bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 31 மே, 2017

மாடுகளும் மனிதர்களும்....,

மறுக்கப்படும் உண்மை!
காவிப்படையினர் இந்திய மக்கள் மீது ஒரு உணவுக் கட்டுப்பாட்டைத் திணிக்கத் தொடர்ந்து முயன்று வந்திருக்கின்றனர். 

அந்த முயற்சிகளை, இப்போது மத்திய அரசே கையிலெடுத்துக்கொண்டுள்ளது. தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதிராக காவி உடையணிந்து போரைத்துவக்கி யுள்ளது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் ஒரு அக்கிரமமான திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம். மோடி அரசின் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டம் தொடங்குவதையொட்டி மே 25 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை, பகுத்தறிவற்ற, தாறுமாறான செயல்களுக்குத்தான் இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்குச் சான்றளிக்கிறது.


ஏற்கெனவே விரிவாக வந்துள்ள செய்திகளின்படி, ‘கால்நடை விதிகள் முறைமை -2017’ எனப்படும் இந்த 396வது அறிவிக்கை இந்தியா முழுவதும் கசாப்பு செய்வதற்காகக் கால்நடைகளை விற்பதற்குத் தடை விதிக்கிறது. 

கால்நடைகள் என்று இந்த அறிவிக்கையில் காளைகள், பசுக்கள், எருதுகள், எருமைகள், கிடாரிகள், கன்றுகள், இளங்கன்றுகள், ஒட்டகங்கள் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிக்கையின் தாக்கங்கள் என்ன? 
இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்?

விலங்குகள் கசாப்புக்குத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உரியது. 

இந்தக் காரணத்திற்காகத்தான், இமாசலப்பிரதேச உயர்நீதிமன்றம் 2016 இல் பிறப்பித்த ஒரு ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

பசுக்கள் கசாப்பு செய்யப்படுவதற்கு எதிராக ஒரு தேசிய சட்டம் இயற்ற வேண்டும் என்பது மத்திய அரசுக்கு இமாசலப்பிரதேச உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை. மத்திய அரசுக்கு அவ்வாறு சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.ஆனால், மத்திய அரசின் தற்போதைய அறிவிக்கை உச்சநீதிமன்றத் தடையாணையின் கண்ணில் மண்ணைத் தூவுகிறது. 

பசுக் கசாப்புக்கு தேசியத் தடை என்பதற்கு மாறாக, எல்லாக் கால்நடைகளையும் கசாப்புக்காக விற்பனை செய்ய ஒரு தேசியத் தடையை விதிக்கிறது.

 தற்போது பசுவதைத் தடைச் சட்டம் இல்லாத 6 மாநிலங்களையும் இந்த அறிவிக்கை உள்ளடக்குகிறது.எடுத்துக்காட்டாக வங்கம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மாடுகளைக் கசாப்பு செய்யத் தடை எதுவும் இல்லை. ஆனால், வங்கத்திலோ கேரளத்திலோ கால்நடைச் சந்தை ஒன்று நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம்.

கால்நடைகளின் உரிமையாளர் ஒருவர் தன்னுடைய கால்நடைகளை அந்தச் சந்தைக்குக் கொண்டுவருகிறார் என்றால், வாங்க வந்த ஒருவர் அவற்றைக் கசாப்புக்காக வாங்குகிறார் என்றால் அவர் விற்பதும் இவர் வாங்குவதும் இந்த அறிவிக்கையின்படி சட்டவிரோதச் செயல்களாகும்.அடுத்து, எருமைகளை கசாப்பு செய்யக்கூடாது என்ற தடை எந்த மாநிலத்திலுமே இல்லை. தற்போதைய அறிவிக்கையோ நடைமுறையில் அதற்குத் தடை போடுகிறது. 

பயனற்றதாகிவிட்ட ஒரு எருமையை, கசாப்பு நோக்கமன்றி வேறு எதற்காக விற்கப்போகிறார்கள்? 
ஆக, இந்த அறிவிக்கை மாநிலங்களின் உரிமைகள் மீதும், அரசமைப்பு சாசனக் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதும் ஒரு நேரடி ஆக்கிரமிப்பேயாகும்.

கொடூரச் செயல்
கால்நடை வணிகத்தையே குற்றமாக்குகிற ஒரு கொடூரமான செயல்முறையை இந்த அறிவிக்கை ஏற்படுத்துகிறது. அத்துடன், விற்கப்படுகிற ஒரு விலங்கு விவசாய நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தப்படுமேயன்றி கசாப்புக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை விற்பவர் மீது சுமத்துகிறது.

கால்நடைச் சந்தைக்குத் தனது விலங்கைக் கொண்டுவரக்கூடிய ஒரு விவசாயிக்கு, அதை வாங்குகிறவரின் நோக்கம் என்ன என்பது எப்படித் தெரிந்திருக்க முடியும்?

வாங்குகிறவரின் பிரச்சனையைப் பார்த்தால், எப்படிப்பட்ட ஒரு அவசரக் காரணம் ஏற்பட்டாலும் கூட, அவரால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தான் வாங்கிய கால்நடைகளை விற்கமுடியாது. விலங்குகள் விற்கப்படுவதிலும் வாங்கப்படுவதிலும் ஒரு தீவிரமான அரசாங்கக் கண்காணிப்பு இருக்கும். பெருமெடுப்பில் அதிகார வர்க்கத்தின் பிடி இருக்கும். 

‘சிறிய அரசாங்கம்’ ஏற்படுத்தப்படுவதாகவும், ‘அதிகாரிகள் ராஜ்யம்’ முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாகவும் சொல்லிக்கொண்ட ஒரு அரசு இப்படி அதிகார வர்க்கத்தின் பிடியை இறுக்குவது வேடிக்கைதான்.விவசாயிகள் இதனால் வீண் தொந்தரவையும் ஊழலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அப்படிப்பட்ட நிலைமை மட்டும் ஏற்படாதென்றால் சோதனை அதிகாரிகள் மாட்டுத் தொழுவத்திற்கு வெளியேயிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பது நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும்.ஏற்கெனவே பசுக் காவல் என்ற பெயரில் கட்டுக்கடங்காத ரவுடித்தனம் பரவியிருக்கிறது. 

இந்த அறிவிக்கை அப்படிப்பட்ட பசுக் காவல் கும்பல்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக வந்திருக்கிறது. இனி அவர்கள், விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது என்ற போர்வையில் எல்லோரையும் பீதி வசப்பட வைப்பதற்கு உரிமம் பெற்றவர்களாகிவிடுவார்கள்.

கைவிடப்படும் பசுக்கள்
எடுத்துக்காட்டாக ஹரியானா மாநிலத்தை, ஏன் குஜராத் மாநிலத்தையே கூட எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு மாநிலங்களிலும் பசும் பால் உற்பத்தியைவிட, எருமைப் பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இது இந்த மாநிலங்களில் விவசாயிகளிடையே எந்த மாட்டை வளர்ப்பது என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. 

இந்த இரண்டு மாநிலங்களில்தான் தெருவில் திரியும் பசு மாடுகள் மிக அதிகம். கவனிப்பாரின்றி, அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டுத் திரிகிற பசுக்கள் அவை.
இதற்கு மாறாக வங்கம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் எருமைப் பால் உற்பத்தியை விட பசும் பால் உற்பத்தி அதிகம். தெருக்களில் திரியும் பசுக்களின் எண்ணிக்கையோ குறைவு.

இந்தியாவின் விவசாயிகள் ஏற்கெனவே பெரும் துயரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 

சராசரியாக நாளொன்றுக்கு 32 தற்கொலைகள்.விவசாய மேம்பாட்டுக்காக எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்ற தனது வாக்குறுதியிலிருந்து மத்திய அரசு பின்வாங்கிவிட்டது.

இதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு விவசாயமே இழப்பை ஏற்படுத்தும் தொழிலாகிவிட்டது.விவசாய விளைபொருட்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயிப்பதில், அதன் உற்பத்திச் செலவோடு, குறிப்பிட்ட அளவுக்கு குறைந்தபட்ச லாபம் கிடைக்கத்தக்க வகையில் கூடுதல் விலை முடிவு செய்யப்படுவதே ஒரு அடிப்படை அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தது. 

அத்தகைய ஆதரவு இல்லாத நிலையில் கால்நடை வளர்ப்பும், விற்பனையும்தான் விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான மாற்று வருவாய் வழியாக இருக்கிறது. 

இத்தகைய நிலையில் விலங்குக் கசாப்புக்கு எதிரான கடும் சட்டங்களின் காரணமாக, பல மாநிலங்களில் காளைகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ள சூழலில், கால்நடை விலைகள் செங்குத்தாகச் சரிவடைந்துள்ளன. 
மறுக்கப்படும் உண்மை
மாட்டிறைச்சி உணவுப் பழக்கத்திற்கு எதிராக ஒரு உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்குத் தங்களது மத நம்பிக்கையையும் உணர்வையும் பயன்படுத்துகிறவர்கள், எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் பொதுவாக எருமைக் கறி உணவுதான் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற உண்மையை மறைக்கிறார்கள். 

மாட்டுக்கறி என்பதற்குள் எருமைக் கறி உள்ளடங்குகிறது என்ற உண்மையையும் மறைக்கிறார்கள். பக்தகோடிகள் செய்கிற வெறித்தனமான பிரச்சாரத்தில், பசுக் கொலைக்காக மனிதக் கொலை நியாயப்படுத்தப்படும் நிலையில், உண்மைகள்தான் எப்போதுமே பலியாகின்றன.

கசாப்பு செய்யப்படும் கால்நடைகள் (காளை, பசு இரண்டுமே) ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கையில் 1.6 விழுக்காடு மட்டுமே என அமைச்சகத்தின் வலைத்தளம் காட்டுகிறது. 

மொத்தமுள்ள எருமைகளில் கசாப்பு செய்யப்படுபவை 10.2 விழுக்காடு. சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிற, நாடு முழுவதும் சாதி, இன வேறுபாடின்றி கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கிற பகைமைப் பிரச்சாரம் எவ்வளவு போலித்தனமானது என்பதைத்தான் இது காட்டுகிறது. 

இந்த அறிவிக்கையை எதிர்ப்பதில் முன்னால் நிற்கிறது கேரள அரசு. மத்திய அரசு இதனை விலக்கிக் கொண்டாக வேண்டும்.
                                                                                                                                             - பிருந்தா காரத் 
நன்றி: என்டிடிவி
தமிழில்: அ. குமரேசன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------பசுக்களும் எருமைகளும்

மத்திய கால்நடைத் துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது வலைத்தளத்தில் மாடுகள் பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிடுகிறது. 
அது, மாடு வளர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான விளக்கமளிக்கிறது. 
அந்தக் கணக்குகளின்படி உள்நாட்டுப் பசு - அதாவது ‘ஒரிஜினல் கோமாதா’ - நாள்தோறும் சராசரியாக இரண்டரைக் கிலோ பால் தருகிறது. கலப்பினப் பசு சுரக்கிற பால் சராசரியாக 7.15 கிலோ.
ஆனால் அதனை வளர்த்துப் பராமரிக்கிற செலவு அதிகம். 
எருமைப் பசுவிடமிருந்து சராசரியாக 5.15 கிலோ பால் கிடைக்கிறது.இங்கே, வேறு எதையும் விட பொருளாதார அக்கறைதான் மேலோங்குகிறது. 
ஆகவேதான் மாட்டுப் பண்ணை வைத்துள்ள விவசாயிகள் பெரும்பாலோர் கோமாதாவை விட்டுவிட்டு எருமைப் பசுவுக்கு மாறிவிட்டார்கள்.
மேலும் எருமைப் பசுவுக்கு பால் வற்றுகிறபோது அதைக் கசாப்புக்காக விற்பதும் எளிது.
ஆனால் 396வது அறிவிக்கை இப்போது எருமைகளை விற்பதும் கூட ஒரு குற்றம்தான் என்கிறது. பசுவிலிருந்து எருமைக்கு மாறிய விவசாயிகள் இனி அவற்றை விற்பது கடினமாகிவிடும். 
இது பால் உற்பத்தித் தொழிலில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஏற்றப்படும் சுமை

கால்நடை வளர்ப்பில் ஒரு விவசாயிக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 35,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் வரையில் செலவாகிறது. 

இதில், ஒரு தனி மாட்டை பராமரிக்கக் குடும்பமே அளிக்கிற உழைப்பு, குறிப்பாக பெண்களின் உழைப்பு, சேரவில்லை. மாடு பயனற்றதாகிவிட்ட பிறகு அதனை கசாப்புக்காக விற்க முடியாது என்றால் முழுச் சுமையும் விவசாயியின் தலையில்தான் விழும்.

விவசாயிகளோடு சேர்ந்து, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், குறிப்பாக ஆண்டுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எருமை இறைச்சித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். லட்சக்கணக்கான இறைச்சிக் கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தோல் பதனிடும் தொழிலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்குகிறது. சுமார் 25 லட்சம் பேருக்கு அது வேலைவாய்ப்பு வழங்குகிறது. சங்கிலித் தொடர் போன்ற தோல் தொழில் இந்த அறிவிக்கையால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

மக்களின் ஊட்டச்சத்து நிலையிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த மக்களிலும் கணிசமானோர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவிக்கிறது.

நாட்டின் ஏழை மக்களுக்கு மாட்டிறைச்சிதான் ஒரு மலிவான ஊட்டச்சத்து ஆதாரம். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடும் ரத்தசோகையும் இந்தியாவில் மிக அதிகமாக நிலவுகிற காலகட்டத்தில் இப்படியொரு தடை வருகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன‌க்கும் த‌ன் குடும்ப‌த்துக்குமே உண‌வுக்கு ப‌ற்றாக்குறை இருக்கையில், வ‌ய‌தான‌, உழ‌வுக்கு ப‌ய‌ன‌ற்றை மாட்டை எப்படி விவசாயி பராமரிப்பார்? அவற்றுக்கு உணவளிப்பார்? வ‌ய‌தான‌ மாடுகள் என்றால் அதை விற்க‌வும்கூட‌ அனுமதிக்க முடியாது என்ற தோரணையில் சட்டம் இயற்றியுள்ளது மத்திய அரசு. இவ்வளவு விதிகளும் மாடுகளை காப்பாற்றுவதற்காகவா என்றால் நிச்சயமாக இல்லை. இது மீண்டும் நாட்டு மாட்டு இனங்களை அழித்தொழிக்கும் பணியே என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாட்டுப் பசு இனங்கள் இப்போதே அழிவின் விளிம்பில்தான் உள்ளன. இந்த விதிமுறைகளால் அவை எல்லாம் நாளடைவில் முற்றிலுமாக அழிந்து போய்விடும். அதற்கு மேற்பட்ட காலங்களில் பாலுக்காக முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பசுக்களான ஜெர்சி இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டும். அவ்வகை பசுக்கள் மந்தை மந்தையாக இந்தியாவிற்கு வந்து இறங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
1.4 பில்லிய‌ன் ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்த நாட்டில் உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் உள்ளிட்ட பலத்தரப்பட்ட உணவுத் தேவைகளுக்காக சராசரியாக 100 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது.  மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டுகிறது. 
ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட‌, மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய்க்கு பால் வணிகப்படுகிறது. அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 14,40,000 கோடி ரூபாய்க்கு பால் வணிகம் நடந்துகொண்டிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 30 மே, 2017

மோடியின் சாதனை

ராணுவத்திலும் தனியார் மயம்.


படு பயங்கரமான முதலாளித்துவக் கொள்கை கொண்ட  நடுகளில் கூட  காவல்துறை,நீதித்துறை,ராணுவம் தனியார் மயம்,அந்நிய மயமாக்கள் கிடையாது.
மோடியின் பிதாமகன் தாராளமயமாக்கல் தாதா அமெரிக்காவில் கூட ராணுவத்தில் தனியார்களை பென்டகன் உள்ளே நுழைய விடுவதில்லை.
டாங்க்கியில் உள்ள சின்ன துருக்கு கூட அதற்கான பாதுகாப்பான தொழிற்ச்சாலையில்தான் செய்யப்படுகிறது.
அங்கு தனியார் ஆயுதத் தொழிற்சாலைகள்,ஆயுத வியாபாரிகள் அதிகம்.
ஆனால் அவைகளின் விற்பனை தளங்கள் அந்நிய நாடுகள்,தீவிரவாதிகள்,கொரில்லாக்கள்தாம்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை தன நாட்டில் உள்ள ஆயுதவியாபாரிகளிடம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை.காரணம் அமெரிக்காவுக்கு எக்கசக்க எதிரிகள்.
அதேபோல் இந்தியாவுக்கு எப்போதும் குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தான்,எப்போதாவது எல்லை மீறும் சீனா என்றும் உள்ளே தீவிரவாதிகள்,நக்சல்கள் என  எதிரிகள் .
இப்படிப்பட்ட நிலையில் ராணுவத்தில் தனியார்களை நுழைப்பது,அவர்களிடம் ஆயுதங்கள் வாங்குவது சரியான மனநிலை உள்ளவர்கள் செய்யும் காரியமா?
தனியாராகில் தங்கள் லாபத்தை அதிகரிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் .அவர்களுடன் கொஞ்சி குலஸ்வும் மோடிக்கு தெரியாததல்ல.
குட்டி நாடும்,அமெரிக்காவிற்கு கொடுங்கனவாகவும் உள்ள வட கொரியாவே தனது நாட்டில் விதவிதமாக ஆயுதங்களை தயாரித்து அமெரிக்காவுக்கு வேடிக்கை காட்டி வயிற்றே ச் சலை கொட்டி வரும் பொது இந்தியா இப்படி செய்வது புத்திசாலித்தனமா ?

மோடி அரசாங்கம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. 

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்குவதற்கு இந்திய மற்றும் அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றன.இது நாட்டின் இறையாண்மை மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக "பீப்பிள்ஸ் டெமாக்ரசி" ஏட்டின் தலையங்கத்தில் (மே 28) கூறப்பட் டுள்ள அம்சங்கள் வருமாறு:ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான புதிய கொள்கையை பாது காப்பு அமைச்சகம் இறுதிப்படுத்தி இருக் கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள ஆறுநிறுவனங்களை அரசு அடையாளம் கண்டி ருக்கிறது. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபடும்.

தனியாருடன் இணைந்து ஹெலி காப்டர்கள், ஒரு என்ஜின் உள்ள போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயுதந்தாங்கிய கனரக வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்க இருக்கிறார்கள்.ஏற்கனவே சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தியில் நுழைந் திருக்கின்றன.

டாட்டா குழுமம், ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், ரிலையன்ஸ் அடாக் (அனில் திருபாய் அம்பானி குழுமம்), மகிந்திரா குழுமம், லார்சன் & டுப்ரோ, பாரத் போர்ஜ், இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் முதலானவை இவ்வாறுநுழைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களி லிருந்து முதல் ஆறு கூட்டாளிகள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தபோதே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான திட்டம் உருவாகிவிட்டது. தொழில்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஏற்கனவே நம்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங் கள் செய்துகொள்ளப்ப ட்டிருக்கின்றன.

தற்சமயம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் பெரும்பகுதி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துப்பாக்கித் தொழிற் சாலைகளால் (ordnance factories) மேற்கொள்ளப்பட்டு வந்தன. 
இவ்வாறு பொதுத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த உற்பத்தியில் 60 இலிருந்து 70 சதவீதம் வரைக்குமான உரிமங்களை அரசு ரத்து செய்துவிட்டது. பொதுத்துறையில் உற்பத்தி செய்து வந்த தளவாடங்களில் முதல்கட்டமாக 25 சதவீதத்தைத் தனியாரிடம் தாரைவார்த்திட, அரசு திட்டமிட்டிருக்கிறது.

தனியார்துறையினர் ராணுவத் தள வாடங்கள் உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதையொட்டி, அவர்கள் ராணுவம் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்கான வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML-Bharat Earth Movers Ltd) என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளில் 26 சதவீதம் முதல் கட்டமாக தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் ராணுவம் சம்பந்தப்பட்ட மிகவும் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். 

மிகவும் கேந்திரமான இத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்திருப்பதானது, தனியார்துறையில் இயங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த குதூகலத்தை அளித்திருக்கிறது.

ராணுவ உற்பத்தித்துறையைத் தனியாரிடம் தாரைவார்ப்பதில் நாட்டின் இறையாண்மைப் பிரச்சனையும் மிகவும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்நிய ஆயுத உற்பத்தியாளர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை, இந்திய – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுடனான கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துப் பரிவர்த்தனை ஒப்பந்தத்துடன் இணைத்துப் பார்த்திட வேண்டும்.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு என்னவிதமான ஆயுதங்கள் தேவை என்பதையும் அந்நிய மற்றும் இந்திய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டளை பிறப்பித்திடும்.ஏற்கனவே, அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ராணுவம் மற்றும் பொறியியல் கம்பெனி குஜராத் மாநிலம், பிபவாவ் என்னுமிடத்தில் உள்ள தன்னுடைய கப்பல்கட்டும் கம்பெனியில் அமெரிக்காவின் கடற்படை போர்க்கப்பல்களைப் பழுது பார்த்திடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. 

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

ஆயுத உற்பத்தியில் இந்திய கார்ப்பரேட்டுகள் அமெரிக்க ராணுவத்தின் ஆயுத உற்பத்தி யாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி இருப்பது என்பது மிகவும் கேந்திரமான துறை யான ராணுவம் மற்றும் ராணுவம் சம்பந்தமான கொள்கைகளை வடிவமைப்பதில், இந்தியாவின் இறையாண்மைமீதான ஆக்கிரமிப்பு முத லானவை குறித்து பல்வேறு சங்கடத்திற்குரிய கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.

ஆயுத உற்பத்தியில் பெரிய கார்ப்பரேட்டு கள் நுழைந்திருப்பதானது, இந்தியாவில் ‘ராணுவ தொழில் வளாகம்’ (military industrial complex)) அமைப்பதற்கான அடித்தளளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆயுத உற்பத்தியில் கார்ப்பரேட்டுகள் அதிகரித்துக்கொண்டி ருப்பது, இந்தியாவின் ராணுவ ரீதியான ராஜதந்திர மற்றும் அயல்துறைக் கொள்கையிலேயே கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.

அமெரிக்காவில், ராணுவ உற்பத்தியில் பெரும் ஆயுத உற்பத்தியாளர்கள் ஈடுபட்டி ருப்பது அந்நாட்டின் ராணுவமயத்திற்கு ஒருதூண்டுவிசையாக இருக்கிறது என்பதைநாம் அனுபவபூர்வமாக பார்த்துக்கொண்டி ருக்கிறோம். அதேபோன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும். 

இங்கேயும் பிராந்தியவெறியை அதிகப்படுத்தி, ஆயுத மோதல்களை உருவாக்குவதற்கான வேலை களில் தனியார் ஆயுத உற்பத்தியாளர்கள் இறங்குவதற்கான சூழலை ஏற்படுத்திடும்.இவை நம்முடைய மிகவும் முக்கியமான முன்னுரிமைகளான நாட்டின் வளர்ச்சி மற்றும்சமூகநலம் ஆகியவற்றையே ஆபத்திற்குள்ளாக் கிடும், சீர்குலைத்திடும். 

ராணுவ உற்பத்தியில் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். 

அதற்குப் பதிலாக பொதுத்துறையில் தற்போது நடை பெற்றுவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியை விரிவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். 

இதற்குத் தேவையான அளவிற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும்.

சனி, 27 மே, 2017

தவ வாழ்வு

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
ஆனால் அவை நேர்மறை எண்ணங்களுக்கு பதிலாக எதிர் மறை பலன்களையே தருகிறது.
 தனது தொகுதி மக்களை காண, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் சென்றுள்ளார். அதற்கு ஒருநாள் முன்னதாக அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள்  தலித் மக்களுக்கு சோப்பு, ஷாம்பு, செண்ட் உள்ளிட்டவை கொடுத்தனர்.
அக்காலையில்  அனைவரூம் கண்டிப்பாக பல்லை விளக்கி சோப்பு,ஷாம்பு போட்டு சுத்தமாக குளித்து, மேலே சென்ட் தெளித்து தயாராக இருக்குமாறும்,முதல்வர் வந்து செல்லும்வரை சுத்தபத்தமாக இருக்கவும் ஆணையிட்டுள்ளனர்.

 அப்பகுதியில் புதிதாக தெரு விளக்கு, சாலை, கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முதல்வர் வந்து சென்றபின்னரே கழிப்பறைகளை உபயோகிக்க வேண்டும் என்றும் ஆணை.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதிகளால் உயிரிழந்த  ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த கிராம் ஒன்றுக்கு சென்றபோது அக்கிராமத்திற்கு புதிதாக சாலை ,தெரு விளக்குகள் அமைத்ததும் துக்க வீட்டில் புதிதாக பெயிண்ட் அடித்து குளிர் சாதனம் பொருத்தியதுடன் சாலையில் இருந்து வீடுவரை இரத்தின கம்பளம் விரித்ததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதைவிட அசிங்கம் முதலவர் யோகி காரில் ஏறியவுடனேயே குளிர்சாதனம்,சாலை வசதிகள் அகற்றப்படடதுதான் .
சாமியாராக இருந்த முதல்வர் யோகிக்கு இப்படிப்பட்ட ஆடம்பர ,அலங்கார வசதிகள் அதிகாரிகள் செய்துதருவது அவற்றின் உத்திரவுப்படிதான் என்பது மாநிலம் முழுக்க அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இங்கு தமிழ் நாட்டிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படித்தான் ஆடம்பர,அலங்கார வசதிகள் அவர் செல்லும் இடங்கள்தோறும் செய்யப்பட்டன.
இருவருக்கும் உள்ள ஒற்றுமை "இருவருமே தவ வாழ்வு வாழ்ந்துதான்."
அம்மாவின் தவ வாழ்வு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேன் - சீரக தண்ணீர்
தினமும், தேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

சமையலறையில் உள்ள பொருட்கள், பெரும்பாலும் நம் உடல்நலனை பாதுகாக்கப் பயன்படுகின்றன. அவற்றை கண்காணிக்காமல், நாம் அடிக்கடி மருத்துவர்களிடம் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.


மருத்துவரிடம் செல்வதை குறைத்து, சமையலறையில் உள்ள பொருட்களின் உண்மை பயனை தெரிந்துகொண்டு, உபயோகித்து நலவாழ்வு வாழ முயற்சிப்போம்.

ரத்த அழுத்தம், மலச்சிக்கல் உள்ளிட்ட நவீன கால நோய்களுக்கு, நல்ல மருந்தாக, தேன் கலந்த சீரக தண்ணீர் உள்ளது. 

செய்முறை:
சீரகம், தேன், தண்ணீர்.

தண்ணீரை கொதிக்க வைத்து, சீரகத்தை போட்டு, அதனை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். பின்னர், தேன் கலந்தால், இந்த பானம் தயார்.

பயன்கள்:
1) சீரக பானத்தை தினசரி குடிப்பதால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, ரத்தம் சுத்தமாகும். ரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.

2) இதேபோன்று, செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.

3) மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.

4) சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.

5) தேன் கலந்த சீரக தண்ணீர், ரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.

6) சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.

7) தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 24 மே, 2017

அன்றைய செய்தி இன்றைய வரலாறு

நேற்றைய  செய்தி இன்றைக்கு வரலாறு.


வரலாறு கேட்கக் கதை போல் இருந்தாலும் அதை அனுபவித்தவர்கள் துன்பங்கள் தழும்புகளாக மாறுவதுடன் அவர்களை இந்த உலகை புரிய வைத்து பக்குவவப்படுத்தி விடுகிறது.
அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது நமது தவறுதான்.

இயற்கையும் காலமும் நமக்கு நாளத்தூரும் பாடங்களை நடத்தி நமக்கு  பகுத்தறிவை தந்து  பக்குவப்படுத்தி வைக்கத்தான்  செய்கிறது.

கடந்த கால அனுபவங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடம் படித்ததே இல்லை.
அவர் எம்.ஜி.ஆருடன் ,கலைஞருடன் அரசியல் செய்தும் இருவரின் பெருந்தன்மையை அவர்  கொஞ்சமாவது கற்றுக்கொண்டதில்லை.

அதிகாரம் இருக்கிறது என்பதால் காரணமே இல்லாமல் நள்ளிரவில் கலைஞரை வீட்டை உடைத்து,அவரை அடித்து உதைத்து இழுத்து கைது செய்தார்.

ஆனால் அவர் மீது குற்றம் சாட்ட காரணம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது.

ஆனாலும் ஜெயலலிதா கடைசிவரை ஆணவத்தின் உச்சமாகத்தான் இருந்தார்.அதனாலே அழிந்தரர்.
எப்படி இறந்தோம் ,என்று இறந்தோம்,என்பதையே அறியா இழி மரணம்.

ஆனால் அவர் அழிக்க நினைத்த கலைஞரோ  ஜெயலலிதா மரணத்துக்கும் அஞ்சலி செலுத்தும் உயரத்திலேயே வாழ்கிறார்.


இனி அன்றைய 2001 கரும் நள்ளிரவு வரலாறு..

நள்ளிரவில் கொலைகார காவல்துறையால் குண்டுகட்டாக கலைஞரை தூக்கி எறியப்பட்ட அவரின் காரினுள் இரண்டு மஃப்டியில் இருந்த காவல்துறையினர் அமர்ந்து கொள்ள வேப்பேரி காவல்நிலையத்துக்கு போனதும் காவல்நிலையத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டன.

வெளியே நிருபர்கள் மீதும் கழகத்தினர் மீதும் லத்திசார்ச்.. கேட் இடுக்கில் மாட்டிக்கொண்ட பெண் நிருபர் மீது தடியடி நடத்த.. அவரது கால் முறிகிறது.
சாலையே தெரியாத அளவுக்குக் குவிந்துகிடந்த போலீஸார், நீதிபதியின் குடியிருப்புக்கு 100 அடி தூரத்திலேயே நிருபர்களைத் தடுத்து நிறுத்தினர்.

''செய்தி சேகரிப்பது எங்கள் உரிமை!'' என்றபடி நிருபர்கள் முன்னேற, '
'உங்களைத் தடுப்பது எங்கள் கடமை!'' என்று வக்கிரமாகச் சொன்ன ஒரு போலீஸ் அதிகாரி,
 லத்தி சார்ஜுக்கு உத்தரவு போட்டார்.

போலீஸ் ஸ்டேஷனை நெருங்க முயன்ற நிருபர்களுக்கு, அங்கேயும் காட்டுத்தனமான தாக்குதல் பரிசாகக் கிடைத்தது.

விழுந்த அடிகளில் இரண்டு மூன்று கேமராக்கள் நொறுங்க, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கிடைத்த இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து ஓடினார்கள் நிருபர்கள்.

அதில் பெண் நிருபர்களைக்கூட விடாமல்... அவர்கள் தரையில் தடுக்கி விழுந்தபோதும் லத்தியால் தாக்கித் தள்ளியது போலீஸ்.

''சிறையில் அடைக்கப்படும்வரை கலைஞரை யாரும் ஒரு புகைப்படம்கூட எடுத்துவிடக் கூடாது. அவருடன் யாரும் ஒரு வார்த்தைகூட பேசிவிடக் கூடாது.


அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் இருந்து வந்த உத்தரவுதான் இத்தனைக்கும் காரணம் என்று பிற்பாடுதான் புரிந்தது.
கலைஞரை அப்படியே நிற்க வைத்து இருப்பதை பார்த்த அவரது மருத்துவர்.. "சார் அவருக்கு "வார்டிகோ" பிரச்சினை இருக்கு.

பத்து நிமிஷத்துக்கு மேல அவர் நிற்கக் கூடாது " என்ற போது.. "ஆங்.. அவரை பட்டு மெத்தையில் வச்சி பராமரிக்கவா" ன்னு கமென்ட் வந்த போது காவல்துறையின் கொடூற குணம் புரிய ஆரம்பித்தது.
கலைஞருக்கு என்னவேனாலும் ஆகும் நிலை..
அடுத்தடுத்து வந்த கார்களில் கலைஞரின் குடும்பத்தினர்..
கடைசியாக வந்த காரில் மாறன் வந்திறங்கிய போது ஒட்டுமொத்த கூட்டமும் நடுங்கித்தான் போனது.
நார்நாராக வேட்டி கிழிந்து உள்ளே இருக்கும் அன்டர்வேர் தெரிய தள்ளாட்டத்துடன்... ஓட்டமும் நடையுமாக வந்தவர் " நான் வயசானவன்.. ஹார்ட் பேஷன்ட்... மார்பில குத்திட்டாங்க.

ரொம்ப அடிச்சிட்டாங்க... முடியல, என்னால முடியல" ன்னு கதறிய போது.. அருகிலிருந்த துரைமுருகன் வாய்விட்டு "அய்யோ... அண்ணா... அய்யோ" என்று தலையில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு அழத் தொடங்கி விட்டார்.
உரத்த குரலில் கேள்விகள் கேட்ட முரசொலி மாறனின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார் ஒரு போலீஸ்காரர்.
இன்னொருவர் ஸ்டேஷனுக்குள் இருந்த நாற்காலியை அவரை நோக்கி எட்டி உதைக்க, மாறனின் காலில் சுளீரெனத் தாக்கியது அந்த நாற்காலி.

இதனைத் தொடர்ந்து மாறன் வாய்விட்டு அலறியது ஸ்டேஷனுக்கு வெளியிலும் கேட்டது.
"தலைவரின் செருப்பை கூட போட்டுக்க அனுமதிக்கல பாவிங்க.
இந்தா கொண்டாந்துருக்கேன்" என்று அவர் கையிலிருந்த கலைஞரின் வெள்ளை நிற செருப்பை நீட்ட.. அவரின் பேச்சை கூட கேட்கிற நிலையில் இல்லாத மாறன் கண்கள் குத்திட்டு வெறிக்க வெளிவாணத்தை பார்த்தவாறே நீதிபதியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ரிமாண்ட் போடப்பட்டு வெளியே வந்த கலைஞரின் சட்டை கிழிந்து.. வேட்டியை மார்புவரை அவரே தூக்கி பிடித்து தள்ளாடி நடந்து வந்த போது, குடும்பத்து பெண்கள் கதறியழ, கலைஞர் கைகளால் ஆறுதல் சொல்லி போலீஸ் வண்டியில் ஏறினார்.
கலைஞரை பொதுமருத்துமனைக்கு மருந்துவ சோதனைக்கு அழைத்து போவதாக சொன்ன பாவிகள் அரைமணிநேரம் அவரை அலைகழித்து... யாருடைய உத்தரவை பெற்றனரோ, மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்ன மாஜிஸ்திரேட் உத்தரவை மீறி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜெயில் வளாகத்தை நெருங்க முடியாத அளவில் பாலத்துக்கருகே அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன.
"தலைவா.. நீ சம்பளத்தை உயர்த்தி கொடுத்த போலீஸ்காரனே உன்னை அடிக்கறதை தாங்க முடியலையே" ன்னு தொண்டர் ஒருவர் மயங்கி விழ அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
சிறையின் முன்பு இருந்த சிமென்ட் தளத்தில் அப்படியே சப்பணமிட்டு அமர்ந்த கலைஞர் ஓங்கி உயர்ந்த சிறைக் கட்டடத்தை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார். குடும்ப டாக்டர் கோபாலும், கனிமொழியும் அடக்க மாட்டாமல் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கனிமொழி, மேலே நிமிர்ந்து பாலத்தின் மேலே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, ''தலைவருக்கு சிறைச்சாலை பயம் இல்லை... ஆனால், நீதிபதி உத்தரவு போட்ட மருத்துவ வசதி எதுவும் சிறைச்சாலைக்குள் அவருக்குக் கிடைக்கப்போவது இல்லை. அவரைச் சிறையில் தள்ளினால் மறுபடி பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான்...'' என்று சொல்லிக் கதறினார்.
அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தார் துர்கா. அவர் மகன் உதயநிதியும் மகள் செந்தாமரையும் இறங்​கினர்.
''போட்டுட்டாங்களா... நிஜமாவே தலைவரை உள்ளே போட்டுட்டாங்களா?'' என்று நம்ப முடியாதவராக மறுபடி மறுபடி நிருபர்களிடம் கேட்டார் துர்கா.
''உங்கள் வீட்டுக்குள்ளும் போலீஸ் புகுந்ததாமே...?'' என்று நிருபர்கள் கேட்க,

''ஆமாம். மேயரைத் தேடிக்கிட்டு வர்றதா சொன்னாங்க. அவர் வீட்டில் இல்லைனு சொன்னபோதும், எங்களைத் தள்ளிவிட்டுட்டு உள்ளே புகுந்து சூறையாடினாங்க. வாசல் கேட்டில் தொடங்கி, உள்ளே இருக்கிற அறைகள்வரை கைக்குக் கிடைத்ததை எல்லாம் உடைச்சுத் தள்ளினாங்க.

பொம்பளைனுகூடப் பார்க்காம திரும்பத் திரும்பக் கையைப் பிடித்து இழுத்து. 'உன் புருஷன் எங்கேனு சொல்லு!?’னு என்னை சித்ரவதை பண்ணாங்க...'' என்று துர்கா சொல்ல,
மகள் செந்தாமரை, ''இவ்வளவு பத்திரிகைகாரங்க நாட்டில் இருக்கீங்களே... இந்தக் கொடுமையை யாருமே தட்டிக் கேட்க மாட்டீங்களா?''
என்று தாயின் தோளில் சரிந்து விம்மினார்.
ஸ்டாலின் மகன் உதயநிதி நம்மிடம், ''எதுக்குக் கைது... வாரன்ட் இருக்கா? என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. '

உங்கப்பன் பயந்து ஓடிட்டானா?’னு எகத்தாளமா என்னைக் கேட்டாங்க. இப்ப எங்க அப்பா எங்கே இருக்கார்னே தெரியலை...'' என்று உதயநிதி குமுறி அழுதார்.


அப்போது சென்னைக்கு உள்ளேயே தளபதியை மடக்கிக் கைது செய்யப்பட்டதாக செல்போனில் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அனால், அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிந்தது
நீதி கேட்டு வாசலில் அமர்ந்து கொண்ட கலைஞருடன் போலீஸார் கைகளை நீட்டி வாக்குவாதம் செய்ய.. அதே வேகத்தில் கலைஞரும் ஆக்ரோஷமாக பேசுவதை தூரத்தில் இருந்து காண முடிந்தது.
ஒரு போலீஸ்காரர் உள்ளே போய் ஃபைபர் சேர் ஒன்றை கொண்டு வர. . அவரின் அதிகாரி அந்த போலீஸை அடிக்க பாய்ந்தார்.
ஒரு வழியாக மறுநாள் காலை 7 மணிக்கு சிறையின் வாசல் திறந்து கலைஞரை அது உள்வாங்கி கொண்டது.
என்னண்னே நடக்குது இந்த நாட்டிலே? என்று வீரபாண்டியரை பார்த்து கேட்ட செல்விக்கு பதில் சொல்லும் முன்பே அவரின் வாய் அதிர்ச்சியில் கோனிக்கொண்டது.
காலை 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த தளபதி அங்கு வந்த இல.கணேசனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். '
'தலைவரை அராஜகமாக அடித்து, இழுத்துக் கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்துப் பெண்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர்.
எல்லா வெறியாட்டத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்காமல், எனது அரசியல் வாழ்க்கை இனி ஓயாது.
நானும் இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதி முன்பு சரண்டர் ஆகப் போகிறேன்...'' எனப் படபடப்புடன் நிருபர்களிடம் சொல்லி முடித்தார்.

ஆனால் கலைஞர்,தளபதி இருவர் மீதும் போய் வழக்கு கூட போட இயலாமல் ஜெயலலிதா தவிக்க நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது.
 ஜெயலலிதா அழிக்க நினைத்த இருவரும் அரசியலில் இன்றும்  சக்திகளாக உள்ளனர். 
இருவரையும் அழிக்க எண்ணிய ஜெயலலிதா ?
நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட  என்னும் அவலத்தின் மூலம் மையமாகி  போனார்.

பகுத்தறிவாளர் கலைஞரை  ஒழிக்க நடத்திய மித்ரு சம்ஹார யாகம் எத்தனை,?

தன்னை வளர்த்துக்கொள்ள,நீதிமன்ற தண்டனைகளில் இருந்து தப்பிக்க செய்த யாகங்கள் எத்தனை?

தவவாழ்க்கை வாழ குவித்த பண,சொத்து மூட்டைகள் எத்தனை?
,
சோதிடர்கள் கூறியதால் நடத்திய  பரிகாரங்கள் எத்தனை,கொடுத்த யானைகள் எத்தனை ?

ஆனால்  நடந்தவைகள்  என்ன?

தவ வாழ்க்கை தவறாக வாழ்ந்து காட்டிய  வாழ்க்கையாக அல்லவா போனது!

ஜெயலலிதா அழித்தொழிக்க நினைத்த திமுக ஆளுங்கட் சிக்கு இணையாக ச.ம.உ,க்களை கொண்ட எதிர் கடசியாக பணிபுரிகிறது.

கலைஞர் தனது 60 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் பணிக்கு வைர விழா நாயகனாக இருக்கிறார்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே தொடர்ந்து போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய பெருமைக்கு சொந்தக்காராகி காட்சியளிக்கிறார்.


இதை எல்லாம்  கூற வேண்டியதில்லை.அத்தனையும் கண் முன்னாள் கண்ட சாட்சிகள் நீங்கள்.ஆனாலும் சில ஊடகங்கள் இவற்றை மக்கள் மறக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டு தேவையற்ற கருத்துக்களை,பொய்களை செய்திகளாக்கி வருகின்றன.
ஆனால் இதுதான் அன்றைய செய்தி

 இன்றைய வரலாறு.

செவ்வாய், 23 மே, 2017

நீட் தேர்வுக்கு எதிரா ஒரு ஜல்லிக்கட்டு

ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். 

நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், "நீங்கள் இந்திவழியில் கற்றவர்" என்பதுதான். 
அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், "ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். 
நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன்.
பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்." என்கிறார். 
தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. 
அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.
தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.
''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''
''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''
பேராசிர்யர் அனில் சடகோபால்.

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''
''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. 
இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு.
 பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். 
எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். 
இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? 
அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. 
அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''
''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''
''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. 
அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. 
அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் 'நீட்' தேர்வு.''
''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''
''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. 
அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''
''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''
இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். 
அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புபுரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''
''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''
''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். 
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...?
ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். 
உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது...
'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? 
ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''
''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''
"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். 
அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. 
ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''
''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''
''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். 

மற்ற மாநிலங்களை
விட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. 
அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். 
உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். 
மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். 
இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''

புதன், 17 மே, 2017

8வது நினைவாண்டாக நினைவேந்தல்



இலங்கையில் தனி தமிழீழம் கோரி போராடி வந்த தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக இன்று 8வது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழீழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சாவின் ராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அரஜாகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது.

பெண்கள் என்றும் பாரமால் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, களங்கப்படுத்தி கொன்றனர். இந்த கொடூர நினைவுகளை ஏந்தி இன்று இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தற்போதைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா அரசு மே மாதம் 18 ஆம் தேதியை நினைவேந்தல் நாளாக அனுசரிக்க அனுமதியளித்தது. 
8வது நினைவாண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நடைபெற்று வருகிறது. 
இலங்கையின் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 மீறி நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அய்யாக்கண்ணுகளும் அதானிகளும்

இம்மாதம் முதல் வாரத்தில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஐக்கியஜனதாதளம் உறுப்பினர் பவன் வர்மா முக்கியமான கேள்வியை எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. 
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 72,000 கோடிரூபாய் என்றும் இந்த தொகை நாட்டின் உள்ளமொத்த விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன்தொகைக்கு சமமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய். 
அதுமட்டுமல்ல. விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகையை போன்று இதுஎட்டு மடங்கு அதிகம் ஆகும். பெரும் தொழிலதிபர்கள் கடன் கேட்கும் பொழுது உடனடியாககொடுக்க அரசு வங்கிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த தகவலை கூறி விட்டு, பவன் வர்மா, இந்த அரசுக்கு இந்த விவரங்கள் தெரியுமா என்றும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவினார்.

மேலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள தொழிலதிபர் கவுதம் அதானி,மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுடன், பிரதமருடன் சீன, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றார். 
அது மட்டுமின்றி, கவுதம் அதானி குஜராத்தில் உள்ளசிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சில தொழில்களை தொடங்க அனுமதி கேட்ட பொழுது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுஅதை தொடங்குவதற்கான வரைமுறைகளின் கீழ் இல்லை என்று கூறி மறுத்து விட்டது.
ஆனால், மோடி அரசு பதவி ஏற்றவுடன் அந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார். இது மிகப்பெரிய மோசடியின் ஒரு சிறு துளி மட்டுமே.

எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி என்ற பத்திரிகை, அதானி குழுமம் பினாமி கம்பெனிகளை உருவாக்கி ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பதைஐந்து ஆய்வாளர்களின் உதவியுடன் கண்டுபிடித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. 
ஸபரஞ்சே குஹா தாகுர்தா, ஷன்ஜானி ஜெயின், அத்வைத் ராவ் ஆருஷி கலரா, நடாஷா பிடே மாய பண்டிட் மற்றும் முக்தா கிஞ்சவடேகர்] கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, வருவாய் புலனாய்வு இயக்ககம் [DRI] கவுதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம்பல போலி கம்பெனிகளின் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றம் செய்வதையும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதை பற்றியும்நிறைய தகவல்கள் சேகரித்து வந்துள்ளது. 
இந்த போலி கம்பெனிகள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் மற்றும் தங்க நகைகளின்வியாபாரத்தில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன என்பது ஆய்வில் தெரிகிறது. வருவாய் புலனாய்வு இயக்ககம் நிதி அமைச்சகத்தின் முக்கியப் பிரிவு ஆகும்.
பல முறை ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்என்பதால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதில் சட்டரீதியிலான விஷயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், நிதிஅமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், அதைச் செய்ய என்ன தயக்கம்?எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லிபத்திரிகை சார்பில் விரிவான கேள்விகள் அடங்கிய, விவரங்களை கோரும் படிவங்களை கீழ்க்கண்டவர்களுக்கு அனுப்பியது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஐந்து மூத்த அதிகாரிகள்;
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அந்நியவர்த்தகத் துறை இயக்குநர் ;
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும்
கவுதம் அதானி
கேள்விகள் அடங்கிய படிவங்கள் இ.மெயில் மூலமாகவும் தபால் மூலமாகவும் 18,நவம்பர் 2016 அன்று அனுப்பப்பட்டது. அதானிமற்றும் சட்ட அமைச்சர் அலுவலக பிரதிநிதிகள் பதில் அனுப்பினர். அமைச்சர்கள்அ ருண்ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன், அவர்களுடைய துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

வரி ஏய்ப்பு செய்தது எப்படி?
இது ஒரு நீண்ட கதை. சுருக்கமாக பார்ப்போம். 
அரசு தரப்பில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பல திட்டங்கள் அமலில் உள்ளன. அதானிகுழுமம் இத்தகைய ஏற்றுமதி சலுகைகளை பயன்படுத்தி பல போலி கம்பெனிகள்(ஷெல் கம்பெனிகள்) மூலம் உலகின் பல நாடுகளுடன்வர்த்தகத்தில் ஈடுபடுவது போல காண்பித்து,சுற்று வணிகத்தில் (‘circular trading’) ஈடுபட்டுள்ள்ளது. அதாவது அனைத்து கம்பெனிகளும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, அதானி குழுமத்தின் (அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்) கட்டுப்பாட்டில் இருப்பவை.

2007ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, அதானி குழுமம் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வந்தது. இந்த ஷெல்கம்பெனிகள் வணிக அமைச்சகம் அந்நிய வர்த்தகத்திற்கு அளிக்கும் ஊக்குவிப்பு திட்டங்களை தவறாகப் பயன்படுத்தி, வைரம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதியை "செயற்கையாக அதிகரிக்கும்" நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை பயன்படுத்தி வரிஏய்ப்பு செய்ததற்கு வருவாய் புலனாய்வு இயக்ககம் பல முறை நோட்டீசுகள் அனுப்பி உள்ளது. ஆனால் அதானி குழுமம் அவற்றைமறுக்கிறது.
வணிக அமைச்சகம் கொண்டு வந்த ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படுவது டிரேடிங் ஹவுஸ் திட்டம்.இதன் கீழ், எந்த அளவுக்கு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்கும். 

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு ஏற்றுமதிசெய்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு "ரேங்க்" தரப்படும். மிக அதிகமாக ஏற்றுமதி செய்வோருக்கு "ஸ்டார் ரேங்க்" தரப்படும்.மேலும் 2003-04இல் சுங்க வரி விலக்குதொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் கீழ், ‘ஸ்டார் டிரேடிங் ஹவுசஸ் எனவகைப்படுத்தப்பட்ட கம்பெனிகள் எந்த அளவுக்கு ஏற்றுமதியை அதிகரித்துள்ளனவோ, அதில் பத்து சதவீதம் பணமாக லாபம் ஈட்ட முடியும். 2002-03இல் அதானி குழுமத்தின் ஏற்றுமதி மதிப்பு 400 கோடி ரூபாயாக இருந்தது. 
திட்டங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஐந்து கம்பெனிகளை துவக்கியது.ஸஹிந்துஜா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஹெச்.ஈ.பி.எல்), ஆதித்ய கார்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட்ஸஎ.பி.சி.எல்], பகாடியாபிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட்ஸபி.பி.பி.எல்.) ஜெயந்த் அக்ரோ ஆர்கானிக்ஸ் லிமிடெட் (ஜே.எ.ஒ.எல்) மற்றும் மிடெக்ஸ் ஓவர்சீஸ் லிமிடெட் (எம்.ஒ.எல்) இந்தஐந்து கம்பெனிகள் தவிர, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நேரடியாகவும், மறைமுகமாகவும் 45 கம்பெனிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள ஐந்துகம்பெனிகளின் மொத்த ஏற்றுமதி திடீரென11 மடங்கு அதிகரித்தது.
 ஒரே ஆண்டில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்தது. 
பட்டை தீட்டப்படாத வைரங்கள், தங்கநகைகள் ஏற்றுமதியானதாக காண்பிக்கப்பட்ட கணக்கு தவறானவை என்று தெரிய வந்தது.
31 மார்ச் 2017அன்று மீண்டும் வருவாய் புலனாய்வு இயக்ககம் அதானி குழுமத்திற்கு நோட்டீசு அனுப்பியது. இரண்டே ஆண்டுகளில், ஏற்றுமதி அதீதமாக அதிகரித்திருப்பது எப்படி என வினவியது. ஊக்குவிப்புத் திட்டங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பரஸ்பரம் தங்கள் கம்பெனிகளுக்குள்ளேயே வணிகம் நடத்தி கொள்ளை லாபம் ஈட்டியது தெரிய வந்தது.

2005-06இல் ஏற்றுமதி திடீரெனசரிந்தது. எப்படி? 
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களை கார்ப்பரேட்டுகள் தவறாகப் பயன்படுத்துவதை அறிந்து , அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன. அது மட்டுமின்றி உயர்ரக மெட்டல்கள், பட்டை தீட்டப்படாத வைரங்கள், தங்கநகைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் நிகர பண லாபங்கள் வாபஸ் என அரசு அறிவித்தது. இதை அதானிகுழுமம் கடுமையாக எதிர்த்தது. 

மத்திய அரசின் நோட்டீசை எதிர்த்து, குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. (அதானிஎக்ஸ்போர்ட் ஸ்லிமிடெட் ஓ யூனியன் ஆப்இந்தியா) தீர்ப்பு அதானி குழுமத்திற்கு எதிராகவந்தது.
தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்ற அதானி குழுமத்திற்கு ஆதரவாக வேறுசில ஏற்றுமதி கம்பெனிகளும் வழக்கு தொடுத்ததால், வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எ.கே.சிக்ரியும், ரோஹிண்டன் எப்.நாரிமன்னும் இந்தியா பட்டை தீட்டாத வைரம் உற்பத்தி செய்யும் நாடு அல்ல என்றும்,ஏற்றுமதி கம்பெனிகள் துபாயிலும், ஷார்ஜாவிலும் உள்ள தங்கள் கம்பெனிகளுக்கே ஏற்றுமதிசெய்வதும், சலுகை திட்டங்களை தவறாக பயன்படுத்துவதையும் கடுமையான வார்த்தைகளில் சுட்டிக்காட்டி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் என்பது ஒரு மிகப் பெரியசாம்ராஜ்யம். கவுதம் அதானி தவிர அவரதுசகோதரர்கள் ராஜேஷ் அதானி மற்றும் வசந்த அதானி இயக்குநர்களாக செயல்படுகின்றனர். 

வருவாய் புலனாய்வு இயக்ககம் இக்குழுமம் செயல்படும் விதம் பற்றி தெளிவான அறிக்கையை தயாரித்துள்ளது. இக்குழுமத்தின் பணிகளை முழுவதுமாக மேற்பார்வையிடும் வேலையை அதானியின் சகோதரியின் கணவர் சமீர் வோரா செய்கிறார்.

அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பெனிகள் மொலாசஸ்ஸகரும்பு ஆலை கழிவு], சோயாபீன்ஸ், விளக்கெண்ணெய், அரிசி, இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன என்பது வருவாய் புலனாய்வுத் துறைக்கு தெரியவந்தது. யூ.ஏ.இ, ஹாங்காங், சிங்கப்பூர் போன்றநாடுகளுடன் நடைபெறும் ஏற்றுமதி-இறக்குமதி தொழில்கள் மூலம் பல கோடி ரூபாய் கிட்டுகிறது.

கற்கள் பதித்த தங்க நகைகள் சுற்று வணிகத்தின் மூலம் தங்க ஏற்றுமதி நடைபெறுகிறது. 
இவற்றின் மதிப்பு பல லட்சம் அமெரிக்கடாலர்களாகும். எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி தரும் புள்ளிவிவரங்களும், பட்டியல்களும் அதானி குழுமத்தின் வருவாய் மோசடிகளை அம்பலப்படுத்துவதுடன், அரசின்திட்டங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறது.

2013இல் "கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மற்றும் வைர வணிகம் மூலம்தீவிரவாதிகளுக்கு நிதி" என்ற அறிக்கையை நிதி சார் நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டது.அதில் உலகில், வெட்டி பட்டை தீட்டும் வைர வணிகத்தில் இந்தியாவின் பங்கு 90 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணம் வைர வணிகமெல்லாம் எவ்வாறு இந்தியாவுக்குள் வருகிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வருவாய் புலனாய்வு இயக்ககம் தனது பணியைச் செய்து விட்டது. 

அனைத்து தகவல்களையும் முறையாகத் திரட்டி, உச்சநீதிமன்றம் வரை சென்ற பின்னரும், மத்திய அரசின் நிதி அமைச்சர் மௌனம் காப்பது ஏன்? வணிகத் துறை அமைச்சரும் மெளனமாக இருப்பது ஏன்?அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது.

ரூபாயின் மதிப்பைக் குறைத்து, கறுப்புப்பணத்தை தடுப்பதாகவும், தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஒடுங்கிவிடும் என்றும் கூறிய பிரதமர், வைர வணிகம் மூலம் வெள்ளையாகும் கறுப்புப் பணம் பற்றியும், அதன் மூலம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு பணம் கிடைப்பது பற்றியும் என்ன சொல்ல விழைகிறார்?

வருவாய் புலனாய்வு இயக்ககம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிரத்தையுடன் பணிசெய்து திரட்டிய தகவல்களுக்கு என்னபதில்?

ஆயிரம் கோடி ரூபாய் வரை அதானி குழுமம் வரி ஏய்ப்பு செய்துள்ளதை புலனாய்வுஇயக்ககம் சுட்டிக்காட்டியும் அது தொடர்பான அமைச்சகங்கள் அமைதி காப்பது ஏன்?

இந்திய தலைநகரில், நாற்பது நாட்கள், விடாமல் அய்யாக்கண்ணு தலைமையில் போராடிய விவசாயிகளை சந்திக்க பிரதமர் முன்வரவில்லை. 
ஆனால், நடிகர் அக்ஷய்குமாரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். 
அய்யாக்கண்ணு போராடிய பொழுது, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விவசாயிகள் போராட்டத்தை அரசியலாக்கக் கூடாது என்றனர். 

ஆனால், சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றில், நிருபர்‘உ.பியில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது போல, இங்கேயும் செய்யக்கூடாதா என்று கேட்ட பொழுது, அக்கட்சியின் தலைவர் தமிழிசை, "அங்கு பாஜகவின் ஆட்சி.

இங்கேயும் தாமரைக்கு வாக்களியுங்கள். பின்புநடக்கும்" என்றார். இது அரசியல் இல்லாமல் வேறு என்ன? 
மற்றொரு தலைவர் ஹெச். ராஜா"அய்யாகண்ணுவுக்கு ஆடிக் காரும் இருநூறு ஏக்கர் நிலமும் இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளும், தி.மு.கவும் தான் தூண்டி விடுகின்றனர்." 
என்றதும் கொதித்து போன அய்யாகண்ணு "ராஜா சொன்னது உண்மை என்றால் நான் தூக்கில் தொங்குகிறேன்.அதுபொய் என்றால் அவர் தூக்குப் போட்டுக் கொள்ளத் தயாரா’’ என்று கேட்டதுடன் தான்முன்பு பாரதிய கிசான் சங்கத்தில் இருந்ததாகவும் இப்பொழுது விலகிவிட்டதால் தவறாகப் பேசுகின்றனர்" என்பதையும் குறிப்பிட்டார்.

இந்திய விவசாயிகள் சட்ட சலுகைகளை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட வேண்டுமென கோரவில்லை. வானம், பொய்த்து, விவசாயம் செய்ய வழியின்றி, வாங்கிய கடனைதிருப்பிச் செலுத்த முடியாமல், வங்கிகளின்நிர்ப்பந்தத்தால் கூனிக் குறுகி, அவமானப்பட்டு, கொத்துக் கொத்தாய் செத்து மடிவதைதடுக்க வேண்டும் என்றும், கட்டுப்படியாகும் விலை வேண்டும்; 
காவிரி நீருக்கு உத்தரவாதம் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தான் கோருகின்றனர்.
ஒட்டு மொத்த விவசாயிகளும் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை போன்ற அளவுக்கு ஒரு குடும்பம் செலுத்த வேண்டிய கடன் பாக்கி இருக்கிறது.


 விவசாயிகள் செத்து மடிவதை பார்த்து, கேட்டு, அதற்கு நிவாரணம் பற்றிஒரு வார்த்தை கூட சொல்லாத பிரதமர், தனதுநண்பர் அதானியை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்று அவர் தொழில் தொடங்கபல கோடி ரூபாய்களை கடனாக தர அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு கட்டளை இடுகிறார் என்றால் அவரது வர்க்க பாசத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

விவசாயிகள் கடனை ரத்து செய்தால் கடனை திருப்பிச் செலுத்துவதில் கட்டுப்பாடு இருக்காது என்று முழங்கும் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அதானியிடம் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்து என்று கட்டளை இடத் தயாரா? 
கறுப்புப் பணம் வைத்திருப்போரை சும்மா விடமாட்டோம் என்று கூறும் பா.ஜ.க அரசு முதலில் கடனை திருப்பாமல் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும். வங்கிகளிடம் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை திருப்பிச் செலுத்தாமலும், வரியை கட்டாமல் ஏய்ப்பவர்களும் அடங்கிய பட்டியல் உள்ளது. 
அரசு அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
                                                                                                                      
                                                                                                                                                                                       -பேரா.ஆர்.சந்திரா
ஆதாரம்; எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...