bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 26 ஜூலை, 2017

இந்தியாவில் சிறந்த மாநிலம் குஜராத் அல்ல...

பகலைத் தொடர்ந்து இரவு வரும் என்ற முதுமொழிக்கேற்ப காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுக்கும் மாநிலங்களில் அதற்குப் பதிலாக அநேகமாக அதனை பாஜக கைப்பற்றும் என்று பாஜக ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள். 

ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா இதற்கு முற்றிலும் மாறுபட்டு, நிகரற்ற முறையில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய மாநிலமாக விளங்குகிறது.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சிஅதிகாரத்தில் 32 ஆண்டுகளாக கோலோச்சுகிறது. அதன் வாக்கு சதவீதம் 50க்கும் மேலாகும். 
காங்கிரஸ் கட்சிக்கு 36 சதவீதம் வாக்குகள் உண்டு. 
இப்போது அதன்மீது பாஜக கண் வைத்திருக்கிறது. 

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய போது, அதன் பாதிப்பு திரிபுராவிற்கும் சென்றது. அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சுதிப் ராய் பர்மன் திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவினார்.

ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்ற ஆசையில் காங்கிரசிலிருந்து திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவிய பர்மனுக்கு, இப்போது வேறெங்கிருந்தாவது அதைவிடக் கூடுதலாக ஆதாயம் கிடைக்குமெனில் தாவாமல் இருப்பாரா? 

மிகப்பெரிய அளவில் அவருக்கு ஆதாயம் கிடைத்துள்ளது என்கிறசெய்தி அகர்தலா முழுவதும் பரவியிருக்கிறது. 
தற்சமயம் திரிபுரா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு என்று ஓர் உறுப்பினர் கூட கிடையாது. பர்மன் தன்னுடன் உள்ள 5 உறுப்பினர்களுடன் பாஜகவிற்குத் தாவ இருக்கிறார். இதனை அம்மாநில ஆளுநரான தத்தாகடா ராய்வரவேற்றிருக்கிறார். 

அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக ஊழியர்களே கூட முஸ்லிம்களுக்கு எதிராக மேற்படிஆளுநர் கக்கிய வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் பொது இடத்தில் பன்றிக் கறியைச் சாப்பிடத்தொடங்கினால்தான், அவர்கள் நம்முடன் ‘‘முறையாக ஒருங்கிணைவதாக அர்த்தம்’’ என்று தான் நம்புவதாக ஆளுநர் பேசியிருக்கிறார். பன்றியுடன் அவருக்குள்ள சித்திரங்கள்அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைக்கின்றன. 

உதாரணமாக, முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அவர் விரும்பும் தண்டனைஎன்ன தெரியுமா? 
அவர் கூறும் யோசனையைக் கேட்பவர்கள் தங்கள் மூக்கைப் பிடித்துக்கொள்வார்கள்: ‘‘பன்றித்தோலுடன் அவர்களைச் சுற்ற வேண்டும், பன்றிகளின் மலத்துவாரத்தில் அவர்களின் முகம் இருக்கும்படி வைத்து அவர்களைப் புதைக்க வேண்டும்.’

’இத்தகைய இழிவான வசைமாரிக் கூற்றுகளைக் கேட்டு மாநிலத்தில் 7 சதவீதம் அளவிற்கு இருக்கின்ற முஸ்லிம்கள் ஆத்திரம்அடைந்துள்ளார்கள்.

நிகரற்ற மாநிலம்
இப்படி, பாஜகவின் தூதுவர்கள் திரிபுராவில் குழப்பம் விளைவிக்க முயலும் போதிலும்,திரிபுரா இடது முன்னணியின் ஆட்சியை வீழ்த்த முடியாது என்ற நிலைதான் உள்ளது.இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக ஆளப்படும் மாநிலமாக திரிபுரா விளங்குவதை என் அனுபவத்தில் நான் கண்டுள்ளபோதிலும், ஊடகங்கள் அதனைக் வெளிக்கொணர விரும்பாததால், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இது குறித்து ஒன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். 

மத்திய சட்ட அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், ‘நான் மிகவும்வியந்து பாராட்டும் முதல்வராக மாணிக் சர்க்கார் விளங்குகிறார்’ என்று ஒரு சமயம் கூறியதை அனைவருக்கும் சொல்லியாக வேண்டும்.
லண்டனிலிருந்து வெளிவரும் இண்டிபெண்டெண்ட் ஏட்டின் இதழியலாளர் ஆண்ட்ரு பன்கோம்ப்  அகர்தலா சென்றுவிட்டு, புதுதில்லி திரும்பியபின், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மிகவும் வியந்து போற்றிப் புகழ்ந்தார்: 
‘‘ஒழுங்கமைதி, நேர்த்தி, களங்கமற்ற நிர்வாகத்தில் எவ்விதமான அபத்தமும் நிகழாத மாநிலம்’’ என்றார் அவர்,பார்வையாளர்கள் பலரும் பார்த்திருப்பதைப்போல, அவரும் பார்த்திருக்கிறார். ‘‘சில சமயங்களில் முதலமைச்சர் தனது அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார். அவரதுதுணைவியார், ஒரு பள்ளிக்கூட ஆசிரியராகஇருப்பவர், பள்ளிக்கூடத்திற்கு சைக்கிள்ரிக்சாவை வாடகைக்குஅமர்த்திக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன்.


’’ திரிபுராவின் மனிதவள வளர்ச்சி அட்டவணை குறித்து எவருக்கேனும் தெரியுமா? அம்மாநிலத்தின் மக்கள் தொகை குறைவுதான். 40 லட்சம்தான்.
கோவா மற்றும் சிக்கிம்ஆகியவைதான் நாட்டில் சிறிய மாநிலங்களாகும். எனினும்கூட, திரிபுராவின் எழுத்தறிவு விகிதம் 96 சதவீதம் ஆகும். குஜராத்தில் எழுத்தறிவு எவ்வளவு தெரியுமா? 83 சதவீதம் மட்டுமே.(நான் கேரளாவை இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஒருசமயம் அது நிகரற்று விளங்கியமாநிலமாகும்.)

தனிமனித ஆயுட்காலம் ஆண்கள் 71 ஆண்டுகள், பெண்கள் 73 ஆண்டுகளாகும். இதிலும் திரிபுரா நாட்டில் வரலாறு படைத்துள்ளது. குஜராத்தில் இது முறையே 64, 66 ஆகும். திரிபுராவில் பழங்குடியினரிடையே பாலினபாகுபாடு என்பது அரிதிலும் அரிதாகும்.
இவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதில்லை

இதற்கெல்லாம் காரணம் என்ன? 
இங்குஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைமையின் மேதைமைதான். மாநிலத்தில் உள்ள முக்கியமான அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு, தங்கள் அரசியலில் செயல்படுத்துவதைப் போலவே, நல்லாட்சிவழங்குவதிலும் ஒரு கலையாக செயல்படுவதுதான் காரணம். தங்கள் மார்பை விரிவாக்கிக்காட்டுவதற்குப் பதிலாக, ஏதேனும் பிரச்சனை என்றால் கையைப் பிசைந்துகொண்டு நிற்பதற்குப் பதிலாக, மாநிலத்திற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, மேலிருந்து கீழ் வரை ஆராய்கிறார்கள்;

அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்கள்; கட்சிஊழியர்களை அழைத்துப் பேசுகிறார்கள்; மாநிலத்தில் இயங்கும் மூன்று அடுக்குபஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஈடுபடுத்துகிறார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சுயாட்சி கவுன்சில்களையும் பங்கேற்கவைக்கிறார்கள், (இவை மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்காகும், மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில் இயங்குபவைகளாகும்). இவ்வாறுஅனைவரது உண்மையான பங்களிப்பினையும் உணர வைத்து, செயல்படுத்துகிறார்கள். இதனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, இந்த மாநிலத்தில் மிக முக்கியமான பிரச்சனை, பழங்குடியினரையும், பழங்குடியினரல்லாதவர்களையும் மோதவிடும் பிரச்சனையாகும். இங்கே மன்னராட்சி இருந்த சமயத்தில், பழங்குடியினர்தான் அதிகமாக இருந்தார்கள். ஆனால், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) உருவானபின்னர், அண்டைப் பகுதிகளிலிருந்த இந்து வங்காளிகள் திரிபுராவிற்கு புலம்பெயர்ந்து வந்தார்கள். 

இதன் காரணமாக இங்கிருந்தபழங்குடியினர் (மொத்தம் 19 பழங்குடியினத்தவர்கள் இருக்கிறார்கள்), மாநிலத்தில் சிறுபான்மையினராக மாறிவிட்டார்கள்.
இப்போது மாநிலத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் வங்காளிகள், 30 சதவீதத்தினர் பழங்குடியினராவார்கள்.அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ், வங்காளிகளின் வாக்கு வங்கியை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக வங்காளிகள் - பழங்குடியினர் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தது. இத்தகைய இழிவான அரசியலில் பாஜக மட்டும்பின்தங்கிவிடுமா என்ன? எங்காவது எண்ணிக்கையில் குறைவு ஏற்படுமானால், ஒரு பழங்குடியினத்தவர், இன்னொரு பழங்குடியினத்தவருக்கு எதிராக பயன்படுத்தப்படுவார். 
இவ்வாறுதான் இந்த மாநிலம் முன்பு இருந்தது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தசரத் தேவ், எதிர்காலம் குறித்து திட்டமிட்டார். பழங்குடியினர் மத்தியில் எழுத்தறிவை ஏற்படுத்துவதற்காக 1945இல் மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை (ஜன சிக்சா அபியான்) தொடங்கினார். 
அன்றைக்கு ஆட்சியிலிருந்த மகாராஜாவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து, 500 ஆரம்பப் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றார்.அது இப்போது பல்கிப் பெருகி, மாநிலத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற அளவில் வியாபித்திருக்கிறது.


நிருபன் சக்கரவர்த்தியின் தொலை தூரப்பார்வை

இத்தகைய அடித்தளத்தின் காரணமாகத்தான் பழங்குடியினர் இம்மாநிலத்தில்கம்யூனிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் வங்காளிகள், காங்கிரஸ் பக்கம் சென்றார்கள். காங்கிரஸ்கட்சி தன்னுடைய பிளவுவாத நிலைப்பாட்டில் திருப்தி அடைந்துவிட்டது. 
ஆனால்,நிருபன் சக்ரவர்த்தி போன்ற ஒரு தலைவர்இம்மாநிலத்திலிருந்த சிக்கலான சமூகஎதார்த்தத்தை நன்குணர்ந்தார். 
பழங்குடியினரின் ஆதரவு இல்லையென்றால், வங்காளிகளின் நிகழ்ச்சிநிரலை ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்துச் செல்லமுடியாது.

அதேபோல், வங்காளிகளின் உதவியில்லாமல் பழங்குடியினர் முன்னேற முடியாது. 
எனவே, பழங்குடியினர்-பழங்குடியினரல்லாதவர் ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே நமது துயரோட்டும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. 
அது இரு தரப்பினர் மத்தியிலும் ஆழமாக எடுத்துச் செல்லப்பட்டது.1940களிலும், 50களிலும் கம்யூனிசத்தைக் கையில் எடுத்துக் கொண்ட பழங்குடியினர் இந்த முழக்கத்தை உடனடியாகப் பற்றிக்கொண்டுவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வங்காளிகளும் இம்முழக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.


இவ்வாறு இடதுசாரிகள் தங்கள் ஒற்றுமைக்கான மேடையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிய அதேசமயத்தில், காங்கிரஸ் வங்காளிகள் இடையே கவனம் செலுத்துவதில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது. இதன்காரணமாக கொஞ்சம் தேர்தல் ஆதாயம் என்பது அவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆயினும் வாக்காளர்கள் மத்தியில், உண்மையில் மக்கள் மத்தியில், இடதுசாரித் தலைவர்கள் அனைவருமே மிகவும் எளிமையுடனும், எவ்விதமான லஞ்ச லாவண்யங்களுக்கும் இடம் கொடுக்காமலும் இருந்ததானது, வாக்காளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கத் தொடங்கியது.
காங்கிரஸ் எம்எல்ஏவான கோபால் ராய் அவர்களே, ‘‘தனிப்பட்டமுறையில் கம்யூனிஸ்ட்டுகள் லஞ்சலாவண்யத்திற்கு இடம் கொடுக்காதவர்கள் என்பதை மறுக்க முடியாது’’ என்று ஒப்புக்கொள்கிறார்.

1978-88இல் முதல் இடது முன்னணியின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி, முதலமைச்சரின் அலுவலக பங்களாவிற்குள் நுழைந்துவிட்டு, பின்னர் வெளியேறிய போது, இரண்டு டிரங்கு பெட்டிகளில் - தன்னுடைய துணிமணிகள், புத்தகங்கள் மற்றும் ஒரு ஷேவிங் செட்டுடன் வெளியேறினார். முதல்வரின் வீட்டிற்குத் தேவையான மளிகைசாமான்கள் அவருக்கான ரேஷன் அட்டையிலிருந்துதான் பெறப்பட்டன.

நவீன முதலாளித்துவம் அவரை அநேகமாக ஒரு தீண்டத்தகாதவராகவே கருதியிருக்கும். ஏனெனில் அவருக்கென்று ஒரு வங்கிக் கணக்கு கூட கிடையாது. 
அவரது சீடரான, இப்போதைய முதலமைச்சரான மாணிக் சர்க்காரும், மிகவும் சிக்கனமானவர்தான். முதலமைச்சர்மத்திய, மாநிலத் திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார் என்பது நம்பமுடியாததாகத்தான் இருந்தது. நான் அவரை,தாகூரின் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அவருடைய மிகவும் எளிமையான அலுவலகத்தில் சந்தித்தபோது, அவர்மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கையை முடித்து வைத்திருந்தார்.

திட்டங்களை அமல்படுத்துவதில் திரிபுராவிற்கு இணையாக வேறெந்த மாநிலத்தையும் சொல்லமுடியாது. கிளினிக்குகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், தாய்-சேய் பாதுகாப்பு இல்லங்கள், மின்சார விநியோகம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் உள்பகுதிகளைக்கூட இணைத்திடும் சாலைகள் அமைத்தல் - என அனைத்தும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 இவை அனைத்தும், மாநிலத்தை அமைதிப் பூங்காவாக மாற்றி அமைத்திருந்தன.அப்போது மாநிலத்தின் காவல்துறைத் தலைவராக இருந்த கே.நாகராஜ், ‘மாநிலத்தில் குற்றங்கள் நடப்பது என்பது மிகவும் குறைவாகும்’ என்று கூறி வியந்தார்.
பல்லாண்டுகளுக்கு முன்னாள் ஆட்சிக்கெதிராக பிரிவினைவாதிகளின் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருந்த மாநிலத்தில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டே வெளியே வர பயந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தில், இது ஓர் அதிசயமாகும். 

‘‘காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பரிபூரண ஒருங்கிணைப்பு நிலவுவதே இதற்கு ஒரே காரணமாகும்.’’ பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தூய்மை பாரதம் திட்டத்தில் என்ன கூறுவாரோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்; 

ஆனால், அவர் தன்னுடைய அதிகாரிகள் எவரையாவது திரிபுராவின் உள்ளடங்கிய பகுதிகளுக்கு அனுப்பினார் என்றால், இவ்வளவு குறுகிய காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று அவர்கள் ஆச்சரியத்தில் தங்கள் கண்களைக் கசக்கிக் கொள்வார்கள்.
                                                                                                                            
                                                                                                                                                -சயீத் நக்வி
நன்றி-தி டெக்கான் கிரானிக்கிள்
(தமிழில்:ச.வீரமணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...