bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 2 ஜனவரி, 2018

வினோத் ராய்& குமாரசாமி

 தப்புக் கணக்குகள்...!
2017ம் ஆண்டில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்புதான் அரசியல் ரீதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது.
அலைக்கற்றை, ஸ்பெக்ட்ரம் என பல்வேறாகக் கூறப்பட்டு இறுதியில் 2-ஜி (இரண்டாம் தலைமுறை) ஏலத்தில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதான வழக்கின் தீர்ப்புதான் அது.
ரூ. 1.76 லட்சம் கோடி 2-ஜி ஊழல் என பெரிதாகப் பேசப்பட்டு 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப காரணமாக அமைந்த விவகாரமும் இதுவே. இதன் பிறகு நாட்டின் எந்த மூலையில் லஞ்சம், ஊழல் புகாரில் சிக்கியோர் கூறிய ஒரே விஷயம் லட்சம் கோடியில் ஊழல் செய்தவனை விட்டுவிட்டு, ஆயிரக் கணக்கில் லஞ்சம் வாங்கியவனை பிடிக்கிறீர்களே என்றனர். அரசல், புரசலாக இருந்த ஊழல், நாடெங்கும், பட்டி தொட்டியெல்லாம் சிறிய தொகையெல்லாம் லஞ்சமேயில்லை என்ற தவறான கருத்து பரவியதும் இந்த விவகாரத்துக்குப் பிறகுதான்.
ஒரு தீர்ப்பிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கானது. மற்றொன்று வழக்கிற்கு ஆதாரமான 77 பக்க சிஏஜி அறிக்கை.
2-ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரையும் விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அரசியல் ரீதியில் இரு பெரும் கட்சிகளுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளித்துவிட்டது. அதேசமயம் இந்த வழக்கின் மூல காரணமான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் அறிக்கை. நீதிபதியின் தீர்ப்பால் இதுவரை சிஏஜி மீதிருந்த நம்பகத் தன்மை கேள்விக் குறியாகியுள்ளது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு அரசின் செலவினங்களைக் கண்காணிக்கவும், அதை தணிக்கை செய்யவும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை என உணரப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் தலைமை கணக்கு தணிக்கை வாரியம். மத்திய அரசின் வரவு, செலவு, தவிர்க்கப்பட வேண்டிய செலவுகள், டெண்டர் விட்டதில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சிஏஜி தணிக்கை செய்து குடியரசுத் தலைவருக்கு அளிக்கும்.
மாநில அரசுகளின் வரவு செலவுகளை தணிக்கை செய்து ஆளுநரிடம் சிஏஜி அளிக்கும். மாநில அளவில் பஞ்சாயத்துகள் வரை சிஏஜி தணிக்கை செய்கிறது. நாடு முழுவதும் 58 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் போலவே அரசியல் சாசன விதிப்படி உருவாக்கப்பட்ட பதவி சிஏஜி. பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் சிஏஜி-யின் ஊதியமும் தலைமை நீதிபதிக்கு இணையானதுதான். அதைப்போலவே இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் பிறகே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
தஞ்சையில் ஆளுநருக்காகவே போடப்பட்ட வைக்கோல்

தலைமை தேர்தல் அதிகாரியாக டி.என். சேஷன் பதவி ஏற்ற பிறகுதான், தலைமை தேர்தல் ஆணையருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவந்தது.
இதைப்போலத்தான் நாட்டை உலுக்கிய 2-ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு, கால்நடைத் தீவன ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு உள்ளிட்ட விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்ததே சிஏஜி அறிக்கை வெளியானபிறகுதான்.
சர்வதேச அரங்கில் சிஏஜி மீது தனி மரியாதை, அபிப்ராயம் உள்ளது. யுனெஸ்கோ, சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப், ஐ.நா (இராக்) கணக்கு, ஐ.நா. இணை பணியாளர் ஓய்வூதிய நிதியம், உத்திசார் பாரம்பரிய திட்டம், ஐ.நா. இழப்பீட்டு ஆணையம், சர்வதேச வர்த்தக மையம், ஐ.நா. அலுவலக திட்டச் சேவை, தகவல் தொழில்நுட்பம் (ஓஐசிடி), உமோஜா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 11 அமைப்புகள் சிஏஜி-யை அங்கீகரித்துள்ளன.
``முதலில் வருவோருக்கு முதலில் என்ற கொள்கை’’ அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ. 1,651 கோடி மட்டுமே கிடைத்தது. மேலும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டியது. இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. சிஏஜி அறிக்கை அடிப்படையில் சிபிஐ தாக்கல் செய்த 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை நீதிபதி படித்துப்பார்த்து, 150 சாட்சிகளை விசாரித்து, 7 ஆண்டுகளாக நீடித்த வழக்கில், அனுமானத்தின் அடிப்படையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளார் என்றும், இதை ஏற்க முடியாததால் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
சர்வதேச அளவில் நம்பகத் தன்மையும், அங்கீகாரமும் கொண்ட சிஏஜி மீதான நம்பகத் தன்மை இதனால் கேள்விக் குறியாகிவிட்டது.
அடுத்ததாக சிஏஜி அறிக்கை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்களை ரத்து செய்துவிட்டது. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவும், அதனால் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் அர்த்தமற்றவையாகிவிட்டன. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பையே சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு அதிர வைத்துவிட்டது.
இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ தாக்கல் செய்த தகவல்கள் போதுமானவை அல்ல என்பதிலிருந்து சிபிஐ-யின் விசாரணையும் கேள்விக்குறியாகிவிட்டது.
அரசின் நடவடிக்கைகளை கொள்கைகளாக உருவாக்கும் அதிகார வர்க்க (ஐஏஎஸ்) செயல்பாடுகளையும் கேள்விகேட்டுள்ளதோடு, வரைவு கொள்கையில் உள்ளவற்றை ஐஏஎஸ் அதிகாரிகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று நீதிபதி ஓ.பி. சைனி கூறியுள்ளார். அமைச்சர்களுக்கு தவறான வழிகாட்டுதலை ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பரிந்துரையில் அனுப்பியுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளது ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி), கூட்டு நாடாளுமன்ற குழு (ஜேபிசி) ஆகியனவும் நீதிபதியின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை. அனைத்து அமைப்புகளுமே சரிவர செயல்படவில்லை என்பது இதில் நிரூபணமாகியுள்ளது.
குழப்பிய  ராய்.

ஊழலுக்கு எதிராக செயல்படும் அனைத்து சுதந்திரமான அமைப்புகளின் செயல்பாடுகளும் இதன் மூலம் கேள்விக்குறியாகியுள்ளன.
சிஏஜி அளித்த அறிக்கைகளை சமீபத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தணிக்கை நிறுவனங்கள் தணிக்கை செய்தன. இதுபோல சிஏஜி அறிக்கையை சர்வதேச நிறுவனங்களின் தணிக்கைக்கு உள்ளாக்குவது இதுவே முதல் முறையாகும். இந்நிறுவனங்கள் அளித்த அறிக்கையில் 35 தணிக்கை அறிக்கைகள் போதுமான ஆதாரமில்லாமல் தயாரிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டியிருந்தன. 2-ஜி குறித்த தனது அறிக்கையில் ஒரு இடத்தில் ரூ. 67,364 கோடி இழப்பு என்றும், மற்றொரு இடத்தில் ரூ. 69,626 கோடி என்றும், இரு வேறு சந்தர்ப்பங்களில் ரூ. 57,666 கோடி மற்றும் ரூ.1,76,645 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.
முதலில் எஸ்-டெல் நிறுவனத்துக்கு அளித்த லைசென்ஸ் அடிப்படையில் ரூ. 67,364 கோடி என்றும், யுனிடெக் நிறுவனம் தனது பங்குகளை டெலிநாருக்கு அளித்ததால் ரூ. 69,626 கோடி இழப்பு என்றும் குறிப்பிட்டிருந்தது. ஸ்வான் டெலிகாம் அளித்த டெண்டர் கேட்பு விவர அடிப்படையில் ரூ.57,666 கோடி என்றும் இறுதியாக 3-ஜி அலைக்கற்றை அடிப்படையில் ரூ. 1,76,645 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஒரு இடத்தில்கூட சிஏஜி ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கவேயில்லை.
2-ஜி குறித்து சிஏஜி அளித்த அறிக்கையும் இவ்விதம்தான் என்பது நீதிமன்ற தீர்ப்பில் புலனாகியுள்ளது.

சிஏஜி அறிக்கை அடிப்படையில் 122 லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. சிபிஐ நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் அனைத்துமே இழப்பீடு கோரி முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளன. வீடியோகான் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பீடு கோரி மனு செய்துள்ளது. லூப் டெலிகாம் மற்றும் எஸ்-டெல் நிறுவனங்களும் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளன.

இதேபோல சிபிஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட டெலிநார், சிஸ்டெமா, எடில்சாட் உள்ளிட்ட நிறுவனங்களும் இழப்பீடு கோர முடிவு செய்துள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர் காம்), எஸ்ஸார் நிறுவனங்களும் வழக்கறிஞர்களுடன் இழப்பீடு தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.
வங்கிகளின் வாராக்கடனில் மிக முக்கிய பங்கு வகிக்கும் துறைகளில் டெலிகாம் துறை முக்கிய இடம் வகிக்கிறது. லாபமீட்டும் துறை என கருதப்பட்டு பெரும் நஷ்டத்தை இத்துறை நிறுவனங்கள் சந்தித்து வருவதை ரிசர்வ் வங்கியே எச்சரித்துள்ளது.
சிஏஜி பதவி வகிப்போர் இப்பதவிக்குப் பிறகு வேறெந்த அரசு பதவிகளையும் வகிக்க முடியாது.

ஆனால் வினோத் ராய், ஐ.நா வெளியுறவு தணிக்கை குழுவின் தலைவர், இந்திய ரயில்வேயின் கவுரவ ஆலோசகர், பிசிசிஐ அமைப்பின் செயல்பாட்டுக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.

அனைத்துக்கும் மேலாக வங்கி வாரிய குழு (பிபிபி) தலைவராக 2016-ம் ஆண்டில் வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

"காங்கிரஸ் தலைமையிலான அரசு மீண்டும் பதவிக்கு வராமலிருக்க வித்திட்ட வினோத் ராய்க்கு பாஜக அரசு அளித்த பதவி இது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரிதான் " என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பானதே.
 அதற்கேற்றார் போல் தனது "வெறும் கணக்குகள் மட்டுமல்ல "புத்தகத்தில் வேண்டுமென்றே அதிகபட்ச அளவில் இழப்பீட்டை ஊதி பெருக்கி கூறி உலகம் முழுக்க பரபரப்பை உண்டாக்கியதாக எழுதியுள்ளார். 
இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வர ஏறக்குறைய 7 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் மேல் முறையீட்டு வழக்கு விசாரணை சிஏஜி உள்ளிட்ட அமைப்புகளுக்கு சாதகமாக வந்தால் மட்டுமே இந்த அமைப்புகள் மீதான நம்பகத் தன்மை உலக அளவில் உண்டாகும்.ஆனால் அதற்கு வினோத் ராய் அனுமான கணக்கில் இடமில்லை.
வினோத் ராய் வழிமுறை கணக்கைத்தான் குமாரசாமியும் பயன்படுத்தியுள்ளார்.
ஒன்று ஊதி பெருசாக்க,மற்றோன்று மிக சிறிதாக்க.
ஆனால் இரண்டுமே தப்புக்கணக்குகள் என்று மாட்டிக்கொண்டதுதான் உண்மைக்கு கணக்கு. 
 நன்றி:தமிழ் இந்து                                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...