bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

விக்கிலீக்ஸ் அடுத்து பனாமா லீக்ஸ்?

விக்கிலீக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரகம் மூலம் வெளிநாடுகளை உளவு பார்த்த ரகசியங்கள் என 50 ஆயிரத்துக்ம் மேற்பட்ட ஆவணங்களை கடந்த 2010ம் ஆண்டு வெளியிட்டு அமெரிக்காவை அதிர்ச்சியடைச் செய்தது. 
இந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகள் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை குவித்துள்ள விவரங்களை எச்.எஸ்.பி.சி. வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் அம்பலப்படுத்தினார்
. இதேபோல் உலக நாடுகளின் தலைவர்களும், பிரபலங்கள் தங்கள் நாட்டில் சுருட்டிய பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்ததில், உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வெளிநாடுகளில் பதுக்கிய கோடிக்கணக்கான ரகசிய சொத்துக்கள் அம்பலமாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா. 
கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கருப்பு பணத்தை பதுக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 
இதற்காக 35 நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளது. அங்குள்ள எச்எஸ்பிசி, யுபிஎஸ், கிரடிட் சூஸ், டெட்ஸ் வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் மொசாக் பொன்சேகா நிறுவனத்துக்கு கடந்த 1970ம் ஆண்டுகளில் இருந்து நெருங்கிய தொடர்பு உள்ளது. 
இந்த நிறுவனத்தின் முக்கிய வேலையே, கருப்பு பணத்தை பதுக்க விரும்புவோருக்கு வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மற்றும் ரகசிய வங்கி கணக்குகள் ஏற்படுத்தி கொடுப்பதுதான். தங்கள் நாட்டில் லஞ்சம் வாங்கி சுருட்டிய பணம் அல்லது வரிஏய்ப்பு செய்த பணத்தை வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்க விரும்புபவர்கள் எல்லாம் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தை அணுகினால் ஏதாவது ஒரு நாட்டில் போலி நிறுவனத்தை ஏற்படுத்தி கொடுத்து வங்கியில் கருப்பு பணத்தை பாதுகாக்க உதவி செய்வர். 
உலகம் முழுவதும் உள்ள தற்போதைய மற்றும் மாஜி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் 140 பேரின் ரகசிய சொத்து ஆவணங்கள் உட்பட 11.5 மில்லியன் டாலர் ஆவணங்கள் மொசாக் பொன்சேகா நிறுவனத்திலிருந்து தற்போது கசிந்து ஜெர்மனியைச் சேர்ந்த சுடேட்ஸ் ஜீடெங் என்ற பத்திரிக்கை நிறுவனத்துக்கு கிடைத்தது.  
இதை சர்வதேச புலனாய்வு நிருபர்கள் அமைப்பு விசாரித்து வருகிறது. இது தவிர 78 நாடுகளைச் சேர்ந்த 107 செய்தி நிறுவனங்களும் இதை ஆய்வு செய்து வருகின்றன. சீன அதிபர் ஜீ ஜின்பிங், சவுதி மன்னர், உக்ரேன் அதிபர், ஐஸ்லேண்ட் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், லிபியா முன்னாள் அதிபர் கடாபி, சிரியா அதிபர் பஷார் அல் அசாத் ஆகியோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்கள் எல்லாம் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.  
ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமான சிலர் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வங்கிகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் பதுக்கி வைத்துள்ளதும் இந்த ஆவணத்தில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து சர்வதேச புலனாய்வு நிருபர்கள் அமைப்பின் இயக்குனர் ஜெரார்ட் ரைல் கூறுகையில், ‘‘இந்த பனாமா லீக்ஸ் ஆவண வெளியீடு, கருப்பு பணத்தை பதுக்க உதவும் வெளிநாடுகளுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என நினைக்கிறேன். 
இந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கு அரசியலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்’’ என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராமோன் பொன்சேகா கூறுகையில், ‘‘இந்த ஆவண வெளியீடு ஒரு குற்றம், பனாமா நாட்டின் மீதான தாக்குதல். நாங்கள் போட்டி நிறுவனமாக இருப்பது சில நாடுகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது’’ என்றார். 
பனாமா அரசு கூறுகையில், ‘‘சட்டவிரோத செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பான விசாரணைக்கு பனாமா முழு ஒத்துழைப்பு அளிக்கும்’’ என்று கூறியுள்ளது. 

பனாமா லீக்ஸ் ஆவணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர்கள் கே.பி.சிங்(டி.எல்.எப்), கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி, அப்போலோ டயர் உரிமையாளர் உட்பட 500 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
 பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் பற்றி விசாரிக்க வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர் ஏற்கனவே வெளியிட்ட பட்டியலால், கருப்பு பணத்தை பதுக்கி வைத்த இந்தியர்கள் பலர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கினர். 
தற்போது பனாமா லீக்ஸ் ஆவணத்தால், இன்னும் பலர் சிக்குவர் எனத் தெரிகிறது.

பனாமா லீக்ஸ் பட்டியலில் ஐஸ்லேண்ட் பிரதமர் சிக்புந்துர் டேவிட் குண்லாக்சன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் வின்ட்ரிஸ் என்ற பெயரில் வெளிநாட்டில் ரகசிய நிறுவனம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
ஆனால் தனக்கு எந்த ரகசிய சொந்துக்களும் இல்லை என டேவிட்குண்லாக்சன் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் இந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். 
இதுபோல் பல நாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு  சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பனாமா லீக்ஸ் ஆவணத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 500 இந்தியர்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளது என்று ்தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...