bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 24 ஆகஸ்ட், 2011

அமெரிக கனவு


பூலோகத்தின் சொர்கத்தில் இன்றைய தேதியில் இரண்டரை கோடி பேர்களுக்கும் மேல் வேலையில்லாமல் அலைகிறார்கள். சுமார் ஒரு கோடி வீடுகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. 14.3 % மக்கள் வறுமையில் வாடுவதாக அதிகாரப்பூர்வமான கணக்கீடுகளே தெரிவிக்கின்றன; அதாவது ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் 2,573 குழந்தைகள் சோற்றுக்கு வழியற்ற ஏழைக் குடும்பங்களில் பிறக்கின்றன. மாணவர்களின் கல்விக்கடன் 40 லட்சம் கோடிகள், நுகர்வோர் கடன் நூறு லட்சம் கோடிகள், கடன் அட்டை வைத்திருப்போரின் கடன் அளவு 800 பில்லியன் – ஆக மொத்தம் தமது அன்றாடத் தேவைகளைக் கூட கடன் வாங்கித் தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற நிலையில் சுமார் 25 கோடி பேர் வாழ்கிறார்கள்.
இப்படி சகல பிரிவு மக்களும் ‘இன்பமயமான’ வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த சொர்க்க பூமியில் பிரதி வருடம் சுமார் நாற்பது லட்சம் கோடிகள் மட்டும் தான் இராணுவத்திற்காக செலவிடப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் 0.076 சதவீதம் பேரின் கையில் மட்டுமே ஆயிரத்து எண்ணூத்தி நாற்பது லட்சம் கோடியளவிலான செல்வம் குவிந்துள்ளது.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தின் பெயர் – அமெரிக்கா.
டபிள் டிப் டிப்ரஷன் - திவால் ஆனது அமெரிக்கா மட்டும்தானா
ஒவ்வொரு தொழிற்சாலையாய் அக்கு அக்காய் பிரித்து சீனத்துக்குக் கப்பலில் அனுப்பிய நிலையில் இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்து நிற்கும் அதே நேரத்தில், பெரும் நிறுவனங்களின் சி.இ.ஓக்களின் சம்பளம் 30% அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டின் முதல் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் 31 சதவீதத்தை லாப வளர்ச்சி விகிதமாகக் காட்டி அதே 31 சதவீத அளவுக்கு வரி விலக்குப் பெற்றுள்ளன. இன்றைய தேதியில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை (14.34 Trillion) விட அதனுடைய கடனின் (14.6 Trillion) அளவு அதிகம். அமெரிக்கா செலவிடும் ஒவ்வொரு டாலரிலும் 40 சென்ட் கடன் தொகையாக இருக்கிறது.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?இன்று மொத்த நாடே கடன்காரனாய் உலக அரங்கில் நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  அமெரிக்க அரசின் கடன் பெரும் தகுதியை (credit worthiness) S&P எனும் தரநிர்ணய நிறுவனம் குறைத்துள்ளது. அமெரிக்கா போண்டியாகி நிற்பது உலக முதலாளித்துவ கட்டமைவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள முதலாளித்துவ பத்திரிகைகள் அச்சத்தில் அலறுகின்றன. பல நாட்டுத் தலைவர்களும் தமது தூக்கத்தைத் தொலைத்து வால் ஸ்ட்ரீட்டை அவதானித்து வருகிறார்கள். அவர்களின் இதயத் துடிப்பு, டோவ் ஜோன்ஸின் குறியீடுகள் எழுந்தால் எழுகிறது – விழுந்தால் விழுகிறது.
இன்றைய இந்தப் பொருளாதார நிலை டபுள் டிப் ரெஷசன் – அதாவது இரண்டாம் பொருளாதார நெருக்கடி – என்று முதலாளித்துவ உலகத்தால் சொல்லப்பட்டாலும், இது 2008-ல் துவங்கிய சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சி தான். இன்னும் சொல்லப் போனால், மூன்றாண்டுகளுக்கு முன் உலகை ஆட்டிப்படைத்த சர்வதேச பொருளாதார நெருக்கடி இன்னும் முடிந்து விடவில்லை என்பதே எதார்த்த உண்மை. இன்றைய அமெரிக்க ஓட்டாண்டித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் 2008-லிருந்து உலகைப் பீடித்து ஆட்டி வரும் பொருளாதார நெருக்கடியையும், தவிர்க்கவியலாமல் அதனை உண்டாக்கிய முதலாளித்துவ கட்டமைப்பின் உள்முரண்பாடுகளையும் புரிந்து கொள்ளவது அவசியம்.
குதியற்றவர்களுக்கு வீட்டுக் கடன் கொடுத்தோம். அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை எனவே நாங்கள் திவாலாகி விட்டோம்’. ஃப்ரெடி மேக் மற்றும்  ஃபான்னி மே ஆகிய நிதிமூலதன வங்கிகள் மண்ணக் கவ்வியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஒவ்வொரு வங்கியாக திவாலாகத் துவங்கிய போது இவ்வாறு தான் சொன்னார்கள். ‘சந்தை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்’ ( market will heal itself) எனவே அரசுகள் பொருளாதாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கவேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் சொன்ன பொருளாதாரக் கோட்பாடுகளையெல்லாம் தூக்கி உடைப்பில் போட்டு விட்டு அரசுக்குக்கு கருணை மனு போட்டு வரிசையில் நின்றார்கள்.
அமெரிக்க நிதிமூலதன நிறுவனங்களை மீட்க பல்வேறு தவணைகளாக அவ்வரசு அழுத மொத்த தொகை மட்டும் சுமார் 8.5 ட்ரில்லியன் டாலர்கள் – 8500000000000$ அல்லது சுமார் 340 லட்சம் கோடி ரூபாய்கள். முதலாளித்துவத்தை படுகுழியில் இருந்து மீட்பதற்காக பாய்ச்சப்பட்ட இந்த பிரம்மாண்டமான தொகை எதார்த்தத்தில் சாதித்தது என்னவென்பதைப் பற்றியும், இன்று தனது கடன்பெறும் தகுதியை அமெரிக்கா இழந்து நிற்பதற்கான காரணங்களையும் பற்றி பார்க்கும் முன், பெருமந்தத்திற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் பற்றி சுருக்கமாகக் கவனிப்போம். விரிவான தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளது.
என்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகள் துவக்கத்திலும் நாஃப்தா (NAFTA) ஒப்பந்தம் அமுலுக்கு வந்த போது மெக்சிகோவுக்கும், பின்னர் தொண்ணூறுகளின் இறுதியில் சீனத்துடன் பொருளாதார உறவுகள் சீரடைந்த போது சீனத்துக்கும், தொடர்ந்து சில லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை மாற்றிக் கொண்டன. அமெரிக்காவில் ப்ளூ காலர் வொர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் சம்பளம் மற்றும் இன்னபிற சலுகைகளை ஒப்பிடும் போது இந்த மூன்றாம் உலக நாடுகளின் உழைப்புச் சக்தி மிகவும் மலிவானது என்பதும் லாபம் அதிகம் என்பதும் இதற்கான முதன்மையான காரணங்களாக இருந்தன.
இப்படி, படிப்படியாக வெவ்வேறு துறைகளின் உற்பத்தி அலகுகள் மாற்றப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த இடத்தில் முதலாளித்துவ ஆதரவாளர்கள் இதை வேறு வகையில் நியாயப்படுத்தக்கூடும். அதாவது, ‘ இப்படிப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவு தான் இந்தியாவில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படவும் பலருக்கு வேலை கிடைக்கவும் காரணமாக இருந்துள்ளன’ என்பது அவர்களது வாதமாக இருக்கும். ஆனால் இது ஒரு பொய்த்தோற்றம்தான், உண்மையோ நேர்மாறானது.
புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை உலகை ஒரு பெரும் சங்கிலியால் இணைத்துள்ளது. மூலதனம் தனது தேசிய அடையாளத்தை இழந்து தேச எல்லைகளைக் கடந்து பரவி நிற்கிறது. உலகம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்கும் இப்பொருளாதாரச் சங்கியிலியின் தலைக் கண்ணியாக இருக்கும் அமெரிக்காவின் பங்கு என்பது, பிற நாடுகளில் உற்பத்தி செய்வதை வெறுமனே நுகர்வது மட்டும் தான். அதாவது, உலகப் பொருளாதாரமே மெல்ல மெல்ல அமெரிக்க நுகர்வுக்கான ஏற்றுமதி சார் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, அமெரிக்க நுகர்வில் பங்கம் ஏற்பட்டால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியும், உழைப்புச் சக்திகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவிலோ உள்நாட்டு வேலைகள் மெல்ல மெல்ல அருகி, ஒரு கட்டத்தில் பலரும் வேலையிழந்து தமது அன்றாடத் தேவைகளுக்குக் கூட கடன்களையே சார்ந்திருக்கச் செய்கிறது. இது ஒருபக்கம் இருக்க, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னிருந்தே நுகர்வுக் கலாச்சாரம் அமெரிக்க சமூகத்தில் மிக வலுவாகவும் கவனமாகவும் முதலாளித்துவத்தால் புகுத்தப்பட்டது. கடன் வாங்கியாவது பொருட்களை நுகரும் ஒரு சமுதாயமாக அமெரிக்கா மாற்றியமைக்கப்பட்டது.
2008-ல் பொருளாதார நெருக்கடியைத் துவக்கி வைத்த ரியல் எஸ்டேட் குமிழியின் வெடிப்புக்கான காரணமும் இதில் தான் ஒளிந்து கிடக்கிறது. நடுத்தர வர்க்கத்தை விடாமல் துரத்தி அவர்கள் தலையில் வீடுகளைத் திணித்தன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் மத்தியிலும் அமெரிக்காவில் வீடுகள் வாங்கியோரில் பெரும் சதவீதத்தினர் வீடு வேண்டும் என்று வங்கிகளை அணுகியவர்கள் அல்ல. நமது ஊரில் கடன் அட்டைக்காக தொலைபேசியில் தொடர்ந்து நச்சரிப்பதைப் போல அங்கே வீடுகளை வாங்கச் சொல்லி பல்வேறு வகைகளில் ஆசை வார்த்தைகள் காட்டியுள்ளனர்.
இப்படி இவர்கள் தெரிந்தே தான் அனைவருக்கும் கடன் கொடுத்துள்ளனர். இந்தக் கடன்களின் மேல் இருக்கும் நம்பகமற்ற தன்மையை (Risk factor) தவிர்த்துக் கொள்ள அவர்கள் வால் ஸ்ட்ரீட்டை அணுகினர்.  உதாரணமாக, ஒரு வீட்டின் உண்மையான மதிப்பு ஒருலட்சம் என்றால், அதற்குக் கொடுக்கப்பட்ட கடன் பத்திரத்தை சர்வதேச பங்குச் சந்தையில் ஊக பேர சூதாட்டத்தில் சுற்றுக்கு விட்டனர். பல்வேறு கைகள் மாறி மாறி அப்பத்திரங்களின் மதிப்பு நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில், வீடுகளை வாங்கியவர்கள் கட்டமுடியாமல் திரும்ப ஒப்படைக்கிறார்கள். இவ்வாறு foreclosure செய்யப்பட்ட வீடுகளின் தவணைத் தொகையையும் கூட கந்து வட்டிக்காரன் போல் விடாமல் துரத்தி வசூலித்தன வங்கிகள். பலரும் திவால் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் – மேலும் ஒழுங்காக தவணை கட்டிக் கொண்டிருந்த பலரும் வருமானம் குறைந்து கட்டமுடியாத சூழலில் வீடுகளைத் திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டவுடன், இந்த மாயக் குமிழி மொத்தமும் வெடித்துச் சிதறுகிறது.
இதற்குள், இந்தச் சூதாட்டப் பணம் பல நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாய்ந்திருந்தது. தமது அஸ்திவாரம் ஆட்டம் கண்டதும் வெளியே சுழன்று கொண்டிருந்த பணத்தை ஒன்று பதுக்கினார்கள் அல்லது உள்ளிழுத்துக் கொண்டார்கள். இதனால் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட நடுக்கம், உலகெங்கும் அதிர்வலைகளை அனுப்பியது. இந்தியா சீனா ஐரோப்பா ஜப்பான் என்று ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக அனைத்து பங்குச் சந்தைகளின் குறியீடுகளும் படுபாதாளத்தில் வீழ்ந்தன. ரியல் எஸ்டேட் மட்டுமல்லாது, கட்டுமானப் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், உணவுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டங்களின் விளைவாய் உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளில் புழங்கும் பணத்தில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. அதாவது இந்த வர்த்தக சூதாட்டம் உண்மைப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தில் நடைபெறவில்லை.
அமெரிக்காவின் உள்நாட்டுச் சந்தை கவிழ்ந்து கிடக்கும் நிலையில் அதற்கான ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களின் தேக்கமும் அதைத் தொடர்ந்து இங்கே சம்பளக் குறைப்பு ஆட்குறைப்பு என்று ஒரு பக்கம் அடிவிழுகிறது என்றால், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையே பிரம்மாண்டமான சூதாட்டச் சந்தையாக மாற்றப்பட்டதால் ஊக பேர வணிகத்தில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களைக் கவ்வுகிறது.
இது வெறுமனே முதலாளித்துவ உலகின் ஒரு நெருக்கடியல்ல; இது முதலாளித்துவ கட்டமைவின் நெருக்கடி. முதலாளித்துவ உற்பத்தியின் மிக அடிப்படை நோக்கமே மூலதனத் திரட்சி தான். இந்த மூலதனத் திரட்சிக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. தொழிலாளிகளைச் சுரண்டுவது, கூலியைக் குறைப்பது என்பதெல்லாம் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்தே எழுகிறது. அதனால் தான், தமது ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றினர். ஆலைகள் செல்லும் நாடுகளில் உள்ள உழைப்புச் சுரண்டல் காரணமாகவும், உள்நாட்டில் ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வேலையின்மையும் உற்பத்திப் பண்டங்களின் நுகர்வைத் தடுக்கிறது. அதாவது செல்வம் முதலாளித்து வர்க்கத்திடம் குவிய குவிய பிற மக்கள் தொடர்ந்து தங்களது வருமானத்தை இழந்து வருகிறார்கள். இது முதலாளித்துவ கட்டமைப்பின் ஒரு அடிப்படை முரண்பாடு.
இந்த அடிப்படையான முரண்பாட்டின் விளைவு தான், அமெரிக்கச் சந்தையின் சரிவு திருப்பூர் பனியன் தொழிலாளி வரையில் பாதிப்பை உண்டாக்குகிறது.
மூலதனத் திரட்சி என்பது ஒரு கட்டத்தில் உற்பத்தி – நுகர்வு என்கிற வட்டத்தின் சுழற்சியால் மட்டுமே நிகழ்வதில் சிக்கல்  ஏற்படும் போது முதலாளித்துவம் தவிர்க்கவியலாமல் ஊக பேர வர்த்தகத்தைச் சரணடைகிறது. ஒரு பண்டத்தின் உண்மையான மதிப்பை விட பல ஆயிரம் மடங்கு அதன் மதிப்பு மிகையாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டு நடக்கும் அந்தச் சூதாட்டக் குமிழ் ஒரு கட்டத்தில் வெடித்தே ஆகவேண்டியுள்ளது. சப் ப்ரைம் நெருக்கடி என்று சொல்லப்பட்ட சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இதற்கான ஒரு துலக்கமான சான்றாக நம்முன் நிற்கிறது.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?தமது சூதாட்டத்தைத் தொடரமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு நின்ற நிதிமூலதனச் சூதாடிகளைக் கைதூக்கி விட முதலில் 35 லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுத்தார் புஷ். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஒபாமா, பல்வேறு சந்தர்ப்பங்களில் வால் ஸ்ட்ரீட்டுக்குள் பாய்ச்சிய தொகையின் அளவு 8.5 ட்ரில்லியன் டாலர்கள். உழைக்கும் மக்களின் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட அரசாங்கம் செய்து கொடுக்கக் கூடாது என்று கட்டளையிடும் முதலாளித்துவம் அரசிடம் இருந்து ‘நிவாரணம்’ பெற கூச்சமே படவில்லை.
தாம் பெற்ற இந்த பிரம்மாண்டத் தொகையைத் தமது போட்டி நிறுவனங்களை வளைப்பதற்கும் இணைப்பதற்குமே பெருமளவு பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு முறை பெரும் தொகை சந்தைக்குள் பாய்ச்சப்படும் போதும் அது காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைந்து காணாமல் போயுள்ளது.
அமெரிக்க அரசு இவர்களுக்கு அளித்த இந்த பெரும் தொகையில் கணிசமான அளவு மக்களின் வரிப்பணம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான தொகையிலிருந்து வெட்டப்பட்டது என்றாலும், பெருமளவிலான தொகை அமெரிக்கப் பொதுக் கடன்பத்திரங்களை விற்பதன் மூலமும் திரட்டப்பட்டது. சந்தையைச் சரிவிலிருந்து காப்பாற்றுவதற்கான நிவாரணத் தொகையாகச் சொல்லப்படும் இந்த 8.5 ட்ரில்லியன் டாலரில் ஒரு கணிசமான பங்கு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கப்பட்ட தொகை. இதை, அமெரிக்க அரசு மக்கள் மேல் விதிக்கும் வரிவருவாயிலிருந்தோ அல்லது கடன் பத்திரங்களை விற்பதன் மூலமோ திரட்டி வங்கிகளுக்கு அடைக்க வேண்டும்.
கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? வங்கித் துறையின் சரிவைக் காக்க வங்கிகளிடமிருந்தே பணம் பெறப்பட்டு அதை அடைக்க மக்களின் தலைமேல் கை வைப்பதோடு மட்டுமே இந்த முதலாளித்துவ அராஜகங்கள் முடிவுறவில்லை.
அமெரிக்காவில் டாலரை அச்சிடும் பொறுப்பை 12 பெடரல் ரிசர்வ் வங்கிகள் தான் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் 12 பெடரல் ரிசர்வ் வங்கிகளும் தனியாருக்கே சொந்தமானது. இதில் பங்குதாரர்களாக இருக்கும் நிதிமூலதன கும்பல் தான் அமெரிக்காவின் பணக் கொள்கைகளைத் (Monetory policies) தீர்மானிக்கின்றனர். மேலும், கணிசமான அளவுக்குக்  கடன்பத்திரங்களைத் தாமே ரிசர்வில் வைத்திருக்கின்றனர். அவற்றை வெளிச்சந்தையில் விநியோகிப்பதும் இதே தனியார் நிதிமூலதன வங்கிகள் தான். எனவே, எதார்த்தத்தில் அமெரிக்க அரசு கடன்பத்திரங்கள் மூலம் திரட்டும் தொகையையும் தனியார் வங்கிகள் தான் தீர்மானிக்கின்றன.
இது ஒரு விசித்திரமான சுழற்சி. அதாவது, அமெரிக்கக் கருவூலத்திற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன; அப்படி வாங்கிய கடனைக் கொண்டு வங்கிகளுக்குக் கடன் கொடுத்து பெயில் அவுட் செய்யப்படுகின்றது. இதில் கடன் வாங்கியது யார் கொடுத்தது யார்?
இது ஒரு புறம் இருக்க, அமெரிக்க அரசு வெளியிடும் அரசுப் பொதுக்கடன் பத்திரங்களின் ‘கடன்பெறும் தகுதியை’ (credit worthiness) S&P, Moody’s, Fitch போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் நிர்ணயம் செய்வதும்  இதே நிதிமூலதன வங்கிகள் தான்.
இது இவ்வாறு இருக்க, கடந்த வாரங்களில் சர்வதேச நாணய நிதியம் IMF தனது கடன் கொள்கைகளைத் திருத்தி அமைத்துள்ளதாகச் செய்தி வந்தது. அதன் படி, பொருளாதார சீர்குலைவுகளைச் சரிசெய்ய ஜி-20 நாடுகள் எனப்படும் வளர்முக நாடுகள் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. உடனே, தனது தலையங்கத்தில் இதைக் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைந்த தினமணி, அமெரிக்காவுக்கே கடன் கொடுக்கும் நிலைக்கு புனித பாரதம்  உயர்ந்து விட்டதாக சொறிந்து கொண்டது.
ஆனால், எதார்த்தம் என்னவென்பதை ஐ.எம்.எஃப் மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “சர்வதேசப் பொருளாதார கட்டமைப்பில் ஏற்படும் திடீர் குழப்பங்களைக் களைந்து கொள்ளும் முகமாகவும் சர்வதேசப் பொருளாதாரத்தின் சமன்பாட்டை நிலைநாட்டவும்” இந்நாடுகளிடம் இருந்து இப்போதைக்கு 500 பில்லியன் டாலர்  அளவுக்கு நிதி திரட்டும் திட்டம் இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், எப்போதெல்லாம் சர்வதேச அளவில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆன்மாவாக இருக்கும் நிதிமூலதன சூதாட்ட கும்பல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா போன்ற ஏழை நாடுகள் தண்டம் அழ வேண்டும் என்பதே.
ஏற்கனவே அமெரிக்கா தனது மக்களின் ஓய்வூதியம், சேமிப்பு என்று சகலத்தையும் வால் ஸ்ட்ரீட்டை நோக்கித் திருப்பி விட்டுள்ளது; அதுவும் போதாமல் தனது கடன்பத்திரங்களையும் விற்று படையல் வைத்துள்ளது. இப்போது, அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் இறக்கப்பட்டுள்ளதால், ‘சர்வதேச பொருளாதாரத்தை’ காக்கும் வேலை ஏழை நாடுகளின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா ஒழுங்காக மாமூல் வந்து சேர்கிறதா என்று பார்த்துக் கொள்ளும் சண்டியர் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும்.
ஆக, இப்போது தரமிறக்கப்பட்டுள்ளதும் கூட அமெரிக்காவுக்கு பல்வேறு வகைகளில் சாதகமானது தான்.  இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அன்னியச் செலாவணியாக தேங்கிக் கிடக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை சூதாட்டச் சந்தைக்கு இழுத்து வந்து சுழற்சிக்கு விடும் வேலையை ஐ.எம்.எஃப் கவனித்துக் கொள்ளும். முரண்டு பிடிக்கும் நாடுகள் என்று எதாவது இருந்தால் அதை அமெரிக்க இராணுவம் கவனித்துக் கொள்ளும்.
நிதி மூலதனம் என்பது ஏற்கனவே தேச எல்லைகளையும் அடையாளங்களையும் கடந்து உலகம் முழுவதும் விரவி நிற்கிறது. நவீன தொலைத் தொடர்பு, மற்றும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட இவர்களின் வலைப் பின்னலின் இயக்கம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டதொன்று. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் பெரும் மூலதனத்தை ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்குக் கடத்துவதும், ஒரு சூதாட்டத்திலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுவதும் தடையின்றி நடக்கிறது. முன்பொருமுறை சிதம்பரம் மும்பைப் பங்குச்சந்தையில் தங்குதடையின்றி இறங்கும் அந்நிய மூலதனத்தைக் கட்டுப்படுத்திக் கண்காணிப்பது குறித்து லேசாக முணுமுணுத்ததற்கே சென்செக்ஸ் குறியீட்டை ஐந்தாயிரம் புள்ளிகள் இறக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். உடனே அவர் தனது கருத்தை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவின் கடன் இப்போது அதிகரித்து தான் உள்ளது. ஆனால், அமெரிக்காவின் கடனை அடைப்பது என்பது அவர்களிடம் இருக்கும் அச்சடிக்கும் இயந்திரம் எத்தனை வேகமாக டாலரை அச்சிடுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கும் என்கிற நிலையில், அந்த டாலரின் மதிப்பை நிலைநாட்டும் இராணுவ வலிமையும் அரசியல் வலிமையும் அதற்கு இன்னமும் இருக்கும் எதார்த்தமான் சூழ்நிலையில் S&Pஇன் அறிவிப்பிற்கான மெய்யான பொருள் வேறு.  இந்தச் சூதாட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பொத்தாம் பொதுவாக பொருளாதார நெருக்கடி என்று சொல்வதும், அதனைத் தீர்க்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்று சொல்லி நட்டத்தை நமது தலையில் கட்டுவதும் தான் இப்போது அமெரிக்காவின் ‘கடன் நெருக்கடி’ நாடகங்கள் அவர்களுக்குப் பயன்படுகிறது
அமெரிக்காவின் இரண்டாவது பொருளாதார நெருக்கடி சுட்டிக் காட்டும் விசயங்கள் இரண்டு. ஒன்று உலகாளவிய முதலாளித்துவ பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்பது தற்போது வேறு வழியில்லாமல் வெளியே வருகிறது. அதுவும் வெறும் செய்தியாக இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைய பாதிக்கும் நடவடிக்கைகளோடு வருகிறது. இந்த நெருக்கடியின் ஊற்று மூலம் ஊக வணிகம் மூலம்தான் இலாபம் ஈட்ட முடியும் என்ற பகாசுர வெறி மற்றும் இழிவு நிலையில்தான் முதலாளித்துவம் வாழ முடியும் என்பது. இரண்டாவது இந்த நெருக்கடிக்கு காரணமாட முதலாளித்துவ நிறுவனங்களை தண்டிப்பதற்கு பதில் அந்த நெருக்கடியும் சுமையும் மூன்றாம் உலக நாடுகளின் மேல் தள்ளி விடப்படுகின்றன.
ஆகவே முதலாளித்துவத்திற்கு மரணக்குழி பறிக்காமல் உலக மக்கள் நிம்மதியான வாழ்வை வாழ முடியாது. அந்த வகையில் உலக முதலாளித்துவ கட்டமைப்பு தோற்றுவித்திருக்கும் இந்த அபாயத்தை உலக மக்கள் போராடுவதன் மூலமே வெல்ல முடியும். இன்று கிரீசிலும், இலண்டனிலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தொடரும் அந்த போராட்டங்கள் சரியான அரசியல் தலைமைக்காக காத்திருக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...