bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஜீவா என்றொரு கவிஞர்

                                 

தோழர் ப. ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தமி ழக அடையாளமாகவே இன்றும் பார்க்கப்படுகிறார். பேசப்படுகிறார்; அவரது உணர்ச்சியூட்டும் பேச் சாற்றல் குறித்து சம காலத்தவர்கள் சொன்னவை களும், குறித்தவையும் காலத்தால் அழியாதவை. சிந்தனையைக் கிளர்த்தும் அவரது எழுத்துகள் மீண்டும் மீண்டும் படிக்கப்படும்; பேசப்படும். அரசி யல், சமூக, கலை இலக்கிய, பண்பாட்டுத் தளங் களில் அவரின் தனித்த ஆளுமை என்றென்றும் கோபுரத்து விளக்காய் திகழும்.

அவருடைய பாடல்கள் ஒன்றிரண்டு திரும்பத் திரும்ப மேடைகளிலும் எழுத்துகளிலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன. அந்தப் பாடல்களை மட் டுமே அவர் எழுதினாரா? அல்லது கவிதை, பாடல் தளத்தில் அவரது சாதனைகள் உரிய அங்கீகாரம் பெறவில்லையா?

“காலுக்குச் செருப்புமில்லை... கால்வயிற்றுக் கூழுமில்லை...” என்ற பாடலும்; “கோடிக்கால் பூத மடா... தொழிலாளி கோபத்தின் ரூபமடா” என்ற பாட லும் பிரபலமான அளவு பிற பாடல்களோ கவிதை களோ தற்போது அதிகம் பேசப்படாமல் இருப்பது ஏன்?

வெளித் தோற்றத்துக்கு மிக எளிதாகத் தோன்றும் இக்கேள்விகள் ஆழமான சமூக அரசியல் பண்பாட்டு வேர்களை நமக்கு அடையாளம் காட்டுவனவாக அமையும்.

1906ஆம் ஆண்டு பிறந்த ஜீவா 1963-ல் மறைந் தார். 1917 தொடங்கி 1963 வரை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்வில் இயங்கியவர். இவர் இளமையிலேயே கவிதை புனைவதில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். அவர் தனது பதினாறு வயதில் பாடியதாகக் கூறப்படும் ஒரு பாடல் நமக்கு முன் ஆவணமாக உள்ளது.

“இது ஜெயம் இது ஜெயமே - இனி

ஈசன் நேசமதால் தேச பாடமிகும்...”

எனத் தொடங்கும் இந்தப் பாடலில் கடைசி வரிக்கு முந்தைய வரியில் பாமிகுஞ் சொரிமுத்தன் பணிந்தேன் கூவி” என தன் இயற்பெயர் சொரி முத்தன் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது முதல் பாடலாகக் கருதப்படுகிறது.

“வரும் புதிய தமிழகத்தில் வறுமையுண்டா?

வஞ்சகமும் பஞ்சைகளும் வாழ்வதுண்டா?’

எனத் தொடங்கும் ‘புதிய தமிழகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய விருத்தங்களே அவர் எழு திய கடைசிக் கவிதை என ஆவணப்படுத்தப்பட் டுள்ளது.

இந்த விருத்தங்களில் இறுதியாக அவர் எழுப்பு கிற கேள்விகள் இன்றும் நம்மீது சட்டையாகச் சுழன் றடிக்கிறது.

“வரும் புதிய தமிழகத்தில் சாதியுண்டா?

வருணாசிரமம் பேசும் வம்பருண்டா?

இரு பழிசார் சேரி அக்ரகார முண்டா?

இழந்தோனும் எத்தனுமிங் கிருப்பதுண்டா?

பெரும்பொருளைச் சூறையிடும் கோயிலுண்டா?

பீடைமதக் கூத்தடிக்கும் பித்தருண்டா?

அரும்புமெழில் அறிவியலால் வாழ்வோர் ஆங்கு

அறியாமைப் படுகுழிகள் அணுக மாட்டா”

இந்தக் கவிதையோடு மொத்தம் 122 படைப்புகள் கவிதைகளும் பாடல்களுமாக நமக்குக் கிடைக் கின்றன.

இவற்றில் 25 பாடல்கள் பெண் விடுதலையை உயர்த்திப் பிடிப்பன; 48 பாடல்கள் தொழிலாளி வர்க்க எழுச்சி, சோஷலிசம் சார்ந்து எழுந்தவை; கட்சி, தியாகம் குறித்து நேரடியாகப் பேசும் பாடல் கள் 7; புரட்சி பற்றிய பாடல்கள் 5; இதுபோக பாசிசம், யுத்தம் குறித்த பாடல்கள் 6, சுயமரியாதை, பகுத் தறிவு சார்ந்த பாடல்கள் 11, தேசியம் சார்ந்த பாடல் கள் 15, பாப்பா பாடல் 2, பொது 2, தமிழகம் 1, என பத்து வகைப்பாடுகளில் அவற்றை நாம் அணுக லாம். இன்னும் நுட்பமாக வகைப் பிரித்தால் மேலும் சில கூடும். எனினும் இங்கு நம் கட்டுரைத் தொட ருக்கு ஏதுவாக இவ்வகைப்பாடு அமைக்கப்பட் டுள்ளது.

பொதுவாக இயக்கம் சார்ந்த பாடல்கள், அல் லது ஒரு தேவையின் பொருட்டு அப்போதைக்கு எழுதப்படும் பாடல்கள் அந்தத் தேவை முடிந்ததும் மறைந்துபோகும் அல்லது மக்கள் மறந்துவிடுவர். எதிர்கால இலக்கியப் பெட்டகத்திலும் அதற்கான இடம் பெரிதாக இருக்காது. பலவற்றுக்கு இடமே கிடைக்காது. ஆனால் ப. ஜீவானந்தம் பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன. மீண்டும் இப்போது இசைக்கப்பட்டாலும் அதன் உயிர்த்துடிப்பும் தேவையின் நிறைவும் அதில் வெளிப்படும்.

“உங்களுடைய பேச்சு வன்மையைத் தமிழகம் கேட்டுவிட்டது; தியாகத்தையும் தமிழகம் நன்கு அறியும்; நீங்கள் பிரச்சாரங்களிலும் போராட்டங் களிலும் ஈடுபடுவதை நிறுத்தி, தயவு செய்து தமிழன் நன்மையடையும் பொருட்டு உங்கள் உணர்ச்சி களைப் பாடல்களாக எழுதித் தள்ளுங்கள்”

இப்படி வேண்டுகோள் வைத்தவர் சாதாரண ஆள் அல்ல; அறிஞர் அண்ணாவால் அக்ரஹாரத்து அதிசய மனிதர் எனப் பாராட்டப்பட்ட வ.ரா. என் பதுதான் முக்கியம். (எந்தப் பாடலில் மூழ்கி இக் கருத்தை வெளியிட்டார் என்பதை பிறிதொரு இடத் தில் பார்ப்போம்.) ஒரு வேளை வ.ராவின் வேண்டு கோளை ஜீவா ஏற் றிருந்தால் தமிழ கம் ஜீவாவின் கவிதை, பாடல் அடைமழையில் திக்கு முக்காடி யிருக்குமோ!

ஜீவா பாடல் களை மேடைகளில் பாடவும், மேற்கோள் கள் காட்டவும் முற்போக்கு கலை இலக்கியவாதிகள் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கான தேவை இன்று உள்ளது. ஜீவாவின் பாடல்களில் அதற்கான காரமும் சாரமும் உண்டு. அவற்றைப் பருகினால் புரியும் அருமை பெருமை எல்லாம்.

“பெண்ணைக் கன்னா பின்னா வாய்ப்

பேசித் திரியும் வம்பர்

கன்னத்தோர் அறைவிழ வேண்டும்/வேறென்ன வேண்டும்”

“சின்னத் தனமாய்ப் பெண்ணை/சித்தரிக்கும் நூற்களை

இன்றே நெருப்பிலிட வேண்டும்/வேறென்ன வேண்டும்”

மக்கள் பாடகனுக்கே உரிய கோபமும், வார்த் தைகளின் வீச்சும் ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பும் ஜீவானந்தம் கவிதைகளில் பாடல்களில் அடிநாத மாக உள்ளன.

இவர் பாடல்கள் பொதுவாக கொள்கைப் பிடிப் போடு பிறந்தவை. அவர் சரியென ஏற்றதை தயங் காமல் மூடி மறைக்காமல் பூடகமாய் பேசிக் குழப் பாமல் மென்று விழுங்காமல் தேங்காயை உடைத் தது போல உடைத்துக்கீறிக் காட்டுவதுதான் தனிச் சிறப்பு.

“எதிர்ப்பும் ஏற்பும் எதற்கும் உண்டு” என்ற தெளிவும்; “அறிவியல் வாதம் பெறில் முன்னேற்றம்” என்ற பார்வையும் 1920ல் இவர் எழுதிய சுய மரியாதைச் சொன் மாலையில் துலக்கமாய் உள் ளது. ஆகவே அவரது கவிதைகள் யாருக்காக எதற் காக எழுதப்பட்டதோ அதற்கொப்ப வீறுடன் பேசின.

இவர் பாடல்கள் சமூகத்தில் புரையோடிய புண்களை கீறி அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை நிகர்த்தவை..
                                                                                                  சு.பொ.அகத்தியலிங்கம்
  நன்றி;தீக்கதிர்,                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...