bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 10 ஜூன், 2017

மக்கள் நலனுக்குக் கேடுதரும்மரபணு மாற்றப்பட்ட கடுகை

 விரட்டியடிப்போம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் அளிக்கும் குழு (Genetic Engineering Appraisal Committee - GEAC) 11.5.2017 அன்று மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவித் துள்ளது. நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின்கீழ் இக்குழு இயங்குகிறது. அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், சுற்றுச்சூழல் அமைச் சரின் ஒப்புதல் கிடைத்ததும் மரபணு மாற்றப்பட்ட கடுகு உழவர்கள் பயிரிடுவதற்காக விற்பனையில் கிடைக்கும் என்றும் இக்குழு தெரிவித்துள்ளது. அந் நிலையில் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட முதலாவது உணவுப் பயிராக கடுகு இருக்கும்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் வழங்கும் குழுவின் தலைவர் அமிதா பிரசாத், “மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வயல்களில் பயிரிடுவதற்காக அனுமதிக்குமுன், மனித உயிருக்குப் பாதுகாப்பானதுதான் என்பதை உறுதிசெய்துள்ளோம். இந்தியா போன்ற நாட்டின் உணவுத் தேவைகளை ஈடுசெய்ய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இன்றியமையாதவை களாக இருக்கின்றன. இந்தக் கடுகு 30 விழுக்காடு கூடுதல் விளைச்சல் தரவல்லது” என்று கூறியிருக் கிறார்.
கடுகு இந்திய உணவில் தவறாமல் இடம்பெறும் பொருளாகும். வடஇந்தியாவில் சமையல் எண்ணெய் யாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா தற்போது தன் சமையல் எண்ணெயின் தேவையில் 50 விழுக் காட்டை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது. இறக்கு மதி செய்யப்படும் எண்ணெய்யில் 90 விழுக்காடு பாமாயில் எனப்படும் செம்பனை எண்ணெய் ஆகும். எனவே மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிடுவதின் மூலம் அதிக விளைச்சல் பெறுவதுடன் வெளிநாடுகளி லிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படு வதைக் குறைக்கலாம்; அந்நியச் செலாவணியும் குறை யும் என்று மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆதரவா ளர்கள் கூறுகின்றனர். கடுகின் விளைச்சலை உயர்த் திட இதுதவிர வேறு வழி இல்லையா?
உலக அளவில் ஒரு எக்டரில் கடுகு பயிரில் அதிக விளைச்சல் பெறும் முதல் 5 நாடுகளான செருமனி, பிரிட்டன், பிரான்சு, செக்குடியரசு, போலந்து ஆகிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படு வதில்லை.
I.  மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படாத நாடுகளில் கடுகு உற்பத்தி - கிலோ/எக்டர்
1.            செருமனி     3786
2.            பிரிட்டன்      3477
3.            பிரான்சு         3370
4.            செக் குடியரசு          3157
5.            போலந்து     2708
6.            உக்ரைன்      2106
7.            ருமேனியா 2067
8.            சீனா  1871
9.            இந்தியா        1196
II. மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படும் நாடுகளில் கடுகு உற்பத்தி - கிலோ/எக்டர்
1.            கனடா             1953
2.            அமெரிக்கா (U.S.A.) 1780
3.            ஆஸ்திரேலியா     1277
(புள்ளிவிவர ஆதாரம் : உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - FAO)
மேலே உள்ள புள்ளிவிவரம் மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிடாத நாடுகளில்தான் உற்பத்தித்திறன் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிற உண்மையை உணர்த்துகிறது. 
மேலும் இப்பிரிவில் இந்தியாவின் உற்பத்தி எக்டருக்கு 1196 கிலோவாக இருப்பதை செருமனி, பிரிட்டன், பிரான்சு முதலான நாடுகளில் பின்பற்றப்படும் வேளாண் முறைகளைக் கடைப்பிடித்து உற்பத்தியைப் பெருக்காமல், மரபணு மாற்றப்பட்ட கடுகுதான் உற்பத்தியை உயர்த்துவதற் கான ஒரே வழியாக இந்தியா தேர்ந்தெடுத்தது ஏன்? 
மரபணு மாற்றறப்பட்ட கடுகைப் பயிரிடும் நாடுகளின் விளைச்சல் குறைவாக உள்ளபோதிலும், இந்த வழி முறையைத் தேர்வு செய்வதற்கான காரணம் அமெரிக் காவின் பன்னாட்டு நிறுவனங்கள் தரும் அழுத்தமே ஆகும்.
2002ஆம் ஆண்டில் பன்னாட்டு நிறுவனமான பேயர் (Bayer) உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை நடுவண் அரசின் ஒப்புதல் வழங்கும் குழு (GEAC) தள்ளுபடி செய்தது. 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ உருவாக்கிய மரபணு மாற்றப்படட கத்தரிக்கு இக்குழு ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் நிலவும் பல்வேறுபட்ட தட்பவெப்பச் சூழல், மண்வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப 2200 வகையான கத்தரிக்காய்கள் பயிரிடப்படுகின்றன. 
மரபணு மாற்றப்பட்ட (Bt) பருத்தி வந்தபின், நாட்டு வகைப் பருத்திகள் அழிந்ததுபோல், பி.டி. கத்தரியால் நாட்டு இரக கத்தரிகளும் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தால் உழவர்கள் பி.டி. கத்தரிக்குக் கடும் எதிர்ப் பைத் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். 
அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தினார். இறுதியில் பி.டி. கத்தரி கைவிடப்பட்டது. இப்போது பி.டி. கடுகு வந்துள்ளது.
பி.டி. பருத்தி, பி.டி. கத்தரி, பி.டி. கடுகு என்ப வற்றில் உள்ள “பி.டி.” (Bt) என்பது என்ன? மண்ணில் பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis) எனும் பாக்டீரியா வாழ்கிறது. அவற்றில் உள்ள ஜீனைப் (gene) பிரித்தெடுத்து பருத்திச் செடியுடன் ஆய்வுக்கூடத் தில் இணைக்கின்றனர். இதுவே மரபணுப் பொறியி யல் (Genetic Engineering) எனப்படுகிறது. இந்த பாக்டீரியாவின் ஆங்கிலப் பெயரின் சொற்களில் உள்ள முதல் எழுத்துகளான ‘க்ஷ’, ‘வ’ ஆகியவற்றை எடுத் தாண்டு பி.டி. (க்ஷவ) என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டது.
பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட புரதப் பொருளான ஜீன் சேர்க்கப்பட்ட பருத்திப் பயிரில் உண்டாகும் காய்களைப் புழுக்கள் சேதப்படுத்துவதில்லை என்று கூறப்பட்டது. அதாவது பி.டி. ஜீன் இருப்பதால் அதன் வேதிப்பொருள் காரண மாக காய்ப்புழுக்கள் அதை உண்ணாமல் விலகிச் செல்கின்றன. சாதாரண இரக பருத்திப் பயிரில் பருத் திக் காய்களுக்குள் புழுக்கள் நுழைந்து தின்பதால் பருத்தி உற்பத்தி குறைவதுடன், அதன் தரமும் குறைகிறது. 
எனவே பி.டி. பருத்தியைப் பயிரிட்டால் பூச்சி மருந்து தெளிக்க வேண்டியதில்லை; பருத்திக் காய்களைப் புழுக்கள் தாக்குவதில்லை; அதனால் தரமான பருத்தியும், அதிக விளைச்சலும் கிடைக்கிறது; ஆகவே உழவர்கள் அதிக இலாபம் பெறுவார்கள் என்று பரப்புரை செய்யப்பட்டு, மான் சாண்டோ நிறு வனத்தின் பி.டி. பருத்தியை உழவர்கள் பயிரிட நடுவண் அரசு அனுமதித்தது.

பி.டி. பருத்தி அறிமுகமான சில ஆண்டுகளில் அதிக விளைச்சல் கிடைத்தது. காய்ப்புழுவின் தாக்குத லும் குறைவாக இருந்தது. அதனால் பருத்தி பயிரிடப் பட்ட மொத்த பரப்பில் பி.டி. பருத்தி 95 விழுக்காடு இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் உழவர் களின் விதை உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது.
 ஒவ்வொரு முறையும் மான்சாண்டோ நிறுவனத்திட மிருந்து அதிக விலையில் பி.டி. பருத்தி விதைகளை உழவர்கள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 
ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பி.டி. பருத்தியிலும் காய்ப்புழுவின் தாக்குதல் ஏற்பட்டது. உழவர்கள் பல தடவைகள் பூச்சி மருந்து தெளிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். விளைச்சல் குறைந்தது. பி.டி. பருத்தியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் மாண்டன.
இதுகுறித்து 1990களில் நடுவண் அரசின் ஜவுளித் துறையின் செயலாளராக இருந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் 25.5.2017 அன்று “தி இந்து” - ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில், “பூச்சி மருந்து தெளிப்பது தவிர்க்கப்படுவதால், செலவு குறை வதுடன் உற்பத்தி அதிகமாகும் என்கிற கூற்றை நானும் நம்பி பி.டி. பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 
ஆனால் எதிர்பார்த்த பயன்கள் பொய்யாகிவிட்டன என்பதை இப்போது உணருகிறேன். கூடுதலாக நீர்ப்பாசனம், உரங்கள் அளித்தபோதிலும் எதிர்பார்த்தவாறு அதிக விளைச்சல் கிடைக்கவில்லை. இந்தியாவைவிட ஒரு ஏக்கரில் அதிக பருத்தி மகசூல் எடுக்கும் பெரும்பாலான நாடுகள் பி.டி. பருத்தியைப் பயன்படுத்துவதில்லை. பி.டி. பருத்தி குறித்து பல உண்மைகள் நமக்கு மறைக் கப்பட்டன. எதிர்காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த உண்மை விவரங்களை அறிய நேர்ந்திருந்தால், பி.டி. பருத்தி இந்தியாவுக்குள் நுழைந் திருக்காது” என்று எழுதியுள்ளார்.
பி.டி. பருத்திக்கே இந்த நிலையெனில், நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் கடுகு, பி.டி. கடுகாக மாறுவது குறித்து இன்னும் பல மடங்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.
பி.டி. பருத்தி, பி.டி. கத்தரி ஆகியவை காய்ப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கும் ஆற்றல் பெற்றவை என்று கூறப்பட்டது. ஆனால் பி.டி. கடுகிலோ, கொடிய நச்சுத் தன்மையைக் கொண்ட களைக்கொல்லி மருந்துகளை வயலில் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும். களைக் கொல்லி மருந்துகளின் (Herbicide) கொடிய நஞ்சு மனிதர்களையும், சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
களைகளை வளரவிடாமல் செய்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறுவதே பி.டி. கடுகின் குறிக்கோள். களைக்கொல்லி மருந்துகளைத் தெளித்தாலும் அதன் நச்சுத்தன்மையைத் தாங்கும் (herbicide tolerant) வல்லமை உடைய பி.டி. ஜீன்களைக் கொண்டவை பி.டி. கடுகு என்று கூறப்படுகிறது.
கிளைபாஸ்பேட் (Glyphosphate) எனும் வேதிப் பொருளை அடிப்படையாகக் கொண்டே களைக்கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கிளைபாஸ்பேட் வேதிப்பொருள் சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய், மறதி நோய், புற்றுநோய் ஆகியவற்றை அதிகரிக்கும் என்று அமெரிக்காவில் பி.டி. பயிர்கள் குறித்து கடந்த இருபது ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட் டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) “கிளை பாஸ்பேட்” மனிதர்களிடம் புற்றுநோயை உண்டாக்கும் என்று அறிவித்துள்ளது. அதனால்தான் கிளைபாஸ்பேட் வேதிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட களைக் கொல்லி மருந்துகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ள பி.டி. கடுகை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், உழவர் களும் எதிர்க்கின்றனர்.
அமெரிக்காவில் 20 வகையான களைகள் கிளைபாஸ் பேட்டை அடிப்படையாகக் கொண்ட களைக்கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து இக்களைகளைக் கட்டுப்படுத்த 16 ஆண்டுகளில் இம் மருந்தை பத்து மடங்கு அதிகமாகத் தெளிக்க வேண்டும். அதனால் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள், களைக்கொல்லி மருந்துகளை உலகம் முழுவதும் விற்று, கொள்ளை இலாபம் ஈட்ட, களைக்கொல்லி சார்ந்த பி.டி. விதைகளைப் பயிரிடுமாறு பலவழிகளைக் கை யாண்டு வருகின்றன.
அண்மையில் உலகின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களான மான்சாண்டேவும் பேயரும் (Bayer), டோவ் (Dow)ம், டுபாண்ட்டும் (Dupon), சைஜென் டாவும் சைனிஸ்செம்பும் இணைந்தன. இந்நிறுவனங்களிடம் உலகின் பூச்சிமருந்து விற்பனையில் 65 விழுக்காடும், விதை விற்பனையில் 61 விழுக்காடும் உள்ளன. இவைதான் உலகின் விதை - பூச்சிமருந்து சந்தையை ஆட்டிப்படைக்கின்றன. 
அமெரிக்காவின் புகழ்பெற்ற அயலுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர், “கச்சா எண்ணெயை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், தேசங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்; உணவுப் பொருள்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், உலகில் வாழும் மக்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்” என்று ஒருமுறை கூறியதைப் பன்னாட்டு நிறுவனங்களின் விதை-பூச்சி மருந்து ஆதிக்கத்துடன் இணைத்து எண்ணிப் பாருங்கள்.
பா.ச.க. 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், “மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில், நீண்டகாலப் போக்கில் மண், உற்பத்தி, நுகர்வோரின் உடல்நலன் ஆகியவற்றில் எத்தகைய கேடான விளைவையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்த பிறகே அனுமதிக்கப்படும்” என்று கூறியிருந்தது.
பன்னாட்டு நிறுவனத்தின் பி.டி. பயிராக இருப்பின் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் ‘சுதேசி’ பி.டி. கடுகைக் கொண்டுவர உள்ளது. னுஆழ-11 எனப்படும் பி.டி. கடுகு தில்லிப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் தீபக் பென்தால் தலைமையில் நடுவண் அரசின் நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ‘தேசியம்’, ‘தேசபக்தி’ என்கிற பெயர்களால் எதிர்ப்பு களை பா.ச.க.வின் மோடி அரசு ஒடுக்கி வருவதுபோல் ‘சுதேசி’ பி.டி. கடுகு என்ற பெயரால் எதிர்ப்புகளை அடக்கிவிடலாம் என்று நினைக்கக்கூடும். சுதேசி பி.டி. கடுகானாலும் பன்னாட்டு நிறுவனத்தின் பி.டி. கடு கானாலும் அதனால் ஏற்படக்கூடிய கேடுகளில் மாற்றம் இல்லை. சுதேசி பி.டி. கடுகான - னுஆழ-11 என்பதற் கும் கிளைபாஸ்பேட்டை அடிப்படையாகக் கொண்ட களைக்கொல்லி மருந்தைக் கட்டாயம் தெளிக்க வேண் டும். எப்போதும் களைக்கொல்லி மருந்து பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மேலும் சுதேசி பி.டி. கடுகு பயிரிட அனுமதிக்கப்படும் போது, “அரசு-தனியார் கூட்டு” என்ற பெயரில் இந்த விதை தயாரிப்பு உரிமை தனியார் நிறுவனத்திடம் தரப்படும்.
சமையல் எண்ணெய்யின் இறக்குமதியைக் குறைக்க, கடுகின் விளைச்சலைப் பெருக்க என்பன போன்ற போலியான முழக்கங்கள் மூலம் பி.டி. கடுகைப் பயிரிட அனுமதிப்பது எவ்வளவு அடாவடித்தனமானது என் பதை மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் மூலம் தெளிவு படுத்தி உள்ளோம்.
பி.டி. கடுகு கொடிய நச்சுப் பொருள்களைக் கொண்டது. நுகர்வோரான 125 கோடி மக்களின் உடல்நலனுக்குப் பலவகையிலும் ஊறுவிளைவிப்பது ஆகும். உழவர் களின் விதை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதிக விலையில் கடுகு விதையையும், களைக்கொல்லி மருந்தையும் தனியாரிடம் உழவர்கள் வாங்க வேண்டும். எனவே இது தனியார் மயக் கொள்ளைக்கு துணைபோவதாகும். நச்சுத்தன்மை மிக்க களைக்கொல்லி, சூழலை மாசுபடுத்தும். பல உயிர்களுக்கும் நஞ்சாக அமையும்.
உலகில் உள்ள 190 நாடுகளில் 17 நாடுகளில் மட்டும் உலகில் உள்ள தாவர, விலங்கு உயிரினங்களில் 70 விழுக்காடு உள்ளன. இந்த 17 நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இரண்டு இலட்சம் நெல் இரகங்கள் இருந்தன. பசுமைப் புரட்சி என்ற பெயரால் இவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டன. உயிர்ப்பன்மயத்துக்கும், விதைப்பன்மயத்துக்கும் முதல் எதிரியாக உள்ள பி.டி. கடுகு போன்றவற்றை முளையிலேயே கிள்ளி எறிதல் போல், நுழையவிடாமல் தடுத்திட வேண்டியதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் நமது கடமையாகும்.
                                                                                                                                             க.முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...