bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 23 ஜனவரி, 2019

எப்படி கையாளப் போகிறோம் ?

விக்கிபீடியா விஞ்ஞானிகளை

ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம்.
 சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டுள்ள யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்;
இதுவரை மொத்தம் ஐநூற்றி சொச்சம் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றில் அவர் எடுத்துக் கொள்ளாத விசயங்களே கிடையாது என்று சொல்லலாம்.
 பூமிக்கு மேல் வானத்திற்குக் கீழ் உள்ள அனைத்தைக் குறித்தும் – சில வேளைகளில் வானத்திற்கு அப்பாலும் பூமிக்கு கீழே உள்ளவைகளைக் குறித்தும் கூட – அவரிடம் சொல்வதற்கு ஏதாவது உள்ளது.

சிக்கல் என்னவென்றால் அப்படிச் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்று விக்கிபீடியாவில் சுட்டதாக இருக்கும் அல்லது வெறும் வாயில் சுட்டதாக இருக்கும். 
பெரும்பாலும் மேலோட்டமான, அறைகுறையான தகவல்களின் தொகுப்பு. 

 இதேபோல் எண்ணற்ற தமிழ் சேனல்கள் யூ-டியூபில் உள்ளன.

அந்தந்த சூழலில் பரபரப்பாக பேசப்படும் செய்திகள் குறித்து மேம்போக்காக அடித்து விட்டு ஹிட் தேத்துவதை நோக்கமாக கொண்டவை இந்த சேனல்கள்.
ஆனால், மக்கள் இதை விரும்புகின்றனர்.
மதன் கவுரி சர்வகலா வல்லுநராக வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் பாரிசாலன் என்பவர் (பஜாஜ் புகழ்) தமிழ்தேசியத்தின் சிந்தனைக் கிட்டங்கியாக (Think Tank) வளர்ந்துள்ளார் – ஹீலர் பாஸ்கர் என்பவர் யூ-டியூப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவராக வளர்ந்துள்ளார்.
சாராம்சத்திலும் தன்மை அளவிலும் இவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல; அரைவேக்காடுகள். இவ்வாறான அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி?

இந்தப் போக்கின் அடிப்படை என்னவென்பதை தொட்டுக் காட்டுகின்றது ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரை.

இந்தப் போக்கைப் புரிந்து கொள்ள நாம் இணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சுருக்கமாக பார்த்து விடுவது நல்லது.

உலகளாவிய வலைக்கான (World Wide Web) தரநிர்ணயத்தைச் செய்யும் உலகளாவிய வலைக்கான கூட்டமைப்பு (World Wide Web Consortium) தொன்னூறுகளின் இறுதியில் இருந்து உலகளாவிய இணையம் கைக்கொண்ட தொழில்நுட்பத்தை வெப் 2.0 என்றும் அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை வெப் 1.0 என்றும் பிரிக்கிறது.
தற்போது வெப் 3.0 தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.

வெப் 1.0, வெப் 2.0 மற்றும் வெப் 3.0 ஆகியவற்றுக்கு இடையில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன – எனினும், இந்தப் பதிவின் வரம்பைக் கணக்கில் கொண்டு கீழ்கண்டவாறு சாரமாக புரிந்து கொள்வோம்.
வெப் 1.0 வில் உள்ளடக்கம் (Content) என்பது பெரிதும் ஒருமுக திசை கொண்டதாக (Uni Directional) இருக்கும் –
 அதாவது ஒரு தளத்தின் உரிமையாளர் அல்லது ஒரு நிறுவனம் தான் முன்வைக்க நினைக்கும் கருத்தை நேயர்களுக்கு (வாசகர்கள் அல்லது இணைய பயனர்கள்) முன்வைக்கும். வெப் 2.0 வில் உள்ளடக்கம் என்பது பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். வாசகர்கள் அல்லது இணையப் பயனர்களும் உள்ளடக்கத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் (இதன் ஒரு வெளிப்பாடு சமூக வலைத்தளங்களின் பெருக்கம்).
 இப்போது வளர்ந்து வரும் வெப் 3.0 வில் உள்ளடக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் – அதாவது உருவாக்கப்படும் கண்டெண்ட்டிற்கு பலவிதப் பயன்கள் இருக்கும்.
இனி ஸ்க்ரோல் கட்டுரை சொல்வதை சாரமாகப் பார்ப்போம்.
வெப் 2.0-வின் அடிப்படையில் வளர்ந்துள்ள சமூக வலைத்தளங்களின் விளைவால் ஏராளமான கற்றுக்குட்டிகள் (Amateur) உருவாகி இருக்கின்றனர் என்கிறார் கட்டுரையாளர்.
இவர்கள் பெரும்பாலும் தங்களது அனுபவத்தையே பொதுவான உண்மைகளாக முன்வைக்கின்றனர்.

 இது தவிர ஒரு குறிப்பிட்ட துறையில் (உதாரணமாக நடிகர்கள் அல்லது பாடகர்கள்) பிரபலமடையும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில நுகர்பொருட்களுக்கு (ஆயத்த ஆடை போன்ற) விளம்பரத் தூதர்கள் ஆவதோடு சொந்த முறையிலும் நிறுவனங்களைத் துவக்குகின்றனர்.
வேய்நித் பால்த்ரோ.
வேய்நித் பால்த்ரோ (Gwyneth Paltrow) எனும் நடிகை ஆரோக்கியத்துக்கான நல்லெண்ணத் தூதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.
இதில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு அழகு சாதன நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.
 இந்நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களின் ’மருத்துவ’ குணாம்சங்கள் குறித்தும் பாடம் எடுக்கிறார்.
பால்த்ரோவின் நிறுவனம் முன்வைக்கும் போலி அறிவியல் (psuedo-science) குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், இன்றைய தேதியில் அந்நிறுவனத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.

சமூக வலைத்தளத்தின் கேடான விளைவுகளுக்கு இன்னொரு உதாரணம் டொனால்டு டிரம்ப். அரசியல் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத டிரம்ப், சமூக வலைத்தளத்தை ஒரு பரப்புரை சாதனமாக மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டார்.
வழமையான அரசியல்வாதிகள் போல் அல்லாமல் “எளிமையாக பேசக்கூடியவர்”, “மனதில் இருப்பதைப் பேசும் வெள்ளந்தி” என்பதைப் போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை அமெரிக்க வாக்காளர்களிடையே ஏற்படுத்த அவருக்கு சமூக வலைத்தளங்களும் அதில் அவரால் பணிக்கமர்த்திக் கொள்ளப்பட்ட இணையக்கூலிப் படையின் சேவையும் மிகப் பெரிய அளவுக்கு கைகொடுத்தது.

தகவல்களைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பாவிப்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அதிகரித்து வரும் கற்றுக்குட்டிகளால் உண்மையும் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களும் பிரித்தறிய முடியாதபடிக்கும் பிணைந்து கிடக்கின்றன.
 இதன் விளைவாக சமீப காலமாக போலி அறிவியல் கருத்துக்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. ச
மூக வலைத்தளங்களே இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்கள் பல்கிப் பெருகுவதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.


இன்னொரு புறம், சமூக வலைத்தள பிரபலங்கள் உருவாக்கும் “கருத்துக்கள்” வணிக ரீதியில் ஆதாயமானதாக இருப்பதைக் காணும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களைத் தங்களுடைய விற்பனைப் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்கின்றன.

இதற்கு நமது சூழலில் யூ-டியூப் சினிமா விமர்சகர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் போக்குகளை 2007-ம் ஆண்டிலேயே ஓரளவு மிகச் சரியாக முன் அனுமானித்த ஆண்ட்ரூவ் கீன் என்பவர், அதிகரிக்கும் சமூக வலைத்தளப் பயன்பாடு ஒருகட்டத்தில் டிஜிட்டல் நார்சிசத்தை நோக்கிச் செல்லும் என்றார்.

அதாவது, துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது பின்னுக்குப் போய் தன்னைத் தானே மிகையாய் மதிப்பிட்டு முன்னிறுத்திக் கொள்வதில் சென்று முடியும் என்பதை கீன் பத்தாண்டுகளுக்கு முன்னரே அனுமானித்தார்.
இதன் எதார்த்தமான விளைவுகளை நாம் தமிழ் சமூக வலைத்தள சூழலில் காண்கிறோம். பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றோர் எந்த அடிப்படை அறிவோ, துறைசார்ந்த திறமைகளோ இன்றி போகிற போக்கில் அடித்து விடுவதை எல்லாம் “தத்துவங்களாக” ஏற்றுக் கொள்ள சில இலட்சக்கணக்கான இளைஞர்கள் “பக்குவம்” அடைந்துள்ளனர். வெறும் வாட்சப் வதந்திகளின் தொகுப்பாக நாம் தமிழர் என்கிற ஒரு அரசியல் கட்சியே செயல்பட்டு வருவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏறத்தாழ நான்கு இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளது.

இயற்கை வைத்தியம், இயற்கை வேளாண்மை, இலுமினாட்டி சதிக் கோட்பாடுகள், யார் தமிழன் என்கிற ஆராய்ச்சி, தற்சார்பு வாழ்வியல் என இந்த பைத்தியக்காரத்தனங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது உயரங்களை எட்டி வருகின்றன.

நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் இது போன்ற போலி வல்லுநர்கள் சொல்வதை நம்பி இயற்கை வேளாண்மையில் முதலீடு செய்து பணத்தை இழந்து விட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்று ஒரு பெண் அநியாயமாக இறந்தே போனார்.
இந்தப் போக்குகளை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பக்க விளைவு எனக் கண்களை மூடி வெறுமனே கடந்து செல்லலாம். பாரிசாலன் போன்ற பைத்தியங்களோடு விவாதித்து அவரது வெறிபிடித்த ”தமிழ்தேசிய” ட்ரோல்களிடம் ஏச்சு வாங்குவதற்கு பதில் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செல்லலாம்.

 அல்லது இந்த சூழலை மாற்றப் போராடலாம்.
 நம் முன் இருக்கும் தெரிவுகள் எளிமையானவை.

அதில் சூழலை மாற்றப் போராடுவது என்கிற சரியான தெரிவோ மிகவும் சவாலானது. எப்போதும் சரியானவைகளின் பாதை கடுமையானது என்பதால் மாற்றத்துக்கான போராட்டம் கடுமையாகவும் நிறைய உழைப்பையும் நேரத்தையும் கோருவதாகவே இருக்கும்.
என்றாலும் அந்த நெடும் போராட்டத்திற்கு தயாராவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
                                                                                                         நன்றி:   வினவு -சாக்கியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...