"மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாகப் பாடுபடுவதற்கான வேலையை நாம் தேர்ந் தெடுத்துவிட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்”- மார்க்ஸ்.
இத்தகைய தியாக வாழ்க்கையை வெகுசிலரே வாழ்ந்து காட்டி வரலாறானார்கள் எனில் மிகையன்று.
அத்தகைய தியாக வாழ்க்கை வாழ்ந்து வரலாறான பொதுவுடமைச் சிற்பி மாமேதை லெனின் வாழ்க்கை வரலாறு நீண்ட வரலாறு. அவ்வரலாற்றின் பக்கங்கள் வசந்தமானவை அல்ல. மாறாக கற்களும் முட்களும், காட்டாறும், கடும் சூறாவளியும் நிறைந்தது.
அத்தகைய வாழ்க்கை வரலாற்றை 32 பக்கங்களில் வெ. மன்னார் உள்ளங்கை நெல்லிக் கனியென நமக்களித்துள்ள நூலே ‘லெனின் வாழ்க்கை வரலாறு’.குடும்பப் பின்னணியே முற்போக்கு முகாமைச் சேர்ந்தது என்றபோதிலும் உலகில் அத்தகைய குடும்பங்களில் உள்ள எல்லோரும் வரலாறு படைப்பதில்லை.
தோழர் லெனினின் குடும்பப் பின்னணியில் தந்தை இல்யா நிக்கலயெவிச் உலியானவ், தாயார் மரியா அலெக்ஸாந்திரிவ்னா, அண்ணன் அலெக்சாண்டர் ஆகியோர் குறிப்பிடத் தக்க கிரியா ஊக்கியாய் அமைந்திருந்தனர்.
குறிப்பாக அண்ணன் அலெக்சாண்டர் லெனினுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்தி வழிகாட்டியாக இருந்துள்ளது,
இந்நூலின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணன், ஜார் ஆட்சியில் தூக்கிலிடப்பட்டது, இளம் லெனினை இயல்பாகவே வெகுவாகப் பாதித்து அவரை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றது.
லெனின் எழுதிய முதல் நூலிலேயே ‘ரஷ்ய பாட்டாளி வர்க்கம்’அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் தலைமைதாங்கி, ஒரு பகிரங்க அரசியல் மோதலை சர்வாதிகாரத்திற்கு எதிராக நடத்தி உலகப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து கம்யூனிஸ்ட்புரட்சியைக் கொண்டு வர வேண்டும் என தெளிவான கண்ணோட்டத்தோடு எழுதியிருப்பது சிறப்பம்சம்.
மார்க்சியத்தைப் பயில்வதற்காகவே மார்க்சிய மூல நூல்களின் மொழியான ஜெர்மன் மொழியைக் கற்ற லெனினின் விசாலப்பார்வையை உணரமுடிகிறது.
மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த பல்வேறு குழுக்களை ஒன்றுபடுத்துவதில் லெனின் மகத்தான பங்காற்றியதும் அவ்வமைப்பின் மூலம் ரபோச்சிய தேலொ என்ற செய்தித்தாளைத் துவக்கியதும் முதல் இதழிலேயே பறிமுதல் செய்யப்பட்டு லெனின் கைதாகி 14 மாதச் சிறைத்தண்டனை பெற்றதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லெனின் சிறைக்குள்ளும் சிந்திக்கவும் செயல்படவும் தவறவில்லை. புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வெளியிலிருந்து வரவழைத்துப் படித்துள்ளார். அவற்றைத் திரும்பத் தரும்போது ரகசியச் செய்திகளை அப்புத்தகங்களில் அனுப்பியதும் அதற்காகச் சிறையில் தமக்குத் தரப்பட்ட பாலையும் ரொட்டியையும் பயன்படுத்தியதும்.
நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
சதுப்புநிலம் நிறைந்த சைபீரியச் சிறைக்கு அனுப்பியபோதும் மனம் துவளாமல் வாசித்தும் எழுதியும் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டும் இடைவிடாதியங்கினார்.
லெனினின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட குருப்ஸ்கயாவும் சைபீரியச் சிறைக்கு அனுப்பப்பட இருவரும் அங்கேயே தம்பதிகளான தகவலைத் தருகிறார் நூலாசிரியர்.ரஷ்யாவில் நடந்துவந்த ஒவ்வொரு மாற்றத்தின் போதும் அதை உரிய மதிப்பீடு செய்து நூல்களையும் பிரசுரங்களையும் எழுதி தொழிலாளி வர்க்கத்தின் வழிகாட்டியாய்த் திகழ்ந்தார், லெனின்; ஜார் அரசின் உளவுத்துறை ‘உலியானாவைக் காட்டிலும் பெரியபுரட்சியாளர் எவருமில்லை’ என்ற குறிப்பை அரசுக்கு அனுப்பியது இந்நூல் மூலம் தெரியவருகிறது. ‘இஸ்க்ரா’ (தீப்பொறி) என்ற செய்தித்தாளை வெளிநாட்டில் தொடங்கி ரஷ்யத் தொழிலாளிவர்க்கத்தின் கரங்களில் தவழச் செய்தார் லெனின்.
அதைக் கிழிந்து நைந்து போகும்வரை தொழிலாளர்கள் படித்தனர் என்னும் செய்தி வெறும் செய்தியன்று.
இன்றைய தொழிலாளி வர்க்கம்தொழிற்சங்க நூல்களைப் பயில வேண்டிய அவசியத்தை உணர்த்தும் உண்மை. மனிதகுலம் விடுதலை பெற தம்வாழ்நாள் முழுவதும் படித்துப்படித்துப் பெரும் தத்துவவாதியாய் மிளிர்ந்த மார்க்ஸ் பயன்படுத்திய பிரிட்டிஷ் நூலகத்தையும் லெனின் பயன்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘தங்களது துன்பங்களை வெறுமனே சகித்துக் கொண்டே போகாமல் அவற்றை எதிர்த்துப் போராட நமது மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்பார் மாக்சிம்கார்க்கி.
அவ்வாறே கற்றுக்கொடுத்தார் லெனின்.
ரஷ்யத் தொழிலாளி வர்க்கத்தை ஒருங்கிணைத்து ஜார் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அரசு எனும் அடக்குமுறைக் கருவி துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்கியது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்நீத்து ‘ரத்த ஞாயிறு’ அனுசரிக்கப்பட்டதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.
புரட்சிக்குத் தேவை புரட்சிகரமான கட்சி.
அக்கட்சியைக் கட்டும் பணியைத் திறம்பட மேற்கொண்டார், லெனின். எனினும் கட்சியை நீர்த்துப்போகச் செய்ய அக்காலத்திலேயே மென்ஷ்விக்குகளான தனிக்குழு இயங்கி புரட்சிக்குத் தடையாக இருந்தது. கடைசியில் போல்ஷ்விக்குகளே இறுதி வெற்றி பெற்றனர்.
அதற்குச் சரியான வழிகாட்டிய லெனின் ஆற்றிய மகத்தான பங்களிப்பே முக்கியக் காரணம். புரட்சிகர நடவடிக்கைகளில் மகத்தான அத்தியாயமாக ‘போத்தம்கின்’ கப்பல் புரட்சி இடம் பெறுகிறது.
இது இந்தியாவில் நிகழ்ந்த கப்பற்படையெழுச்சியை நினைவூட்டுகிறது. மாஸ்கோவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் 9 நாட்களில் முடிவுக்குவந்து தோல்வியைத் தழுவியதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.
அப்புரட்சியின் படிப்பினைகளை உள்வாங்கி அடுத்த கட்டப் புரட்சிக்குத் தொழிலாளி வர்க்கத்தைத் தயார்படுத்தினார் லெனின்.
முதலாம் உலகப்போரின் போது யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொண்டதோடு ‘ ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்று முதலாளித்துவத்தை சரியாக மதிப்பீடு செய்தவர் லெனின்.
யுத்த எதிர்ப்புப் போராட்டம் பெரும் கிளர்ச்சியாகி உள்நாட்டுப் போர் வெடித்து ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
ஆனால் இத்தகைய 2-வது புரட்சியில் முதலாளிகளின் பிரதிநிதிகளே ஆட்சியைக் கைப்பற்றினர்;. ‘ ஏப்ரல் மாத ஆய்வுரைகள்’ மூலம் லெனின் சரியான வழிகாட்டி நவம்பர் புரட்சியின் நாயகராக உருவெடுக்கிறார். லெனின்,
உயிருக்குக் குறிவைப்பதையுணர்ந்து மாறுவேடங்களில் தமது புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டதை இந்நூலில் காணமுடிகிறது.
இறுதியில் நவம்பர் 07-1917 அன்று உலகில் முதல் சோஷலிச அரசு அமையும் வகையில் “ஆகாவென்றெழுந்த யுகப்புரட்சி” வெற்றி பெற்றது.
சமாதானம், நிலவினியோகம் என இரு பிரகடனங்களை சோஷலிச அரசின் அத்தியாவசியக் கடமையாய்க் கொள்ள லெனின் வழிகாட்டி அமல்படுத்தியது, குறிப்பிடத்தக்க அம்சம். அரசைக் காக்க சனிக்கிழமை ஒருநாள் இலவசமாக அனைவரும் உழைக்க லெனின் வேண்டுகோள் விடுத்ததோடு தாமும் அவ்வுழைப்பைச் செலுத்தியது சாதாரண நிகழ்வன்று. சோஷலிச நிர்மாணப் பணிகளில் அயராதுழைத்து சோவியத் குடியரசை நிறுவி உலகமே வியக்கும் வகையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார் லெனின்.
அழகிய முறையில் அச்சிட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் பணி போற்றத்தக்கது. அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூலிது.
===========================================================================
===========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக