bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 4 ஜனவரி, 2018

மதம் பற்றி

சிக்மண்ட் ஃப்ராயிட் என்ற பெயரை பலரும் அறிவார்கள். 
உளவியல் என்றவுடன் பலர் மனதில் தோன்றும் பெயர் ஃப்ராயிடாகத்தான் இருக்க முடியும். உளப்பகுப்பாய்வு என்ற கோட்பாட்டின் மூலகர்த்தா; உளப்பகுப்பாய்வு என்ற சிகிச்சை முறையைத் தோற்றுவித்தவர்; நம் மன ஆழத்தில் நாம் அறியாத நனவிலி மனம் ஒன்று உண்டு என்ற கருத்தை மக்கள் அறியச் செய்தவர்; பேச்சுவழியாகவே சில மனக்கோளாறுகளைக் குணமாக்க முடியும் என்று நிறுவியவர்; பல உளவியள் கருத்துகளின் மூலகர்த்தா; இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் - இவ்வாறாக ஒரு பெருமகனாகப் போற்றப்பட்ட போதிலும் அவர் ஒரு இறை மறுப்பாளர், பகுத்தறிவுவாதி, மதத்தை வன்மையாகக் கண்டித்தவர் என்பதைப் பலர் அறிய மாட்டார்கள்.

ஃப்ராயிட் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் அவர் ஒருபோதும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. மாறாக, மதத்தை, குறிப்பாக யூத கிரிஸ்துவ மதங்களைக், கடுமையாக விமர்சித்தார். இது பலருக்கு உவப்பாக இருக்கவில்லை. அவரது ஆக்கங்களை போற்றிப் புகழ்ந்தவர்கள் கூட மதம் பற்றிய அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது கடைசி நாள் வரை அவர் ஒரு இறை மறுப்பாளராக, பகுதறிவாளராக வாழ்ந்தார். கடைசிவரை எந்த சமரமும் செய்துகொள்ளவில்லை. புற்றுநோயால் நீண்ட காலம் துன்புற்ற அவர் இறுதியில் தன் மருத்துவரிடம் தன்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டி மயக்க ஊசி பெற்று மரணத்தை தழுவினார்.

அவர் எழுதிய குலக்குறியும் விலக்கும் (Totum and taboo, 1912), ஒரு பிரமையின் எதிர்காலம் (The future of an illusion, 1927), மோசஸ்சும் ஓரிறைவாதமும் (Moses and monotheism, 1939) என்ற மூன்று நூல்களில் மதம் பற்றிய விரிவாக எடுத்துக் கூறுகிறர். இவற்றுள் மோசஸ்சும் ஓரிறைவாதமும் என்ற நூலே அவர் தன் வாழ்க்கையில் கடைசியாக எழுதிய நூல். பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் இதை வெளியிட்ட அதே ஆண்டு காலமானார்.
ஒரு பிரமையின் எதிர்காலம்
“ஒரு பிரமையின் எதிர்காலம்” என்ற நூலில் மதம் என்பது ஒரு பிரமை, அது ஒரு காட்சிப் பிழையே அன்றி வேறொன்றுமில்லை என்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார். பிரமை என்றால் என்ன என்பதை அவர் முதலில் விளக்குகிறார். இல்லாத ஒன்றை இருப்பதுபோல எண்ணுவதே பிரமை என்று வரையறுக்கிறார். பூமி தட்டையானது என்று ஒரு காலத்தில் நம்பிவந்தார்கள். இது ஒரு பிரமை என்பதை இப்போது அறிவோம். இதேபோல இரசவாதிகள் (alchemist) என்று அறியப்பட்ட ஆதி வேதியலாளர்கள் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினார்கள். கொலம்பஸ் இந்திய துணைக்கண்டத்தைக் கண்டுபிடித்தேன் என்று கூறியதும் ஒரு பிரமையே. இங்கே விருப்பம் பிரமையாக மாற்றம் பெறுகிறது. இவற்றை விருப்ப நிறைவேற்ற பிரமைகள் (Wishful illusions) என்று ஃப்ராயிட் குறிப்பிட்டார். மதம் என்பது ஒரு விருப்ப நிறைவேற்ற பிரமையே என்பது “ஒரு பிரமையின் எதிர்காலம்” என்ற நூலின் சாரம்.
ஆனால், அறிவியல் வளர வளர இந்த பிரமைகள் தவறான எண்ணங்களே என்பது தெரியவருகிறது. வருங்காலத்தில் அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் போது மத நம்பிக்கைகள் அற்றுப் போகும் என்ற கருத்திலேயே ஒரு மதம் ஒரு பிரமை என்ற கருத்தை முன்வைக்கிறார். இன்று மனநோய் மருத்துவத்திலும் மனப் பிரமை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. சில மனக்கோளாறுகளில், குறிப்பாக மனக்குழப்ப நிலைகளில் (delirium) மனப்பிரமைகள் ஏற்படலாம். உதாரணமாக, ஒரு கயிறு பாம்பு போலத் தென்படலாம். இதுவே பிரமை என்பதன் பொருள்.
மதத்தின் தோற்றம்
ஆதி மனிதன் இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அச்சமுற்றான். அவற்றின் காரணங்களைப் புரிந்துகொள்ள முடியாது திகைத்துத் திண்டாடினான். தன் இயலாமையையும் பாதுகாப்பற்ற தன்மையையும் எண்ணி கவலை கொண்டான். மரண பயம் அவனை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. எந்த ஒழுங்குமின்றி வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களைக் கணிக்க முடியாமல் திண்டாடினான். ஐந்து வயதில் தன் பாலகனை இழக்கும் ஒரு தாய், திடீரென்று விபத்தொன்றில் மரணிக்கும் தந்தை, காட்டு விலங்குகளால் கொல்லப்படும் தலைவன் போன்ற தாந்தோன்றித்தனமான நிகழ்வுகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்று தடுமாறினான். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பி எல்லாம் வல்ல ஒருவைனைப் படைத்தான். அவனைத் தன் உருவில் சிருஷ்டித்தான். அவனை வழிபட்டால் தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று ஆறுதல் பெற்றான். மனிதன் இறைவனைப் படைத்தான், மதம் பிறந்தது.
 இதைக் கண்டுபிடித்தவன் நான் அல்ல, எனக்கு முன்னரே பலர் கூறிப் போயினர் என்று தாழ்மையுடன் கூறுகிறார் ஃப்ராயிட்.
ஆனால், இறைவனுக்கு மனிதன் கற்பித்த பண்புகளை ஃப்ராயிட் கடுமையாகச் சாடுகிறார். “’இந்த உலகை ஒர் இறைவன் படைத்தார்; அவர் கருணையுள்ளவர்; நம்மைக் காப்பவர், இந்த அண்டத்தில் ஓர் அறம்சார்ந்த ஒழங்குமுறை உள்ளது; மறுமை என்று ஒன்று உண்டு’ என்றெல்லாம் கூறிக்கொள்ள முடியுமானால் நல்லதே. இதையே நாம் வள்ளிசாக நம்ப விரும்புகிறோம். துன்பம் நிறைந்த வாழ்க்கையிலும் அறியாமையிலும் அமிழ்ந்திருந்த நம் முன்னோர்களுக்கு இந்த அண்டத்தின் புதிர்களுக்கு (இறைவன் என்ற பெயரில்) விடைகாண முடிந்தது என்றால் இதைவிட என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?” என்று கிண்டல் செய்கிறார்.
இன்னும் ஒரு படி மேலே போய்,
 “மதத்தின் சித்தாந்தம் அது ஆரம்பித்த காலகட்டத்தின் முத்திரையைத் தாங்கி நிற்கிறது. அதாவது, மனித குலம் அதன் குழந்தைப் பிராயத்தின்போது அறியாமையில் மூழ்கி இருந்த நிலையில் உருவானவையே மதக் கோட்பாடுகள். அது அளிக்கும் ஆறுதல் நம்பக்கூடியவை அல்ல. உலகம் ஒரு மழலையர் பள்ளி அல்ல என்பதை அனுபவம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது ....... மனிதனின் படிமலர்ச்சிப் பாதையில் மதத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதானால் அது ஒரு நிலைபேறு கொண்ட அடைவாகக் இருக்காது. மாறாக, மனிதன் அவனது குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சி பெற்ற நிலையை நோக்கிப் போகும் பாதையில் ஏற்பட்ட உளவழி நரம்பு நோய்க்கு நிகராகவே இருக்கும்
என்று கூறுகிறார்.
இந்த இடத்தில் அவர் கூறும் “உளவழி நரம்பு நோய்” என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்துவது முக்கியம். இது ஆங்கிலத்தில் neurosis என்று அறியப்படுகிறது. அவர் காலத்தில் மனப் பதற்றம், இசிப்பு நோய் போன்ற மனக்கோளாறுகள் உளவழி நரம்பு நோய்கள் அன்று அறியப்பட்டன. ஃப்ராயிடின் கருத்துப்படி, பிறந்த பொழுதிலிருந்தே ஒரு குழந்தை பல மனம் சார்ந்த சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி உள்ளது. இந்த சிக்கல்கள் சரியான முறையில் தீர்க்கப்படாத பட்சத்தில் பிற்காலத்தில் இது உளவழி நரம்பு நோய்களாக வெளிப்படுகின்றன.
மதத்தின் உளவியல் விளக்கம்
மதத்துக்கும் குழந்தை உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? மனிதனின் ஆதரவற்ற நிலையை குழவிப் பருவக் குழந்தைக்கு (Infant) ஒப்பிடுகிறார். புதிதாகப் பிறந்த குழந்தை தொடக்கத்தில் அனைத்துக்கும் தன் தாயையே நம்பி உள்ளது. உணவு, பாதுகாப்பு, அன்பு ஆகிய அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தாய் தந்தையரே. குழவிப் பருவத்தில் தன்னை விட வலிமையான தந்தை தன்னை பாதுகாப்பார் என்று நம்பிக்கை கொள்கிறது. வளர்ந்த பின் நாளடைவில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்கிறது. ஆனால், குழவிப்பருவத்தில் பெற்றோரையே, குறிப்பாகத் தந்தையையே, நம்பி இருக்கிறது. இதேபோல. மனிதர்கள் கடவுளைப் படைத்து வயது வந்தபின்னரும் தமது பாதுகாப்பு உணர்வை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். எனவே, சமய நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் குழவிப் பருவ விருப்ப நிறைவேற்றங்களே என்று கூறுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், மதம் என்பது வயதுவந்தவர்களில் காணப்படும் குழவிப் பருவ உளவழி (infantile neurosis) நரம்பு நோய்க்கு ஒப்பானது என்று கூறுகிறார். சாதாரண மொழியில் கூறுவதானால், மத நம்பிக்கையானது குழந்தைத்தனமானது என்று கூறுகிறார்.
இறை நம்பிக்கையைக் கடுமையாகவே சாடும் ஃப்ராயிட், “மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது படைப்பவனின் திட்டத்தில் இல்லை”. என்று கூறுகிறார். மதம் மனிதர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம் மனிதனின் ஆழ் மனதில் குடிகொண்டிருக்கும் மரண பயம் போன்ற ஆதி அச்சங்களே காரணம். இந்த வாழ்க்கை ஒரு நாள் முடிந்து போகும், மரணத்தின் பின் என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது, தெரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஆனால் இதை மனித மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது. அதன் இடத்தில் கற்பிதங்களை உருவாக்கி மனிதன் அமைதி கொள்கிறான் மனிதன். அதில் ஒன்றுதான் மதம் என்று அழுத்தாமகக் கூறுகிறார் ஃப்ராயிட்.
கற்பிதங்கள் உருவாக்கப்படுகின்றன.
இயற்கையின் அச்சுறுத்தல்களளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தன் ஆதரவற்ற நிலமையையைக் கையாளவும் அவன் கற்பித்துக்கொண்டவயே மறுமை, ஆன்மா அழியாது, என்ற புனைவு போன்ற ஆறுதல் தரும் சித்தாந்தங்கள். “மதம் ஒரு பிரமை; மனிதனது (ஆதி) உள்ளுணர்வுகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள காரணத்தினாலேயே அது வலிமை பெறுகிறது” என்பது அவரது புகழ்பெற்ற சொற்கள்.
மதம் தமக்கு ஒரு ஆறுதல் தரும் சாதனமாக உள்ளது சிலர் கூறுவார்கள் என்பதை எதிர்ப்பார்த்து அதற்கு பின்வருமாறு பதில் கூறுகிறார்:
“இம்மாதிரியான நொண்டிச் சாட்டுகள் எம்மை ஏமாற்ற முடியாது. அறியாமை என்பது அறியாமைதான்......... வேறு எந்தத் துறையிலாவது சான்றுகளே இல்லாத ஒரு விஷயத்தை நம்புவார்களா?” என்று கேட்கிறார். மேலும், “மதம் பற்றிய விஷயங்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள் எல்லா விதத்திலும் நேர்மையற்றவர்களாக, அறிவு சார்ந்த குற்றங்கள் இழைப்பபவர்களாவே இருந்துவந்துள்ளார்கள்”
. அறிஞர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூட சமயப் பற்றுள்ள குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்த காரணத்தினால் மதத்தை உள்வாங்கிக் கொள்கிறார்கள் அதைப்பற்றி அறிவியல் ரீதியாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. பரிசோதனைக் கூடத்தில் தர்க்க ரீதியாக சிந்திக்கும் விஞ்ஞானியாகவும் அதற்கு வெளியே வந்தவுடன் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்ட அறிவுபூர்வமற்ற மதக் கருத்துகளை ஏற்றுக்கொள்பவர்களாக இரட்டை நியாயம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மதம் பற்றி ஃப்ராயிட் கூறிய கருத்துகள் புரட்சிகரமானவை. எனவே, அவை பெரும் எதிர்ப்பைச் சந்தித்தில் வியப்பில்லை. மதப்பற்று உள்ள சிலர் எதிர்வாதம் செய்தார்கள். இவை பெரும்பாலும் சாரமற்றவையாகவே இருந்தன. ஆனாலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டி இருந்தது.
மதப் பரவச நிலை
சிலர் தாம் மதம்பால் ஈர்க்கப்படுவத்றகு தமக்கு ஏற்படும் மதப் பரசவ அனுபவமே காரணம் என்று கூறுவதுண்டு. இதை மறைஞான அனுபவம் என்றும் ஆன்மீக துய்ப்பு என்றும் நிரந்தரம் பற்றிய விழிப்புணர்வு, அண்டத்துடன் ஒன்றிணைவது போன்ற உணர்ச்சி என்றும் கூறுகிறார்கள். பெருங்கடல் போன்ற இந்த உணர்ச்சி அனுபவம் ஃப்ராயிடுக்கு எப்போவதாவது ஏற்பட்டதுண்டா என்று நண்பர் ஒருவர் குதர்க்கமாக் கேட்டதை ஃப்ரரயிட் பதிவுசெய்துள்ளார். அவர் நண்பர் இராமகிருஷ்னரையும் விவேகானந்தரையும் ஆன்மீக வழிகாட்டிகளாக வரித்துக் கொண்டவர். தனக்கு அம்மாதியான அனுபவம் ஏற்பட்டதில்லை என்று ஃப்ராயிட் பதிலளித்தார். ஆனால் அந்த உணர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு விளக்கம் அளித்தார்.
இந்த உணர்ச்சியை காதல் வயப்படும் உணர்ச்சியுடன் ஃப்ராயிட் ஒப்பிடுகிறார். காதலின் உச்சக் கட்டத்தில் காதலர்கள் இருவரும் தாம் வெவ்வேறானவர்கள் அல்ல, உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டவர்களே என்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். குழவிப் பருவத்தில் குழந்தையானது தன்னை தன் தாயிடம் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பதில்லை, இருவரும் ஒன்று கலந்துள்ளது என்றே அது கருதுகிறது. எனவே, இந்த மதப்பரவச அனுபவம் என்பது குழ்ந்தைப் பிராயத்துக்குப் பின்னோக்கிச் செல்லும் அனுபவமே, இதுவும் ஒரு பிரமையே. காதல் வயப்பட்ட உணர்ச்சி போலவே இறைப் பரவச உணர்ச்சியும் ஒரு பிரமையே, இரண்டும் நிலையானவை அல்ல என்று கூறுகிறார்.
இன்றைய உளவியலில் தன் அறிதுயில் அல்லது சுய வசியம் (Self-hypnosis) என்ற ஒரு மனநிலை உள்ளது என்று கூறுகிறது. ஒருவரை இன்னொருவர் எவ்வாறு அறிதுயில் நிலைக்கு (Hypnosis) இட்டுச் செல்கிறாரோ அதேபோல ஒருவர் தன்னைத் தானே அறிதுயில் நிலைக்கு ஆளாக்கிக் கொள்ளலாம். இது தன் அறிதுயில் (Self-hypnosis) என்று அறியப்படுகிறது அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி சுவாசத்தைச் சீராக்கி, படிப்படியாக தசைகளைத் தளர்த்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி இந்த நிலயை எய்தலாம். இந்த நிலையில் தனக்குத்தானே சில கட்டளைகளை இட்டுக்கொள்ளலாம். ‘என் உடல் எடை இழந்து இப்போது உயரப் பறக்கிறது’, ‘என் கை விரல்கள் மரத்துப் போகின்றன, கைகால்கள் வீங்கி பெருத்துப் போகின்றன’ என்பது போன்ற ஆலோனைகளை வழங்கிக் கொள்ளலாம். இது உள் தூண்டுகை (Autosuggestion) என்று வழங்கப்படுகிறது. இந்த அனுபவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், சில போதை மருந்துகளும் இந்த அனுவத்தைத் தர வல்லன. எனவே மதவாதிகள் கூறும் இந்த பக்திப்பரவச நிலை தன் அறிதுயிலன்றி வேறொன்றும் இல்லை.
ஃப்ராயிட் மதங்களில் காணப்படும் இன்னொரு பண்பையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லா மதங்களிலும் மந்திரம் ஓதுவது, சுத்தம் செய்வது, மணியடிப்பது போன்ற பல சடங்குகள் உள்ளன. இவை ஒரு ஒழுங்கின்படி செய்யப்படுகின்றன. இந்த ஒழுங்கு புனிதமானது என்று அவர்கL நம்பபுகிறார்கள். இதை மீறுவது மத நிந்தை என்று கருதப்படுகிறது. ஃப்ராயிட் இந்த சடங்குகளை (Rituals) ஆட்டிப்படைக்கும் கட்டாய மனக்கோளாறில் (Obsessive compulsive disorder) காணப்படும் அறிகுறிகளுடன் ஒப்பிடுகிறார்.
குழு உளவியல்
 “குழு உளவியலும் அகம் பற்றிய ஆய்வும்” (Group psychology and the analysis of the Ego, 1921) என்ற கட்டுரையில் ல் ஃப்ராயிட் மனித குழுக்களின் உளவியல் (Group psychology) பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர் கூறும் கருத்துகள் மதம் சார்ந்த குழுக்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மதத்தின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள், அதே கடவுளர்களை வழிபடுகிறார்கள், ஒரே மாதிரியான சடங்குகளில் ஈடுபடுகிறார்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களிடையே சில வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களை ஒரு குழுவாகக் கருதுவதில் தவறில்லை.
குழு அதன் உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது. அவர்களிடயே ஒரு பிணைப்பு ஏற்படுகிறது, உறுப்பினரிடையே ஒட்டுதலும் பற்றுதலும் காணப்படுகிறது. அவர்களிடையே உணர்வுசார்ந்ததொரு பந்தமும் பாசமும் நினிலவுகிறது. இரு குழு மனப்பான்ம என்று அழைக்கப்படுகிறது. குழுக்களைக்களின் உளவியலை ஆராயும்போது குழக்களின் உளவியல் தனி மனித உளவியல் இருந்து வித்தியாசமானது என்பதைச் ஃப்ராயிட் சுட்டிக்காட்டுகிறார். மனிதன் ஒரு குழுவின் உறுப்பின்னனாக செயல்படும்போது தனி மனிதனாக அவன் செய்யத் தயங்கும் காரியங்களைத் துணிந்து செய்கிறான். சாதாரணமக அவனுக்கு இருக்கும் மனத்தைடகள் தளர்ந்து போகின்றன, அவன் விரைவில் உணர்ச்சி வசப்படுகிறான், இதை மந்தை இயல்பூக்கம் (herd instinct) அல்லது சமூக இயல்பூக்கம் (social instinct) என்று அழைக்கிறார். தனி மனிதனைப் போலல்லாமல் குழுக்கள் மனத்தடையின்றி இயங்கும் தன்மை உடையன; வெறிச் செயல்களில் ஈடுபடும் தன்மை உடையன. ஃப்ராய்டிய உளவியல் மொழியில் கூறுவதானால் குழுவாக அவன் செயல்படும்போது அவன் நனவிலி மனத்தால் அவனை எளிராக வழிநடத்தப் படுத்த முடிகிறது, ஆதியான உந்துதகள் (primitive drives) மேலோங்குகின்றன.
இந்த கண்டுபிடிப்யை மதம் சார்ந்த குழுக்களுக்குப் பொருத்திப் பார்க்கும்போது ஒரே மதத்தைச் சேர்ந்தவகளிடையே, குறிப்பாக மதத்தை இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள் ஏன் இணைந்து செயல்படுகிறார்கள், ஏன் ஒரே விதமான கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்பது புலப்படும். இதில் புதிதாக ஒன்றும் இல்லை, இதை நாம் அறிவோம். ஆனால் இதில் உள்ள நுட்பமான ஒரு உளவியல் ஃப்ராயிட் ஒரு அம்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார். ஆதிமனித உணர்ச்சிகளான பகைமை, மூர்க்கம், ஆக்ரோஷம் ஆகியவை மனித மனதில் ஒரு மூலையில், அதாவது நனவிலியில், புதைந்து கிடக்கின்றன. அவை தலை தூக்கும்போது நனவு மனமும் அதிமனமும் அதைத் தடுத்து நிறுத்துகின்றன. ஆனால் அவன் ஒரு குழுவின் உறுப்பினனாக செயல்படும்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்ந்து போகின்றன. மூர்க்கமும் பகைமையும் தலைவிரித்தாடுகின்றன. இது மற்ற மதக் குழு மீது பாய்கிறது. மதவாதிகள் வேற்று மதத்தினர் மீது காட்டும் கொலை வெறிக்கு இதுவே காரணம் என்று விளக்குகிறார். அவர் கூறுகிறார்:
“ஒரு குழு அன்பிலும் பாசத்திலும் திழைத்து, இணைந்து, ஒன்றுபட்டு விளங்கலாம், அதன் மூக்கத்தையும் பகைமையும் காட்ட இன்னொரு குழு இருக்குமானால்”
ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் தத்தம் மதத்தை பிற மதங்களைவிட உயர்வாக பேசிக்கொள்ளத் தவறுவது இல்லை. தம் மதம்தான் சிறந்தது என்றும் மற்ற மதங்களைக் குறை கூறுவதும் மதவாதிகளின் வழக்கம். தன் வன்மத்தைப் பிற மதங்கள் மீது காட்டுவதுண்டு. மதப்போர்களுக்கு இது ஒரு காரணமாக அமைகிறது. இதில் பொதிந்துள்ள உளவியலை ஃப்ராயிட் பின்வருமாறு விளக்குகிறர்:
ஒரு மதம் எவ்வளவுதான் தன்னை ஒரு அன்பும்கருணையும் நிறைந்த மதம் என்று கூறிக்கொண்டாலும், அந்த மதத்தைச் சேராதவர்கள் மீது கடுமையாகவும் அன்பற்ற முறையுலுமே நடந்துகொள்கிறது”. 
இன்றைய நிலவரங்களைப் பார்க்கும்போது யார் இதை மறுக்க முடியும்?
மனிதன் மீது மதம் கொண்டுள்ள கொடுக்குப் பிடியைக் கண்டு ஃப்ராயிட் நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை. மானுடர்கள் அறிவு பெற்று வருகிறார்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளை உள்வாங்கிக் கொள்கிறவர்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். மனிதனின் அறிவு வளர வளர மத நம்பிக்கைகள் தானாகவே அற்றுப் போகும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். எனவேதான் மதம் ஒரு பிரமை, காலப்போக்கில் பிரமை தெளியும் என்று நம்பிக்கை கொள்கிறார்:
“அறிவியலின் வழியாகப் பெறும் பயன்கள் மனிதனுக்குக் கிட்டகிட்ட மத நம்பிக்கை நலிவுற்று சிதைந்து போகும்” 
 இறுதியாக, ஃப்ராயிடைப் பின்பற்ற இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய உளப்பகுப்பாய்வுக் கழகம் பற்றியும் கூறியாக வேண்டும். இது 1922ல் டாக்டர் ஜி. போஸ் (1886 – 1953) என்பவரால் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. ஆரம்ப காலத்திலேயே, அதாவது உளப்பகுப்பாய்வு இயக்கம் உலக அளவில் செல்வாக்குப் பெறு முன்னரே ஜி.. போஸ் ஃப்ராயிடுடன் கடிதத் தொடர்பு கொண்டார். தன் கட்டுரைகளையும் அனுப்பி வைத்தார். ஃப்ராயிட் இதற்கு பதில் எழுதவில்லை. ஆனாலும் இந்தக் கழகம் கடந்த 94 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டு வருகிறது, உளப்பகுப்பாளராக விரும்புபவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் முத்திரையில் இந்துக் கடவுளர்கள் உள்ளனர்! உளப்பகுப்பாய்வுக்கும் ஃப்ராயிடுக்கும் மதச் சாயம் பூசி வருகிறது. இறைமறுப்பாளரான ஃப்ராயிட் ஆன்மீகம் பற்றி பேசுபவர்களை ஒருபோதும் நம்பியதில்லை, அவருக்கு கார்ல் யுங்குடன் ஏற்பட்ட பிணக்குக்கு இதுவும் ஒரு காரணம்]
ஜி.எஸ். போஸ்சுக்கு ஏன் ஃப்ராயிட் பதிலளிக்கவில்லை என்பது இப்போது புரியும்!
மூல நூல்கள்:
Feud. S. (1912), Totum and taboo,
Feud. S. (1927), The future of an illusion
Feud. S. (1939), Moses and monotheism,
The Standard Edition of the Complete Psychological Works of Sigmund Freud (Ed. J. Strachey with Anna Freud), 24 vols. London: 1953-1964.
சிக்கண்ட ப்ராயிட் எழுதியுள்ள நூல்கள் யாவற்றையும் கீழ்காணும் விக்கிபீடியா வலைத்தள முகவரியின் வழியாக வாசிக்கலாம்.
டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா, மனநல மருத்துவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...