bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 27 செப்டம்பர், 2018

கூகுள்: 20வது பிறந்த தினம்

"கூகுள் கோடிக்கணக்கான மக்களின்பல ட்ரில்லியன் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது;ஆண்ட்ராய்டாய் தொழில்நுட்ப உலகின் நுழைவு வாயிலாகவும், ஜிமெயிலாய் நவீன தபால் அட்டையாகவும், கூகுள் மேப்பாய் உங்களது தினசரி வழிகாட்டியாகவும், யூடியூப்பாய் காணொளி களஞ்சியமாகவும், ட்ரான்ஸ்லேட்டாய் மொழிப்பெயர்ப்புக்கு உதவியாகவும், கூகுள் குரோமாய் இணையதளங்களின் திறவுகோலாகவும், கூகுள் ஹோமாய் நவீனகால நண்பனாக தன்னந்தனியாக தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்து வரும் கூகுளின் 20வது பிறந்த தினம் இன்று."
                                                                                  கூகுள் யாரால், எப்படி ஆரம்பிக்கப்பட்டது? 
அதன் பெயர் காரணம் என்ன? 
சிறந்த/ பிரபல தயாரிப்புகள் என்ன? 
போன்ற அரத பழசான கதைகளை விட்டுட்டு, தற்போது 20 வயதைத் தொட்டுள்ள கூகுளின் பிரபலமில்லாத, அதே சமயத்தில் மிகவும் சிறந்த 3 தயாரிப்புகள் குறித்து பிபிசி தமிழின் தொழில்நுட்ப தொடரில் காண்போம்.
யூடியூப் கிட்ஸ்
ஒரு அடி கொடுத்தாலோ, உயரமான/ பெரிய மீசையுள்ள ஒருவரை காட்டி மிரட்டினாலோ அந்த காலத்தில் ஒரு குழந்தையை எளிதாக வழிக்கு கொண்டுவந்துவிடலாம். 
ஆனால், இந்த கால குழந்தைகளை மிரட்டுவது மட்டுமல்ல, அவர்களை இணையதள பயன்பாட்டை கண்காணிப்பதென்பதே இயலாத காரியமாகிவிட்டது.

குறிப்பாக, இணையத்தில் எவ்வித கட்டுப்பாடுமின்றி பரவி கிடைக்கும் தவறான விடயங்களை குழந்தைகள் பார்க்காமல் தடுப்பதும், அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் காணொளிகளை பார்ப்பதற்கான வழியை அமைத்துக்கொடுப்பதும் பெற்றோர்களின் சவால் மிகுந்த பணிகளில் ஒன்று.
இந்நிலையில், குழந்தைகளின் காணொளி பசியை, கற்றலை, பொழுதுபோக்கை அவர்கள் விரும்பும் வழியில் பயன்படுத்திக்கொள்ளும் சேவையை யூடியூப் கிட்ஸ் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.
அதாவது, குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் கல்வி, விளையாட்டு, இசை, நிகழ்ச்சிகள் என பல்வேறு விதமாக பாதுகாப்பான காணொளிகளை பெற முடியும்.
அதுமட்டுமல்லாமல், உங்களது குழந்தை எவ்வளவு நேரம் இந்த செயலியை பயன்படுத்தலாம், ஒலி அளவு எவ்வளவு வைத்துக்கொள்ளலாம், எதைத் தேடலாம் போன்ற பலவற்றை எங்கிருந்தாலும் இந்த செயலி மூலம் நீங்கள் மேலாண்மை செய்யலாம்.
கூகுள் மெஷர் செயலி
வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்றவை விலையுயர்ந்த தொழில்நுட்பங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. 
எனவே, இதை பற்றிய அடிப்படை தகவல்கள்/ சிறப்புகள் கூட மக்களை சரியாக சென்றடைந்ததாக கருதப்படவில்லை.
உலகளவில் ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி இடத்தை பிடிப்பதில் கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் மோதி வருகின்றன.

இந்த தொழில்நுட்பங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே மிகப் பெரிய சவாலாக கருதப்படுகிறது. 
குறிப்பாக ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை தற்போதுள்ள திறன்பேசிகளில் விளையாட்டு செயலிகளாய் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், மக்களின் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையிலான ஆகுமெண்டட் செயலியை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. 
கூகுள் மெஷர் என்றழைக்கப்படும் இந்த செயலியை பயன்படுத்தி மேசைகள், நாற்காலிகள் போன்ற பல்வேறு பொருட்களின் நீல அகலங்களை உங்களது கைபேசியை கொண்டே அளவிட முடியும்.
உதாரணத்திற்கு, உங்கள் வீட்டிலுள்ள ஊஞ்சலை எடுத்துக்கொள்வோம். அதன் அளவை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? ஒன்று டேப்பை கொண்டு அதை அளவிட வேண்டும், இல்லையெனில் கண்ணால் பார்த்து தோராயமாக அளவிடலாம். ஆனால், இந்த செயலியை கொண்டு உங்களது திறன்பேசி மூலமாகவே அதன் நீள, அகலங்களை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.
அதுமட்டுமில்லாமல், வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஓவியத்தை மெய்நிகர் உலகில் வரையும் டில்ட் பிரஷ் என்ற செயலியும் கூகுளின் முக்கியமான, அதேசமயத்தில் அவசியமான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
கூகுள் ஸ்காலர்

ஆராய்ச்சி கட்டுரைகள்/ வரலாற்று ஆவணங்கள்/ வித்தியாசமான புத்தகங்கள்/ சஞ்சிகைகள்/ குறிப்புகள்/ நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவற்றை தேடி நூலகங்களுக்கும், ஆயிரமாயிரம் இணையதளங்களுக்கும், கடைகளுக்கும் சென்று நேர விரயம் ஆவதை முற்றிலும் தடுக்கும் சேவையாக விளக்குகிறது கூகுள் ஸ்காலர்.
சாதாரண கூகுள் தேடலில் நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும்தான், ஆனால் அது 1,000 அல்லது 10,000மாவது பக்கத்திலும் கூட இருக்கலாம். 
எனவே, பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் தேடலுக்கென பிரத்யேக தேடல் தளமாக கூகுள் ஸ்காலர் விளக்குகிறது.
அதுமட்டுமல்லாமல், எழுத்தாளர்கள் தங்களது புத்தகத்தை முதலாக கொண்டு மேற்கோள் காட்டப்பட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை, செய்தி, புத்தகங்கள் குறித்த விவரங்களையும் இந்த தளத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், நீங்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், உங்களது கண்டுபிடிப்பு போன்ற வேறெதாவதொரு கண்டுபிடிப்பு ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுள்ளதா, காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதன் வடிவம், அமைப்புமுறை, செயல்பாடு குறித்த தகவல்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
உலகின் மிகப் பெரிய ஆவணக் காப்பகமாக விளங்கும் இந்த தளத்தில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருக்குமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் முன்னணி சமூக வலைத்தள செயலிகளில் ஒன்றான இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் அந்நிறுவனத்திலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது தொழில்நுட்ப உலகில் ஆச்சர்யத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
புகைப்படங்களை முதன்மையாக கொண்டு செயல்படும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை கடந்த 2012ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருந்தது. ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமை வாங்கியபோதிலும், அதன் இணை நிறுவனர்களான கெவின் சிஸ்டரோம், மைக் க்ரியேஜர் ஆகியோர் முறையே அதன் தலைமை செயலதிகாரியாகவும், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாகவும் தொடர்ந்தனர்.
இந்நிலையில், எட்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமிலும், ஆறு வருடங்களாக ஃபேஸ்புக்கிலும் இருந்த நாங்கள் இருவரும் எங்களது ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை வெளிக்காட்டும் மற்றொரு இடத்தை தேடுவதற்காக விரைவில் பதவிலிருந்து விலகவுள்ளோம் என்று கெவின் சிஸ்டரோம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான பிரையன் அக்டோன் ஃபேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் உடனான கருத்து வேறுபாட்டிற்கு பிறகு பதவி விலகியிருந்தார். எனவே, ஃபேஸ்புக் வாங்கும் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் அந்நிறுவனத்தை விட்டு தொடர்ந்து வெளியேறி வருவது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக்கின் புதிய வர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம்
வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பெரும்பான்மையானோர்க்கு கொண்டுசெல்லும் முயற்சியாக ஆகுலஸ் குவெஸ்ட் என்னும் ஃபேஸ்புக்கின் புதிய தயாரிப்பை அறிமுகப்படுவதாக அதன் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சாதாரண வர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் போலன்றி இதில் அத்தொழில்நுட்பத்தை உணரும் வகையில் கை விசைகளுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க் சக்கர்பெர்க் கூறினார்.
அடுத்தாண்டு மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கருவியின் விலை 399 டாலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:பிபிசி.தமிழோசை.
******************************************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...