bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 15 அக்டோபர், 2019

வெள்ளையர்க்கு "இரு வேண்டுகோள்கள்"




85 ஆண்டுகளுக்கு முன்பு,

1931 மார்ச் 23, .

பகத் சிங் ,ராஜ்குரு,சுக்தேவ் ஆகியோர் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். 

பகத்சிங் வீரமரணம் அடையும் போது, அவருக்கு வயது 23 மட்டுமே. 
வாழ வேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்க, அவரது நலம் விரும்பிகளும் குடும்ப உறுப்பினர்களும் பிரிட்டன் அரசாங்கத்திடம் அவரை மன்னிப்பு கேட்கக் கோரினாலும் பகத்சிங் மறுத்துவிட்டார்.

தனது கடைசி விண்ணப்பத்திலும், சாட்சியத்திலும், காலனித்துவ அரசுக்கு எதிராக போரை நடத்தியதாக அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் உண்மையாக இருக்க வேண்டும் என்றும், தன்னை தூக்கிலிடக்கூடாது; மாறாக, துப்பாக்கி முனையில் மூலமே தன்னுடைய மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பிரிட்டிஷ் அல்லது இந்திய “ஒட்டுண்ணிகளின்” சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற்ற ஒரு இந்தியாவுக்கான அவரது பார்வையை அவரது ஆவணம் முன்வைக்கிறது.
[இந்தி] தேசியவாத அறைகூவலை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகி கையிலெடுத்துள்ள நேரத்தில், பகத்சிங்கின் நாட்டுப்பற்றுமிக்க அணுகுமுறை மற்றும் பார்வையை ‘இந்துத்துவா’ கருத்தாக்கத்தின் தோற்றுவிப்பாளரும் சங்க பரிவாரின் முன்னணியாளருமான ’வீர்’சாவர்க்கருடன் ஒப்பிடுவது பயனுள்ளது.

தனது புரட்சிகர நடவடிக்கைக்காக, 1911-ம் ஆண்டில் அந்தமானிலுள்ள செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்ட சாவர்க்கர், தனது 50 ஆண்டு சிறைத் தண்டனையைத் தொடங்கிய சில மாதங்களுக்குள், தன்னை விடுதலை செய்யுமாறு முதல்முதலாக மன்னிப்புக் கடிதம் எழுதினார்.

அடுத்ததாக 1913-ம் ஆண்டில் மற்றும் 1921-ம் ஆண்டில் இந்திய சிறைக்கு மாற்றப்படும் முன்பாக, இறுதியாக 1924 -ம் ஆண்டில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதினார். ”என்னை விட்டுவிடுங்கள். நான் விடுதலைப் போராட்டத்தை கைவிட்டு காலனித்துவ அரசாங்கத்திற்கு உண்மையாக இருப்பேன்” – இதை தான் அவரது மன்னிப்புக் கடிதங்கள் சுமந்தன.

சாவர்க்கரின் வாக்குறுதிகள் ஒரு தந்திரம் என்று அவரது இந்துத்துவா ஆதரவாளார்கள் கூறுகின்றனர்.
 ஆனால் உண்மையில்  அப்படி இல்லை .
காரணம் அந்தமான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு பிரிட்டனுக்கு தான் அளித்த வாக்குறுதிகளுக்கு உண்மையாக சாவர்க்கர் நடந்து கொண்டார் என்றும் முஸ்லீம் லீக்கின் “இரு நாடுகள் கோட்பாட்டின்” இன்னொரு வடிவமான ’இந்துத்துவா” பிளவுவாத கோட்பாட்டின் மூலம் உண்மையில் பிரிட்டிஷுக்கு அவர் உதவி செய்தார் என்றும் கூறுகிறார்கள்.

 பகத்சிங்கின் கடைசி விண்ணப்பமும்,
வீ.டி.சாவர்க்கர் 1913 -ம் ஆண்டு எழுதிய விண்ணப்பமும் 
உண்மை நகல்கள் இங்கே தரப்படுகிறது.

பகத்சிங்கின் கடைசி விண்ணப்பம்

லாகூர் சிறைச்சாலை, 1931
பெறுனர் : பஞ்சாப் ஆளுனர்
ஐயா, பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்: 1930 அக்டோபர் 7 -ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் எச்.இனால் பிரகடனப்படுத்தப்பட்டு, லாகூர் சதி வழக்கு சிறப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட எல்.சி.சி. தீர்ப்பாயம் (LCC Tribunal) என்ற பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னன் எச்.எம். ஜார்ஜுக்கு எதிராக போர் தொடுத்ததுதான் எங்களுக்கெதிரான முதன்மையான குற்றச்சாட்டு.

நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு இரண்டு முன் அனுமானங்களை வைக்கிறது :
முதலில் இந்திய தேசத்திற்கும் பிரிட்டனுக்கும் போர் நடக்கிறது என்பதையும் இரண்டாவதாக, நாங்கள் உண்மையில் அந்தப் போரில் பங்கேற்றோம், எனவே நாங்கள் போர்க் கைதிகள் என்றும் அது கூறுகிறது.
இரண்டாவது முன் அனுமானம் கொஞ்சம் புகழ்ச்சியாகத் தோன்றுகிறது.
முதல் முன் அனுமானத்தை பொறுத்தவரை, நாங்கள் சில விவரங்களுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த சொற்றொடர் குறிப்பிடுவது போன்ற போர் எதுவும் இல்லை என்று தெரிகிறது.
ஆயினும் அதை சரியாக புரிந்து கொள்வதற்கு நாங்கள் மேற்கொண்டு விளக்க விரும்புகிறோம்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் இயற்கை வளங்களும் சுரண்டப்படும் வரை எங்கள் யுத்தம் தொடரும்.
அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாகவும் இருக்கலாம். இந்திய முதலாளிகளின் கலப்பாகவும் இருக்கலாம் அல்லது இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம்.
 பிரிட்டிஷ் மற்றும் இந்திய கலப்பு இயந்திரத்தைக் கொண்டோ அல்லது கலப்பறற இந்திய இயந்திரத்தைக் கொண்டோ அவர்கள் தங்கள் நயவஞ்சகமான சுரண்டல்களை நடத்தி வரலாம்.
சலுகைகளாலும் சமரசங்களாலும் இந்திய சமுதாயத்தின் மேல்தட்டுத் தலைவர்களை வென்றெடுப்பதில் முயற்சி செய்து வெற்றியும் பெற்று, அதன் மூலம் புரட்சி அணிகளிடம் ஒரு தற்காலிக மனச்சோர்வை உங்களது அரசாங்கம் ஏற்படுத்தினாலும் பரவாயில்லை.

போரின் கடுமையினால், இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னனிப்படையான புரட்சிகர [சோசலிச] கட்சி காணாமல் போனாலும் பரவாயில்லை.
தலைவர்கள் எங்களுக்காக வெளிப்படுத்திய பரிவுக்கு தனிப்பட்ட முறையில் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். ஆயினும் சோசலிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஏதுமற்ற ஏழை பெண் தொழிலாளிகளை, காலாவதியாகிப் போன தங்களது கற்பனாவாத அகிம்சை வழிபாட்டு முறைக்கு எதிராக இருப்பதாக கூறி, அவர்கள் குறித்து தங்களது சமாதான பேச்சுவார்த்தையில் குறிப்பிடக் கூட செய்யாமல் புறக்கணித்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தங்களையும், தங்களது கணவர்கள், தமையன்கள் மற்றும் நெருக்கமான அனைவரையும் தியாகம் செய்துள்ள அந்த கதாநாயகிகளை சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்று உங்களது அரசாங்கம் கூறியுள்ளது.
உங்களது தரகர்கள், அவர்களது கட்சியின் புகழை கெடுக்க எவ்வளவு தான் குனிந்து அவர்களுக்கு புலப்படாத பாத்திரங்கள் மீது அடிப்படையற்ற அவதூறுகளை  புனைந்தாலும்  பரவாயில்லை.
  போர் தொடரும்.

இது வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். இப்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ, முற்றிலும் கிளர்ச்சியூட்டும்படியாகவோ அல்லது மரண போராட்டமாக கூட அது இப்போது ஆகலாம்.
இரத்தம் சிந்தும் போராட்டமோ அல்லது அமைதியான போராட்டமோ எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுங்கள். ஆனால் பொருளற்ற அற்பமான இந்த சித்தாந்தங்களை கருத்தில் கொள்ளாமல் போர் இடைவிடாமல் நடத்தப்படும்.
சோசலிச குடியரசு அமைக்கப்படும் வரை,புதிய வீரியத்துடனும் அதிக துணிவுடனும் தீர்மானகரமாகவும் இது நடத்தப்படும்.
 தற்போதைய சமூக ஒழுங்கமைப்பானது புதிய ஒரு செழிப்பான சமூக ஒழுங்கமைப்பினால் மாற்றப்படும் வரையிலும், ஒவ்வொரு வகையான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மனிதநேயம் உண்மையான மற்றும் நிரந்தர அமைதியின் சகாப்தத்திற்குள் நுழையும் வரையிலும் இந்த போர் தொடரும்.
மிக விரைவில் எதிர்காலத்தில் இறுதி போரானது நடத்தப்பட்டு இறுதி தீர்வு வரும்.
முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்ச்சி போக்குகளினாலும், நிலவும் சூழ்நிலைகளாலும் தவிர்க்க முடியாததன் விளைவே இந்த போர்.
திரு [ஜதின்]தாஸின் ஈடு இணையற்ற தியாகத்தாலும், தோழர் பகவதி சரணின் துன்பம் நிறைந்த உன்னதமான தியாகத்தாலும், எங்கள் அன்புக்குரிய சந்திரசேகர் ஆசாத்தின் பெருமைமிக்க மரணத்தாலும் பிழையின்றி அணிசெய்யப்பட்ட தியாகச் சங்கிலியின் ஓர் இணைப்புக் கண்ணியே எங்களது எளிய தியாகங்கள்.
எங்களைக் கொல்வதென்று நீங்கள் முடிவு செய்து விட்டதால், அதனைக் கட்டாயம் நிறைவேற்றிவிடுவீர்கள். ஏனெனில் உங்கள் கையில் அதிகாரம் உள்ளது. அதிகாரமே உலகின் உயரிய நியாயத்தைக் கொடுக்கிறது. நீங்கள் எது செய்தாலும் அது நியாயம் தானே!!
எங்கள் விசாரணையே, அதற்கு ஒரு சான்று.
மேலும் உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நாங்கள் உங்கள் அரசிற்கு எதிராகப் போர் தொடுத்துள்ளோம், எனவே நாங்கள் போர்க்கைதிகள்.
ஆதலால் எங்களைப் போர் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற சுட்டுக் கொல்வது போல், எங்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதற்கு நீங்கள் இராணுவத் துறைக்கு ஆணையிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறோம்.”

இப்படிக்கு,
பகத் சிங்.
(இந்த விண்ணப்பத்தை பகத் சிங் ஆராய்ச்சி குழு (shahidbhagatsingh.org) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது)
 வீ.டி சாவர்க்கரின் விண்ணப்பம்:
செல்லுலார் சிறை, அந்தமான், 1913
பெறுனர்: இந்திய அரசின் உள்துறை உறுப்பினர்
உங்களின் முன் பின்வரும் விடயங்களை அளிக்க இறைஞ்சுகிறேன்:
(1) ஜூன் 1911 -ல் எனது தரப்பின் மற்ற கைதிகளுடன் தலைமை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் ஆபத்தான “D” குற்றவாளி என்று வகைப்படுத்தப்பட்டேன்; மீதமுள்ளவர்கள் “டி” என வகைப்படுத்தப்படவில்லை. பின்னர் நான் 6 மாதங்கள் தனிமைச் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் மற்றவர்கள் இல்லை.
 அந்த நேரத்தில் என் கைகளில் இரத்தப்போக்கு இருந்தாலும் நான் சணல்திரிக்கும் வேலை, எண்ணெய் ஆலை போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தபட்டேன்.
எல்லா நேரங்களிலும் எனது நடத்தை சிறப்பாக இருந்தபோதிலும், இந்த ஆறு மாதங்களின் முடிவில் என்னுடன் வந்த மற்றவர்கள் விடுவிக்கப்பட்டாலும் நான் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
(2) சலுகைக்காக நான் விண்ணப்பித்த போது, நான் ஒரு சிறப்பு வகுப்பு கைதி என்று கூறப்பட்டதால் அதனை பெற முடியவில்லை.
 நல்ல உணவு கொடுக்குமாறு எங்களில் யாராவது கேட்டால் “நீங்கள் சாதாரண குற்றவாளிகள் மட்டுமே, மற்றவர்கள் சாப்பிடுவதை தான் நீங்களும் சாப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டது. எனவே ஐயா, தனிவகை இன்னல்களுக்காகவே என்னை சிறப்புக் கைதியாக வகைப்படுத்தப்படுத்தியிருப்பதைக் நீங்கள் காணமுடியும்.
 
(3) குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளியே அனுப்பப்பட்டபோது என்னையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆனால் நான் அவர்களது பிரச்சினைக்குரியவன் என்பதால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் என்னை விடுவிக்க ஆணை வந்த பிறகு வெளியில் இருந்த சில அரசியல் கைதிகளால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன்.

(4) நான் இந்திய சிறைகளில் இருந்திருந்தால், இந்நேரத்தில் அதிக நன்மதிப்பை பெற்றிருப்பேன், அதிக கடிதங்களை அனுப்பியிருக்கலாம், வருகைகளையும் பெற்றிருக்கலாம்.
நான் ஒரு நாடு கடத்தப்பட்டவராக இருந்திருந்தால், இச்சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதுடன பிணையையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்திய சிறைச்சாலை அல்லது காலனி ஒழுங்குமுறை அனுகூலங்களோ எதுவும் எனக்கு இல்லை; இரண்டின் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

(5) எனவே, தயைக் கூர்ந்து என்னை இந்திய சிறைகளுக்கு அனுப்பியோ அல்லது மற்றவர்களை போல நாடு கடத்தியோ இந்த கொடுமையான சூழ்நிலைக்கு முடிவு கட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்தவிதமான முன்னுரிமைகளையும் கேட்கவில்லை.
ஆனால் ஒரு அரசியல் கைதியாக உலகின் எந்தவொரு சுயாதீனமான நாடுகளின் நாகரிக நிர்வாகத்திலும் இதை எதிர்பார்க்க முடியும். மோசமான குற்றவாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகைகளும் உதவிகளும் கிடைக்குமா? என்னை இந்த சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைப்பது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை எனக்கு சாத்தியமற்றதாக்குகிறது.
ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் நிலை வேறு. ஆனால், ஐயா, 50 ஆண்டுகள் சிறை தண்டனை வெறித்து பார்க்கிறது. என்னுடன் இருக்கும் பயங்கரமான குற்றவாளிகள் பெற்ற சலுகைகள் எனக்கு மறுக்கப்படும்போது நான் எப்படி தார்மீக பலத்தை பெற முடியும்.
தயை கூர்ந்து, (ஒன்று) என்னை இந்திய சிறைக்கு அனுப்புங்கள்.
அங்கே என்னால் (a) நன்மதிப்பை பெற முடியும்.
 (b) அங்கு என்னைப் பார்ப்பதற்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் வருவார்கள். ஒவ்வொருமுறையும் அருகிலுள்ளவர்களையும் நெருக்கமானவர்களையும் பார்ப்பது எத்தனை கொடுப்பினை என்பது கெடுவாய்ப்பாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும்.
(c) எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டபூர்வமானது இல்லையென்றாலும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அடைவதற்கான உரிமை கிடைக்கும்.
 (d) மேலும் அதிகபடியான கடிதங்கள் மற்றும் வேறு சிற்சில நன்மைகள் கிடைக்கும்.
 எனக்கு பிணை வழங்கி எனது குடும்பத்தினரை இங்கே வரவழைக்க முடியும்.
அதன் பிறகு எனது சொந்த தவறுகளுக்கு மட்டுமே நான் பொறுப்பேற்க வேண்டும், மற்றவர்களுக்கு அல்ல. இதை நான் கேட்பது ஒரு பரிதாபமான நிலை – இது ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை!

ஒருபுறம், சுறுசுறுப்பான சில 20 இளம் இந்திய புரட்சிகர போராளிகள்.
மறுபுறம், காலனிய குற்ற விதிமுறைகள்.
 இது விடுதலை உணர்வையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உரிமையையும் கீழாக்குகிறது.

மாட்சிமை தாங்கிய தங்களுக்கு 1911-ம் ஆண்டு நான் எழுதிய கருணை மனுவை பரிசீலிக்கவும் இந்திய அரசாங்கத்திற்கு அதை அனுப்பவும் நினைவூட்ட அனுமதிக்க வேண்டும்?
இந்திய அரசியலின் சமீபத்திய போக்கும் அரசாங்கத்தின் இணக்கமான கொள்கையும் அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் ஒரு முறை திறந்துவிட்டிருக்கின்றன.

1906-1907 -ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான பாதைகளுக்கு தள்ளியது.
ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட மனிதாபிமான எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க மாட்டான்.

ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன்ஆங்கில  அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடந்து கொள்வேன்.

தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதால் நாங்கள் சிறையில் இருக்கும் வரை நூற்றுக்கணக்கான இந்திய குடும்பங்களில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. 
 ஆனால், நாங்கள் விடுதலையடைந்தால் அவர்கள் மேலும் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பார்கள்.

அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்கு சென்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். 
என்னுடைய மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். 
ஆனால், என்னை சிறையிலேயே வைத்திருந்தால் எந்த பயனும் இல்லை.
மாட்சிமை தாங்கியவர் மட்டுமே கருணையுள்ளவராக இருக்க முடியும்.

 இந்த ஊதாரிக்கு வேறு என்ன போக்கிடம் இருக்கிறது?

மாட்சிமை தாங்கிய தாங்கள் இந்த விவரங்களை கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
வி.டி சாவர்கர்.



நன்றி : தி வயர்
 தமிழாக்கம் : சுகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...