bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஆசைக்கு முடிவேது?

வெயில்கால மதிய நேரம்.
'முன்னனுமதி பெறாவிட்டால் தயவு செய்து அழைப்புமணியை அழுத்தவேண்டாம்' என்று அவரது கதவில் எழுதியிருந்தது. நான்கு மணிக்கு சந்திக்க நேரம் கொடுத்திருந்த்தால், 3.50 மணிக்கு சென்ற நான், பத்து நிமிடங்கள் காத்திருந்த பிறகே அழைப்புமணியை அழுத்திதேன்.
கதவைத் திறந்த குஷ்வந்த் சிங், "உங்களுக்கு 50 நிமிடங்கள் இருக்கிறது. கேள்வியை தொடங்கலாம்..." என்று சொன்னார்.
அவரது இருமுகங்களை உலகம் அறியும். குஷ்வந்த் சிங் என்றாலே மதுவும் மங்கையும் என்ற எண்ணமே மனதில் தோன்றும். அவரது மறுபுறமோ சிறந்த எழுத்தாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், வார்த்தை பிரயோகத்தில் வல்லவர், கண்ணியமானவர், எப்போதும் மகிழ்வுடன் இருப்பவர், ஆழமான சிந்தனையாளர் என்பதை காட்டும்.

இதே பண்புகளுடன் வேறுபல எழுத்தாளர்கள் இருந்தாலும், மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுவது அவரது 'தற்பகடிகளே'. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியபோது கசங்கிய உடைகளுடன், வெற்றிலையால் சிவந்த வாயுடன் ஓட்டை அம்பாசிடர் காரை தானே ஓட்டிக் கொண்டு வருவார்.
ஒருமுறை அவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல காரில் அமர்ந்தார். அப்போது அமெரிக்க பெண்கள் இருவர் டாக்ஸி, டாக்ஸி என்றுகுரல் கொடுத்தவாறே காரின் கதவைத் திறந்துவிட்டு தாஜ் ஹோட்டலுக்கு போ என்று உத்தரவிட்டார்கள்.
பேசாமல் காரோட்டியாக செயல்பட்ட குஷ்வந்த் சிங் அதற்காக கவலை கொள்ளவில்லை. டாக்ஸிக்கான கட்டணத்தை வாங்கினாரா என்பதுதான் கேள்வி. இந்த சம்பவத்தை அவரே சொல்லக் கேட்டபோது சிரித்து சிரித்து வயிறே வலித்தது.
1998ஆம் ஆண்டிற்கான 'நேர்மையான மனிதர்' விருது குஷ்வந்த் சிங்கிற்கு வழங்கப்பட்டபோது, "நேர்மையானவன் என்று என்னை நானே சொல்லிக் கொள்ளமாட்டேன். மற்றவரின் பொருளை திருடக்கூடாது, பொய் பேசக்கூடாது என்ற நேர்மைக்கு அடிப்படையான இரண்டு பண்புகளும் என்னிடம் இல்லை. பேனா திருடும் குணம் எனக்கு உண்டு. அதிலுள்ள சுகமே தனி. என்னிடம் நிறைய பேனாக்கள் வைத்திருக்கிறேன்.''

''எந்தவொரு மாநாட்டிற்கு சென்றாலும் அனைவருக்கும் முன்பே சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஃபோல்டர்களில் இருக்கும் பேனாக்களை எல்லாம் சுட்டுவிடுவேன். அடிக்கடி பொய் பேசுவேன், ஆனால் அது மற்றவர்களின் மனதை மகிழ வைக்கும் சிறுசிறு பொய்கள்தான். அதாவது நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்பதுபோல" என்று சொல்லி என்னை பகடி செய்தார் குறும்புக்கார குஷ்வந்த் சிங்.
குஷ்வந்தின் நண்பரும், அவருடன் இணைந்து பல புத்தகங்களை எழுதியிருக்கும் ஹும்ரா குரைஷி இவ்வாறு சொல்வார், "மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் குஷ்வந்த். உணவில் பருப்பு அல்லது காய் என்று எதாவது ஒன்று தான் இருக்கும். மதிய உணவு வெறும் சூப் மட்டும்தான். மொபைல் போனையோ, கணினியையோ அவர் பயன்படுத்தியதே இல்லை.''
லோதி கார்டனில் குஷ்வந்த் சிங்குடன் நடைபயிற்சி மேற்கொள்வது பற்றி சொல்கிறார் குரைஷி, ''சிறிது தூரம் நடந்தபிறகு, நீ நடந்துவிட்டு வா என்று சொல்லி அங்கிருக்கும் படிகளில் அமர்ந்துவிடுவார் குஷ்வந்த். திரும்பி வரும்போது அவரை சுற்றி சுமார் 40-50 பேர் அமர்ந்திருப்பார்கள், தனது பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்."
குஷ்வந்த் சிங்-கன்வல் மலிக் திருமணம்.
குஷ்வந்த் சிங்கின் வெளிப்படையான, புத்திசாலித்தனமான பேச்சுக்களில் பாலியல் மற்றும் ஸ்காட்ச் இடம் பெற்றிருக்கும். இயல்பாகவே மகிழ்ச்சியான அவர் தன்னை சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்வார். எந்தவொரு சங்கடமான நிலைமையையும் நகைச்சுவையால் இயல்பாக்கிவிடுவார் குஷ்வந்த்.
குஷ்வந்த் சிங்கின் மகனும், பிரபல எழுத்தாளருமான ராஹுல் சிங் தந்தையின் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். "காலை நான்கு மணிக்கே எழுந்து, தேநீரை தானே தயாரித்துக் கொள்வார். தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குருத்வாரா பக்தி பாடல்களை கேட்பார். பிறகு தினசரி வேலைகளை தொடங்குவார். சரியாக 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒன்று-ஒன்றரை மணி நேரம் உறங்குவார்.''
குஷ்வந்தின் மாலைப்பொழுதுகளில் மது விருந்து பற்றி சொல்கிறார் நண்பர் ஸ்வராஜ் பால், ''அவருடன் மது அருந்த விரும்புபவர்கள் ஏழு மணிக்கு வந்துவிடவேண்டும். அதுவும் முன்னனுமதி பெறாமல் வருபவர்களை பார்க்கவே மாட்டார். அதேபோல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சென்றுவிட்டால் வாசலிலேயே காத்திருப்பார்கள். யாராயிருந்தாலும் சரி எட்டு மணிக்கு கிளம்பச் சொல்லிவிடுவார். இரவு உணவுக்கு பிறகு சரியாக ஒன்பது மணிக்கு படுக்கைக்கு சென்றுவிடுவார்."
குஷ்வந்த் சிங்கின் மற்றொரு நண்பர் காம்னா பிரசாத் இவ்வாறு சொல்கிறார், "என் வீட்டுக்கு விருந்துக்கு வர ஒத்துக்கொண்டபோது பருப்பு, ஒரேயொரு காய்கறி, சப்பாத்தி தவிர வேறு எதுவும் சமைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். எட்டு மணிக்கு இரவு உணவு உண்ணும் அவரது பழக்கம், `பஞ்சாப் கேசரி` பத்திரிகை ஆசிரியருடனான விருந்தின்போது ஒரேயொரு முறைதான் மாறியிருக்கிறது.
காம்னா மற்றொரு சுவராசியமான சம்பவத்தை பகிர்ந்துக் கொள்கிறார். "அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், குஷ்வந்த் சிங்கின் வீட்டிற்கு இரவு விருந்திற்கு வந்திருந்தார். இரவு எட்டு மணியானதும், குஷ்வந்த் சிங்கின் மனைவி கன்வல் ஜெயில் சிங்கிடம் 'உங்களுக்கான நேரம் முடிந்துவிட்ட்து கியானி ஜி' என்று சொன்னார்."

இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எம்.ஜே அக்பருக்கு இடமளித்தவர் குஷ்வந்த் சிங். அவர் குஷ்வந்த் பற்றி இவ்வாறு சொல்கிறார், "உடலில் டீஷர்டும், முகத்தில் புன்னகையும்தான் குஷ்வந்த் சிங்கின் அடையாளம். அதிர்ச்சியான தகவல்களையும் அவருடைய நகைச்சுவை சொல்லாடலால், சொல்லும் விதத்தால் இயல்பானதாக்கிவிடும் திறமை கொண்டவர் குஷ்வந்த் ஜி.''
''அந்த காலத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பயிற்சி மாணவர்களுக்கு குழுமத்தின் பல்வேறு பத்திரிகைகளுக்கும் அனுப்புவார்கள். எனக்கு இல்லஸ்ட்ரேட் வீக்லி ஒதுக்கப்படவில்லை. ஆனால் விதிகளை மாற்றி, என்னையும் ரமேஷையும் மாற்றி இல்லஸ்ட்ரேட் வீக்லிக்கு அழைத்துக்கொண்டார் குஷ்வந்த் சிங். அங்கிருந்துதான் என்னுடைய பத்திரிகைப்பயணம் தொடங்கியது" என்று நினைவுகூர்கிறார் எம்.ஜே அக்பர்.
குஷ்வந்தின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் எம்.ஜே. அக்பர், "லண்டன் அல்லது கேம்பிரிட்ஜில் படிக்காதவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நுழையவே முடியாத காலகட்டம் அது. அந்த சமயத்தில் டீ-ஷர்ட் அணிந்துக் கொண்டு கொலாபாவில் இருந்து நடந்து வருவார் குஷ்வந்த் சிங். அவர் ஆசிரியராக இருந்தபோதுகூட சட்டை அணிந்ததே இல்லை என்று நினைக்கிறேன்".
குஷ்வந்தின் மற்றொரு நண்பர் ஜிக்ஸ் கால்ரா சொல்கிறார், "சுருங்க எழுதி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கலைஞர் குஷ்வந்த் சிங். 'ஒரு சொல்லில் எட்டு எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்து, எட்டு வார்த்தைகளுக்கும் அதிகமான பெரிய வாக்கியத்தை எழுதாதே, ஒரு பத்தியில் எட்டு வாக்கியங்களுக்கு மேல் பயன்படுத்தாதே' என்பதே எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் குறிப்பு."
ஹும்ரா குரைஷி சொல்கிறார், "நான் குஷ்வந்த் சிங்குக்கு எந்தவிதத்திலும் சமமானவள் இல்லை. நான் மது அருந்தாதவள், அவரைப் போல அனைவருடனும் இயல்பாக பழகத் தெரியாது, ஆனால் அவருக்கு என்மீது தனி அக்கறை உண்டு".
"டெல்லியில் இருந்து குருகிராமத்திற்கு வீடு மாறிய பிறகு அவரை பார்க்க வாரம் ஒருமுறையாவது செல்லாவிட்டால், உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்று கேட்டு தொலைபேசி அழைப்பு வந்துவிடும்" என்று சொல்கிறார் குரைஷி.
"என் வீட்டில் வேலையாளோ, சமையல் செய்யவோ யாரும் இல்லை என்பதால் அவர் வீட்டுக்கு செல்லும்போது எனக்கு அடுத்த வேளைக்கான உணவை கட்டிக் கொடுக்கச் சொல்வார். அவரிடம் தயக்கமில்லாமல் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்" என்று குஷ்வந்தின் அக்கறையைப் பற்றி பகர்கிறார் குரைஷி.
குஷ்வந்த் சிங் தன்னை எவ்வளவுதான் நவீனமானவராக காட்டிக் கொள்ள முயற்சித்தாலும் அவர் அடிப்படையில் பழமைவாதியே என்று சொல்கிறார் அவரது மகன் ராஹுல் சிங்.
"எங்கள் வீட்டு மாடியில் ஒரு அழகான பெண் வசித்தார். ஆஃப்கன் தூதர் ஒருவரின் பெண்ணான அவருக்கும் எனக்கும் இடையில் ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தால் எனக்கு போன் செய்வார், நான் அவர் வீட்டிற்கு செல்வேன். என் வீட்டுக்கும் அவ்வப்போது வருவார் அந்த பெண். அவள் அப்பாவுக்கு தெரிந்தால் உன் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார் என்று என்னை திட்டுவார் அப்பா" என்கிறார் ராஹுல்.
"கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் என்றாலும்கூட சீக்கியர் என்பதில் பெருமை கொள்வார். நான் முடியை வெட்டிக் கொண்டதும் சீறினார் என்றாலும் எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங்களிலும் அப்பாவுக்கு நம்பிக்கை கிடையாது" என்கிறார் ராஹுல் சிங்.
மகிழ்ச்சியான ஆளுமையைக் கொண்ட குஷ்வந்த் சிங் பல பரிமாணங்களை கொண்டவர். உருது கவிஞர், வரலாறு மற்றும் இயற்கையில் ஆர்வம் கொண்டவர், தனது இருப்பால் மற்றவர்களை மகிழ வைப்பவர். பெருங்கூட்டத்தின் மத்தியில் இருந்தாலும் அவரது அசாதரணமான ஆளுமை, தனியாக பிரித்து காட்டும்.
தனது வாழ்வின் இறுதிவரை இளமையான இதயத்துடன் வாழ்ந்தவர் குஷ்வந்த் சிங். அவருக்கு 90 வயதானபோது, அவரிடம் கண்ட நேர்காணலின் போது, நிறைவேறாத விருப்பம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்.
குஷ்வந்த் சிங்கின் பதில் இதுதான், "ஆசைக்கு முடிவேது? இதயத்தில் இளமை ஊஞ்சலாடினாலும், மனதில் விருப்பங்கள் ஊடாடினாலும் உடலோ ஊன்றுகோல் தேடுகிறது. இறுதி மூச்சு வரையில் இறக்காது ஆசைகள். 
மனதின் ஆசைகள் நிராசைகளாகும் என்பதை அறிவேன்."
தமிழோசை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...