bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

முற்றிலும் கடைசி பட்ஜெட் ..

"மத்திய பட்ஜெட்டை 2018-2019ஆம் ஆண்டுக்கான பாஜக மோடி  அரசின் கடைசி பட்ஜெட் என்பதை தவிர வேறு ஆறுதலான அம்சங்கள் ஏதும் இல்லை. "
மாறாக பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று ஆறு மாதத்திற்கொரு முறையான அதிர்ச்சி என்ற வரிசையில் இந்த மத்திய பட்ஜெட்டும் மூன்றாவது பொருளாதார அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது.
ஒரு பட்ஜெட்டை அது பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தும் உடனடியாக நாம் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை அது எப்படி அனுகுகின்றது என்பதை வைத்தும் மதிப்பிடலாம்.
"2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த உறுதிபூண்டுள்ளதாக கூறுகிறார்கள். 
ஆனால், அரசு அமைப்பான நிதி ஆயோக் அதற்கு வாய்ப்பு இல்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டது. ஆக, அது குறித்தான அறிவிப்பு வெறும் வார்த்தை ஜாலம் மட்டும்தான்"
அதாவது ஒரு பட்ஜெட்டை அதன் மேக்ரோ பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் மதிப்பிடலாம். பொருளாதார வளர்ச்சி பகிர்வு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்ற மூன்று மேக்ரோ பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு இந்த பட்ஜெட் எந்த அளவு உறுதுணையாக இருக்கும் என்று பார்ப்போம்.
பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. இந்த வருடமும் விதிவிலக்கல்ல. 
அதற்குமேல் இந்த பட்ஜெட் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்த முயற்ச்சிக்காமல் அந்த சரிவின் வேகத்தை அதிகரித்து விட்டதோ என்று அஞ்சத் தோன்றுகின்றது.
அதாவது 2017-2018 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் என்று மத்திய புள்ளியல் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 
இது இந்த அரசின் மூன்றாண்டு ஆட்சியின் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
சரி, சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி ஆண்டின் வளர்ச்சி விகிதத்தோடு இதை ஒப்பிட வேண்டுமானால், அதற்கான புள்ளிவிவரம் இல்லை. இருந்த போதும் புதிய முறையில் கணக்கிடப்பட்ட இந்த 6.5% வளர்ச்சி விகிதத்திலிருந்து 2.2 % கழித்தால் பழைய கணக்கீட்டு முறையிலான வளர்ச்சி விகிதம் கிடைக்கும். 
அதாவது பழைய கணக்கீட்டு முறையில் 2017-2018-ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 4.3 சதவிகிதம் ஆகும்.
2007-08ஆம் ஆண்டு உலகப் பெருமந்தத்திற்கு பின் தொடர்ந்து சரியும் இந்திய பொருளாதார வளர்ச்சியினை சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தடுத்து நிறுத்தி, வளர்ச்சி விகிதத்ததை உயர்த்த தவற விட்டது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த பொருளாதார சரிவை சரிசெய்து வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றத் தவறியதோடு நில்லாமல் UPA அரசின் கடைசி காலாண்டின் வளர்ச்சி விகிதமான 4.9 சதவிகிதத்திற்கும் கீழே சென்றுள்ள பொருளாதாரத்தை மாற்றியமைத்து வளர்ச்சிக்கு வழிகாட்ட இந்த பட்ஜெட்டில் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக 2017-2018 க்கான பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட GDP யில் 1.8 % என்ற முதலீட்டுச் செலவு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 1.6 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக வருவாய் செலவு மிகவும் அதிகமாகியுள்ளது. ஒட்டுமொத்த மத்திய அரசின் வருவாய் செலவு 2017-2018 க்கான பட்ஜெட் மதிப்பீட்டீல் 85.6 சதவீகிதமாக கணக்கிடப்பட்டிருந்தது. 
அது 2017-2018 க்கான திருத்திய மதிப்பீட்டில் 87.7 சதவீகிதமாக உயர்ந்துள்ளது. வருவாய் செலவில் வட்டியின் சுமையும் 5.30 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒட்டு மொத்த வருவாய் செலவில் வட்டியின் பங்கு மட்டும் 27.30 சதவிகிதமாகும்.
பட்ஜெட்டில் பற்றாக்குறை அளவைப் பொருத்தே பொருளாதார ஸ்திரத்தன்மை தீர்மானிக்கப்படுகிறது. பற்றாக்குறையில் மூன்று வகையுள்ளன. அவையனைத்தும் இந்த பட்ஜெட்டில் உயர்ந்துள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
2017-2018 க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 3.2 % என்று இலக்கிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அரசு நடப்பு நிதியாண்டில் தனது ஒட்டுமொத்த செலவுகளுக்காக 5.95 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்குகின்றார்கள். அந்த 5.95 லட்சம் கோடியில் 5.31 லட்சம் கோடி, அதாவது மொத்த கடனில் 90 சதவிகிதம் வட்டிக்கே பயன்படுத்தப்படுகிறது.
அடுத்து வருவாய் பற்றாக்குறை 2.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 
இது சென்ற ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
அதாவது, அரசு தனது அன்றாட செலவுகளை சந்திக்க 4.39 லட்சம் கோடி அளவிற்கு கடனை உயர்த்தியுள்ளது. 
இதன் விளைவாக GDP யில் 44.7 சதவிகிதம் என்று சென்ற பட்ஜெட்டில் மதிப்பீட்டு செய்யப்பட்ட ஒட்டு மொத்த கடன்களின் சுமை இந்த திருத்திய மதிப்பீட்டில் 50.1 சதவிகிதமாக உயர்ந்தள்ளது. இது அரசின் பொறுப்பற்ற நிதி மேலாண்மையினையே காட்டுகிறது.
இப்படி உயர்த்தப்பட்டுள்ள கடன் சுமை வட்டிச் சுமையை மேலும் தீவிரமாக உயர்த்துவதோடு ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை பல நிலைகளில் பாதித்துக் கொண்டிருக்கிறது. இதனால் விலைவாசி உயரும் மற்றும் வட்டி விகிதம் உயரும். 
இவை ஏற்கனவே தனியார் முதலீட்டை மேலும் வீழ்ச்சியடையச் செய்து, இனிவரும் ஆண்டுகளில் இந்த பட்ஜெட் பொருளாதார மீட்புக்கு எந்த வாய்ப்புகளும் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

அரசியல்வாதிகளின் இது போன்ற நிதிப் பொறுப்பற்றத் தன்மையை கட்டுப்படுத்தவே 2003 ஆம் ஆண்டில் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டு நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறைக்கும் இலக்குகள் வகுக்கப்பட்டது.
இந்த அரசு அந்த இலக்குகளை தூக்கி எரிந்ததோடு அல்லாமல் வருவாய் நிதி பற்றாக்குறைக்கு இனி எந்த இலக்கும் தேவையில்லை என்றும் நிதி பற்றாக்குறைக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு அவசியமில்லை என்றும் கூறி இந்த நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.
இது இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதோடு அல்லாமல் நமது பொருளாதாரத்தின் மீது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்த்து பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கும் காரணமாகியுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது ஒரு முக்கியமான கருவாக நமது அரசியல் பொருளாதார விவாதத்தில் அமைந்து வந்திருந்தது. 

இந்த நிலை மாறி பொருளாதார வளர்ச்சி மட்டுமே தலையாய நோக்கமாக கடந்த மூன்று ஆண்டுகளில் கருதப்பட்டு வந்து அதற்கும் வாய்ப்பில்லாத ஒரு சூழலை இந்த பட்ஜட் உறுதிபடுத்தியுள்ளது.
கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட 12-ஆவது ஐந்தாண்டு திட்ட செலவீடு கடுமையாக குறைக்கப்பட்டதோடு அல்லாமல் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவே குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மனிதவளர்ச்சிக்கான துறைகளுக்கு வெறும் அறிவிப்புகள் மட்டுமே மிஞ்சியுள்ளது. உதாரணமாக விவசாயத்துறைக்கு 2017-2018 ல் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு ரூபாய் 56,992 கோடி திருத்திய மதிப்பீட்டில் ரூபாய் 56,589 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
 உண்மை நிலை வேறாக  இருக்க
ஒட்டு மொத்த பட்ஜெட்டின் அளவே 22.18 லட்சம் கோடி ரூபாய் என்பதை மறந்து பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பாஜக மோடி அரசுக்கு ஆதரவாக நடுநிலை(?)ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் ஏமாற்றுகின்றன .
 இது போன்றே மற்றும் பல அறிவிப்புகள் நகைப்புக்கு இடம் அளிக்கின்றன. 
வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதையே இந்த அரசு நிறுத்திவிட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...