bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 2 அக்டோபர், 2019

வளரும் "வலதுசாரி" (நாசிசம்)கள்.

பெல்ஜிய‌ நாட்டில் உள்ள‌ தீவிர‌ வ‌ல‌துசாரி இன‌வாத‌க் க‌ட்சியான “பிலாம்ஸ் பெலாங்” (Vlaams Belang) இளைஞ‌ர் அணியின‌ர் ஆயுத‌ங்க‌ளுட‌ன் காட்சிய‌ளிக்கும் ப‌ட‌ம் ஒன்றை டிவிட்டரில் காணக் கிடைத்தது.
அவ‌ர்க‌ள் 2019 -ம் ஆண்டு கோடை விடுமுறைக் கால‌த்தில், போல‌ந்தில் கிராக‌வ் ந‌க‌ருக்கு அருகில் “அர‌சிய‌ல் வ‌குப்புக‌ள்” என்ற‌ பெய‌ரில் இராணுவ‌ப் ப‌யிற்சியில் ஈடுப‌ட்ட நேர‌ம் இந்த‌ப் ப‌ட‌ம் எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.
இதனால் தமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் என்ற எந்த பயமும் இல்லாமல், இராணுவப் பயிற்சி பெரும் ப‌ட‌த்தையும், யூடியூப் வீடியோவையும் அவ‌ர்க‌ளே வெளியிட்டுள்ள‌ன‌ர். ஐரோப்பாவில் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் வ‌ள‌ர்ந்து வ‌ரும் இந்த‌ நேர‌த்தில் அர‌சு இது குறித்து க‌வ‌ன‌ம் எடுக்க‌வில்லை.
அத்துட‌ன், இந்த‌ த‌க‌வல் எந்த‌வொரு ஊட‌க‌த்திலும் வெளிவராது என்ப‌தை நிச்ச‌ய‌மாக‌க் கூற‌லாம்.
பெல்ஜியத்தில் பிலாம்ஸ் பெலாங் கட்சி தன்னை ஒரு மிதவாத பொப்புலிஸ்ட் கட்சியாக காட்டிக் கொள்கிறது. அது வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான இனவாதம், இஸ்லாமோபோபியா கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் வளர்ந்து வரும் கட்சி.
மீண்டும் நாசிசம்
 அது டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிலாம்ஸ் என்று அழைப்பார்கள்) பேசும் மாநிலத்தில் மட்டும் இயங்கும் பிரதேசக் கட்சி.
அந்தக் கட்சி சார்பில் பல உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி உள்ளனர்.
தீவிர‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் இன்றைய‌ உல‌கில் மிக‌ப் பெரும் அச்சுறுத்த‌லாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ருவ‌தாக‌ ப‌ல‌ புள்ளிவிப‌ர‌ங்க‌ளை மேற்கோள் காட்டி நெத‌ர்லாந்து தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ள‌து. (NOS, 18-08-2019)
 இதுவ‌ரை மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் ந‌ட‌ந்துள்ள‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ள் யாவும் அங்கு வாழும் வெளிநாட்டு குடியேறிக‌ளை இல‌க்கு வைத்து ந‌ட‌ந்துள்ள‌ன‌.
பிரைவிக் (Brevik), டார‌ன்ட் (Tarrant) ஆகியோர் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளின் நாய‌க‌ர்க‌ளாக‌, வ‌ழிகாட்டிக‌ளாக‌ போற்ற‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். நோர்வேயை சேர்ந்த‌ பிரைவிக் ஒஸ்லோ ந‌க‌ரில் ந‌ட‌த்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லில் 90 பேர் ப‌லியாக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌வ‌ன்.
அதே மாதிரி நியூசிலாந்து கிரைஸ்ட் சேர்ச்சில் 50 பேர் ப‌லியாக‌ கார‌ண‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லை ந‌ட‌த்திய‌வ‌ன் டார‌ன்ட்.
அண்மையில் ந‌ட‌ந்த‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்திய‌ வெள்ளையின‌ இளைஞ‌ர்க‌ள் மேற்ப‌டி ந‌ப‌ர்க‌ளை த‌ம‌து நாய‌க‌ர்க‌ளாக‌ பிர‌க‌ட‌ன‌ப் ப‌டுத்தி இருந்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ நாடுக‌ளை நோக்கிய‌ பெரும‌ள‌விலான‌ அக‌திக‌ளின் வ‌ருகை வல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஊக்குவிக்கும் கார‌ணியாக‌ இருந்துள்ள‌து.
குறிப்பாக‌ ஜேர்ம‌னியில் சிறிதும் பெரிதுமாக‌ ப‌ல‌ அக‌தி முகாம் எரிப்புச் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌.
பிரான்ஸ், ஜேர்ம‌னி, பிரித்தானியா, இத்தாலி ஆகிய‌ மேற்கைரோப்பிய‌ நாடுக‌ளை சேர்ந்த‌ அரச உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ல‌துசாரிப் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளின் அச்சுறுத்த‌ல் அதிக‌ரித்து வ‌ருவ‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கை விடுத்துள்ள‌ன‌.

ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌ர‌ப்ப‌ப் ப‌டும் வ‌த‌ந்திக‌ளும் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளினால் உண்மை என‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஆசிய‌, ஆப்பிரிக்க‌ நாடுக‌ளில் இருந்து பெரும‌ள‌வில் ப‌டையெடுக்கும் அக‌திக‌ள், குடியேறிக‌ள் கார‌ண‌மாக‌, ஐரோப்பிய நாடுகளில் பூர்வீக‌ வெள்ளையின‌த்த‌வ‌ரின் ச‌ன‌த்தொகை குறைந்து வ‌ருவ‌தாக‌ வ‌த‌ந்திக‌ள் ப‌ர‌ப்ப‌ப் ப‌டுகின்ற‌ன‌.
நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சேர்ச் நகரில், ஒரு வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதி மசூதியில் தொழுது கொண்டிருந்த ஐம்பது பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் உலகை உலுக்கி இருந்தது.
 15 மார்ச் 2019 ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் ஒரு வெள்ளையின‌, நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி என்ப‌தால் விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் அவ‌னை “துப்பாக்கிதாரி” என்றும், ச‌ம்ப‌வ‌த்தை “துப்பாக்கிச் சூடு” என்று ம‌ட்டுமே குறிப்பிட்டன. த‌மிழ் அடிமை ஊட‌க‌ங்க‌ளும் “ம‌ர்ம‌ ந‌ப‌ர்” என்று அறிவித்தன.
விரைவில் அவ‌னை ஒரு ம‌ன‌ நோயாளி என்று சொன்னாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ எதுவுமில்லை.
அதே நேர‌ம், எங்காவ‌து ஒரு முஸ்லிம் க‌த்தியால் குத்தினால் கூட‌, அதை ஒரு மிக‌ப் பெரிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லாக‌ சித்த‌ரித்து ஊட‌க‌ங்க‌ள் அல‌றிக் கொண்டிருக்கும்.
அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ பெரும‌ள‌வு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்களுக்கு காரண‌ம் ந‌வ‌- நாஸிச‌, தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் என்று புள்ளிவிப‌ர‌ம் தெரிவிக்கிற‌து. இருப்பினும் இந்த‌ விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை க‌ண்டுகொள்வ‌தில்லை.
நான், 1991 ம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி, பேர்ன் மாநிலத்தில் உள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது.
 அந்தச் சம்பவத்தில் யாரும் கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.
அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்?) சுவிஸ் இராணுவ வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான்.
நியூசிலாந்தில் மசுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்.
 அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும் படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.
அன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த “துப்பாக்கிதாரி”(பயங்கரவாதி?) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த காரணம் இது: “அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும், வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்…” குற்றம் சாட்டி இருந்தான்.
சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.
அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா போன்ற “முஸ்லிம்” நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள் மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ-நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில் ஆசிய / ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர்.
குறிப்பாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது.
 அதே மாதிரி, மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை “முஸ்லிம்கள்” என்ற பொதுப் பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.
அதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு “முஸ்லிம்” தான்!
இதை எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான்.
“இல்லை நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்” என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.
நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும் எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன ஒடுக்குமுறை பரவலாக வந்தது.
அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.
எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது.
இது ஒரு சில நாட்களிலேயே ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும் இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன.
"பிலாம்ஸ் பெலாங்”வலதுசாரி பயங்கரவாதிகளின் ஆயுதப்பயிற்சி.
அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.

அது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ – நாசிஸ குழுக்கள், புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது அவர்கள் சும்மா இருப்பார்களா?
 இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.

வலதுசாரி நிறவெறிப் பயங்கரவாதம் குறித்து ஊடகங்கள் அக்கறை காட்டாது விடினும், ஐரோப்பிய அரசுகளும், அவற்றின் புலனாய்வுத்துறையினரும் இது குறித்து கவனம் எடுத்து கண்காணித்து வருகின்றனர்.
உள்நாட்டு பூர்வீக ஐரோப்பிய சமூகத்தினர் மத்தியில் உருவாகும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தமது இலக்கை அடைவதற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
வளர்ந்து வரும் வலதுசாரிப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மேற்கைரோப்பிய அரசுகள் மென் போக்கை பின்பற்றி வருகின்றன அதற்குக் காரணம் இந்நாடுகளில் இனப்பிரச்சினையை உண்டாக்கி இனங்களை மோத விடுவதற்கு வலதுசாரி பயங்கரவாதம் அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றது.

அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஜேர்ம‌னியில் இய‌ங்கிய‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மான‌ “National Socialist Underground” (NSU) ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் ஒன்று பார்க்க‌க் கிடைத்த‌து.

அதிலிருந்து எடுத்த சில குறிப்புகளை இங்கே தருகிறேன். ஐரோப்பிய அரசுக்களுக்கும், வலதுசாரி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் அம்பலத்திற்கு வருகின்றன.

முன்னாள் சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில், ந‌வ‌ நாஸிக‌ள் அல்ல‌து தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளே அர‌ச‌ எதிர்ப்பு ஆர்ப்பாட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌ ஜேர்ம‌னி ஒன்று சேர்ந்த‌து. இத‌னை முன்னாள் ந‌வ‌ நாஸி த‌ன‌து வாக்குமூல‌த்தில் குறிப்பிடுகின்றான்.

♦ முன்ன‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌ன் இர‌க‌சிய‌ப் போலீஸ் த‌ம் மீது க‌டுமையான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌தாக‌வும், ஒன்றிணைந்த‌ ஜேர்ம‌னியிலும் தாம் வ‌ர‌வேற்க‌ப் ப‌ட‌வில்லை என்றும் குறிப்பிட்டான்.

♦ இட‌துசாரிக‌ளுக்கு எதிரான‌ வெறுப்புண‌ர்வு கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் ந‌வ‌ நாஸி அமைப்புக‌ளில் சேருகின்ற‌ன‌ர்.
தெருக்க‌ளில் காணும் இட‌துசாரிக‌ளை அடிப்ப‌தென்றால் அல்வா சாப்பிடுவ‌து மாதிரி.

♦ ஜேர்ம‌ன் நாஸிக‌ள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொட‌ர்புக‌ளை ஏற்ப‌டுத்திக் கொண்டுள்ளன‌ர். – ந‌வ‌ நாஸிக‌ள் இர‌க‌சிய‌மாக‌ இராணுவ‌ப் ப‌யிற்சி எடுக்கிறார்க‌ள். ஆயுத‌ங்க‌ளை சேக‌ரிக்கிறார்க‌ள்.

♦ எதிர்கால‌த்தில் இன‌ப் பிர‌ச்சினை தீவிர‌ம‌டைந்து இன‌ங்க‌ளுக்கு இடையில் உள்நாட்டுப் போர் ந‌ட‌க்கும் என்று ந‌ம்புகிறார்க‌ள்.

♦ இன்றைய‌ ஜேர்ம‌ன் அர‌சு, நாஸிக‌ளை க‌ண்காணிப்ப‌த‌ற்காக‌ த‌ன‌து ஆட்க‌ளை ஊடுருவ‌ வைத்துள்ள‌து.

♦ த‌லைம‌றைவாக‌ இய‌ங்கும் ந‌வ‌ நாஸிக‌ளில் ஏராள‌மான‌ அர‌ச‌ உளவாளிக‌ள் உள்ள‌ன‌ர். இருப்பினும், அர‌சுக்கு வேலை செய்த‌ அதே ந‌வ‌ நாஸிக‌ள் தான், த‌லைம‌றைவாக‌ இய‌ங்கிய‌ NSU உறுப்பின‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் த‌சாப்த‌ கால‌மாக‌ அர‌சுக்கு தெரிய‌வில்லையாம்! (ந‌ம்ப‌ முடியுமா?)

♦ NSU உறுப்பின‌ர்க‌ள் மூன்று பேர் ம‌ட்டுமே என்று சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து.
 இருவ‌ர் வ‌ங்கிக் கொள்ளை முய‌ற்சியில் பொலிசால் வேட்டையாட‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் ம‌ர்ம‌மான‌ முறையில் இற‌ந்து கிட‌ந்த‌ன‌ர். மூன்றாவ‌து ந‌ப‌ரான‌ பெண் உறுப்பின‌ர் ச‌ர‌ண‌டைந்தார்.
– அந்த‌ மூவ‌ரைத் த‌விர‌ வேறு யாராவ‌து இருக்கிறார்க‌ளா? யாருக்கும் தெரியாது.
 அது தொட‌ர்பான‌ விசார‌ணை முடிவுக‌ள் இன்ன‌மும் மூடும‌ந்திர‌மாக‌ உள்ள‌ன‌.

♦ NSU ப‌ல‌ த‌ட‌வைக‌ள் வங்கிக‌ளை கொள்ளைய‌டித்தும் பிடிப‌ட‌வில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, நாடு முழுவ‌தும் ப‌த்துப் பேர‌ள‌வில் கொலை செய்துள்ள‌து. கொல்ல‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒரு பொலிஸ் பெண்ம‌ணியை த‌விர‌ ஏனையோர் வெளிநாட்டு குடியேறிக‌ள். துருக்கிய‌ர்க‌ள், ஒரு கிரேக்க‌ர். கொலை ச‌ம்ப‌ந்த‌மாக‌ துப்புத் துல‌க்கிய‌ பொலிஸ் “கிரிமின‌ல்க‌ளின் க‌ண‌க்குத் தீர்க்கும் கொலைக‌ள்” என்று அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌து.

♦ ஒரு த‌ட‌வை கொலை ந‌ட‌ந்த‌ இட‌த்தில், “த‌ற்செய‌லாக‌” இருந்த‌ அர‌ச‌ உள‌வாளியான‌ ந‌வ‌ நாஸியிட‌ம் சாட்சிய‌ம் எடுக்க‌வில்லை.
விசேட‌ விசார‌ணைக் குழு இந்த‌ விட‌ய‌த்தை வெளிக் கொண்டு வ‌ந்த‌து.
இருப்பினும், அந்த‌ நேர‌டி சாட்சி விசாரிக்க‌ப் ப‌டாத‌து ம‌ட்டும‌ல்ல‌, வேறு ப‌த‌வி கொடுத்து இட‌ம் மாற்ற‌ப் ப‌ட்டார்.
                                                                                                                                                           -கலையரசன்


 கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். 
வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில்
 கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி !
 விவசாயிகளிடம் பிடுங்கிய மோடி அரசு !!
பெருவாரியான உற்பத்தியும் விலையில் நிச்சயமற்றதன்மையும் கொண்ட தொழில் விவசாயம். விவசாயத்தின் விளைபொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது மத்திய அரசு. விவசாய விளைபொருளுக்கு வரிவிலக்கு அளித்திருக்கும் மத்திய அரசு விவசாயிகள் பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 15,000 கோடி வரியாகக் கட்டுகின்றனர்.
ஆச்சரியமாக இருக்கிறதா ?

புதுடில்லியைச் சேர்ந்த தெற்காசிய உயிரிதொழில்நுட்ப மையத்தின் நிறுவன இயக்குனர் பகிரத் சவுத்ரி இது குறித்து விரிவாகக் கூறுகிறார்.
 பயிர்களை அழிக்கும் அந்துப் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் கருவியின் பெயர் “பெரொமோன் ட்ராப்” (Pheromone Trap). இது அந்துப் பூச்சுகளில் ஆண் இனத்தை ஈர்க்க பெண் இனம் வெளியிடும் வாசனையை செயற்கையாக உருவாக்கவல்ல கருவியாகும். இந்த வாசனையை வைத்து இதனை நோக்கி வரும் ஆண்பூச்சிகள் இந்த பொறியில் சிக்கிவிடும்.

 இந்தப் பொறியை வாங்குகையில் அதற்கான ஜி.எஸ்.டி வரியாக 18%-ஐ செலுத்துகிறார் ஒரு விவசாயி.
இது மட்டுமல்ல, பிற விவசாயக் கருவிகளான, கண்கண்ணாடி, கையுறை, முகமூடி ஆகியவற்றிற்கும், உரம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவைக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.
உயிரியல் பூச்சிக் கொல்லிகளுக்கு குறைந்தபட்ச வரியாக 5% முதல் 12% வரை வரிவிதிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட ஈர்ப்பு பொறிகள் 50 எண்ணங்கள் மற்றும் அதற்கான வாசனைகிளப்பிகளின் விலை ரூ.2540 ஆகும். அதில் ஜி.எஸ்.டி மட்டும் ரூ.387.46 ஆகும்.
 இது குறித்து விரிவாகப் பார்க்கையில், விதைகள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் ஆகியவற்றைத் தவிர விவசாயத்துக்கான பிற மூலப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் மானியம் அளிக்கப்படும் உரங்களுக்கும் கூட 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.

பொதுவாக ஜி.எஸ்.டி வளையத்திற்குள் வரும் பிற தொழில்புரிவோரைப் பொறுத்தவரையில், தாங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி செலுத்துவார்கள்.
அதே போல தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கும் அதற்கான ஜி.எஸ்.டி வரியை பெற்றுக் கொள்வார்கள்.
 
 பொருட்களை வங்கிய தொகைக்கும் விற்ற தொகைக்கும் உள்ள வேறுபாட்டுத் தொகையை ஆடிட்டர் மூலமாக ஜி.எஸ்.டி கணக்கை முடித்து முறையாக அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் நடைமுறையில் இது சாத்தியமல்ல.

ஒரு விவசாயி, பயிர் வைப்பதற்கு போட்ட மூலதனத்தை திரும்ப எடுப்பதற்கே வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கையில், எப்படி ஒரு விவசாயியால் ஆடிட்டருக்கு செலவழிக்க முடியும்?
மேலும் சௌத்ரி கூறுகையில், “கடந்த 2018 – 2019-ம் ஆண்டில், சுமார் 16,628 கோடி மதிப்பிலான விவசாயத்துக்கான இரசாயன இடுபொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
இதில் மட்டும் சராசரியாக 18% ஜி.எஸ்.டி என எடுத்துக்கொண்டு கணக்கிட்டால், சுமார் ரூ. 2,356 கோடி தொகையை ஜி.எஸ்.டி வரியாக விவசாயிகளிடம் பெறுகிறது அரசு.
மொத்தத்தில், டிராக்டர், மோட்டார் பம்ப் தொடங்கி இரசாயன மருந்துகள் வரை அனைத்து விவசாயப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி சராசரியாக ரூ.15,000 கோடியாக இருக்கிறது” என்கிறார்.

சிறு தொழிலை அழிப்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, விவாயிகளின் கடன் சுமையையும் அதிகரிக்கிறது.
அதன் மூலம் அவர்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றுகிறது.
 இது குறித்து சவுத்ரி போன்றோர் முன் வைக்கும் தீர்வுகளையாவது மோடி அரசு நிறைவேற்றும் என எண்ணிக் கொண்டிருந்தால், நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 1 அக்டோபர், 2019

"செஞ்சீனம் 70".


சீன மக்கள் (கம்யூனிச) அரசு உருவான 70ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. 
நாட்டுக்காக உழைத்தவர்களை,உயிரிழந்தவர்களை  நினைவுகூர்ந்துவரும் தேசிய தினத்தை போற்றிவருகிறது சீனா . 

அதைப்போற்றும் வகையில்  
தியாகங்கள் நிரம்பிய சீனாவின் 
தொடக்கக்காலத்தைஒரு பார்வை.
சீன குடியரசின் குவோமின்டாங் படைகளை எதிர்த்து மக்கள் விடுதலைப் படையினர் (பி.எல்.ஏ.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக அப்போது பீகிங் என்று அழைக்கப்பட்ட நகரில் டியானென்மன் சதுக்கத்தில் பல நூறாயிரம் சீனர்கள் 1949 அக்டோபர் 1 ஆம் தேதி கூடினர்.

சீன நேரத்தின்படி பிற்பகல் 3 மணிக்கு, தலைவர் மாவோ சே- துங் - இப்போது மாவோ ஜெடாங் என உச்சரிக்கப்படுகிறது -
 சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி.) உருவாக்கப்படுவதை அறிவிக்க, வரிசையாக இருந்த மைக்குகள் முன்னால் சென்றார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த ராணுவ அணிவகுப்பு அப்போது தொடங்கியது. பி.ஆர்.சி. அமைக்கப்பட்டது, ரஷியப் புரட்சிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.

சோவியத் யூனியனுக்கும் சீன கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான சுமுக உறவுகளுக்கு எந்த அளவுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்பது பற்றி அப்போதைய பிபிசி கண்காணிப்புப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஜின்குவா - பிபிசி கண்காணிப்பு ஆவணக் காப்பகத்தில் புதிய சீன செய்தி ஏஜென்சி என குறிக்கும் வகையில் என்.சி.என்.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது - சீனா (மக்கள் தினசரி) மற்றும் ரஷிய (பிராவ்டா) கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகள் போன்ற ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள், கடிதங்கள் , உரைகளில் இருந்து மேற்கோளாக எடுக்கப்பட்ட சமகாலத்தைய கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 `பீகிங்கில் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற 200,000 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரமாண்டமான பேரணியில், சீன மக்கள் குடியரசின் மத்திய மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டதை தலைவர் மாவோ ஜெடாங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை செய்தார்.
மத்திய மக்கள் அரசின் ஆறு துணைத் தலைவர்களுடன் தனது இருக்கையில் அமர்வதற்குத் தலைவர் மாவோ வந்தபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.
அரசு கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள், பி.பி.சி.சி.யின் [மக்கள் அரசு ஆலோசனை அமைப்பு]பிரதிநிதிகள் மற்றும் சோவியத் கலாச்சார தூதுக் குழுவின் உறுப்பினர்கள் மேல்தளத்தில் மாவோ -விற்குப் பின்னால் அமர்ந்திருந்தனர்.
மத்திய மக்கள் அரசாங்கத்தின் முதலாவது அறிவிக்கையைப் படிப்பதற்காக மாவோ எழுந்து வந்தார். அந்த நிகழ்ச்சி சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

சியாங் கய்-ஷெக் அரசாங்கம் [சீனக் குடியரசின் அரசாங்கம், இப்போது அதன் கட்டுப்பாடு தைவான் தீவுகள் வரை என சுருங்கிவிட்டது] தந்தை நாட்டுக்குத் துரோகம் செய்யத் தொடங்கியதில் இருந்து மக்கள் பட்ட துயரங்களைக் குறிப்பிட்டு மாவோ தொடங்கினார்;
 இருந்தபோதிலும், இப்போது மக்கள் விடுதலைப் போராட்டம் அடிப்படையில் வெற்றி பெற்று, பெரும்பான்மை மக்கள் விடுதலை பெற்றுவிட்டனர்...
``தொடர்ந்து பேசிய மாவோ, சீன மக்கள் குடியரசின் மக்கள் அனைவருடைய சட்டபூர்வமான ஒரே பிரதிநிதித்துவ அரசாங்கமாக இந்த அரசுதான் இருக்கும் என்பதை மற்ற நாடுகளின் அரசுகளுக்கு அறிவிக்கை செய்ய மத்திய மக்கள் அரசு கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

 சமத்துவம், பரஸ்பர நலன் மற்றும் எல்லைகள் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பரஸ்பரம் மதித்தல் என்ற கோட்பாடுகளை ஏற்கத் தயாராக இருக்கும் எந்த ஒரு வெளிநாட்டுடனும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.


அக்டோபர் 1 ஆம் தேதி மாபெரும் பேரணியில் படைகளை ஆய்வு செய்த பிறகு, பி.எல்.ஏ.வின் ஜி.எச்.க்யூ உத்தரவு ஒன்றை தலைமை கமாண்டர் ச்சூ டெஹ் படித்தார்.
சியாங் கய்-ஷெக் அரசுக்கு எதிராக நடைபெற்ற புரட்சிப் போரில் மகத்தான வெற்றி பெற்றமைக்காக மக்கள் விடுதலை படைக்கு அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அவர்களுடைய பணி அத்துடன் முடிந்துவிடவில்லை என்று அவர் நினைவுபடுத்தினார்.
அனைத்து கமாண்டண்ட்களும், வீரர்களும், மக்கள் விடுதலைப் படையின் அலுவலர்களும் மத்திய மக்கள் அரசு மற்றும் மக்களின் மகத்தான தலைவர் மாவோ உத்தரவுகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும் என்று இதன் மூலம் உத்தரவிடுகிறேன்.

குவோமின்டாங்கின் எதிர்விளைவு படைகளை அழிப்பதற்கும், இன்னும் விடுவிக்கப்படாத அனைத்துப் பகுதிகளையும் விடுவிப்பதற்கும், அதேசமயத்தில் அனைத்து கொள்ளையர்கள் மற்றும் புரட்சிக்கு எதிரானவர்களை அழிப்பதற்கும், அவர்களுடைய எதிர்வினை செயல்கள் மற்றும் கலக முயற்சிகளை அடக்குவதற்கும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறேன் என்று கூறி அவர் நிறைவு செய்தார்.''

சீன ஊடகங்களின் செயல்பாடு குறித்து அக்டோபர் 1949ல் பிபிசி கண்காணிப்பு அறிக்கை
``சீன கம்யூனிஸ வானொலியின் ஏறத்தாழ அனைத்து ஒலிபரப்புகளுமே அக்டோபர் 1 ஆம் தேதி பீகிங்கில் நடந்த மத்திய மக்கள் அரசின் அறிவிக்கை பற்றியதாக இருந்தது. அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அமைதி தினம், அதற்கடுத்த நாட்களில் நடந்த சந்திப்புகளில் சோவியத் - சீன நட்புணர்வு சங்கம் முறைப்படி தொடங்கப்பட்டது பற்றியதாகவும் அது இருந்தது. இந்த அனைத்து தருணங்களிலும் சோவியத் யூனியன் மற்றும் சீனப் புரட்சிப் படைகளுக்கு இடையில் சுமுக உறவு குறித்த விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.''

பீப்பிள்ஸ் டெய்லி, 5 அக்டோபர் 1949:
``சீனர்களான நாங்கள் மாஸ்கோ குறித்து முழுமையாக அன்பும், உணர்வும் கொண்டிருக்கிறோம். பாட்டாளி வர்க்கத்தினரின் மகத்தான தலைவர்கள் மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர், முதலாளித்துவம் மற்றும் நிலவுடமைத்துவம் ஆகியவற்றில் இருந்து எங்கள் நாட்டை விடுவிக்க வழிகாட்டுதலாக இருந்தனர்.

லெனின் பணிகளை ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டார்.
ரஷியக் கூட்டமைப்பு இல்லாதிருந்தால், சீன மக்களால் இந்த மகத்தான வெற்றியைப் பெற முடிந்திருக்காது.''

பிராவ்தா , 5 அக்டோபர் 1949:
``இந்தக் குடியரசின் அறிவிக்கை தனித்துவமான வரலாற்று நிகழ்வு. 475,000,000 பலம் கொண்ட புகழ்மிக்க சீன மக்களின் வரலாற்றில் புதிதாக ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டின் படைகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய படைகளைக் கொண்ட கூட்டுப் படையினருக்கு எதிராக சீன ஜனநாயகப் படைகள் நடத்திய நீண்ட உறுதியான போர் முடிவுக்கு வந்துள்ளது.
உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் போராட்ட குணம் கொண்ட கம்யூனிஸ்ட் முன்னணித் தலைவர்களால் முன்னின்று நடத்தப்பட்ட, சோஷலிஸம் மற்றும் ஜனநாயக முகாமில் இருந்து கிடைத்த தீவிர ஆதரவுடன், தேச துரோகம் இழைத்த, நிலபிரபுத்துவத்தின் அடக்குமுறை, காலனி ஆதிக்கத்தின் அதிகார துஷ்பிரயோக சிந்தனை கொண்ட காலமாக இருந்த குவோமின்டாங் முதலாளித்துவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. தேசிய சுதந்திரத்தை அடைவதில் சீன ஜனநாயகம் வெற்றி பெற்றது.
  வெளிநாட்டு முதலீட்டுக்கு இரையாகிப் போய் ஏறத்தாழ நூறாண்டு காலம் அடிமையாக இருந்த நிலைமைக்கு அது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது...''

அக்டோபர் 1949,பி.ஆர்.சி.க்கு ரஷிய அரசு கடிதம்:
``சீனாவின் மத்திய மக்கள் அரசின் முன்மொழிவுகளைப் பரிசீலனை செய்த பிறகு, சீன மக்களுடன் மாற்றம் இல்லாத நிலையில் நட்புறவைப் பராமரிக்கும் உந்துதலுடனும், சீன மக்களின் ஏகோபித்த பெரும்பான்மையினரின் விருப்பங்களை சீனாவின் மத்திய மக்கள் அரசாங்கம் பெற்றிருக்கிறது என திருப்தி அடைந்திருப்பதாலும், சோவியத் யூனியனுக்கும் சீனாவின் மக்கள் குடியரசுக்கும் இடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், தூதர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடிவு செய்யப்படுகிறது.''
(ரஷிய வெளியுறவு துணை அமைச்சர் ஆண்ட்ரெய் அன்ட்ரெயிச் குரோமிகோவிடம் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்)
                                                                                                                              ஆதாரம்: பிபிசி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வாட்ஸ்ஆப் தங்களின் வாடிக்கையாளர்களின் தனிஉரிமை, தனிமை  மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளுக்கு முக்கியதத்துவம் தருகிறது.
தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் தற்போது புதிய பல புதுப்பித்தல்களை  வழங்கி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

விறல் ரேகைப்பதிவு

வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சிறப்பம்சங்கள் ஆப்பிளின் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை செயல்படுத்த முயலும். உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள் அதில் ப்ரைவசியை தேர்வு செய்யுங்ஜள். பின்னர் பிங்கர்பிரிண்ட் லாக் என்ற வசதி இருக்கும் அதில் அன்லாக் வித் ஃபிங்கர் பிரிண்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக் ஸ்டோரியாக வாட்ஸ்ஆப் இடுகைகளை பகிர்வது எப்படி?

ஆண்ட்ராய்டின் 2.19.258 என்ற வெர்சனிலும், ஐபோனில் 2.19.92 என்ற வெர்சனிலும் இந்த அப்டேட் கிடைக்கிறது.
 வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் ஃபேஸ்புக் ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்ஆப், பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றிணைக்கும் பணியில் ஃபேஸ்புக் குழுமம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களின் இடுகைகளை உங்கள் பெயர் தெரிய வராமல் பார்ப்பது ?

என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில ஸ்டேட்டஸ்கள் ப்ரைவசி வைத்து யாருக்கு தேவையோ அவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் வைப்பதும் வழக்கம். நீங்கள் அவர்களின் ஸ்டேட்டஸ்களை பார்க்கின்றீர்கள்.
இருப்பினும் உங்களின் பெயர்கள் தெரியாமல் இருக்க என்ன செய்யலாம்?
ப்ரைவசி ஆப்சனில் இருக்கும் ரீட் ரெசிப்ட்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்தால் உங்களின் பெயர் ஸீன் பை பட்டியலிலேயே இடம் பெறாது.

குழுக்கான அழைப்புகள்.

உங்களின் விருப்பம் இல்லாமல் உங்களை இனி யாராலும் வாட்ஸ்ஆப் குழுவில்  இணைக்க இயலாது. இதற்கான செட்டிங்க்ஸ்லில் நோபடியை தேர்வு செய்தால், யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் இணைக்க இயலாது.
அந்த இன்விடேசன் ரெக்வஸ்ட்டும் மூன்றே நாட்களில் காலாவதி ஆகிவிடும். மை காண்டாக்ட்ஸ் என்றால், உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் உங்களை க்ரூப்பில் இணைக்க இயலும்.
தேவையற்ற ஒவ்வொரு க்ரூப்பிலும் நம்மை இணைத்துவிட்டு கடுப்பேற்றுவர்களிடம் இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 பெரும்பணக்காரர்கள் சொத்து மதிப்பு சரிவு...
இந்திய பெரும்பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை காட்டிலும் சராசரியாக 11 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஹருன் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதற்கும் பாஜக அரசின் பொருளாதாரக்கொள்கைகள்தான் காரணம்.
ஆனால் மீண்டும் கார்ப்பரேட் வரிகள் சலுகைகளால் அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துவிடும் என்றும் உணரப்படுகிறது.
ஹருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் இணைந்து நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை நடத்தியது.
அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதோடு மட்டுமல்லாது, 2019ம் ஆண்டின் இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் 41 துறைகளில் இருந்து 953 நபர்களை, ஹருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இது கடந்தாண்டு பங்கேற்ற நபர்களை காட்டிலும் 15 சதவீதம் அதிகம் ஆகும், அதாவது, கடந்தாண்டை விட 122 பேர் அதிகமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 2016ம் ஆண்டு பட்டியலை கணக்கிடும்போது 181 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் எடுத்துக்கொண்டவர்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ. ஆயிரம் கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் பணக்காரர்களில் சராசரி சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 11 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்தாண்டில் அவர்கள் சேர்த்துள்ள புதிய சொத்துக்களை சேர்க்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட ரூ.3,72,800 கோடி குறைந்துள்ளது.
344 நபர்கள் அதாவது, இந்தாண்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு நபர்களின் சொத்து மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது.
ஆயிரம் கோடி கட் ஆப் ஆக தாங்கள் நிர்ணயித்திருந்த நிலையில், 112 பேர் அந்த வட்டத்திற்குள்ளேயே வரவில்லை.

2019 இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலின் முதலிடத்தில் ரூ.3,80,700 கோடிகள் சொத்துமதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இந்த சொத்துமதிப்பு, இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் மத்திய அரசுக்கு வழங்கிய ரூ.1,76,000 கோடியை விட 2.2 மடங்கு அதிகம் ஆகும்.
 முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரூ.94,500 கோடிகள் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டியலில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளனர்.
 இவர்களது சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட 33 சதவீதம் அதிகரித்துள்ளது.விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி, கோடக் மகேந்திரா பேங்கின் உதய் கோடக் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
ஆர்ச்லர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் எல் என் மிட்டல், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலிப் சங்க்வி உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட கணிசமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 பொருளாதார  அடிப்படைத் தெரியாதவர்.
பா.ஜ.க ஆட்சியின் தவறான அரசியல் பொருளாதாரக்கொள்கைகளால் இந்தியா மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.
ஆனால் அதை பலர் ,பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டும்,அதை விட்ட வெளியே வர ஆலோசனைகள் சொன்னாலும் மோடி கேட்டுக்கொண்டு திருத்திக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
அது கூட பரவாயில்லை.பொருளாதார நெருக்கடியை சரி செய்கிறேன் என அவர் எடுக்கும் நடவடிக்கைகள் மேலும் இழி நிலைக்கு இந்திய பொருளாதாரத்தை கொண்டு செல்கிறது.
 இந்நிலையில் பா.ஜ.க எம்.பி-யாக இருந்து கொண்டே சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டி  வருகிறார்.


 மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துக்கொண்டார்.
 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், எடுத்த எடுப்பிலேயே பிரதமர் மோடிக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டார்.

அப்போது
 “பிரதமர் மோடி, நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உண்மையாக மீட்க விரும்பினால், உங்களுக்கு விருப்பம் இல்லாத உண்மைகளை கேட்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
 அரசு தன்னுடைய பொருளாதார வல்லுநர்களை அச்சுறுத்தும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இருந்து தவறை கூறிய  உறுப்பினர்கள் நீக்கப்படுவது தவறு.
வல்லுநர்கள் உண்மையான பொருளாதாரச் சூழலைச் சொல்வதற்கு அச்சப்படு நிலை  எனக்குப் பயத்தை தருகிறது.
 பொருளாதார வல்லுனர் கூறும் வாதத்தை முதலில் நேருக்கு நேர் எந்த வித தயக்கம் இன்றி கூறுவதற்கு மோடி ஊக்கப்படுத்தவேண்டும். ஆனால் அதுபோல ஊக்கப்படுத்தும் நடவடிக்கையை மோடி இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என தோன்றுகிறது.
 மோடிக்கு பொருளதாரத்தின் அடிப்படைக்கூட தெரியவில்லை.
தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையாக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் தொலைநோக்கு கொள்கை திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை.
மோடி இதில் கவனம் செலுத்தாமல் தேவையற்றவற்றில்  கவனம் செலுத்துகிறார்.
குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு பெருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மன்கோகன் சிங் கொண்டுவந்தார்.
நிதியமைச்சராக மன்கோகன் சிங்  இருந்தபோது செய்யமுடிந்த நடவடிக்கைகளைக் கூட பிரதமராக இருக்கும் மோடியால் செய்ய முடியவில்லை.செய்யவும் தெரியவில்லை.அதற்கு காரணம் மோடி தான்,அமித் ஷா மட்டுமே முடிவு  எடுக்க வேண்டும் என நினைப்பதுதான். ” என்று அந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------





ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கடைசி 12 மணி நேரம்.....,

பகத்சிங் வாழ்க்கையில் 


"அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்."

1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி...

லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை.

அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது.
அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும் சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.
மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது.
 பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.
 
அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது. நிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள்.
பகத்சிங் பயன்படுத்திய கடிகாரம்

பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.
பர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்துவந்தார். அதை எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது.
இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது அறையில் இருந்து வெளியே செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில் இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே செல்லவேண்டும்.
ஒரு முறை பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார்,
"நீயும், உன் நண்பர்களும், லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை?"
என்று கேட்டார்.
பகத்சிங் அணிந்திருந்த சட்டை
அதற்கு பகத்சிங்கின் பதில் என்ன தெரியுமா?

 "போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது".


பகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார். அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.


தீர்ப்பெழுதிய எழுதுகோல்
 பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில், கார்ல் லிப்னேக்கின் "மெட்ரியலிசம்"
லெனினின் "இடதுசாரி கம்யூனிசம்"
 அப்டன் சின்க்லேயரின் "தி ஸ்பை" (உளவாளி) 
ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

அனைத்தும் கம்யூனிசம் சார்ந்த இடதுசாரி நூல்கள்.
பகத்சிங் அணிந்திருந்த காலணி
பகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.
பகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


பகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று,
 "ரெவல்யூஷனரி லெனின்" புத்தகத்தை கொண்டு வரவில்லையா?" என்று கேட்டாராம்!
அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங்!

படிப்பதற்கு அவரிடம் அதிக நேரம் இல்லையே...
நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சப்தமாகக் கூறினார்......
"இரண்டு செய்திகள்... 
ஏகாதிபத்தியம் ஒழிக.... 
இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)".

தன்னுடைய வழக்கில் அதிக அக்கறை செலுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸிடம் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு, மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங்.
 பிறகு மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.
"விரைவில் மீண்டும் சந்திப்போம்" -இதுதான் ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம் பேசிய சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை அதிகாரியிடமிருந்து தான் பயன்படுத்திய கேரம்போர்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.
 மெஹ்தா சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.

மெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக அன்று மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது.
 இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க விட மாட்டீர்களா?
என்று அவர் சிறை அதிகாரியிடம் கேட்டாராம்.
தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.

ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள் -
அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

பிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்ததைவிட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.
"வாயே குரு" என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.

"என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது.
இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்" என்று பகத்சிங் கூறினார்,
சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது.

"தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.

"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன. தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

மூவரில் பகத் சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை மனதில் நினைத்துக்கொண்ட பகத் சிங், தூக்கில் இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கப்போவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார்.

லாகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ் சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில் தான் லாகூர் மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின் காதுகளையும் எட்டியது.
பகத் சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள்.
மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது.
 அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன.
 அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் செல்ல விருப்பம்?".
சுக்தேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.
 ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர்.
 தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.
இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.

இவர்களை தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அங்கிருந்த ஒரு சிறை அதிகாரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கூறப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இறுதிச்சடங்குகள் சிறைச்சாலைக்குள்ளேயே செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை வெளிவந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.

ராவி நதிக்கரையில் இறுதிச்சடங்குகளை நடத்தும் யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டது, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட முடிவு செய்யபட்டது.

புரட்சியாளர்களின் சடலங்கள் ஃபிரேஜ்புர் அருகில் சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை அழைத்துவந்துவிட்டார்.
சிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து மக்களுக்கு தகவல் தெரிந்துவிட்டது.
 மக்களின் கூட்டம் வெள்ளமென தங்களை நோக்கி வருவதைக் கண்ட பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு, அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு முழுவதும் சிதைகளை சுற்றி நின்றது.
பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில் இருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.
இந்த செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை எழுப்பியது.
 இறுதிச் சடங்குகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை கக்கினார்கள். இதை மாவட்ட நீதிபதி மறுத்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.
 
ஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்கள். லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.
அங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி நிலவியது. பகத் சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின் எச்சங்களுடன் ஃபிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது தான் அதற்கு காரணம்.

மலர் தூவிய சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின் கண்களின் இருந்து கண்ணீர் பொங்க, கண்ணீரஞ்சலி நடந்தேறியது.

"வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது" என்பது பற்றிய செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல பத்திரிகையாளர் மெளலானா ஜஃபர் அலி வாசித்தார்.

அங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார்.
அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.

16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரத்தில் நிகழ்ந்தவை மற்றும் அவரது மறைவுக்கு பிறகு நாட்டில் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகள் ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு இது.
                                                                                                                                                                                                                       தொகுப்பு:  
நன்றி: 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகவங்கி கவனிக்கவும்.
மும்பையில்  நடந்த உலக இந்து பொருளாதார அமைப்பு நிகழ்ச்சியில் உ.பி.முதலவர் யோகி ஆத்யநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பல பொருளாதார தத்துவங்களை அள்ளி வீசி வந்திருந்தோரை திக்கு முக்காட வைத்தார்.

"இந்தியா முன்பு உலகப்பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கைக்கொண்டிருந்தது.புராண காலங்களில் தங்கமும்,வைரமும் ஒவ்வொரு இந்தியனை வீட்டிலும் குவிந்திருந்தது.
ஆனால் கஜினி முகமது அவற்றை கொள்ளையடித்து சென்று விட்டான்.

அதன்பின் முகலாயர் பொருளாதார முறை தெரியாமல் இந்தியாவை ஆண்டதால் செழிப்பு குறைந்தது.
அதுவும்  ஆங்கிலேயர் ஆட்சியின் போது அது ஐந்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது.

 ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4 விழுக்காடு மட்டுமே இருந்து வந்தது.

 தற்போதைய மோடி தலைமையிலான அரசு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளைக்கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து வருகிறது.விரைவில் ராமராஜ்யம் போன்று செழிப்பான புதிய இந்தியா மலரும் "
என்று  யோகி ஆதித்யநாத் கூறினார்.

இவ்வளவு பொருளாதார அறிவுள்ள பாஜக தலைவர்களை உலக வங்கி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இதுவரை பயன்படுத்தாது உலகவங்கி கொடுத்து வைக்காததைத்தான் காட்டுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------



சனி, 28 செப்டம்பர், 2019

முடிவுக்கு வரும் "120 நூற்றாண்டுகள்" வரலாறு

அழித்தொழிக்கும்  அரசு...

ஹசன்கீஃப் (Hasankeyf)துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப் போட்டாலும் தகும் )மிகப் பழைமையான பகுதி .கிட்ட்டத்தட்ட 120 நூற்றாண்டுகள்.

தென்கிழக்கு துருக்கியிலுள்ள, பேட்மேன் என்ற பகுதியிலிருந்து அரைமணி நேர தூரத்தில் அமைந்துள்ளது ஹசன்கீஃப்.
டிக்ரிஸ் நதியோரத்தில் அமைந்திருக்கும் இது,
 மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த பகுதி.
இன்றைய உலகின் மிகப்பழமையான பாலைவனச் சோலை இதுதான்.

 வளர்ச்சி என்ற காரணத்தைக் காட்டி டிக்ரிஸ் நதியில் அணை கட்டுவதன் மூலம்  விரைவில் அந்த நகரை நீருக்குள் மூழ்கடிக்கும் கொடுமையான செயலை செய்கிறது  துருக்கி அரசு.
ஹசன்கீஃப்  டிக்ரிஸ் நதியோரத்தில் அமைந்திருக்கும் மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த பகுதி.
பூமியில் மனித நாகரிகத்தின் மிகப் பழைமையான குடியிருப்புகளில் அதுவும் ஒன்று.
சுமார் 12,000 ஆண்டுகளாக அங்கு மனிதர்கள்வாழ்ந்து வந்தார்கள் .தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான குகைகள், தேவாலயங்கள், நினைவுக் கல்லறைகள் உள்ளன. மனித வரலாற்றில் ஓர் அணிகலனாக நிற்கும் இந்தப் பழைமை வாய்ந்த நகரத்தில் தற்போது  86,000 மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பழமையான மனிதர்கள் வாழ்த்த இடத்தைத்தான் இலிசு (Ilisu dam project) என்ற அணையைக் கட்டுவதற்காக அழிக்கப் போகிறார்கள்.
அணை கட்டும் வேலையும் 4,200 ஜிகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகளும் 2006-ம் ஆண்டு தொடங்கியது.
அந்நாட்டின் நான்காவது பெரிய அணையாக உருவெடுக்கப் போகும் இந்த அணையின் கட்டுமான வேலைகள் இன்னும் சில வாரங்களில் முடியப்போகிறது.
அதோடு 80,000 மக்களின் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கடந்து 12,000 ஆண்டுகள் பழைமையான ஹசன்கீஃப் நகரத்தின் ஆயுளும் முடியப் போகிறது.
துருக்கி அரசு அங்கு வாழும் மக்களுக்கு அந்த இடத்தைக் காலி செய்ய அக்டோபர் 8-ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.
 பல ஆயிரம் ஆண்டுக்கால பாரம்பர்யம் மிக்கக் கலாசார அடையாளத்தை அழிக்கக் கூடாது என்று மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தோல்வியடைந்துவிட்டது. இதனால், திறக்கப்படவுள்ள இந்த அணை விரைவில் 4,200 ஜிகாவாட் மின் உற்பத்தியைச் சாத்தியமாக்கும். ஆனால், அதற்கு அது கொடுக்கவிருக்கும் விலை மிகப் பெரியது.
 மக்கள் வாழும் 199 குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும்.
பழங்கால மனிதர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குகைகள் அழிந்துபோகும்.
அதுமட்டுமல்ல  80,000 மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கிலான உயிரினங்களின் வாழ்விடங்கள் தொலைந்துபோகும். அந்தப் பகுதியின் பல்லுயிர்ச்சூழல் பாழாகும்.
4,200 ஜிகாவாட்டுக்கு இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்கத் துணிந்த துருக்கி அரசின் இதயம் நிச்சயம் இரும்பைவிடக் கடுமையானதாகத்தானிருக்க வேண்டும்.

இந்த இடத்தில் வெறும் 10 சதவிகிதப் பகுதிகள்தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கே இவ்வளவு பெரிய வரலாறு கிடைத்துள்ளது.

இதை மேலும் ஆய்வு செய்யவும் திறந்தவெளி அருங்காட்சியகமாக அறிவிக்கவும் அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதை அரசாங்கம் ஏற்கவில்லை.
ஆனால், அணை கட்டுவதற்கான திட்டத்தை ஏற்று அதற்கு அனுமதியும் கொடுத்து அத்தனை அடையாளங்களையும் அழிக்கப் பார்க்கிறது.
மெசபடோமியா, பைசான்டியம், அரேபியப் பேரரசுகள், ஓட்டோமன் பேரரசு என்று பல வரலாறுகளின் மிச்சங்களை ஹசன்கீஃப் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த நகரத்தைப் பற்றிய குறிப்புகள் பழைமை வாய்ந்த அஸ்ஸிரியன், ஆர்மேனியன், குர்தீஷ், அரேபிக் மொழிகளில் உள்ளன.
 இந்த அணை, இவை அனைத்தையுமே மென்று விழுங்கி ஏப்பம் விடப் போகிறது.

யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்கு இதைவிடத் தகுதி வாய்ந்த ஒன்று இல்லவே இல்லையென்று கூறுகிறார் மத்திய ஃப்ளோரிடாவில் வரலாற்று ஆய்வாளராக இருக்கும் ஹகன் ஒஸோக்லு.
ஹசன்கீஃபுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கக் கலாசார அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

அதைச் செய்யக் கோரி, மக்களும் 'ஹசன்கீஃபைக் காப்பாற்றுங்கள்' இயக்கமும் எவ்வளவோ மனுக்களைக் கொடுத்துவிட்டனர்.
ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்துக்கு உரிய அங்கீகாரத்தை இத்தனை நாள்களாகக் கொடுக்காதிருந்ததே இந்தத் திட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதை உரிய முறையில் செய்திருந்தாலே போதும்.
இந்த அணை கொடுக்கும் வருமானத்தைவிட அதிகமாகச் சுற்றுலாத் துறை கொடுத்திருக்கும்.

தி கார்டியன் என்ற ஆங்கிலப் பத்திரிகை, துருக்கியின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சகத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``பேசப்பட வேண்டிய எத்தனையோ திட்டங்கள் இருக்கையில், இதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?" என்பதே அவர்களின் பதிலாக இருந்துள்ளது.

 அணைக்கு எதிராக அல்ல.அழிக்கப்படும் மனித வரலாற்று ஆதாரங்களை காக்கப்போராடும் போராடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
சிறையில் அடைக்கப்படுகிறார்கள். துருக்கியில் மக்களாட்சி சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த மக்கள் விரைவில் ஹசன்கீஃபைக் காலி செய்தாக வேண்டும்.
அரசு காலக்கெடு விதித்துவிட்டதால், அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வரலாற்றுச் சின்னங்களுக்கு வருகை புரிந்து மிகுந்த மன வேதனையோடு அவற்றுக்குப் பிரியாவிடை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் அணையின் கதவுகள் திறக்கப்படும்.
அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக உயரும் நீர்மட்டத்தில் மூழ்கடிக்கப்படும். அந்த அணைக்குள் 120 நூற்றா ண்டுகள்   வரலாறும் மூழ்கி மறையும்.நிரந்தரமாக .
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நச்சு சர்க்கரையாகும் நாட்டுச் சர்க்கரை.

முன்பு மக்களால் அதிகம் பயன்படுத்தப் படாமல்,அதிக விற்பனையாகாததாக இருந்தது நாட்டுச் சக்கரை.
ஆனால் ரசாயனப் பொருட்காளால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியால் ஏற்படும் கெடுதலான விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்ததால் தற்போது பலர் நாட்டுச் சக்கரை பயன்படுத்துகிறார்கள்.

பல தேநீர்க்கடைகளில் நாட்டுச் சக்கரை தேநீர்,காபி கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள்.
  நாட்டுச் சக்கரை விற்பனை அதிகரித்தால் நம் கலப்பட வியாபாரிகள் கைகள் சும்மாயிருக்குமா என்ன?

மாமபழத்தில் இருந்து வாழைப்பழம்,ஆப்பிள் வரை ரசாயணங்களைக் கலந்து செயற்கையாகப் பழுக்கவைத்து வருபவர்களாயிற்றே?
தற்போது நாட்டுச் சக்கரையிலும் தங்கள் அபாயகரமான கைகளை வைத்து விட்டனர்.

 நாட்டுச் சர்க்கரையில் அஸ்கா கலப்பதோடு ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் என பல ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள்.

இதன் மூலம் அதிக இனிப்பு சுவையை உருவாக்குவதுடன் ,பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும்,உதிரியாக இருப்பதாகவும் காட்டி கவர்ச்சியான பொட்டலங்களில் அடைத்து விற்கின்றனர். அதிக விலைக்கு விற்கிறார்கள்.

ஆனால் கவர்ச்சிக்கு மயங்கி தரமான பொருளாக எண்ணி இதை வாங்கிப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்று நோய்  உட்பட பல வியாதிகள் வந்துஉயிரே பறி போகும் அபாயம் உருவாகியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

இதுவரை என்னதான் செய்தது


 பிரமாண பத்திரம் கொடுக்க தயக்கம் ஏன்?

இதுவரையில் 'பேனர், கட் -அவுட்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தி.மு.க, சார்பில் மட்டுமே  உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சுபஸ்ரீ
ஆனால் இந்த கோவை ரகு,சுபஸ்ரீ படுகொலைகளுக்கு காரணமான பேனர்கள்  வைத்த அ.தி.மு.க., உள்ளிட்ட, மற்ற கட்சிகள் இதுவரை  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயக்கம் காட்டுகின்றன.


 பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை அருகே, 12ம் தேதி, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், ஒரு பேனர் சரிந்து அவ்வழியே  இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த  23 வயதே ஆன மென்பொறியாளர் சுபஸ்ரீ  மீது விழுந்தது பேனருடன்  கீழே விழுந்த சுபஸ்ரீ  மீது பின்னால் வந்த குடிநீர் லாரி உடலில் ஏறியதால்  இறந்தார்.

இச்சம்பவம், தமிழகம் முழுவதும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேனர் கலாசாரத்திற்கு எதிராக, குரல்கள் ஒலித்தன.

சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில், வழக்கறிஞர்கள் லக்ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர். அத்துடன், விதிமீறல்பேனர்கள் தொடர்பாக, 'டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கையும், நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது, 'பேனர்கள் வைக்கக் கூடாது என, தங்கள் கட்சியினருக்கு, அதன் தலைவர்கள் அறிவித்தால் என்ன' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின், 'தி.மு.க., -- அ.தி.மு..க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், எந்த நிகழ்ச்சிக்கும் பேனர்கள் வைக்கக் கூடாது என, தொண்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்; அதை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க.,- சார்பில், பிரமாணப் பத்திரத்தை, அதன் அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, தாக்கல் செய்தார்.
அவிழ்க்கபப்ட்ட திமுக பேனர்கள்

அதில்
"கடந்த, 2017 ஜனவரி, 29ல், தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் இருந்தபோது, கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், 'கட்சி அல்லதுபிற நிகழ்ச்சிகளுக்கு, சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்- அவுட்டுகள் போன்றவை வைக்கக் கூடாது' என, எச்சரித்திருந்தார். 
அடுத்து, 2018 ஜூன், 19ல், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிவிப்பில், 'ஆர்வமிகுதியால், சிலர் பேனர்கள் வைப்பது தொடர்கிறது; அதையும் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. 

சுபஸ்ரீ மரணத்திற்கு பின், 'பொது மக்களுக்கு இடையூறாக, பேனர்கள், கட் - -அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 13ம் தேதி, ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பேனர், கட்- - அவுட், பிளக்ஸ் போர்டுகளை கட்டுப்படுத்த, தி.மு.க., எடுக்கும் நடவடிக்கைகளை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து வருவதற்காக, இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதித்து, தி.மு.க., செயல்படும்."
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று, முதல் கட்சியாக, தி.மு.க., பிரமாண பத்திரம், தாக்கல் செய்தது.
ஆனால், பிற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல், மவுனம் காத்து வருகின்றன.
 நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், கட்சி தலைமை உத்தரவை மீறி, கட்சியினர் யாரேனும், பேனர் அல்லது கட் அவுட் வைத்தால், அதற்கும் கட்சி தலைமையே, பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட கட்சி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வழக்கு தொடரப்பட்டால், அதை கட்சி தலைவர்களே சந்திக்க வேண்டும்.
மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறி பேனர் வைத்தால், கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
 இதனால் கலக்கமடைந்த கேட் அவுட்டிலேயே அரசியல் செய்யும் அதிமுக மற்றும் பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் அமைதி காத்து வருகின்றன.
அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ படுகொலையானதால் மக்களிடையே கோபமான குரல்கள் எழுந்ததாலும் ,நீதிமன்றம் கோபப்பட்டதாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தமிழக காவல்துறைக்கு வர  வேகமாக செயல்பட்டு பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர்,அதை சரிவர கட்டாத ஒப்பந்தக்காரர் இவர்களை விட்டு,விட்டு பேனரை அச்சிட்டவரை கைது செய்து அச்சகத்தை  மூடி சீல் வைத்து வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்து மேலும் தனது ஏவல் புகழை மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டுள்ளது.

 
                 சாலையில் வைக்கப்பட்ட அதிமுக பேனர்களுக்கடியில் செல்லும் வாகனங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை என்னதான் செய்தது 

விசாரணை ஆணையம் ?

ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு இதே தினத்தில்தான்  காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 முன்னதாக செப்டம்பர் 21-ம் தேதி, சென்னை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையைக் காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கிவைத்தார், ஜெயலலிதா.

ஆர்.கே.நகரில்,  3 மகளிர் பேருந்துகள் உட்பட 200 புதிய பேருந்து வசதிகளையும் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் தொடங்கிவைத்தார்.
ஜெயலலிதா கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி இவைதான். அப்போதே, மிகவும் சோர்வுடனும்,  தடுமாற்றத்துடனும் காணப்பட்டார் ஜெயலலிதா.
 தொடர்ந்து, செப்டம்பர் 22-ம் தேதி இரவில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது.
சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு, ஆரம்பத்தில் செயற்கைச் சுவாசக் கருவியின் மூலமாகச் சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், 'ட்ரக்கியோஸ்டமி' அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நுரையீரலுக்கு ஆக்சிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடுதலாக, உடலியக்கத்துக்காக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

 ஓரளவுக்கு உடல்நிலை தேறிவந்த ஜெயலலிதாவுக்கு, டிசம்பர் 4-ம் தேதியன்று, திடீரென இதயமும் சிறுநீரகமும் பாதிப்படைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதயத் துடிப்பும் தற்காலிகமாக நின்றுபோனது. இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் (Cardiopulmonary Resuscitation-CPR) உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ கருவியுடன் ரத்தநாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக 24 மணி நேரம் கடந்த பின்னரும் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்க முடியாமல் போக, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின.
மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை.

(அவர் குளிர்பானம் அருந்துவது போன்ற வீடியோ பல சர்ச்சைகளுக்குப் பிறகே வெளியானது.)
அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்து வந்ததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக் குரல் கொடுத்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.
அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் என 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரணை நடத்தினர்.
கூடுதலாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம், இதுவரை ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வரும் அக்டோபர் 24-ம் தேதி வரை இந்த விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ''நீதி விசாரணை வேண்டும்'' என்று தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் பலமுறை விசாரிக்க அழைத்தும் ஆணையாம் இருக்கும் சாலை பக்கம் கூட செல்லவில்லை.
அதுவே அதிமுக தொண்டர்களிடையே  ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக மட்டும்தான் ஜெயலலிதா எப்படி இறந்தாலும் தனக்கு கவலையில்லை என்றிருக்கிறார் என்ற அதிருப்தியை உண்டாக்கி ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் என அவர் மீதிருந்த நல்லெண்ணத்தை உடைத்தெறிந்து விட்டது.

ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளுக்குள்ளாவது, அவரின் மரணம் குறித்த விசாரணை நிறைவுபெறுமா இல்லை, மேலும் நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அன்றே பெரியார் சொன்னார்....,

 பெரியார் 141 வது பிறந்ததின தொகுப்பு.
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் முதல் குரல் எழுப்பினார்.

1924ம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்தி மொழி எதிர்காலத்தில் திணிக்கப்படும் என்பதை உணர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராகப் பேசியும், தனது குடியரசு நாளிதழில் இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து எழுதியும் வந்தார்.
 ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்பு பற்றி ‘குடியரசில்’ (7.3.1925) ‘தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதப்பெற்ற கட்டுரையின் சில பகுதிகள் :

இந்திக்காக செலவாகியிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. 
இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பார்ப்பனர்கள்.
 தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 100க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதாராயிருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயுள்ளனர்.
பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். 
இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.
ஆனால் இந்திக்கு எடுத்துக் கொள்வதைப் போல 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்கு பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு?


இனி கொஞ்சகாலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.

(அன்றே பெரியார் சொன்னது இன்றும்  நடக்கிறது.)
பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப் பிரச்சாரம் செய்யக் கற்பித்துத்தரும் ஒரு வித்தையாகிவிட்டது.
இந்த ரகசியத்தை நமது நாட்டுப் பாமர மக்கள் அறிவதே இல்லை; இரண்டொருவருக்கு அதன் ரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்துகொண்டு தாங்களும் ஒத்துப்பாடுகிறார்கள் யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத்துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள்.
தமிழ்மொழி நம்முடைய தாய் மொழி;
அது மிகவும் உயர்ந்த மொழி;
அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி;
 சமயத்தை வளர்க்கும் மொழி;
பழமையின் மொழி;
உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப் பெறுகின்ற காரணத்தால் நான் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை.

தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால் தமிழைவிட இந்தி மோசமான மொழி; தமிழைவிட இந்தி எந்தவிதத்திலும் மேலான மொழி அல்ல;
தமிழைவிட இந்தி கீழான மொழி;
தமிழுக்குப் பதில் நமக்கு இந்தி வரத்தகுதியற்றது;
இந்தி வருவது நன்மை அல்ல என்ற காரணத்திற்காகத்தான்.

அரசு நடந்துகொள்ளும் போக்கில் இந்தியைக் கட்டாயமாக்குவதும், அதை அரசியல் மொழியாக்குவதும் அலுவல் தகுதிக்கு இம்மொழிப் பாண்டித்யத்தைச் சேர்ப்பதும் திராவிட மக்களை வம்புச் சண்டைக்கு இழுக்கும் அகம்பாவ ஆணவக் காரியமாகும்.
“இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை இல்லை.
அதனால் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை உண்டாகும்; தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும்” என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.
இதுமட்டுமல்லாமல், 1924ல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அப்போதே இந்தியை எதிர்த்து முழங்கினார்.

1924ம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாலையில் நடைபெற்ற 30-வது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியார் தமது உரையில் கூறியதாவது :
“தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், உரோமாபுரி, பாலஸ்தீனம் முதலான தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கு ஏற்ற தொழில்கள் நாட்டில் நிறைந்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச்செய்யும்.
வங்காளிக்கு வங்க மொழிப் பற்றுண்டு.
மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு.
 ஆந்திரனுக்கு அவன் மொழியில் பற்றுண்டு.
ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை. இது பொய்யோ?
 தமிழ்நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்?
ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்?
என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கும்.
தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்” என்று பேசினார் பெரியார்.
பெரியாரின் திராவிட இயக்கம் அவர் வகுத்துத் தந்த பாதையில் இன்றும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து களம் கண்டு வருகிறது.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டு 61 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்த படுபாதக சம்பவம் குறித்தான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
ஆனால், தேசப்பிதாவின் படுகொலைக்குப் பின்னால் எந்த சக்தி இருந்தது? என்பதை அன்றே தோலுரித்துக் காட்டிய தந்தை பெரியாரின் செயல் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுவதற்கு பெரியாரின் அசாத்திய துணிச்சலும், ஒரு பிரச்சினை குறித்த நுண்ணிய அவதானிப்புமே காரணமாகும்.
காந்தியார் மறைவையடுத்து திராவிட இயக்கம் அதிர்ச்சி அடைந்தது.
தந்தை பெரியார் மகாத்மா காந்தியின் படுகொலையை துக்கநாளாக அறிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் மகாத்மாவுக்காக அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன.

காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த பெரியார், “காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.

இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்திருக்கவே வேண்டும்.

அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலிஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும்.
இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (குடிஅரசு, 31-1-1948) என்று தனது அனுதாபத்தை தெரிவித்தார்.
 மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள சதியை அவர் அப்போதே அம்பலப்படுத்தினார்.
காந்தியார் கொலைக்குப் பிறகு வடஇந்தியாவில் நிலவி வரும் மதவெறி தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்கக் கூடாது என்று தந்தை பெரியார் உறுதியாக இருந்தார்.

இதுகுறித்து அவர், “பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார்.
மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது.

அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை ஏற்றுவிட்டன.
காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதரப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.
இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.
வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை.
மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர் (குடிஅரசு,7-2-1948) என்று கூறினார்.

திராவிடர்கள் ஒதுபோதும் மதவெறிக்கு பலியாகமாட்டார்கள் என்று பெரியார் உறுதிபடக்கூறினார். இதுமட்டுமல்ல இந்துத்துவா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் - ஜனசங்கம் ஆகியவற்றை தடைசெய்வதோடு மட்டுமல்லாமல் வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

இதுகுறித்து‘காந்தியார் முடிவு’ என்ற தலைப்பில் 7.2.1948 தேதியிட்ட குடியரசு இதழில், ‘காந்தி பலியாக்கப்பட்டதன் காரணமாய், இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது.
வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்திய சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக்கூடாது.
இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்வார்களேயானால் இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும் ஒரே அடியாய் தீர்ந்துவிடும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்றவற்றைத் தடைசெய்வது மட்டும் போதாது’ என்று அறிக்கை வெளியானது.
ஆக, காந்தியார் படுகொலைக்குப் பிறகு பெரியார் தடை செய்யச் சொன்ன வர்ணாசிரமங்களும், இத்துத்துவ அமைப்புகளும் தமிழ்நாட்டிற்குள் தங்கள் பேயாட்டத்தை ஆட முயற்சித்தும் முடியாமல் போவதற்கு காரணம், தந்தை பெரியார் என்ற ‘தமிழரின் உயிர்வேலி’ தமிழரையும், தமிழகத்தையும் காத்து நிற்பதால்தான்.
                                                                                                                                 -பி.என்.எஸ்.பாண்டியன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...