bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 2 அக்டோபர், 2018

இந்தியா உருவான விதம் …-1.

"ஷிரீன் மூஸ்வி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியராவார். 2016டிசம்பர் 28-30-ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்று மாநாட்டின் 77வது அமர்வில் பேராசிரியர் ஷிரீன் மூஸ்வி ஆற்றிய தலைமை உரையிலிருந்து…"
கலாச்சாரப் பண்புக்கூறுகளிலும், புவியியல் எல்லைகளிலும் அமையும் சில ஒத்ததன்மைகள் ஒரு ‘நாடு’எனும் கருத்து தோன்றுவதற்கு அடிப்படையான முன்நிபந்தனைகள் என்பது கேள்விக்கிடமில்லாமல் நிறுவப்பட்ட ஒன்று எனக் கொள்ளலாம்.
மொழிகளும், அரச ஆதரவும்:
தற்போது உலகிலிருக்கும் மொழிகளின் நிலையைப் பார்க்கும்போது, தனித்தனி சமூகங்களாக வாழ்ந்துவந்த ஆதிமனிதர்களின் மத்தியில் பேசப்பட்டுவந்த மொழிகளின் எண்ணிக்கை, இன்னமும்கூட அதிகமாக இருக்குமென்பதையும், மேலும் அவையும் கூட எண்ணற்ற தனித்தனி மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவையாக இருக்கும் என்றுமே காட்டுகிறது.1

சரக்குப் பரிவர்த்தனை மூலமாகவும், ஒற்றைஆதிக்க அதிகாரத்தின் கீழ் பல்வேறு சமூகங்கள் உட்கிரகித்துக் கொள்ளப்படுவதன் மூலமாகவும், மனிதர்களுக்கிடையிலான ஊடாடல்கள் ஒன்றுடன் ஒன்று வளர்ச்சியடையும்பொழுது மொழிகளின் எண்ணிக்கை குறுகத் துவங்கியது. விவசாயம் தோன்றியதன் விளைவாக உபரி உற்பத்தி செய்யப்பட்ட புதிய கற்காலப் புரட்சியின் காரணமாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். வேளாண் சமூகங்கள் தனித்தனியாகவே வாழமுற்பட்டதானது; கிராமப்புற உபரியை உறிஞ்சுவதை பகுதியளவு சார்ந்திருந்த, நகரங்களும் அரசுகளும், படிப்படியான பரிணாமத்தின் வழியே, ஏக காலத்தில் தோற்றம் பெறத்தொடங்கியது வரையிலுமேயாகும். அதன் பின்னர், பேச்சு அல்லது இலக்கிய மொழிகளின் நிலப்பரப்பும் விரிவடையத் தொடங்கியது. இது பெரும்பாலும் அரசு ஆதரவின் காரணமாகவே நடந்ததென்பதை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் ஆப்கனிஸ்தான் உள்ளிட்டு, மேற்காசியா முழுவதும் அரமேய்க் (Aramaic) (அங்கு பேசப்பட்டு வந்த பொதுமொழி)  மொழி பயன்படுத்தப்பட்டு வந்ததிலிருந்து காணமுடியும்.
சிந்துவெளி நாகரீகத்தின் பரவல் :
இந்திய துணைக்கண்டத்தில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியை “நகரப் புரட்சியின்” காலமென்று குறிப்பிடலாம். ஒரு விரிந்து பரந்த நிலப்பரப்பில் நன்கு வரையறுக்கப்பட்ட நகரங்களுடனும், பொதுவான அம்சங்களுடனும் “சிந்து சமவெளி நாகரிகம்” தோன்றியது. ஒத்த வடிவங்களில் அமைந்த கட்டிடங்கள் (நேர்வீதிகள், வடிகால்கள், கோட்டைகள்) மட்டுமல்லாமல் ஒரே விதமான நிறுத்தல், நீட்டல் அளவைகள், தரப்படுத்தப்பட்ட அளவு கொண்ட சுட்ட செங்கல்கள். சீரான எழுத்து வடிவங்கள் (குறைந்தபட்சம் மேல்குடியினர் பயன்படுத்தியிருக்கக்கூடிய ஒற்றை மொழியை இது சுட்டுகிறது), முத்திரைகள், விலங்கு உருவ தெய்வங்கள் ஆகியவற்றுடன் தொல்லியல் ஆய்வாளர்களுக்குப் பிடித்தமான குறிப்பான்கள், அதாவது,  ஒத்த வடிவிலான மண்பாண்டங்கள் போன்றவையும் அவற்றில் உள்ளடங்கும். ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், (இப்படியான) ஒத்த தன்மைகள் தட்டுப்படுகின்ற பரப்பு: பஞ்சாபின் பெரும்பகுதி, சிந்து, குஜராத், வடக்கு ராஜஸ்தான், ஹரியானா ஆகியவை முழுவதும்- பிளவுபடாத இந்தியாவின் பரப்பளவான  4,14,770 சதுர கிலோமீட்டருடன் ஒப்பிடும்பொழுது-சுமார் 70,000 ச.கி.மீட்டர் வருகிறது.
ஒரு பலம் வாய்ந்த அரசின் ஆதரவில்லாமல்அதுவும் குறிப்பாகஅதன் தொடக்க காலகட்டத்தில்இந்தத் தனித்துவமான வடிவங்களை அவ்வளவு பரந்தவெளியில் எவ்வாறு எட்டியிருக்கமுடியும் என்பதைக் கற்பனை செய்வது கடினம்.
சிந்துவெளி நாகரீகச் சிதைவு:
ஒத்த வகையான மதநம்பிக்கைகள், சடங்குகள் எங்கும் பரவியிருந்ததையும் சிந்து சமவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் கருத்துக் குறியீட்டு வரிவடிவங்கள், உருவங்கள் ஆகியவற்றிலிருந்து ஊகித்தறிந்து கொள்ள முடியும். கெடுவாய்ப்பாக, அந்த மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது ஒரு பக்கமிருக்கட்டும், அதன் எழுத்து வடிவத்தையே நம்மால் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இருப்பினும், சிந்துவெளி நாகரிக நிலப்பரப்பில் இவ்வளவும் பொதுவான பண்புக்கூறுகளைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்துவந்த மக்கள், மற்ற பகுதிகளையும், மற்ற கலாச்சாரங்களையும் சார்ந்த மக்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரே இன மக்களாக தம்மை கருதிக் கொண்டார்களா என்ற சந்தேகம் ஒருவருக்கு எழலாம்.  அவர்களுடைய நிலப்பகுதிக்கு மெஸபெடோமியர்கள் “மெலூஹா” என்று பெயரிட்டிருந்தார்கள் என்பதை வைத்து  குறைந்தபட்சம் வெளிப்புறத்தவர் மத்தியில் அத்தகைய ஒரு அங்கீகாரம் இருந்திருக்கிறது என புரிந்துகொள்ளலாம்.2
கி.மு. 1900-ல் சிந்துவெளி நாகரிகம் சிதைந்தபின் பல்வேறு பிரதேசக் கலாச்சாரங்கள் பரவத் தொடங்கின.அவற்றில் எதிலும் நகரங்கள், சுட்டசெங்கற்கள், எழுத்துக்கள், போன்றவற்றைக் காணமுடியவில்லை.  இந்த எதிர்மறையான பொது அம்சத்தைத் தவிர வேறு பொதுக் கூறுகள் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அரிதாகவே தென்படுகின்றன.
குலமரபுச் சமூகத்தின் ரிக் வேதப் பாடல்கள்:
ரிக்வேதப் பாடல்கள் இயற்றப்பட்ட கலாச்சாரத்தை கி.மு. இரண்டாயிரத்தைச் சேர்ந்த எந்தவொரு குறிப்பிட்ட தொல்லியல் வகைக் கலாச்சாரத்துடனும் அடையாளப்படுத்துவது இதுவரை முடியவில்லை.
இந்தியத் துணைக்கண்டத்தின் பழமையான பதிவுகளான ரிக்வேதப் பாடல்கள் (நினைவு வழியாகவும்,  பேச்சுவழியாகவும் கடத்தப்பட்டுக் கிடைத்திருப்பவை) உயிர்ப்பலி சார்ந்த சடங்குகளுடன் தொடர்புடையதாகவும், அவற்றின் நோக்கமாக சடங்குகள் மூலமாக அடைய முற்படுகின்ற இகவுலக மானுட ஆசைகள், அபிலாசைகள்ஆகியவற்றை அப்பாடல்கள்  கையாள்கின்றன. அப்பாடல்கள், குலங்களின் ஆட்சிப் பகுதி (ராஷ்ட்ராஸ்) அல்லது, குலத்தின் அரசர்கள் (ராஜன்) (RV IV, 42.1) ஆகியவற்றைத் தாண்டி சிறிதும் அக்கறை காட்டவில்லை. குலத்திற்குள்ளிருந்த “மக்கள்” அரசர்கள்-போர்வீரர்கள் (ராஜன்யாஸ், க்ஷத்ரியாஸ்) பூசாரிகள்(பிராமணாஸ்) ஆகியோரிடமிருந்து வேறுபடுத்தித்தான் அடையாளங் காணப்பட்டார்கள். ஆரியர்களுக்கும் (உயர்குடியினர்), அவர்களுக்கு அக்கம்பக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தாகத் தோன்றுகின்ற, அவர்களுக்கு விரோதமான மக்கள் கூட்டமாகிய தஸ்யுக்களுக்கும் இடையில் கடுமையான வேறுபாடுகள் வகுக்கப்பட்டிருந்தன.
அந்தப் பாடல்களின் ஆசிரியர்களுடைய புவியியல் இருப்பிடத்தை உணர்த்தும் சிறுகுறிப்பை அளிப்பதாக, ஆறுகளைப் பெயரிட்டுக் குறிப்பிட்டிருப்பது அமைந்துள்ளன. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் வரும் நதிப்பாடல் (Nadi sukta) கங்கா, யமுனா ஆகியவற்றுடன் சிந்துப் பள்ளத்தாக்கு நதிகளையும் துல்லியமாகப் பட்டியலிடுகிறது.இது சப்த-சிந்தவா (ஏழுநதிகள்) பிரதேசத்தை உருவாக்குகிறது; இது நதிகளை மட்டும் குறிக்கும் பெயர் (RV I, 32.12), நதிகள் பாயும் நிலத்தையல்ல (RV III, 74/27).
அவெஸ்தான் தொகுப்பில், அஹுரமஸ்தா (Ahuramazda) படைத்த 16 மண்டலங்களில் ஒன்றாகக் காணப்படும் “ஹப்த ஹிந்து” (Hapta Hindu)வில் உள்ள வெண்டிடாட் (Vendidad) போல ஒரு நாட்டை, சப்த-சிந்தவா பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது தெளிவு.5
குலமரபுச் சூழலின் தத்துவ சிந்தனைகள்:
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், குலம், அல்லது, குலமரபு சார்ந்த சூழலின் எல்லைக்குட்பட்டிருந்த நிலையில் “படைப்பு குறித்த பாடல்” (Creation Hymn) (RVX, 129) பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்தை மட்டுமல்லாமல், அதன் “படைப்பின்” புதிரைப் பற்றிய ஒரு கேள்வியையும் நமக்கு அளிக்கிறது. ஒரு ஏகம் (Ekam), உருவமற்ற பருப்பொருள் இருந்தது, தபஸ் (வெப்பம்), இச்சை (kama) ஆகியவற்றின் மூலமாகத் தன்னை அது பிரபஞ்சமாக உருமாற்றிக் கொண்டது. ஆனால் இதுபற்றிய நிச்சயமின்மையனைத்தும் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது (come into being) என்பதை எவரும் (அந்த “ஏகம்” கூட) அறிந்து கொள்ள முடியாது எனும் இறுதி ஒப்புதலில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது!
பெரிதும் தூற்றப்பட்ட புருஷ-சுக்தா (Purusha-Sukta),  பலி கொடுக்கும் சடங்கைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அதே கேள்விக்கு விடைகாண முற்படுகிறது எனுமளவில் முக்கியமானது. தேவர்களால் படையலாகப் பலிகொடுக்கப்பட்ட தெய்வீக மனிதனின் சவத்திலிருந்து வானம், பூமி, காற்று, சந்திரன், சூரியன் ஆகியவையும், அவற்றுடன் நான்கு வர்க்கங்களையும் (வர்ணம் எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படவில்லை) உள்ளடக்கிய மானுடர்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களும் எழுந்தன. ஒரு பிரதேசம் எனும் கருத்துக்கூட இருந்திராத அந்தச் சமூகத்தில், அதாவது இன்னும் ஒரு குலமரபுச் சமூகமாக இருந்துவந்த இடத்தில் அத்தகைய தத்துவார்த்தச் சிந்தனை இடம் பெற்றிருக்கிறது என்பது இங்கே மீண்டும் ஒருமுறை குறிப்பிடத்தக்கது.
வேதப் பாடல்களில் எல்லைக் குறிப்புகள்:
பிரபஞ்சத்தைப் பற்றிய அதுபோன்ற கவலை இருந்தபோதிலும்ரிக்வேதத்தில் நாடு என்பது குறித்த எந்தவொரு கருத்தையும் காண முடியவில்லை. விருப்பத்திற்குரிய ஒருபூமி எனும் கருத்தும்கூட பிற்கால வேதபாடங்களில்தான் தோன்றுகிறது: காய்ச்சல் (fever) அங்க, மகத தேசங்களுக்கு விரட்டப்பட வேண்டும் என்று ஒருபக்கமும் (AV V, 22.14), காந்தாரம், முஜாவன், பார்ஹிகாஸ்(Bactrians) ஆகிய பிரதேசங்களுக்கு விரட்டப்பட வேண்டும் என்று மறுபக்கமும் அதர்வ வேதம் (Atharvaveda) பிரார்த்தனை செய்யும் பொழுது, சட்லெட்ஜிலிருந்து காகரா வரை நீளும் மையமண்டலத்தின் பகைமையான எல்லைப்பிரதேசங்களாக அவை கருதப்படுகின்றன. அதற்கும் அப்பால் சபிக்கப்பட்ட பிரதேசங்கள் இருக்கின்றன என்று நாம் பொருள் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு ஊகிப்பதன் மூலம் அதர்வ வேத-உயர்குடியினர் எஞ்சியிருந்த நிலப்பகுதியுடன் ஆக்கப்பூர்வமான உணர்வுப் பந்தம் கொண்டிருந்ததாகக் கருதமுடியாது. பகைப்பிரதேசங்கள் வெகுதொலைவிற்கு அப்பால் இருப்பதாக கருதப்பட்டன. எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தொலைவில் காய்ச்சலை விலக்கி வைத்திருக்க வேண்டியிருந்ததால் அவர்கள் அதைப் பகைப்பிரதேசங்களுக்கு விரட்டியிருந்திருக்கலாம்.
அரசியல் சொற்கூறில் ஒரு பெரும் நிலப்பரப்பு கொண்ட எல்லைப்பகுதி எனும் வரையறையின் முதலாவது உறுதியான குறிப்பு கி.மு. ஆறாம்-நூற்றாண்டில் பட்டியலிடப்பட்ட 16-மஹாஜன பாடாஸ்-ல்தான் (Sola mahajanapadas)  கிடைக்கிறது.7
முதல் பார்வையில் இவை (இப்போது காம்போஜாவிலிருந்து {காபூல்பள்ளத்தாக்கு} மகத தேசத்திற்கு அப்பால் அங்கதேசம் வரைக்கும் நீளும் அதர்வ வேதத்தின் “விருப்பத்திற்குரிய மண்டலத்தின்” (Favoured zone) ஒரு விரிவாக்கத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தோன்றுகிறது. தெளிவான மாற்றம் என்னவென்றால், அந்தக் கூற்று சந்தேகத்திற்கிடமற்றதாக, திட்டவட்டமானதாக மாறுகிறது. 16 பிரதேசங்களும் விரிவாக விளக்கப்பட்டு ஒரு நாட்டின் ஆதிக் கருத்துருவாக முதன்முதலாக அழைக்கப்படக் கூடியதாக அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. அது பிற்காலத்தில் இந்தியா எனும் நாடாக வளர்ச்சியுற்றதாகக் கருதலாம். ஆனால் சற்று சிந்திக்கவேண்டிய ஆர்வத்திற்குரிய இரண்டு கூறுகள் அதில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட, ஆனால் பஞ்சாப் போன்ற சுற்றியுள்ள பிரதேசங்களையும் உள்ளடக்கிய,  பிற்காலத்திய அவெஸ்தான்- “16 வளமான பூமிகள் மற்றும் நாடுகள்”- என்பதையும் அந்தப் பட்டியல் நமக்கு நினைவூட்டுகிறது.ஈரானிய நாகரிகத்தின் நிலப்பரப்பிலும் இதற்கு இணையாக தேசம் உருவாகும் ஒரு போக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. வியப்பிற்குரிய வகையில், அதில் எண்-16 என்பதும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது.
இரண்டாவதாக ஆர்வமூட்டக்கூடியது என்னவென்றால், பிரதேசங்களின் பெயர்களெல்லாம், அவை ஏதோ பிரதேசங்களைக் குறிப்பிடுவது போலல்லாமல், அவற்றின் குடிமக்களைக் குறிப்பிடுவதுபோல, பன்மையில் இருக்கின்றன- அசோகரின் அரசாணைகளில் இருக்கும் ஆட்சிப்பகுதிகள் தொடர்பான குறிப்புகளில் இந்த வழக்கம் இருக்கிறது.
மெல்ல மறைந்த குல அடையாளங்கள்:
நானொரு மொழியிலாளரல்ல; இருந்தபோதிலும் ஒரு நிலப்பகுதியைத் தவிர்க்கவியலாதவாறு ஒரு குலத்துடன் தொடர்புபடுத்துகின்ற நடைமுறையின் வெளிப்பாடாகவே இது எனக்குப் படுகிறது. எனினும் குலத்திற்கும் பிரதேசத்திற்கும் இடையிலான வேறுபாடு நடைமுறையில் எவ்வாறு எப்போது இடம்பெற்றது என்பதை, புத்தர் சாக்ய ஜாதி(Sakya), அல்லது, குலத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், “ஆசான்(புத்தர்) ஒரு கோசலன், நானும் ஒரு கோசலன்தான்” (Majjhima Nikaya) என்று கூறிக்கொண்ட கோசல அரசன் பாசநாடி (Pasenadi ruler) என்பவனைப் பற்றி பாலி தொகுப்புநூலில் (Pali Canon) இருக்கும் குறிப்பு காட்டுகிறது.9
இருந்தாலும், அக்காலகட்டத்தில் அரசுரிமை ஒரு கொடுங்கோல் அமைப்பாக மாற்றமடைந்து கொண்டிருந்ததுடன் அப்பிரதேசங்களில் சில தம் குல அடையாளத்தை இப்போது துறந்து கொண்டிருந்தன. ஆகவே அவற்றில் சில குலத்தால் அல்லாமல், கோசலா, மகதா, அவெந்தி போன்ற ஆட்சிப் பகுதிகளின் குறிப்புப் பெயரால் அடையாளங் காணப்பட்டன.
உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம்:
இரும்பின் பயன்பாட்டிலிருந்து தோன்றிய வரிசையான முன்னேற்றங்களின் காரணமாகத்தான் இந்த ஆட்சிப் பகுதிகள் தோன்றுவது சாத்தியமானது. அது ஆட்சியாளர்களுக்கு மேம்பட்ட ஆயுதங்களை அளித்ததுடன் விவசாயத்தை விரிவுபடுத்துவதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் உதவியது. இதன் விளைவாக வியாபாரத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்ததுடன் மேன்மேலும் பலமான முடியாட்சிகளின் வடிவத்தை எடுத்துவந்த அரசுகளுக்கு பெருமளவு உபரியைக் கொடுத்தது.
புதுமையான இந்த அரசுவடிவத்தின் முக்கியத்துவத்தை, கர்ஷபணா, அல்லது, கஹாபணா (Karshapana, or Kahapana) எனப்படும் முத்திரைக்காசுகள் வடிவத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் அடையாளங் காட்டுகின்றன, இது விவசாயத்திற்கு விதிக்கப்பட்ட வரியுடன் அவைகளுக்கு உள்ள தொடர்பை உணர்த்துகிறது. கர்ஷா, கஹா எனும் முதல் இரு அசைச்சொற்களுக்கு விவசாயம் என்று பொருள்.10
இந்தப் பிராந்திய மாநிலங்கள் 16 மஹா ஜன பாடாஸ்களின் வடிவத்தில் தொகுக்கப்பட்டிருப்பது மஹாவீரா, புத்தர் ஆகியோரின் காலத்தில் தோன்றிய பரந்த பிராந்திய அமைப்புகளின் முதல் கட்டத்தை மட்டும் காட்டுகிறது. இந்த மாநிலங்கள் சில ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டன என்றாலும், தன்னளவில் அவைகளுக்கிடையில் நிலவிய கட்டமைப்பு ரீதியான பிணைப்புகளுக்கும், கலாச்சார உறவுகளுக்கும் ஒரு அறிகுறியாகவும்  அது இருந்தது. இவ்விதமாக, அரசர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஒருவருக்கொருவர் போரிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இமயமலைத் தொடருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தைக் கொண்டதாக சக்ரவர்த்தி-க்ஷேத்ரா என கௌடில்யரால் விசித்திரமாக வரையறுக்கப்பட்ட ஒரு பகுதி எழுந்தது.11 மகதத்தையும் இதர ராஜ்யங்களையும் கைப்பற்றிக் கொண்ட சந்திரகுப்த மௌர்யா (கி.மு. 322-298) மௌர்ய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அசோகரின் ஆட்சியில் (கி.மு. 270-234) அதன் எல்லைகள் ஹிந்து-குஷ் மலைத்தொடரிலிருந்து வங்காள-கர்நாடகா கழிமுகப்பகுதிகள் வரை பரவியது.
ரோஜா – ஆப்பிள் தீவு:
கர்நாடகாவிற்குள்ளும், தென்-ஆந்திராவிற்குள்ளும்உள்ளஏழு இடங்களிலும், வடநாட்டில் பத்து இடங்களிலும் கண்டறியப்பட்ட அசோகரின் சிறு தூண் கல்வெட்டு ஆணை I –ல்12-13 காணப்படும் ஜம்புத்விபா {Jambudvipa} (ரோஜா-ஆப்பிள்தீவு) என வழங்கபட்ட ஒரு நாடு எனும் கருத்து, இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் சாம்ராஜ்யத்துடன்14 பொருந்தி வருகிறது என வாதிடுவது மிகையான கற்பனையாகத் தோன்றலாம். உண்மையில் ஜம்புத்விபா என்பதற்கான குறிப்பைத் தாங்கிநிற்கும் கல்வெட்டு விரிவாகப் பரவியிருப்பதற்கு இப்போது ஒட்டுமொத்த இந்தியா என்று பொருள்; வடஇந்தியா, அதாவது, கௌடில்யர் பாரம்பரியத்தின் சக்ரவர்த்தி-க்ஷேத்ராஎன்றுமட்டும் பொருளல்ல.
கி.மு. முதலாம் நூற்றாண்டில் கலிங்கத்தின் புகழ்பெற்ற ஜைன அரசரான காரவேலா (Kharavela)பிராகிருத மொழியில் நிறுவியிருந்த ஹாதி-கும்பா கல்வெட்டில் அவருடைய போர்களும், வெற்றிகளும் நடைபெற்ற பிரதேசத்தை “பாரத்வர்ஷா” (Bharat-varsha) என்று குறிப்பிடுகிறார்.15 காரவேலாவின் கூற்றின்படி அவருடைய மேலாதிக்கம் பாண்டிய ராஜ்யத்திலிருந்து மதுரா வரைக்கும் பரவியிருந்தது என்பதால் அவருடைய “பாரத-வர்ஷா”, அசோகரின் ஜம்புத்விபாவைப் போல, இந்தியா முழுவதையும் உள்ளடக்கியதாகக் கொள்ள வேண்டும். மகதத்தையும் உள்ளடக்கிய நாட்டின் பகுதிக்கு “உத்தரபாதா” எனும் பெயரையும் பயன்படுத்தியிருப்பதன் மூலம் இந்தியா, அல்லது பாரதா, உத்தரபாதா (வடஇந்தியா) தக்ஷிணபாதா (தக்காணம்-தென்னிந்தியா) என பரந்த அளவில் பிரித்துக் காட்டப்பட்டு, ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்துகொண்டிருந்ததை காரவேலா குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
உண்மையில், இந்தியா எனும் கருத்து உருவெடுத்து வந்ததற்கு ராஜ்ய விரிவாக்கம் மட்டும் தீர்மானகரமான காரணியாக இருக்கவில்லை. அசோகரின் “ஜம்புத்விபாவின்” எல்லைகளை நிர்ணயிப்பதில் கலாச்சாரமும் வினையாற்றிக் கொண்டிருந்தது.
கல்வெட்டுஆணை XIII –ல்16, யவனர்கள் (கிரேக்கர்கள்) மத்தியில் பிராமணர்களோ அல்லது, சிரமணர்களோ கிடையாது என்பதைக் குறிப்பட்ட அசோகர் அவருடைய காலத்தின் இந்தியாவாக எது உருவாகியதோ அதற்குப் பிராமணியம், பௌத்தம், ஜைனம், அதிவிகாஸம் ஆகிய அனைத்து மதங்களும் (அனைத்து மதங்களும் அவருடைய கல்வெட்டு ஆணை VII–ல் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருந்தன)17ஒத்திசைவாக வினைபுரிந்து அக்கம்பக்கமாக வழங்கிவந்ததற்குத் தீர்மானகரமான பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். (பௌத்தம், தான் தோன்றிய நாட்டின் எல்லைகளை அப்போதுவரை கடந்திருக்கவில்லை) இந்தியத் துணைக்கண்டத்தில், பிராமணர்களுடனும், சிரமணர்களுடனும், மிகப் பெருமளவுக்கு மதரீதியான கலப்பு – அதாவது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பிராமணியமும், பௌத்தமும், ஜைனமும் காணப்பட்ட நிலையில்- நடந்திருப்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது.
சாதியக் கட்டமைப்பின் பரிணாமம்:
மதத்தின் தோற்றத்துடன் சேர்த்து இன்று நாம் சாதிய முறை என அறிந்திருப்பதும் படிப்படியாகத் தோன்றியது. இந்தக் கட்டமைப்பின் தோற்றத்தை ‘பிராமணர்கள்’  மற்றும் ‘ஆரம்பகாலச் சூத்திரர்கள் ஆகிய பிற்கால வேத நூல்களில், கல்வியாளர்கள் கண்டடைந்துள்ளனர்.
ஐத்ரேயா பிராமணா (Aithreya Brahmana VII, 29,4) எனும் நூலில் ஆர்ய சமூகத்தின் ஒருபகுதியாக சூத்திரர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், எந்தவிதமான உரிமைகளும் இல்லாதவர்களாக,  நினைத்தால் கொல்லப்படக் கூடியவர்களாக, “மற்றவர்களின் சேவகர்களாக”  மட்டும் இருப்பதற்குத் தகுதியுடைவர்களாகக் கொள்ளப்பட்டார்கள். சூத்திரனின் தகுதி அவனுடைய சூழ்நிலை எத்தகையதாக இருந்தாலும் மாற்றப்பட முடியாததாக இருந்தது (பஞ்ச விம்ஸ பிராமணா, VI, 1.11).  சடபாத பிராமணர்கள் சூத்திரனை பலிச்சடங்குகளிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், புனிதமடைந்தவரை அவனுடன் நேரடியாகப் பேசுவதிலிருந்தும் தடுத்து வைக்கிறார்கள் (III, 1. 19.10). மேலும் ஒரு “புனிதமான ஆசிரியர்”  அவனைத் தொடவோ, பார்க்கவோ கூடாது (xiv, 1.31). இங்கிருந்து அடுத்தபடியாக வர்ணங்கள், சாதிகள் கொண்ட ஒரு நிரந்தரமான படிநிலைக் கட்டமைப்பு நிறுவப்பட்டது. “சாதியச் சித்தாந்தம்” என்று சுவீரா ஜெய்ஸ்வால் பொருத்தமாக அழைப்பதன் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகக் கட்டமைப்பைக் கொண்ட வர்ணங்களுக்குள் அகமண முறையைக் கடைப்பிடிக்கும் சமூகங்களாக சாதிகள் இருந்தன.18 ஒரு சாம்ராஜ்யமும் இந்திய மதங்களின் விரிந்த பரப்பும் மட்டுமல்லாமல், நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, அந்தச் சாதிய முறை குறிப்பிடத்தக்க விதமாக ஒன்றுக்குள்ளொன்று ஊடுருவிக் கலந்திருந்ததும் சேர்ந்துதான், இந்தியாவிற்கு ஒரு தீர்மானகரமான கலாச்சார ஒருமைப்பாட்டை வழங்கியிருக்கிறது.
சாதி நியாயமும், பரவலும்:
கர்மத்தின் அடிப்படையில் ஆன்மா மறுபிறவியெடுக்கிறது எனும் நம்பிக்கைதான் சாதிய முறையை நியாயப்படுத்துவதில் மிகப்பெரும் கருவியாக இருந்ததாகக் கொள்ளப்பட்டது.19 இந்தச் சிந்தனை முதன்முதலாக ஜைனிசம், புத்திசம் அல்லது உபநிஷங்களிலிருந்து தோன்றியதா  இல்லையா என்பது விவாதத்திற்குரியது.பிரிஹதாரண்யகஉபநிஷத், III, 2, VI,2.13-15, சந்தோக்ய உபநிஷத், V, 3-10ஆகியவற்றில் இந்த அறிவு சத்ரியர்கள் மத்தியில் காக்கப்பட்டு வந்த ஒரு ரகசியம் என்றும், அது முதல்முறையாக ஒரு பிராமண மதகுருவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.20 மஹாவீரர், புத்தர் இருவரும் சத்ரியர்கள் என்பது நமக்குத் தெரியும்.
பாலி இலக்கியத்திலிருக்கும் “புத்தரின் சொற்பொழிவுகள்” பண்ணா அல்லது வண்ணா (வர்ணா), சாதி ஆகிய இரண்டும் அவற்றின் நன்கறியப்பட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. இங்கு, முதன்முதலாக, சாதியின் இருப்பின் மூலம் இந்திய அடையாளம் தெளிவாக வெளிப்படுகிறது .மஜ்ஜிம நிகயா(Majjhima Nikaya) புத்தரை மேற்கோள் காட்டுகிறது: “யோனா-கம்புஜா மற்றும் அதற்கடுத்திருக்கும் பிரதேசங்களிலும் இரண்டு வர்ணங்கள் (vanna) தான்; அதாவது ஆண்டான்களும்(ayya), அடிமைகளும் (dasa), இருக்கின்றன.”21 நான்கு வர்ண அமைப்புமுறை மூலம் பழங்குடியினர் இவ்வாறு நடைமுறையில் வரையறுக்கப்படுகின்றனர்.
ஆனால் இவ்வாறிருந்த பழங்குடியினர் இந்தியா முழுவதும் பரவுவதற்கு நீண்டகாலம் பிடித்தது. இது நிச்சயமாக மனு ஸ்மிரிதியில் (II, 21-22) வரையறுக்கப்பட்டுள்ளது போல, இமாலயத்திற்கும் விந்திய மலைகளுக்கும் இடையில் இருந்த “ஆர்ய வர்த்தாவின்” வரம்பிற்குட்பட்ட பரப்பை விளக்குகிறது. அயல் நாட்டினரை மிலேச்சர்கள் எனக் குறிப்பிடும் அது (II, 23-24) பிராமணர்கள் பலிச் சடங்குகளை நிகழ்த்தாத, இருபிறப்பாளர்கள் வசிக்கக் கூடாத பூமிகள்தான் அவர்களுடையது என்று கூறுகிறது.22 ஆர்ய வர்த்தா இவ்வாறு “புனித பூமியாக”  இருக்கலாம்; ஆனால் அது இன்னும் இந்தியாவாகவில்லை; ஏனெனில் அது வடஇந்தியாவிற்கு உட்பட்டதாகவே இருந்தது. மனுவைப் பொறுத்தவரை தக்காணமும், தென்னிந்தியாவும் இன்னும் சாதிய முறை, அதேபோல பிராமணியச் சடங்குமுறை ஆகியவற்றின் வேலிக்கு வெளியில்தானிருந்தன. அந்த வேலிக்குள் வரும்பொழுது அவையும் இந்தியாவிற்குள் வந்துவிடும்.
இந்தியா குறித்த சீன,பெர்ஸிய மதிப்பீடுகள்:
இந்தியாவிற்குள் அரசியல் ஒருங்கிணைப்பு, சாதிய ஊடுபரவல் மற்றும் பிராமணிய, ஸ்ரமணிய மதங்கள் ஆகிய மட்டங்களிலிருந்த ஒருமைப்படுத்தும் காரணிகள் அதன் குடிமக்கள் அதை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான அடிப்படையை எவ்வாறு உருவாக்கிக் கொண்டிருந்தன என்பதை இதுவரை நான் ஆய்வு செய்திருக்கிறேன். ஏழாம் நூற்றாண்டில் ஒரு சீன அறிஞரும், பதினொன்றாம் நூற்றாண்டில் ஒரு மத்திய ஆசிய அறிஞரும் இந்த நாட்டின் நாகரிகத்தையும், பரப்பையும் குறித்து எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கு இப்போது திரும்புகிறேன்.
அனைத்துச் சீன பௌத்த யாத்ரிகர்களிலும் மிகவும் கற்றறிந்தவரான யுவான் சுவாங் (Pinyin: Xuan Zhuang) ஏழாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியாவிற்கு வந்தார். ஒரு புவியியல் அமைப்பாக இந்தியாவைப் பற்றிய யுவான் சுவாங்கின் புரிதல் கவனிக்கத்தக்கது. காபைஸா (Kapisa) (மத்திய ஆசியப் பிரதேசங்களுக்குப் பின்னர் வரும் காபுல் பிரதேசம்) குறித்த தனது மதிப்பீட்டை முடித்ததற்கு பிறகு உடனடியாக இந்தியாவைப் பற்றிய ஒரு பொதுவான அத்தியாயத்தை அவர் இடையில் புகுத்துகிறார்.23
தொடர்ச்சி அடுத்த கலாரசிகனில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...