-ஒரு வரலாற்றுப் பார்வை!
மூங்கில் கணுவைக் குறிக்கும் சொல் சீனத்தில் நேர்மையைக் குறிக்கும் சொல்லின் உச்சரிப்புடன் ஒத்திருக்கிறது. 5000 வருடத்திற்கும் மேலான கலாசார வரலாறு கொண்ட அந்த தேசத்தில், மூங்கில் உயர்குடிப் பிறப்பின் அடையாளம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நற்குணத்தின் சின்னமாக இருக்கும் மூங்கிலுக்கு ஆன்மாவும் உணர்வும் இருக்கிறது என்றே கருதினார்கள். விசேஷ அர்த்தங்களும் அடையாளங்களும் கொண்ட மூங்கிலுக்கு மிக ஆழமான பண்பாட்டு வேர் இருப்ப தால், சீனம் மூங்கில்களின் தேசம் என்றறியப்படுகிறது.
மிகப்பிரபல டாங் காலக் கவிஞர் பாய் ஜூயீ (கி.பி. 772-846) மூங்கிலின் சிறப்பு களைத் தொகுத்தளித்துள்ளார். உறுதியான அதன் வேர் நம்பிக்கையையும் திட சித்தத்தையும்; உயர்ந்த நேரான தண்டு கௌரவத்தையும் கம்பீரத்தையும்; ஒன்றுமற்ற உள்ளீடானது பணிவையும் அடக்கத்தையும்; தூய்மையான தண்டின் மேற்பரப்பு கண்ணியத்தையும் தூய்மை யையும் குறிப்பதால், டாங் மற்றும் ஸோங் முடியாட்சிகள் முதலே மூங்கில் "கனவான்' என்றறியப் பெறுகிறது. பனிக்காலங்களில் வீரத்துடன் ஆபத்துக்களையும் சிரமங் களையும் எதிர்த்து, பசியத்தை முழுக்க இழந்து விடாமல் உறுதியாக நிற்கும் அதன் தன்மையானது, உறுதி இழந்து விடாத மனித குணத்தையும் குறிக்கும். அவர்களுக்கு மூங்கில் என்பது ரசனையின் அடையாளம்.
மூங்கில் படுக்கையைப் பயன்படுத்திய கடைசி முடியாட்சி மிங் (கி.பி. 1368-1644) என்பார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகின் மிக முன்னேறிய தேசமாக மிங் அரசின் தொடக்ககாலம் அறியப்பட்ட தென்பதும் குறிப்பிடத்தக்கது. ஜின் முடியாட்சியில் (கி.பி. 265-316) மூங்கிலேடுகளால் உருவான தொகுப்பில், மூங்கில் வகைகளைப் பற்றிய பெரிய பட்டியலே எழுதி வைத்திருக்கிறார்கள்.
உலகின் மற்ற எந்தப் பகுதியையும்விட மிகமிக அதிக மூங்கில்கள் அங்கே இருக்கின்றன. இதுவரை அறியப்பட்ட வற்றில் மூன்றில் ஒரு பங்கான 400 வகை மூங்கில்கள் அங்கே வளர்கின்றன. நிலப் பரப்பளவிலும் மர எண்ணிக்கை யிலும் வருடாந்திர சாகுபடியளவிலும் சீனத்துக்கே முதலிடம். யாங்ட்ஜு ஆற்றின் தெற்குப் பகுதியின் ஸிச்சுவான், அன் ஹ்யூ, ஜெஜியான், ஃபூஜியான், ஹுன்னன், குவாங்தோங், ஜியான்ஸி, ஜியாங்ஸூ ஆகிய மாநிலங்கள் மூங்கில் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன.
இன்றைய ஜெஜியாங் மாநிலத்தின் யுயாவ் கிராமத்தைச் சேர்ந்த ஹெமுடு என்ற இடத்தில், 7000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழைய மூங்கில் பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. ஷாங் முடியாட்சி யிலேயே (கி.மு. 16 முதல் 11-ஆவது நூற்றாண்டுகள்) மூங்கிலால் வீட்டுக்குத் தேவையான பல்வேறு அன்றாடப் பொருட்கள் தவிர வில், அம்பு உள்ளிட்ட ஆயுதங்களும் செய்தனர். ஹெம்டு அகழ்வாய்வுத் தளத்தில் நூற்றுக்கணக்கான வைக்கோல் ஏடுகளும் கிடைத்துள்ளன. இயற்கையை நன்கறிந்திருந்த அக்காலச் சீனர்களுக்கு இயற்கையிலிருந்து பெறக்கூடிய கச்சாப் பொருட்களை தன் வாழ்க்கைக்கேற்றாற் போல சிறப்பாக உபயோகிக்கவும் தெரிந்திருந்தது. அன்றைய பாய் பின்னும் முறைகள் இன்றைய திறன்களுக்கு நிகரானவையாக இருப்பது பழமை வாய்ந்த அவ்வேடுகளிலிருந்து அறிய முடிகிறது.
சீனத்தில் மூங்கில் மற்றும் வைக்கோல் பின்னல்களுக்கான நெடும் வரலாறு இருக்கிறது. ஏராளமான மூங்கில் ஏடுகளும் சுவடிகளும் லியாங்ஜூ அகழ்வாய்வுத் தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயண்பாடு சுமார் கி.மு. 6000 ஆண்டுகள் வரையில் வேர் விட்டிருக்கிறது. அந்தக் காலத்திலேயே மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்த பல்வேறு பொருட்களையும் பாவித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஒரு குறிப்பிட்ட வகை மூங்கிலுக்கு, "அரசரின் ஆசைநாயகிகள் மூங்கில்' என்று பெயர். இப்பெயர் வந்ததற்கு ஒரு கதை கூறுவார்கள். ஷுன் அரசர் மேற்பார்வையிடவென்று தென்சீனத்துக்குப் போனபோது, மிகுந்த பனிப்பொழிவால் அங்கேயே இறந்து போனார். இன்றைய ஹுனன் மாநிலத்தில் புதைக்கவும் பட்டார். யீயூஹன், நூயிங் ஆகிய அவரது ஆசைநாயகிகள் இருவரும் கரையோரம் கிடந்தபடி பிலாக்கணம் வைத்தழுதனர். அவர்களது கண்ணீர் மூங்கில்மீது விழுந்து கறையை உண்டாக்கியது. டாங் கவிஞர் ஒருவர், "மூங்கிலின்மீது வழியும் கண்ணீர் ஏக்கத்தின் கசப்பை உணர்த்துகிறது' என்றெழுதினார்.
சீன இலக்கிய ஜாம்பவானான ஸூ தோங்போ (கி.பி. 1037-1101), "இறைச்சியில்லாத உணவைவிட மூங்கில் இல்லாத வீடுதான் மோசம். இறைச்சியில்லாத உணவு மனிதனை மெலியச் செய்யலாம். ஆனால், மூங்கில் இல்லாத வீட்டில் வசிப்பவனது ரசனையின் தரம் மிக மெலிந்து போகுமே' என்றார். அந்த அளவிற்கு கற்றறிந்தவர்களிடையே பல நுண்ணியல்புகளால் மூங்கில் முக்கியத்துவம் பெற்றது. தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ள மானுடப் பண்புகள் மற்றும் இயற்கையான வசீகரம் ஆகியவற்றால் அது சீனக் கவிதை, கலை, இலக்கியத்தில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது.
காகிதம் செய்யவும் அரசர்களின் மாடமாளிகைகளைக் கட்டவும் மட்டுமின்றி, உணவில்- உடையில்- வீடு கட்டுவதில்- போக்குவரத்து சாதனம் என்று முற்காலத்தின் அன்றாட வாழ்வின் அங்கமாகவே மூங்கில் இருந்து வந்திருக்கிறது. சீனத்தின் முதல் நூல்கள் மூங்கில் விளாறுகளில் எழுதி நூல்கொண்டு கட்டி உருவானவை. காகிதம் கண்டுபிடிக்கப்படும் முன்னர் மக்கள் மூங்கில் கீற்றுகளில் எழுதி அவற்றைச் சேர்த்துக் கட்டி வைத்துக்கொண்டனர். இதை "பசிய வரலாறு' என்றே குறிப்பிடுகிறார்கள். பட்டுத் துணியிலும் எழுதினார்கள். ஆனால், பட்டைக் காட்டிலும் மூங்கிலின் விலை குறைவு. அத்துடன், அபரிமிதமாகவும் கிடைத்தது. ஆகவே, கலாசாரம் விரிந்து பரவ மூங்கில் மிக முக்கிய பங்கு வகித்தது என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஹான் முடியாட்சியில் (கி.மு. 206 - கி.பி. 220) காகிதம் செய்ய மூங்கிலைத்தான் முதன்முதலில் பயன்படுத்தினர். மிகவும் அதிகமாகக் கிடைத்ததால் மூங்கிலால் செய்யப்பட்ட காகிதம் விலை குறைவாக இருந்தது. மூன்று டன் மூங்கிலைப் பாடம் செய்தால் ஒரு டன் காகிதக் கூழ் கிடைக்கும் என்பதே கணக்கு. இன்றைக்கும் காகிதம் செய்வதற்கு முக்கிய கச்சாப் பொருளாக மூங்கில் இருக்கிறது. இளம் மூங்கிலில் செய்யப்பட்ட ஸுவான் காகிதம் என்றறியப்படும் விசேஷ காகிதம் தூரிகைக் கலைக்கும் சீன ஓவியத்திற்கும் ஏற்றது.
பதிவு, ஆவணம், வரலாறு, எழுத்து, கவிதை, காகிதம் ஆகிய அனைத்துடனும் தொடர்புடைய மூங்கிலுக்கு இலக்கியத்தில் இருக்கும் இடம் இலக்கியத்திற்கே நிகரானது. இலக்கியத்தின் ஆன்மாவாகவே அதைக் கருதுவார்கள். கவிஞர் ஸோங் காலத்து அறிஞர் சூ ஷி (கி.பி. 1037-1101) மூங்கிலில் சித்திரமும் தீட்டுவார். பிரபலமான மூங்கில் ஓவியக் கலைஞர் வென் தேங்கின் மாணவரான அவர், "முழுமை பெற்ற மூங்கில் மரத்தைக் கூர்ந்து கவனித்தால் நெடுங்காலமாக வழிவழி வந்த மரபின் ஒவ்வொரு துளிக் கூறும் காணக் கிடைக்கும்' என்கிறார். "இறைச்சி இல்லாமல் நாட்கணக்கில் என்னால் வாழ முடியும். மூங்கிலைக் காணாமல் என்னால ஒரு நாளைக் கூடக் கழிக்க முடியாது' என்கிறார். "மூங்கிலில் தீட்டத் தொடங்கும் முன்னர் மனதிற்குள்ளேயே ஓவியத்தை முழுக்க முடித்திருக்க வேண்டும்' என்ற பொருளில் "லியோங்யோவ்ச் செங்ஜூ' என்ற பிரபல மரபுத் தொடரை உருவாக்கிய பெருமையும் இவருக்குண்டு. மிகத் துல்லியமான முன் திட்டமிடலுடன் செயலாற்று வது குறித்துப் பேசும்போது இன்றைக்கும் இந்த வரி பிரயோகிக் கப்படுகிறது.
கிழக்கு ஜின் காலத்தில் (கி.பி. 317-420), தூரிகையெழுத்துக் கலைஞர் வாங் ஹ்யூயி புது வீட்டுக்குக் குடிபோனபோது முன் முற்றத்தில் முதன்முதலில் மூங்கிலைத்தான் நட்டு வைத்தார். பிறகுதான் வீட்டின் உட்புறச் சீரமைப்பையும் அலங்காரத்தையும் பற்றியே யோசித்தார். விளக்கம் கேட்டபோது, "எப்படிக் கழிப்பேன் ஒரேயொரு நாளைக்கூட என் நண்பன் இல்லாமல்?' என்றார்.
ஆண்கள் மட்டுமே இலக்கியங்களில் மூங்கிலைக் கொண்டாட வில்லை. டாங் முடியாட்சியைச் சேர்ந்த (618-907) ஸ்யூ தாவ் போன்ற பல பெண் கவிகளும் போற்றியுள்ளனர். மணம் புரியாமல் வாழ்நாளெல் லாம் தனியே கழிக்க விரும்பிய இவர், மூங்கிலையே தனது வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். அதன் பசுமையும் உறுதியும் அரிய ஒழுக்கத்தையும் வீரத்தையும்; ஒன்றுமற்ற உள்ளீடு பணிவையும் அடக்கத்தையும் பிரதிபலிக்கிறது' என்ற இவரது வரிகள் மிகப் பிரபலமானவை. அவரது கல்லறைத் தோட்டத்தில் ஏராளமான மூங்கில்கள் நட்டு வளர்க்கப்பட்டன. இந்த இடமே பின்னாளில் ஸிச்சுவான் மாநிலத்தின் செங்டூவில் "ஆற்றைக் காணும்' உயர் கோபுரமாக முன்னேற்றமடைந்தது.
சீன ஓவியர்களுள் சிங் முடியாட்சியைச் சேர்ந்த ஜெங் பான்ச்சியாவ் (1693-1765) மூங்கில் ஓவியம் வரைவதில் மிகத் திறமை வாய்ந்தவரென்று கொண்டாடப் பெறுகிறார். யாங்ஜோவ்வின் "எட்டு அறிவு ஜீவிகளுள்' ஒருவரான இவர், கலை உச்சங்களுக்காகவும் நல்லொழுக்கத்துக்காகவும் கொண்டாடப் பெறுபவர். இவரது ஓவியங்கள் பெரும்பாலும் மெல்லியதாகவும் தனித்துவத்துடனும் இருக்கும் அதே வேளையில், உறுதியும் கம்பீரமும் கொண்ட மூங்கிலின் உயிர்ப்பைத் தூக்கிக் காட்டுவதில் அதிக கவனம் வைக்கின்றன. மூங்கில் ஓவியம் ஒன்றில், "மலை மீதேறி செங்குத்தாக வெட்டுவதுபோல் முரட்டுத்தனமான வளைவுடன், வானிலை ஆபத்துகளைச் சந்திக்கும் திடம் வளர்த்து, எண் திசையிலிருந்து அடிக்கும் சூறாவளிகளை எதிர்க்கும்' என்று மூங்கிலைப் பற்றிப் புகழ்ந்து தீட்டியிருக்கிறார்.
மிக வறிய குடும்பத்தில் பிறந்து, மூன்றே வயதில் தாயை இழந்து, தந்தையிடம் ஓவியம் பயின்றார். பதின்பருவத்தில் இருந்தபோதே மெல்லிய காகிதத்தை தன்னுடைய அறை சன்னலின் வைத்து மூங்கிலின் நிழலைக் கூர்ந்து கவனித்து வந்தார். அரசாங்கப் பொதுத் தேர்வை கிராமத்திலிருந்தவாறே எழுதித் தேர்ந்த பிறகும், 49 வயது வரையில் அரசாங்கப் பதவி கொடுக்கப்படாமலே இருந்தார். பின்னர் ஷாந்தோங் மாநிலத்தின் வழக்காடு மன்றத்தில் பணியாற்றிய காலத்தில், ஊழலில் ஊறிய அதிகாரிகளையும் கொடூரம் கொண்ட பணக்காரர்களையும் எதிர்த்து நின்று ஏழையெளியோருக்குப் பரிந்து பேசினார். அளவற்ற அவரது மனித நேயம் ஓவிய ஆக்கங்களில் பிரதிபலித்துள்ளது. இன்னொரு மூங்கில் ஓவியத்தில், "அலுவலகக் கட்டடத்தில் எனதறையில் நான் சரிந்து சாய்ந்திருக்கும்போது மூங்கில்களின் சரசரப்பைக் கேட்கிறேன். எளிய மக்களுக்காக அவை அழுகின்றனவோ' என்று எழுதினார். கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது அரசாங்க நெற்களஞ்சியத்தைத் தானே திறந்து பட்டினியில் வாடிய மக்களுக்கு தானியங்களைப் பகிர்ந்தளித்தார். அச்செயலுக்காக பதவி விலக்கும் செய்யப்பட்டார். "ஒதுக்குப்புறமான மலை முகடுகளில் தனிமைப்பட்டுக் கிடக்கின்றன ஆர்கிட் மலர்கள். அசைந்தாடும் மூங்கில்கள் அவற்றுக்கான நிழவை ஏற்படுத்தும். என்னுடைய இந்தப் பதவியிலிருந்து எத்தனை சிக்கீரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் விலக வேண்டும். அப்போதுதானே இலகுவான இதயத்துடன் நான் அவற்றுக்கிடையில் ஆனந்தமாகக் கிடக்க முடியும்' என்றெழுதினார்.
மூன்று அரசாட்சிகள் காலத்தில் (கி.பி. 220-280) மெங் ஜோங் என்றொரு மாணவன் இருந்தான். அவன் பெற்றோரிடம் மிகுந்த பக்தியுடையவன். கைக்குழந்தையாக இருந்தபோதே தந்தை இறந்து போனதால் தாய் மட்டுமே இருந்தாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத நோய் தாய்க்கு வந்தது. குறிப்பிட்ட மூங்கில் குறுத்தை சூப் வைத்து அருந்தத் தரச் சொன்னார் மருத்துவர். பனிக்காலத்தில் அந்த மூங்கிலைக் காண்பது மிகக் கடினம். மெங் ஜோங் மனமொடிந்து போனான். தாயைக் காப்பாற்ற மனமுருகிக் கண்ணீர் வடித்து வேண்டினான். இறையருளால் பல மூங்கில் குறுத்துகள் நிலத்தைப் பிளந்து வெளிக் கிளம்பின. அதையெடுத்து அவன் செய்து தந்த சூப்பைப் பருகிய அன்னை குணமாகி உயிர்பிழைத்தாள். அந்த மாணவனது தாய்ப்பாசம் குறித்த செய்தி தேசமெங்கும் பரவியது. மெங் ஜோங் என்ற அவனது பெயரையே அவ்வகை மூங்கிலுக்குக் கொடுத்து கௌரவித்தனர்.
"1990-களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மூங்கில் விளாறுகள் கன்ப்ஃயூஷியத் தைப் பார்க்கும் பார்வையையே மாற்றியுள்ளது' என்று, சீனாவின் சமூக விஞ்ஞானக் கூடத்தின் பாங் பூ என்ற மூத்த ஆய்வாளர் முடிவுகளை வெளிட்டபோது சொல்லியிருக்கிறார்.
1993-ல் 800-க்கும் அதிகமான மூங்கில் கீற்றுகள் மத்திய சீனத்தின் ஹூபேய் மாநிலத்தில் குவாதியான் என்ற இடத்தில் அகழ்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் 13,000 சித்திர எழுத்துகள் இருந்தன. ஆராய்ந்தறிந்தவர்கள் 1995-ல் இவற்றைப் பதிப்பித்தபோது மொழியியல் அறிஞர்களிடையே மாபெரும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. பெரிய அளவில் சீனக் கலாசாரத்தைக் கட்டமைத்த கன்ஃப்யூஷியத்தின் தொடக்க காலம் பற்றிய பல புரிதல்கள் கிடைத்துள்ளன. தொடக்கத்தில் இக்கோட்பாடு மிகவும் புனிதமாகவும் எளிமையாகவும்தான் இருந்திருக் கிறது. பிற்காலங்களில் அரசாட்சிகள் தத்தமது அரசியலுக்கேற்ப வளைத்ததில் மிகவும் கடினப்பட்டிருக்கிறது.
சீனத்தில் முற்கால ஷெங், குவான், குழல், லியாவ் உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து இசைக் கருவிகளுமே மூங்கிலால் செய்யப் பட்டவை. "பட்டும் மூங்கிலும்' என்றொரு இசைக்கருவி இருக்கிறது. மூங்கில் குழல் பிரபலமானது வாரிங் காலம் (கி.மு.475-221) என்று நிர்ணயிக்கப்பட்டாலும் முதன்முதலில் 7000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய ஹுபேய் மாநிலத்தின் அன்றைய ஹெம்டு என்ற குலத்தில் குழல் உருவாகியிருக்கிறது. இரண்டரை கட்டை ஸ்ருதியில் வாசிக்கப்படும் அன்றைய குழலில், ஊதுவதற்கு ஒரேயொரு துளையும் விரல்களுக்கான ஆறு துளைகளும் இருந்தன.
மிங் காலத்தின் (1368-1644) இறுதியிலும் ச்சிங் காலத் தொடக்கத்திலும் (1644-1911) மேடை இசை நாடகங்கள் தோன்றிச் செழித்து வளர்ந்தன. அன்று முதலே பல்வேறு நாடகங்களில் பக்க வாத்தியமாக டிஜி என்ற மூங்கிலாலான குழல் வாத்தியம் பயன்படுத்தப்பட்டது.
முதன்முதலில் ஸோங் முடியாட்சியைச் சேர்ந்த அரிய கவிஞரும் எழுத்தாளருமான ஸூ தோங்பூவின் மனைவி வாங் ஃபூ, தன் கணவருக்கு ஒரு மூங்கில் விசிறி செய்து பரிசளித்தார். அப்போதிலிருந்து மூங்கில் விசிறி பிரபலமானது. கீற்றுகளைக் கொண்டு செய்யப்பட்ட விசிறி பின்னாளில் பல்வேறு கலைநுட்பங்களை ஏற்று தொடர்ந்து மேம்பட்டது. இதில் மனிதனும் இயற்கையும் சேர்ந்திருக்கும்- நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்களே பெரும்பாலும் தீட்டப்பட்டன. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் இடம் பிடித்த இந்த விசிறி கலையாகவும் தொழிலாகவும் வளர்ந்தது.
பாமரர் முதல் பண்டிதர் வரை மூங்கிலை மிக விரும்புகிறார்கள். சமீபகாலங்களில் மூங்கில் பின்னல் மற்றும் நெசவுக்கலை முன்பைவிட செழித்தோங்கியிருக்கிறது. ச்சிங் முடியாட்சியின்போது இந்தக் கலை உருவானது. பின்னலுக்கும் நெசவுக்கும் பயன்படுகின்ற முடியைப் போன்ற மெல்லிய மூங்கில் இழைகள் பட்டு போன்ற மிருதுத் தன்மையுடையவை. ஸிஜு என்ற மூங்கில் வகையை மட்டுமே கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள். இவ்வகை மூங்கிலில் 50 கிலோகிராம் எடுத்து இழையாக்கினால் 400 கிராம் இழைகள் மட்டுமே தேறும். அதனால்தான் இவ்வகை மூங்கிலிழைகள் வெள்ளிக்கு ஒப்பானது என்பார்கள். மூங்கிலின் வயதும் முக்கியம். கணுக்கள் 80 சென்டி மீட்டருக்கு மேல் இருக்கும் மூங்கிலை மட்டுமே பயன்படுத்துவர். அத்துடன், கீற்றுகளின் அளவைக் கொண்டும் வகைப்படுத்துவர். ஒவ்வொரு கணுவும் இருபது கீற்றுக்களைக் கொடுக்கும். ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு பயனிருக்கும். செதுக்கல், தீட்டுதல், வனைதல் போன்ற பல்வேறு வகைகளையும் கலந்து புகுத்தி நாட்டுப்புறச் சித்திரங்களையும் சேர்த்து கைவினை அலங்காரப் பொருட்கள் செய்கிறார்கள்.
மூங்கில் நெசவுப் பொருட்கள் காற்றுப் புகாத ஜாடியில் பூட்டி வைத்தால் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அப்படியே இருக்கும். விறகாகவும் கூரையின் ஓடுகளாகவும் காகிதம், படகு, தொப்பி, குடை, காலணி போன்ற பல பொருட்களைச் செய்வதற்கும் மூங்கில் பயன்படுகிறது. வெடுக்கென்று கடிபடும் தன்மையும், இனிய ருசியும் கொண்ட மூங்கில் குறுத்து இன்றைக்கும் விரும்பி உண்ணப்படும் பொருள். இதில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் புரதம் ஆகிய சத்துகள் இருக்கின்றன. சமையலில் உபயோகிப்பது தவிர ஊறுகாயும் போட்டு பயன்படுத்துவர். நீண்டநாள் வெயிலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது நீரில் ஊறப்போட்டும் சமைப்பார்கள்.
உடற்சூட்டைத் தணித்து கபத்தை நீக்கும் வல்லமை மூங்கிலுக்குண்டு என்கிறார்கள் சீன மருத்துவர்கள். கபம் கூடிய நிலையில் ஏற்படும் ஆஸ்துமாவையும் மனப்பிறழ்வையும் குணப்படுத்த வல்லதாம் அதன் சாறு. மூங்கில் வேர் புத்துணர்ச்சிக்கும் தாக சாந்திக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் உதவும். சில முக்கிய நோய்களை குணப்படுத்த வல்ல ஜுஜுவாய் மற்றும் ஜுறூ ஆகிய இரண்டு மருந்துகளும் மூங்கிலில் செய்யப்படுபவை.
சிற்பிகளும் மூங்கிலை விட்டு வைப்பதில்லை. குறுக்கே இரண்டாகப் பிளந்து இரண்டிரண்டாக இருபுறமும் அடுக்கி ஒட்டி, அதன்மீது இரட்டை மகிழ்ச்சியைக் குறிக்கும் சீன ஈற்றடிகளைச் செதுக்குவர். வரவேற்பறை, வாசிப்பறை போன்ற இடங்களில் அலங்கரிக்க ஏற்ற சிற்பங்கள் இவை. உயர் ரசனையுடன் இவ்வகைச் சிற்பங்கள் உருவாக்கப் படுகின்றன.
இயற்கையாக வீடு கட்ட மனிதனுக்குக் கிடைத்த பொருட்களுள் மூங்கில்தான் மிகமிக உறுதியானது. ஸிஷுவாங்பன்னா என்ற இடத்தில்தான் மூங்கில் வீடுகள் நிறைய இருக்கின்றன. 1000 ஆண்டு வரலாறு இவற்றுக்குண்டு. பெரும்பாலும் சதுர வடிவத் தரைத் தளம் அமைத்து மூங்கில் வீடுகளைக் கட்டுகிறார்கள். இரண்டு தளங்கள் கொண்ட இவ்வீடு இருபது மரக் கம்புகள் தாங்கிப் பிடிக்க, தரையிலிருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் இருக்கும். மேல் தளத்தில் வசிப்பார்கள். கீழே கால்நடைகளைக் கட்டவும், தட்டுமுட்டு சாமான்களை வைக்கவும் பயன்படுத்துவார்கள். கூம்பு வடிவில் இருக்கும் கூரை வைக்கோல் மற்றும் ஓடுகளால் கட்டப்பட்டிருக்கும்.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் இயற்கைக்குத் திரும்பும் செயல்கள் இயக்கங்களாகவே உருவாகிப் பரவுகின்றன. செயற்கை இழைகளால் ஆன பொருட்களைப் போலல்லாமல் மூங்கில் கூடைகள் மக்கக் கூடியவை. இன்றைக்கு இக்கூடைகள்மீது முன்பைவிட அதிக ஆர்வம் வந்துள்ளது. வென்ஜோவ், ஷாங்காய் போன்ற ஊர்களில் ப்ளாஸ்டிக் பைகளை வெறுத்தொதுக்கும் பழக்கம் முன்பைவிட அதிகரித்து வருகிறது. மரங்களையும் பண்டாக் கரடிகளையும் ஒருங்கே காக்க மூங்கில் வளர்ப்பதை அதிகப்படுத்துவது உதவும் என்று நம்பும் இவர்களில் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே கூடையுடன் கிளம்புவோர் அதிகரித்துள்ளனர்.
எல்லாரையும் கவரும் அழகிய பண்டாக் கரடிக்குப் பிடித்த உணவு மூங்கில் இலைகள். இந்தக் கரடி சீனத்தைப் பிரதிபலிக்கும் சின்னமாகவும் விளங்கும். மற்ற செடிமர வகைகளை ஒப்பு நோக்க மூங்கில் 60-லிருந்து 80 வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கிறது. பூத்ததுமே மடிந்தும் போகிறது. விதைகள் முளைத்தெழ 10 அல்லது 30 ஆண்டுகளாகும். கடந்த மூன்று மில்லியன் ஆண்டுகளில் சுமார் 50,000 முறை மூங்கில்கள் பூத்திருக்கின்றன. பல்லாண்டு காலமாக பண்டாக் கரடிகள் இடம் பெயர்ந்து வாழ்ந்தன. அதன் மூலம் தமக்கான உணவைக் கண்டடைந்து உயிரோடிருக்க முயன்றன. முன்பெல்லாம் அது நல்லதொரு தீர்வாகவும் இருந்து வந்தது. ஆனால் மூங்கில் காடுகள் குறைந்தழியும் இன்றைய நிலையில் இடப்பெயர்வுகள் சரியான தீர்வாக இருப்பதில்லை. கடந்த இரண்டு முறை மூங்கில் பூத்தபோதும் 250 பண்டாக் கரடிகள் வரை பட்டினியால் மடிந்தன.
நன்றி:இனிய உதயம்[ஜெயந்திசங்கர்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக