bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 17 மே, 2017

8வது நினைவாண்டாக நினைவேந்தல்



இலங்கையில் தனி தமிழீழம் கோரி போராடி வந்த தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக இன்று 8வது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழீழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சாவின் ராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அரஜாகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது.

பெண்கள் என்றும் பாரமால் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, களங்கப்படுத்தி கொன்றனர். இந்த கொடூர நினைவுகளை ஏந்தி இன்று இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தற்போதைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா அரசு மே மாதம் 18 ஆம் தேதியை நினைவேந்தல் நாளாக அனுசரிக்க அனுமதியளித்தது. 
8வது நினைவாண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நடைபெற்று வருகிறது. 
இலங்கையின் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 மீறி நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அய்யாக்கண்ணுகளும் அதானிகளும்

இம்மாதம் முதல் வாரத்தில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஐக்கியஜனதாதளம் உறுப்பினர் பவன் வர்மா முக்கியமான கேள்வியை எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. 
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 72,000 கோடிரூபாய் என்றும் இந்த தொகை நாட்டின் உள்ளமொத்த விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன்தொகைக்கு சமமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய். 
அதுமட்டுமல்ல. விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகையை போன்று இதுஎட்டு மடங்கு அதிகம் ஆகும். பெரும் தொழிலதிபர்கள் கடன் கேட்கும் பொழுது உடனடியாககொடுக்க அரசு வங்கிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த தகவலை கூறி விட்டு, பவன் வர்மா, இந்த அரசுக்கு இந்த விவரங்கள் தெரியுமா என்றும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவினார்.

மேலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள தொழிலதிபர் கவுதம் அதானி,மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுடன், பிரதமருடன் சீன, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றார். 
அது மட்டுமின்றி, கவுதம் அதானி குஜராத்தில் உள்ளசிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சில தொழில்களை தொடங்க அனுமதி கேட்ட பொழுது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுஅதை தொடங்குவதற்கான வரைமுறைகளின் கீழ் இல்லை என்று கூறி மறுத்து விட்டது.
ஆனால், மோடி அரசு பதவி ஏற்றவுடன் அந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார். இது மிகப்பெரிய மோசடியின் ஒரு சிறு துளி மட்டுமே.

எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி என்ற பத்திரிகை, அதானி குழுமம் பினாமி கம்பெனிகளை உருவாக்கி ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பதைஐந்து ஆய்வாளர்களின் உதவியுடன் கண்டுபிடித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. 
ஸபரஞ்சே குஹா தாகுர்தா, ஷன்ஜானி ஜெயின், அத்வைத் ராவ் ஆருஷி கலரா, நடாஷா பிடே மாய பண்டிட் மற்றும் முக்தா கிஞ்சவடேகர்] கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, வருவாய் புலனாய்வு இயக்ககம் [DRI] கவுதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம்பல போலி கம்பெனிகளின் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றம் செய்வதையும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதை பற்றியும்நிறைய தகவல்கள் சேகரித்து வந்துள்ளது. 
இந்த போலி கம்பெனிகள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் மற்றும் தங்க நகைகளின்வியாபாரத்தில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன என்பது ஆய்வில் தெரிகிறது. வருவாய் புலனாய்வு இயக்ககம் நிதி அமைச்சகத்தின் முக்கியப் பிரிவு ஆகும்.
பல முறை ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்என்பதால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதில் சட்டரீதியிலான விஷயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், நிதிஅமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், அதைச் செய்ய என்ன தயக்கம்?எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லிபத்திரிகை சார்பில் விரிவான கேள்விகள் அடங்கிய, விவரங்களை கோரும் படிவங்களை கீழ்க்கண்டவர்களுக்கு அனுப்பியது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஐந்து மூத்த அதிகாரிகள்;
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அந்நியவர்த்தகத் துறை இயக்குநர் ;
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும்
கவுதம் அதானி
கேள்விகள் அடங்கிய படிவங்கள் இ.மெயில் மூலமாகவும் தபால் மூலமாகவும் 18,நவம்பர் 2016 அன்று அனுப்பப்பட்டது. அதானிமற்றும் சட்ட அமைச்சர் அலுவலக பிரதிநிதிகள் பதில் அனுப்பினர். அமைச்சர்கள்அ ருண்ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன், அவர்களுடைய துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

வரி ஏய்ப்பு செய்தது எப்படி?
இது ஒரு நீண்ட கதை. சுருக்கமாக பார்ப்போம். 
அரசு தரப்பில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பல திட்டங்கள் அமலில் உள்ளன. அதானிகுழுமம் இத்தகைய ஏற்றுமதி சலுகைகளை பயன்படுத்தி பல போலி கம்பெனிகள்(ஷெல் கம்பெனிகள்) மூலம் உலகின் பல நாடுகளுடன்வர்த்தகத்தில் ஈடுபடுவது போல காண்பித்து,சுற்று வணிகத்தில் (‘circular trading’) ஈடுபட்டுள்ள்ளது. அதாவது அனைத்து கம்பெனிகளும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, அதானி குழுமத்தின் (அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்) கட்டுப்பாட்டில் இருப்பவை.

2007ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, அதானி குழுமம் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வந்தது. இந்த ஷெல்கம்பெனிகள் வணிக அமைச்சகம் அந்நிய வர்த்தகத்திற்கு அளிக்கும் ஊக்குவிப்பு திட்டங்களை தவறாகப் பயன்படுத்தி, வைரம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதியை "செயற்கையாக அதிகரிக்கும்" நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை பயன்படுத்தி வரிஏய்ப்பு செய்ததற்கு வருவாய் புலனாய்வு இயக்ககம் பல முறை நோட்டீசுகள் அனுப்பி உள்ளது. ஆனால் அதானி குழுமம் அவற்றைமறுக்கிறது.
வணிக அமைச்சகம் கொண்டு வந்த ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படுவது டிரேடிங் ஹவுஸ் திட்டம்.இதன் கீழ், எந்த அளவுக்கு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்கும். 

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு ஏற்றுமதிசெய்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு "ரேங்க்" தரப்படும். மிக அதிகமாக ஏற்றுமதி செய்வோருக்கு "ஸ்டார் ரேங்க்" தரப்படும்.மேலும் 2003-04இல் சுங்க வரி விலக்குதொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் கீழ், ‘ஸ்டார் டிரேடிங் ஹவுசஸ் எனவகைப்படுத்தப்பட்ட கம்பெனிகள் எந்த அளவுக்கு ஏற்றுமதியை அதிகரித்துள்ளனவோ, அதில் பத்து சதவீதம் பணமாக லாபம் ஈட்ட முடியும். 2002-03இல் அதானி குழுமத்தின் ஏற்றுமதி மதிப்பு 400 கோடி ரூபாயாக இருந்தது. 
திட்டங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஐந்து கம்பெனிகளை துவக்கியது.ஸஹிந்துஜா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஹெச்.ஈ.பி.எல்), ஆதித்ய கார்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட்ஸஎ.பி.சி.எல்], பகாடியாபிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட்ஸபி.பி.பி.எல்.) ஜெயந்த் அக்ரோ ஆர்கானிக்ஸ் லிமிடெட் (ஜே.எ.ஒ.எல்) மற்றும் மிடெக்ஸ் ஓவர்சீஸ் லிமிடெட் (எம்.ஒ.எல்) இந்தஐந்து கம்பெனிகள் தவிர, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நேரடியாகவும், மறைமுகமாகவும் 45 கம்பெனிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள ஐந்துகம்பெனிகளின் மொத்த ஏற்றுமதி திடீரென11 மடங்கு அதிகரித்தது.
 ஒரே ஆண்டில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்தது. 
பட்டை தீட்டப்படாத வைரங்கள், தங்கநகைகள் ஏற்றுமதியானதாக காண்பிக்கப்பட்ட கணக்கு தவறானவை என்று தெரிய வந்தது.
31 மார்ச் 2017அன்று மீண்டும் வருவாய் புலனாய்வு இயக்ககம் அதானி குழுமத்திற்கு நோட்டீசு அனுப்பியது. இரண்டே ஆண்டுகளில், ஏற்றுமதி அதீதமாக அதிகரித்திருப்பது எப்படி என வினவியது. ஊக்குவிப்புத் திட்டங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பரஸ்பரம் தங்கள் கம்பெனிகளுக்குள்ளேயே வணிகம் நடத்தி கொள்ளை லாபம் ஈட்டியது தெரிய வந்தது.

2005-06இல் ஏற்றுமதி திடீரெனசரிந்தது. எப்படி? 
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களை கார்ப்பரேட்டுகள் தவறாகப் பயன்படுத்துவதை அறிந்து , அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன. அது மட்டுமின்றி உயர்ரக மெட்டல்கள், பட்டை தீட்டப்படாத வைரங்கள், தங்கநகைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் நிகர பண லாபங்கள் வாபஸ் என அரசு அறிவித்தது. இதை அதானிகுழுமம் கடுமையாக எதிர்த்தது. 

மத்திய அரசின் நோட்டீசை எதிர்த்து, குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. (அதானிஎக்ஸ்போர்ட் ஸ்லிமிடெட் ஓ யூனியன் ஆப்இந்தியா) தீர்ப்பு அதானி குழுமத்திற்கு எதிராகவந்தது.
தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்ற அதானி குழுமத்திற்கு ஆதரவாக வேறுசில ஏற்றுமதி கம்பெனிகளும் வழக்கு தொடுத்ததால், வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எ.கே.சிக்ரியும், ரோஹிண்டன் எப்.நாரிமன்னும் இந்தியா பட்டை தீட்டாத வைரம் உற்பத்தி செய்யும் நாடு அல்ல என்றும்,ஏற்றுமதி கம்பெனிகள் துபாயிலும், ஷார்ஜாவிலும் உள்ள தங்கள் கம்பெனிகளுக்கே ஏற்றுமதிசெய்வதும், சலுகை திட்டங்களை தவறாக பயன்படுத்துவதையும் கடுமையான வார்த்தைகளில் சுட்டிக்காட்டி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் என்பது ஒரு மிகப் பெரியசாம்ராஜ்யம். கவுதம் அதானி தவிர அவரதுசகோதரர்கள் ராஜேஷ் அதானி மற்றும் வசந்த அதானி இயக்குநர்களாக செயல்படுகின்றனர். 

வருவாய் புலனாய்வு இயக்ககம் இக்குழுமம் செயல்படும் விதம் பற்றி தெளிவான அறிக்கையை தயாரித்துள்ளது. இக்குழுமத்தின் பணிகளை முழுவதுமாக மேற்பார்வையிடும் வேலையை அதானியின் சகோதரியின் கணவர் சமீர் வோரா செய்கிறார்.

அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பெனிகள் மொலாசஸ்ஸகரும்பு ஆலை கழிவு], சோயாபீன்ஸ், விளக்கெண்ணெய், அரிசி, இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன என்பது வருவாய் புலனாய்வுத் துறைக்கு தெரியவந்தது. யூ.ஏ.இ, ஹாங்காங், சிங்கப்பூர் போன்றநாடுகளுடன் நடைபெறும் ஏற்றுமதி-இறக்குமதி தொழில்கள் மூலம் பல கோடி ரூபாய் கிட்டுகிறது.

கற்கள் பதித்த தங்க நகைகள் சுற்று வணிகத்தின் மூலம் தங்க ஏற்றுமதி நடைபெறுகிறது. 
இவற்றின் மதிப்பு பல லட்சம் அமெரிக்கடாலர்களாகும். எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி தரும் புள்ளிவிவரங்களும், பட்டியல்களும் அதானி குழுமத்தின் வருவாய் மோசடிகளை அம்பலப்படுத்துவதுடன், அரசின்திட்டங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறது.

2013இல் "கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மற்றும் வைர வணிகம் மூலம்தீவிரவாதிகளுக்கு நிதி" என்ற அறிக்கையை நிதி சார் நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டது.அதில் உலகில், வெட்டி பட்டை தீட்டும் வைர வணிகத்தில் இந்தியாவின் பங்கு 90 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணம் வைர வணிகமெல்லாம் எவ்வாறு இந்தியாவுக்குள் வருகிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வருவாய் புலனாய்வு இயக்ககம் தனது பணியைச் செய்து விட்டது. 

அனைத்து தகவல்களையும் முறையாகத் திரட்டி, உச்சநீதிமன்றம் வரை சென்ற பின்னரும், மத்திய அரசின் நிதி அமைச்சர் மௌனம் காப்பது ஏன்? வணிகத் துறை அமைச்சரும் மெளனமாக இருப்பது ஏன்?அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது.

ரூபாயின் மதிப்பைக் குறைத்து, கறுப்புப்பணத்தை தடுப்பதாகவும், தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஒடுங்கிவிடும் என்றும் கூறிய பிரதமர், வைர வணிகம் மூலம் வெள்ளையாகும் கறுப்புப் பணம் பற்றியும், அதன் மூலம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு பணம் கிடைப்பது பற்றியும் என்ன சொல்ல விழைகிறார்?

வருவாய் புலனாய்வு இயக்ககம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிரத்தையுடன் பணிசெய்து திரட்டிய தகவல்களுக்கு என்னபதில்?

ஆயிரம் கோடி ரூபாய் வரை அதானி குழுமம் வரி ஏய்ப்பு செய்துள்ளதை புலனாய்வுஇயக்ககம் சுட்டிக்காட்டியும் அது தொடர்பான அமைச்சகங்கள் அமைதி காப்பது ஏன்?

இந்திய தலைநகரில், நாற்பது நாட்கள், விடாமல் அய்யாக்கண்ணு தலைமையில் போராடிய விவசாயிகளை சந்திக்க பிரதமர் முன்வரவில்லை. 
ஆனால், நடிகர் அக்ஷய்குமாரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். 
அய்யாக்கண்ணு போராடிய பொழுது, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விவசாயிகள் போராட்டத்தை அரசியலாக்கக் கூடாது என்றனர். 

ஆனால், சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றில், நிருபர்‘உ.பியில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது போல, இங்கேயும் செய்யக்கூடாதா என்று கேட்ட பொழுது, அக்கட்சியின் தலைவர் தமிழிசை, "அங்கு பாஜகவின் ஆட்சி.

இங்கேயும் தாமரைக்கு வாக்களியுங்கள். பின்புநடக்கும்" என்றார். இது அரசியல் இல்லாமல் வேறு என்ன? 
மற்றொரு தலைவர் ஹெச். ராஜா"அய்யாகண்ணுவுக்கு ஆடிக் காரும் இருநூறு ஏக்கர் நிலமும் இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளும், தி.மு.கவும் தான் தூண்டி விடுகின்றனர்." 
என்றதும் கொதித்து போன அய்யாகண்ணு "ராஜா சொன்னது உண்மை என்றால் நான் தூக்கில் தொங்குகிறேன்.அதுபொய் என்றால் அவர் தூக்குப் போட்டுக் கொள்ளத் தயாரா’’ என்று கேட்டதுடன் தான்முன்பு பாரதிய கிசான் சங்கத்தில் இருந்ததாகவும் இப்பொழுது விலகிவிட்டதால் தவறாகப் பேசுகின்றனர்" என்பதையும் குறிப்பிட்டார்.

இந்திய விவசாயிகள் சட்ட சலுகைகளை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட வேண்டுமென கோரவில்லை. வானம், பொய்த்து, விவசாயம் செய்ய வழியின்றி, வாங்கிய கடனைதிருப்பிச் செலுத்த முடியாமல், வங்கிகளின்நிர்ப்பந்தத்தால் கூனிக் குறுகி, அவமானப்பட்டு, கொத்துக் கொத்தாய் செத்து மடிவதைதடுக்க வேண்டும் என்றும், கட்டுப்படியாகும் விலை வேண்டும்; 
காவிரி நீருக்கு உத்தரவாதம் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தான் கோருகின்றனர்.
ஒட்டு மொத்த விவசாயிகளும் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை போன்ற அளவுக்கு ஒரு குடும்பம் செலுத்த வேண்டிய கடன் பாக்கி இருக்கிறது.


 விவசாயிகள் செத்து மடிவதை பார்த்து, கேட்டு, அதற்கு நிவாரணம் பற்றிஒரு வார்த்தை கூட சொல்லாத பிரதமர், தனதுநண்பர் அதானியை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்று அவர் தொழில் தொடங்கபல கோடி ரூபாய்களை கடனாக தர அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு கட்டளை இடுகிறார் என்றால் அவரது வர்க்க பாசத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

விவசாயிகள் கடனை ரத்து செய்தால் கடனை திருப்பிச் செலுத்துவதில் கட்டுப்பாடு இருக்காது என்று முழங்கும் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அதானியிடம் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்து என்று கட்டளை இடத் தயாரா? 
கறுப்புப் பணம் வைத்திருப்போரை சும்மா விடமாட்டோம் என்று கூறும் பா.ஜ.க அரசு முதலில் கடனை திருப்பாமல் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும். வங்கிகளிடம் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை திருப்பிச் செலுத்தாமலும், வரியை கட்டாமல் ஏய்ப்பவர்களும் அடங்கிய பட்டியல் உள்ளது. 
அரசு அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
                                                                                                                      
                                                                                                                                                                                       -பேரா.ஆர்.சந்திரா
ஆதாரம்; எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி

திங்கள், 15 மே, 2017

இந்தியை அல்ல திணிப்பை எதிர்ப்போம்.

இந்திமொழி திணிப்புக்கு எதிராக மே 15 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளது தமிழ்ப் பண்பாட்டு உலகின் மனச்சாட்சியாக விளங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்.

கீழடி அகழாய்வை மண் அள்ளிப்போட்டு மூட முயலும் கயமையைக் கண்டித்தும், நீட் தேர்வு எனும் பெயரில் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவை கருவிலேயே கலைக்க முயலும் நயவஞ்சகத்தை எதிர்த்தும், இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் தமிழர் உரிமை பாதுகாப்பு மாநாட்டை ஜூன் 26ஆம்தேதி தலைநகர் சென்னையில் நடத்திடவும் களம் அமைத்து வருகிறது தமுஎகச.
மூன்று கட்ட மொழிப் போர்மூன்று மொழிப் போர்களை கண்ட மண்தமிழ் மண். 


இன்றைக்கு இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா கொள்கையை நிர்ப்பந்தமாக திணிக்க முயலும் மோடி அரசைக் கண்டித்து நான்காவது மொழிப் போரை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இந்தி மொழி பேசாத பிற மாநில மக்கள் மீது அடுத்தடுத்து மொழித் திணிப்பு எனும் இடியை இறக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. 

வர்ணாசிரம அதர்மத்தின்படி உழைக்கும் மக்கள் பேசவும், எழுதவும் தடைவிதிக்கப்பட்டதால், இயற்கை மரணம் அடைந்துள்ள சமஸ்கிருத மொழியை மீண்டும்உயிர்ப்பிக்க என்ன செய்யலாம் என புதிய கல்விக் கொள்கையில் கேள்வி எழுப்பியுள்ள மோடி அரசு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு பல நூறு கோடி ரூபாயை அள்ளித் தருகிறது.

இந்தி ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றநிலைக்குழு 2011ஆம் ஆண்டு தனதுஅறிக்கையை மன்மோகன்சிங் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம்தந்தது. 

இதை செயல்படுத்தினால் விபரீதம் விளையும் என உணர்ந்த அந்த அரசு அதை பரணில் தூக்கிப் போட்டு வைத்திருந்தது. மோடி அரசு அதை தூசி தட்டி எடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டுதாக நீட்டோலை வாசிக்கிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு களின்படி பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாக சேர்க்கப்படும் முதல்கட்டமாக சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம்வகுப்பு வரை இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்படும்.

குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் குறிப்பாக இந்தி தெரிந்தவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொதுவிழாக்களிலும் இந்தியில்தான் பேசவேண்டும்.

இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இந்தியில் பதிலளிப்பதற்கான வாய்ப்பு கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டும்.

விமானங்களில் வழங்கப்படும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் 50சதவீதம் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும். விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுகளில் இந்தி மொழி கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசு தரும் விளம்பரங்களில் இந்திக்கே முதன்மை இடம் தரப்பட வேண்டும்.
மத்திய அரசு தேர்வுகளை எழுதுபவர்கள் கட்டாயம் இந்தி கற்றிருக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மட்டும் குடியரசுத் தலைவர்"பெருந்தன்மையாக" ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டாராம். 

எனினும் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசுத் தேர்வுகளில் இந்தியை கட்டாயமாக்கும் எண்ணம் அரசிடம் உள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் தண்டனைக்குள்ளாக்கக்கூடும் என்றும் தகவல்கள் கசிகின்றன.

இது தவிர இந்தியா முழுவதும் கிலோ மீட்டர் கற்களில் இந்தி மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. 

இந்தி தவிர்த்த வேறு எந்த இந்திய மொழியில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டாலும் அது இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது இந்தியில் உபதலைப்பு தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் புகுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காது.

தமிழர்கள் மட்டுமே படிக்கக்கூடிய தினத்தந்தி ஏட்டில் அரைப்பக்க அளவுக்கு இந்தியில் விளம்பரம் வெளியாகிறது. அதாவது மத்திய அரசின் முடிவு அமலாகிறது.

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுற்றறிக்கைகள், விடுதிக் கட்டணம் போன்றவை இந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்படுகின்றன. இந்த முடிவை எதிர்த்து ஜேஎன்யுவில் பயிலும் பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.

தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழி களாக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைத்தான் தேசத்தின் பிற பகுதி மக்களும் பேச வேண்டும் என்பது அடாவடி, அத்துமீறல். 

ஒரு வாதத்திற்காக பார்த்தால் கூட மக்கள் தொகை அடிப்படையில் இந்தி மொழி பேசாத மக்கள்தான் இந்தியாவில் அதிகம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பதும் முழு உண்மையல்ல. வேலையின்மை முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத உப விளைவு. அதற்கு மொழி இல்லை.

தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளை யும் மத்திய ஆட்சி மொழியாக்குவது குறித்து ஆய்வு செய்திட 1998ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிறகு 2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இதுகுறித்து ஆராய குழு ஒன்றை அமைக்க உறுதி அளித்தது. அதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்தி மொழி தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை மட்டும் உடனடியாக நடைமுறைப்படுத்துகிறது மோடி அரசு.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே துவங்கிவிட்டது இந்தி திணிப்பு. 

1916ஆம் ஆண்டு தென்மாநிலங்களில் இந்தியை பரப்பும் நோக்கத்துடன் தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா துவக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு இந்த சபாவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜாஜி, இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதற்கான பாடநூல்கள் விரைவில் எழுதப்பட வேண்டும். 

புதிய இந்தி எழுத்துக்களை தமிழகமாணவர்கள் கற்றுக்கொள்ள தொடங்கி விடுவார்களேயானால் பின்னர் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் அவர்கள் எளிதாக பயில வாய்ப்பு ஏற்படும் என்றார். இதே ராஜாஜி பின்னர் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பது வரலாற்று முரண்.

1938-39ஆம் ஆண்டுக்கான சென்னை மாகாண அரசின் நிதி நிலை அறிக்கையில் 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்ற அறிவிப்பு ராஜாஜி அரசினால் வெளியிடப் பட்டது. 

இதற்கு எதிராக அப்போதே வலுவான குரல் தமிழகத்தில் எழுந்தது. இந்தப் போராட்டத்தின்போது தாளமுத்து, நடராஜன் என்ற இரண்டு இளைஞர்கள் சிறைச்சாலை கொடுமைகளின் காரணமாக உயிரிழந்த அவலம் நிகழ்ந்தது. 1300 பேர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். 

நெடிய போராட்டத்திற்குப் பிறகு 21.2.1940ல் சென்னை மாகாண ஆளுநரின் ஆணைப்படி இந்தி கட்டாயப் பாடம் என்பது நீக்கப்பட்டது.
1947ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற நிலையில், 1946ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்க ப்பட்ட மத்திய சட்டப்பேரவையை அரசமைப்புஅவை என்று மாற்றி 9.12.1946 முதல் அரச மைப்புச் சட்ட நடவடிக்கையை இடைக்கால அரசின் பிரதமர் நேரு துவங்கி வைத்தார்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிட 13 குழுக்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் தேசிய மொழி எது என்பது குறித்து அரசமைப்புச் சட்ட குழு விவாதிக்கவில்லை. மாறாக காங்கிரஸ்கட்சியின் மத்திய சட்டப்பேரவை உறுப்பின ர்கள் மட்டும் கூடி, இந்தியாவின் தேசிய மொழி இந்திதான் என்று முடிவு செய்தார்கள். 

அந்த தீர்மானங்கள்கூட ஒரே ஒரு வாக்கு பெரும்பான்மை அடிப்படையில்தான் வெற்றி பெற்றது. ஆனால் இதையே அரசமைப்புச் சட்ட அவையின் முடிவாக மாற்ற முயன்றனர்.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம்நாள் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இந்தச் சட்டத்தின் 17ஆவதுபகுதியில் ஆட்சி மொழி எனும் தலைப்பின்கீழ் நான்கு பிரிவுகளின்  கீழ் விதிகள் 343 முதல் 349 முடிய உள்ளவை இந்திய அரசின் ஆட்சி மொழி அல்லது அலுவல் மொழியாக தேவ நாகரி என்ற வரி வடிவில் உள்ள இந்தி இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இது தவிர அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் விதிகள் 344 (1) 351இன்படி 14மொழிகள் இடம்பெற்றன. 2003இல் செய்யப்பட்ட திருத்தத்திற்கு பிறகு 22 மொழிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இன்றைக்கு பாஜகவினர் கூறுவதுபோல இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இல்லை.

1955ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி குடியரசுத் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 344இன்கீழ் ஆட்சி மொழி ஆணை க்குழு ஒன்றை அமைத்தார். 

இந்தி பேசாத மாநில மாணவர்கள் ஆங்கிலம், அவரவர் தாய்மொழி தவிர இந்தியையும் கட்டாயமாகப் படிக்க வேண்டும், இந்திய தலைமை நீதிமன்றத்தில் இந்தி ஆட்சிமொழியாக வேண்டும், மாநிலசட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் அதிகாரப்பூர்வமான சட்டங்கள் அனைத்தும் இந்திமொழியிலேயே இருக்க வேண்டும் என் பது உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இந்தி பேசாத மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படுகிறார்கள் என்று இந்த பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில்தான் 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம்தேதி பிரதமர் நேரு இந்தி பேசாதமக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்தார்.

"எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஒரு மாற்று மொழியாக ஆங்கிலத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்".இதுதான் நேரு அளித்த உறுதிமொழி.

ஆனால், பிரதமரின் உறுதிமொழிக்கு மாறாக 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம்தேதி குடியரசு தினத்தன்று முதல் இந்தி ஆட்சி மொழி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய அளவுக்கு போராட்டங்கள் வெடித்தன. 

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்து பிரிவினரும் பங்கேற்றார்கள். ஆத்திகர்கள், நாத்திகர்கள், மடாதிபதிகள் என தமிழ் மொழி காத்திட அனைவரும் ஓரணியாக திரண்டனர்.கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் தீக்குளித்து இறந்தனர்.

18 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் 63 பேர் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானார்கள். இந்தப் போராட்டங்களின் பின்னணி யில்தான் ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன் மற்றும் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இந்தி பேசாத மக்களின் மீது இந்தி திணிக்கப்படாது நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படும் என்றும் கூறினர். 

எனினும், அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குவதை மறுத்து, இந்தியை திணிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.நரேந்திர மோடி அரசு வெறித்தனமாக தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. இதனால் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள்ஒன்றிணைந்து போராடக்கூடாது என்ப தற்காகவே மக்களை மதமாக, ஜாதியாக, மொழியாக, இனமாக பிரித்தாள முயல்கிறது. பிரிட்டி ஷார் பின்பற்றிய கேவலமான தந்திரம் இது.

பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு மதங்களை பின்பற்றுகிற, பல்வேறு பண்பாட்டைக் கொண்ட ஓர் ஒன்றியம்தான் இந்தியத் திருநாடு. ஆனால் ஒற்றை கலாச்சார தேசியத்தை திணிக்க முயல்கிறது மோடி அரசு. இவர்களது கலாச்சார தேசியம் பன்மைத்துவத்துக்கு எதிரானது. 

அனைத்து மொழிகளும் சமமாக கருதப்படும்போதுதான் ஒற்றுமை தழைக்கும், உணவாக இருந்தாலும், மொழி உணர்வாக இருந்தாலும் திணிப்பது திகட்டவே செய்யும். எதிர்ப்பு எழவே செய்யும்.

மொழி வழி மாநிலங்கள் அமைவதுதான் இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வழிசெய்யும் என்று உரத்துக் குரல் எழுப்பி யவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவரவர் தாய்மொழியில் பேச, எழுத உரிமை உள்ள நாட்டில்தான் பாரதி பாடிய சிந்தனையில் ஒருவராக, இந்தியராக, இணைந்துவாழ முடியும்,

தாய்மொழிக் கல்வியே மனித வளர்ச்சிக்கு தாய்ப்பால் போல் இணையானது என்று பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தேவை ஏற்படுகிற போது எந்தவொரு மொழியையும் யாரும் எளிதாக பயின்றுவிட முடியும். தொடர்வண்டிப் பயணங்களில் மூன்று ரூபாய் மோரைக் கூட மூன்று மொழிகளில் விற்பதைப் பார்க்கிறோம். 

தாய்மொழியை நன்கு கற்று தேர்ச்சி பெறுபவர்களால் மிக எளிதாக இன்னொரு மொழியை கற்றுவிட முடியும். தாய்மொழியில் பயிலும்போதுதான் சொந்த பண்பாட்டு அறிவும், பாரம்பரிய அறிவும் கிடைக்கும்.
கல்வி கற்றலுக்கு பிந்தைய வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தும் தாய்மொழி வழியாகவே அமைகின்றன. எனவே கல்வி யும் தாய்மொழி வழியிலேயே அமைய வேண்டும் என்கிறார் இந்திய வரலாற்றியல் அறிஞர் இஎம்எஸ் நம்பூதிரிபாட்.

இந்தி மொழியையோ, இந்தி மொழி பேசுகிற சகோதரர்களையோ வெறுப்பது சரியல்ல. மாறாக இந்தி மொழி திணிப்பை உறுதியாக எதிர்த்திட வேண்டும்.

இந்தி மொழித் திணிப்பை எதிர்த்துக் குரல்கொடுக்கிற அதே நேரத்தில், தமிழகத்தில் தமிழே அனைத்து துறைகளுக்கும் தலைமைதாங்க வேண்டும் என்பதை ஓங்கி முழங்கிடுவோம். மோடி அரசின் இந்தித் திணிப்பை எதிர்ப்போம், இந்திய ஒற்றுமை காப்போம்.
                                                                                                                                   - மதுக்கூர் இராமலிங்கம்














வெள்ளி, 12 மே, 2017

ஆண்டி இந்தியன்

நாம் உண்டு நம் வேலை உண்டுன்னு இருக்கிறது.

யார் வம்பு ,தும்புக்கு போறது கிடையாது.

மனுசன் இன்னைக்கு இருப்பான்.

நாளைக்கு ஏதாவது ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.

அதுக்குள்ளே. என் மைண்ட்வாய்ஸ் அதாங்க மனசாட்சி புலம்பலை கொஞ்சம் கேட்டுக்கோங்க.
கோடிகளில் கடன் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கடன் தள்ளுபடி,வராக்கடன் .
கல்விக்கடன்,விவசாயக்கடன் எல்லாம் அடிதடி வசூல் .

இதுதான் இன்றைய இந்திய வங்கிகளின் சேவை.இதற்கு சேவைக்கட்டணம் வேறு.
முன்பெல்லாம் சேமிப்பதுக்கணக்கில் பணம் போட்டால் 12% வட்டி.
அது பின்னர் இன்று 4%க்கு வந்து விட்டது.

ஆனால் அந்த வட்டி போடுகிறார்களா இல்லையோ நம்மிடம் பன்மடங்கு பணத்தை கொள்ளையடிக்கும் சேவையை நம் வங்கியாளர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

துணிக்கடையில் மாதம் 6000 சம்பளம் வாங்கி அரை வயிறைக்கழுவிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி வங்கிகளில் ஊதியத்தை போடச்சொல்லிஅவனவன் மாதம் பிறப்பதற்குள்ளாகவே தன்கணக்கில் உள்ள பணத்தை எடுத்து வீட்டு வாடகை ,பள்ளிக்கட்டணம்,கடன்களை கொடுத்து வங்கியில் இருப்பே இல்லாமல் இருக்கும் போது உன்கணக்கில் 1000 கூட இல்லையே 250 நான் எடுத்துக்கொள்கிறேன் என்று அவனை மேலும் கடன்காரனாக்குவதுதான் ஒரு தேசிய வங்கியின் சேவையா?

இதற்காகத்தான் எல்லோருக்கும் 1000 போடுகிறேன் என்று ஏமாற்றி வங்கிகளில் வரிசையில் நின்று கணக்கு துவக்க வைத்தார்களா?

பணமதிப்பு விவகாரம் என்று கடுகு டப்பாவில் சேர்த்து வைத்திருந்த 500,1000 நோட்டுகளை வங்கியி போடக்கூறி ஆப்பு வைத்திர்களா?

இன்றைய வங்கிகள் என்றாலே குறிப்பாக பாஜக மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஏழைகளுக்கு,மத்தியதரப்பினருக்கு வங்கிகால்   சேவை பயம்தரும் திகில் தளமாகி விட்டது.

விஜயமல்லையா,அம்பானி,அதானி வகையறாக்களுக்கு பயன்தரும் கற்பகத்தரு வாகி விட்டது.
கடன்களை கோடிகளில் ஏப்பம் விட்ட மல்லையாவை பிடிக்க கண்ணாமூச்சி படம் காட்டுகிறது வங்கித்துறையும்,மோடி அரசும்.

50000விவசாயக்கக்கடன்,சுய தொழில் கடன்களுக்கு அவர்களின் சொத்துக்களை,நிலங்களை எலாம் விடும்,பறிமுதல் செய்யும் வங்கிக்கு 5000கோடிகள் ஆட்டையை போட்ட அவரின் நிறுவனங்களை,சொத்துக்களை கையகப்படுத்த முடியவில்லை.

எந்த ஏடிம் இல் எவ்வளவு எடுத்தாலும் இலவச சேவை இன்று ஒரு முறை எடுத்தாலும் 25 கட்டணம் என்றாகி விட்டது.

இவை எல்லாம் ஏன் என்று கேட்டால் இதெல்லாம் பொருளாதாரத்தில் இந்திய முன்னேற,இதுதான் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்,டிஜிட்டல் இந்தியா என்ற கதைகள்.

6000 சம்பளத்தை வங்கியில் போட்டு எடுப்பது காணாது என்று அதை ஏடிஎம்மில் எடுக்கையில் ஒவ்வொரு முறையும் 25ரூபாய்.

கையில் மொத்தமாக இருந்தால் வெட்டிச்செலவுகள் வந்துவிடும் என்று 500 அல்லது 1000 என்று அவவப்போதையை தேவைக்கேற்ப எடுக்கும் பாமரர்கள்தான் அதிகம்.

அப்படி அவர்கள் நான்கு முறை எடுத்தாலே 100 கந்து வட்டி போல் வங்கி பிடுங்கிக்கொள்ளும்.
இப்படி பிடுங்கியதை அவர்கள் வைத்துக்கொள்ளப்போவதில்லை.விஜய் மல்லையா போன்றவர்களுக்கு வராக்கடன் கொடுக்கத்தான் செய்வார்கள்.

சம்பளப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தவே இயலா நிலையில் பற்றாக்குறையில் ஏன் உன்கணக்கில் 1000 இல்லை.அடுத்த சம்பளம் பணத்தில் 250 அபராதம் என்பது எவ்வளவு பெரியக்கொடுமை.

கணக்கில் 1000 கூட இல்லாதவர் ,வைக்க இயலாதவர்  என்ன பெரும் பணமுதலையாகவா இருப்பார் .
கன்டெய்னரில் பணத்தை வைத்து கடத்திக்கொண்டு வங்கியில் பணமே வைக்காதவராகவா இருப்பார்.
என்னவோ போங்கள் இந்திய வங்கிகள் போகும் பாதை டிஜிட்டல் இந்தியாவாக இருக்கலாம்.
ஆனால் இந்திய குடிமக்களுக்கு நரகத்துக்கு செல்லும் வழியாகத்தான் தட்டப்படுகிறது.
தற்போது ஒவ்வொரு எடுத்தலுக்கும் 25
ரூபாய்க்கு பலத்த எதிர்ப்பு ,போராட்டம் என்பதை கண்டு ஸ்டேட் வங்கி  எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் இருந்தால், அதை, ஏ.டி.எம்., மையங்களில் எடுத்துக் கொள்ள லாம். அவ்வாறு, பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 25 ரூபாய் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும். என்று சமாளித்துள்ளது.ஆனால் அது என்ன பட்டியில் பணம் இருந்தால்..?
எப்படியும் இனி ஒவ்வொரு எடுத்தல்களுக்கு 25 ஆப்புதான்.
இந்திய மக்களை வதைத்து புதிய இந்தியாவை உருவாக்குவது யாருக்காக?
எதற்காக?

மக்களுக்கு எல்லாவகையிலும் ஆப்பு வைப்பதுதான் மோடி காணப்போகும் ராமராஜ்யமா?

ஏழைகளே இல்லாத இந்தியாவை நிச்சயம் அண்ணல் மோடி கொண்டுவருவார் என்பது உண்மைதான்.

இப்படி போட்டுத்தாக்கினால் மோடி,ஆர்.எஸ்.எஸ்.,பாஜக கனவு  புதிய இந்தியாவில் வாழ எந்த ஏழைதான் உயிரோடு  தாக்குப்பிடித்து வாழ முடியும்.

இதையெல்லாம் கேட்டால் "ஆன்டி இந்தியன்" பட்டம்தான் கிடைக்கும்.ஏச்சு.ராசா கண்டமேனிக்கு செருப்பால் அடிப்பது போல் நம் தேசத்துரோகத்தை ஊடகங்களில் விளக்குவார்.

ஆனால் இப்போது எல்லோருமே ஆண்டி இந்தியர்களாகி விட்டோம்.ஆன்டி அல்ல ஆண்டி .

இதற்கத்தான் இவற்றை வாய் திறந்து சொல்லுவதில்லை.

மனதிலேயே ஒரு ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்வது.

==========================================================================================
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பத்லா என்ற இடத்தில் 250 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தென் ஆப்பரிக்காவின் பெலான் என்ர்ஜி மற்றும் அவ்டா பவர் கம்பெனியுடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.62 க்கு தயாரித்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது.

இந்தியாவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது 12648 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

நிலக்கரி மூலம் தயாரிக்கும் மின்சாரத்தின் விலையும் ரூ.2.30 லிருந்து ரூ.3 அளவில் உள்ளது.

ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மட்டும்தான் சூரிய சக்தி மூலம் கிடைக்கும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.01 க்கு பெற 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில்  இடுகாட்டில் மனிதனை புதைப்பதில்தான் இதுவரை ஊழல் அதிகமில்லை என்று தெரிகிறது.
சுடு காட்டு கூரை ஊழல் மறக்கவில்லை.
=============================================================================================

புதன், 3 மே, 2017

‘நீட்’தேர்வு - சமத்துவத்துக்கு சாவுமணி!


நீட்தேர்வு என்பது, பொது மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவக்கல்விக்கான நுழைவுத்தேர்வாகும். 
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு
மாற்றாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 
இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று சொல்கிறார்கள்!
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்த பின்னர், தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 01-02-2017 அன்று அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்க்கு விலக்களிக்க வேண்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. 
இப்போது 95 நாட்களான பிறகும் இதற்குரிய முடிவாக, மத்திய அரசோ, பிரதமரோ இன்றுவரை பதிலேதும் தரவில்லை. வரும் மே-7இல், இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு நடக்க உள்ள சூழலில் இந்தக் குழப்பத்திற்கு மத்திய அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
இதனால் இந்த ஆண்டு மருத்துவக் கனவில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர், மத்திய அரசின் முடிவுப்படி நீட் தேர்வு நடக்குமாஅல்லது மாநில அரசு முடிவின்படி நுழைவுத்தேர்வு இல்லாமலே +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பு கிடைக்குமா எனும் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவர் மற்றும் சிறுபான்மையோர்க்கும் உயர் கல்வி தருவதுதானே நல்ல அரசாகஇருக்க முடியும்? 
இவர்களைப் புறக்கணித்துவிட்டு நகரில் வசதியானவர் மட்டும் வளர்வது சமத்துவமற்ற சமுதாய வளர்ச்சியாக அல்லவா இருக்கும்?2
004-2005 இல் +2 தேர்வெழுதியவர்கள் சுமார்5லட்சம் மாணவர். இவர்களில் கிராமப்புற மாணவர்கள் சுமார் 2லட்சம்பேர். அந்த ஆண்டிற்குரிய மருத்துவ இடம் 1125. 
இதில் - நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்ற கிராமப்புற மாணவர்கள் வெறும் 227பேர்கள் மட்டுமே. அதாவதுசுமார் 5 சதவீதம் கிராமப்புற மாணவர்க்கே மருத்துவப் படிப்பு கிடைத்தது. 
இது சமத்துவசமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. முக்கியமான இந்தக் கருத்தை முன்வைத்து, அன்றைய திமுக தலைமையிலான தமிழக அரசு வாதிட, நீதிமன்றமும் இதனை ஏற்று ‘இனி மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது’ என்று நல்ல தீர்ப்பளித்தது.
மீண்டும் நுழைந்தது எப்படி?
அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலின் கருத்தை ஏற்று, ‘நாடு முழுவதற்கும் ஒரே நுழைவுத் தேர்வுநடத்தலாம்’ என்று எம்சிஐ எனும் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்தது. இதன்படி 2010இல் இருந்த மத்திய காங்கிரஸ் அரசும் பொது நுழைவுத்தேர்வு நடத்தத் திட்டமிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 மனுக்கள் வந்தன. 
மூன்றுநீதிபதிகள் கொண்ட அமர்வில் இருவர் நுழைவுத் தேர்வுக்கு எதிராக 18-07-2013இல் தீர்ப்பளித்ததால் நுழைவுத் தேர்வு தொலைந்தது. மூன்றாவது நீதிபதியான ஏ.ஆர்.தவே மட்டும்நுழைவுத்தேர்வை ஆதரித்தார். எனினும்பெரும்பான்மை கருதி வழக்கு நுழைவுத்தேர்வுக்கு எதிராக வந்தது.
இதனால் 2014, 2015ஆம் ஆண்டுகளும் நுழைவுத் தேர்வு இல்லாமல் போனது. தமிழகத்தின் 85 சதவீதம் இடங்களுக்கு +2 மதிப்பெண்அடிப்படையில் இடம் கிடைத்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததியர் இன,தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலை இனி தொடராது என்றுதான் நீட் நுழைவுத் தேர்வு வந்திருக்கிறது.
மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன், அது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவு நிலையெடுத்தது. நுழைவுத் தேர்வு வேண்டாமென்ற தீர்ப்புக்கு மறுசீராய்வு மனுப்போட்டது. 
ஏற்கெனவே நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக இருந்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான நீதிபதிகள் குழு நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. 
இதனைத் தொடர்ந்து ‘தேசிய நுழைவுத் தேர்வுச் சட்டம்-2016’ ஆகஸ்டு, 2016இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வந்தது வினை!உலகம் முழுவதும் ஒரு மாதிரி, இந்தியா மட்டும் வேறுமாதிரியா?!மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, மருத்துவம் இரண்டும் அவசரநிலைக் காலத்தில் சத்தமில்லாமல் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. 
இப்போது அதையும் தாண்டி, மத்தியிலேயே வைத்துக் கொள்வது சர்வாதிகாரமல்லவா?
 அரசியல் சட்டம், இந்தியா முழுவதிலும் உள்ளவேறுபட்ட மொழி பேசுவோர் ஒவ்வொருவருக்குமான உரிமைகளைச் சமஅளவில் வழங்குகிறது. 
இதைத்தான் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று உலக நாடுகளெல்லாம் வியந்து போற்றுகின்றன.
‘கூட்டாட்சித் தத்துவம்இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று’ என்பது உண்மையெனில், அனைத்து மாநிலங்களுக்குமான ஒரே முறையான தேர்வு என்பது சரியல்லவே! அதிலும்கல்வி, மருத்துவம் இரண்டையும் மாநிலப் பட்டியலில் வைத்து நிர்வகிப்பதே கடைக்கோடி ஏழைக்குமான உரிமையாகும்.
சிபிஎஸ்இ, மாணவர்களுக்கும் அநீதியே!
மாநில அரசுப் பள்ளிகளில் படிப்போர்க்கு மட்டும் இது அநீதியான தேர்வு என நினைக்காதீர்கள்! 
சிபிஎஸ்இ, மாணவர்க்கும் இது அநீதியான தேர்வேதான்! 
எப்படி எனில், மத்தியஅரசுநடத்தும் சிபிஎஸ்இ, படிப்பு தான் உயர்ந்த படிப்புஎன்று சொல்லிவிட்டு, அதற்குப் பிறகும் எதற்குஇந்த நுழைவுத் தேர்வு? 
அந்த மதிப்பெண்ணை அப்படியே எடுத்துக் கொண்டு மருத்துவக்கல்விக்குரிய இடங்களை வழங்கவேண்டியதுதானே? 
ஆக அவர்களுக்கும் இது அநீதிதான்!மாநில அரசின் +2தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தாலே போதும் என்பதுபோல, சிபிஎஸ்இ, தேர்வாவது போதும் எனச்சொல்லலாமே? 
அந்தத் தரத்திற்கு மாநிலக் கல்விமுறையை ‘உயர்த்த’ அவகாசம் தரலாமே? 
அதுவும் இல்லை, இதுவும் இல்லையென்று இந்தக் குறுக்குச் சால் எதற்கு?
எப்படியோ இந்தியப் பள்ளிகளில் படிக்கும்பல லட்சம் மாணவ-மாணவியரை மீண்டும் மீண்டும் தேர்வெழுத வைத்துச் சோர்வடைய வைப்பது யாருக்காக? 
தனியார் பயிற்சி மையம்மற்றும் மருத்துவக் கல்வியில் நுழையப்போகும் பன்னாட்டுக் குழும - கார்ப்பரேட்-முதலாளிகளுக்கான முன்தயாரிப்புத் தானே? 
இதைத்தானே உலக நிதி நிறுவனம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது?
இப்போது, ஐஐடி எனும் உயர்தொழிற்கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம் என்று சொல்லி, பல மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ஆம் வகுப்பிலே இருந்தே பணம் கறந்துகொண்டு தனிப்பயிற்சி தருகிறார்களே அதுபோல, இந்த ‘அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நாங்களே பயிற்சி தரப் போகிறோம்’ என்று, இனி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் கறக்கும் அமுதசுரபியாக நுழைவுத் தேர்வும் ஆகப் போவது நிச்சயம்! 
ஆக சிபிஎஸ்இ பள்ளி மாணவர்க்கும் இந்த நுழைவுத் தேர்வால் அநீதிதானே?
நீட் தேர்வு நேர்மையாக நடக்கும் என்பதாவது உண்மையா?
‘மாநிலக் கல்வித்துறையால் நடத்தப்படும் தேர்வுகள் தரமாக இல்லை, நேர்மையாகஇல்லை, நாங்கள் தரமாகவும் நேர்மையாகவும் தேர்வு நடத்தி அதிலிருந்தே தரமான மருத்துவ மாணவரைத் தேர்வு செய்யப் போகிறோம்’ என்று சொல்லும் நுழைவுத் தேர்வு நேர்மையாளர்களுக்குச் சில கேள்விகள் :ட மாநிலத் தேர்வுகள் அதிகபட்சமாக -அதுவும் தமிழ்நாட்டில்- மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் நடந்துவருவதை நாடே அறியும்.
இதற்கு நேர்மாறாக மார்ச்-2007இல் நடந்த மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததே!
 45 மருத்துவர்கள் உட்பட 52பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்ததே இது எப்படி? 
 மத்தியப் பிரதேச இதே பாஜக அரசின்‘வியாபம்’ என்று ‘செல்லமாக’ அழைக்கப்படும் அரசுப் பணியாளர் தேர்வில்-குறிப்பாக மருத்துவ நுழைவுத் தேர்வில்- ஆள்மாற்றி அடித்த கூத்து நாடு முழுவதும் சிரித்ததே. பத்தாம் வகுப்புக் கூடப் படிக்காத பல ஆயிரம்பேர் நாடுமுழுவதும் இப்போதும் மருத்துவராக இருப்பதாக வரும் தகவலுக்குப் பதிலென்ன? 
பலகோடி புரண்ட இந்த நுழைவுத் தேர்வு லட்சணத்தில் இந்த ‘அகில இந்திய நுழைவுத் தேர்வு’நடக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?
 அண்மையில் மத்தியஅரசு நடத்தியஅஞ்சல்துறைத் தேர்வில் தமிழே தெரியாதபீகார் மாணவர்கள் இலக்கண மதிப்பெண்களை அள்ளிக் குவித்த கதைகள் ஊடகங்களில் வந்தனவே! 
இந்தப் பின்னணி என்ன?
 நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரை செய்தஇந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவரேஊழல் வழக்கில் மாற்றப்பட்டது உண்மையெனில், இவர்கள் நடத்தும் தேர்வு நாடுமுழுவதும் இந்த லட்சணத்தில்தானே நடக்கும்?
மருத்துவக் கல்விக் கட்டணம் குறையுமா?‘
குறையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’ என்று வாதிடுகிறார்கள் கல்வியாளர் பிரின்சு கஜேந்திர பாபுவும் மருத்துவர் எழிலனும். 
அவர்களின் வாதம் சரியாகவே இருக்கிறது. இப்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் ரசீது ஏதுமில்லாமல் சுமார் 1கோடி வரை ஒரு சீட்டு விலை போகிறதெனில், இனிஇது அரசு அனுமதியுடனே நடக்கப் போகிறது!அவ்வளவுதான்!
கல்விக்கட்டணத்தை வரையறுக்க இந்தத்தேர்வு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முடியாமல், வெறும் தேர்வு முறை மாற்றம் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் என்பதை எப்படி நம்புவது? 
மாறாக தனிப்பயிற்சி மையங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எனும் பெயரில் ‘கல்வி வள்ளல்’ களின்தொந்தி பெருக்கவே இந்த மருத்துவ நுழைவுத்தேர்வு ஊட்டச்சத்தாக மாறப்போகிறது!மாநில உரிமை பறிப்பால் என்ன ஆகும்?‘
கல்வி, மருத்துவம் இரண்டையும் மாநிலப் பட்டியலிலேயே இடம்பெற வேண்டும்’ என்று அரசியல் சட்டம் வகுத்தளித்த அண்ணல் அம்பேத்கர் மிகவும் சிந்தித்தே இவற்றுக்கான வரையறைகளை வகுத்தளித்தார். ஆனால், இன்று பத்தாம் வகுப்புப் படிப்புக்கே இரண்டு வினாத்தாளாம்! அதில் மொழித்தாளை மாநிலஅரசு எடுக்கும், அறிவியல், கணிதத்திற்கான மற்றொரு வினாத்தாளை மத்திய அரசே எடுத்துத் தரும் என அத்துமீறும் எதேச்சதிகார மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையின் முன்னோட்டமே இந்த நீட் தேர்வு!
மாநில கல்வியைப் பறிப்பது மாநில அரசு-மக்களின் உரிமைப் பறிப்பல்லவா?!‘
மாட்டுக்கறி சாப்பிடாதே’ என்பதற்கும், ‘மருத்துவ மாணவர் தேர்வில் மாநில அரசு தலையிடாதே’ என்பதற்கும் வேறுபாடுள்ளதா என்ன?
 இந்தியா முழுதும் இருந்து மாணவர்களை இவர்கள் தேர்வு செய்து தருவார்களாம்! அவர்களுக்கு மாநில அரசு மாநில மக்களின் வரிப்பணத்தில் கல்வி வழங்கவேண்டுமாம்! ‘நீ அரிசி கொண்டுவா! நா உமி கொண்டு வர்ரேன்.
ரெண்டுபேரும் எங்கவீட்டுத் திண்ணையில உக்காந்து ஊதிஊதித் தின்போம்’ என்பதுபுரியாதா என்ன? பட்ட மேற்படிப்புக்கும் ஆபத்து! ஆனு, ஆளு போலும் மருத்துவப் பட்ட மேற்படிப்புஇடங்களுக்கும் இந்த நீட் தேர்வு இந்த ஆண்டுமுதல் நடக்கவிருக்கிறதாம்! 
இதன் விளைவு என்ன தெரியுமா? 
அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில் 1250 இடங்களில் கடந்த 4ஆண்டாக மாநில இடங்கள் 50சதவீதம் அகிலஇந்திய இடங்கள் 50 சதவீதம்எனவும் சேர்க்கை நடைபெற்று படித்துவருகிறார்கள். இந்த ஆண்டு முதல் அனைத்து இடங்களுக்கும் பட்ட மேற்படிப்பு நீட் தேர்வு நடைபெறுமாம்! இதன் விளைவு?
கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மாநில அரசு 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்து வந்தது. 
இதனால், கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் உற்சாகமாக முன்வந்தனர். கிராமப்புற ஏழைகளும் இதனால் அரசின் தரமான மருத்துவத்தைப் பெற்று வந்தனர். இனி என்னாகும்?
இதோடு, தமிழகத்தில் பட்ட மேற்படிப்புப் படிக்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் அரசுப்பணியாற்ற வேண்டும் என்ற உறுதிபெறப்பட்டிருந்தது. 
ஆனால் இனி அந்த உறுதிஇல்லாததால்,மக்கள் பணத்தில் படித்துவிட்டு, தனியார் மருத்துவ மனை வைப்பதோ, வெளிநாடுகளுக்குப் பறப்பதோ இனி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கும். எய்ம்ஸ் எனும் உயர் மருத்துவம் பெறும்மாணவர்களில் பாதிப் பேருக்குமேல் (56சதவீதம்) வெளிநாடு பறந்து விடுகிறார்கள் என்பது இனி தமிழ்நாட்டிலும் நடக்கும். மக்கள் பணம் தனியாருக்கு லாபம்!
இந்த ஆபத்தை உணர்ந்துதான், தற்போது தமிழக மருத்துவர்கள் ‘பிஜி-நீட்’ தேர்வை எதிர்த்துப் போராடுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள நடைமுறைப்படியே அதாவது +2தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே - நுழைவுத் தேர்வு இல்லாமலே- மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மருத்துவப் பட்ட மேற்படிப்புப் படிக்கஏற்கெனவே இருந்த (50-50) எனும் நடைமுறை தொடரவேண்டும் இதற்கான தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தருவதோடு, இந்தியக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தரவேண்டும்.இதனை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து ஆசிரியர் அமைப்புகள், அறிவியல்இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட நாற்பது அமைப்புகள் ஒன்றிணைந்து, ‘கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு’ ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த 19-04-2017அன்று மாவட்டத் தலைநகரங்களில் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. 
இப்போது 05-05-2017 அன்று சென்னையில் மாநில அளவிலான கண்டனக்கூட்டம் நடத்த ஏற்பாடாகி வருகிறது. இவற்றில் பங்கேற்று, மாநில நலன் காக்கவும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின்உரிமையைக் காக்கவும், மறைமுகமாகக்கல்வியை வியாபாரமாக்கும் போக்கை எதிர்த்து முறியடிக்கவும், போராட வேண்டும்.
                                                                                                                  -நா.முத்துநிலவன்,
(கட்டுரையாளர்: 35 ஆண்டுகள் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர், எழுத்தாளர், சமூகஆர்வலர்)

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...