழ்நிலையை மோடி அரசின் உத்தரவு உருவாக்கும். தேசிய அளவில் கார்ப்பரேட்டுகள் நடத்தவிருக்கின்ற அம்மணமான நிலப்பறி நடவடிக்கைதான் மோடி அரசு போட்டிருக்கும் இந்த உத்தரவின் நோக்கமா என்ற கேள்வி 
எழுகிறது.
அவ்வாறு சொல்வது கொஞ்சம் மிகையோ என்று முதலில் தோன்றியது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விவரங்களிலிருந்து பார்க்கும்போது, ‘‘ஆம், இது ஒரு மாபெரும் நிலத் திருட்டுக்கான திட்டம்தான்’’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்துடன் தொடர்பற்ற வேறு நோக்கங்களால் உந்தப்பட்ட  நடவடிக்கைகள் போல தோன்றுகின்ற நடவடிக்கைகளின் பின்புலத்தில், வெளியில் தெரியாத பொருளாதார நோக்கங்கள் இருக்கும் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம்.
1991−இல் பாக்தாத் மீது குண்டு வீசிய அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்ஷிடம் அந்தப் போருக்கான நியாயம் பற்றிக் கேட்டபோது, குவைத் மக்கள் மீது இராக் படையினர் நடத்திய கொலைகளை விவரித்த அம்னெஸ்டி இன்டர்நேசனல் அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘‘இந்தப் போரின் தார்மீக நோக்கத்தை அந்த அறிக்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றார்.
அப்போது குவைத்தின் எண்ணெய் வயல்களைப் பற்றி புஷ் பேசவில்லை. 
‘‘குவைத்தில் எண்ணெய் வயல்களுக்கு பதிலாக காரட் விவசாயம் நடந்திருந்தால், நாம் எதற்காக அங்கே போரிடப் போகிறோம்?’’ என்று பின்னாளில் கூறினார் அமெரிக்காவின் துணை இராணுவ அமைச்சர் லாரன்சஸ் கோத்.
‘‘புனித பூமியை மீட்பது’’ என்ற பெயரில் ஐரோப்பா நடத்திய சிலுவைப்போரில் படை திரட்டப்பட்ட வெறி பிடித்த கிறித்தவர்கள், உண்மையில் யாருக்குப் பயன்பட்டனர்? 
திருச்சபையின் உலகயாத நலன்களுக்கும் இத்தாலிய வியாபாரிகளுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்குமே அவர்கள் பயன்பட்டனர்.

பசுப் பாதுகாவலர்கள் நடத்திவரும் கொலைகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் பாருங்கள்.
மனலி சக்ரவர்த்தி, (ஜூன், 2017, ரூபே இந்தியா) எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...