bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 5 ஏப்ரல், 2018

ஏமாந்த திரிபுரா?

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியைத் தழுவியது.  


பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியான திரிபுரா மக்கள் முன்னணி, பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்ததே காரணம் என திரிபுரா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் ஹிமந்த் பிஸ்வா தெரிவித்திருந்தார். 

ஆனால், திரிபுரா மக்கள் முன்னணி எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்தது என்பது புரியாத புதிராக இருந்தநிலையில், தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மக்கள் முன்னணியின் தலைவர் என்.சி.டெபர்பாமாவை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். 
அந்த சந்திப்பின்போது, திரிபுரா மாநிலத்தில் பழங்குடி மக்கள் வாழும் 8 மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் பகுதியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்கக் குழு ஒன்றை அமைப்போம். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6ல் மாற்றம் ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததாக தகவல் தெரிவிக்கிறது. 

தற்போது, திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் ஆகியும், தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வழியில்லை என்றும் கூறி கைவிரித்துள்ளது மத்திய அரசு. 
இதனால், ஆத்திரமடைந்த திரிபுரா மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பு கடந்த மார்ச் 30ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக தான் வெற்றி பெற எந்த அளவுக்கும் செல்லும் என்பதை அறியாத திரிபுரா மக்கள் முன்னணி தலைவர்கள் தற்போது கட்சியினரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சாதி,மத கலவரங்களைத்தூண்டுவது.கோடிகளில் குளிப்பாட்டி கட்சி தாவ வைப்பது ஒட்டு மொத்தமாக குதிரைப்பேரம் பேசுவதுதான் பாஜக பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க உதவியது.
இந்த விவகாரத்தில் அமித் ஷா முனைவர் பட்டமே பெறத்  தகுதியானவர். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலி வாட்ஸ் அப் 
பல கோடிக்கணக்கான செல்போன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் பெயரிலும் போலி செயலி ஒன்று உலாவருவதாக மால்வேர்பைட் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. 

அது வெளியிட்டுள்ள தகவலின்படி, பொதுவாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் தொடர்பான செயலிகளை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே தரவிரக்கம் செய்து பயன்படுத்துகிறோம். 
ஆனால், இந்த போலி வாட்ஸ்அப் அதற்கான லிங்க்குடன் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. 

இதனைத் தரவிரக்கம் செய்ய முற்படுவோரின் செல்போன் திரையில், தங்க நிறத்திலான வாட்ஸ்அப் முத்திரையுடன் கூடிய பக்கம் தோன்றும். 

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளை (Terms & Conditions) ஏற்றுக்கொள்வதாக அழுத்தினால், அது டவுன்லோடு செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்கும். 

அதை அழுத்திய பின்னர், கூகுள் ப்ளே ஸ்டோருக்கு செல்லாமல், நேரடியாக ப்ரவுசரின் வழியாக ஒரு இணையதளம் திறக்கும். 
முழுக்க முழுக்க அரபு மொழியில் இருக்கும் அந்த இணையதளத்தில், ‘வாட்ஸ் ப்ளஸ் ப்ளஸ் வாட்ஸ்அப்’ என்ற செயலியை டவுன்லோடு செய்ய பயன்பாட்டாளர் பணிக்கப்படுவார். 

இந்த செயலி அசல் வாட்ஸ் அப்பைவிட கூடுதல் வசதிகளைத் தந்தாலும், கூடிய விரைவில் பயன்பாட்டாளரின் செல்போனில் இருக்கும் விவரங்கள் திருடப்பட்டிருக்கும்.

 எனவே, கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக மட்டுமே வாட்ஸ் அப் உள்ளிட்ட எந்த செயலியையும் தரவிரக்கம் செய்யுமாறு, மால்வேர்பைட்ஸ் எச்சரித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவேரி செய்யவேண்டியது ?
"காவிரி நீர் பங்கீடு சம்மந்தமாக, காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக்  குழுவும் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். குறிப்பிட்ட நாளில் அது வராமல் போனதால் தற்போது கொதித்து இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது  எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை போராடிப் பெறவேண்டும். அதே நேரத்தில் தங்களை தயார்படுத்திக்  கொள்ளவும்  வேண்டும். மழை என்பது கர்நாடகா மற்றும் ஆந்திராவை ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழகத்தில் சுமார் 979 மிமீ மழை பெய்கிறது. இது மற்ற மாநிலங்களை விட அதிகமானது. எல்லோர் கண்ணோட்டத்திலும் தமிழ்நாடு என்ற மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக பார்க்கப்படுகிறது. 

இந்த காவிரி நீரில் வரும் பல டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அப்படி கலக்கவிடாமல் ஏரி, குளங்களிலும், அணைகளிலும் தடுப்பு அணைகளையும் கட்டி அந்த நீரை சேமிக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் தண்ணீர் சூழ் தமிழகமாக மாறும் என்று நான் நம்புகிறேன். கல்லணை கால்வாய்களில் நிறைய வாய்க்கால்கள் பெரிது பெரிதாக இருக்கின்றன. அந்த வாய்க்கால்களை கான்க்ரீட் கொண்டு அமைத்தால் ஓட்டம் வேகமடைந்து இரண்டு நாட்களில் நாகப்பட்டினம் சென்று தடுப்பு அணையில் சேர்ந்துவிடும். வயல்களில் இருக்கும் லட்சக்கணக்கான வாய்க்கால்களுக்கு பதிலாக பிவிசி பைப்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் அல்லது தெளிப்புநீர் பாசனம் செய்தால். ஐம்பது முதல் இருபத்தி ஐந்து சதவீதம் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கலாம். 
வீரப்பன்(பொதுப்பணித்துறை -ஒய்வு)


ஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த 2003 ஆண்டில் இருந்து 2013 வரை 'ஜலஎங்னம்' என்று ஒரு திட்டத்தை ஒரு லட்சத்தி எண்பத்தைந்தாயிரம் கோடி செலவு செய்து  பாசன மேம்பாட்டு திட்டத்திற்காக கொண்டுவந்தனர். அதேபோல கர்நாடக அரசு 1980ஆம்  ஆண்டிலிருந்து தற்போது வரை பாசனத்திற்காக ஐம்பதினாயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இருபத்திஐந்து வருடங்களில் பாசனத்திற்காகவும், பாசன மேம்பாட்டிற்காகவும் இவர்கள் செய்த செலவு வெறும் 6000 கோடி மட்டுமே. தமிழ்நாட்டின் சாபக்கேடு காவிரி நீர் என்பது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் விவசாயிகளுக்கு மட்டும் உள்ள பிரச்சனை போல பார்க்கப்படுவதுதான். உண்மையில் காவிரி என்பது தமிழகத்தின் உயிர்நாடி. மொத்தத்தில், காவிரி பிரச்சனை தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனை" என்று காவிரி பிரச்சனையில் 
பொதுப்பணித்துறையில் பணி புரிந்து ஓய்வில் இருக்கும் வீரப்பன் என்ற பொறியாளர் தீர்வை  சொன்னார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன் , "என்ன வயலும் வாழ்வும் போன்று போய் கொண்டிருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் மிக முக்கியமான விஷயம். காவிரி பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று இவர்கள்  பேசியதைப்  பார்த்தால் தமிழக அரசாங்கம்  இதுவரை காவிரிக்கு, விவசாய பாசனத்துக்கு செலவே செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. காவிரி நம் உரிமை, அதை வாங்கியே தீர வேண்டும். அதே போன்று பிற மாநிலங்களுடனான நீர் பிரச்சனையையும் சட்டரீதியாக வாங்க வேண்டும். அது நம் கடமை" என்றார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...