bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 27 அக்டோபர், 2017

150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்

மூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும், வரலாற்றில் மூலதனத்தின் இடமும்.


கட்டுரைக்குள் நுழையும் முன்பாகச் சில வார்த்தைகள்…
மாமேதை கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் தொகுதியின் முதல் பாகம் வெளியிடப்பட்டதன் 150 – ஆவது ஆண்டு நிறைவு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மூலதனத்தின் மரணத்தைப் பிரகடனம் செய்த இந்நூல், தொடர்ந்து உலக முதலாளி வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்துத் தனது மூலதனம் நூல் வழியாக உலகிற்கு எடுத்துரைத்த மாமேதை காரல்மார்க்ஸ்.
மூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் மூலதனத்தைப் படிப்பதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.
1867, செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மூலதனத்தின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி அந்த மாபெரும் படைப்பை இருட்டடிப்பு செய்து விட முதலாளி வர்க்கம் முயன்றது. இருப்பினும், 1872-இலேயே அதன் ரசிய மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது. தொடர்ந்து பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகின.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை மார்க்ஸால் முடிக்க இயலவில்லை. முற்றுப்பெறாத கையெழுத்துப் படிகள் அனைத்தையும் எங்கெல்ஸிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார் மார்க்ஸ்.
தனது சொந்த ஆய்வுப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை முடிப்பதை மட்டுமே தனது வாழ்நாள் கடமையாக்கிக் கொண்டார் எங்கெல்ஸ். “இதற்கு மேல் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதியில் தொடர்ச்சியில்லை” என்ற எங்கெல்ஸின் துயரம் தோய்ந்த குறிப்புடன் நின்று போகிறது மூன்றாவது தொகுதி.
1867 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் – முதல் தொகுதியின் முகப்பு அட்டை.
முதல் தொகுதி வெளிவந்த இரண்டாண்டுகளில் மார்க்ஸ் ரசிய மொழி கற்கத் தொடங்கினார். 1870-இல் சிக்பிரீட் மேயர் என்ற தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் மார்க்ஸ். “ஜெர்மன்-ரோமானிய மொழிக் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு மொழியை கற்றுத் தேர்வதற்கு இந்த வயதான காலத்தில் நான் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். இருப்பினும் நிச்சயமாக இது பயனுள்ள முயற்சிதான்.
ரசியாவில் தற்போது தோன்றியிருக்கும் அறிவுத்துறை இயக்கம், அந்தச் சமூகத்தின் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருக்கும் கொந்தளிப்புக்குச் சான்று பகர்கிறது. கண்ணுக்குத் தெரியாத இழைகள் மூலம் மனிதர்களின் உடல்களுடன் அவர்களது சிந்தனைகள் இணைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன” என்று அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.
அந்த மாமேதையின் புரட்சிகர உள்ளுணர்வு வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் உண்மையென்று பின்னாளில் ரசியப் பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. இது மூலதனம் நூலின் 150-ஆவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு. மூலதனம் பயில்வோம். மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்துவோம்!

***

“தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட, பெரிதும் தூற்றப்பட்ட மனிதர் மார்க்ஸ்” என்று அவருடைய கல்லறையில் நிகழ்த்திய உரையில் எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.
அத்தகைய வெறுப்புக்கும், தூற்றுதலுக்கும் மார்க்ஸ் இலக்கானதற்குக் காரணம், முதலாளித்துவ சமூகத்தின் உயிர்நிலையையே தாக்கும் இரண்டு விஷயங்களைத் தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுதான்.
முதலாவதாக, முதலாளித்துவம் மனித குல வரலாற்றில் இயல்பாகப் பரிணமித்ததோ, காலத்தால் அழியாததோ அல்ல என்பதை மார்க்சின் ஆய்வு நிறுவியது.
ஏனென்றால், பெரும் திரளான மக்களை, அவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களிலிருந்து பலவந்தமாகவும், மோசடியாகவும் பிரித்து வீசி, அந்தச் சாதனங்களைத் திருடிக் கைப்பற்றித் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டவர்களைச் சார்ந்து வாழும்படி மக்களைக் கட்டாயப்படுத்திய வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் மீதுதான் முதலாளித்துவம் நிற்கிறது.  இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையின் அடிப்படையில் உருவான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தவிர்க்க முடியாமல் தன் முடிவைச் சந்திக்கும் என்கிறது மார்க்ஸின் ஆய்வு.
தோழர் ஏங்கெல்ஸ்
இவ்வாறு முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.
இரண்டாவதாக, தொழிலாளர்கள் உபரி மதிப்புக்காக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், அவ்வாறு சுரண்டப்பட்ட உபரி மதிப்பை (இலாபம்) தமக்குள் பிரித்துக் கொள்வதில் ஆலை முதலாளிகளும், வணிகர்களும், நிலவுடைமையாளர்களும், வட்டிக் கடன்காரர்களும் எவ்வாறு போட்டி போடுகிறார்கள் என்பதையும், இந்த முரண்பாடுகள் சர்வதேச அளவில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான போட்டியாகவும், காலனி ஆதிக்கமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வெளிப்படுவதையும் இயக்குகின்ற முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பான விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.
அதாவது, முதலாளித்துவத்தை இயக்குவது வெறும் உலகளாவிய அரசியல் பொருளாதாரமல்ல; அரசுகளையும் அவற்றுக்கிடையிலான உறவுகளையும் மையமாகக் கொண்ட அரசியல் பொருளாதாரம் என்பதை அவர் நிறுவினார்.
150 ஆண்டுகளுக்கு முன்பு, 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட “மூலதனம்” நூலின் முதல் பாகம் மேற்கண்ட முதல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு, மேற்கண்ட இரண்டாவது முடிவை விளக்கிக் கூறுகிறது.
இந்த முடிவுகள் இரண்டுவிதமான பொருட்களில் வரலாற்றுப் பூர்வமானவை. முதலாவதாக, முதலாளித்துவம் என்பது காலத்துக்கு அப்பாற்பட்டதோ, என்றென்றும் நிலைத்திருப்பதோ அல்ல. முதலாளித்துவத்தின் தோற்றம் என்பது வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தைச் சார்ந்தது. மனிதகுல வரலாற்றின் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தோற்றம் பெற்றதைப் போல, எதிர்காலத்தில் அதற்கு ஒரு முடிவும் உண்டு.
வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்களும் குறிப்பிட்ட வர்க்கத்துக்குள் நடக்கும் போராட்டங்களும் தேசங்களுக்கிடையேயான போராட்டங்களும் ஒரு தேசத்துக்குள்ளேயே நடக்கும் போராட்டங்களும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் நிரம்பிய கொந்தளிப்பான வரலாற்றை நமக்குக் காட்டுகின்றன. முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் வர்க்கங்கள் அடங்கிய மனித குலம், தனது தெரிவின் மூலம் அதனை முடித்து வைக்கவும் இயலும் என்பதை “மூலதனம்” நூல் நமக்குக் காட்டுகிறது.
அதனால்தான், “மூலதனம்” என்ற இந்த நூல் வேறெந்த நூலைக் காட்டிலும், முதலாளித்துவ உலகத்தின் வரலாற்றிலிருந்தே பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. அதனால்தான் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1990-களுக்கு முன்பு வரை, சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கும் பாட்டாளி வர்க்க இயக்கங்களும், புரட்சிகளும், மக்கள் போராட்டங்களும் மார்க்ஸின்  “மூலதனம்” பாய்ச்சிய ஒளியில்தான் நடைபோட்டன.
மார்க்ஸ் விடை கண்ட கேள்விகள்
இன்று புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்டன. முதலாளித்துவத்தின் தாயகங்களாக விளங்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இளம்தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கோர்பின் (பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர்), சாண்டர்ஸ் (அமெரிக்க சமூக ஜனநாயகவாதி) போன்ற தலைவர்கள் மற்றும் சோசலிச கட்சிகளின் பின்னால் அவர்கள் திரண்டு வருகின்றனர். இந்தச் சூழல், இந்நாடுகளின் வரலாறுகளுக்குள்ளே மார்க்சின் மூலதனத்தை மீண்டும் அழைத்து வருமா?
150 ஆண்டுகளாக “மூலதனம்” நூலின் உள்ளடக்கத்தை மேற்குலகம் திரித்துப் புரட்டியிருக்கிறது. அந்தத் திரிபுகள் மூலதனம் நூலின் மீது குவிந்து, அதனை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அகற்றுவதென்பது, நமது அறிவுத்துறை பாரம்பரியம் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவற்றையும், மார்க்சிய மைய நீரோட்டம் என்பனவற்றையும் அகற்றுவதாக இருக்கும். இவ்வாறு அகற்றப்படவேண்டியவை நாம் கற்பனை செய்வதை விட மிகவும் அதிகமானவையாக இருக்கும்.
செவ்வியல் பொருளாதாரவியல் 17-ம் நூற்றாண்டில் வில்லியம் பெட்டி-யின் எழுத்துக்களில் தொடங்கி, 1776-இல் பதிப்பிக்கப்பட்ட ஆடம் ஸ்மித்தின் “தேசங்களின் வளங்கள்” என்ற நூலில் உருப்பெற்று, 19-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ரிக்கார்டோ மரபினரால் வளர்த்துச் செல்லப்பட்டது.
இந்தக் கட்டத்தில், “மதிப்பு என்பது என்ன? உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது? முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன? ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது?” என்பன போன்ற சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் செவ்வியல் பொருளாதாரம் தடுமாறி நின்றது.
கனடா – மாண்டிபா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுத்துறை பேராசிரியர் ராதிகா தேசாய்
மார்க்சின் மூலதனம் அனைத்துக்கும் விடையளித்தது. மதிப்பு என்பது என்ன, உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது, நெருக்கடிகள் ஏன் ஏற்படுகின்றன, இலாப விகிதம் ஏன் குறைகிறது, ஊதியங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடையளித்தது. சுரண்டல் தன்மை வாய்ந்ததும், நெருக்கடிகளிலிருந்து தப்ப முடியாததும், சர்வதேச வல்லாதிக்கத் தன்மை வாய்ந்ததுமான முதலாளித்துவத்தின் இயல்பை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், செவ்வியல்
முதலாளித்துவத்தின் உண்மை இயல்பு உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட்டது. உழைக்கும் வர்க்கங்கள் மென்மேலும் தமது வர்க்கநலன் குறித்துத் தெளிவு பெறத் தொடங்கினர். முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதென்பது மென்மேலும் சாத்தியமற்றதாக மாறத் தொடங்கியது. முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற புதியதொரு பொருளாதாரக் கோட்பாடு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது. சொல்லி வைத்தாற்போல அது வந்து சேர்ந்தது.
மார்க்சின் மூலதனத்தை எதிர்கொள்ள கொச்சைப் பொருளாதாரவியல்!
“மூலதனம்” நூல் வெளியான மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே 1870-இல் இங்கிலாந்தின் ஜெவோன்ஸ் தலைமையிலான அறிவுஜீவிகள் குழு உருவாக்கிய மார்ஜினலிச கோட்பாடு, வேண்டலை (Demand) ஆளும் விதிகளையும் வழங்கலை (Supply) ஆளும் விதிகளையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தி, பொருளின் விலை இதன் வழியே தீர்மானிக்கப்படுவதாகக் கூறியது.
இதைப் புரிந்து கொள்ள  “சரக்குகளின் மாய்மாலம்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது அகிலத்தின் மார்க்சியத் திரிபுகளை எதிர்த்துப் போராடிய தோழர் ரோசா லக்சம்பர்க்
முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களில் மனித உழைப்பு சமூகமயமாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு எளிய சட்டையில், அதன் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்கள், பருத்தி-நூல்-துணி, பிளாஸ்டிக்-பட்டன், இரசாயனம்-சாயம், உலோகங்கள்-தையல் எந்திரம் என நூற்றுக்கணக்கான பொருட்களின் உற்பத்தி சங்கிலிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபடும் உழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான ஏன், இலட்சக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவும் இந்தச் சமூகமயமான உற்பத்திச் சங்கிலியில் ஒரு சிறு பகுதி உழைப்பை செலுத்தி, அதற்குப் பதிலாக ஒட்டு மொத்த சமூக உற்பத்தியில் உருவாக்கப்படும் பொருட்களில் ஒரு பகுதியைத் தமது பங்காகப் பெற்றுக் கொள்கின்றனர்.
இவ்வாறு முதலாளித்துவ சமூகத்தில், உழைப்பின் சமூகத்தன்மை பொருட்களைச் சந்தையில் விற்பதற்கான சரக்குகளாக உற்பத்தி செய்வதன் மூலம் வெளிப்படுகிறது; எனவே, மனிதர்களுக்கிடையேயான சமூக உறவாக வெளிப்படாமல், சரக்குகளுக்கிடையேயான சமூக உறவாகவும் மனிதர்களுக்கிடையேயான பொருளாயத உறவாகவும் வெளிப்படுகிறது; வெளிப்பார்வைக்கு புலப்படாமல் மறைக்கப்படுகிறது; இதிலிருந்து பல போலியான தோற்றங்களும், பொய்யான கருத்துக்களும் பரவி ஆதிக்கம் செலுத்துகின்றன.
மூலதனம் நூலில் சரக்குகளின் மாய்மாலம் (Commodity fetishism) என்ற தலைப்பின் கீழ், கொச்சைப் பொருளாதாரவியல் (Vulgar economics) என்று மார்க்ஸ் சாடிய, எள்ளி நகையாடிய இந்த போலித் தோற்றங்களையும், பொய்யான கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட தொகுப்புதான் மார்ஜினலிசம் எனப்படுவது.
கொச்சைப் பொருளாதாரவியலை உருவாக்கிய குழுவின் தலைவர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ்
இந்தப் போலி பொருளாதாரவியல், சரக்கு சந்தையில் விற்கப்படுவதை ஆய்வு செய்யும் போது, பொருளின் உற்பத்தியையும், வாங்குபவரின் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியையும் விட்டு விடுகிறது. விலைகளை ஆய்வு செய்யும்போது விலைகளுக்கு அடிப்படையான மதிப்புகளை புறக்கணிக்கிறது. (இந்த அணுகுமுறையின் வக்கிரத்தைப் புரிந்து கொள்ள ஜுலை, 2017, பு.ஜ. இதழில் வெளியான விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.) உற்பத்தியில் ஈடுபடும் சமூக வர்க்கங்களை புறக்கணித்து விட்டு, தனிநபர்கள் மீது கவனத்தைக் குவிக்கிறது.
“வேண்டலும், வழங்கலும் சமமாகும் போது விலை தீர்மானிக்கப்படுகிறது” என்ற கொச்சையான, அறிவியலுக்குப் புறம்பான சமநிலை கோட்பாடு, முதலாளித்துவத்தில் அடங்கியிருக்கும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும், நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கையும் புறக்கணிக்கிறது. இருப்பினும், நெருக்கடிகள் இருப்பதை மறுக்கவியலாமல், போர், பஞ்சம், மோசடி போன்ற வெளிப்புற காரணிகள்தான் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறது இந்த கொச்சைப் பொருளாதாரவியல்.
பொருளாதாரத்திலிருந்து சமூகவியலைப் பிரிக்கிறார் மேக்ஸ் வேபர் !
19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், பொருளாதாரத்துறையில் பயிற்சி பெற்றவரான மேக்ஸ் வேபர், பொருளாதாரவியலிலிருந்து சமூகவியலைப் பிரித்தெடுத்து ஒரு புதுவிதமான சமூக அறிவியல் உழைப்புப் பிரிவினையைத் தோற்றுவித்தார். “நவீன முதலாளித்துவ சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியாக இயங்குவதால், அவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வாதிட்டு, சமூகவியல் என்ற புதிய துறையைத் தனியாக உருவாக்கினார்.
ஏனென்றால், பொருளாதாரவியல் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவது முதலாளிகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஏனென்றால், இந்த வழிமுறையின் மூலம்தான் தமது பொருளாதார நடவடிக்கைகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலேயே, பொருளாதாரத்தின் வேகத்தையும் தன்மையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவர்கள் தங்கள் கையில் வைத்துக்கொள்ள முடியும்.
முதலாளித்துவ சமூகவியல் துறையை உருவாக்கிய மேக்ஸ் வேபர்
இத்தகைய செயற்கையான அறிவுத்துறை பிரிவினை தோற்றுவிக்கும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆய்வாளர்கள் மேலோட்டமாகவே உணர்ந்திருக்கின்றனர். சமூக அறிவியல் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது குறித்து புலம்புகின்றனர். “துறைகளுக்கிடையேயான ஆய்வு’’, “பல்துறை ஆய்வு” போன்ற வித்தைகளின் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரிக்கட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், சமூகத்திலிருந்து வரலாற்றைப் பிழிந்து வெளியேற்றியிருக்கும் மேற்கண்ட ஆய்வுமுறை ஏற்படுத்தியிருக்கும் பெருந்தீங்கைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்
மார்க்ஸ் முன்வைக்கும் வரலாற்றியல் ஆய்வு முறை என்ன? வர்க்கங்கள், கட்சிகள், அரசுகள் முதலான அமைப்பாகத் திரண்ட மனிதக் குழுக்கள், தமக்கு வரலாற்றுவழியில் கையளிக்கப்பெற்ற சூழலில் இயங்குகிறார்கள். தமது முடிவுகளாலும் செயல்பாடுகளாலும் எதிர்கால வரலாற்றைப் படைக்கிறார்கள்.
மேக்ஸ் வேபர் போன்றோர் பெற்றெடுத்த புதிய சமூக அறிவியல்களின்படி, “முந்தைய தலைமுறை மனிதர்கள் மேற்கொண்ட வரலாற்று வழியிலான முடிவுகளும், செயல்பாடுகளும், அந்தப் பின்புலத்திலிருந்து பிய்த்தெடுக்கப்படுகின்றன. அவையனைத்தும் வரலாற்றுத் தேர்வுகளின், முடிவுகளின் விளைவுகளே என்பதற்குப் பதிலாக, மண்டியிட்டு நிறைவேற்ற வேண்டிய விதிகளாக நம் முன் நிறுத்தப்படுகின்றன.”
“வரலாற்றின் கருவிகளாக இயங்கும் மனிதர்களின் நடவடிக்கை, இனி வரவிருக்கும் வரலாற்றின் செயற்களத்தை மாற்றியமைத்த வண்ணம் இருக்கிறது என்ற உண்மையையும் மறுக்கிறது. இப்போதைய வரலாற்றை முந்தைய காலத்து கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் உருவாக்கிச் சென்றிருப்பதைப் போல இப்போதைய கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் தமது செயல்களால் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன என்பதை அது கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை.”
“இத்தகைய சமூக அறிவியல் அனைத்தையும் ஒரு எளிய நிகழ்கால மொழியில் சித்தரிக்கிறது. கட்சிகள் இதைச் செய்கின்றன – அரசுகள் இப்படிச் செய்கின்றன – பணவீக்கம் – வேலையில்லாத் திண்டாட்டம் இப்படிச் செய்கிறது – என்று பேசுகிறது. ஒரு காலகட்டத்தில் தோன்றும் பணவீக்கம் அல்லது வேலைவாய்ப்பின்மை முந்தைய காலகட்டங்களின் பணவீக்கம் அல்லது வேலை வாய்ப்பின்மையிலிருந்து வேறுபட்டது என்பதைப் புறக்கணிக்கிறது.”
வரலாற்று வழியில் தோன்றியிருக்கும் தேசிய வர்க்கங்களும் கட்சிகளும் அரசுகளும் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் மூலமாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கையாள்கின்றன என்ற உண்மையை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கிறது இந்த அறிவியல்.  மார்க்ஸின் மூலதனம் கையாளும் ஆய்வுமுறைக்கும் வேபர் வகைப்பட்ட இந்த அறிவியலுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.
நிதி மூலதனத்தின் தோல்வி : அமெரிக்காவில் நடந்த வால் வீதி முற்றுகைப் போராட்டத்தில், முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்துவரும் போரை நிறுத்தக் கோரும் பதாகையை ஏந்திவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 
முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக உற்பத்தி முறைகளிலிருந்து முதலாளித்துவத்தைப் பிரித்துக் காட்டுவது, அது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்வதாக இருப்பதுதான் என்பதை மார்க்சின் மூலதனம் எடுத்துக் காட்டியது.
முந்தைய சமூகங்களில் (உதாரணம் : இந்திய கிராம சமுதாயம், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை) பயன் மதிப்பை உற்பத்தி செய்யும் மனிதர்கள், சமூக உறவுகளின் அடிப்படையில் (சாதிய உறவுகள் அல்லது பண்ணையடிமை முறை) அவற்றை தமக்குள் பரிமாறிக் கொள்வது முதன்மையாக உள்ளது. சந்தை பரிவர்த்தனைக்கான உற்பத்தி மிகக் குறைந்த அளவே உள்ளது.
மாறாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருட்களின் பயன் மதிப்பை (எ.கா – சட்டையின் பயன்மதிப்பு உடலுக்கு பாதுகாப்பு, அழகு) உருவாக்கும் மனித உழைப்பின் (ஆலை உற்பத்தி, வடிவமைப்பு, தையல்) நேரம், அந்தப் பொருள் சந்தையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பைத் தீர்மானிக்கிறது.
அதாவது உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட பொருட்களுக்குள் உறைந்திருக்கும் உழைப்பின் அளவீடுதான் அது.
முதலாளிகளுக்கிடையேயான சந்தைப் போட்டி, புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் பொருட்களின் மதிப்பு, சமூகரீதியில் அவசியமான அளவுக்கு வீழ்த்தப்படுகிறது. அதாவது அவற்றின் உற்பத்திக்குத் தேவையான சமூகரீதியிலான உழைப்பின் அளவு தொடர்ந்து குறைந்து செல்கிறது; சமூக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் என உற்பத்தி சக்திகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.
முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான சுரண்டல் உறவு தோற்றுவிக்கும் முரண்பாடு – ஒற்றுமை, முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் தேசிய அரசுகளின் கீழ் திரண்டு செயல்படும் மூலதனங்களுக்கிடையேயான போட்டி மற்றும் ஒற்றுமை என்ற இரண்டு வகை முதலாளித்துவ முரண்பாடுகளை உள்ளடக்கிதான் முதலாளித்துவம் மதிப்பை உற்பத்தி செய்கிறது. தனக்கேயுரிய அராஜகம் மற்றும் அநீதியின் காரணமாக, ஒரு நெருக்கடி முடிவதற்குள் இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடுகிறது. தன்னுடைய இருத்தலுக்கான நியாயத்தையும் இழக்கிறது.
மூலதனத்தின் ஆய்வுமுறையை மறுக்கும் முதலாளித்துவ மார்க்சியர்கள் !
வரலாற்றுரீதியாக முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பாக அமைவதும், முரண்பாடாக இருப்பதும், அதனை முன்னோக்கி செலுத்தும் சக்தியாக விளங்குவதும், அது, “பரிவர்த்தனை மதிப்பை” உற்பத்தி செய்கிறது என்பதுதான். புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடுகள், இந்த தனிச்சிறப்பான தன்மையை முதலாளித்துவத்திடமிருந்து அகற்றிவிடுவதால், முதலாளித்துவம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நிலையானதாகவும், நிரந்தரமானதாகவும், மாற்றமில்லாததாகவும் நமக்கு காட்டப்படுகிறது. இதன் காரணமாக நெருக்கடிகள், போர்கள், ஒடுக்குமுறைகள் நிரம்பிய முதலாளித்துவத்தின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான மையச் சரடை நாம் இழந்து விடுகிறோம்.
அறிவுத்திறன் வறண்டுபோன மேற்கண்ட சமூக அறிவியல்களின் புரிதல்கள், மார்க்சின் மூலதனத்துக்கு அருகில் நிற்பதற்குக் கூட அருகதையற்றவை. ஆனால், மார்க்சியவாதிகள் எனப்படுவோரே, எதிரிகளின் படைக்கலன்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதிய செவ்வியல் பொருளாதாரம் என்ற டிரோஜன் குதிரையை, மார்க்சிய கோட்டைக்குள் உருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களே!
மார்க்சியம் தோன்றிய ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதனால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் வந்து சேர்ந்த அறிவுத்துறையினர் பலர் தமக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்பட்ட கொச்சைப் பொருளாதாரவியலைத் தம்மோடு இழுத்து வந்தார்கள். இளம் வயதிலேயே பதிய வைக்கப்பட்ட இந்தக் கல்வி, அதற்குரிய விளைவை ஏற்படுத்தியது.
அறிவியல் அடிப்படையிலான மார்க்சிய ஆய்வுமுறையைக் கற்று, தமது முந்தைய கொச்சைப் பொருளாதாரக் கல்வியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மார்க்சியத்துக்கு நேரெதிரான அந்தக் கொச்சைப் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் ஆய்வு முறையியல் சட்டகத்துக்குள் மார்க்சியத்தைப் பொருத்துவதில் அவர்களில் சிலர் ஈடுபட்டனர்.
1889-ல் உருவாக்கப்பட்டு 1916 வரை நீடித்த இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்திலேயே இந்தப் போக்கு ஆரம்பித்திருந்தது.
முதலாளி தான் குவித்திருக்கும் பணத்தைப் பயன்படுத்தி உற்பத்திச் சாதனங்களையும், கூலி உழைப்பையும் சந்தையில் வாங்கிய பிறகுதான் உற்பத்தி நடைபெறுகிறது, தொழிலாளியிடமிருந்து உபரி உழைப்பைக் கறப்பதன் மூலம் போடப்பட்ட முதலீட்டை விட அதிக மதிப்பை உள்ளடக்கிய சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சரக்குகளை சந்தையில் விற்றுப் பணமாக மாற்றி, அந்தப் பணம் மீண்டும் மூலதனமாக மாற்றப்பட வேண்டும். இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றால்தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்க முடியும்.
இந்த மூலதனத்தின் மறுஉற்பத்தி சுற்றோட்டம் பற்றிய பகுப்பாய்வு, மார்க்சின் இறப்புக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளிலிருந்து தொகுத்து எங்கெல்சால் “மூலதனம்” 2-ஆம் பாகமாக வெளியிடப்பட்டது. இந்தப் பகுப்பாய்வுக்காக மார்க்ஸ் உருவாக்கிய முறையியல், மூலதன மறுஉற்பத்திச் சுற்றோட்டத்தில் அடங்கியிருக்கும் முரண்பாடுகளையும் விகிதாச்சார குலைவையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளின்போதே, இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை மறுதலித்து, புதிய செவ்வியல் பொருளாதாரவாதமான முதலாளித்துவ உற்பத்தியே அதற்கான சந்தை வேண்டலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை தூக்கிப்பிடித்தனர். இதை எதிர்த்து ரோசா லக்சம்பர்க் போராடினார். அறிவியலையும், வரலாற்றையும் பிரிக்கும் பாசிட்டிவிசமாக இரண்டாம் அகிலத்தின் மார்க்சியம் மாறியதற்கும்கூட இந்தப் போக்கு பின்புலமாக இருந்தது.
இன்று இது, “மார்க்சிய விரோத மார்க்சியப் பொருளாதாரவியல்” ஆக வளர்ந்து, “மூலதனம்” நூல் குறித்துக்கொச்சைப் பொருளாதாரவியல் அடிப்படையிலான பல அபத்தமான கேள்விகளை முன்வைத்து விவாதிக்கிறது.
முதலாவதாக, உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் மதிப்பு, சந்தை போட்டியில் விலையாக எப்படி உருமாறுகிறது என்ற பிரச்சினை மூலதனத்தில் விளக்கப்படவில்லை என்ற  வாதம்.
இரண்டாவதாக, முதலாளித்துவ உற்பத்தியில் மிகை உற்பத்தியும் வேண்டல் பற்றாக்குறையும் இல்லை என்ற அடிப்படையிலான வாத பிரதிவாதங்கள்.
மூன்றாவதாக, இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் பிரச்சினையை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை என்ற வாதம்.
நான்காவதாக, மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடு சரக்கு அடிப்படையிலானது என்ற வாதங்கள்  என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
இன்னும் சில, ‘மார்க்சிய’ ஆய்வாளர்கள், “பொருளாதார நிர்ணயவாதம்” குறித்து எச்சரிக்கின்றனர். “பொருளாதார நிர்ணயவாதம்” என்ற பேச்சே பொருளாதாரவியலைப் பிற சமூக அறிவியல்களிலிருந்து பிரித்து ஆய்வு செய்யும் முதலாளித்துவ அணுமுறையில்தான் சாத்தியமாகும்.  “மூலதனம்” நூலுக்கும் இத்தகைய அணுகுமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மேலே சொன்ன போக்குகளின் ஊடாக, “மூலதனம்” நூலைப் பல பத்தாண்டுகளாக மாணவர்களுக்குக் கற்பித்தவர்களான சில நட்சத்திர அறிஞர்கள், “மூலதனம்” நூலில் வரலாறே இல்லை என்று சாதிக்கும் கண்கொள்ளாக் காட்சியும் நமக்குக் காணக் கிடைக்கிறது.
மூலதனத்தில் உறைந்திருக்கும் வரலாற்றை மீட்போம்! 
முதலாளித்துவத்திலிருந்தும் மீள்வோம்!
சரி. இன்றைக்கு மூலதனம் நூலினைப் படிக்க விரும்புகிறவர் மேற்கூறியவற்றிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும்? தன்னோடு சேர்த்து ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இந்த பூமிப்பந்தையும் அழிவுக்குக் கொண்டு செல்வதற்கு முன் முதலாளித்துவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால்,  “மூலதனம்” கற்பிக்கும் ஆய்வின் வழியிலான வரலாற்றை நாம் படைக்க வேண்டும். மூலதனம் மீண்டும் வரலாற்றுக்குள் நுழைய வேண்டுமானால், மூலதனம் நூலுக்குள் உறைந்திருக்கும் மூலதனத்தின் வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
இதற்கு வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட பொருளாதாரவியல் கல்வியையும், சமூக அறிவியல் கல்வியையும் உங்கள் மூளையிலிருந்து கழற்றி வாசலிலேயே விட்டுவிட்டு, அதன் பின்னர் மூலதனம் நூலுக்குள் நுழையுங்கள். தற்போது இருக்கும் இடத்துக்கு மனிதகுலம் எப்படி வந்து சேர்ந்தது என்பதையும், எத்தகைய எதிர்காலத்தை நோக்கி நாம் செல்லக்கூடும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு அந்தக் கல்விகள் ஒருபோதும் உதவாது. மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்” நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம், “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்” என்பதுதான்.
நம்மிடம் இருக்கும் அவகாசம் மிகக் குறைவு, அதை “மூலதனம்” வாசிப்பதற்குச் செலவிடுவோம். ஒரு அறிமுக நூலைப் படிப்பது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், எர்னஸ்ட் மன்டேலின் அறிமுகத்தைப் படியுங்கள். அது சுருக்கமானது. இக்கட்டுரையில் நாம் விவரித்துள்ள பிரச்சினைகள் இல்லாதது.
நினைவிற்கொள்ளுங்கள். மூலதனம் நூல் ஒரு தொழிலாளர் பத்திரிகையில் (1872-இல் பிரெஞ்சு தொழிலாளர் பத்திரிகையில்) தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது.  நீங்கள் இன்றைய தொழிலாளி வர்க்கம். வரலாற்றின் உள்ளே வாருங்கள் என்று உங்களை வரவேற்கும் அழைப்பிதழ்தான் – மூலதனம்.
கட்டுரையாளர், பேராசிரியர் ராதிகா தேசாய், கனடாவின் வின்னிபெக் மாநிலத்தில் உள்ள மான்டிபா பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வுத் துறை பேராசிரியர். 150-வது ஆண்டில் மார்க்சின் “மூலதனம்’’: “மூலதனத்தில்” வரலாறும், வரலாற்றில் “மூலதனம்” நூலும் –  என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது. அவசியமான இடங்களில் மட்டும் வாசகர்களின் புரிதலுக்காகக் கூடுதல் விளக்கங்கள் சேர்த்து தரப்பட்டுள்ளது.
மொழியாக்கம்:  அப்துல்                                                                                                                நன்றி:வினவு,                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...