bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 16 ஜனவரி, 2018

மனிதம் பேசும் ‘அன்பே சிவம்’

'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பிலும், எழுத்திலும் எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், 'ஹே ராம்', 'குணா', 'ஆளவந்தான்', 'குருதிப் புனல்', ‘நம்மவர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’ உள்ளிட்ட எத்தனையோ நல்ல நல்ல திரைப்படங்கள் ரிலீஸ் ஆன சமயத்தில் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அவற்றில், மிக முக்கியமான ஒரு திரைப்படம் 2003ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘அன்பே சிவம்’. தமிழ் சினிமாவில் மிக அதிகமாக கொண்டாடப்படும் cult கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான ‘அன்பே சிவம்’ வெளியாகி, இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றது.

கிட்டத்தட்ட 1990களின் இறுதியில் இருந்தே, மலையாள இயக்குனர் பிரியதர்ஷனுடன் இணைந்து ஒரு திரைப்படம் பண்ண வேண்டும் என விரும்பி வந்தார் நடிகர் கமல்ஹாசன்; இருவரும் பல முறை பேசியும் வந்தார்கள். 2002ஆம் ஆண்டில் கமல் கதை, திரைக்கதை எழுதியிருந்த ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை பிரியதர்ஷன் இயக்குவதாய் இருந்தது; ஆனால், கடைசி நிமிடத்தில் அப்படத்திலிருந்து அவர் விலகவே, அப்படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் சுந்தர்.சி அவர்களுக்கு கிடைத்தது.
இந்த படத்தின் கதைக்கரு, ‘Planes, Trains and Automobiles’ என்கிற ஆங்கில படத்திலிருந்து தழுவப்பட்டதாகும். ஆனால், எந்தவொரு காட்சியிலும் கூட அந்த திரைப்படத்தின் சாயலே இல்லாமல் ஒட்டுமொத்தமாக வேறு ஒரு வடிவத்தில் இப்படத்தை கொடுத்திருப்பார்கள் படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதிய ‘கலைஞானி’ கமலஹாசன் மற்றும் ‘கார்ட்டூனிஸ்ட்’ மதன் அவர்கள். இத்திரைப்படத்தில் கமல் நடித்திருந்த நல்லசிவம் என்கிற கதாபாத்திரம், பல தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர் நலன்களுக்கு போராடிய காரணங்களால் காங்கிரஸ் கட்சிக்காரர்களால் 1980களில் படுகொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் நாடக ஆசிரியர் மற்றும் தெருக்கூத்து இயக்குனர் சஃப்தார் ஹஷ்மி என்பவரை மையமாக வைத்து எழுதப்பட்டது (2008இல் Hallabol என்கிற இந்தி திரைப்படமும், அவரது மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட திரைப்படமே).
படம் முழுக்க ‘மனிதமும் அன்புமே மிகச் சரியான மதம், நல்ல மனிதர்கள் எல்லோருமே கடவுளே’ என்கிற கருத்தை முன்வைத்த ஒரு பிரமாதமான காமெடி டிராமா ‘அன்பே சிவம்’. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் சீரியஸாக இருந்தாலும் கூட, கமல் அவர்களது பாணியிலான ரசனையான காமெடிக்கும் பஞ்சமே இருக்காது இப்படத்தில்.

எந்த நிலையிலும் தன்னலம் மட்டுமே கருதுகிற உலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் ஆதரிக்கும் ஒரு மேல்த்தட்டு இளைஞனும், மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பெரும் முதலாளிகளை எதிர்த்து நிற்கும் ஒரு நடுத்தர வயது கம்யூனிஸ்ட் காரரும் மழை வெள்ளத்தால் ஒரிசாவில் மாட்டிக்கொண்டு சென்னை வரும் வரை, 3 நாட்கள் ஒன்றாகவே இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக வெவ்வேறான வாழ்க்கை முறையில் வளர்ந்த, வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை கொண்ட அந்த இருவரது பயணத்தின் சுவாரஸ்யமான அனுபவங்களே இத்திரைப்படம்.

படத்தில் மாதவனின் பாத்திரத்தின் பெயர் - அன்பரசு; ஆனால், அந்த பெயரில் உள்ள அன்பு கூட பிடிக்காமல் தன்னை A.அர்ஸ் என்றே அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவர். சட்டென கோபப்படக்கூடிய, எவரையும் உருவத்தை வைத்தே எடை போடக்கூடிய, சமுதாயம் குறித்த அதிக புரிதல் ஏதும் இல்லாத ஒரு மனிதர். தன் தவறுகளை ஒத்தே கொள்ளாதவர், தான் செய்த தப்பிற்கும் கூட மற்றவர்களையே குறை சொல்பவர். யாரையும் சட்டென எடுத்தெறிந்து பேசக்கூடிய ஒருவர், கமல் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும்பொழுது கூட ‘after all, every dog has its day.. love is blind’ என சொல்பவர். கமல் ஏற்றிருந்த நல்லசிவம் பாத்திரமோ, அதற்கு முற்றிலும் நேர் எதிர். பொதுவுடைமை சிந்தனை உடையவர், மிகவும் பக்குவமான மனிதர்; வாழ்க்கையில் வருபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒருவர், வாழ்க்கை குறித்த பெரிய எதிர்பார்ப்புகளோ ஆசையோ இல்லாத ஒருவர் (‘பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை.. நிரந்தரம் என்கிற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை நான்’ என இறுதியில் கடிதத்தில் தன்னைப் பற்றி சொல்கிறார் சிவம்). அர்ஸ் அடிக்கடி சொல்வதைப் போலவே, எல்லா கேள்விக்கும் ஒரு பதில் வைத்திருப்பவர் சிவம்; எல்லா பதிலுக்குமே ஒரு யோசனையும் எதிர்கேள்வியும் வைத்திருப்பவர். படம் முடியப்போகும் தருவாயில் ‘அந்த Dogக்கு புரிஞ்சது கூட உங்களுக்கு புரியலையா?’ என அர்ஸ் எமோஷனலாக கேட்கும்பொழுது, ‘DOGஐ திரும்பிப் போட்டா, GODன்னு வருதுங்க’ என குறும்பாக சொல்பவர். 
ஒரு உண்மையான, நேர்மையான கம்யூனிஸ்ட் – கிளைமாக்ஸில் கூட, நாசரிடம் தனக்கென எதும் கேட்காதவர். ஒரு காட்சியில், கண்ணாடியை பார்த்து ‘குளிச்சப்புறம் பரவாயில்ல, கொஞ்சம் லட்சணமாவே இருக்கேன்’ என தனக்குத்தானே சொல்லிக்கொள்வது அந்த விபத்து பற்றியும் மாறிப்போன தனது தோற்றம் பற்றியுமான சோகத் தேற்றல். படம் முழுக்க சோகமான பொழுதுகளிலும், சீரியஸான தருணனுங்களிலும் கூட அவர் அடிக்கும் ஜோக்குகள் ரசிக்க வைக்கவும், சில சமயம் கண்ணீரையும் வரச் செய்கின்றன. ‘முகத்துல என்ன தழும்பு, அங்கிள்...’ என ஒரு குழந்தை கேட்கையில், ‘குஜராத்ல ஒரு கடையில ஷேவிங் பண்ணிட்டு இருந்தப்போ, திடீர்ன்னு பூகம்பம் வந்திடுச்சு...’ என அவர் சொல்ல, ‘அப்புறம் என்னாச்சு, அங்கிள்..’ என அக்குழந்தை கேட்கையில் ‘face cut நல்லாருக்குன்னு அனுப்பிட்டாங்க’ என சொல்லி சிரிக்கிறார். 
மற்றொரு காட்சியில், தன் தந்தையை சுனாமி அலை அடித்துச் சென்ற சோகத்தை மாதவனிடம் சொல்லும்பொழுது ‘ஃபோட்டோ எடுறா என்னை, அலை வரும்போது... நல்லா வரும்ன்னாரு... ஃபோட்டோவும் நல்லா வந்துச்சு, அலையும் நல்லா வந்துச்சு... அப்பா போய்ட்டாரு’ என்பார். 
அந்த காட்சியில், முகத்தில் எந்த ரியாக்ஷனுமே காட்டாமல் ரொம்ப சாதாரணமாக அந்த சம்பவத்தை விவரிக்கும் கமல் அவர்களது நடிப்பு, அவர் ஒரு ‘நடிப்பு ராட்சசன்’ என்பதற்கான மற்றுமொரு சான்று.

முதல் சந்திப்பிலிருந்தே நல்லாவிற்கும் அன்பரசுக்கும், கொஞ்சம் கூட சரிப்பட்டு வரவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் அது தொடர்ந்துகொண்டே போவதால், அன்பரசுக்கு சிவம் மேல் வெறுப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. முதல் சந்திப்பில் சிவம் கையில் இருக்கும் வெள்ளரிக்காயைப் பார்த்து பைப் பாம்ப் வைத்திருக்கும் தீவிரவாதி என நினைப்பது, அரசைப் பார்த்து ‘தீவிரவாதிங்க என்னை மாதிரி அசிங்கமாலாம் இருக்கமாட்டாங்க, ரொம்ப அழகா இருப்பாங்க உங்களை மாதிரி’ என சிவம் நக்கலாக சொல்வது, தவறுதலாக அரஸ் கண்ணில் மிளகாய் பொடி விழுவது, சிவம் எச்சரித்தும் கேட்காமல் ஷவர் குழாய் தலையில் விழுந்து அரசுக்கு அடிபடுவது, வெயிட்டர் மீண்டுமொருமுறை தலையில் இடிப்பது, நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்திருத்து அரஸ் வரும்பொழுது ‘நல்ல வேளை... நீங்க ஆசைப்பட்ட மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல்ல ரூம் கிடைக்கல.. அங்கல்லாம் 5வது 6வது மாடியில ரூம் குடுத்திருப்பான்.. அங்கிருந்து விழுந்திருந்தா, என்ன ஆகுறது’ என சிவம் சொல்வது, சிவம் எச்சரித்தும் கேட்காமல் சார்ஜில் போட்டு தன் மொபைல் ஃபோனை அரஸ் வெடிக்க செய்வது, ஓட்டலில் பில்லிற்கு பணம் கட்ட அரஸின் ஷூக்களை சிவம் விற்பது என தொடர்ந்துகொண்டே இருக்கும் சண்டை, இரண்டாம் பாதியில் ‘முதலாளித்துவம் vs கம்யூனிசம்’ விவாதத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வது வரையிலும் தொடர்கிறது.

ஆனால், இந்த இருவருக்குள்ளுமான சண்டைகளும் விவாதங்களும், இந்த 3 நாள் பயணத்தில் A.அர்ஸ் சந்திக்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களும், அந்த ரயில் விபத்தும், சிறுவனின் மரணமும் அவருக்கு பல விஷயங்களை கற்றுத் தருகிறது. அதுவே, அவரை சிவம் விமான நிலையத்தில் சொன்னதைப் போல ‘முகத்தைப் பார்த்து கேரக்டரை சொல்லவே முடியாது... தீவிரவாதிகங்க அசிங்கமா இருக்க வேண்டிய அவசியமில்லை... நல்லவங்க அழகா இருக்க வேண்டிய அவசியமுமில்லை, சிவம் மாதிரி கூட இருக்கலாம்’ என அவர் வாயேலேயே சொல்ல வைக்கிறது. 
ஆம்புலன்சில் அந்த சிறுவன் இறக்கும் காட்சியில், சாவைப் பற்றியும் கடவுள் பற்றியும் மனிதம் பற்றியும் பேசிவிட்டு ‘A.அர்ஸ்... you are a good man’ என சிவம் சொல்லும் காட்சியில் இருவருக்குள்ளுமான இணக்கமும் நட்பும் பல மடங்கு கூடியிருக்கும். மிகச்சிறந்த வசனம் மற்றும் நடிப்பு என அந்த காட்சி, தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று!

நல்லசிவத்தின் பாத்திரத்தின் குணாதிசியங்களில் அந்த விபத்திற்கு முன்னும், பின்னும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும். ரொம்பவே துடிப்பான, கோபமிகுந்த சமூக ஆர்வலர் என்கிற நிலையிலிருந்து சற்றே தளர்ந்த ரொம்பவே பக்குவப்பட்ட மனிதராக மாறியிருப்பார். பூமியில் இந்த வாழ்க்கை நிலையானதல்ல, எதுவுமே உறுதி அல்ல, எது வேண்டுமானாலும் நடக்கலாம், வாழ்க்கை ஒரே நிமிடத்தில் மாறிப்போகலாம் என பல விஷயங்களை அவருக்கு அந்த விபத்து புரிய வைத்துவிடுகிறது. அதனால், அன்புதான் எல்லாவற்றிற்கும் மருந்து, மனிதநேயமே உலகத்தை மாற்றக்கூடிய சக்தி என்பதையும் உணர்ந்திருப்பார். 
அதே போல, படம் முழுக்க தனக்கு எந்த உணர்ச்சிகளும் செண்டிமென்ட்டும் இல்லை என்பதை போல தன்னை மிகவும் மனவலிமை உடையவர் போல காட்டிக்கொள்ளும் சிவம், அர்ஸ் தன்னிடம் ‘நீங்க எனக்கு அண்ணன் மாதிரி’ என சொன்னவுடன் சட்டென எமோஷனல் ஆகி ‘இதை ஏன் மொதல்லயே சொல்லல’ என குரல் உடைந்து நா தழுதழுக்க பேசுவார். அந்த காட்சியிலும் இருவரது நடிப்புமே அட்டகாசமாக இருக்கும்.

கொடூரமான விபத்தில் முகம் கோரமடைவது, மகள் திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டால் என பொய் சொல்லும் கந்தசாமி படையாட்சியின் வஞ்சம் என ஒரு புறமிருந்தாலும், நல்லசிவத்தை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி கவனித்துக்கொள்ளும் சிஸ்டர், மலை மேல் கடை வைத்திருக்கும் அக்கா என நல்லசிவத்துக்கு கிடைக்கும் புதிய உறவுகளுடன் ஃபிளாஷ்பேக் முடியும்பொழுது நல்லசிவம் புது மனிதனாக வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்க்கும்பொழுது பார்வையாளர்களாகிய நமக்கும் ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்படுகிறது.

15 ஆண்டுகள் கழித்தும் கூட, இன்றும் ‘அன்பே சிவம்’ கொண்டாடப்பட காரணம் – காலங்கள் தாண்டியும் பேசப்படுமளவிற்கு சொல்லப்பட்ட சில சித்தாந்தங்கள்.

மனிதநேயமும் அன்புமே கடவுள்

படத்தின் அடிநாதமே இதுதான். ‘முன்ன பின்ன தெரியாத பையனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே, அது தான் கடவுள்’, ‘ஒருத்தரை கொல்லணும்ன்னு வந்துட்டு, மனசை மாத்திக்கிட்டு மன்னிப்பும் கேட்குற மனுஷன் இருக்கானே... அதான் கடவுள்’ போன்ற வசனங்களும் அதையே சொல்கின்றன. படத்தில் ரத்த தானம் செய்ய சொல்லி வலியுறுத்தும் ஒரு காட்சியும் அற்புதமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் ரத்தம் குடுக்கலாம், ஒரு உயிரை காக்க ரத்த தானம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அப்படி எளிதாக சொல்வதைப் போன்ற காட்சியும் தமிழில் அதற்கு முன் வந்ததில்லை என்றே நினைக்கிறேன்.

கம்யூனிசம்

கம்யூனிசம் என்பது அரசியல் கொள்கையாகவோ அல்லது சித்தாந்தமாகவோ இளைஞர்களிடையேயும் மக்களிடையேயும் அதிகம் சென்றடையாத தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், கம்யூனிசம் பற்றிய வசனங்களையும் விவாதங்களையும் காண்பதே புதுமை தானே! ஒரு காட்சியில், “செகண்ட் கிளாஸ் டிக்கெட் தான் கிடைச்சிருக்கு... அந்த முழு டிரெயின்ல, ஃபர்ஸ்ட் கிளாஸே இல்லையாம்... பணம் குடுத்தா கூட, வசதி கிடைக்காத ஒரு நாடு இது… That’s India, for you” என்பார் மாதவன். அதற்கு பதிலளிக்கும் வகையில், “பணம் குடுத்தா எது வேணா எப்போ வேணா கிடைக்கும்ன்னு நெனைக்குறவங்க இருக்குற வரைக்கும்... That’ll be India, for you” என சொல்வார். அதற்கு “இப்போ.. சோவியத் யூனியன் இல்லைன்னா, கம்யூனிசமே இல்லைன்னு தானே அர்த்தம். அப்புறம் ஏன் அதைப் பத்தியே பேசிட்டு இருக்கீங்க?” என கேட்க, “இப்போ தாஜ் மஹால் இடிஞ்சு போச்சுன்னு வெச்சுக்கோங்க, நீங்கள்லாம் லவ் பண்றதை நிறுத்திடுவீங்களா? கம்யூனிசமும் அப்படித்தான், love மாதிரி அதுவும் ஒரு feeling. கார்ல் மார்க்ஸ் அதைப் பத்தி எழுதுறதுக்கு முன்னாடியே, பல பேருக்கு அந்த feeling வந்தாச்சு.” என பதிலளிப்பார். அதே போல, தெரு நாடகப் பாடலில் வரும் வரிகளும், ‘எலே மச்சி மச்சி’ பாடலில் ‘வாழ்க்கை புதையலப்பா, வலுத்தவன் எடுத்துக்கப்பா.. அவனவன் வயித்துக்குத்தான் வாழ்வது தப்பா?’ என்கிற மாதவனின் வரிகளிலும் அதற்கு அடுத்து ‘அடுத்தவன் வயித்துக்குள்ள, உன் உணவு இல்லையப்பா.. இளைச்சவன் பசிச்சிருந்தா, இந்த மண்ணு தாங்காதப்பா..’ என்கிற கமலின் வரிகளிலும் கூட கம்யூனிசமே பேசப்பட்டிருக்கும்.

உலகமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம்

படம் முழுக்க, கார்ப்பரேட் கம்பெனிகளையும் முதலாளித்துவ கொள்கைகளையும் சாடும் நிறைய கூர்மையான வசனங்கள் உண்டு. கமல் மாதவனைப் பார்த்து ‘வெளிநாட்டு கம்பெனிகளோட பொருட்களை டிவியில கூவி விக்குற selfish கூலி நீ’ என சொல்ல, ‘அது என் business.. அதைப் பத்தி, பேசாதீங்க’ என்பார். அதை கேலி செய்யும் வகையில், ‘சரி... பிசினஸ் பிசினஸ்ன்னு எல்லாத்தையும் தூக்கி குடுத்துட்டா எப்படி...? இப்போவே அவன் மஞ்சள், பாஸ்மதி அரிசி எல்லாம் தனதுன்னு சொந்தம் கொண்டாடுறான்… நீங்க பாட்டுக்கு காசு குடுக்குறான்னு குனிஞ்சு குனிஞ்சு சலாம் போட்டுட்டே இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்குறது முதுகுத்தண்டா இல்லை ரப்பர் துண்டான்னு சந்தேகம் வரும்ல?’ என சொல்வார்.

‘அன்பே சிவம்’ திரைப்படத்தின் உயிர் போல இருந்தது கமல்ஹாசன் அவர்களது நடிப்பே. அந்த மேக்-அப், ஒவ்வொரு வசனம் பேசும்பொழுதும் கழுத்தருகே வாய் துடிப்பது, வலது கால் குட்டையாக இருக்கும்படி நொண்டி நொண்டியே நடப்பது, ஒரு கையை மடக்கியே வைத்திருப்பது, பவர் கிளாஸ் பார்வைக்காக லென்ஸ் அணிந்தே நடித்தது என நடிப்பைத் தாண்டி, படம் முழுக்க அந்த தோற்றத்திற்காக அவரது மெனக்கெடலும் உழைப்புமே மலைக்க வைத்தது. இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதோ, அல்லது நடிப்பிற்காக கமல் அவர்களுக்கு தேசிய விருதோ கிடைக்காததும் ஆச்சர்யமே! ஆனால், அதே ஆண்டில் வெளிவந்த ‘பிதாமகன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தபொழுது அப்படத்தின் இயக்குனரும் கமல் ரசிகருமான பாலா ‘இந்த விருது அன்பே சிவம் திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும்’ என பெருந்தன்மையாக சொன்னார்.

கமலோடு ஒப்பிடுகையில் தனக்கு முக்கியத்துவம் குறைவு தான், தான் இரண்டாம் ஹீரோ போலத்தான் என தெரிந்தாலும் அதை ஒத்துக்கொண்டு, அதில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மாதவன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். ரொம்பவே சிறிய வேடமாக இருந்தாலும், மனதில் நிற்கும்படி பிரமாதமாக நடித்திருப்பார் உமா ரியாஸ். தமிழ் சினிமாவில் கிரண் நடித்த ஒரே படம் என்று கூட ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை சொல்லலாம், பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களின் டப்பிங் குரல் அந்த பாத்திரத்திற்கு இன்னும் அதிக இனிமை சேர்த்திருந்தது. மற்ற சின்ன சின்ன வேடங்களில் வந்த நாசர், சந்தான பாரதி, பவுன்ராஜ் போன்றோரும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தனர்.

படத்தின் ஒவ்வொரு பாடலிலும், பின்னணி இசையிலும் படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றிருந்தார் இசையமைப்பாளர் வித்யாசாகர். ‘யார் யார் சிவம்’ பாடலை இன்று கேட்டாலும், நம் உயிருக்குள் ஊடுருவி செல்கிறது. படத்தில் நிறைய முக்கிய காட்சிகளில் கலை இயக்கத் துறைக்கும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸிற்கும் நிறைய வேலை இருந்தது. ஒரிஸா வெள்ளம், ரயில் மோதல் விபத்து, கந்தசாமி படையாட்சியின் அலுவலகம், கமல் தங்கியிருக்கும் ஏரியா என படம் முழுக்க பெரிய பெரிய செட்கள் போடப்பட்டு தத்ரூபமாக எடுக்கப்பட்டன. கமல் அவர்களது படங்கள் என்றாலே ‘விஸ்வரூபம்’ ஆஃப்கானிஸ்தான் செட், ‘நாயகன்’ தாராவி செட், ‘ஹே ராம்’ செட், ‘விருமாண்டி’ பட ஜெயில் மற்றும் ஜல்லிக்கட்டு மைதான செட் என அவரது படங்களின் கலை இயக்கம் பெரிதும் பேசப்படும்; அப்படி, இந்த படத்திலும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கதை, திரைக்கதை, நடிப்பு, படம் உருவாக்கப்பட்ட விதம் என எல்லா வகையிலும் ஒரு குறையில்லாத படமாக இருந்த ‘அன்பே சிவம்’ ஏனோ வணிகரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், இன்றும் கூட டிவியிலும் torrentsஇலும் DVDயிலும் அதிகம் பார்க்கப்பட்டு மக்களால் பாராட்டப்பட்டும், ‘இந்த படம் ஏன்யா ஓடல?’ என கேட்கப்பட்டும் கொண்டிருக்கிறது! இன்று வரை, தமிழ் சினிமாவில் ‘அன்பே சிவம்’ போல மனிதாபிமானம் பற்றியோ அன்பை பற்றியோ இவ்வளவு அற்புதமாக பேசிய வேறெந்த திரைப்படமும் வரவே இல்லை என்பதே உண்மை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...