வியாழன், 8 செப்டம்பர், 2016

கிணறு........,,

கிணறு தோண்ட வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது மாநகராட்சிதான்.
தாமிரபரணியில் தண்ணீர் தட்டுப்பாடின்றி வந்தாலும்,ஊருக்கு குடி நீர் சுரக்கும்  ராட்சத ஆற்றுக்கரையோர கிணறுகள் நிரம்பி ததும்பினாலும்,அதை ஊருக்குள் ராட்சத குழாய்கள் வழியே வேகமாக தள்ளி விடும் அதே ராட்சத மோட்டார்கள் இயங்கினாலும்,மின்சாரம் தட்டுப்பாடின்றி இருந்தாலும் ஊருக்குள் மட்டும் எப்போதும் குடி நீர் தட்டுப்பாடுதான்.

பத்து நாள்,பனிரெண்டு நாள் இடைவெளியில் குடி நீர் கேட்டு தொண்டை தண்ணீர் கூட வற்றிய பின்னர் வேண்டா வெறுப்பாக குடி நீர் தரும் மா நகராட்சிதான் கண்டிப்பாக கிணறு வேண்டும் ஆசையை அப்படி சொல்லுவது தப்பு.
கட்டாயத்தை உண்டாக்கியது.
கொல்லைப்புறத்தில் புதிதாக வைக்கப்பட்ட வேப்பங்கன்று,சில செடி வகைகளுக்கு மா நகாராட்சி தரும் தண்ணீரை கொடுத்து மாளவில்லை.

மா நகராட்சி தண்ணீர் தேவையாலும்,தட்டுப்பாட்டாலும் அந்த மரம்,செடிகளுக்கும் என்னக்கும் மனத்தாபம்தான் வந்தது.


குடும்பத்துக்கே மா நகராட்சி தரும் தண்ணீர் ஆறு நாட்களுக்கு தான் என்ற காலத்தில் செடிகளுக்கு மதுரை சித்திரை திரு விழாவில் தண்ணீர் காட்டுவது போலதான் தெளிக்க வேண்டிய கட்டாயம்.


அதனால் வேப்ப மரமும்,ரோஜா,தூதுவளை இன்ன பிற செடிகளும் என் மீது கோபத்தினால் சோம்ப‌லாக வாடி முகம் காட்டுவதை பார்க்க சகிக்க வில்லை.


என்னை பார்ப்பது கூட பாபம் என்ற தொனியில் கிளைகளை தொங்க விட்டுக்கொள்கின்றன.
அவைகள் இந்த குடி நீர் பிரச்னையால் தற்கொலை கூட செய்து கொள்ளும் அளவுக்கு போய் தொலைந்து விடக் கூடாது என்பதற்காகவே கிணறு.


மொத்தமாக மரம் செடிகள் மீது கிணறு தோண்டும் பழியை போட்டு விட முடியாது.


ஆறு நாட்களுக்குப் பின்னர் துணிகளை துவைக்கவும்,குளியல் என்ற பெயரில் நம்மை துவைத்துக் கொள்ளவும்,மிக முக்கியமாக சுத்தத்தை நோக்கி மேலும் ஒரு படியான கழிப்பறை தேவைக்களுக்காவும் கிணறு தேவைதான்.


கிணறு தோண்டல் முடிவு இறுதிக்கட்டத்தை அடைந்த வுடன் வீட்டுக்காராம்மாவுக்கு தகவல் சொல்லப்பட்டது.


இந்த வீட்டுக்கார அம்மா உண்மையிலேயே நான் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரம்மா.என் மனைவி அல்ல.வீட்டுக்காரய்யா இருந்தாலும் முடிவெடுக்கும் அதிகாரமும்,ஆணை பிறப்பிப்பதும் எல்லா குடும்பத்தையும் போல் அம்மாதான். 


அவர் கிணறு தோண்ட இரு விதிகளை கொண்டுவந்தார்.


1.சொந்த செலவில் கிணறு தோண்டிக்கொள்ளலாம்.ஆனால் வீட்டை காலி செய்யும் போது கிணறை அங்கேயே விட்டு செல்ல வேண்டும்.


2.கிணறை ஆழ்துளை கிணறாக தோண்டி மோட்டார் பொருத்த வேணும்.

முதல் விதி ஏக மனதாக வேறு வழி இல்லாத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரண்டாவது ...நமது குடும்ப மாத வரவு செலவு திட்டத்தை மீறியது.பற்றாக்குறை ..எனவே12 உறை கிணறே தோன்டுவதாக கூறினோம்.


வீட்டுக்காரம்மா யோசனையில் ஆழ..


கிணறு ஆழம்தான்.ஆனால் அதில் மோட்டார் பொறுத்தினால் உடல் நலத்துக்கு ஆகாது.

இங்கு பொருள் நலம்தான் உடல் நலமாக மாறியது.
தினசரி 20 வாளி தண்ணீர் இறைத்து கொட்டுவது மனித உடல் நலத்துக்கு ஏற்றது.


வேண்டுமானால் அடுத்து வருபவர் விருப்பப்படி மேலேயுள்ள உறைகளை எடுத்து விட்டு கிணற்றை மூடி குழாய்,மோட்டார் அமைத்துக்கொள்ளட்டும் என்று பலவாறாக எடுத்து இயம்பி கிணறுக்கு அனுமதி வாங்கி தோண்டியாகிவிட்டது.

கிணற்று மண்ணை தோட்டம் என்ற எங்களால் கூறப்பட்ட  கட்டாந்தரை ஆக்கிரமிப்பு இடத்தில் போட்டோம்.அதில் இன்னமும் சில செடிகளை வைக்கலாம் என்ற ஆசை.


அப்படி ஏற்கனவே இருந்த பப்பாளி மர விதைகளை போட அவை சில பப்பாளி செடிகள் முளைவிட்டு துளிர்த்து எழுந்தன.


காய்கறி கழிவுகளை நாள்தோறும் போட்டதில் தடியங்காய்,பாகற்காய்,இஞ்சி,வெங்காயம் இன்னும் சில இனம் அறிய முடியா செடிகள் தலை காட்டின.தின்று போட்ட கொட்டையி இருந்து மாமரம் துளிர் விட்டிருந்த்தது.மகிழ்ச்சி.


மிக்க மகிழ்ச்சி.


இனி ரசாயனம் போட்ட காய்கறிகளையும் அதானால் வரும் வியாதிகளையும் விலை கொடுத்து சந்தையில் வாங்க வேண்டிய துன்பமில்லை. மீண்டும் மகிழ்ச்சி.


அப்போதுதான் ரொம்ப நாள் நாய் வளர்க்கும் ஆசை படி ஒரு குட்டி நாய் வேலையை துளைத்து உள்ளே வந்து விளையாட குடும்பமே அதற்கு பிஸ்கட்,சோறு என்று கொண்டாட ஆரம்பித்தது.


இனி ஓடை பக்கம் மேயும் மா ந‌கராட்சி செல்லப் பிராணிகள் பன்றிகள் தொல்லை இராது என்ற எண்ணம்.
குட்டி நாயும் பக்கத்து வீட்டு பெரிய நாய்களுடன் ஓடி பன்றிகளை விரட்டும் பயிற்சியில் இருந்தது.


 இதனால் அக்குட்டிக்கு வீட்டில் நல்ல மதிப்பு கடைகளில் பிஸ்கட் வாகி வந்து போட்டு வளர்க்க.


அது வெளியே சுற்றாமல் நல்ல பிள்ளையாக அந்த சின்ன தோட்டத்திலேயே மஞ்சனத்தி மர நிழலிலேயே படுத்து களைப்பை போக்கிக்கொண்டது.


களைப்பை போக்கும் நேரம் வரவர 20 மணி நேரமாக்கிக்கொண்டது.


ஓரளவு வளர்ந்த நாய்  இருக்கும் தைரியத்தில் தோட்டத்தில் செலவிடும் நேரம் இல்லை.தண்ணீர் ஊற்றும் நேரம் மட்டுமே பின் வாசல் கதவை திறந்து கிணற்று நீரை இறைத்து ஊற்றினோம்.


ஒரு நாள் கண்ணில் ஆங்காங்க பள்ளங்கள்தோட்டத்தில் காணப் பட்டன.


பார்த்ததில் நாய் குட்டிதான் குளிர்ச்சிக்காக பள்ளம் பறித்து பல இடங்களில் படுத்து கிடப்பதாக தெரிந்த்தது.


அதற்காக இப்படியா.............

 என்று ஒரு நாளில் தோட்டத்தில் பார்த்தபோதுதான் முளை விட்டிருந்த பப்பாளி மரசெடிகள் காணவில்லை ,தூதுவளை செடி குதறப்பட்டிருந்தது.

மாமர கன்று இதுவரை வளர்ந்த இடத்தை மறந்து தள்ளி போய் காய்ந்து கிடந்தது.
திருனீற்றுப்பச்சை,கற்பூரவள்ளி செடிகளும் அரை குறையாக ஆங்காங்கே கிடந்தது.


பகிரென்றது.இதை யார் செய்திருப்பாரகள் என்றுதான் கோபம் தலைக்கேறியது.


தடயவியல் காரரைபோல் பார்த்ததில் பல கால் தடங்கள்.நாய் கால் தடம் போல் இல்லாமல் வித்தியாசமாக.இரட்டை குழம்பு கால்தடங்கள் குழப்பின.


ஓரளவு சரி செய்து விட்டு இரு நாள் கழித்து பார்த்தால் அதே நிலை.


இரு நாட்கள் கழித்து அவசர சோதனையாக கதவை திறந்து பார்த்தால் குட்டிப்பன்றிகள் நாய் வரும் பாதையில் வந்து தோட்டத்தில் குதியாட்டம் போட்டு கண்டவற்றையும் மேய.


நமது  நாய் அவைகளை கண்டு அசராமல் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. சொல்லப் போனால் ரசித்துக்கொண்டிருந்தது எனலாம்.

இப்போது நாய் வர வைத்திருந்த பாதையையும் அடைத்தாகி விட்டது.


பலமுறை வாசல் பக்கம் வந்த நாய்க்கு வெளியிலேயே பிஸ்கட் ...


தோட்டத்துக்குள் பன்றிகளுக்கு ம‌ட்டுமல்ல அவற்றின் தோழர்கள் நாய்களுக்கும் அனுமதி இல்லை.

தோட்டத்தில் இருந்து வெளியே போகும் பாதையை அடைத்தாகி விட்டது.

குடும்பத்தினர் அப்பாதையை வழக்கத்தில் இருந்து கை விட்டு விட்டனர்.விட வைக்கப்பட்டனர்.

இப்போது கிணற்று நீரை ஊற்றும் போது ஆங்காங்கே பச்சை துளிர்கள்.


காலை உதய சூரியனில் கிணற்று நீரை வேப்பமரம்,பப்பாளிமரம்,செடிகளுக்கு இடுகையில் அப்போது மெலிதாக குளுமையாக வீசுகிற காற்று நமக்கு நன்றி சொல்வது போல் வருடுகிறது.அனுபவித்தால் மட்டுமே இயற்கையின் மொழி புரியும்.


அக்காற்று வருடுகையில் மரமேல் இருந்து அணில்கள்,குருவிகள் கீச்ச் சத்தம் அதன் சுவையை மேலும் கூட்டுகிறது.


அந்த இதத்தை அனுபவித்துக்கொண்டே கிணறு மறு நாளுக்கான நீரை சுரக்கிறது.


இயற்கையை அதன் போக்கிலேயே அனுபவிப்பது எவ்வளவு சுகமானது.


அனுபவித்தால்  மட்டுமே  இனிமை புரியும்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவறு நமது தரப்பில்தான் !

 ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டம், காக்கபோராவை சேர்ந்த 22 வயதான அகமது தர், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் ...