bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 26 செப்டம்பர், 2018

சரிவது ரூபாய் மதிப்பு மட்டும்தானா ?

அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஆகஸ்டு 17ந்தேதி வரலாறு காணாத அளவில் டாலருக்கு 70.1 ரூபாயாக சரிந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் இந்திய ரூபாய் மதிப்பில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. சாண் ஏறினால் முழம் சறுக்கின கதைதான்.
இந்த நிலை அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கும் தொடரும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வரும் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 75.15 ருபாயாக இருக்கும் என பொருளாதார கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா? பொதுமக்களுக்கு என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் ? ஐடி துறை, கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரிவால் பாதிக்கப்படுமா? இந்த சரிவால் யாருக்காவது லாபம் கிடைக்கும்? போன்ற பல கேள்விகள் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளன.
நாணயத்தின் மதிப்பு
இந்தியாவின் நாணய மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது ?
மற்ற பொருட்களைப் போலவே  தேவை மற்றும் விநியோகம் அடிப்படையில் அந்நாட்டின் நாணயத்தின் விலை அல்லது நாணயத்தின் மாற்று விகிதம் (Exchange rate) தீர்மானிக்கப்படுகிறது.
இந்திய ரூபாய்க்கு நாணய மாற்றுச் சந்தையில் வலுவான தேவை இருந்தால் அது ரூபாயின் பரிமாற்ற விகிதத்தை வலுப்படுத்தும், அதன் மதிப்பை உயர்த்தும்.
வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள், ஏஜண்டுகள், அரசாங்கங்கள், தனிநபர் தினம் தினம் நடத்தும் பண பரிமாற்றங்களின் அடிப்படையில் நாணயங்களின் மதிப்பில் ஏற்ற இறக்கக்கங்கள் ஏற்படும். 
மக்களின் தேவை, பொருட்களின் விநியோகம் மற்றும் மக்கள் பொருட்களை வாங்குவது, விற்பது ஆகியவற்றின் அடிப்படையில் நாணயங்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.  உலகில் உள்ள நாணயங்களில் அமெரிக்காவின் டாலர் மற்றும் பிரிட்டனின் பவுண்டு இரண்டும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட உலக வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன. எனவே நாணயங்களின் மதிப்பு பொதுவாக அமெரிக்காவின் டாலர் வைத்து மதிப்பிடப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு இருக்கும் தேவையின் அடிப்படையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் வர்த்தக சூழ்நிலையால் இந்தியாவில் டாலரின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் டாலர் மதிப்பு கூடுகிறது. அதன் அடிப்படையில் தற்போது இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
இதனை மிகவும் எளிதாக கத்தரிக்காய் விலை நிலவரத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.கோயம்பேடு சந்தைக்கு கூடுதலாக 10 லாரி கத்தரிக்காய் வந்தால் கத்தரிக்காய் விலை கிலோவுக்கு 20 பைசா குறையும். கூடுதலாக 20 லாரி கத்தரிக்காய் வந்தால் கத்தரிக்காய் விலை கிலோவுக்கு 40 பைசா குறையும்.
தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு டாலர் தேவை. சந்தையில் போதுமான அளவுக்கு கிடைக்கிறது என்றால் டாலர் மதிப்பு உயராது. நமது தொழில் வரத்தக நிறுவனங்கள் சம்பாதித்த டாலரைவிட அதிகமாகத் தேவை இருந்தால் டாலர் மதிப்பு உயரும். அவ்வளவுதான்.  
கச்சா எண்ணெய் விலை
டாலரின் தேவை அதிகரிப்பதற்கும் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததற்கும் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு முக்கிய காரணமாகும்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சமீபத்தில் ஈரானிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்தது.
ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்த சூழ்நிலையால் அமெரிக்காவின் ஒரு பீப்பாய் (சராசரியாக 159 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை 75 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் முன்பை விட கூடுதல் விலை கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் டாலரின் தேவை அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது.
வர்த்தக போர் 
அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் சீனாவின் நாணய மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வர்த்தக சந்தையில் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் போடப்பட்டுள்ள  அமெரிக்கா சார்ந்த நிதிகள் பாதுகாப்பு கருதி திரும்ப பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு சரிவை சந்தித்துள்ளன. அதில் இந்தியாவின் நாணய மதிப்பு மோசமான சரிவை சந்தித்துள்ளது.
பணவீக்கம் பாதிப்பு
ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவின் பணவீக்கம் கடுமையாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேறு யார் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியதில்லை. நமது ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?
பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் இருந்தால் நல்லது. ஆனால் பண வீக்கம் அந்த எல்லையைத் தாண்டி உயரும் என நினைத்தோம். அதனால் 4.2 சத வீதத்தைத் தாண்டப்போவதில்லை என்று கணிக்கப்பட்டது. ஆனால் 2018-2019ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் 4.8 சதவீதத்தை தாண்டிவிடும் என அஞ்சப்படுகிறது. இதைச் சொன்னது முகவரி இல்லாத ஆசாமி இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஊர்ஜித் படேல்.
இந்திய நாணயக் கொள்கைக் கமிட்டியின் கூட்டத்துக்குப் பின் ஆகஸ்டு 2ந்தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.
ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவின் ஏற்றுமதிப் பொருள்களின் டாலர் விலை குறையும். அதேசமயம் கச்சா எண்ணெய், மூலதனப் பொருள்கள், ரபேல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சூரிய மின்சார தயாரிப்புக்கான மின் உற்பத்தி தொகுப்பு பேனல்கள், காற்றாலை மின்சார தயாரிப்புக்கான நுணுக்கமான சில கருவிகள், அல்லது அவற்றுக்கான பாகங்கள், ஹார்லி டேவிட்சன் போன்ற ஆடம்பர மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கான விலை அதிகரிக்கும்.
அதேசமயம் ஏற்றுமதி விலை குறைவதால் உலக நாடுகள் நம் நாட்டு பொருள்களை முன்பை விட குறைந்த விலையில் இறக்குமதி செய்யலாம். எனவே இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஆனால் அதே பொருள்களைத் தயாரிப்பதற்கான செலவும் அதிகரிக்கும்.
இந்த அதிகரிப்போடு பண வீக்கத்தால் உணவு எண்ணெய், கத்தரிக்காய், முட்டை, கோழிக்கறி, ஆட்டு மாமிசம். அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலையும் உயரும். இதறகுத் தான் ரிசர்வ் வங்கித் தலைவர் அஞ்சுகிறார். 
அதேசமயம் இறக்குமதிக்கான செலவுகள் அதிகமாகும் என்பதால் இந்தியாவின் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்படும். வயிற்றை வாயை, கண்ணை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டி நேரிடலாம்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், தங்கம் வெள்ளி, செம்பு நிக்கல், இரும்பு உள்ளிட்ட உலோகப்பொருள்களின் விலை உயரும்.
மேலும் பெட்ரோல், டீசல், மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரும்.
ஏற்கெனவே அதிகரித்து வரும் உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்தியாவில் அதிகரிக்கும் இறக்குமதி செலவு இரண்டும் சேர்ந்து நம் நாட்டின் பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தக்கூடும்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்தால் பொருட்களுக்கான போக்குவரத்து செலவு அதிகரிக்கும். அதனால் நாட்டில் விலைவாசி உயரும். இந்த சூழ்நிலையால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். இது மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். ஃப்
கடன் விகிதங்கள் உயர்வு 
பணவீக்கம் அதிகரித்தால் அதன் தொடர்ச்சியாக மத்திய ரிசர்வ் வங்கி செலவை கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். இதனால் வீட்டு கடன்களுக்கான மாத தவணை அதிகரிக்கும். இது சராசரி மக்களை வெகுவாக பாதிக்கும்.
முக்கியமாக வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் அதிக பணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். உதாரணமாக வெளிநாட்டில் படிக்க 20,000 டாலர் கடன் பெற ரூ.13.2 லட்சம் கட்ட வேண்டிய நிலை மாறி ரூ.13.8 லட்சம் கட்ட வேண்டி வரும்.
அதேப்போல் வெளிநாட்டுக்குப் பயணம் செல்பவர்களும் முன்பு திட்டமிட்டதை விட அதிகப் பணத்தை கொண்டு சென்றால் மட்டுமே உணவு, தங்கும் வசதி ஆகியவற்றிக்கான செலவுகளை சமாளிக்க முடியும்.
மொத்த உள்நாட்டு வளர்ச்சி
இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிப்பதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு – ஜிடிபி மதிப்பு அதிகரிக்கும்.
அதேசமயம் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் தங்கள் தேவைகளைப்பெற கூடுதல் பணம் செலவிட வேண்டி வரும். மக்கள் கையில் கூடுதல் பணம் இருந்தால் வேண்டிய அளவு வாங்கிக் கொள்ளலாம். உபரியாக கையில பணம் இல்லாவிட்டால் தேவையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால் சந்தையில் விற்பனைச்சரிவு ஏற்படும்.  அதனால் விற்பனை சரிந்தால் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் பெரிதாக முன்னேற்றம் இருக்காது.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி போன்றவை காரணமாக இன்றைய சூழ்நிலையில் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக பண்டிகைகள் நெருங்கி வரும் சமயத்தில் விலைவாசியால் மக்கள் தங்கள் தேவைகளை குறைப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்மால் இப்பொழுது யூகிக்க தான் முடியும். துறைவாரியான துல்லியமான மதிப்பீட்டுக்கு பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
வெளிவர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு
இறக்குமதி பொருட்களின் விலை உயர்வால் இந்தியாவின் வெளிவர்த்தக பற்றாக்குறை (Current account deficit) அதிகமாகும். தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பில் வெளி வர்த்தக பற்றாக்குறை 2 சதவீதமாக உள்ளது.
நாணய மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்தால் இது 3 சதவீதமாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். இது தொடர்ந்து அதிகரித்தால் அந்நிய செலாவணி இருப்புக்களை இந்தியா பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்தியாவில் இதுவரை அப்படிப்பட்ட நிலை உருவானதில்லை.
யாருக்கு லாபம் ? 
ரூபாய் மதிப்பு சரிவதால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டாலும் சில துறையினர் அதனால் பலனடைய வாய்ப்புள்ளது.
ஏற்றுமதியாளர்கள்
இந்தியாவில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரிவால் அதிக லாபம் பெரும்.
ஏனென்றால் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்றினால் முன்பை விட அதிக பணம் கிடைக்கும். உதாரணமாக முன்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 68 ரூபாய் கிடைத்தால் தற்போது நிலவரப்படி ஒரு டாலருக்கு 69.86 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக கிடைக்கும்.
அவர்களின் தொழில் முன்னேற்றம் காரணமாக ஏற்றுமதித் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சுற்றுலா துறை
ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க வாய்ப்புண்டு.
இன்றைய சூழ்நிலையில் அவர்களிடம் உள்ள வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்றினால் முன்பை விட கூடுதலாக பணம் கிடைக்கும்.
எனவே அவர்களது போக்குவரத்து செலவு, தங்கும் வசதிகள், நுழைவு கட்டணங்கள், ஷாப்பிங் செய்வதற்கான செலவுகள் என அனைத்துக்கும் அவர்கள் முன்பை விட குறைவாக செலவிடும் நிலை உருவாகியுள்ளது.
உதாரணமாக முன்பு 20,000 ரூபாய் விமான கட்டணத்திற்கு கடந்த மாதம் 290 டாலர்கள் கட்ட வேண்டும். இந்த மாதம் அது 286 டாலராக குறைந்துள்ளது. இதேப்போல் இந்திய ரூபாய் சரிவு அதிகரிக்க அதிகரிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு செலவுகள் குறையும். 
எனவே ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்தும் அவர்கள் இங்கு செலவிடும் தொகை இந்திய ரூபாய் அடிப்படையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பண்டிகைகள் காலம் நெருங்குவதால் சுற்றுலா துறைக்கு இது சாதகமான சூழலாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு
இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் இழப்பை சீர்செய்ய இந்திய ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளாக வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள டாலர்களை வங்கிகள் மூலம் விற்று ரூபாய் நோட்டுகளாக மாற்றி புழக்கத்தில் விடுவது. இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு டாலர்களை ஒரு நாள் வட்டிக்கு கடனாக பெற்று அதை வங்கிகள் வழியாக புழக்கத்தில் விடுவது.
இந்திய வங்கிகள் வெளிநாட்டு சந்தைகள் வழியாக நிதி திரட்டி அதை இந்திய ரூபாயாக மாற்றி உள்ளூர் மக்களுக்கு கடன் வழங்குவது போன்றவற்றை ரிசர்வ் வங்கி செயல்படுத்தும்.
சில நேரங்களில் வெளிநாடுகளில் நிதிகளை திரட்ட பொது துறை நிறுவனங்களிடமும் அரசாங்கம் வலியுறுத்தும்.
இறக்குமதிக்கான கட்டணத்தை மெதுவாக செலுத்துவது, ஆடம்பர பொருட்கள் மீதான சுங்க வரிகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவை பயன் அளிக்காத பட்சத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் இந்திய பங்கு சந்தையில் அமெரிக்க டாலர்களை விற்பதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பை சீர் செய்யும் முயற்சியில் ரிசர்வ் வங்கி ஈடுபடும்.
ரூபாய் மதிப்பை சீர் செய்ய மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை 2300 கோடி டாலர் செலவிட்டுள்ளதாக மத்திய நிதி விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சி பெரிதாக பலன் தராது என்றும் சுபாஷ் கார்க் கூறியுள்ளார். 
இந்திய ரூபாயின் வீழ்ச்சி உலக வர்த்தக சூழ்நிலையால் ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமன்றி பல உலக நாடுகளின் நாணய மதிப்பும் தற்போது சரிந்து வருகின்றது. அமெரிக்காவின் மோசமான வர்த்தக கொள்கைகளால் இந்த நிலை மேலும் மோசமாக கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே தற்போது நிலவும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி என்ன முயற்சி செய்தாலும் அது பலன் தராது. இந்தியாவிடம் தேவையான அளவு அந்நிய செலவாணி இருப்பு உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை என சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் சராசரி மக்கள்
ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் விலைவாசி உயர்வின் தாக்கம் அனைவரையும் கடுமையாக தாக்காது. 
உதாரணமாக தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்பே வாங்கிச் சேமித்து வைப்பவர்கள், பல வருடத்திற்கு தேவையான வர்த்தக முதலீடுகளை செய்துள்ள பெரு வணிகர்கள், பொருட்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் அதை சேமித்து வைத்து உரிய நேரத்தில் விற்பனை செய்பவர்கள் ஆகியோர் ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் மாற்றங்களை பெரிதாக உணர வாய்ப்பில்லை.
ஆனால் தங்களுக்கு தேவையான பொருள்களை அன்றைய தினம் வாங்கும் ஏழை, எளிய மக்கள் மற்றும் கையில் உள்ள பொருளை முதலீடாக போட்டு வியாபாரம் செய்யும் சிறு, குறு வணிகர்கள் ஆகியோர் ரூபாய் மதிப்பு சரிவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வில் ஏற்படும் தாக்கத்தை அவர்களால் தான் நன்கு உணர முடியும். 
இந்தியாவில் ஏழை, எளிய மக்களின் கொந்தளிப்பை தவிர்க்கவே மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பு சரிவை சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் ஆரம்ப கட்ட முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீடு வரவு குறையத் தொடங்கும். இது தொற்று நோயாக மற்ற பகுதிகளையும் பாதிக்கும் அபாயம் நிரந்தரமாக உள்ளது.
இந்த அபாயங்கள எல்லாம் மிரட்டும் வேளையில் இதுதான் பொற்காலம் என்று தலையிலடித்து சத்தியம் செய்யும் பாணியில் பங்குச்சந்தையில் கூத்தும் கும்மாளமாக உள்ளது. பங்குச்சந்தைகளின் குறியீட்டெண்கள் கயிற்றில் ஏறி உச்சங்களுக்கு உல்லாசப் பயணங்கள் போகிறார்கள்.
பங்குச்சந்தை, வேளாண் பொருள்களின் ஆன் லைன் வர்த்தகம் இவை வர்த்தக சூதாடிகளின் பெருங்குமிழ்களாக காற்றில் மிதக்கின்றன.
இந்த பிரச்சனைகளால் உலக வர்த்தகம், அந்நிய செலவாணி போன்றவற்றை பற்றி எதுவும் அறியாத ஏழை, எளிய மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் நஷ்டமடைகிறார்கள். இந்த நிலை நீடித்தால் இந்தியா எப்படி வல்லரசாக வளர முடியும்?
.

                                                                                                                                          -சி.நிரஞ்சனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...